நூலால் கண்ணாடியை அறுக்கும் ஜாலம்

Author: தோழி / Labels: ,

இதெல்லாம் சாத்தியமா, அல்லது வெறும் கற்பனையா என எண்ண வைக்கும் செயல்களையே "ஜாலம்" என்கிறோம். சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே இத்தகைய ஜால வித்தைகள் பலவும் அருளப் பட்டிருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் முடிவில்லாத ஒன்று. ஆர்வமும், நேரமும் உள்ள எவரும் இந்த ஜால வித்தைகளைப் பற்றி ஆய்ந்தறியலாம்.

சித்தர் பெருமக்களின் ஜால வித்தைகளைப் பற்றிய சில தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அவற்றை வாசிக்கலாம். 

முந்தைய பதிவொன்றில் நூலினைக் கொண்டு இரும்பை அறுக்கும் ஒரு ஜாலம் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில் இன்று நூலினைக் கொண்டு கண்ணாடியை அறுக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்தத் தகவல் போகர் அருளிய "போகர் ஜாலவித்தை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல். அந்தப் பாடல் பின்வருமாறு...

கனத்தநல்ல கண்ணாடி யறுப்பதற்கு
கண்மணியே ரவையுமல்ல கல்லுமல்ல
வனத்தினிலே இருக்குமுடுக் கிலைதானப்பா
வண்மையா யதினுடைய ரசத்தைவாங்கி
இனத்துடனே வெள்ளை வுண்டை நூலைவாங்கி
இண்டான ரசத்தினிலே தோய்த்துர்த்தி
கனத்துடனே சனங்களுக்கு காட்டி நூலாம்
கண்ணாடி தனையறுக்கத் துண்டாய்ப்போமே.

முடுக்கி இலையின் சாற்றினை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதில் வெள்ளை உண்டை நூலை நன்கு ஊறவைத்து, நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த நூலைக் கொண்டு  கண்ணாடி அல்லது கண்ணாடி புட்டியை அறுத்தால் இரண்டு துண்டுகளாகி விடும் என்கிறார் போகர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நிலையாமை...

Author: தோழி / Labels: , ,

நிலையாமை மட்டும்தான் இந்த உலகின் ஒரே நிலையான உண்மை.  இந்த உண்மையை உணர்வதும், தெளிவதுமான அனுபவமே நமக்கு வாழ்க்கைப் பயணம்  ஆகிறது. இந்தப் பயணத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த உண்மை நம்மை ஆட் கொள்கிறது. அதன் தாக்கத்தில், தீவிரத்தில் நாம் அனைவருமே செயல் இழந்து, நிதானம் தவறி மயங்கி நிற்கிறோம். 

இத்தகைய மயக்கநிலையை எதிர் கொள்ளவும் அதில் இருந்து மீளும் வழிவகைகளை நம் முன்னோர்கள் மிகத் தெளிவாகவே வரையறுத்து கூறியிருக்கின்றனர். அப்படி அவர்கள் அருளிய  மெய்யுணர்வையும், மெய்யறிவையும் அறிந்து தெளிந்து அதன் வழி நிற்பவர்களின்  வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் ஆகிறது.

வள்ளுவப் பெருந்தகை இந்த நிலையாமையை அதன் கூறுகளை தனியொரு அதிகாரமாகவே ஆக்கி அருளியிருக்கிறார்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை உடைத்துஇவ் வுலகு.

நேற்று நம்மிடையே இருந்தவன் இன்று இல்லாமல் இறந்து போகும் நிலையாமைதான் இந்த உலகின் பெருமை என்கிறார். மேலும் இதே அதிகாரத்தின் மற்றொரு குறளில் 

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் 
வாளது உணர்வார்ப் பெறின்.

நம்மை கடந்து போகும் ஒவ்வொரு நாளும் நம் உடலில் இருந்து உயிரை அறுத்தெடுக்கும் வாள் என்பதை உணர வேண்டுமென்கிறார். 

இதற்கு என்னதான் தீர்வு?

அதனையும் வள்ளுவப் பெருந்தகையே பின்வருமாறு அருளுகிறார்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை 
மேற்சென்று செய்யப் படும்.

நிலையாமையை, அதன் குறுகிய கால அளவை உணர்ந்து நமக்குக் கிடைத்திருக்கும் இந்த  வாய்ப்பில் நம்மாலான நல்லவைகளை விரைந்து செய்வதே நமக்கான கடமையாக முன் வைக்கிறார். இதனை உணர்ந்து செயல்படுவோர் கடைத்தேறுகின்றனர். 

நமது இளமை, உடல், உயிர்ஆகியவை அழியக் கூடியவை. எந்த ஒரு உயிரும் மற்றொரு உயிருக்காக காத்திருப்பதில்லை, அதனதன் காலம் வரும்போது அவை அழிந்து போகின்றது. அற்புதமான அறிவும், ஆயிரம் சேனைகளும், அளவிட முடியாத செல்வம் என எத்தனை இருந்தாலும் அவை அழியும் இளமையையோ, உடலையோ, உயிரையோ ஒரு போதும்  காக்க முடிவதில்லை.

எனவே வாழும் காலத்தே இந்த வாய்ப்பின் அருமையை உணர்ந்து செயல்பட வேண்டும். மாறாக சிற்றின்பங்களில் மூழ்கித் திளைத்து வாய்ப்பை வீணடிப்பதில் அர்த்தமில்லை. மேலும்  பருவத்தே பயிர் செய்யாது கடைசி நேரத்தில் வருந்திப் பயனில்லை என்கிறார்கள் நம் சித்தர் பெருமக்கள். அதிலும் குறிப்பாக பட்டினத்தார் பாடல்களில் இந்த உண்மைகள் உரக்கச் சொல்லப் பட்டிருக்கின்றன.

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே! 

நிலையில்லாதவைகளை நிலையானது என எண்ணி அதில் மனம் மயங்கி வாழ்க்கையை வீணடிக்காமல்,  நிலையான பேரருளை உணர்ந்து தெளிந்து அதன் வழி நிற்பதே  சிறப்பு என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நன்றியும் வணக்கமும்.....

Author: தோழி / Labels:

நண்பர்களே,

பின்னூட்டங்களின் மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் எனக்காக தங்களின் அன்பையும், ஆறுதலையும், பிரார்த்தனைகளையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல குருவருளின் திருவருளோடு விரைவில் பதிவுகளை மேம்படுத்திட முயற்சிக்கிறேன்.