தமிழ் இலக்கணம் எத்தனை சுத்தமான வரையறைகளைக் கொண்டிருக்கிறதோ, அதைப் போலவே தமிழ் இலக்கிய வடிவங்களுக்கும் தீர்மானமான வரையறைகள் உண்டு. ஒரு நூலில் தன்மை அதன் கட்டமைப்பு, அதன் உட்பொருள் ஆகியவைகளைக் கொண்டு அவற்றை வகைப்படுத்தி இருக்கின்றனர். இவை முறையே காப்பியம், காவியம், வெண்பா வகைகள், சதகம், நிகண்டு, சூத்திரம், சூடாமணி, சிந்தாமணி, கோவை என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
சித்தர் பெருமக்கள் அருளிய நூல்கள் பலவும் தொடர்நிலை செய்யுள் வடிவிலானவை. இவை இலக்கணச் சுத்தமாய் இல்லாவிட்டாலும் கூட, இலக்கிய வரையறைகளில் அடங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த வகையில் சூத்திரம் எனப்படும் இலக்கிய வகையில் அமைந்த சித்தர்களின் நூல்களைப் பற்றிய அறிமுகத்தினை இந்த பதிவில் பார்ப்போம்.
சூழ்ந்து வருதல் அல்லது சூழ்த்து வருதலை சூழ்த்திரம் என்பர். இதன் மருவிய வடிவமே சூத்திரம். இதனை எளிமையாகச் புரிந்து கொள்வதென்றால், தற்காலத்தில் மென்பொருட்களை உருவாக்கிட உதவும் நிரலைப் போன்றதுதான் சூத்திரம். வெளிப் பார்வைக்கு ஒன்றாக தோன்றினாலும் அதன் உள்ளர்த்தங்களும், கட்டமைப்புகளும் நுட்பமும், ஒட்பமும் மிகுந்தவையாக இருக்கும். இதன் பயன்பாடுகளும் எல்லைகளும் வெவ்வேறு தளத்திலானவை.
சூத்திர நூல்கள் பெரும்பாலும் நான்கு அம்சங்களை முன் நிறுத்துவனவாகவே அமைந்திருக்கின்றன. அவை முறையே மெய்ஞானம், யோகம், மருத்துவம், இரசவாதம் எனப்படும் இராசயனம் பற்றியவைகளாவே இருக்கின்றன. இவற்றில் பதஞ்சலி முனிவர் மட்டுமே யோகம் பற்றிய யோக சூத்திரம் நூலை அருளியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூத்திர நூல்களில் இன்னொரு கவனிக்கத் தக்க அம்சம், இவை யாவும் மிகவும் குறைவான பாடல்களைக் கொண்டவை. அரிதாய் சில சூத்திர நூல்கள் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கொங்கணவர் கற்ப சூத்திரம் 101 பாடல்களையும், கொங்கணவர் வாத கற்ப சூத்திரம் 121 பாடல்களையும் கொண்டிருக்கின்றன. போகர் அருளிய போகர் ஞான சூத்திரம் 1 - என்ற நூல் ஒரே ஒரு பாடலை கொண்ட சூத்திர நூல் என்பது பலரும் அறியாத செய்தி.
அடிப்படையில் இந்த சூத்திர நூல்கள் மிகவும் நுட்பமான கட்டமைப்புக் கொண்டவை. அவற்றின் பொருளறிந்து, அவற்றை பயன்படுத்துவது என்பது நிதர்சனத்தில் மிகவும் சிக்கலான ஒன்று. பல சூத்திர நூல்களின் பொருள் என்னவென்றே இதுவரை யாரும் அறிந்திடவில்லை. அப்படி அறிந்தவர்கள் அவற்றை வெளியில் சொல்வதுமில்லை.
சூத்திரம் பற்றி இங்கே எழுதக் காரணம், சித்தர் பெருமக்கள் எல்லோருமே சூத்திர நூல்களை அருளியிருக்கின்றனர். இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கிலானது. இந்த சூத்திர நூல்களை யாரும் முறையாக தொகுத்திருக்கின்றனரா எனத் தெரியவில்லை. எதிர்காலத்தில் குருவருள் அனுமதித்தால், இந்த சூத்திர நூல்களை எல்லாம் ஒரே நூற் தொகுப்பாய் தொகுத்திடும் ஆசையிருக்கிறது.
இந்த முயற்சியின் துவக்க புள்ளியாகவே இந்த பதிவு அமைகிறது. வரும் நாட்களில் சூத்திர நூல்களைப் பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு : இணையமெங்கும் குருபெயர்ச்சி பலன்களைப் பற்றி பலரும் விரிவாய் எழுதியிருப்பதாலும், தற்போதைய எனது உடல்நிலையில் அப்படியொரு பதிவு எழுதுவதில் இருந்த சிரமம் காரணமாகவும் குருபெயர்ச்சி பலன்கள் பற்றிய பதிவினை தவிர்த்திருக்கிறேன். புரிதலுக்கு நன்றி.