ஏனிந்த இடைவெளி!!

Author: தோழி / Labels:

நேற்றைப் போல இருக்கிறது. 

இதோ ஏழு மாதங்களுக்குப் பிறகு உங்களின் முன்னால் வந்து நிற்கிறேன். காலம்தான் எத்தனை வேகம் காட்டுகிறது. இதில் ஆறு மாதங்களுக்கு மேலாக மருத்துவமனை வாசம். எந்த மருத்துவமனையில் மருத்துவராய் பணி புரிகிறேனோ, அதே மருத்துவமனையில்   ஒரு நோயாளியாக...

என்னதான் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டாலும், அடுத்தடுத்து அம்மா, அப்பா என இருவரையும் இழந்ததின் அதிர்ச்சி, துயரம், வெறுமை, தனிமை, மன அழுத்தம், சரியாக சாப்பிடாமை என எல்லாமுமாய் சேர்ந்து உடல்நலம் கடும் பாதிப்புக்குள்ளாகி வேரோடு சாய்ந்த மரம் போல வீழ்ந்திருந்தேன்.

மருத்துவ பரிசோதனைகள் என என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் எனக்கு நடந்தேறியது. பரிசோதனை முடிவுகளை வைத்துக் கொண்டு என் சக மருத்துவர்கள் ஆளாளுக்கு ஒரு பாதிப்பைப் பற்றியும், அதற்கான சிகிச்சைகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தனர். 

கிட்னியில் பாதிப்பு என்றார்கள். நல்ல வேளை பெரிய பாதிப்பில்லை என்றார்கள். அதுவரை நினைவிருந்தது. அதன் பிறகு நிமோனியா காய்ச்சல் . திடீரென  பார்வை மங்கியது. ஒரு கட்டத்தில் இருட்டு. கண் பார்வை நரம்பில் பாதிப்பு, இனி பார்வை திரும்புவது கஷ்டமென்றார்கள். 

எல்லாமே இருண்டு போனது.

அடுத்த ஆறு மாதங்கள் வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒரு அவஸ்தையோடு சிகிச்சை. இப்போதும் கூட என்னால் ஆறு அடிக்கு அப்பால் இருக்கும் எதையும் பார்க்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாம்  சரியாகும் எனச் சொல்லியிருக்கிறார்கள். நான் இருந்த நிலமைக்கு மீண்டு வருவதற்கோ, இனி  இணையம் வந்து  பதிவுகள் எழுதுவதற்கோ வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். ஒரு கட்டத்தில்  எனக்கான எல்லா வாய்ப்புகளும் முடிந்து விட்டதாகவே தோன்றியது.

பெற்றோர்களின் ஆசி, குருவின் அருள், நண்பர்களின் பிரார்த்தனை, காப்பாற்றியே தீருவது என போராடிய மருத்துவர்களின் அன்பு, தங்களின் மகளைப் போல என்னை கவனித்துக் கொண்ட செவிலியர்களின் அக்கறையின் விளைவாக இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டாம் வாய்ப்பில், எல்லாம் வல்ல குருவருளின் அனுமதியோடும், பெற்றோரின் ஆசியோடும், நண்பர்களின் ஒத்துழைப்போடும் சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவை மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்.

புரிதலுக்கு நன்றி.

நட்புடன்

தோழி @ தர்ஷினி.

குறிப்பு.

இணைய பக்கங்களை பார்ப்பதிலும், வாசிப்பதிலும் எனக்கு சிரமங்கள் இருப்பதால் இப்போதைக்கு பதிவுகளை மேம்படுத்துவதற்கு மட்டுமே கணினியை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறேன்.  எனவே யாருடைய மின்னஞ்சகளுக்கும் என்னால் பதிலளிக்க இயலாது என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
                                                          - திருமூலர்.