"ஈரேழு பதினாலுலோகம்" என்றொரு சொற்றொடரை நம்மில் பலரும் கேள்விப் பட்டிருப்போம். இந்து வேத மரபில் மொத்தம் பதின்நான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப் படுகிறது. அவை நாம் வாழும் இந்த பூமி என்கிற பூலோகத்தின் மேலும் கீழுமாய் அமைந்திருக்கின்றன. பூமியின் மேலே ஆறு உலகங்களும், பூமியின் கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்.
இந்த பதின்நான்கு உலகங்களையும் நம் கண்களால் பார்ப்பது எப்படி என்கிற தகவலைத்தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பூரணகாவியம்" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
அகத்தியர் அருளிய முறையினை பார்ப்பதற்கு முன்னர் இந்த ஈரேழு பதின்நான்கு உலகம் பற்றி சுருக்கமாய் பார்த்துவிடுவோம்.
நாம் வாழும் இந்த பூமியின் மேலே உள்ள ஆறு உலகங்கள் பின்வருமாறு....
சத்யலோகம்
தபோலோகம்
ஜனோலோகம்
மஹர்லோகம்
சுவர்லோகம்
புவர்லோகம்
இந்த ஆறு உலகங்களின் கீழேதான் ஏழாவதாக நாம் வாழும் இந்த "பூலோகம்" அமைந்திருக்கிறது. இனி பூமிக்குக் கீழே உள்ள ஏழு உலகங்கள் பின்வருமாறு...
அதலலோகம்
விதலலோகம்
சுதலலோகம்
தலாதலலோகம்
மகாதலலோகம்
ரஸாதலலோகம்
பாதாளலோகம்
இந்த பதின்நான்கு உலகங்களைப் பற்றியும், அதன் தலைவர்கள், அங்கு வாழ்கிறவர்கள், அந்த உலகத்தின் தன்மை என தனித்துவமான வரையறைகள் கூறப் பட்டிருக்கின்றன. இதன் படி பூமியின் மேல் உள்ள ஆறு உலகங்கள் நன்மை தரும் உயர் நிலை உலகங்களாகவும், பூமியின் கீழ் உள்ள ஏழு உலகங்கள் தீய சக்திகளின் குறியீடாகவும் அமைந்திருக்கிறது.
அதாவது மேல் நிலையில் உள்ள சத்யலோகம் படைப்புக் கடவுளான பிரம்மாவின் உலகமாகவும், கீழ் நிலையில் உள்ள பாதாள உலகம் வாசுகி என்கிற பாம்பின் உலகமாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
மிகவும் விரிவாக விளக்கிட வேண்டிய ஒன்றினைப் பற்றி இயன்ற வரை சுருக்கமாய் பகிர்ந்திருக்கிறேன். ஏனெனில் நம் பதிவின் நோக்கம் இவைகளை அலசுவது இல்லை. இந்த உலகங்களை வெறும் கண்களினால் பார்க்கும் அகத்தியரின் வழிமுறை ஒன்றினை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.
பதின்நான்கு உலகங்களைப் பற்றிய தகவல்களை தேரையர் உள்ளிட்ட பல்வேறு சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே பகிர்ந்திருக்கின்றனர். அகத்தியர் தனது "அகத்தியர் பூரணகாவியம்" என்னும் நூலில் சத்தியலோகம் முதல் கீழ் உலகமான பாதாள உலகம் வரை நம் கண்களினால் பார்க்கும் சக்தியைத் தரும் ஒரு மையினைப் பற்றி பின்வருமாறு விளக்கியிருக்கிறார்.
ஆமப்பா யின்னமொரு வசியஞ்சொல்வேன்
அண்டரண்ட பதங்களெல்லா மங்கேகாணும்
நாமப்பா சொல்லுகிறோம் புலத்தியாகேள்
நல்லகரு ஆமையிலே முன்றானாமை
ஓமப்பா குருவருளால் கண்டுதேறி
உறுதியுடன் மனதறிவால் கருவைவாங்கி
தாமப்பா சிவந்தபட்டு தன்னால்சுத்தி
சங்கையுடன் நெய்துவைத்த தீபமேற்றே.
ஏற்றிநன்றாய் கருகிநின்ற கருவைப்பார்த்து
யின்பமுடன் தானெடுத்து கல்வத்திட்டு
பார்த்திபனே காரெள்ளுத் தயிலத்தாலே
பதிவாகத் தானாட்டி வழித்துக்கொண்டு
போற்றியந்த மைக்கினிகர் சவ்வாதுசேர்த்து
பத்தியுடன் தானிருந்து திலர்தம்போட்டால்
நால்திசையும் வெகுதூரங் கண்ணோட்டம்பார்
நன்மையுடன் மேல்கீழும் தன்றாய்ப்பாரே.
பார்க்கயிலே அண்டவரை நன்றாய்க்காணும்
பத்தியுடன் பூமியில் பாதாளந்தோணும்
ஏற்கவே பாதாளந் தன்னைக்காணில்
இருநிதியு மொருநிதியா யேகந்தோணுங்
காக்கவே பெருநிதியை யகலத்தள்ளி
கயிலாச பூரணமாய் நிதியைத்தேடு
மார்க்கமுடன் கயிலாச நிதியைத்தேட
வந்துதடா அஷ்டாங்க வளமைதானே.
கருஆமையில் முன்றானாமை என்றொரு வகை இருக்கிறதாம். அதை குருவருளால் கண்டு அதன் கருவை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தக் கருவை சிவப்பு பட்டுத் துணியால் சுற்றி திரியாக செய்து கொள்ள வேண்டுமாம். அந்தத் திரியை விளக்கில் வைத்து நெய்விட்டு தீபமேற்ற வேண்டுமாம். தீபமேற்றினால் திரி எரிந்து அந்தக் கருவானது கருகி இருக்குமாம்.
அப்போது அதை எடுத்து கல்வத்தில் போட்டு காரெள்ளுத் தைலம் சேர்த்து கடைந்து எடுத்தால் மையாகுமாம். அந்த மைக்கு சம எடை சவ்வாது சேர்த்து திலகமாக இட்டு நான்கு திசையையும் சுற்றிப் பார்த்தால் வெகு தூரம் வரை தெளிவாய் தெரியுமாம்.
அப்படியே மேலும் கீழும் நன்றாகப் பார்த்தால் மேலே பார்க்கும் போது அண்டம் வரையும், கீழே பார்க்கும் போது பாதாளம் வரையும் தெளிவாகத் தென்படுமாம். அப்போது அங்கே பாதாளத்தில் சங்கநிதி, பதுமநிதி என்னும் இரண்டு நிதிகளும் ஒன்றாகி பெருநிதியாகத் தோன்றுமாம். அப்போது அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு பூரணத்தில் மனதை நிலை நிறுத்தி கைலாய நிதியைத் தேட, அட்டாங்க வளமைகள் அனைத்தும் வந்து சேரும் என்கிறார் அகத்தியர்.
ஆச்சர்யமான தகவல்தானே!, வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.