மாதவிலக்கும், வெள்ளை படுதலும்

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கு தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கு சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்ந்து கொள்வதுதான் இந்தத் தொடரின் முதன்மையான நோக்கம் என்றாலும் கூட, இது ஒரு நோய், பெண்களுக்கான சாபம், தீராத துன்பம், தீட்டு என காலம் காலமாய் பலவாகிலும் கட்டமைக்கப் பட்ட கருத்தாக்கங்களை களைந்து, மாதவிலக்கு என்பது சாதாரணமான உடல் இயங்கியல் நிகழ்வு என்பதனை அனைவரும் உணர்ந்திட வேண்டியே இத்தனை நீளமான அடிப்படை விளக்கங்களை எழுதிட நேர்ந்தது.

சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்வதற்கு முன்னர், இரண்டு நண்பர்கள் மின்னஞ்சலில் எழுப்பியிருந்த கேள்விகளுக்கான பதிலாய் இன்றைய பதிவு அமைகிறது. அந்த கேள்வி இதுதான்....வெள்ளை படுதல் எனப்படும் வெள்ளை ஒழுக்கும், மாதவிலக்கும் ஒன்றா?, வெவ்வேறென்றால் வெள்ளைப் படுதல் என்பது என்ன?.

எப்படி நமது கண்கள், காதுகள், வாய், ஆசனவாய் போன்ற உறுப்புகள் உடலின் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கின்றனவோ, அதைப் போலவே நமது பிறப்பு உறுப்பும் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கிறது.

நமது வாயில் உமிழ்நீர் சுரந்து வாயின் உட்புற அமைப்பினை பராமரிப்பது போல, நமது பிறப்பு உறுப்பும் இயல்பாகவே ஒரு நீர்மத்தை சுரந்து பிறப்புறுப்புகளை பராமரிக்கிறது. இந்த நீர்மம் நிறமற்றதாகவும், மணமற்றதாகவும் இருக்கும். நாளொன்றிற்கு நான்கு மில்லி லிட்டர் வரை சுரக்கும். இது எல்லா வயதினருக்கும் இயல்பாக நிகழக் கூடிய ஒன்றுதான். எனவே மாதவிலக்கும், வெள்ளைப் படுதலும் அடிப்படையில் வெவ்வேறானவை. 

எனினும், உடல் நல பாதிப்புகள், உடல் இயங்கியலில் ஏற்படும் மாற்றங்கள், நோய்த் தொற்று பாதிப்பு போன்றவைகளால் இந்த நீர்மம் இயல்பைவிட அதிகமா வெளியேறும். இந்த நீர்மம் வழவழப்பாகவும், வெள்ளை, மஞ்சள், பச்சை நிறத்திலும், குருதி கலந்த நிலையிலும் வெளியேறும். தீவிரமான நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு மிகுந்த துர் நாற்றத்துடனும் நுரைத்த நீர்மமாகவும், தக்கை தக்கையாவும், இறுகிய நீர்மமாகவும் வெளியேறும். இதனையே வெள்ளை படுதல் என்கிறோம்.

மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னர், மாதவிலக்கு முடிந்த பின்னர், கருத்தரித்த சமயங்களில், குழந்தை பேற்றிற்கு பின்னர், கருத்தடை சாதனங்கள், மருந்துகளை உட்கொள்ளும் போது, நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் போது, முறையற்ற பாலியல் பழக்கங்கள் என பல்வேறு காரணங்களினால் இத்தகைய வெள்ளை ஒழுக்கு ஏற்படுகிறது.

மொத்தத்தில் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்த் தொற்று, மற்றும் உடலின் அமில, காரத் தன்மையில் ஏற்றத்தாழ்வு ஆகியவையே அதிகமான வெள்ளை போக்கினை உருவாக்குகின்றன. மேலும் ஒருவரின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் இது மாறுபடுகிறது. 

முறையான உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, அழுத்தங்கள் இல்லாத வாழ்வியல் சூழல் போன்றவையே இதற்கு நீண்டகால தீர்வாக அமையும். எனினும் ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஆரம்ப நிலையில் மருத்துவம் செய்வதன் மூலம் எளிதில் குணப்படுத்தி விடக் கூடிய ஒன்றுதான் வெள்ளை படுதல்.

இனி வரும் பதிவுகளில் மாதவிலக்கு பிரச்சினைகளை எதிர்கொள்வது மற்றும் சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகள் குறித்து பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

4 comments:

துரை செல்வராஜூ said...

தெளிவான விளக்கம்!...ஒவ்வொரு குடும்பத்தினரும் தம்முடைய நலனுக்காக இதனை கண்டிப்பாகப் படிக்க வேண்டும்!..

Inquiring Mind said...

தீட்டு என்பது சுத்தபத்தத்துடன் சம்பந்தப்பட்டது.. மூட நம்பிக்கையோ, கட்டமைப்போ இல்லை..

உடலில் உள்ள ரத்தம் வெளியேறும்பொழுது அது டீ-கம்போஸ் ஆவதால், பெண்களை மாத விலக்கு நாட்களில் தனி அறையில் ஓய்வெடுக்க சொல்வார்கள்.. இதை பெண்களே பெண்களுக்காக ஏற்படுத்திய வழக்கம்..

எதற்கெடுத்தாலும் சமூகத்தை வில்லனாக பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளவும்..

அடிபட்டவர்கள், நோய்வாய்பட்டவகள் அனைவரையும் இப்படி தனி அறையில் வைப்பார்கள்..

S.Chandrasekar said...

சில வருடங்கள் முன்பு வரை இந்த விலக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் எதையும் தொடமாட்டார்கள், சமயர்கட்டில் வேலை செய்யமாட்டார்கள், கருவேப்பிலை/துளசி செடி பக்கம் போகமாட்டார்கள், தூரமாக உட்கார்ந்து ஒய்வு எடுப்பார்கள். ஆனால் இன்று அது நவீன நாகரிகத்தின் வேண்டாத தருணமாகி விட்டது. முன்பு இதை விலக்கு, தீட்டு, தூரம் என்று பல பெயர்களால் அழைத்தனர். எல்லா ஜாதியினரும் பின்பற்றினர். இன்று ஏதும் இல்லை. இப் பெண்கள் துணியோ, காற்றோ ஆண்கள் மீது படக்கூடாது.

இன்று அதை மூடநம்பிக்கையாக தள்ளிவிட்டனர். இவர்களுடைய விலக்கு துணியை மறைவாக வைத்திருந்தனர். இன்றோ நாப்கின் தெருவில் கிடக்கிறது, நாய் காக்கை கவ்விக்கொண்டு போகிறது. இது அப்பெண்ணிற்கு தோஷம், திருஷ்டி, சூன்யம் வந்து சேரும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

Just for info ஒன்றை சொல்லுகிறேன். சமீபத்தில் நான் புத்தகம் எழுதும்போது என் ஆய்வில் ஒன்றை கண்டேன். சித்தர், மாந்த்ரிக செய்வினை பற்றி சொல்லும் போது, சில மூலிகைகளை அரைத்து அதில் 'பெண்ணின் விலக்கு சீலை' யை திரியாக திரித்து நினைத்து சில மந்திரங்களை சொல்லி அந்த திரியை பற்றவைக்கவேணும் என்கிறார்.

தெருவில் கிடக்கும் நாப்கின்ஸ் யார் கைக்கு போகுமோ தெரியாது. அதை கழுகு கவினால் 'பட்சி தோஷம்' வரும், அப்பெண்ணின் கரு நிற்காது, உடலும் கர்பப்பையும் பலவீனமாகும். இதையெல்லம் தான் அந்த காலத்தில் 'மடி''ஆச்சாரம்''சுத்தம்' என்று சொன்னார்கள். நம்முடைய சமத்துவ முற்போக்கு சிந்தனயில் இது அடிபட்டுபோனது.

காரணங்கள் சொல்லாமல் சம்ப்ரதாயம் என்றனர். சொன்னால் நிரூபணம் கேட்பார்கள். சிதத்ர்கள் சொன்ன பல விஷயங்களை நாம் நிரூபணமா கேட்கமுடியும்...?

Unknown said...

PLS FOLLOW

Post a comment