குரு பெயர்ச்சி, சில குறிப்புகள்.

Author: தோழி / Labels:

வேதத்தின் ஆறு வகை கூறுகளில் சோதிடமும் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கிறது. தமிழைப் பொறுத்தவரை அறுபத்திநான்கு கலைகளில் சோதிடமும் ஒன்றாகிறது. சித்தர் பெருமக்களின் பார்வையில் சோதிடம் பற்றியும் அதன் குறிப்புகளைப் பற்றியும் முன்னரே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசிக்கலாம்.

தமிழில் இரண்டு வகையான சோதிட மரபுகள் வழக்கத்தில் இருக்கின்றன. ஒன்று வாக்கிய பஞ்சாங்கம் மற்றது திருக்கணித பஞ்சாங்கம். சித்தர்கள் பின்பற்றிய  முறை வாக்கிய பஞ்சாங்க முறையாகும். இவை இரண்டுக்குமான வித்தியாசங்களை பார்க்கப் போனால் அது தனிப்பதிவாகி விடும் என்பதால், எதிர்வர இருக்கும் குருபெயர்ச்சி பற்றிய தகவல்களை மட்டும் இந்த பதிவில் பார்ப்போம்.

வாக்கிய பஞ்சாங்க கணிதத்தின் படி  ஆடி மாதம் 18ம் திகதி அன்று 11 நாழிகை 21 வினாடி அதாவது 02.08.2016 காலை 10 மணி 35 நிமிடத்திற்கு குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்கிறார். திருக்கணித பஞ்சாங்க கணிதத்தின் படி  ஆடி 27ம் திகதி அன்று 38 நாழிகை 34 வினாடி அதாவது 11.08.2016 இரவு 09 மணி 55 நிமிடத்திற்கு குருபகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு  பெயர்கிறார். 

குரு பெயர்ச்சியானது ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்வது. அந்த வகையில் குருபகவான் பெயர்ந்து செல்லும் புது வீடான கன்னி ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள். குரு பெயர்ச்சியாகி புதிய வீட்டில் இருக்கும் போது அது ராசிகளுக்கு எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பதைக் கொண்டு எத்தகைய பொதுப் பலன்கள் கிடைக்கும் என்பதை ஒரு பழந்தமிழ் பாடல் விளக்குகிறது. அந்தப்பாடல் பின்வருமாறு..

ஜென்மராமர் வனத்திலே சீதையை சிறைவைத்ததும்
தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படைமாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானதும்
ஈசனாரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசமப்படி போனதும்
சத்தியமாமுனி யாறிலே யிருகாலில் தலை பூண்டதும் 
வன்மையுற்றிட ராவணன்முடி பன்னிரண்டில் வீழ்ந்ததும்
மன்னுமா குருசாரி மாமனை வாழ்விலா துறு மென்பவே.

குரு பகவான்  2, 5, 7, 9, 11  போன்ற ராசிகளுக்கு பெயரும் போது அவை நல்ல பலன்களைத் தருமென்றும், அதே வேளையில் குருபெயர்ச்சியானது  1, 3, 4, 6, 8, 10, 12  போன்ற ராசிகளில் நிகழும் போது அவை அத்தனை நல்ல பலன்களை தருவதில்லை என்கிறது இந்தப்பாடல். இதன் அடிப்படையில்தான் குருபெயர்ச்சி பலன்கள் எழுதப்படுகின்றன. 

பதிவின் நீளம் கருதி, குருபெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்பட வாய்ப்புள்ள பலன்களைப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.


தேரையர் கூறும் வைகைநதியின் சிறப்பு.

Author: தோழி / Labels:

தமிழ் மரபின் தொன்மையான அடையாளங்களில் வைகை நதிக்கு சிறப்பிடம் உண்டு. தமிழ் வளர்த்த பாண்டியர்களின் பொய்யா குலக்கொடியாக இருந்தவள் வைகை நதி என்றால் மிகையில்லை.  வைகையை “கடலில் புகாத நதி ” என்பார்கள். இதனை புகழேந்தி புலவரின் பழந்தமிழ் பாடல் ஒன்றும் உறுதி செய்கிறது

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு. 

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மேகமலை எனும் பகுதியில் வைகை நதி உருவாகி வனத்தினூடே இறங்கி வருகிறது. வரும் வழியில் மேல் மணலாறு, இரவங்கலாறு, மூங்கிலாறு, கலிக்கவையாறு, சுருளியாறு, கூத்தநாச்சி வாய்க்கால், வறட்டாறு என்கிற தேனியாறு உட்பட மேலும் சில சிற்றோடைகள் வைகை நதியில் கலக்கின்றன. 

இவை தவிர பழனி மலைக்கு மேற்கே உற்பத்தியாகும் சோற்றுப்பாறை ஆறு, பாம்பாறு ஆகியவை வராக நதியுடன் கலந்து வைகையுடன் இணைகின்றன. இதுவரை மலைப்பகுதியில் பயணிக்கும் வைகைநதி சமவெளியில் இறங்குமிடத்தே அதனுடன் மஞ்சளாறு, மருதா நதி  போன்ற ஆறுகளும் இணைந்து கொள்கின்றன.சமவெளியில் மதுரைக்கு அருகே சாத்தையாறு என்கிற ஓடையும், மானாமதுரை அருகே உப்போடையும் வைகை நதியில் கலக்கின்றன. இத்தனை நதிகளின் சங்கமமான வைகை பொங்கிப் பெருகி பாண்டியநாட்டின் வளத்திற்கும் செழிப்பிற்கும் காரணமாய் அமைந்திருந்தது. 

பாண்டிய மன்னர்களின் சிறப்பான நீர்மேலாண்மையின் காரணமாக நதிவெள்ளத்தை வீணாக்கிடாமல் முறையாக எல்லா பகுதிகளுக்கு பிரித்து ஏரிகள், குளங்கள்,ஊருணிகள் என நிரம்பச் செய்யப்பட்டன. இதன் காரணமாகவே வைகை கடல் புகா நதியாயிற்று. வைகையாற்றின் மொத்த நீளம் 258 கிலோமீட்டர். இதில் பெரும்பகுதி மலையிலும், வனப்பகுதிகளிலும் பயணித்து வருகிறது. இதனால் வைகை நீரில் மூலிகை குணங்கள் நிறைந்திருந்தன. இதனை தேரையரின் ஒரு பாடலும் உறுதி செய்கிறது.

தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" எனும் நூலில் உள்ள ஒரு பாடல் வைகை நதியின் சிறப்பினை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

வைகை நதிப்புனலால் வாதநீர் குஷ்டோடுமெஉச்
செய்கைதவிக் குஞ்சோபை திண்கரப்பான் - மெய்யெரிவு
தாகநடுக்கனிலந் தாதுநஷ்டஞ் சிலவிடமும்
ஏகுமிந்த வையம் விடுத்தே.

வைகை நதியின் நீரானது வாதநீர், குஷ்டம், சோபை, கரப்பான்,உடல் எரிவு, தாகம், நடுக்குவாதம், தாது நஷ்டங்கள் நீங்குவதுடன் சில வைகையான விஷ முறிவிற்க்கும் பயன்படும் என்கிறார் தேரையர். இத்தனை சிறப்பு வாய்ந்ததாக திகழ்ந்த வைகை நதி இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவரும் ஒரு நதியாக இருப்பது மிகவும் வருந்தத் தக்கது.


நோயறிதலும், சோதிடமும்.

Author: தோழி / Labels: , ,

எந்த வகை மருத்துவமாக இருந்தாலும் அதன் அடிப்படை “நோயறிதல்” (diagnosis) ஆகும். நோயின் தன்மை, அதன் தீவிரம் போன்றவைகளை அறிந்தால் மட்டுமே முறையான சிகிச்சை என்பது சாத்தியமாகும். ஒவ்வொரு வகை மருத்துவமும் தனக்கே உரித்தான சில பிரத்யேக நோயறியும் முறைகளை கடைபிடிக்கிறது. இவற்றில் எது சிறந்தது, எது சரியானது என்பதெல்லாம் விவாதங்களுக்கு உரியது. இந்தப் பதிவு அதைப்பற்றியதுமில்லை. 

சித்த மருத்துவத்தில் மனித உடலானது “வாத”, “பித்த”, “சிலேத்தும” என மூன்று வகையாக கூறப்படுகிறது. வாத,பித்த, சிலேத்தும சமநிலையில் மாற்றங்கள் ஏற்படும்போது அவை தொடர்பான நோய்கள் தலையெடுக்கிறது. சித்த மருத்துவத்தில் வாத நோய்கள் என என்பதும், பித்த நோய்களென நாற்பதும், சிலேத்தும நோய்கள் என தொண்ணூறும் கூறப்பட்டிருக்கின்றன.

சித்த மருத்துவத்தில் நோயறிய சோதிடத்தையும் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது பலரும் அறிந்திருக்காத செய்தி. அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய “புலிப்பாணி வைத்திய காவியம்” என்னும் நூலில் காணக்கிடைக்கும் ஒரு நோயறியும் முறை பற்றியதே இந்தப்பதிவு. 

பாரப்பா இன்னமொரு விவரங்கேளு
பகர்தனுங் குருசனியும் வாதநாடி
சீரப்பா துர்க்கிரகம் சூரிசேயும்
சிறப்பான பாம்புகளும் பித்தநாடி
நேரப்பா பால்மதியும் சுங்கன்தானும்
நேர்மையுள்ள சிலேட்டுமத்தின் கிரகமென்று
வீரப்பா போகருட கடாட்சத்தாலே
விவரமெலாம் புலிப்பாணி விளம்பக்கேளு.


ஒருவருடைய ஜாதகத்தை ஆராயும் போதே ஜாதகனுக்கு வரப்போகிற அல்லது வந்திருக்கின்ற நோயைப் பற்றி தெளிவாக அறியலாம் என்கிறார் புலிப்பாணிச் சித்தர். புதன், குரு மற்றும் சனி 6-ஆம் வீட்டு அதிபதி ஆனால் வாத நோய் பீடிக்கும் என்றும், சூரியன், செவ்வாய், 6-ஆம் வீட்டு அதிபதி ஆனால் பித்த நோய் பீடிக்கும் என்றும், 6-ஆம் வீட்டில் இராகு, கேது நின்றாலும் பித்த நாடி நோய்ப் பாதிக்குமாம்.

சந்திரன், சுக்கிரன் 6-ஆம் வீட்டு அதிபதியானால் சிலேத்தும நோய் உண்டாகுமாம். மேலும், 6-ஆம் வீட்டின் அதிபதி கேந்திர திரிகோணங்களில் நின்று குரு பார்வை இன்றி இருப்பின் நோய் தாக்கம் (6-ஆம் வீட்டில் அதிபதியின் நாடியைப் பொறுத்து) அந்த நாடியை பொறுத்து அதிகரித்துக் காணப்படும் என்கிறார்.

வாதநாடி: குரு, புதன், சனி
பித்த நாடி: சூரியன், செவ்வாய், இராகு, கேது
சிலேத்தும நாடி: சந்திரன், சுக்கிரன்

*இரத்த அழுத்தம், இருதய நோய், நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு போன்றவை வாத நோய்கள்.

*சீரணம் தொடர்பான பிரச்சினைகள்,வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை பிரச்சினைகள் பித்த நோய்கள்.

*மூச்சுவிடுதல், மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை சிலோத்தும நோய்கள்.


நீரழிவும், சித்தர் பெருமக்கள் முன்வைக்கும் தீர்வுகளும்.

Author: தோழி / Labels: ,

தற்போதைய அவசரயுக வாழ்க்கைமுறை நமக்குத் தந்த மாபெரும் பரிசு உடல் நலக்குறைபாடுகள்தான். நூற்றில் ஒன்றிருவரைத் தவிர மற்றவர்கள் ஏதோவொரு வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இவற்றில் முதன்மையான குறைபாடுகளில் ஒன்றாக நீரழிவை குறிப்பிடலாம்.

நாம் எடுத்துக்கொள்ளும் மாவுச்சத்து நிரம்பிய உணவில் உள்ள சர்க்கரையை சீரணிக்கத் தேவையான இன்சுலின் என்கிற திரவம் நம்முடைய கணையத்தால் சுரக்கப்படுகிறது. கணையத்தின் செயல்பாடு குறையும்போது இன்சுலின் சுரப்பும் குறைந்து சர்க்கரையின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இதனையே நீரழிவு என்கிறோம். இது ஒரு நோய் இல்லை வெறும் குறைபாடுதான்.

சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகரிக்கும் போது அது நேரடியாகவும், மறைமுகமாகவும் உடல் உறுப்புகளை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.கண்பார்வையில் கோளாறு, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு என பல்லுறுப்பு பாதிப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாக  உடல்நலத்தை சீரழித்து விடுகிறது. 

தற்போதைய அலோபதி மருத்துவம் நீரழிவுக்கு மூன்று கட்ட தீர்வுகளை முன்வைக்கிறது. அவை முறையே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சிரான இடைவெளிகளில் உடற்பரிசோதனை செய்து மருத்துவரின் ஆலோசனைப்படி தேவைக்கேற்ப மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை. தற்போது நீரழிவு மருத்துவ சிகிச்சை என்பது  பணம் கொட்டும் பெருந்தொழிலாக இருக்கிறது.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக சித்தர்களின் பாடல்களில் நீரழிவுக்கான எளிமையான தீர்வுகள் தரப்பட்டிருக்கின்றன. இந்த தகவல்கள் பல ஆச்சர்யமானவை. ஆனால் இவை எதுவுமே முறையாக பரிசோதிக்கப்பட்டவை அல்ல. வெறும் தகவல்களாக மட்டுமே அணுகிடத் தகுதியுள்ளவை. ஆர்வமும், வாய்ப்புகளும் உள்ளவர்கள் இவற்றை பரிசோதனை செய்து இந்த மருத்துவக்குறிப்புகளின் சாதகபாதகங்களின் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தால் மட்டுமே இவற்றை யாரும் பயன்படுத்த பரிந்துரைக்கலாம். 

சித்தர்பெருமக்கள் அருளிய நீரழிவுக்கான மருத்துவ குறிப்புகளை முன்னரே இரு பதிவுகளை பகிர்ந்திருக்கிறேன். அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். அந்த வரிசையில் இன்று யாகோபு சித்தரின் ”யாகோபு வைத்திய சிந்தாமணி 700” என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பை பார்ப்போம்.

குருணிஆவினுட பால் யிடையிற்காசு
அபினிட்டு குழம்பாக்கி யவ்வீராளி
பாவினைசெய் தளந்தூழாக்கு தின்றாயானால்
பறக்குமகா சலரோகம் பண்பதாமே.


குறுணி அளவு பசுவின் பால் எடுத்து அதனுடன் காசு எடை அபின் கலந்து குழம்பாக்கி  ஒரு ஆழாக்கு உட்கொள்ள கொடிய நீரழிவு நோய் நீங்கும் என்கிறார் யாகோபு சித்தர்.

ஒரு குருணி என்பது சுமார் நான்கு லிட்டர்.
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.


மின்னூல் : உரோமரிஷி அருளிய வழலை சூத்திரம் 16

Author: தோழி / Labels: ,

நண்பர்களே,

வணக்கம். சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவினூடாக சித்தர் பெருமக்களின் படைப்புகளை வெகுசனவெளியில் கொண்டு சேர்க்கும் சிறுமுயற்சியின் தொடர்ச்சியாக “உரோமரிஷி அருளிய வழலை சூத்திரம்16” என்கிற இந்த மின்னூலை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன். இது சித்தர்கள் இராச்சியம் பதிப்பிக்கும் பதினெட்டாவது மின்னூல்.

உரோமரிஷி பற்றிய தெளிவான குறிப்புகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. புசுண்டரின் சீடரான உரோமரிஷி, செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். வழலை என்கிற சொல்லுக்கு உப்பு, ஒருவகை பாம்பு, புண்ணில் இருந்து வழியும் நீர் போன்ற பல பொருட்கள் இருந்தாலும் இந்த நூலில் உப்பு பற்றியே குறிப்பிடுகிறார்.

"வாதெமென்ற சொல்லெல்லாம் உப்பினாலே
மானிலத்தோர் காணாமல் மயங்கிப்போனார்"


வாதம் என்று சொன்னாலே அவை உப்புக்களையே முதன்மையாக கொண்டது என்று சொல்லும் இவர் இதனை அறியாத மனிதர்கள் மதி மயங்கிப்போய்விடுவார்கள் என்று சொல்வதுடன் வாதவித்தையின் சூட்சுமங்களை இந்த நூலில் விவரித்திருக்கிறார். 

தமிழ்  அறிந்த அனைவரும் படித்து இன்புற வேண்டும் என்கிற நோக்கில் இந்த அரிய நூலினை மின் நூலாக தொகுத்திருக்கிறேன். . தமிழர்கள் போற்றி பாதுகாத்திட வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. எனவே இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் தாங்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.


என்றும் நட்புடன்

தோழி..

www.siththarkal.com
தொடர்புக்கு

siththarkal@gmail.com


அன்பும், நன்றியும், வாழ்த்துக்களும்

Author: தோழி / Labels:

இந்த பதிவுகள், இந்த மொழி நடை, அணுகு முறைகளில் தெளிவு, பிரச்சினைகளை எதிர்கொள்வதில் கிடைத்திருக்கும் நிதானம் என நான் அடைந்திருக்கும் நிறைய நன்மைகளுக்கு காரணமான என் நண்பருக்கு நன்றி சொல்லிடவே இந்த பதிவு. ஏழாவது வருடமாய் இப்படியொரு பதிவை எழுதுகிறேன். சித்தர்கள் இராச்சியம் பதிவுகளை தொடர முடிகிறவரை இந்த நாளில் இப்படியொரு பதிவை எழுதிடவே விரும்புகிறேன்.

கடந்த வருடங்களில் நான் எதிர்கொண்ட விபத்துக்கள், இழப்புகள், வேதனைகள், அனுபவங்கள் என எல்லாமும் தாண்டி சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவை எழுத திரும்ப வந்ததற்கு ஒரே காரணமாய் இருந்தவர் திரு.சரவணக்குமார். குருவருளை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு குருநாதர் நேரில் வரமுடியாத குறைக்கு இவரைப் போன்ற நண்பர்களின் நட்பையும், வழிகாட்டுதலையும் வழங்கியிருக்கிறார்.

இன்று பிறந்த நாள் காணும் திரு.சரவணக்குமார், எல்லாம்வல்ல குருவருளின் பேரருளைப் பெற்று நீடூடி வாழ்கவென பிரார்த்திக்கிறேன்.


அழிவின் விளிம்பில் “போகர் 12000”

Author: தோழி / Labels: , ,

சித்தர் பெருமக்கள் அருளிய நூல்களில், ஒரு சிறு தொகுதி மட்டுமே தற்போது நம்மிடம் கிடைத்திருக்கிறது. பல அரிய நூல்கள் காலத்தால் அழிந்து போயின, தனிமனித காழ்ப்புணர்வுகளினால்  சில நூல்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிந்து போன பல நூல்களைப் பற்றிய தகவல்கள் பல்வேறு சித்தர் பாடல்களினூடே  நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இன்றைய பதிவில் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கும் ஒரு நூலினைப் பற்றி பார்ப்போம்.

பன்னிரெண்டாயிரம் பாடல்களைக் கொண்ட நூலினை அகத்தியரும், போகரும் மட்டுமே அருளியிருக்கின்றனர். இவை முறையே “அகத்தியர் 12000”, “போகர் 12000” என அறியப்படுகின்றன. இவற்றில் அகத்தியர் அருளிய நூலின் ஐந்து காண்டங்கள் மட்டுமே அச்சில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. போகர் 12000 நூல் எனக்குத் தெரிய தற்போது அச்சில் இல்லை. இவ்விரு நூல்களின் முழுத்தொகுப்பு விரல்விட்டு எண்ணிடக்கூடிய சிலரிடம் மட்டுமே இருக்கிறது. ஆனாலும் அவர்கள் அதை யாருக்கும் தருவதற்கு தயாராக இல்லை. இதற்கு ஆளுக்கொரு காரணங்களும், நியாயங்களும் இருக்கின்றன. 

போகர்12000 நூலினைப் பற்றிய ஒரு குறிப்பு  அகத்தியர் 12000 நூலில் காணக்கிடைக்கிறது. போகரின் அருளிய இந்த நூலின் தன்மை, அதன் சிறப்பு போன்றவைகளை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

நன்மையா மாய்கையது நிற்கவேண்டும்
நாதாக்கள் சாத்திரத்தை யறிதல்வேண்டும்
துன்மையாம் சமையங்கள் கட்டறுத்தல்
கருதிபெறும் சாத்திரங்கள் நுணக்கங்கண்டு
வண்மையா மிதிகாசம் சிக்கறுத்தல்
வளமுடனே லோகத்தின் வாழ்க்கைநீக்கி
தென்றிசையில் சித்தர்முனி காண்பதற்கு
திரட்டியே பெருநூலாய் குருநூலாய்
தீர்க்கமுடன் பன்னிரண்டு காண்டமாக
தேற்றமுடன் போகருரைத்த பெருநூலாமே.

உத்தமனே புலஸ்தியனே வுண்மையோனே
பெருநூலாம் பன்னிரண்டு காண்டத்திற்குள்
போதிதார் நலுயுக வதிசயங்கள்
பொங்கமுடன் உத்தமர்க்கு சொன்னாரே
சாதித்தார் பன்னிரண்டு காண்டத்துள்ளே
குறிப்புடன் பாடிவைத்த கருநூலாகும்
செவிதனக்கு கேளாத கர்மியோர்க்கு
செப்பினால் லென்னபலன் யாதொன்றில்லை
கருவறிந்த பெரியோர்க ளிந்தநூலை
கண்டாலும் விடமாட்டார் கவிவல்லோனே

நான்கு உலகங்களின் அதிசயங்களையும், மாயையை நீக்கிக்கொள்ளும் வழிவகைகளையும், சாஸ்திரங்களையும், அவற்றின் நுணுக்கங்களையும் தெளிவாகவும் விளக்கமாகவும் குறிப்பிடுவதோடு, சித்தர்களை காணும் வழிவகைகளைச் சொல்லும் நூல் ஒன்றினை போகர் எழுதியுள்ளார். அந்த நூல் பண்ணிரெண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு, பன்னிரண்டாயிரம் பாடல்களைக் கொண்டதாக இருக்கிறது என்கிறார் அகத்தியர்.

மேலும், போகரின் இந்த நூல் குருவிற்கு நிகரானது. தகுதியானவர்கள் இந்த நூலைக் கண்டால் விடாமல் தங்களுடனே வைத்துக்கொள்வார்கள். இந்த நூலை கவனத்தில் கொள்ளாத கர்மியோர்க்கு கொடுப்பதனால் எந்த வித பயனும் இல்லை. கர்ம பலன் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த நூல் கிடைக்கும் என்றும் மற்றவர்களுக்கு கிட்டாது என்றும் அகத்தியர் கூறியிருக்கிறார்.

குருவருள் அனுமதித்தால் எதிர்காலத்தில் இந்த நூலை புத்தகமாய் பதிப்பிக்கும் வாய்ப்பிருக்கிறது.


பொருநை என்கிற தாமிரபரணி

Author: தோழி / Labels: ,

பொதிகை மலையில் தோன்றி, நெல்லை சீமை என அறியப்படும் தென்தமிழகத்தினூடே  பாய்ந்து சென்று மன்னார் வளைகுடாவில் கலக்கும் நதி தாமிரபரணி.  தமிழகத்தின் ஒரே ஜீவநதியான தாமிரபரணி ஒரு காலத்தில் இலங்கை வரையில் பாய்ந்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், அநேக புராண கதைகளிலும் கூட தாமிரபரணி பற்றிய குறிப்புகளை நாம் பார்க்க முடிகிறது. தாமிரபரணியின் ஓர் இணையாறுதான்  குற்றாலத்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது..

பொருநை, தாம்ரபரணி, தாமிரவருணி என வெவ்வேறு பெயர்களும் உன்டு. தாமிரம் எனப்படும் செம்பு உலோகத்தின்  படிமங்கள் இந்த  நதியில் கலந்திருப்பதால் தாமிரபரணி என பெயர் பெற்றதாக தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் பாடற்குறிப்புகள் உணர்த்துகின்றன. 

தாம்பிரபன் னிப்புனலாற் சர்வசுரம் பித்து விழித்
தூம்பிரமுட் காய்ச்சல் சுவாசநோய் – தேம்பிமிகக்
கக்குகய மென்புருக்கி கைகாலெரிவுடனே
மிக்குறுதா கங்களும் போம்பிள்.

மேலும் இந்த நீரை  தொடர்ந்து அருந்தி வந்தால் சர்வசுரம், பித்தம், கண் புகைச்சல், உட்காய்ச்சல், சுவாசம், கயம், எலும்புருக்கி, கைகாலெரிவு, அதிக தாகம் ஆகியவை நீங்கும் என்கிறார் தேரையர். 
வாய்ப்பும், வசதியும் உள்ளவர்கள் தேரையரின் இந்த தெளிவுகளை உறுதி செய்யும் ஆய்வுகளில்  ஈடுபடலாம்.