"உணவு, உடை, உறைவிடம்" ஆகிய மூன்றும் மனித குலத்தின் அடிப்படைத் தேவைகள் என்பதை நாமறிவோம். இவற்றைத் தாண்டி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மூன்று முக்கிய அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. அவை முறையே "ஊக்கம், உழைப்பு, உறக்கம்". இவற்றை ஒரு மனிதன் தன்னளவில் எவ்வாறு கையாளுகிறானோ அதைப் பொறுத்தே தனிமனித இருப்புகள் தீர்மானமாகின்றன.
பசி, தாகம், உறக்கம் ஆகிய மூன்றுமே நம் உடல் நலத்தினை தீர்மானிக்கின்றன. இதில் உறக்கம் மிகவும் முக்கியமானது. நாம் நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை உறக்கத்தில் கழிக்கிறோம். உறக்கம் என்பது உடலும் மனமும் ஒடுங்கிய ஒரு நிலை. இந்த நிலையில்தான் நம் உடல் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பணியை தீவிரமாய் செய்து கொண்டிருக்கிறது. எனவே நல்ல ஆழ்ந்த உறக்கம் அவசியமாகிறது.
நல்ல உறக்கத்தின் மகத்துவத்தை நம் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். இன்றைய நவீன அறிவியல் நிரூபிக்கப் பட்ட ஆய்வுகளின் முடிவில் கூறியவற்றை நமது முன்னோர்கள் என்றைக்கோ எழுதி வைத்திருக்கின்றனர். நாம்தான் அவற்றை தேடி பயன்படுத்தாமல் விட்டிருக்கிறோம். அந்த வகையில் உறக்கம் பற்றி தேரையர் தனது பதார்த்த குண சிந்தாமணி எனும் நூலில் கூறியுள்ள சில தகவல்களை தொகுத்துப் பகிரும் முயற்சியே இந்த குறுந்தொடர்.
உறங்குவதினால் ஏற்படும் பலன்களைப் பற்றி
தேரையர் கூறியுள்ளவைகளைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
ஐந்திந் திரியம் அசவுக் கியமகலும்
நைந்தமனத் துச்சாகம் நண்ணுங்காண்-பைந்தொடியே
மேனீட்டு மாயுளுறும் மெய்யி நயர்வொழியுங்
கானீட்டுப் பள்ளிகொள்ளுங் கால்.
இரவில் உறக்குவதால் ஐம்புலன்களும் ஒடுங்கி நம் ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவிகளுக்குத் தேவையான ஓய்வு கிடைப்பதால் அவை புத்துணர்ச்சி பெறும். இதனால் மனக் குழப்பங்கள் நீங்கி உற்சாகம் ஏற்படுவதுடன் ஆயுள் விருத்தியும் உண்டாகும் என்கிறார்.
ஐம் புலன்களும் ஒடுங்கிய நிலையில் மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்கிறது.
இரவில் உறங்காமல் விழித்திருந்தால் என்னவெல்லாம் உண்டாகும் என்பதை
தேரையர் பின்வருமாறு கூறுகிறார்.
சித்த மயக்கஞ் செறிவையும் புலத்தயக்க
மெய்த்த லுறக்கமந்த மென்பவைக-ணித்தமுற
வண்டுஞ் சிலரைநா யாயன்னோய் கவ்வுமிராக்
கண்டுஞ் சிலரைநம்பிக் காண்.
இரவில் உறங்காமல் விழித்திருப்பவர்களுக்கு சித்தமயக்கம் முதல் மந்தம் வரையிலான நோய்கள் வந்து தங்கிவிடுமாம். எப்படி வேட்டை நாய்கள் இரையை கவ்வுகின்றனவோ அப்படி பல்வேறு நோய்கள் நம் உடம்பை வந்து கவ்விக் கொள்ளும் என்கிறார்.
எல்லோருக்கும் தெரிந்த செய்திகள்தானே இவை என இன்று யாரும் இந்த தகவல்களைக் கடந்து போய்விடலாம். ஆனால் அறிவியலும் தொழில்நுட்பமும் வளராத ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் இதை எல்லாம் தீர்க்கமாய் உணர்ந்து எழுதிய மேதமையை நாம் உணர்வது அவசியம்.
மேலும் பகலில் உறங்குவதால் என்னவெல்லாம் நிகழும் என்பதையும் தேரையர் வரையறுத்துக் கூறியிருக்கிறார். அந்தப் பாடல் பின்வருமாறு
தண்டமேட்டரக்ஷீய முருத்தம்பஞ்
சருவாங்கமூக்கிராக் கிரசஞ்சுப்தி
துண்டமுறுவணுத்தம்பந் திருக்குத்தம்பஞ்
சோணிதமாட்டியம் புருவா டோபகந்தண்
அண்டுகிருத்திரசியூர்த் துவஞ்சம்பூக
மவபேதமவந்திர மவதானந்தான்
விண்டவிவுர் தாசியமிப் பதினெண்காக்கும்
வித்தாகும்பகலனந்தன் மேவின்மாதோ.
பகலில் உறங்குவதால் தண்டம், மேட்டரக்ஷீயம், ஊருத்தம்பம், சருவாங்கம், உக்கிராக்கிரம், சுப்தி, அனுத்தம்பம், திருக்குத்தம், சோணிதம், ஆட்டியம், புருவாடோ பகம், கிருத்திரசி, ஊர்த்துவம், சம்பூகம், அவபேதம், அவந்தந்திரம், அவதானம், விவுர்தாசியம் என பதினெட்டுவிதமான வாத நோய்கள் உடலில் வந்து சேரும் என்கிறார். இதனால் பகல் உறக்கத்தினைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே, அடுத்த பதிவில் உறக்கம் தொடர்பான மேலும் பல புதிய தகவல்களுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை
ஆங்கிலத்தில் வாசிக்க...