தேரையர் கூறும் வைகைநதியின் சிறப்பு.

Author: தோழி / Labels:

தமிழ் மரபின் தொன்மையான அடையாளங்களில் வைகை நதிக்கு சிறப்பிடம் உண்டு. தமிழ் வளர்த்த பாண்டியர்களின் பொய்யா குலக்கொடியாக இருந்தவள் வைகை நதி என்றால் மிகையில்லை.  வைகையை “கடலில் புகாத நதி ” என்பார்கள். இதனை புகழேந்தி புலவரின் பழந்தமிழ் பாடல் ஒன்றும் உறுதி செய்கிறது

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு. 

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை எனும் பகுதியில் வைகை நதி உருவாகி வனத்தினூடே இறங்கி வருகிறது. வரும் வழியில் மேல் மணலாறு, இரவங்கலாறு, மூங்கிலாறு, கலிக்கவையாறு, சுருளியாறு, கூத்தநாச்சி வாய்க்கால், வறட்டாறு என்கிற தேனியாறு உட்பட மேலும் சில சிற்றோடைகள் வைகை நதியில் கலக்கின்றன. 

இவை தவிர பழனி மலைக்கு மேற்கே உற்பத்தியாகும் சோற்றுப்பாறை ஆறு, பாம்பாறு ஆகியவை வராக நதியுடன் கலந்து வைகையுடன் இணைகின்றன. இதுவரை மலைப்பகுதியில் பயணிக்கும் வைகைநதி சமவெளியில் இறங்குமிடத்தே அதனுடன் மஞ்சளாறு, மருதா நதி  போன்ற ஆறுகளும் இணைந்து கொள்கின்றன.சமவெளியில் மதுரைக்கு அருகே சாத்தையாறு என்கிற ஓடையும், மானாமதுரை அருகே உப்போடையும் வைகை நதியில் கலக்கின்றன. இத்தனை நதிகளின் சங்கமமான வைகை பொங்கிப் பெருகி பாண்டியநாட்டின் வளத்திற்கும் செழிப்பிற்கும் காரணமாய் அமைந்திருந்தது. 

பாண்டிய மன்னர்களின் சிறப்பான நீர்மேலாண்மையின் காரணமாக நதிவெள்ளத்தை வீணாக்கிடாமல் முறையாக எல்லா பகுதிகளுக்கு பிரித்து ஏரிகள், குளங்கள்,ஊருணிகள் என நிரம்பச் செய்யப்பட்டன. இதன் காரணமாகவே வைகை கடல் புகா நதியாயிற்று. வைகையாற்றின் மொத்த நீளம் 258 கிலோமீட்டர். இதில் பெரும்பகுதி மலையிலும், வனப்பகுதிகளிலும் பயணித்து வருகிறது. இதனால் வைகை நீரில் மூலிகை குணங்கள் நிறைந்திருந்தன. இதனை தேரையரின் ஒரு பாடலும் உறுதி செய்கிறது.

தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" எனும் நூலில் உள்ள ஒரு பாடல் வைகை நதியின் சிறப்பினை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

வைகை நதிப்புனலால் வாதநீர் குஷ்டோடுமெஉச்
செய்கைதவிக் குஞ்சோபை திண்கரப்பான் - மெய்யெரிவு
தாகநடுக்கனிலந் தாதுநஷ்டஞ் சிலவிடமும்
ஏகுமிந்த வையம் விடுத்தே.

வைகை நதியின் நீரானது வாதநீர், குஷ்டம், சோபை, கரப்பான்,உடல் எரிவு, தாகம், நடுக்குவாதம், தாது நஷ்டங்கள் நீங்குவதுடன் சில வைகையான விஷ முறிவிற்க்கும் பயன்படும் என்கிறார் தேரையர். இத்தனை சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்த வைகை நதி இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் ஒரு நதியாக இருப்பது மிகவும் வருந்தத் தக்கது.Post a Comment

5 comments:

vv9994013539@gmail.com said...

enatra thagaval. vaalthukal.

Unknown said...

அருமை அம்மா

Unknown said...

நன்றி தோழி

S.Puvi said...

Thank Q 4 your information

Bogarseedan said...

தங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

Post a comment