போகர் அருளிய பலாசு கற்பம்

Author: தோழி / Labels: , ,

நீடித்த இளமையோடும், நோயற்ற உடல் நலத்துடன் வாழ சித்தர்கள் பல கற்பவகைகளை அருளியிருக்கின்றனர். அவற்றினைப் பற்றி முன்னரே பல பதிவுகளில் விரிவாக விளக்கியிருப்பதால் இன்று நேரடியாக கற்பத்தைப் பற்றி பார்ப்போம். புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் கற்பங்களைப் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம். 

பலாசு என்பது மர வகையினைச் சேர்ந்த ஒரு மூலிகை. இந்த பலாசு மரத்திற்கு புரசு என்ற வேறொரு பெயரும் உள்ளது. நவகோள்களில் ஒன்றான இராகுவின் அம்சமாய் இந்த மரத்தினை குறிப்பிடுவர். பலாசு மூலிகையினை வைத்து கற்பம் செய்திடும் முறை ஒன்று போகர் அருளிய "போகர் 12000" என்ற நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

போகாமல் பலாசுனுட கற்பங்கேளு
புகழ்ந்தவேர்ப் பட்டையிலை காய்பூவோடு
நோகாம நிழலுலர்த்தா யுலர்த்திடித்து
நேரிசையாய் வடிகட்டிச் சூரணமேசெய்து
வேகாமல் வெள்ளாட்டுப்பாலிற் வெருகடிகொள்ளு
விரைந்துமே மண்டலந்தான் கொண்டாயானால்
சாகாமலிருக்கலாஞ் சதுர்முகவன் படைப்பு
தகர்ந்துமே சமாதியினி லிருந்திடாயே.

- போகர்.

பலாசு மரத்தின் வேர், பட்டை, காய் மற்றும் பூ ஆகியவற்றை எடுத்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அவற்றை நன்கு இடித்துச் சூரணமாக செய்து சிமிழில் சேமித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து *வெருகடி அளவு எடுத்து வெள்ளாட்டுப்பாலில் குழைத்து உண்ண வேண்டுமாம்.

இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் மரணமில்லாத வாழ்வு கிடைக்கப் பெறும் என்றும் ஒரு மண்டல காலம் உண்டபின் சமாதி நிலையில் இருப்பது மேலும் நன்மையை உண்டாக்கும் என்கிறார் போகர்.

ஒரு மண்டலம் - 48 நாட்கள்.

*வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சூரணம்ஈரமானவைகளை காய வைத்தும், காய்ந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது. 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..



புலிப்பாணி சித்தர் அருளிய விசக்கடி வைத்தியம்

Author: தோழி / Labels: , ,

விஷக்கடி மருத்துவ முறைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அவற்றை மீள் வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசித்தறியலாம். 

அந்த வரிசையில் இன்று புலிப்பாணி சித்தர் அருளிய வைத்திய முறை ஒன்றினை இன்றைய பதிவில் பார்ப்போம்.இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாடியதோர் விசங்களெல்லாந் தீரவேதான்
பண்பாக எட்டிப் பழந்தன்னை வாங்கி
கூடியதோர் சட்டியிலே வேணமட்டுங்
குணமாகத் தானெடுத்து வேப்பெண்ணெய் விட்டு
நாடியே அடுப்பேற்றி வேகவைத்து
நலமாக உருட்டியதைச் செப்பில் மூடி
தூடியே விசந்தீண்டி வந்தபேர்க்குத்
தூதுளங் காயளவு கொடுத்திடாயே.

- புலிப்பாணி சித்தர்.

எட்டிப் பழங்கள் சிலவற்றை எடுத்து ஒரு மண் சட்டியில் இட்டு, அது மூழ்கும் வரை வேப்பெண்ணெய் விடவேண்டுமாம். பின்னர் மண் சட்டியினை அடுப்பில் ஏற்றி வேப்பெண்ணெய் வற்றும் வரை நன்கு காய்ச்சி எடுத்து செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.  

பின்னர் எந்தவகையான விஷக் கடியானாலும், சிமிழில் சேமித்து வைத்த மருந்தில் இருந்து தூதுளங்காய் அளவு எடுத்து, பாதிக்கப் பட்டவருக்கு உண்ணக் கொடுக்க வேண்டுமாம். இவ்வாறு உண்ணக் கொடுத்தால் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம்  நீங்கி விடும் என்கிறார் புலிப்பாணி சித்தர். இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை.

தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய பொன்னாங்காணி தைலம்

Author: தோழி / Labels: ,

எள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர்.  தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் அல்லது தைலம் எனப்படும்.

இவ்வாறு தயார் செய்யப்படும் தைல வகைகளில் ஒன்றான "பொன்னாங்காணி தைலம்" தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

ஆமப்பா பொன்னாங்காணித் தைலங்கேளு
அப்பனே காணிச்சாறு படியிரண்டு
நாமப்பா கரிசாலைச் சாறுபடியொன்று
தாமப்பா யெள்ளெண்ணெய் படியிரண்டு
தப்பாம லாவின்பால் படியிரண்டு
வேமப்பா மதுரமது பலமிரண்டு
விருதான முலைப்பாலா வரைத்துப்போட்டே.

- அகத்தியர்.

போடாப்பா மெழுகுபதந் தனில்வடித்து
புகழாக முழுகிவரத் தீருநோய்கேள்
நீடப்பா நேத்திரநோய் தொண்ணூற்றாறும்
நிலைமைகெட்ட காசமெல்லா நீங்கிப்போகும்
வாடப்பா பித்தமெல்லாம் வாங்கிப்போகும்
வளமாகு நேத்திரங்க ளொளியேபீனும்
நாடப்பா வுஷ்ணநோ யெல்லாந்தீரும்
நயமான கீழ்க்காய்நெல்லித் தைலக்கேளே.

- அகத்தியர்.

பொன்னாங்காணிச் சாறு இரண்டு படி, கரிசலைச் சாறு ஒருபடி, கரிசாலைச் சாறு ஒரு படி, எள் எண்ணெய் இரண்டு படி. பசும்பால் இரண்டு படி ஆகியவற்றை ஒரு மண் சட்டியில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.  பின்னர் அத்துடன் அதிமதுரம் இரண்டு பலம் எடுத்து கல்வத்தில் இட்டு தாய்ப்பால் விட்டு அரைத்துச் மண் சட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் மண் சட்டியினை அடுப்பில் ஏற்றி மெழுகு பதத்திற்கு வரும் வரையில் நன்கு காய்ச்சி வடித்து எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

தினமும் காலை வேளையில் இந்த கரைசலில் போதுமான அளவு எடுத்து தலையில் பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும். இப்படி முழுகிவந்தால் தொண்ணூற்று ஆறு வகையான கண்நோய்கள்,  காச நோய், பித்த நோய்கள், உஷ்ண நோய்கள் குணமாவதுடன், கண் பார்வைத் திறனும் அதிகரிக்கும் என்கிறார் அகத்தியர். இந்த தைலத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. 

தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



தன்வந்திரி அருளிய எஃகு பற்பம் (பஸ்பம்)

Author: தோழி / Labels: ,

சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்த ஊதியோ வெளுக்குபடிச் செய்து எடுத்துக் கொள்வது பற்பம் அல்லது பஸ்பம் எனப்படும். உலோகங்களை பற்பமாக்கி அவற்றை மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் சித்தரியலில் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்திலும் கூட ஏழு வகையான பற்பங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. 

அந்த வகையில் தன்வந்திரி அருளிய "தன்வந்திரி வைத்திய காவியம்" என்ற நூலில் இரும்பினை பற்பமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம். இந்த பற்பம் "எஃகு பற்பம்" எனப் படுகிறது. 

பாடுகிறேன் மானிடர்க்கு எஃகுபற்பந்தான்
பொல்லாத அயமதுவும் வெட்டையாகும்
நாட்டிடவே கானகத்தில் கடலைமூலி
நலமான மூலிதன்னைக் குகைபோல்செய்து
நீட்டிடவே அயப்பொடியை பொதிந்துமூடி
நிர்ணயமாய் நந்தியைத்தான் போற்றிசெய்து
மாட்டிடவே கெசபுடமே யிட்டாயானால்
மாசற்ற பற்பமது ஆச்சு ஆச்சே.

- தன்வந்திரி.

ஆச்சப்பா அயப்பற்பம் செப்பக்கேளு
அரிசியிடை வெண்ணைதனில் கொள்வாயானால்
பேச்சப்பா யில்லையப்பா வியாதிநீங்கப்
பேரான மருந்தொன்று வேண்டாம்பாரு
நோச்சப்பா திரேகமது நரம்புதாது
நோயற்ற வலுவுண்டா மிகுந்த பற்பம்
வீச்சப்பா காந்தியது அழகுண்டாகும்
வித்தகனே நந்தி சொல்ல உரைத்தோம் நாமே.

- தன்வந்திரி.

காட்டில் காணப்படும் கடலைமூலி எனப்படும் மூலிகையினை எடுத்துவந்து நன்கு அரைத்து  குகை செய்து அதனுள் அயப்பொடியைப் வைத்து அதன் மேலே சீலைமண் செய்து நன்றாக காயவைத்து "கஜப்புடம்" இட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் தன்வந்திரி. (புடங்கள் பற்றிய எனது முந்தைய பதிவில் கஜப்புடம் பற்றிய தகவல் இருக்கிறது.) இப்படி செய்தால் அயப்பொடியானது நீறி பற்பம் ஆகியிருக்குமாம். இதுவே எஃகு பற்பம்.

இப்படி தயார் செய்யப் பட்ட எஃகு பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு அரிசி எடை அளவில் எடுத்து வெண்ணையில் குழைத்துக் காலையும், மாலையும் தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர உடலில் உள்ள நரம்பு , தாது போன்றவை வலுவடையுமாம்,  அத்துடன் உடல் வலிமையும் அழகும் பெறுவதுடன் நோய்களும் அணுகாது என்கிறார். இந்த பற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொலலப்படவில்லை.

ஆச்சர்யமான தகவல்தானே!

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



குழந்தைப் பேறு!... பிரம்மமுனியின் தீர்வு!!

Author: தோழி / Labels: ,

நமது சமூகத்தில் திருமணமாகி ஒரு கால கட்டத்திற்குள் குழந்தைச் செல்வங்களை பெற்றெடுத்து விடுவது தொடரும் மரபாக இருக்கிறது. இந்த கால கட்டத்தை தாண்டிய குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் சமூகத்தின் கவனிப்புக்கும், பேச்சுக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது. அந்த தம்பதியர் எதிர் கொள்ளும் மன அழுத்தமும், கவலையும் சொல்லி மாளாது. அலோபதி மருத்துவம் இதற்கு பல்வேறு தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை செலவு பிடித்தவை.

பல நூறு வருடங்களுக்கு முன்னர் சித்தர் பெருமக்கள் இதற்கான பல தீர்வுகளை அருளியிருக்கின்றனர். அத்தகைய தீர்வுகள் சிலவற்றை  முந்தைய பதிவுகளில் நீங்கள் காணலாம். அந்த வரிசையில் இன்று "பிரம்மமுனி" அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம். 

இந்த தகவல் “பிரம்மமுனி வைத்திய காவியம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

வார்த்தநாள் முதல்மறு மூன்றுநாளும்
மைந்தனே ஆரையிலைகிளுவை யிலைரெண்டும்
ஆத்துமே ஐவேலி இலையுங்கூட்டி
அரைத்தாவின் பால்வெண்ணை தன்னில்கொள்ளு
ஏத்துமே ஆறாம்நாள் எண்ணெய்மூழ்கி
ஏழாம்நாள் நாயகனோடிணங்கச் சொன்னோம்
போத்தரிய மலடியுமோ பெருவாள்பிள்ளை
பெண்மலடோ உலகத்தில் இல்லதானே

- பிரம்ம முனி.

கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஆரை இலை, கிளுவை இலை, ஐவேலி இலை ஆகிய மூன்றையும் சம எடை எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து வெண்ணையில் குழைத்து சாப்பிட வேண்டுமாம். பின்னர் ஆறாவது நாள் எண்ணை வைத்து தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் இல்லறத்தில் ஈடுபட்டு வர, மலடி என்று சொல்லப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கெர்ப்பம் உண்டாகுமாம். மேலும், நிஜத்தில் மலட்டுத்தன்மை உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்கிறார் பிரம்ம முனி. 

இதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்பட வில்லை.

தேவையுள்ளோர் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள் தேவையுள்ளோருக்கு இந்த தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



புலிப்பாணி சித்தர் அருளிய பற்பொடி

Author: தோழி / Labels: ,

பற்களின் ஆரோக்கியமே உடலின் ஆரோக்கியத்தின் அடையாளம். இத்தனை முக்கியத்துவம் பெற்ற பற்களை பராமரிப்பது மற்றும் அவற்றில் பழுது உண்டாகி விடுவதை தடுப்பது போன்ற விழிப்புணர்வு நமது முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது. இதற்கென சில வழிமுறைகளை கைக் கொண்டிருந்தனர். அவைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம்.

அந்த வரிசையில் செயற்கை பொருட்களைத் தவிர்த்து இயற்கை பொருட்களைக் கொண்டு பற்களை உறுதியாகவும் குறை இன்றியும் பேண ஒருவகையான பற்பொடி ஒன்றை தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பார்ப்போம்.

இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாடியே அரக்குடனே சீனிகாரம்
பண்பான துருசுடனே கடுக்காயப்பா
நாடியே மாசிக்காய் வகைவகைக்கு
நலமான வராகனெடை நிறுத்துக் கொண்டு
ஆடியே கடுக்காயுந் தான்றிக் காயும்
அயப்பொடியும் வகைவகைக்கு வராகன் மூன்று
கூடியே எலுமிச்சம் பழச்சாறிட்டு
குணமாக உலரவைத்துப் பொடியாய்ச் செய்யே.

- புலிப்பாணிச் சித்தர்.

பொடியெடுத்து விளக்கிவரப் பலனைக் கேளு
புழுச்சாகு மெயிற்கறையுந் தீரும்பாரு
இடியெடுத்து பல்லிசைவும் பல்லுக் குத்துங்
எரிவான வாய்ப்புண்ணு நாற்றந் தீரும்
வடிவான பல்லொளிவு வசியமுண்டு
வளமான பல்லிலுள்ள வியாதி தீருந்
துடியான போகருட கடாட்சத்தாலே
துலக்கமாய்ப் புலிப்பாணி பாடினேனே.

புலிப்பாணிச் சித்தர்.

அரக்கு, படிகாரம், மயில்துத்தம், மாசிக்காய் இவைகளை வகைக்கு ஒரு வராகன் எடை வீதம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அவற்றுடன் கடுக்காய், தான்றிக்காய், அயப்பொடி ஆகிய இம்மூன்றில் வகைக்கு மூன்று வராகன் எடையில் எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றில் ஊறவைத்து நன்கு உலர்த்தி, பொடியாக அரைத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

இந்த கலவையை கொண்டு பல் துலக்கிவர பற்களில் உண்டாகும் புழுக்கள், ஈறுகளில் உண்டாகும் வீக்கம், பற்களில் ஏற்பட்டுள்ள கறைகள்,  பல்லசைவு, பல் குத்தல், வாய்ப்புண், நாற்றம், பல் சம்பந்தமான நோய்கள் எல்லாம் தீருமாம், அத்துடன் பற்கள் வெண்மையாக மிளிர்வதுடன் வாக்கு வசியமும் உண்டாகுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

இந்த சரக்குகள் எல்லாமே தற்போது எல்லா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். இயற்கையான இந்த பற்பொடியினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெற்றிடலாம்.

குறிப்பு :- ஒரு வராகன் என்பது தற்போதைய அளவுகளில் நான்கு  கிராம் ஆகும். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



தேரையர் அருளிய விஷக்கடி வைத்தியம்.

Author: தோழி / Labels: , ,

இயற்கையோடு இணைந்த பெருவாழ்வு என்கிற தத்துவத்தின் வழி நின்ற நம் முன்னோர்களின்  வாழ்விடங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளை ஒட்டியோ அல்லது வனப் பகுதிகளை ஒட்டியோ அமைந்திருந்தன. இத்தகைய சூழலில், அவர்களுக்கு சவாலாய் இருந்த காரணிகளில் முதன்மை யானது பாம்புகள், பூச்சிகளினால் உண்டாகும் விஷக் கடியினைக் குறிப்பிடலாம்.

இந்த விஷக்கடிக்கான மருத்துவம் என்பது சித்த மருத்துவத்தில் பெரியதொரு பகுதியாக காணப்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற இந்த விஷக்கடி மருத்துவ முறைகளுள் ஒன்றினைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

இந்த குறிப்பு தேரையர் அருளிய “தேரையர் வைத்திய காவியம்” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

செப்பும் தோஷ சகல விஷங்கட்கு
வெப்பும் எட்டிப் பழச்சாறு வாங்கியே
துப்பும் வேப்பெண்ணெய் சரிசமன் கூட்டியே
கப்பு மெழுகுபோல் காச்சி வடித்திடே.

- தேரையர்.

வடித்துமே செப்பில் வாகாக மூடியே
துடித்த விஷங்கள் தீண்டின பேருக்கு
வெடித்த தூதளங் காயள வாகவே
நடித்து போதுண்ண நல்விஷந் தீருமே.

- தேரையர்.

எட்டிப் பழச்சாறுடன் அதற்கு சம அளவு வேப்பெண்ணெய் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் ஏற்றி மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி எடுத்து செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். பின்னர் எந்தவகையான விஷக் கடியானாலும், சிமிழில் சேமித்து வைத்த மருந்தில் இருந்து தூதுளங்காய் அளவு எடுத்து, பாதிக்கப் பட்டவருக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு உண்ணக் கொடுத்தால் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம்  நீங்கி விடும் என்கிறார்.

இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. 

நானறிந்த வரையில் இந்த மருத்துவ குறிப்பின் நம்பகத் தன்மை ஆய்வின் மூலம் உறுதி செய்யப் படவில்லை. எனவே சித்த மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Author: தோழி / Labels:

சித்திரைத் திருநாள் என ஒரு சிலராலும், தமிழ் புத்தாண்டு என பெரும்பான்மையினராலும் கொண்டாடப்படும் சிறப்பு சித்திரை முதல் நாளுக்கே உரித்தானது.  தமிழர்களின் அடையாளங்களில் முக்கியமான ஒன்றாக இந்த நன்னாள் விளங்குகிறது. இன்று துவங்கும் இந்த தமிழ் வருடத்தின் பெயர் “விஜய” என்பதாகும்.

பன்னிரெண்டு இராசிகளில்  முதலாவது இராசியான மேஷத்தில், சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலமே தமிழ் புத்தாண்டின் துவக்கமாய் வகுக்கப்பட்டிருக்கிறது. சித்தர் பெருமக்கள் இந்த தமிழ் புத்தாண்டு தினத்தை எவ்வாறு வரையறுத்திருக்கின்றனர் என்பதைப் பற்றி விளக்கமாய் முன்னரே பதிவு செய்திருக்கிறேன். தேவையுள்ளோர் இந்த இணைப்பில் அந்த தகவல்களை வாசித்தறிய வேண்டுகிறேன். 

இதன் படி இந்த முறை “விஜய” வருடமானது ஆங்கில திகதி 13 - 4 - 2013 அன்று இலங்கை, இந்திய நேரமான பிற்பகல் 11:58  க்கு பிறக்கிறது. இந்த நன்னாளில் குருவை வணங்கி, பெரியவர்களின் ஆசியோடு துவங்கும் எந்த ஒரு காரியமும் நிறைவாய் அமையும் என்பது நம்பிக்கை. இந்த புதிய வருடம் உங்கள் வாழ்வில் நலமும், வளமும் பொங்கும் ஆண்டாய் அமைந்திட எல்லாம் வல்ல குருவருள் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்.



பிரம்மமுனி அருளிய இஞ்சி லேகியம்

Author: தோழி / Labels: ,

அவலேஹம் என்கிற சமஸ்க்ருதச் சொல்லே மருவி 'லேகியம்' என்றானது. தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பர். பொதுவில் லேகியம் என்பவை கெட்டியான குழம்பு போல இல்லாமல் சற்றே இறுகிய நீர்ம நிலையில் இருக்கும்.

இவ்வாறு நீர்ம நிலையில் தயார் செய்யப்படும் லேகிய வகைகளில் ஒன்றான "இஞ்சி லேகியம்" தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் பிரம்மமுனி அருளிய “பிரம்மமுனி வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

சொல்லவே இஞ்சி லேகியத்தைக் கேளு
தோல்போக்கிப் பலம்பத்து நிறுத்துக் கொண்டு
பல்லவே பழச்சாற்றில் லாட்டி மைபோல்
மைந்தனே சட்டியிலே இட்டுக் கொள்ளே
அல்லவே சீரகமுமிள கோடே லமும்
அதிமதுரந் திப்பிலியும் கோஷ்டமூலம்
கல்லவே வாலுழுவை தாளிச்சப் பத்திரியுங்
கடுகொடு கொத்தமல்லி சித்திர மூலம்

பல்லவே சிங்கியொடு குரோசாணி ஓமம்
அப்பனே வகைவகைக்கு அரைப்பலம் தூக்கே
தூக்கியே கரிசாலை பூவரசம்பட்டை சாற்றால்
துவளையரைத்து முன்மருந்தோ டொக்கச் சேரு
ஊக்கமாம் பிரண்டையது மோரிலுப் பிட்டு
ஊறி உலர்த்திடித்து ஒருபலமே போடு 
ஆக்கவே வங்காள சர்க்கரை யப்பா  
அதில்பாதி போட்டபின்னே நெய்யை வாரே

நெய்வார்த்து லேகியமாய் பண்ணிக் கொண்டு
நேரமொரு பாக்களவு அந்திசந்தி கொள்ளு
பொய்யல்ல பித்தவாய்வு உஷ்ண காந்தி
பிரட்டல் சத்திவலி குன்மம் பித்தகுன்மம் 
மெய்யான அஸ்திசுரம் சன்னி தோசம் 
வீறான எரிகுன்மம் சீரண வாதஞ்
செய்யவே உப்பீசமும் அரோசிகமுந் தீரும்
தீவனமாம் பசியறிந்து சீராய்க் கொள்ளே

தோல் நீக்கிய இஞ்சி பத்துப்பலம் நிறுத்து எடுத்து, அதனைக் கல்வத்தில் இட்டு எலுமிச்சம் பழச் சாறுவிட்டு நன்கு மைபோல் அரைத்து அதனை ஒரு மண் சட்டியில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் சீரகம், மிளகு, ஏலம், அதிமதுரம், திப்பிலி, கோஷ்ட மூலம், வாலுழுவை, தாளிச்சப்பத்திரி, கடுகு, கொத்தமல்லி, சித்திரமூலம், கற்கடக சிங்கி, குரோசாணி, ஓமம் ஆகியவற்றை வகைக்கு அரைப் பலம் எடுத்துச் சேர்த்து கல்வத்தில் இட்டு கரிசாலை, பூவரசம் பட்டை ஆகியவற்றின் சாறுவிட்டு மெழுகு பதத்தில் அரைத்து எடுத்து இஞ்சி சேகரித்த மண் சட்டியில் இதனையும் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டுமாம். 

மோரில் உப்புப் போட்டு கலந்து அதில் பிரண்டையை சிறுதுண்டுகளாக அரிந்து ஊறப்போட்டு நன்கு காயவைத்து எடுத்து *சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த சூரணத்தில் ஒருபலம் எடுத்து முன்னர் மருந்துக் கலவை சேகரித்த மண்சட்டியில் இட்டு அதனுடன் சம அளவில் வங்காள சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் அளவாக நெய் சேர்த்து லேகியமாக தயார் செய்து எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

இந்த லேகியத்தில் கொட்டைப்பாக்களவு எடுத்து காலை மாலை என இரு வேளையும் ஏழு நாட்கள் தொடர்ந்து உண்டுவர பித்த வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கி குணமாகுமாம். அத்துடன் பித்த வாய்வு, உஷ்ண காந்தி, புரட்டல், வாந்தி, வலிகுன்மம், சீரணவாதம் (செரியாமை), உப்பிசம், ருசியின்மை ஆகியவை குணமாகும் என்கிறார்.

மருந்துண்ணும் ஏழு நாளும் பத்தியமாக பசிக்கும் போது பசியின் தன்மை அறிந்து உண்ண வேண்டும் என்கிறார்.

*சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது. 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..



நந்தீசர் அருளிய விடத்தலைக் கற்பம்

Author: தோழி / Labels: ,

விடத்தலை என்பது மர வகையினைச் சேர்ந்த ஒரு மூலிகை. நவகோள்களில் ஒன்றான சனியின் அம்சமாய் இந்த மரத்தினை குறிப்பிடுவர். இந்த மரத்தின் தாவரவியல் பெயர் “mimosa cinerea” என்பதாகும். இந்த மரம் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே அறியலாம். 

எளிய வகை கற்பங்களின் வரிசையின் நந்தீசர் அருளிய விடத்தலைக் கற்பம் பற்றி பார்ப்போம்.  இந்த தகவல் "நந்தீசர் சர்வகலைஞானம்"  என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின்வருமாறு... 

வாறுகேள் விடத்தேர்வர் பட்டைவாங்கி
மருவநன்றாய் நிழலுலர்த்திச் சூரணமேசெய்து
பேறுகேள் பலம்நாலு நிறுத்துக்கொண்டு
பேசரிய சூதமது பலந்தானாலு
தாறுகேள் கல்வத்தி லிதனைப்போட்டு
சாதகமாய் மல்லிகையின் சாறுவிட்டு
தேறுகேள் எண்சாம மைபோலரைத்து
தேன்வார்த்து வுண்டைசெய்து சிமிழில்வையே.

- நந்தீசர்.

வைத்ததொரு மருந்தெடுத்து அந்திசந்தி
வகையாக மண்டலந்தா னுண்டாயானால்
நைத்ததொரு சடமிருகித் தங்கம்போலாம்
நாடியெல்லாம் பிகுவாகி யழுத்தும்திரேகம்
கைத்ததொரு பித்தமதுக் கபத்தைச்சாடும்
கடகடென்று ஆறுதலம் நீர்ந்துபோகும்
மெய்த்ததொரு சரஸ்வதியு நிர்த்தஞ்செய்வாள்
வீணைபோல ஒலியாகும் நாக்குத்தானே.

- நந்தீசர்.

விடத்தலை மரத்தின் வேர் மற்றும் பட்டையை எடுத்து நன்கு இடித்துச் சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து நான்கு பலம் அளவு எடுத்து, அதனுடன் இரசம் நான்கு பலம் சேர்த்து, மேலும் மல்லிகைச் சாறு விட்டு, எட்டுச் சாமம் வரை தொடர்ந்து அரைக்க வேண்டுமாம். பின்னர் இந்த கலவையுடன் தேன் சேர்த்து குழைத்து நிழலில் உலர்த்தி உண்டையாக செய்து சிமிழில் சேமித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

தினமும் இந்த உண்டையில் இருந்து வெருகடி அளவு எடுத்து காலை மாலை என இரு வேளைகள் உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் உண்டு வந்தால் உடலானது இறுகுவதுடன் தங்கம்போல் மின்னுமாம். நாடிகள் சுத்தியகுமாம். வாதம், பித்தம், கபம், ஆகியவை சரியான அளவில் இருக்குமாம். குரலும் வீணையின் ஒலிபோல் இருக்கும் என்கிறார். 

இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொலலப்படவில்லை.

ஒரு மண்டலம் - 48 நாட்கள்.

வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..



பேதி மாத்திரை

Author: தோழி / Labels: ,

நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

எப்படி சுத்தமாய் வைத்திருப்பது என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கும். 

ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிப்பதும், வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்வதும் தான் அந்த விதிகள். 

எளிமையான விதிகள் தானே.!

எல்லாம் சரிதான், அதென்ன பேதி மருந்து?

இந்த பேதி மருந்தைப் பற்றி தேரையர் தனது “தேரையர் வைத்திய காவியம்” நூலில் "பேதி மாத்திரை" என்ற பெயரில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின்வருமாறு... 

ஆகும் பேதி யரையுங் கிராம்புடன்
வாகு வோமம் வரையும் லவங்கமும்
பாகு சீரம் பகருஞ் சாதிக்காயும்
கூகு நீருங் குறிப்பாய் சமன்தூக்கே.

தூக்கு சுக்குடன் துய்ய கஸ்தூரியும்
தாக்கி வேளை தனிய வசம்புடன்
போக்கில்லாத பொருந்துங் கஸ்தூரியும்
நோக்கி வென்னீரில் நுருங்க வரைத்திடே.

அரைத்துச் சுண்டைக் காயளவுப் பிரமாணம்
கரைத்து வென்னீரிற் காலையில் தானீய
வரைத்த பேதியும் வாகாப் பிழிந்திடும்
திரைத்த வென்னீரு மன்னமு முண்டிடே

கராம்பு, ஓமம், லவங்கம், சீரகம், சாதிக்காய், சுக்கு, கஸ்தூரி, வசம்பு, ஆகிய சரக்கு வகைகளைச் சம அளவாக நிறுத்து எடுத்து, அவற்றை கல்வத்தில் போட்டு நீர் விட்டு நன்றாக அரைத்து, சுண்டைக்காய் அளவில் குளிகைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். இதுவே “பேதி மாத்திரை”.

தேவை ஏற்படும் போது இந்த மாத்திரையில் ஒன்றினை எடுத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் கரைத்து கொடுத்தால் நன்றாகப் பேதியாகுமாம். இதற்கு பத்தியமாக மருந்துண்ணும் நாளில் சாதத்தில் வெந்நீர்விட்டு சாப்பிடவேண்டும் என்கிறார்.

மாத்திரை - மாத்திரை என்றால் அளவு என்று பொருள். எந்த அளவில் மருந்து கொடுக்க வேண்டுமோ அதற்குரிய அளவுக்குரியது மாத்திரை எனப்படும் உருண்டையாக இருப்பதால் உண்டை என்பர். சில சரக்குகளைச் சேர்த்து சாறுகள் அல்லது குடிநீர்களால் அரைத்து அளவாக உருட்டி உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..



நந்தீசர் அருளிய நெல்லிக்காய் கற்பம்!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் பல நூறு வகையான கற்ப வகைகளை நமக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். நம் முன்னோர்களின் இந்த அரிய  செல்வங்களின் பெருமையை உணராமல், அவற்றை போற்றிப் பாதுகாத்து மேம்படுத்த தவறிவிட்டோம். இந்த கற்ப வகைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அவற்றை வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

அந்த வரிசையின் இன்று நந்தீசர் அருளிய நெல்லிக்காய் கற்பம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் "நந்தீசர் சர்வகலைஞானம்"  என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின்வருமாறு...

பேணிப்பார் நெல்லிக்காய் முத்தல்வாங்கி
பேரான பால்விட்டு யவித்துக்கொண்டு
வூணிப்பார் நிழலுலர்த்திச் சூரணித்து
வுத்தமனே சுத்திகெந்தி சரியாய்க்கூட்டி
பேணிப்பார் தேனதிலே குழைத்துவெருகடி
பேரான மண்டலந்தா னுண்டாயானால்
ஆணிப்பார் முன்னெடுத்த தேகமையா
ஆச்சரியம் சிவசத்தி தேகமாச்சே.

- நந்தீசர்.

முற்றிய நெல்லிக்காயாக பார்த்து எடுத்து அதனைப் பசுப்பாலில் அவித்து பின்னர் நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம். நன்கு உலர்ந்ததும் அதனைச் சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்துடன் சம அளவாக சுத்தி செய்த கந்தகம் சேர்த்து தேனில் குழைத்து வெருகடி அளவு உண்ண வேண்டுமாம்.

இவ்வறு தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடலானது சிவசக்தி தேகமாவதுடன் காயசித்தியும் உண்டாகும் என்கிறார் நந்தீசர்.

ஒரு மண்டலம் - 48 நாட்கள்.

வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது. 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..



வள்ளல் பெருமானின் மறைவு!

Author: தோழி / Labels:

1874ம் வருடம் ஜனவரி 30ம் தேதி, வள்ளல் பெருமான் தன்னுடைய அணுக்கத் தொண்டர்களுக்கு அருளாசி வழங்கி விட்டு, தான் பத்து பதினைந்து தினங்கள் தனியறை ஒன்றில் இருக்கப் போவதாகவும், அறையின் கதவைத் திறக்க வேண்டாமெனவும், அப்படித் திறந்து பார்த்தால் யாருக்கும் எதுவும் தெரியாது. வெற்று அறையாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டு, இரவு 12 மணி அளவில் சித்தி வளாகத்தில் இருந்த மாளிகையின் அறையொன்றில் நுழைந்தார். 

அவரது அணுக்கத் தொண்டர்கள் அந்த அறையின் வெளிப் புறத்தை தாழிட்டுப் பூட்டினார்கள். அதற்குப் பிறகு வள்ளல் பெருமானை யாரும் உயிரோடு பார்க்கவில்லை. ஆம்!, பூட்டிய அறைக்குள் போனவரைக் காணவில்லை. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், அவர் ஜோதியில் ஐக்கியமாகி விட்டதாக ஒரு கருத்து உருவாக்கப் பட்டு இன்று வரை அதுவே நம்பப்படுகிறது. 

அப்போது தென்னாற்காடு மாவட்டத்தின் கலெக்ட்டராக இருந்த J.H.GARSTIN என்பவர் நேரிடையாக சித்திவளாகத்திற்கு வந்து வள்ளல் பெருமானின் மறைவு குறித்து விசாரணை நடத்தி குறிப்பு எழுதியிருக்கிறார். இந்த விசாரணை அங்கிருந்தவர்களிடம் மட்டும் நடத்தப் பட்டிருக்கிறது. வள்ளல் பெருமானை இருந்த அறையினை திறந்து சோதனை எதுவும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.  

J.H.GARSTIN தன்னுடைய அறிக்கையில் வள்ளல் பெருமானின் மறைவைக் குறித்து பின்வருமாறு குறிப்பு எழுதியிருக்கிறார்.

A village of 1, 189 inhabitants lying 23 miles south west of Cuddalore on the Vridhachalam Road. The place is connected with one Ramalinga Paradesi (Swami Ramalingam), a somewhat curious example of a later day Saint who has been almost deified by his followers. Born in 1823 in the Chidambaram Taluk of Vellala parents in humble circumstances, he developed, while still little more than a boy, an undeniable talent for versification, and his poems brought him into notice. They dealt with religious matters; some of them like those of the famous saivite saints of old, were composed in eulogy of the merits of the deities of certain shrines such as the temples at Tiruttani in North Arcot and Tiruvottiyur near Madras; others took for their subject the beauties of the higher life. It was these that led to his becoming gradually regarded as a spiritual guide and teacher. After visiting many of the well-known sacred places of the south, he finally settled at Karunguli, the next village to Parvatipuram. At its height his influence must have been very real, his admirers and disciples, who included even level-headed Government officials, are said to have changed their residence and gone to live where they could be constantly near him. About 1872, the curious octagon-shaped Sabha with the domed roof which is to be seen at Vadalur, a hamlet of parvatipuram, was erected by him from subscriptions. It is said that the spot was chosen because from it are visible the four great towers of Nataraja's shrine at Chidambaram. It is not an ordinary temple, the detail of the worship in it being unusual. Ramalinga Paradesi (Swami Ramalingam) seems to have persuaded his disciples that they would rise again from the dead and he consequently urged that burial was preferable to cremation. Even Brahmins are said to have been buried in this belief and people who died in other villages were in several cases brought to Vadalur and interred there. In 1874, he locked himself in a room (still in existence) in Mettukkuppam (hamlet of Karunguli), which he used for Samadhi or mystic meditation, and instructed his disciples not to open it for sometime. He has never been seen since, and the room is still locked. It is held by those who still believe in him that he was miraculously made one with his god and that, in the fullness of time he will reappear to the faithful. Whatever may be thought of his claims to be a religious leader, it is generally admitted by those who are judges of such matters that his poems, many of which have been published, stand on a high plane, and his story is worth noting as an indication of the directions which religious fervor may still take. 

(South Arcot Manual by J.H.Garstin, I.C.S., Collector of S.A. District, First Edition, 1878; Second Edition, 1906 as South Arcot Gazetteer by W. Francis, I.C.S., Collector of South Arcot District, pages 316 & 317 :(Published in South Arcot District Gazette - 1878)-Collctorate)

வள்ளல் பெருமானுக்கு முன்னரோ, அல்லது அவருக்கு பின்னரோ யாரும் இப்படி பூட்டிய அறைக்குள் போய் ஜோதியில் கலந்ததாய் வரலாறு இல்லை. சித்த புருஷர்கள் கூட சமாதியானதாகத்தான் குறிப்புகள் உண்டு. நம்பிக்கை என்பதைத் தாண்டி மெய்யறிவோடு யோசிக்கத் தெரிந்த எவருக்கும் வள்ளல் பெருமானின் மறைவு குறித்த சந்தேகங்கள் எழுவது இயல்பே. இந்த சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் சில குறிப்புகளை இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

சுவாமி சித்பவானந்தா என்பவர் ”தர்மசக்கரம்” என்னும் பத்திரிக்கையில் வள்ளல் பெருமானின் மறைவைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“இராமலிங்க வள்ளலார், மிக அண்மையில் மறைந்தவர்.  அவர் தன் உடலைப் பஞ்சீகரணம் செய்து விட்டு ஜோதியில் கலந்து விட்டார் என்னும் நம்பிக்கை அவருடைய அடியார்களுள் ஒரு சிலர்க்கிடையில் இருக்கிறது.  மற்றொரு சிலர் அவர் பூதவுடலை ஜோதியில் கரைத்து விடவில்லை; மற்றவர்கள் போன்று உடலை உகுத்து விட்டுப் பரஞ்சோதியில் கலந்தார் என்று பகர்கின்றனர்.  இப்பொழுது வடலூரில் கட்டு விக்கப்பட்டிருக்கும் ஞான சபைக்கு அருகிலுள்ள மேடையினுள் அவர் உகுத்த பூதவுடலை இரகசியமாக அடக்கம் செய்து விட்டனர் என்று பலர் பகர்ந்து வருகின்றனர். இதன் மர்மம் எதுவாயினும் நமக்குக் கவலையில்லை. இராமலிங்க வள்ளலார் உலகு அறிய வெளிப்படையாக ஜோதியில் கலக்க வில்லை என்பது உண்மை.” 

கருத்து மோதல்கள் என்றாலே உடனே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் அன்றைய கால கட்டத்தில் சுவாமி சித்பவானந்தாவின் இத்தகைய கருத்துக்கு எதிராக யாரும் வழக்குத் தொடர்ந்ததாகத் தெரியவில்லை. மேலும்  1883ல் மார்ச் 18ம் தேதி வெளியான "தத்துவ விவேசினி” என்ற இதழில் வள்ளல் பெருமானார் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்தச் செய்தியை வள்ளல் பெருமானின் அணுக்கத் தொண்டரான காஞ்சிபுரம் வரதராச முதலியார் என்பவர் மறுத்திருக்கிறார். 25 -3 -1883 வெளியான "தத்துவ விவேசினி” இதழில்  இவரின் மறுப்பு பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

இவை தவிர வள்ளல் பெருமானார் அவரது எதிரிகளால் கொலை செய்யப் பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. கற்பூர மூட்டைகள் நிரப்பிய அறைக்குள் தந்திரமாக வரவழைக்கப் பட்டு கொளுத்தப் பட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை வலியுறுத்தும் ஆவண, ஆதாரங்கள் எதுவுமில்லை. பின்னாளில் மறைமலை அடிகளார் போன்ற  அறிஞர்களும் தங்கள் ஆய்வின் முடிவில் வள்ளல் பெருமானார் ஜோதியில் கலந்ததாக கூறப்படுவதை நிராகரித்திருக்கின்றனர்.

ஐம்பது ஆண்டுகள், ஒன்பது மாதம் நீடித்த வள்ளல் பெருமானின் வாழ்க்கை, வாழும் போதும் சரி, வாழ்க்கைக்குப் பிறகும் சர்ச்சையானதாகவே இருந்திருக்கிறது. இத்தனை தடைகளையும் தாண்டி அப் பெருமகனார் நமக்கு விட்டுச் சென்ற மெய்யறிவும், மெய்ஞானமும் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கைக் கொள்ள வேண்டியது என்பதில் மட்டும் மாற்றுக் கருத்து இல்லை.

தாம் வாழும் காலத்தைத் தாண்டிய சிந்தனைப் போக்கு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தவர்களின் மீது உருவாகும் இயல்பான ஆச்சர்யத்தினால் அவர்களின் மீது தொன்ம சித்திரங்களை உருவாக்கி, அப் பெருமக்களை மிகை மனிதர்களாக்கி மகிழ்வது நம் இயல்பு. அத்தகைய மிகையான கதைகளுக்கு  வள்ளல் பெருமானாரும் விதிவிலக்கில்லை. அவர் மீது புனையப் பட்டிருக்கும் அற்புதங்களோ, அதிசயங்களோ என்னை ஈர்க்கவில்லை. அதன் பொருட்டே அத்தகைய கதைகளை இந்த தொடரின் நெடுகே தவிர்த்திருக்கிறேன். 

இன்று வள்ளல் பெருமானாரை குருவாய் கருதிச் செயல்படுவோர் எத்தனை தூரம் அவரின் நெறிகளுக்கு நேர்மையானவர்களாக இருக்கின்றனர் என்பது கேள்விக்கும் விவாதத்திற்கும் உரியது. அவர் எதையெல்லாம் நிராகரித்தாரோ அதையெல்லாம் அந்த மாமனிதரின் மீது புகுத்தி அவரை நவீன சைவராக காட்டிடும் முயற்சிதான் நிதர்சனத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. வள்ளல் பெருந்தகையின் பேரைச் சொல்லி பணம் பண்ணுவோர் இன்னொரு பக்கம் செழித்தோங்கிக் கொண்டிருப்பதும் வருந்தத்தக்கது.

என் வரையில் மெய்யான மெய்யறிவை தேடித் தெளிந்த அந்த மெய்ஞான குருவுக்கு என்னாலான  மிகச் சிறிய காணிக்கையாக இந்த தொடரை சமர்ப்பித்து  நிறைவு செய்கிறேன். இந்த தொடரில் ஏதேனும் கருத்துப் பிழையோ அல்லது தகவல் பிழையோ நேர்ந்திருப்பின் அதற்காக எனது வருத்தங்களை பதிவு செய்திட விரும்புகிறேன். தவறுகளை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.

குருவடி சரணம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..



சமரச சன்மார்க்க சங்கமும், சர்ச்சைகளும்!

Author: தோழி / Labels:

வள்ளல் பெருமானாரின் அமைப்பு ரீதியான புதிய முயற்சி சாமான்ய மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது. பல்கிப் பெருகிய ஆதரவுடன் அமைப்புகள் பெரிய அளவில் வளரத் துவங்கிய போது அதை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பல் வேறு திட்டமிடல்கள் தேவைப் பட்டன. தன்னுடைய கொள்கைகளை பின் பற்றுவோருக்கான நியதிகளை 1872 ல் வள்ளல் பெருமான் வகுத்தளித்தார். அவை “நித்திய கரும விதிகள்” எனப்பட்டன.

ஒழுக்கம் என்பது ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து துவங்கிட வேண்டும் என்பதில் வள்ளல் பெருமானார் உறுதியாக இருந்தார். காலையில் துயிலெழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்வது வரையிலான ஒவ்வொரு செயலும் எவ்வாறு கடைபிடிக்கப் பட வேண்டும் என்பதை வள்ளல் பெருமானார் தீர்மானமாய் வகுத்தளித்தார். இயற்கையோடு இணைந்த பெருவாழ்வு என்பதாக அவருடைய நியதிகள் அமைந்தன.

இந்த நியதிகள் இல்லறத்தாருக்கு ஒரு வகையாகவும், துறவறம் மேற்கொண்டவர்களுக்கு இன்னொரு வகையாகவும் வரையறுக்கப் பட்டிருந்தன. இதனை உறுதியாக கடைபிடிக்க வேண்டுமெனவும் வள்ளல் பெருமானார் வலியுறுத்தினார். தன்னுடைய தெளிவுகள் மனித குலத்தை அதன் எல்லா பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுத்து அவர் தம் துயரைத் துடைக்கும் என உறுதியாக நம்பினார். ஆனால் நடைமுறையில் அந்த நம்பிக்கையை செயல்படுத்துவது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை.

இந்த கால கட்டத்தில் இறந்தவர்களை தன்னால் உயிர்ப்பிக்க முடியுமென  வள்ளல் பெருமான் கூறிய ஒரு கருத்து பலத்த சர்ச்சையையும், எதிர்ப்பினையும் உண்டாக்கியது. இது தொடர்பான ஒரு கிருத்துவ பாதிரி ஒருவரின் எதிர்க் கருத்து பின் வருமாறு ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறது.

"ஏமாற்று வித்தைக்காரன் ஒருவன் வடலூர் வட்டாரத்தில் உலவுகின்றான். செத்தாரை எழுப்பப் போவதாகப் பறை சாற்றுகின்றான். மக்கள் சென்னை போன்ற இடங்களிலிருந்து வந்தபடி இருக்கிறார்கள். அண்மையில் கள்ளர் அவன் திரட்டி வைத்திருந்த செல்வத்தைச் சூறையாடிச் சென்றனர். ஆகவே இப்போது பணம் திரட்ட இப்புது வழியைக் கண்டுபிடித்திருக்கிறான்”.

ஒரு பக்கம் சைவ சமயத்தின் பழமை வாதிகளின் எதிர்ப்பு என்றால் மறுபுறம் கிருத்துவ பாதிரிமார்களின் இத்தகைய எதிர்ப்பினையும் அவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கிடையே அவருடன் இருந்தவர்களில் சிலர் அவருடைய எண்ணங்களுக்கு எதிரானவர்களாய் இருப்பதாகவும் வள்ளல் பெருமானார் கருதினார். இத்தகைய பல முனை எதிர்ப்புகள் அவரை கடுமையான மன உளைச்சலில் தள்ளியது. இதனை அவர் எழுதிய கடிதங்கள் சிலவற்றின் ஊடாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

திரு.அப்பாசாமி செட்டியார் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் தான் உருவாக்கிய அமைப்புகளில் நிலவும் குளறுபடிகளைப் பற்றிய தனது ஆதங்கத்தினை பின் வருமாறு உரைக்கிறார்.

”இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையில் இருக்கிறவர்கள் எல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேல் பழிஇல்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் படவேண்டும்.”

மேலும்......

"கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத்தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினாலும் எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம். அப்படிப் பட்டவர்களை ஒரு பேச்சுமில்லாமல் இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்சி ஒவ்வொருவரும் செய்தல் வேண்டுவது.”

சி. இராமலிங்கம் (திருவருட்பா உரைநடைப் பகுதி - பக்கம் - 436)

இத்தகைய சர்ச்சைகளினால் மனம் வெறுத்துப் போன வள்ளல் பெருமான் ஒரு கட்டத்தில் தான் உருவாக்கிய தருமசாலையில் இருந்து வெளியேறி மேட்டுக் குப்பத்தில் ஒரு வைஷ்ணவரின் இடத்தில் தங்கிட ஆரம்பித்தார். இக் கால கட்டத்தில் அவர் எழுதிய பாடல்கள் பலவும் அவரது மன உளைச்சலையும், தான் உயிரோடு இருப்பது குறித்த கவலையையும் சொல்வதாக இருக்கின்றன. அத்தகைய இரண்டு பாடல்களை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ்
வெளியேன்மேல் கருணைபுரிந் தெழுந்தருளல் வேண்டும் 

                   ( திருவருட்பேறு - ஆறாம் திருமுறை )

இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி
எண்ணம்எலாம் முடித்தென்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின் 

                   (பிரியேன் என்றல் - ஆறாம் திருமுறை )

இத்தகைய சூழலில்தான் வள்ளல் பெருமான் திடீரென ஒரு நாளில் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டு ஜோதியில் கலந்ததாக கூறப் படுகிறது. அந்த விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..



வள்ளல் பெருமானும் அமைப்புகளும்....

Author: தோழி / Labels:

வள்ளல் பெருமானார் வாழ்ந்த காலத்தே சமூக அமைப்பும் எவ்வாறு இருந்தது என்பதை இந்த தொடரின் முந்தைய பதிவுகளில் பார்த்திருந்தோம். 

சமூக அமைப்பானது உயர் சாதியினர், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த இடை நிலை சாதியினர், கீழ்நிலை அல்லது தாழ்த்தப் பட்ட சாதியினர் என மூன்று பெரும் பிரிவுகளில் அடங்கி இருந்தது. இதில் உயர் சாதியினரே இறைவனின் பிரதிநிதிகளாகவும், சமயம் குறித்த தீர்மானங்களை, சடங்குகளை, சம்பிரதாயங்களை  வரையறுப்பவர்களாகவும் இருந்தனர். 

இடை நிலை சாதியினர் பல்வேறு தொழில்களை செய்பவர்களாகவும், உயர் சாதியினரின் ஆதரவாளராகளாகவும், அல்லது அவர்களின் அணுக்கத் தொண்டர்களாகவும் தம்மை காட்டிக் கொண்டனர். இவர்களில் ஒரு பிரிவினர் மாற்றுக் கருத்துக்களோடு தனித்து இயங்கினர். இவர்களே பின்னாளில் வள்ளல் பெருமானை ஆதரித்தவர்கள்.

கீழ் நிலை சாதி மக்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. அவர்களின் பிறப்பே கேவலமானதாகவும், பாவத்தின் பயனை அனுபவிக்க பிறந்தவர்களாகவும் கருதப் பட்டனர். மற்ற சாதியினரால் விலங்குகளை விடவும் கேவலமாக நாலந்தரமாய் நடத்தப் பட்டனர். அவர்களின் உடல் உழைப்பு மட்டுமே தேவையாக இருந்தது. இந்த மக்களின் தரித்திரம், வறுமை போன்றவைகள் பாவத்தின் சம்பளமாக கருதப் பட்ட காலம் அது. 

இத்தகைய சூழலில்தான் ஆங்கிலேய பாதிரிமார்கள் இடைநிலை மற்றும் கீழ்நிலை சாதியினரை குறிவைத்து தங்களின் மதத்தினை பரப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் முன் வைத்த கருத்துக்கள், அந்த மக்களிடையே பரவலான வரவேற்பினை பெற்றிருந்தது. இதை கண்டு பொறுக்காத சைவ சமயத்தினர் தங்களின் சமயத்தை மறு மலர்ச்சி செய்வதாகக் கூறி, சைவ சமயத்தை ஆக்கிரமித்திருந்த வட மொழியின் ஆதிக்கத்தில் இருந்து மீட்டு, அதனை தமிழ் வழியே முன் நிறுத்துவதன் மூலம் சமய மறுமலர்ச்சியினை செய்து விடலாமென தீர்மானித்து செயல்பட்டனர்.

இவர்கள் இருவரின் மத்தியில் வள்ளல் பெருமான் மூன்றாவது ஆளாக களமிறங்கி தனது கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவர் பிறப்பால் சைவ சமயத்தவராக இருந்ததினால், எங்கே அவர் தங்களின் சமயத்தை அழித்து விட முயற்சிப்பதாய் சைவ சமய அன்பகள் சந்தேகமுற்று அவரை தாக்கத் துவங்கினர். வள்ளல் பெருமானோ இதிலெல்லாம் ஆர்வம் இல்லாதவராய் தன் கொள்கைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முனைந்தார். ஆனால் அவர் அனுகிய மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும், வறுமையின் கோரப் பிடியில் இருப்பவர்களாகவும் இருந்தனர்.

எனவே அவர்களின் அறிவை வளர்ப்பதோடு, அவர்களின் வயிற்றுக்கு உணவு தரும் ஏற்பாட்டினைச் செய்யவும் திட்டமிட்டார். அதன் படி 1867ல் சத்திய தரும சாலை என்னும் அமைப்பினை தோற்றுவித்தார். பசியென வருவோர்க்கு பசியாற்றி அவர்களின் அறிவினை தெளிவாக்குவதுதான் வள்ளல் பெருமானின் திட்டம். இதன் தொடர்ச்சியாக அறிவின் தெளிவை உண்டாக்கிட 1870ல் “சத்திய ஞான சபை” உருவானது.

இது தவிர வேறு சில அமைப்புகளையும் நிறுவி செயல் படுத்த வள்ளல் பெருமானார் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவற்றை அவரால் உருவாக்கிட முடியவில்லை.  அவை எல்லாம் பல் வேறு காரணங்களினால் கொள்கை அளவோடு நின்று போயின. அந்த அமைப்புகளின் பெயர்கள் பின்வருமாறு.

வைத்திய சாலை
சாஸ்திர சாலை
உபகார சாலை
விருத்தி சாலை(1867 )தருமசாலையின் கிளைகள்
உபாசனா சாலை
யோக சாலை
விவகார சாலை
சன்மார்க்க போதினி (1867)
சமரச வேத பாடசாலை (1872)
சன்மார்க்க விவேக விருத்தி 1867 - திங்களிதழ்

இவை எல்லாம் பெருமனாரின் எண்ணப் படி நிறுவப் பட்டு அதன் நோக்களை செயல்படுத்தியிருந்தால்  அவர் முன் வைத்த சமூக மாற்றம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பரவியிருக்கும். ஆனால் அப்படி நடக்காமல் போனது தமிழர்களுக்கு பெரிய இழப்பு என்றால் மிகையில்லை.

எல்லாம் சரிதான், வள்ளல் பெருமான் உருவாக்கிய அமைப்புகள் அவர் எதிர்பார்த்த  சமூக மாற்றத்தை உருவாக்கினவா? அல்லது இந்த பயணத்தில் அவர் எதிர் கொண்ட பிரச்சினைகள் என்ன?

விவரங்கள் அடுத்த பதிவில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..