ஐந்தாவது ஆண்டில் சித்தர்கள் இராச்சியம்....

Author: தோழி / Labels:

சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவு தனது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. மகிழ்வான இந்த தருணத்தை உங்களோடு இன்று பகிர்ந்து கொள்ள முடியாது போய்விடுமோ என நினைத்திருந்தேன். நல்ல வேளை, குருவருளினால் இன்று இந்த பதிவு சாத்தியமாயிற்று.

கடந்த நான்கு வருடங்களில் 902 பதிவுகள். அவை எழுபத்தி ஐந்து லட்சம் பேருக்கும் அதிகமானோரால் வாசிக்கப் பட்டிருக்கிறது. இன்றளவில் 6800 பேர் ஆர்வமாய் பின் தொடரும் ஒரே தமிழ் வலைத் தளம் போன்ற பெருமைகள் யாவும் எல்லாம் வல்ல குருவின் திருவடிகளையே சேரும். இவை எல்லாம் அவரால்தான் சாத்தியமாயிற்று.  இது மிகையான வார்த்தை இல்லை. அவர் அனுமதியில்லாமல் இந்த தகவல்களை  என்னால் தேடித் திரட்டி இங்கே பகிர்ந்திருக்கவே  முடியாது என்பதை  தீவிரமாய் நம்புகிறேன். 

கடந்த வருடத்தில் எனக்கு நிகழ்ந்த விபத்துக்களின் தாக்கம் உடலளவில் இன்னமும் நீடிக்கிறது. கடந்த பத்து நாட்களாய் மீண்டும் மருத்துவமனை வாசம்.  சுத்தமாய் நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரளவு உடல்நலம் தேறி சற்று முன்னர்தான் வீடு திரும்பி இந்த பதிவினை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

இதற்கிடையில் மருத்துவ மேற்படிப்புக்கு (M.D) தேர்வாகி இருக்கிறேன். தற்போது  வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. காலையில் மருத்துவமனையில் கடமையாற்றி விட்டு, மதியம் வகுப்புகளுக்கு ஓட வேண்டிய நெருக்குதல்கள் இருந்தாலும் வழமை போல பதிவுகளை மேம்படுத்த என்னாலான முயற்சிகளை செய்ய விரும்புகிறேன்.

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று பதிவுகளையவது வலையேற்றி விட உத்தேசித்திருக்கிறேன். புதிய நேர நெருக்கடிகளுக்கு பழக எனக்கு  சில வாரங்களாகலாம். அதுவரை தாமதங்கள் ஏதுமேற்பட்டால் பொறுத்தருள வேண்டுகிறேன்.

இக்கட்டான இந்த காலகட்டத்தில் என்னை புரிந்து கொன்டு, மனதளவில் நான் சோர்ந்துவிடாமல், என்னை தூக்கி நிறுத்திய நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவுகள் தொழில்நுட்ப ரீதியாக இன்றளவும் உயிர்ப்புடன் இயங்கிட அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை இத்தருணத்தில் நினைவு கூர்ந்திட  விரும்புகிறேன்.

நிறைவாக இந்த பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும், அக்கறைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.

தோழி
(Dr.தர்ஷினி)


இந்த ஆண்டின் முதல் மின்நூல்

Author: தோழி / Labels: ,

நண்பர்களே,

சித்தர் பெருமக்கள் அருளிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியின் பதினேழாவது படைப்பாக நந்தீசர் அருளிய "நந்தீசர் அஷ்டமா சித்தி 05” என்கிற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன். ஆதி குருவான சிவனின் நேரடி சீடராய் போற்றப் படுபவர் நந்தீசர். திருமூலரின் குருவாக அறியப்படும் இவர், நந்தீசர் தேவர்சஞ்சை ( பித்ரு தேவரின் மகள் ) என்பவளை மணந்தாக குறிப்புகள் காணக்கிடைக்கிறது.இவரது சமாதி திருவாவடுதுறையில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது.

இச் சிறிய நூலில் லிங்க சுத்தி முதல் அகார உகார மகார சேர்க்கை பற்றி நந்தீசர் விளக்கியுள்ளார்.  

தமிழ்  அறிந்த அனைவரும் படித்து இன்புற வேண்டும் என்கிற நோக்கில் இந்த அரிய நூலினை மின் நூலாக தொகுத்திருக்கிறேன். தமிழர்கள் அனைவரும் போற்றி பாதுகாத்திட வேண்டிய பழமையான நூல்களில் இதுவும் ஒன்று. எனவே இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் தாங்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருடன் இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நண்பர்களே!,தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல....

எனது மேலான குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


முந்தைய மின்னூல் படைப்புகளை தரவிறக்க...

என்றும் நட்புடன்,

தோழி..

தொடர்புக்கு

siththarkal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


செங்கடுக்காய் கற்பம்

Author: தோழி / Labels: ,

சித்த மருத்துவத்தில் மகத்துவமான மூலிகைகளில் கடுக்காயும் ஒன்று. இது மரவகையைச் சேர்ந்தது. இந்த மரங்கள் உள்ள நிலம், அதன் தன்மை மற்றும் அதன் காயின் வடிவத்தைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய் என பலவகைகளாக கூறப் பட்டிருக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டவை. செங்கடுக்காய் கற்பம் ஒன்றினை செய்திடும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.

ஒரு புத்தகமாய் தொகுக்கக் கூடிய அளவில் ஏராளமான எளிய கற்பவகைகளை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். ஆனால் இந்த கற்பம் கொஞ்சம் சிக்கலான, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய  சிக்கலான தயாரிப்பு முறையினைக் கொண்டது. இந்த கற்ப முறையில் விஷத்தன்மை உடைய பாதரசம் பயன்படுத்தப் படுவதால் தயவு செய்து  யாரும் இதனை பரிட்சித்து பார்க்க வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதோடு இந்த பதிவை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். 

இந்த கற்பமுறை அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

இருக்கவே புலஸ்தியனே யின்னங்கேளு
யெழிலான காயாதி கற்பஞ்சொல்வேன்
பொருக்கவே பூவுலகில் கோடிகாலம்
பொங்கமுடன் யிருப்பதற்கு வுறுதிசொல்வேன்
நிருத்தமுடன் செங்கடுக்காய் சேர்தான்ரெண்டு
நிலையான சூதமது சேர்தானொன்று
திருத்தமுடன் மலைத்தேனி லூறவைத்து
திகழுடனே பூமிதனில் புதைத்திடாயே.

புதைக்கவே மண்டலமு மூன்றுசென்றால்
புகழான செங்கடுக்காய் சூதமுண்டு
சிதைத்துமே தேனதுவும் பொசித்துமேதான்
சிறப்பான மெழுகதுபோ லாகும்பாரு
விதையான கடுக்காயுஞ் சூதஞ்சேர்ந்து
வீறான காயகற்பம் மெழுகதாச்சு
சதையான செங்கடுக்காய் கற்பமாகி
தன்மையுள்ள தேகமது கற்றூணாமே.

கல்லான தூணதுவுங் கடுக்காய் தன்னால்
காயாதி கற்பமதுக் குறுதியாச்சு
வல்லான காயமது கொண்டபோது
வரைகோடி திறைகோடி யிருக்கலாகும்
புல்லான தேகமது கற்றூண்போலே
புகழான வாசியது கீழ்நோக்காகும்
நல்லதொரு காயமதைக் கொண்டபோது
நரைதிரையும் நாயகனே யில்லைகாணே.

வருகவே தேகமது தங்கம்போலாம்
வண்மையுள்ள செங்கடுக்காய் காயகற்பம்
ஒருவருமே யறியார்க ளிந்தபாகம்
ஒகோகோ சித்துமுனி கண்டதில்லை
திருவருளின் மனோன்மணியின் கடாட்சத்தாலே
திறமான காயகற்பஞ் சொன்னேனப்பா
கருவறிந்து வுளவறிந்து கருத்தாயுண்டு
காசினியில் கோடிவரை யிருக்கலாமே.

கடுக்காயின் நடுவே உள்ள கொட்டை பகுதி நஞ்சு என்பதால் அதனை நீக்கி விட்டு சதைப் பகுதியை மட்டுமே கற்பம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுத்தி செய்யப்பட்ட செங்கடுக்காய் இரண்டு சேர் அளவும், சுத்தி செய்யப்பட்ட பாதரசம் ஒரு சேர் அளவும் எடுத்து அவற்றை ஒரு மட்பாண்டத்தில் இட்டு அது மூழ்கும் வரையில் மலைத்தேன் விடவேண்டுமாம். பின்னர்  இந்த மட் பாண்டத்தின் வாயினை நன்கு மூடி சீலைமண் செய்து நிலத்தில் புதைத்துவிட வேண்டும் என்கிறார்.

மூன்று மண்டல காலம் நிலத்தில் புதைத்து வைத்து பின்னர் எடுத்தால், பாதரசமும் கடுக்காயும் சேர்ந்து மெழுகு போல் ஆகியிருக்குமாம். இந்த மெழுகினை காயகற்ப மெழுகு என்கிறார் அகத்தியர்.  பின்னர் இந்த மெழுகினை உண்டு வந்தால் நரை திரை நீங்கி, உடல் கற்தூண் போல் உறுதியாக இருப்பதுடன் உலகில் இறுதிக் காலம் வரை வாழலாம் என்கிறார். 

இந்த கற்பமுறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.

ஒரு மண்டலம் - 48 நாட்கள். மூன்று மண்டலம் -144 நாட்கள்.

எட்டு பலம் = ஒரு சேர். ஒரு  பலம் 35 கிராம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...