குருவின் பாதம் பணிவோம்.

Author: தோழி / Labels: ,

ஆன்மிகத்தில் தன்னையறிதலையே ஞானம் என்கிறோம். ஞானம் என்பது சலனமில்லாத பரிபூரணநிலை. இந்த ஞானம் எப்போதும் நமக்குள்ளேதான் இருக்கிறது. அதை உணரவைத்து, உற்றுநோக்கி உறையவும் தெளியவும்  மெய்யான குருவின் வழிகாட்டுதல் அவசியமாகிறது. 

இந்த பரிபூரண நிலையே  சித்த நிலை அல்லது சமாதி என்கிறோம். சித்தநிலை என்பது எதிர்பார்ப்பில்லாதது.. கருணையும், அன்பும் பெருகியநிலை. தாமே அதுவாக உணர்ந்த உயரியநிலை. இந்த நிலையை எய்தியவர்கள் எவரும் தங்களைத் தாங்களே குரு எனச் சொல்லிக் கொள்வதுமில்லை. அல்லது தங்களுக்கென குருபீடம் அமைத்துக் கொண்டு பொய்யான மதங்களையும், மந்தைகளையும் உருவாக்குவதுமில்லை. அப்படி செய்கிறவர்கள் போலியானவர்கள்..

தகுதியானவர்கள் ஞானத்தேடலை உணர்ந்த  மெய்யான குரு அவர்களைத் தேடி வந்து ஆட்கொண்டு வழிநடத்துவார். அப்போது அந்த மேலான குருவின் பாதங்களை கள்ளமனமின்றி பற்றி பணிந்து பயன்பெற வேண்டும் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.

உள்ளங்கையிற் கனிபோல பொருளை 
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைகத் தள்ளிக்கண்டு கொண்டன்பாய்க்
களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே.
இரண்டாம் அத்தியாயம்!

Author: தோழி / Labels:

உள்நாட்டு போரினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு, அநேகமாய் எல்லாம் அழிந்து போன ஒரு பகுதியில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பை விரும்பி ஏற்றுக்கொண்ட காரணத்தினால், கடந்த ஆறேழு மாதங்களாக இணையம் எனக்கு அன்னியமாகிப் போனது. இந்த காலகட்டத்தில் வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாதபடிக்கு ஒரு வாழ்க்கைச்சூழல். எனக்கிருந்த மனநிலையில் இப்படியொரு மாற்று தேவையாகவும் இருந்தது.

இப்போது மீண்டும் பழைய வேலைத்தளத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதால், இடைவிட்ட சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவை தொடரும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. முன்னைப் போல் இல்லாவிட்டாலும் கூட குருவருளின் துணையோடு என்னால் இயன்றவரையில் பதிவுகளை வலையேற்ற முயற்சிக்கிறேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் என் நலம் விசாரித்து அஞ்சல்கள், குறுந்தகவல்கள் அனுப்பியிருந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பும், நன்றியும். 

தோழி.