குருவைத் தேடி....

Author: தோழி / Labels: ,

"குரு பரம்பரை" என்கிற இந்த ஒற்றை தத்துவத்தின் மீது கட்டமைந்ததுதான் சித்தரியல்.  இங்கே குரு ஆதியும், அந்தமும் ஆனவர். அவருக்கு மிஞ்சியது என எதுவும் இல்லை. எல்லாம் அவரால் ஆனதே, அவரன்றி ஓரணுவும் அசையாது என்பதைப் போன்ற ஆழ்ந்த சத்தியமான கருத்தாக்கங்களின் வழி நிற்பதுதான் நம் சித்தர்களின் பாரம்பரியம். இந்த அடிப்படைகளுக்கு எவரும் விதிவிலக்கில்லை. ஆதி குருவான சிவனில் துவங்கி அவருடைய அணுக்க சீடர்களின் வழி வந்தவர்களே நம் சித்தர் பெருமக்கள். 

இப்போதெல்லாம் தெருவுக்கு நாலு குருமார்கள் விளம்பர பதாகைகளோடு வலிய வந்து ஞானம் தரவும், தீட்சை கொடுக்கவும்  தயாராக இருக்கின்றனர். என்ன அவர்கள் வசூலிக்கும் தட்சிணைதான் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. இத்தகைய குருமார்களின் வேடம் கலைகிற போது மட்டுமே நாம் மெய்யான குருவைப் பற்றி யோசிக்கவும், தேடவும் விழைகிறோம்.  மெய்யான குரு என்பவர் யார்?, அவர் எங்கிருப்பார்? அவரை எப்படித் தேடி கண்டறிவது? என்கிற கேள்வியும் குழப்பமும் நம்மில் அநேகருக்கு உண்டு.

மெய்யான குருவை கண்டறிவது என்பது ஒரு வகையான வாழ்நாள் பயணம். நம்மில் பலரும் இப்படி மெய்யான குருவை தேடிக் கொண்டிருப்பவர்கள்தாம். குருவை தேடிக் கண்டு பிடிக்கும் இந்த பயணத்தை எப்படித் துவங்குவது அல்லது எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில்தான் பலருக்கும் குழப்பம் வருகிறது. இதற்கு நம் முன்னோர்கள் எளிய தீர்வினை அருளியிருக்கின்றனர். 

ஆம் மிக எளியவழி. அது இதுதான்  "மாதா, பிதா, குரு தெவ்யம்" . ஆம் நம் பெற்றோரே நமது முதல் குரு,  இதை உணர்ந்து நம் தாய் தந்தையரை போற்றிப் பணிந்து  அவர்களின் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கும் போது அடுத்த கட்டமாய் மெய்யான குரு நம்மைத் தேடி நம் முன்னே வருவார்.  இத்தகைய வழி நடத்துதலில்தான் நாம் எதைத் தேடுகிறோமோ அதையே அடைகிறோம்.

இந்த எளிய அடிப்படையை புரிந்துணர்ந்து பயணிக்க ஒருவருக்கு மெய்யான குருவின் தரிசனம் கிடைக்கும்.   குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள்.  மெய்யான குரு நம் அக இருளை நீக்கக் கூடியவர். இத்தகைய குருவின் உதவியால் நம்மை நாமே உணரத் துவங்கும் போது, நான் என்கிற அகந்தை அழியும் போது நம்மில் மிளிர்ந்திருக்கும் ஒப்பற்ற பரம்பொருளை நாம் உணரக்கூடியவர்களாய் ஆகி விடுகிறோம். இதனையே சித்த நிலை என்கிறோம். தெய்வ நிலை என்பதும் இதுதான்.

மாணிக்க வாசகர் மற்றும் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் இறைவனே குருவாக நேரில் வந்து உபதேசம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இறைவனோ உருவமற்ற சூக்குமமானவர். அப்படி சூக்குமமான நிலையிலிருந்தே ஏன் குரு உபதேசம் செய்யாமல் மனிதவடிவில் நேரில் வந்து உபதேசம் செய்தார் என்ற கேள்வி எழுவது இயற்கையே.."ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" என்கின்றன வேதங்கள். கடவுளாக இருந்தாலும் மனித உருவில் வந்து ஆகவேண்டும் என்பதே இதன் பொருள். ஆக சூக்கும வடிவில் இருக்கும் ஒருவர் அது கடவுளாக இருந்தாலும் குருவாக இருந்து போதிக்க முடியாது என்பது இவற்றில் இருந்து தெளிவாகிறது. 

சித்தரியலிலும் சூக்கும நிலையில் இருந்து எந்த குருவானவரும் போதித்ததாக எந்தவித குறிப்புகளும் கிடைக்கவில்லை. மாறாக ஜீவ சமாதி அடைந்த ஒரு சித்தர் அதிலிருந்து மீண்டுவந்து உபதேசம் செய்து பின்னர் வேறொரு இடத்தில் மீண்டும் ஜீவ சமாதியடைந்ததாக குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. 

அந்தவகையில் அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் குருவானவரை அணுகி பயனடையும் வழிவகையை விளக்குகிறார்.

பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே.

திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே

கேழ்க்கையிலே நீசெய்த நன்மைப்பாகம்
கிருபையுடன் சொல்லிடுவா ரப்போதானும்
வாழ்க்கையுள்ள தேகமடா வலுத்துப்போகும்
மகத்தான புத்தியுமே சொலிக்க லாச்சு
தாழ்க்காமல் பதவியிலே மேவலாச்சு
சதாகாலம் போதையுமோ தரிக்கலாச்சு
காக்கையிலே கால்வலுத்து நடக்கலாச்சு
கதிரான தீபவொளி காணலாச்சு

பல நூல்களைத் தேடிப் படித்து அறிந்து பக்குவமடைய நமது வாழ்நாள் போதாது அதனால் சிறுவயது என்றாலும் கூட மகத்தான் குருவை தேடியடைந்து, அவருக்கு அணுக்கமாய் இருந்த்  அவர் மனம் கோணாதபடி நடந்து கொண்டு அவரிடம் கற்கவேண்டும் என்கிறார்.  அப்படி இருந்தால் மட்டுமே குருவானவர் சிவ சக்தி தீட்சை தந்து, சிறப்பான ஆதி அந்த திறன் எல்லாம் உபதேசிப்பாராம். சகல கலை செய்திகள் முதல் மௌனத்தின் திறங்கள், நிஷ்டை முறைகள், காயகற்ப வகைகள் என அனைத்தும் உபதேசிப்பாராம். அத்துடன் செய்த நன்மைகள் அதனால் கிடைக்கும் பலன்கள் முதல் கர்ம வினைகள் நீக்குவதற்கான வகைகளை சொல்லி சமாதி நிலைக்கும் வழிகாட்டுவாராம் என்கிறார். 

இப்படி நேரடியாக குருவுடன் இருந்து கற்றால் குருவானவர் கருணையுடன் எல்லாம் சொல்லிதருவாராம். அதனால் காயசித்தியும், புத்திக்கூர்மையும், பேரானந்த நிலையும் கிடைப்துடன் புருவ மத்தியில் தீப ஒளியையும் காணலாமாம். என்கிறார். 

சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவில் 900 பதிவு இது. அந்த வகையில் இந்த பதிவினை எல்லாம் வல்ல குருவுக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த பயணத்தில் இதுகாரும் என்னோடு பயணித்துக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பருவத்தே பயிர்செய்!

Author: தோழி / Labels: ,

ஔவை பிராட்டியார் அருளிய நீதி நூலான ஆத்திச் சூடியில் இடம்பெற்ற வரிதான் "பருவத்தே பயிர் செய்". இந்த எளிய ஒற்றை வரியின் ஊடே பொதிந்திருக்கும் வாழ்வியல் தத்துவம் மகத்தானது. அதாவது செய்யக் கூடியவைகளை காலத்தே செய்யத் தவறிவிட்டு பின்னர் வருந்திப் பயனில்லை.  காலத்தே பயிர் செய்வதைப் போல நம் கடமைகளை உடலில் வலுவும் திறனும் இருக்கும் போதே செய்து விட வேண்டும். ஏனெனில் நம்முடைய இளமை நிலையில்லாதது. 

இதே கருத்தினை திருமூலர் பின்வருமாறு விளக்குகிறார்.

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில ஹாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே!

காலையில் கீழ்த்திசையிலே இளமையாய் எழுந்து விரைந்து மேற்சென்ற கதிரவன் நண்பகலில் இளமைத் தன்மை நீங்கிப் பின்னர் முதுமை எய்தி மாலையில் மேற்திசையில் வீழ்ந்து மறைதலைக் கண்ணாரக் கண்டும், ‘இளமை யெழுச்சி என்றும் நிலையுடையது அல்ல’ என்பதனை மக்கள் உணர்வது இல்லை. மேலும் தன் வீட்டிலே பிறந்த பசுவின் இளங்கன்று சில ஆண்டுகளில் காளைப் பருவம் நீங்கி முதுமையடைந்து எருதாய்ச் செயலற்று இறப்பதைக் கண்ட பின்னரும், இந்த உலகில் வாழும் மனிதர்கள் தமது இளமையும் அவ்வாறு நிலையற்றது என்று உணராதவர்களாக இருக்கின்றனர் என்கிறார்.

சூரியனும், கன்றும் சீக்கிரத்தில் இளமையை இழந்துவிடும் பொழுது, மனிதன் மட்டும் எவ்வாறு தோன்றியபடியே இளமையோடு இருக்க முடியும்?

சூரிய உதயத்தையும் மறைவையும் தினம் தினம் கண் கூடாக பார்த்தும்கூட, தோன்றிய பொருளுக்கு அழிவுண்டு என்பதை அறியாது,  கிடைத்தற்கரிய இளமைப் பருவத்தில் தீமைகளைச் செய்து நாம் நிர்க்கதிக்கு ஆளாகாமல் பஞ்சேந்திரியங்களையும் இளமையிலேயே ஜெயித்து வாழவேண்டும் என்கிறார் திருமூலர்.

இளமை கழிந்து போகுமுன் அருமையான செயல்களைச் செய்துவிட வேண்டும். முதுமையில் செய்ய எண்ணினாலும் கூட அச்செயல்களைச் செய்வதற்குரிய ஆற்றல் நமக்கு இல்லாது போய்விட வாய்ப்புள்ளது.  இதனை திருவள்ளுவப் பெருந்தகை பின்வருமாறு கூறியிருக்கிறார்.

 “அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.”

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நாகப்பாம்பினை கட்டும் மந்திரம்

Author: தோழி / Labels: ,

விலங்கின வகைப் பட்டியியலில் "நாஜா" என்கிற பிரிவில் "எலாப்பிடே" என்ற குடும்பத்தைச் சேர்ந்தது நாகப் பாம்பு. இவை பெரும்பாலும் வெப்ப மண்டல பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. மிகவும் கொடிய நஞ்சுடைய இந்த பாம்பு நல்ல பாம்பு என்றும் அழைக்கப் படுகிறது. இவை தீண்டினால் மரணம் நிகழும் வாய்ப்புள்ளது. 

இயற்கையோடு இணைந்த பெருவாழ்வினை வாழ்ந்த நம் முன்னோர்கள் இத்தகைய விலங்குகளை துன்புறுத்தாமலும், அதே நேரத்தில் அவற்றினால் தமக்கு எவ்வித பாதிப்பும் நேராதவகையில் பல்வேறு உத்திகளை கைக் கொண்டிருந்தனர். அவை பற்றி முன்னரே பல தகவல்களை பகிர்ந்திருக்கிறேன்

அந்த வகையில் இன்று நாகப்பாம்புகளை மந்திரத்தால் கட்டும் ஒரு முறையினை பார்ப்போம். இந்த மந்திரத்தை உபயோகித்தால் நல்ல பாம்பு  நம்மை தீண்டாமல் விலகிச் சென்றுவிடுமாம். நம்புவதற்கு அரிதான இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

இந்த மந்திரம் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு....

கேட்டவுடன் வந்தவகை சொல்வேனம்மா
கெம்ப்பீர மானதொரு நாகந்தானும்
நாட்டமுடன் கண்டமுடன் பணிந்துநிற்க
நற்வசன மானதொரு மந்திரந்தான்
தேட்டமுடன் சொல்லுமென்று கேட்டேனப்பா
திருவான முகமலர்ந்து தீர்க்கமாக
தாட்டிகமாய் நறீசிம்மறீசிங்கென்று
தன்னிலையிற் தானிருந்து உருவே செய்யே.

செய்யடா உறுதியுட னாயிமுருவேசெய்ய
தீர்க்கமுடன் மந்திரந்தான் சித்தியாகும்
மெய்யடா பத்தியுடன் சித்தியானால்
வெருண்டெழுந்த நாகமடா அரண்டேநிற்கும்
தொய்யவே அரண்டதொரு நாகந்தன்னை
சுத்தமுடன் பார்த்துநீ சீஊவென்றால்
பய்யடா அந்தரவு நகண்டுநல்ல
பத்தியுட னோடிவிடும் பாருபாரே.

முதலில்  குருவை வணங்கி மனதை ஒரு முகப் படுத்தி  "நறீ சிம் மறீ சிங்" என்கிற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்து, இந்த மந்திரத்தில் சித்தியடைய வேண்டும். இத்தகையோரை  நாக பாம்பு தீண்ட வந்தால், அந்த பாம்பினை நோக்கி "சீஊ" என்ற மந்திரத்தை உச்சரிக்க அந்த பாம்பானது தீண்டாது ஓடிப் போய்விடும் என்கிறார். இந்தவகை மந்திரங்களைக் "கட்டு மந்திரம்" என்று அழைப்பர். 

இம் மாதிரி பல ஆச்சர்யமான தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே ஏட்டளவில் உறைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அல்லது ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் பரீட்சித்து இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்தால் பலரும் பயன் படுத்திடக் கூடியவையாக இருக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புண்களை குணமாக்கும் மேற்பூச்சு

Author: தோழி / Labels: ,

உடலில் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு மருந்தினை அகத்தியர் அருளியிருக்கிறார். இதனை காயங்களின் மீது மேற் பூச்சாக பூசி வந்தால், எல்லா வகையான புண்களும் ஆறிவிடுமாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் இரணவைத்தியம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

முருங்கை யிலையும் முன்னையுந் தும்பையும்
அரிக்கையும் நீலியும் அத்தியும் வேம்புடன்
எருக்குஞ் செருப்படி பேயத்தி வேலியும்
கருத்த நொச்சியும் கையாந் தகரையே

வெளுத்த வெள்ளையும் வெண்ணாச்சி புங்குடன்
வளுத்த பூவும் வருந்தி வகையொன்று
இடித்த சார்படி பெள்ளெண்ணெய் தான்படி
படிக்க துத்தமும் பாங்குடன் கெந்தியே

ஆன சூதம் வெட்பாலை பரங்கியும்
வான சிந்தூரம் மாதவ லிங்கமும்
காண வேவடிக் கடுகு பதந்தனில்
ஏன் மாயெடு நேர மறிந்தரோ

வருந்திச் சூலை வரும்வெடி போக்கிடும்
புருந்தித் தொண்டையும் போல்சதை சிங்கியும்
அரிகி ரந்தியும் ஆறாத புண்களும்
பரிப ரங்கியும் குட்டமும் பாறுமே

முருங்கை இலைச்சாறு, தும்பை இலைச்சாறு, அத்திப்பால், எருக்கிலைச்சாறு, பேயத்திச்சாறு, கருநொச்சி இலைச்சாறு, வெண்நொச்சி இலைச்சாறு, புங்கம்பூச்சாறு, முன்னை இலைச்சாறு, அவுரி இலைச்சாறு, வேம்பு இலைச்சாறு, செருப்படை இலைச்சாறு, உத்தாமணிச்சாறு, கரிசாலைச்சாறு, புங்கம்பால், நல்லெண்ணெய், பாதரசம், படிக்காரம், பரங்கிப்பட்டை, வெள்ளைப் பாஷாணம், கெந்தகம், வெட்பாலை அரிசி, லிங்க சிந்தூரம்,  ஆகியவற்றைச் வகைக்கு அரைப்பலம் வீதம் சேகரித்துக் கோள்ள வேண்டுமாம். 

இவற்றில் படிக்காரம், பரங்கிப்பட்டை, வெள்ளைப் பாஷாணம், கெந்தகம், வெட்பாலை அரிசி, லிங்க சிந்தூரம்,  ஆகியவற்றை நன்கு பொடித்து ஒரு பழைய மட்பாண்டத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டுமாம் இவற்றுடன் மற்றைய பொருட்களையும் சேர்த்துக் கலந்து, மட்பாண்டத்தை அடுப்பிலேற்றி கடுகுத்திரள் பக்குவத்தில் காய்ச்சி வடித்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

இந்த கரைசலில் தேவைக்கேற்ப, வெடிசூலை, சிங்கிப் புண், அரிகிரந்தி போன்ற ஆறாத ரணங்கள், பரங்கிப்புண், குஷ்டரணம் போன்ற சகலவித ரணங்களும் மேற்பூச்சாக பூசிவர குணமாகும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய வெள்ளி பற்பம் (பஸ்பம்)

Author: தோழி / Labels: ,

பற்பம் அல்லது பஸ்பம் என்பது சாம்பலைக் குறிக்கும். சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்தோ, ஊதியோ வெளுக்கும் படி சாம்பலாக செய்வதையே பற்பம் என்கிறோம். இந்த பற்பங்கள் பல வகைப் படும். தேவைக்கு ஏற்ப உலோகங்களை அல்லது நவரத்தினங்களைக் கொண்டு பற்பங்களை தயாரிக்கும் முறையினை நமது முன்னோர்கள் அருளியிருக்கின்றனர்.

வெள்ளியை பற்பமாக்கும் ஒரு முறையினை முன்னரே இங்கே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அதனை வாசிக்கலாம். இந்த பற்பங்கள் உடல் வலிவையும், பொலிவையும் மேம்படுத்தக் கூடியவை.  அந்த வகையில் அகத்தியர் அருளிய வெள்ளி பற்பம் ஒன்றினைப்  பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். 

இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய ரத்தின சுருக்கம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

கேளப்பா வெள்ளியது தகடுதட்டிக்
கெடியான ரசபற்பம் வங்கபற்பம்
நாளப்பா நாகமொடு மூன்றுநேராய்
நலமாக நீரா லரைத்துக்கொண்டு
கேளப்பா வெள்ளிக்குச் சமனாய்ப்போடு
விருதான ரவியுலர்த்திச் சீலைசெய்து
சூளப்பா சுண்ணாம்புக்குள்ளே வைத்து
துடியாக முழப்புடத்தில் தூக்கிவாங்கே.

வாங்கியதோர் பற்பமதைப் பதனம்பண்ணு
வகையாக பணவெடைதான் தேனிற்கொள்ள
தேங்கிதோர் கல்லடைப்புச் சதையடைப்புத்
தீராத திரிச்சுரங்கள் தீரும்தீரும்
ஏங்கியதோர் காசமோ டிளைப்புந் தீரும்
மிளைக்குமே லிங்கப்புற்று யோனிப்புற்று
பாங்கியே கிரந்தி யரிமேகமெல்லாம்
பறக்குமடா வின்னமொரு பற்பங்கேளே.

வெள்ளியை கெட்டியான தகடாக மாற்றிக் கொள்ள வேண்டும். ரச பற்பம், வங்க பற்பம், நாகபற்பம் இவை மூன்றையும் நீர் விட்டு நன்கு அரைத்து, அந்த கலவையை கெட்டியாக அடித்த வெள்ளித் தகட்டின் இருபுறமும் சமமாக பூசி வெய்யிலில் உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதற்கு சுண்ணாம்புச் சீலை செய்து, சுண்ணாம்புக் குகைக்குள் வைத்து முழப் புடம் போட்டால் நல்ல பதமான வெள்ளி பற்பம் கிடைக்கும். இதனை சேமித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். 

இந்த பற்பத்தில் பண எடை அளவு எடுத்து தேனில் நன்கு குழைத்து உண்டு வந்தால் கல்லடைப்பு, சதையடைப்பு, வாத, பித்த சிலேத்தும சுரங்கள், காசம், ஈளை, இளைப்பு, லிங்கப்புற்று, யோனிப் புற்று, கிரந்தி, அரிமேகம் ஆகியவை நீங்கும் என்கிறார். 

இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


விஷக் கடி வைத்தியம்

Author: தோழி / Labels: ,

பாம்பு, தேள், பூரான், தேனீக்கள், வண்டுகள், எலி போன்ற உயிரினங்கள் தீண்டினால் நம் உடலில் பரவும் விஷத்தை முறிக்கவும், அதன் தீவிரத்தைக் குறைக்கவும் பல்வேறு வகயான எளிய தீர்வுகளை நம் முன்னோர்கள் கைக் கொண்டிருந்தனர்.  இது தொடர்பில் முன்னரே சில தகவல்களை இங்கு பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையின் இன்று அகத்தியர் அருளிய மருந்தொன்றினைப் பற்றி பார்ப்போம்.

இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு....

வேமப்பா விஷங்களுக்கும் குழம்பு கேளு
வேப்பம்முத்து ரசகெந்திது ருக வெள்ளை
வெள்லையோடு மனோசிலையும்பெருங் காயமேழு
மேன்மையாய் வகைக்கரைக்க ழஞ்சு கூட்டி
தள்ளையென்ற நேர்வாளஞ் சுத்தி செய்து
தருவாகக் கழஞ்சதுவு மேழு மொன்றாய்
வள்ளவே கல்வத்திலிட் டெருக் கம்பால்
மாட்டியரை ஒருசாமமெ ழுகு போல
துள்ளவே பின்புநிம்ப நெய்தான் விட்டுத்
துருசாக வொருசாமம ரைத்துக் கேளே.

அரைத்துமதைக் கொம்புச்சிமிழ் தன்னில் வைத்து
அப்பனே விஷந்தீண்டி வந்த பேர்க்கு
திறத்துடனே பயிறளவுவெற்றி லையில் லீய்ந்து
தீர்க்கமுடன் கடிவாயிற் கொஞ்சம் பூச
பறந்துவிடுஞ் சகலவிஷம் போகு மென்று
பரமனது வடமொழிநூல் பாக மப்பா
உரைத்துவிட்டேன் பத்தியத்தான்ப சுமோ ராகும்
உத்தமனே சந்நிக்குக லிக்கங் கேளே.

வேப்பம் முத்து, ரசம், கெந்தகம், துருசு, வெள்ளைப் பாடாணம், மனோசிலை, பெருங்காயம், ஆகியவற்றை வகைக்கு அரைக்கழஞ்சு அளவு எடுத்து, அதனுடன் சுத்தி செய்த நேர்வாளம் ஏழு கழஞ்சு சேர்த்து,  இந்த கலவையை கல்வத்திலிட்டு,  எருக்கம்பால் சேர்த்து ஒரு சாம நேரம் அரைக்க கலவையானது மெழுகு பதத்தில் வருமாம். அப்போது அதில் வேப்பெண்ணெய் விட்டு மேலும் ஒரு சாமம் அரைத்து எடுத்த மருந்தினை, கொம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். இந்த மருந்து கெட்டியான மெழுகு பதத்தில் இருக்கும்.

எந்தவகையான விஷக் கடியாக இருந்தாலும், நாம்  சேமித்து வைத்த மெழுகில் இருந்து பயறு அளவு எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து  மடித்து பாதிக்கப் பட்டவரிடம் உண்னக் கொடுக்க வேண்டுமாம். பிறகு அந்த மெழுகில் இருந்து சிறிதளவு எடுத்து கடிவாயிலும் பூசிவிட  உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!

இதற்கு பத்தியமாக மருந்துண்ணும் நாளில் பசு மோரை நீக்க வேண்டும் என்கிறார்.

ஆர்வமும், வாய்ப்பும் உள்ளவர்கள், காலத்தே மறைந்து போன இது போன்ற நம் மருத்துவ முறைகளைப் பற்றி மேலதிக ஆய்வு செய்திடலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

Author: தோழி / Labels:இத் தமிழர்  திருநாளில், கடந்த கால கசப்புகளை மறந்து, நம்மில் அன்பையும், சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்.

இன்று துவங்கி இனிவரும் நாட்களில் நாம் முன்னெடுக்கும் ஆக்கப் பூர்வமான முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் விழைந்திட எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுவோம்.

குருவருள் துணை நிற்கும்.

அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!


அரு மருந்தாகும் தூதுவளை லேகியம்

Author: தோழி / Labels: , ,

சமஸ்கிருத மொழியில் உள்ள அவலேஹம் என்கிற சொல்லே நாளடைவில் மருவி 'லேகியம்' என்றானது. தூய தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பதே சரியானது. பொதுவில் லேகியம் என்பவை தண்ணீரைப் போலவோ, அல்லது குழம்பு போலவோ இல்லாமல் கெட்டியான நீர்ம நிலையில் இருக்கும். நோய் தீர்க்கும் இந்த இளகங்களைப் பற்றி நம் முன்னோர்கள்  அருளிய பல்வேறு முறைகளை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று தூதுவளை லேகியம் பற்றி பார்ப்போம்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. பாடல் பின்வருமாறு....

பூரணமா மின்னமொரு லேகி யங்கேள்
புலத்தியனே நானூற்றில்பு னித மாக
காரணமா முருங்கைப்பூதூது வளம் பூவும்
கணக்காக வகைக்குநால் பலம் நிறுத்து
தாரணியில் சதாவேரிக்கி ழங்கு மூணு
தருவான நன்னாரிவேர்ப லமி ரண்டு
காரணமாய் நிலப்பனையுநெ ருஞ்சி முள்ளும்
கருவாக வகைக்கொருப லமாய்க் கூட்டே.

கூட்டியே சூரணித்துப்ப சுவின் பால்தான்
குறுணியிலே போட்டுமேகு ழம்பு போலே
காட்டியே வற்றிவரும் போது மைந்தா
தருவான சீனிபலம்பண்ணி ரெண்டும் போட்டு
காட்டியே கிளரயிலேப சுவி நெய்தான்
நலமாகப் படியரைத்தேனு ழக்கு விட்டு
கெட்டியாய் லேகியம்போற் கிண்டி வாங்கிக்
கிருபையுள்ள கணபதியை வணங்கே

செய்துமே தான்றிக்காயளவு கொள்ளத்
தீருகிற வியாதிதனைத் திறமாய்க் கேளு
எய்துகின்ற பிரமியமு மேக நோயும்
இன்பமுள்ள எலும்புருக்கிப்பி ரமே கந்தான்
பெய்துமே மண்டலத்திற் றீர்ந்து தானும்
பெலமுண்டா யிந்திரியபெ லமுண் டாகும்
செய்துமே லேகியத்தில்மே கநோ யெல்லாந்
தீருமடா பத்தியமோ யில்லை பாரே.

முருங்கைப்பூ, தூதுவளைப்பூ  ஆகியவற்றில் தலா நான்கு பலம் எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். (ஒரு பலம் என்பது தற்போதைய அளவைகளின் படி சுமார் 35 கிராம் ஆகும். ). இந்த பூக்களுடன்  தண்ணீர்விட்டான் கிழங்கு மூன்று பலம், நன்னாரிவேர் இரண்டுபலம், நிலப்பனைகிழங்கு, நெருஞ்சிமுள் ஆகியவைகளை தலா ஒரு பலம் சேர்த்து கொள்ள வேண்டுமாம். அந்த கலவையைச் சுத்தி செய்து இடித்துச் சூரணமாக செய்து கொள்ள வேண்டும் என்கிறார். 

இந்த சூரணத்துடன், ஒரு குறுணி அளவு பசும்பால் கலந்து அடுப்பில் வைத்து எரித்தால் பால் கொதித்து குழம்புபோல் நன்கு சுண்டி வருமாம். அந்த சமயத்தில் அதில் பன்னிரெண்டு பலம் சீனி சர்க்கரையும்,  அரைப்படி பசுநெய்யும், ஓர் உழக்கு தேனையும் சேர்த்துக் நன்கு கிளறி  எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

சேமித்த லேகியத்தில் தான்றிக் காயளவு எடுத்து அதனை காலை மாலை என இரு வேளையும் தொடர்ந்து நாற்பத்தி எட்டு  நாட்கள்  உண்டுவர பிரமியம், எலும்புருக்கி, பிரமேகம், மேக நோய்கள் அனைத்தும் குணமாகுமாம். அத்துடன் இந்திரிய பலமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

* பிரமியம் என்பது விந்து  அடைப்பு, விந்து ஒழுக்கு , விந்து நீர்த்துப் போதல் போன்ற குறைபாடுகளைக் குறிக்கும் பொதுச் சொல்.

* பிரமேகம் என்பது பல்வேறு உடல் நோவுகளைக் குறிக்கும் பொதுச் சொல். சித்த மருத்துவத்தில் 21 வகையான பிரமேகம்  உள்ளது. 

* மேக நோய் என்பது "சிபிலிஸ்" எனும் பாலியல் நோயைக் குறிக்கும்.

* சூரணம் என்பது ஒருவகையான மருந்து தயாரிக்கும் முறை. தேவையான மூலிகை சரக்குகளை சுத்தம் செய்து அவற்றை வெயிலில் நன்கு உலர்த்தி அல்லது நெருப்பில் வறுத்து பின்னர் இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கின்றனர். 

குறிப்பு: பதிவுகளை தட்டச்சுவதில் உள்ளம் சிரமம் காரணமாகவே தற்போது சிறிய பதிவுகளாய் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அடுத்த சில வாரங்களுக்கு இந்த நிலையே நீடிக்கும் என்பதால் தற்போதைக்கு மின் நூல்களையோ, நெடுந்தொடர்களையோ பகிர இயலாத நிலையில் இருக்கிறேன். தாமதத்திற்கு பொறுத்தருள வேண்டுகிறேன்.

இது வரை பகிர்ந்த மின்னூல்களை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... 


பலாக் கொட்டை தைல கற்பம்

Author: தோழி / Labels: ,

மா, பலா, வாழை எனும் முக்கனிகளில், இரண்டாவதாய் இருந்தாலும் பழங்களின் அரசன் என்கிற பெருமை பலாபழத்திற்கு மட்டுமே உண்டு. பலா இலங்கை மக்களின் அன்றாட உணவு பழக்கத்தில் இரண்டறக் கலந்த ஒன்று. பலாப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம்,  கால்சியம்,  பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ரிபோப்ளவின், தயமின் போன்ற தாது சத்துக்கள் பொதிந்திருப்பதாக நவீன அறிவியல்  கூறுகிறது.

பலாப் பழத்தை தனியே சாப்பிடாமல் அதனோடு நாட்டுச் சர்க்கரை, பால் அல்லது நெய்யோடு சேர்த்து சாப்பிடுவது சிறப்பு. உடல் நலனுக்கும் நல்லது. பலாப் பழத்தின் மருத்துவப் பண்புகள் மகத்தானவை. எனினும் இன்றைய பதிவில் பலாப் பழத்தின் கொட்டையில் இருந்து தயாரிக்கப் படும் ஒரு கற்ப வகை பற்றி பார்ப்போம்.

இந்த தகவல் கருவூரார் அருளிய  "கருவூரார் வாதகாவியம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

உசிதப் பிலாவின் கொட்டை
உசிதமாய்க் குழித்தயிலம் வாங்கி
வச்சிடாய் பாழமை கொண்ட
கலசத்தில் வைத்து நன்றாய்
நிச்சயத் தயிலம் மூன்று
களஞ்சிதான் நெய்யில் கொள்ள
பச்சையாய் மூர்ச்சை போகும்
பசுவின்பால் குடிக்க நிற்கும்
அய்ய மென் கருங்குருவை
அரிசி வெந்திட்ட சோறு
நெய்யொசு பாலும் ஆகும்
நள்ளவே மற்றொன்றும் மாகாதப்பா
ஏதப்பா வென்றால் மாதம்
இப்படிக் கொண்டா யானால்
நாதன்நீ பகலிலேதான் நட்சத்திரம்
நலமாய்தான் தெரியு மப்பா
தப்பாமல் தெரியும் நட்சத்திரம்
தேக சித்தியும் ஆகுமீதே

பலாக் கொட்டைகளை சேகரித்து, அதில் இருந்து குழித் தைலம்(குழித் தைலம் செய்யும் முறையினை இங்கே காணலாம்.) எடுத்து பழைய மண்பானை ஒன்றில் சேமித்து வைக்க வேண்டும் என்கிறார். பின்னர் இந்தத் தைலத்தில் இருந்து  மூன்று கழஞ்சு அளவு எடுத்து, அதனை நெய்யில் குழைத்து உண்ண வேண்டுமாம். அப்படி உண்ணும் போது மயக்க நிலை போல் ஏற்படுமாம் அப்போது பசுப்பால் குடித்தால் அந்த நிலை நீங்குமாம். 

இப்படி தொடர்ந்து ஒரு மாதம் வரை உண்டு வந்தால் பகலில் நட்சத்திரங்கள் தென்படும், அத்துடன் காயசித்தியும் உண்டாகும் என்கிறார்.

இந்த கற்ப முறைக்கு பத்தியமாக மருந்து உண்ணும் நாட்களில் கருங்குருவை அரிசிச் சாதமும், நெய்யும், பாலும் மட்டுமே உணவாக கொள்ள வேண்டுமாம். மற்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


போகர் அருளிய "கருநெல்லி" கற்பம்

Author: தோழி / Labels: ,

நெல்லி "Emblica offinalis" குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது மலைப் பகுதிகளில் வளரும் இயல்புடையது. தற்போது இவை சமவெளிகளிலும் பயிரிடப் படுகிறது. இவற்றில் அரி நெல்லி, பெரு நெல்லி என இரு வகைகள் உண்டு.

சித்தரியலில் நெல்லி மரம் ஆதி சிவனின் அம்சமாகவே கூறப் படுகிறது. முக்குற்றங்களையும் போக்கும் ஆற்றல் நெல்லிக்கு உண்டென கூறியிருக்கின்றனர். நெல்லி மரத்தின் இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை என எல்லா பாகங்களும் அரு மருந்தாய் பயன்படுகின்றன.

பெருநெல்லியின் ஒரு வகைதான் கருநெல்லி ஆகும். கருநெல்லி மரத்திற்கு செல்வ மரம் என்றொரு பெயரும் உண்டு. இது மிகவும் அரிதானது, மலைபிரதேசங்களில் மட்டுமே விளையக் கூடியவை. பலரும் நிணைப்பதைப் போல் இந்த வகை நெல்லிக்காய்கள் கருப்பாய் இருப்பதில்லை. அதே நேரத்தில் சந்தையில் கிடைக்கும் பெருநெல்லியின் அளவில் இருந்தாலும் இதன் நிறம் சற்றே மஞ்சள் பூத்த பசுமை நிறத்துடன் இருக்கும்.

இது எளிதில் கிடைப்பதில்லை. நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிடலாம். கருநெல்லி மற்றெந்த நெல்லிக்காய்களை விடவும் சிறப்பான மருத்துவத் தன்மை கொண்டவை. இத்தனை சிறப்புகள் வாய்ந்த எளிய கருநெல்லி கற்பம் ஒன்றினை இன்று பார்ப்போம்.

போகர் அருளிய "போகர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஏமமாங் கருநெல்லி மலைதோருமுண்டு
எழிதாகக் கிடையாட்டால் தேடிப்பெற்று
நாமமாம் நாற்பதுநாள் பாலிற்கொள்ளு
நமன்வந்து நாடாமல் நடுங்கிப்போவான்
தாமமாஞ் சட்டையெல்லாங் கக்கிப்போடும்
தங்கம்போல் மேனியுமாய்த் தளுக்காய்க்காணும்
ஆடவே கருநெல்லிப் போக்குச்சொல்ல
அரன்காணார் யாந்தானுங் கண்டிலேனே.

தினமும் கருநெல்லியை பாலுடன் சேர்ந்து உண்ண வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாற்பது நாட்கள் உண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறி, உடலானது  தங்கம்போல் மின்னும் என்கிறார். மேலும் எமன் கூட நெருங்க மாட்டான் என்றும் சொல்கிறார். இந்த கற்பமுறைக்கு பத்தியம் ஏதும் கூறப்படவில்லை.

மிகவும் எளிதான, மலிவான கற்பம். இதனால் உடலுக்குக்  கிடைக்கும் பலனோ மகத்தானது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கண் புரை குணமாக்கும் மருந்து!

Author: தோழி / Labels: , ,

நமது கருவிழியில் வெண்படலம் ஏற்படுவதையே கண்ணில் பூ விழுதல் என்கிறோம். இதனால் நமது விழித் திரையில் ஒளி ஊடுருவும் தன்மை குறைந்து பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை நமது முன்னோர்கள் பூ விழுதல், கண் திமிரம், கண்புரை, விழி புரை என பல்வேறு பெயர்களில் கூறியிருக்கின்றனர். ஆங்கிலத்தில் இந்த பாதிப்பினை கேட்ராக்ட் (cataract) என்று கூறுகின்றனர்.

நாற்பது வயதைக் கடந்தவர்கள், அதிகமான வெளிச்சத்தை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள், நீரழிவு பாதிப்புக்குள்ளானவர்கள், மற்றும் பரம்பரை கூறு காரணமாய் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவில் உடலில் புரதக் குறைபாட்டினால் ஏற்படுவதாய் நவீன அலோபதி மருத்துவம் கூறுகிறது. இந்த குறைபாட்டினை நிவர்த்திக்க மருந்துகள் எதையும் நவீன அலோபதி மருத்துவம் முன் வைக்கவில்லை, மாறாக அறுவை சிகிச்சையின் மூலம் பாதிக்கப் பட்ட விழித்திரையை நீக்கி விட்டு செயற்கையான வில்லைகளை பொருத்துவதே தீர்வாக முன்வைக்கப் படுகிறது.

தற்போது இத்தகைய அறுவை சிகிச்சைகள் எளிதாய் சில நிமிடங்களில் முடிந்து விடக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால் செலவு பிடிக்கக் கூடியவை, அரிதாய் சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படுவதுண்டு. நவீன மருத்துவம் இதுவரை மருந்துகளை பரிந்துரைக்காத ஒரு சூழலில் நம் முன்னோர்கள் இந்த பாதிப்புக்கு பல மருந்துகளை அருளியிருப்பது சிறப்பு. இது தொடர்பில் ஏற்கனவே ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று கண்புரைக்கு தேரையர் அருளிய ஒரு தீர்வினைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.

இந்த தகவல் கோரக்கர் அருளிய "ரவிமேகலை" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

பூவிழுந்த கண்ணுக்குமூலி கேளே
விள்ளுவேன் பூவிழுந்த கண்ணினோர்க்கு
விகற்பமற ஐந்தேழு ஒன்பதுநாள்
சள்ளையறக் கோவைச்சாறு சிரசிலூற்றி
சாரவே தேய்த்துப்பின் காண்கையாரைத்
தெள்ளிதமாய் பெருவிரல்கள் நகத்திலும்
தொல்லையற ஊற்றிடவே பூவும்நீங்கும்
கள்ளமறக் கண்பார்வை தெளிவாய்த் தோன்றும் 

கோவை சாறு எடுத்து அதனை தலையில் விட்டு நன்கு தேய்த்த பின்னர், பெருவிரல் நகங்களில் ஊற்றிட வேண்டுமென்கிறார். இவ்வாறு தொடர்ந்து இருபத்தியோரு நாட்கள் செய்து வந்தால் கண்ணில் விழுந்த பூ அகன்று விடும் என்கிறார்.

எளிமையான அதே நேரத்தில் ஆச்சர்யமான தகவல்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆறு வகையான மூலநோய்க்கு தீர்வு

Author: தோழி / Labels: ,

மூல நோய் என்பது என்ன?, அதன் கூறுகள் யாவை?, நவீன அலோபதி மருத்துவமும், பழமையான நமது சித்த மருத்துவமும் எத்தகைய திர்வுகளை முன் வைக்கின்றன என்பதைப் பற்றி முந்தைய பதிவுகளில் விரிவாகவே பார்த்திருக்கிறோம். புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் மூல நோய் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

அந்த வரிசையில் தேரையர் அருளிய மற்றுமொரு தீர்வினையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்தியகாவியம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

போகுமே மூல ரோகமுந்தான் தீர
ஆகுந் தூதுவளை வேர் சமூலமும்
தாகும் நல்லாரைப் பிரண்டைக் கருணையும்
வாகு மூலம் அருகன் சமூலமே.
மூலம் பூண்டு கிழங்குடன் மூலியும்
தாலமாய் உரலிட்டு துளாவியே
கோலமா  சீனி சர்க்கரை சேர்த்துமே
சீலமாந் தேனில் சிறப்புடன் கொண்டிடே.
கொண்டிடு வெருகடி பிரமாணமும்
உண்டிடவே இருவேளை மண்டலம்
அண்டிடாது அறுவகை மூலமும்
திண்டு மேனியுடன் விட்டு நீங்குமே.

தூதுவளை சமூலம், நல்லாரை, பிரண்டை, கருணை வேர், அருகன் சமூலம், நீர்பூண்டு கிழங்கு ஆகியவற்றை சேகரித்து சுத்தம் செய்து, சம அளவு எடுத்து உரலில் இட்டு நன்கு இடித்த பின்னர் அதன் எடைக்குச் சமமாக  சீனி சர்க்கரை சேர்த்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

இந்த மருந்தினை தொடர்ந்து ஒரு மண்டல காலம் காலை , மாலை என இரு வேளையும் வெருகடி அளவு எடுத்து தேனில் குழைத்து உண்டு வந்தால் ஆறு வகையான மூல நோய்கள் குணமாகும் என்கிறார் தேரையர்.

குறிப்பு :  சமூலம் என்பது செடியின் வேர், தண்டு, இலை, பூ, காய், விதை என அனைத்தும் அடங்கியது.

ஒரு மண்டலம் - 48 நாட்கள்.

*வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...கோரக்கர் அருளிய அனுமனின் மூலமந்திரம்.

Author: தோழி / Labels: ,

இன்று வாயு புத்திரனாகிய அனுமனின் பிறந்த நாள்.  அனுமாரின் பெருமையை முழுமையாக உணர்ந்தவர்கள், அவரையன்றி வேறொருவரை வணங்கிட மாட்டார்கள். அத்தனை சிறப்புகளைக் கொண்ட அனுமனைப் பற்றி சித்தர் பெருமக்கள்  தங்களின் பாடல்களில் உயர்வாய் குறிப்பிட்டிருக்கின்றனர்.  அனுமனை உபாசனை செய்து சித்தர்கள் விண்ணில் பறந்தார்கள். சிரஞ்சிவித்வம் (மரணமில்லா வாழ்வு) பெற்ற அனுமாரின் மந்திரத்தையும் செபம் செய்பவர்களுக்கு அனேகவிதமான சித்துக்கள் கிட்டும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். 

அகத்தியர், யூகிமுனி, கொங்கணர், கோரக்கர் போன்ற சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே அனுமனைப் பற்றிய பல தகவல்களை மறைத்துக் கூறியுள்ளனர். 

இத்தனை சிறப்புகள் வாய்ந்த  அனுமனின் மூல மந்திரத்தினை, இந்த புத்தாண்டு நாளில் பகிர்வது மிகவும் பொருத்தமாயிருக்கும் என கருதுகிறேன். இந்த மூல மந்திரம் கோரக்கர் அருளிய “நமனாசத் திறவுகோல்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. 

அண்டிடுவாய் அனுமாரின் மூலமந்திரம் 
ஆதார அனவரத ஓம். ரா. ஜ. மூர்த்த
விண்டுணு வாய்வு புத்திரா. ஹா. ரீம். அனுமந்தாய
வீக்ஷண்ய பக்ஷ ராஜசிரஞ்சீவி வாமஸ்யா
கண்டு ஸ்ரீம். உமாபதிங். உங். ருங். லுங் சுங்
ஆம். அம். உம். லா. லீ லூ. லே. லம். ஸம்
பண்டு மம. ஜீவ. ரெக்ஷ தரத் மான்மியம்
தேவ். மாவ் பாத தெரிசய அனுமந்த சரணாய நமஸ்து.

அனுமார் மூல மந்திரம்..

ஓம் ராஜ மூர்த்த வாயுபுத்ரா. ஹா. ரீம்
அனுமந்தாயா. வீக்ஷண்ய பக்ஷராஜா
சிரஞ்சீவி வாமஸ்யா ஸ்ரீம் உமாபதிஸ்
உங். ருங். லுங். சுங். ஆம். அம். உம்.
லா. லீ. லூ. லே. லம். ஸம். மம. ஜீவ ரெக்ஷதரத் மான்மியம்
தேவ். மாவ் பாததெரிசய. அனுமந்த சரணாய நமஸ்து

இந்த மூல மந்திரத்தை தினமும் செபித்து வர நலமும், வளமும் நிறையும்.

அனைவருக்கும் உளம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...