பதார்த்த குண சிந்தாமணியும்..... வேர்களும்.

Author: தோழி / Labels: , , ,

சித்த மருத்துவத்தில் வேர் முதல் தளிர் வரையிலான மொத்த தாவரத்தையே  "சமூலம்" என்கிறோம். அதாவது  ஒரு தாவரத்தின் வேர், தண்டு, இலை,பூ, காய், கனி, விதை என எல்லா பாகத்தையும் உள்ளடக்கியது சமூலம்.  

சித்த மருந்து தயாரிப்பில் "மூலம்" என்பது வேர்களைக் குறிக்கும் பதம். 

தேரையர் அருளிய "பதார்த்த குண சிந்தாமணி" எனும் நூலில் வேர்களைப் பற்றியும், அவற்றின் தொகுப்புகளைப் பற்றியும், அவைகளைக் கொண்டு தயாரிக்கப் படும் மருந்துகளைப் பற்றியும் அருளியிருக்கிறார். 

 "பஞ்சமூலம்" , "சிறு பஞ்சமூலம்", "பெரு பஞ்சமூலம்", "அஷ்டமூலம்", "தசமூலம்" என ஐந்து பெரும் தொகுதிகளாய் வேர்களை வரையறுத்திருக்கிறார். இவை முறையே ஐந்து, எட்டு, பத்து வெவ்வேறு மூலிகை வேர்களின் தொகுப்பாகும். 

இந்த மூலிகை சேர்க்கைகளைக் கொண்டு தயாரிக்கப் படும் மருந்துகள், குறிப்பிட்ட  வகை நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. நோயின் தன்மை மற்றும் அதன் தீவிரத்தைப் பொறுத்து இந்த மூலிகைகளின் சேர்க்கைகளின் அளவும், விகிதமும் மாறுபடும்.

இன்றைய பதிவில் முதல் வகையான "பஞ்சமூலம்" பற்றிய தகவல்களை பார்ப்போம். இதைப் பற்றி தேரையர் பின்வருமாறு கூறுகிறார்.

செவ்வியம் பேரரத்தை சித்திரமூ லஞ்சுக்கோ
டோவ்வுஜண்டு பாரங்கி யோரைந்தும் - வெவ்வினையச்
சண்ணு பஞ்ச மூலமெனத் தாரணியெல் லாம்அறிய
வண்ண மயிலே வழுத்து

- தேரையர்.

பஞ்ச மூலம் என்பது ஐந்து வெவ்வேறு மூலிகை வேர்களின் சேர்க்கை. அவை பின்வருமாறு....

1. திப்பிலி வேர்
2. பேரத்தை வேர்
3. கொடிவேலி வேர்
4. சுக்கு வேர்
5. கண்டு பரங்கி வேர் 

இந்த பஞ்ச மூல வேர்களைக் கொண்டு தயாரிக்கப் படும் மருந்துகளினால்  வாதம், மகாவாதம், பக்கவாதம், மூட்டுவாதம், முடக்குவாதம், எரிவாதம், குதிவாதம், குடல்வாதம், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல், பித்தம், பித்தசுரம், குடல்பிரட்டல், வாந்தி, மனக்கலக்கம், குழப்பம், கபம், இருமல், சலதோசம், மூக்கடைப்பு, காசம், சுவாசகாசம், இரத்தகாசம், கபாலநீர், நீர்க்கோர்வை ஆகிய நோய்களை தீர்க்க முடியுமாம்.

இந்த மருந்துகளை தயாரிக்கும் முறைகளைப் பற்றி பிரிதொரு தருணத்தில் தனியொரு தொடராய் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்த பதிவில் சிறு பஞ்சமூலம் மற்றும் பெரும் பஞ்சமூலம் பற்றிய தேரையரின் தகவல்களை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் நாத்திகர்கள்?

Author: தோழி / Labels: ,

ஆதியில் மனிதன் தன்னைச் சூழ்ந்திருக்கும் இயற்கையை, அதன் பேராற்றலைக் கண்டு அஞ்சி நடுங்கி  தன்னை காத்துக் கொள்ள வேண்டி அவற்றை பணிந்து வணங்கத் துவங்கினான். இப்படித்தான் பஞ்சபூத வழிபாடுகள், மர வழிபாடுகள், நாக வழிபாடுகள் போன்றவை துவங்கின. 

பின்னாளில் இந்த பிரபஞ்ச சக்திகளுக்கு உருவமும், குறியீடுகளும் கற்பிக்கப் பட்டு அவற்றை மனமுருகி வணங்கினால் அவை மகிழ்ந்து சாந்தமாகி நல்வாழ்வை அருளும் என்கிற  எண்ணப் போக்கு உருவானது. இதற்கென இறைவனுக்கு படையல், பலி, பூசைகள், வேள்விகள், வழிபாடுகள், துதிகள், விதிகள், சடங்குகள் என ஒவ்வொன்றாய் உருவாக்கப் பட்டன. ஒரு கட்டத்தில் இறைவனை விடவும் இறைவனைச் சுற்றி கட்டமைக்கப் பட்ட கோட்பாடுகளின் ஸ்தாபனம் வலுவடைந்து மதம் ஆனது. 

இந்த மதத்திற்கு உண்மையுள்ளவனாகவும், அதன் கட்டுப்பாடுகளுக்கு பணிந்து அடங்கி இருப்பதுதான் இறையருளை பெறுவதற்கான ஒரே வழி என்கிற நம்பிக்கை மக்களிடையே ஆழமாய் விதைக்கப் பட்டது.இதனை மறு பேச்சில்லாது ஏற்றுக் கொண்டவர்கள் ஆத்திகர்கள் என்றும் நம்பாமல் கேள்வி எழுப்பியவர்கள் நாத்திகர்கள் என அழைத்தனர். 

அநேகமாய் எல்லா மதங்களும் இறை அருளை பெற, அதனை பணிந்து துதித்து சரணடைவதே முக்திக்கான வழி என கூறுகின்றன. இதனை பக்தி மார்க்கம் அல்லது பக்தி யோகம் எனலாம்.  பக்தி மார்க்கத்தில் ஏன், எதற்கென்கிற கேள்விகளே கிடையாது. மதம் முன்வைக்கும் சடங்குகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு அதன் போக்கில் வாழ்ந்திருப்பதே நம் கடமை என்பதாக வலியுறுத்தப் படுகிறது. 

இந்த சடங்குகள், விதிகள் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டவை. இவற்றிற்கான நிரூபணங்கள் அல்லது தேவைகள் என்ன என்கிற கேள்விகளுக்கு  பெரும்பாலும் நேரடியான பதில்கள் கிடைப்பதில்லை. அப்படியே கேள்விகள் எழுப்பினாலும் அவை தெய்வ நிந்தனையாக கருதப்படும். அப்படி கேள்வி எழுப்பியவர்கள் எந்தவொரு சமூகத்திலும் விரும்பப் படாதவர்களாகவே இருந்தனர். மேலும் அவர்கள் தீய சக்தியின் குறியீடுகளாய் இனம்காட்டப் பட்டனர். 

"நாஸ்திக்" என்னும் வடமொழிச் சொல்லின் மருவிய தமிழ் வடிவமே நாத்திகம்.  "ஆஸ்திக்" என்னும் வடமொழிச் சொல்லின் தமிழ் மருவலே ஆத்திகமாயிற்று.  ஆஸ்திக் என்னும் வடமொழிச் சொல்லுக்கு வேதங்களையும், அது முன் வைக்கும் கருத்துக்களையும், வரையறைகளையும், அவற்றின் உயர்வினை ஏற்றுக் கொண்டவன் என பொருள் கூறுகிறது. இதனைப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் அறிய விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம். இந்த விளக்கங்களின் அடிப்படையில் இறைவனை முன்னிறுத்தி கட்டமைக்கப் பட்டிருக்கும் வேதங்கள், உபநிடதங்கள், சடங்குகள் அவை முன் வைக்கும் வழிபாடுகளை ஏற்றுக் கொள்பவரை ஆத்திகர் என்றும், இவற்றை நிராகரிப்பவரை நாத்திகர் என்றும் புரிந்து கொள்ளலாம்.

வேதங்களும், உபநிடதங்களும் முன் வைக்கும் கருத்தியலை கேள்விக்குள்ளாக்கும் போதுதான் நாத்திகம் பிறக்கிறது.  கேள்விகளுக்கான பதிலைத் தேடும் பயணத்தில் அறிந்துணரும் உண்மைகளை வாதிக்கவும், விவாதிக்கவும் செய்யும் போது தெளிவுகள் உண்டாகின்றன. இந்த தெளிவுகளின் தொகுப்பே ஞானம் ஆகிறது. இவ்வாறு கிடைக்கும் ஞானத்தை மீண்டும் கேள்விக்குள்ளாக்கும் போது ஏற்படும் தெளிவுகள் மெய்ஞானத்தை உருவாக்குகிறது. இந்த மெய்ஞானம் எல்லையற்று விரிந்து பரந்திருக்கும் பேரருள் பாகுபாடில்லாது எங்கும் வியாபித்திருப்பதை உணர்த்துகிறது.  இந்த மெய்ஞானம் உணர்த்தும் பேரருளான இறைநிலையை அடையும் பயணமே ஞானமார்க்கம் அல்லது ஞானயோகம் ஆகிறது. இந்த ஞானத் தேடலின் முடிவில் இறையோடு இரண்டறக் கலந்த பேரானந்த நிலைக்குச் செல்வதே முக்தி என்கிறோம். சித்தர்கள் இதனை சித்தி நிலை என்கின்றனர்.

சித்தர்கள் என நாம் அறியும் அநேக மேன்மக்கள் இத்தகைய ஞானத் தேடலையே முன் வைக்கின்றனர். இதன் பொருட்டே அவர்கள் வெகுசன வாழ்வியலில் இருந்து விலகியவர்களாகவோ அல்லது விலக்கப் பட்டவர்களாகவோ இருந்தனர். சடங்குகளின் வழியே இறைவனை எவ்வாறு அடையமுடியும் என்பதை பலவாகிலும் கேள்விக்குள்ளாக்கினர். அந்த கேள்விகளுக்கான பதிலையும் தங்கள் பாடல்களின் முன் வைத்தனர். இதற்கு கணக்கிலடங்கா உதாரணங்களை பட்டியலிட முடியும். எனினும் இன்று சிவவாக்கியரின் ஒரு  கேள்வி பதிலோடு இந்த பதிவை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் 
எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே

- சிவவாக்கியார்.

என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே 
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின் 
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ 
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே.

- சிவவாக்கியார்.

தற்காலத்தில் நாத்திகம் என்னும் சொல்லின் பொருளும் அது முன்வைக்கும் அரசியலும் வேறு தளத்தில் இயங்குபவை. அவை எமக்குத் தேவையில்லாதது.


நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவினை துவங்கிய காலத்தில் என்னிடத்தில் இருந்த தகவல்களை பொதுவில் பகிரவேண்டும் என்கிற வேட்கை மட்டுமே இருந்தது.  ஆனால் அதை எல்லோருக்கும் புரியும் படி சொல்லிடத் தேவையான மொழி என்னிடத்தில் இல்லை. இதனை எனது ஆரம்ப கால பதிவுகளை வாசிக்கும் எவரும் அவதானிக்கலாம்.  பின்னாளில் அங்குலம் அங்குலமாய் என் மொழியை செப்பனிட்ட பெருமை திரு.சரவணக்குமார் அவர்களையே சேரும். 

எதை எழுதுவது, எப்படி எழுதுவது என பத்தி எழுத்தின் ஒவ்வொரு நுட்பங்களையும், சூட்சுமங்களையும் நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். தன்னுடைய வேலைகளுக்கு மத்தியிலும் எனக்கென நேரம் ஒதுக்கி பொறுமையுடன் அவர் கற்றுக் கொடுத்த  மொழியைத்தான் இன்று நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒரு முறை அவர் விளையாட்டாய் சொன்னதைப் போல அவருடைய எழுத்தின் வாரிசு நான்தான் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமைதான்.

எம்மை கடந்து போகும் ஒவ்வொருவரிடமும் நாம் கற்றுக் கொள்ள  ஒரு செய்தி இருக்கிறது, அதை உணர்வதிலும், தெளிவதிலும்தான் நம் வாழ்க்கை இருக்கிறது என்பதை எனக்கு  கற்றுத் தந்தவர் என்கிற வகையில் அவர் எனக்கொரு குரு என்றால் மிகையில்லை. எல்லாம் வல்ல குரு எம்முடன் இருக்கிறார். எம்மை வழிநடத்துகிறார் என்பதை பல தருணங்களில் உணர வைத்தவருக்கு இந்த நாளில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

திரு.சரவணக்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.