மாதவிலக்கும் சித்தர்கள் அருளிய தீர்வுகளும் - சூதக வலி, சூதக சன்னி, சூதக கட்டி

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கின் போது வெளியேறும் குருதி கலந்த கழிவினையே "சூதகம்" என்கிறோம். இந்த சூதகம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டு சூதகம் கட்டிக் கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளான சூதக வலி, சூதக ஜன்னி, சூதக கட்டி போன்றவைகளுக்கு நம் முன்னோர்கள் அருளிய தீர்வுகளை இன்றைய பதிவில் பார்ப்போம். 

முன்னரே குறிப்பிட்ட படி தேவையும், அவசியமும் உள்ளவர்கள் இந்த தகவல்களை ஒரு வழிகாட்டுதலாக மட்டும் எடுத்துக் கொண்டு தகுந்த வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறேன்.

பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி தொடர்புடைய பாடல்களை தவிர்த்திருக்கிறேன்.

சூதக வயிற்றுவலி..

பெரும்பாலும் மாதாந்திர சூதகம் வெளிப்படும் முன்னதாக வயிற்றுவலி இருக்கும். இத்தகைய வயிற்றுவலி சூதகம் வெளிவந்தவுடன் நின்றுவிடும். சிலருக்கு சூதகம் வெளிப்படத் தொடங்கியபின் வயிற்றுவலி இருக்கும். இதற்கு பின்வரும் மருந்துகளைச் சாப்பிட்டால் குணமாகும் என்கின்றனர்.

மாவிலங்கப் பட்டையைக் அரைத்து அந்த பொடியுடன் 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். இவ்வாறு உண்டு வந்தால் சூதக வயிற்றுவலி குணமாகுமாம். 

மற்றொரு முறையில் வேலிப்பருத்தி என்னும் உந்தாமணி செடியின் கொழுந்து இலையாக ஐந்து இலையுடன், 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். சூதக வயிற்றுவலி குணமாகும். 

வேப்பம் பட்டை 10கிராம், சீரகம் 2 1/2 கிராம் இரண்டினையும் ஒரு சட்டியில் தட்டிப்போட்டு, ஒரு ஆழாக்கு தண்ணீர் விட்டு அதனை அரை ஆழாக்காக காய்ச்சி எடுத்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க சூதக வயிற்றுவலி குணமாகும் என்கின்றனர். 

சூதகச் சன்னி

அளவு மீறிய நரம்பு தளர்ச்சி , மாதவிலக்கின் போது வெளியேற வேண்டிய கழிவு குருதியில் விஷக்கிருமிகள் உண்டாகி விடுவதன் காரணத்தினாலும், அதிக அளவில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு விடுவதினாலும், இருதயம், மூளை இவைகளில் ஏதாவது பாதிப்பு இருந்தாலும், பெரும்பாடு, சூதகக்கட்டு, நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, பிரமேகம் இது போன்ற வியாதிகளின் காரணத்தினாலும், அடிக்கடி கருத்தரித்தல் காரணமாகவும், நரம்புகளின் குணம் மாறி அது சன்னியாக மாறிவிடும்.

இத்தகைய சூதகச்சன்னி ஏற்பட்டால் வலிப்பு உண்டாகும். அடிக்கடி வாய் விட்டுச் சிரிப்பார்கள். அல்லது அழுவார்கள். நர நரவென்று பற்களைக் கடிப்பார்கள். கை, கால்களை முறுக்கி ஒடிப்பது போல முறுக்குவார்கள். சில சமயம் தலையிலுள்ள கூந்தலைப் பற்றிப் பலமாக இழுத்துக் கொள்வார்கள். சில சமயம் நாக்கையும், கையையும் கடித்துக் கொள்ளுவார்கள்.சிலருக்கு இந்த வலிப்பு விட்டு விட்டு வரும். இந்த விதமான வலிப்பு இருக்கும் சமயம், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போலவும், நெஞ்சில் ஏதோ பளுவைத் தூக்கி வைத்தது போலவும் இருக்கும்.

இடது பக்க அடிவயிற்றில் இரைச்சலும், வலியும் இருக்கும். இந்தச் சன்னியின் கோளாறு, தானே ஆடி அடங்கிவிடும். புயல் அடித்து ஓய்ந்தது போல் உடல் தளர்ந்து போய்விடும். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழியும். சிறுநீர் அதிக அளவில் தெளிவாக இறங்கும். சன்னி தெளிந்து விடும். சிலர் இந்த நிலையைக் கண்டு பெண்ணுக்கு ஏதோ பேய், பிசாசு பிடித்திருக்கிறதெனக் கருதி அவளை மந்திரவாதியிடம் கொண்டு போய் அவளைப் பல வகையிலும் தொந்தரவு கொடுப்பார்களாம்.

இதற்கான மருந்தைத் தயாரித்துக் கொடுத்து வந்தால், இந்த நோய்க் குணமாகிவிடும் என்கின்றனர்.

சன்னியின் போது மயக்கமடைந்து விட்டால், துணியை சிறியதாகச் சுருட்டி நெருப்புப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை லேசாக முகரக் கொடுக்க வேண்டும். புகையை அதிகமாக்கி சுவாசத்துடன் அதிக அளவில் உள்ளே போகும்படி கொடுக்கக் கூடாது.சிறிது புகையைக் காண்பித்து விட்டு, ஓரிரண்டு சுவாசம் போய்வர விட்டு மறுபடி லேசாக காண்பிக்க வேண்டும்.

ஒரேடியாக அதிகப் புகையை உள்ளே செல்லும்படிச் செய்தால், புகை உள்ளே பந்தனமாகி அபாயத்தை உண்டு பண்ணும். எனவே, கவனமாக புகை கொடுக்க வேண்டும். ஒரு சில நிமிஷத்தில் மயக்கம் லேசாகத் தெளியும். முகத்தில் சில்லென்று தண்ணீரை அடித்து துடைத்து வீட்டால் மயக்கம் தெளிந்துவிடும்.

சூதகக் கட்டி

28 தினங்களுக்கு ஒரு முறை வெளியாக வேண்டிய சூதகமானது அதிக வாயுவின் காரணமாக கருப்பையிலேயே தங்கி, சிறிதளவு கூட வெளியேறாமல் நின்று விடும்.

இந்தச் சூதகமானது ஒன்றாகக் கட்டித் திரண்டு, உருண்டு பருமனாகி விடுமாம்.இதனை சித்த மருத்துவத்தில்உதிரக்கட்டி, சோணிதக்கட்டி, கற்பசூலை, இரத்தக்கட்டி, கர்ப்பசூலை, சூதகக்கட்டி, கற்சூலை, சூல்மகோதரம் என்று பல பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சூதமானது கர்ப்பப் பையிலிருந்து வெளியேறாமல் கட்டிவிட்டால், பிறகு வெளியேறாது. கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படக்கூடிய எல்லா குணங்களும் தோன்றும்.

அதாவது, பசிமந்தம் ஏற்படும். தேகம் வெளுக்கும். ஸ்தனத்தில் கருவளையம் தோன்றி, ஸ்தனமானது பெருத்து விம்மும். சேர்க்கையில் வெறுப்பு உண்டாகும். மார்பு துடிக்கும். ஆயாசம், வாந்தி உண்டாகும். சிலருக்கு ஸ்தனங்களில் பால் சுரக்கும். வயிறு கர்ப்பஸ்திரீ போல பெருத்துக் கொண்டே வரும்.

கருப்பையில் உள்ள சூதகக் கட்டி குழந்தைபோல அசையும், உருளும், பிரளும். இந்தக் குறிகளைக் கண்டு சில பெண்கள், தாம் கர்ப்பம் தரித்துவிட்டதாகவே எண்ணுவார்கள். சில பெண்களுக்கு பிரசவவலி போல ஏற்பட்டு இந்தக் கட்டி வெளியேறிவிடும். சிலருக்கு இது சூதகக் கட்டி என்று அறிந்து, தக்க மருந்து கொடுத்தால் வெளியேறும். 

இதைப் பற்றிய மேலும் சில விபரங்களை "மெய்க்கர்ப்பம், பொய்க்கர்ப்பம்" என்ற பதிவில் காணலாம்..

சூதக கட்டி குணமாக...

சீரகம், சக்திசாரம், நவாச்சாரம் வகைக்கு 30 கிராம். கருஞ்சீரகம், வால்மிளகு, பெருங்காயம், வாய்விளங்கம் கோஷ்டம் வகைக்கு 10 கிராம்.கடுகு, ரோகினி, வெடியுப்பு, மிளகு, இந்துப்பு, கறியுப்பு, கடுக்காய், வளையலுப்பு, கல்லுப்பு வகைக்கு 5 கிராம். இவைகளை எல்லாம் சுத்தம் பார்த்து நன்றாகக் காய வைத்து, கல் உரலில் போட்டு இடித்துத் தூளாக்கி சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொண்டு, ஒரு பெரிய முற்றின தேங்காயை எடுத்து அதன் ஒரு கண்ணைத் திறந்து, அதனுள் இந்தத் தூள்களை எல்லாம் செலுத்தி, துளைக்கு மரக்கட்டையைச் சீவி அடைத்துவிட்டு, 21/2 அடி ஆழம் பூமியைத் தோண்டி, அதில் இந்தத் தேங்காயை வைத்து, மண்ணைத் தள்ளி மூடி, புதைத்த இடத்தில் அடையாளம் வைக்க வேண்டும்.

இதைத் தயாரித்து சூரிய உதயத்தில் புதைக்க வேண்டும். ஏழாம் நாள் காலை சூரிய உதயத்தில் இதைத் தோண்டி எடுக்க வேண்டும்.

எடுத்த தேங்காயைப் பக்குவமாக தேங்காய் ஓட்டை மட்டும் உடைத்து எடுத்துவிட்டு, அதனுள் உள்ள மருந்துத் தூளுடன் தேங்காயையும் நைத்து அம்மியில் வைத்து தேன் விட்டு மைபோல அரைத்து, மெழுகுபதம் வந்தவுடன் எடுத்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு நாளைக்கு காலை, மாலை இரு வேளையும் கழற்சிக்காயளவு எடுத்துச் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.

இந்த விதமாக ஏழுநாள் சாப்பிட்டால் சூதகக்கட்டி உடைந்து வெளியேறிவிடும். பிறகு மாதா மாதம் சூதகம் ஒழுங்காக வெளியாகும். பத்தியமாக மருந்து உண்ணும் நாட்களில் ஆண் - பெண் சேர்க்கை கூடாது என்கின்றனர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்!

Author: தோழி / Labels: , , ,

இதுவரை மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்சி, அவற்றின் இயங்கியல், ஏற்படும் பிரச்சினைகள் என விரிவாகவே பார்த்து விட்டோம். இந்த தகவல்கள் யாவும் நவீன அறிவியல் நமக்கு கண்டறிந்து சொன்ன உண்மைகள். இனி நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம். மாதவிலக்கு பிரச்சினைகள் தொடர்பில் நிறைய தகவல்கள் சித்தர்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது.

இந்த தகவல்களை முழுமையாக தொகுப்பது என்பது சவாலான ஒன்று.மேலும் நிறைய நேரம் பிடிக்கும் காரியம் என்பதால், என்னால் இயன்ற அளவில் திரட்டிய தகவல்களையே இனி வரும் பதிவுகளின் ஊடே பார்க்க இருக்கிறோம். இந்தத் தகவல்கள் பலவற்றை இன்றும் நாம் கைவைத்தியம் என்கிற பெயரிலும், பாட்டி வைத்தியம் என்கிற பெயரில் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் இந்த இடத்தில் நினைவு படுத்திட விரும்புகிறேன்.

மற்றொரு முக்கிய குறிப்பு ஒன்றினையும் இந்த இடத்தில் பதிவது அவசியம் என கருதுகிறேன். சித்தர் பெருமக்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே "சித்தர்கள் இராச்சியம்" வலைப்பதிவின் முதன்மையான நோக்கம். எனவே இங்கே பகிரப் படும் தகவல்களை ஒரு வழிகாட்டுதலாய் மட்டும் அணுகிட வேண்டுகிறேன். தேவையும், அவசியமும் உள்ளவர்கள் தேர்ந்த வல்லுனர்கள்/மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை மேற்கொள்வதே சிறப்பு.

சித்தர் பெருமக்கள் மாதவிலக்கு தொடர்பில் அருளிய தீர்வுகளை மூன்று வகையாய் அணுகிடலாமென நினைக்கிறேன். அவை முறையே...

மாதவிலக்கு வராமல் இருப்பது, தள்ளிப் போவது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.

மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, உடல் தளர்வு போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.

பெரும்பாடு எனப்படும் அதிகமான, தொடர் குருதிப் போக்கினை கட்டுப் படுத்துவதற்கான தீர்வு.

இன்றைய பதிவில் மாதவிலக்கு வராமல் இருப்பது அல்லது தள்ளிப் போகும் பிரச்சினைகளுக்கான இரண்டு தீர்வுகளை மட்டும் பார்ப்போம்.“அகத்தியர் வைத்தியம் 600” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல்கள் இவை.

மீறாமற் றூரமில்லாப் பெண்களுக்கு
வேலியிலைப் பசுவின்பாலில்மிகவருந்த நேரும்
கூறான தூதுவளை சாறுவாங்கி
கொடைகொடையாகக் கிடக்குங் குளத்துப்பாசி
ஏறாமற் புனைக்கா யளவுகூட்டி
யிதமாகச் சர்க்கரையும் மேகமொன்றாய்
பேறுபட மூன்றுநா ளருந்தும்போது
புறப்படுமே செங்குருதி சிவப்பதாமே 

வேலிப் பருத்தி இலையை அரைத்து பசுப்பாலில் கலக்கி, அதிகளவில் அருந்த மாதவிலக்கு ஏற்படும் என்கிறார். மேலும் குளத்துப்பாசியை புனைக்காய் அளவு எடுத்து அத்துடன் தூதுவளை சாற்றையும் அளவான சர்க்கரையும் சேர்த்து மூன்று நாட்கள் அருந்த மாதவிலக்கு உண்டாகுமாம்.

கிரமாதீத சூதகம்

ஒழுங்கான மாதவிலக்கு சுழற்சி என்பது 28 தினங்களுக்கு ஒருமுறை ஏற்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி நடப்பதில்லை. ஒரு சிலருக்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னதாகவே மாதவிலக்கு கண்டு மறைந்து போவதையும், அல்லது சேர்ந்தாற் போல 2-3 மாதங்களுக்கு சூதகமே வெளிப்படாமலும் இருக்கும். இதனை சித்த மருத்துவத்தில் 'ஒழுங்கீன சூதகம்' 'கிரமாதீத சூதகரோமம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு வெங்காயம், கரியபோளம், மிளகு இவைகளில் வகைக்கு 21/2 கிராம் எடுத்து, அவற்றைத் தனித்தனியே இடித்துத் தூளாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அம்மியில் சிறிதளவு தேன் விட்டு அதில் இந்த தூளை இட்டு, மை போல் அரைத்து, அதை 16 சிறு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு தினசரி காலை, பகல், மாலை ஆக மூன்று வேளை உணவிற்குப் பின்னர் இரண்டு மாத்திரை வீதம் வாயில் போட்டு, அரை ஆழாக்கு அளவு பசுவின்பால் குடித்து வர வேண்டும்.

இந்த விதமாக மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால், மாதவிலக்கு ஒழுங்கு முறையுடன் மாதா மாதம் தவறாது வெளியேறுமாம்.

குறிப்பு : "மாதவிலக்கு பிரச்சினைகளும், தீர்வுவும்" என்கிற பழைய பதிவினை இங்கே வாசிக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும், எளிய மூச்சு பயிற்சியும்!

Author: தோழி / Labels: ,

வாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பவை நம் உடல் மற்றும் மனம் ஆகியவைகளை பிரச்சினையின்றி இயங்க உதவுகின்றன என்பதால் கடந்த இரு பதிவுகளில் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள நேரிட்டது.

இன்றைய பதிவில் இந்த ஒழுங்கின் மூன்றாவது ஒரு அங்கம் குறித்த தகவலை சேர்த்திட விரும்புகிறேன். இது பற்றி ஏனோ நம்மில் யாரும் பெரிதாய் கவனிப்பதில்லை. உயிர் சக்தி என்றும் பிராண சக்தி என்றும் குறிப்பிடப் படும் ஒன்றையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். 

நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் இருந்து பிராணவாயு பிரித்தெடுக்கப் பட்டு அவை நம் குருதியின் ஊடே கலந்து உடல் இயங்கியலில் பங்கேற்கும் அறிவியல் உண்மை நாம் அனைவரும் அறிந்ததே. இதில் நாம் எத்தனை காற்றை உள்ளிழுக்கிறோம், அதில் இருந்து எத்தனை அளவு பிராணவாயு நம் உடலில் சேர்கிறது என்பதைப் பொறுத்தே நம் உடல் நலன் மற்றும் மன நலன் அமைகிறது. 

இந்த அறிவியல் உண்மையை வேறெவரையும் விட நமது முன்னோர்கள் அறிந்து, இது தொடர்பில் பல நுட்பங்களையும், நுணுக்கங்களையும் கண்டறிந்து நமக்கு அளித்திருக்கின்றனர். நாம்தான் அதை உணந்து பயன்படுத்திட தவறியவர்களாக இருக்கிறோம்.

இந்த கலையின் விவரங்களை முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் மூச்சுக் கலையின் நுட்பங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று வாசித்தறியலாம்.

ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக்கலை: தேவையும், தெளிவும் 

ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக் கலை பயிற்சியை நமது முன்னோர்கள் வாசியோகம் என அழைத்தனர். இவை இரண்டும் வெவ்வேறானவை என்கிற கருத்தும் உண்டு. அந்த விவாதத்திற்குள் நுழைவது நமது நோக்கமில்லை. இந்த கலையை குருமுகமாய் கற்றுக் கொள்வதே சிறப்பு என்றாலும் கூட அன்றாடம் செய்திடக் கூடிய ஒரு எளிய பயிற்சி முறை ஒன்றினை தகவலாய் மட்டும் இங்கு பகிரலாமென நினைக்கிறேன்.

நமது உடலின் பெரும்பான்மை முக்கியமான உள்ளுறுப்புகள் நமது இடுப்பு, மார்பு மற்றும் தலைப் பகுதியில்தான் அமைந்திருக்கின்றன. இவற்றைத் தூண்டி செயல்படுத்துவதே இந்த எளிய பயிற்சியின் நோக்கம். இது மூன்று பகுதியாக செய்ய வேண்டியது. 

தளர்வாய் சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு கவனத்தை சுவாசத்தில் நிறுத்தி, அது இயல்பாய் போவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காற்றை நன்கு உள்ளிழுத்து, வாயினை மெல்ல திறந்து அதன் வழியே வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியே விடும் போது அடித் தொண்டையில் இருந்து மெதுவாகவும், நிதானமாகவும் "அ...அ...அ....அ" என்ற ஒலியை எழுப்பிட வேண்டும். 

இவ்வாறு செய்யும் போது நமது வயிற்றுப் பகுதியில் ஒரு விதமான அதிர்வை உணரமுடியும். இதே போல குறைந்தது ஐந்து முதல் ஆறு தடவைகள் செய்திட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஏற்படும் அதிர்வினால் நமது வயிற்றுப் பகுதியில் உள்ள கல்லீரல், மண்ணீரல், குடல் பகுதி, சிறுநீரகம், கருவறை, சூலகம் போன்ற உறுப்புகள் தூண்டப் படும். வயிற்றுப் பகுதியில் பிரச்சினை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து செய்து வந்தால் நீண்ட கால நோக்கில் நல்ல பலன் கிட்டும்.

மார்பகப் பகுதியில் உள்ள இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளையும் மேலே சொன்னதைப் போன்ற பயிற்சியின் மூலம் தூண்ட இயலும். இந்த பயிற்சியின் போது மேலே சொன்ன அதே முறையில் "அ" க்கு பதிலாக "உ....உ...உ...உ..உ" என உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது தோன்றும் அதிர்வினை நமது மார்பகப் பகுதியில் உணர்ந்திட முடியும். 

மூளை மற்றும் அது சார்ந்த உறுப்புகளான சுரப்பிகளைத் தூண்டுவது இந்த பயிற்சியின் மூன்றாவது கட்டம். இந்த பயிற்சியின் போது இரண்டு விரல்களினால் காது மடலை மெதுவாய் மூடிக் கொண்டு, சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடும் போது வாயை மூடி, மூக்கின் வழியேதான் விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது "ம்...ம்...ம்...ம்...ம்" என்கிற ஓலியினை எழுப்பிட வேண்டும். இப்போது அதிர்வுகளை நமது மூளை பகுதியில் உணர முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் மூளையை, அதன் சுரப்பிகளை புத்துணர்ச்சியுடன் செயல்படுத்திட முடியும்.

மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் இந்த எளிய பயிற்சியினை தொடர்ந்து செய்வதன் மூலம் நீண்டகால தீர்வுகளை பெற முடியும். தகுதியுடைய வல்லுனர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் பயில்வதும் பழகுவதும் சிறப்பு.

இவை தவிர, முத்திரைகள் எனப்படும் விரல்களை ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொள்வதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தினை பேண முடியும். இந்த முத்திரைகளை யாரும் பழகலாம். அவை பற்றி விரிவாகவே முன்னர் தொடராய் பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளோர் இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம்.

வாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பது முழுமையான உடல் நலத்திற்கானது. அவற்றை தன்முனைப்புடன் கூடிய தொடர் முயற்சியாக பழகி வந்தால் மட்டுமே பலன் தரக்கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். 

இனி வரும் பதிவுகளில் மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கு. உடற் பயிற்சியும், தீர்வும்!

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு மருந்துகள்தானே உடனடித் தீர்வாக இருக்கும், உணவும், உடற் பயிற்சியும் எப்படி தீர்வாக அமையமுடியும் என்கிற கேள்வி இன்னேரம் உங்களுக்குள் எழுந்திருக்கும்.

மருந்துகள் உடனடித் தீர்வுகளுக்கு உதவினாலும் கூட, அவை தற்காலிகமானவையே. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உடற்பயிற்சியினால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர, நீண்டகாலத் தீர்வுகள் கிடைக்கும் என்பதால் அவற்றை முதலில் பகிர நினைத்தேன். தொடரின் நெடுகே சித்தர்கள் அருளிய மருந்துகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

மாதவிலக்கு சுழற்சியில் மூன்று முக்கிய உறுப்புகளின் செயல்திறனும், அவற்றின் ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது. அவை முறையே, பிறப்பு உறுப்புகளின் செயல்பாட்டினை நெறிப் படுத்தும் பிட்யூட்டரி சுரப்பி, கரு முட்டையை உருவாக்கி முதிரச் செய்யும் சூலகம், கருமுட்டையை உள் வாங்கி கருத்தரிப்பை செயல்படுத்தும் கருவறை.

இவற்றின் இயல்பான செயல்பாடுகளில் ஏற்றத் தாழ்வுகள் நிகழும் போதே மாதவிலக்கு சுழற்சியில் பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே இந்த மூன்று உறுப்புகளின் செயல்பாட்டினைத்  தூண்டி அவற்றை நெறிப் படுத்தும் உடற் பயிற்சிகளை மட்டும் இங்கே கவனத்தில் கொள்வோம்.

இந்த இடத்தில் குண்டலினி யோகம் பற்றி ஒரு சில வரிகள் அவசியமாகிறது.நமது உடலானது 7 சக்கரங்களினாலும், 72,000 நாடிகளினாலும் பின்னப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு சக்கரமும் குறிப்பிட்ட சில உடல் உறுப்புக்களின் செயல்பாட்டினை கட்டுப் படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த தகவல்களை எல்லாம் முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். தேவை உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பில் சென்று தகவல்களை அறியலாம்.

குண்டலினி யோகமும், உடல் நலமும்..

இதன் படி பிட்யூட்டரி சுரப்பியானது ஆக்ஞா சக்கரத்தினாலும், பிறப்புறுப்புகளான சூலகம் மற்றும் கருவறை சுவாதிட்டான சக்கரத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இந்த சக்கரங்களை மலரச் செய்வதன் மூலம் இந்த உறுப்புகளின் செயல்பாட்டினை சீராக்கிட முடியும். இது மட்டுமில்லை உடலின் அத்தனை உறுப்புகளின் செயல்பாட்டினையும் ஒரு ஒழுங்கில் கொண்டு வரும் மகத்துவம் குண்டலினி யோகத்திற்கு உண்டு. 

அடிவயிற்று தசைகள், சூலகம், கருவறை, சிறு நீரகம் போன்ற உறுப்புகளை தூண்டி நெறிப்படுத்தும் ஆசனங்களை தொடர்ந்து செய்து வரலாம். குறிப்பாக வஜ்ராசனம், புஜங்காசனம் போன்றவை நல்ல பலன் தரும். இந்த ஆசனங்களை பற்றி அகத்தியர் அருளிய தகவல்களை இந்த இணைப்பில் காணலாம். 

புஜங்காசம், வஜ்ராசனம் செய்யும் முறை..

குண்டலினி யோகம், ஆசனங்கள் என்பவை முறையான வழி காட்டுதலோடும், விடாத முயற்சி மற்றும் பயிற்சி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். எனவே வாய்ப்புள்ளவர்கள் குருவின் வழிகாட்டுதலோடு இவற்றை முயற்சிக்கலாம். 

இவை தவிர பிராணயாமம், முத்திரை பயிற்சிகளின் மூலமும் இந்த உறுப்புகளின் செயல்பாட்டினை மேம்படுத்தி நலமுடன் வாழலாம். எளிய பிராணயாம பயிற்சி மற்றும் முத்திரை விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கு. உணவும், தீர்வும்!

Author: தோழி / Labels: ,

நமது உடல் இயக்கம் என்பது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வரை, அதைப் பற்றி நாம் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் இந்த இயக்க சுழற்சியில் ஏதேனும் இயல்பு மீறுதல் அல்லது மாற்றம் அடையும் போது, நமக்குள் இனம் புரியாத பதற்றமும், பயமும் தொற்றிக் கொள்கிறது. இந்த பதற்றமே பாதி நோயாகி விடுவதை நம்மில் பலரும் உணர்வதே இல்லை.

மாதவிலக்கு சுழற்சியில் ஒழுங்கின்மை, உடல்வலி, மேலதிக குருதிப் போக்கு நிகழும் போது அதற்கான காரணம் தெரியாததினால், ஏற்படும் பயமும், பதட்டமுமே பலருக்கு கூடுதல் உடல், உள்ள நலிவை ஏற்படுத்துகிறது. இதன் பொருட்டே மாதவிலக்கின் அனைத்து கூறுகளையும் பற்றி எழுதிட நேர்ந்தது.

இப்போது மாதவிலக்கு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்த தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இனி அவற்றை தீர்க்கும் வழிவகைகளை பற்றி பார்ப்போம். இந்த தொடரில் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். இந்தத் தகவல்களைக் கொண்டு முறையான வல்லுனர்கள், மருத்துவர்களின் உதவியோடு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றிட வேண்டுகிறேன்.

உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சினைக்கும் இரண்டு வகையான தீர்வுகள் இருக்கின்ற்ன.  முதலாவது வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள், மற்றது மருந்துகள் சார்ந்த தீர்வுகள் 

அதென்ன வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள்?

நமது எண்ணம், செயல், சிந்தனைகளே, நமது வெளிப் புற அடையாளங்களையும், உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது உடல் இயங்கியலின் செயற்பாட்டை தீர்மானித்து ஒழுங்கு செய்வதும் நம்மில் இருந்தே துவங்குகிறது. இதனையே நமது முன்னோர்களும் காலம் காலமாய் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

எளிமையாய் சொல்வதென்றால் “இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்வு” என்பதே நம்முடைய அத்தனை பிரச்சினைகளுக்கும் நீண்ட கால, நிரந்தர தீர்வாய் அமையும். ஆனால் நிதர்சனத்தில் நாம் அனைவருமே இயல்புக்கு மீறிய வாழ்வியல் சூழலில் வாழ்ந்திடும் கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை உணர்ந்து இயன்றவரை இயற்கையோடு இணைந்து வாழும் முயற்சியினை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

நமது உடல் என்பது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து மூலங்களினால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்த ஐந்து மூலங்களின் அளவும், விகிதமும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் மாறுபடுகிறது. இதனை உணர்ந்து நமது உடலின் தன்மைக்கேற்ற உணவு மற்றும் வாழ்வியல் சூழலை அமைத்துக் கொள்வதே ஆரோக்கிய வாழ்விற்கான நீண்ட கால தீர்வாக அமையும்.

நமது முன்னோர்கள் உட்கொண்ட உணவு மற்றும் உடல் பயிற்சிகளினால்தான் அவர்கள் நோயற்ற நெடு வாழ்வு வாழ்ந்திருக்கின்றனர். இதைப் பற்றிய தகவல்களை முன்னரே இங்கு தொடராக பகிர்ந்திருக்கிறேன். அந்தத் தகவல்களை மீண்டும் இங்கே பகிர்வது அவசியம் என்பதால் இணைப்புகளை கீழே தந்திருக்கிறேன்.

தமிழர்கள் உணவும், உடல் நலமும்

மேலதிக விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கும், வெள்ளை படுதலும்

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கு தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கு சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்ந்து கொள்வதுதான் இந்தத் தொடரின் முதன்மையான நோக்கம் என்றாலும் கூட, இது ஒரு நோய், பெண்களுக்கான சாபம், தீராத துன்பம், தீட்டு என காலம் காலமாய் பலவாகிலும் கட்டமைக்கப் பட்ட கருத்தாக்கங்களை களைந்து, மாதவிலக்கு என்பது சாதாரணமான உடல் இயங்கியல் நிகழ்வு என்பதனை அனைவரும் உணர்ந்திட வேண்டியே இத்தனை நீளமான அடிப்படை விளக்கங்களை எழுதிட நேர்ந்தது.

சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்வதற்கு முன்னர், இரண்டு நண்பர்கள் மின்னஞ்சலில் எழுப்பியிருந்த கேள்விகளுக்கான பதிலாய் இன்றைய பதிவு அமைகிறது. அந்த கேள்வி இதுதான்....வெள்ளை படுதல் எனப்படும் வெள்ளை ஒழுக்கும், மாதவிலக்கும் ஒன்றா?, வெவ்வேறென்றால் வெள்ளைப் படுதல் என்பது என்ன?.

எப்படி நமது கண்கள், காதுகள், வாய், ஆசனவாய் போன்ற உறுப்புகள் உடலின் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கின்றனவோ, அதைப் போலவே நமது பிறப்பு உறுப்பும் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கிறது.

நமது வாயில் உமிழ்நீர் சுரந்து வாயின் உட்புற அமைப்பினை பராமரிப்பது போல, நமது பிறப்பு உறுப்பும் இயல்பாகவே ஒரு நீர்மத்தை சுரந்து பிறப்புறுப்புகளை பராமரிக்கிறது. இந்த நீர்மம் நிறமற்றதாகவும், மணமற்றதாகவும் இருக்கும். நாளொன்றிற்கு நான்கு மில்லி லிட்டர் வரை சுரக்கும். இது எல்லா வயதினருக்கும் இயல்பாக நிகழக் கூடிய ஒன்றுதான். எனவே மாதவிலக்கும், வெள்ளைப் படுதலும் அடிப்படையில் வெவ்வேறானவை. 

எனினும், உடல் நல பாதிப்புகள், உடல் இயங்கியலில் ஏற்படும் மாற்றங்கள், நோய்த் தொற்று பாதிப்பு போன்றவைகளால் இந்த நீர்மம் இயல்பைவிட அதிகமா வெளியேறும். இந்த நீர்மம் வழவழப்பாகவும், வெள்ளை, மஞ்சள், பச்சை நிறத்திலும், குருதி கலந்த நிலையிலும் வெளியேறும். தீவிரமான நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு மிகுந்த துர் நாற்றத்துடனும் நுரைத்த நீர்மமாகவும், தக்கை தக்கையாவும், இறுகிய நீர்மமாகவும் வெளியேறும். இதனையே வெள்ளை படுதல் என்கிறோம்.

மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னர், மாதவிலக்கு முடிந்த பின்னர், கருத்தரித்த சமயங்களில், குழந்தை பேற்றிற்கு பின்னர், கருத்தடை சாதனங்கள், மருந்துகளை உட்கொள்ளும் போது, நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் போது, முறையற்ற பாலியல் பழக்கங்கள் என பல்வேறு காரணங்களினால் இத்தகைய வெள்ளை ஒழுக்கு ஏற்படுகிறது.

மொத்தத்தில் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்த் தொற்று, மற்றும் உடலின் அமில, காரத் தன்மையில் ஏற்றத்தாழ்வு ஆகியவையே அதிகமான வெள்ளை போக்கினை உருவாக்குகின்றன. மேலும் ஒருவரின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் இது மாறுபடுகிறது. 

முறையான உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, அழுத்தங்கள் இல்லாத வாழ்வியல் சூழல் போன்றவையே இதற்கு நீண்டகால தீர்வாக அமையும். எனினும் ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஆரம்ப நிலையில் மருத்துவம் செய்வதன் மூலம் எளிதில் குணப்படுத்தி விடக் கூடிய ஒன்றுதான் வெள்ளை படுதல்.

இனி வரும் பதிவுகளில் மாதவிலக்கு பிரச்சினைகளை எதிர்கொள்வது மற்றும் சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகள் குறித்து பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாத விலக்கும், நோய்களும்!

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கின் போது ஏற்படும் வலி மற்றும் குருதிப் போக்கு போன்றவை இயல்பான உடல் இயங்கியல் நிகழ்வுதான் என்றாலும் கூட, சமயங்களில் தாங்க இயலாத வலியும், கட்டுப் பாடில்லாத குருதிப் போக்கும் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் இவை மாதவிலக்கு தொடர்பான வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

இவற்றில் முதன்மையானது கிருமித் தொற்றினால் ஏற்படும் அழற்சி (Inflammation). கருவறையின் வாயிலில், கருவறையின் உட்புறத்தில் இத்தகைய அழற்சிகள் ஏற்படலாம். இதனால் இந்த உறுப்புகள் வீங்கி, புண்ணாகும் போது ஆரம்பத்தில் வலியையும், பின்னர் வலியுடன் கூடிய குருதிப் போக்கினையும் உருவாக்கும். மேலும் முறையற்ற உடல் உறவினாலும் பாலியல் தொடர்பான கிருமித் தொற்றுகளினாலும் நோய் உண்டாகும்.இவ்வாறு உருவாகும் நோய்களை  ”Pelvic inflammatory disease” என்கின்றனர்.

இவை தவிர கருவறையின் உட்புறச் சுவற்றில் “Fibroids” எனப்படும் தசைநார் கட்டிகள் வளரும் வாய்ப்பு உள்ளது. இதனாலும் அதிக அளவில் குருதிப் போக்கு உண்டாகும். இவற்றின் தன்மை மற்றும் அளவினைப் பொறுத்து அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றிவிடலாம்.

பெண்களின் சூலகத்தில் முதிர்வடையாத கரு முட்டைகள் நிறைந்திருக்கும். இவற்றை வளர்ச்சியடையச் செய்யும் இயக்க நீர்மமான Follicle-stimulating hormone தேவையை விட குறைவாக சுரக்குமானால் இந்த கருமுட்டைகள் வளராமல் சூலகத்தில் தேங்கிவிடும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாது போகும். இத்தகைய பெண்களுக்கு உடல் எடையும் அதிகரிக்கும். வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களில் கணிசமானவர்கள் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாய் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

மாதவிலக்கு சுழற்சியில் கருமுட்டையை ஏந்தி பாதுகாத்திட கருவறையின் உட்புறத்தில் பஞ்சு போன்ற கோழைப் படலம் உருவாகி பின் அழியும் என பார்த்தோம். சிலருக்கு கருவறையின் வெளிப்புறத்திலும் இத்தகைய கோழைப் படலம் உருவாகி அழியும். இதனை புற கருவறை வளர்ச்சி “Endometriosis” என்கிறோம். இத்தகையவர்களுக்கும் கடுமையான வலியுடன், குருதிப் போக்கும் அதிகமாய் இருக்கும். முறையான மருத்துவ ஆலோசனையின் பேரில் இதற்கான தீர்வுகளை காணலாம்.

தற்போதைய அவசரயுகத்தில் தங்களுடைய தேவைக்காக மாதவிலக்கினை தள்ளிப் போடும் மருந்துகளை சிலர் எடுத்துக் கொள்கின்ற்னர். அவர்களுக்கும் மாதவிலக்கின் போது மேற்சொன்ன பிரச்சினைகள் வரும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதினாலும் கடுமையான உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது.

இவை தவிர சூலகத்தில் உருவாகும் நீர்ம கட்டிகள், முழுமையாக வளர்ச்சியடையாத கருவறை, உடல் சுத்தம், வாழ்வியல் சூழல், உளவியல் கூறுகள் போன்றவைகளும் மாதவிலக்கு சுழற்சி தொடர்பான உபாதைகளுக்கு காரணமாகின்றன. இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பெரும்பான்மையான பெண்களிடத்தில் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை.இயல்பான உடல் இயங்கியல் நிகழ்வான மாதவிலக்கில் ஏற்படும் குறைபாடுகளை உரிய சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். அதற்கு தற்போதைய நவீன மருத்துவம் பல்வேறு தீர்வுகளை முன் வைக்கின்றன. எனினும் நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே இந்த தொடரின் நோக்கம் என்பதனால் இனி வரும் நாட்களில் சித்தர் பெருமக்கள் இது தொடர்பில் அருளிய சில தீர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாத விலக்கும், உடல் உபாதைகளும்.

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கு என்பது பெண்கள் பருவம் எய்திய நாள் துவங்கி நாற்பத்தி ஐந்து முதல் ஐம்பது வயது வரையில் தொடரும் ஒரு உடல் இயங்கியல் நிகழ்வு. மூளையில் உள்ள Anterior pituitary gland எனும் சுரப்பியினால் சுரக்கப் படும் இரண்டு இயக்கு நீர்மங்களான Follicle Stimulating Hormone(FSH), Luteinizing Hormone(LH) ஆகியவையே மாதவிலக்கு சுழற்சியினை முறைப்படுத்துகின்றன. 

இவற்றில் Follicle Stimulating Hormone(FSH) எனும் இயக்கநீர் சூலகத்தில் கருமுட்டையை உருவாக்கி வளர்க்கும் வேலையைத் தூண்டுகிறது. Luteinizing Hormone(LH) எனும் இயக்க நீர் முதிர்ந்த கருமுட்டையை சூலகத்தில் இருந்து வெளித் தள்ளி கருவறைக்கு செல்லும் பாதைக்கு நகர்த்தும் வேலையினை தூண்டுகிறது.

இந்த நீர்மங்களின் சுரப்பு விகிதம் ஒன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் இருக்கும் வரை மாதவிலக்கு சுழற்சி சுமூகமாய் நடந்து கொண்டிருக்கும். மாறாக இவற்றின் விகிதங்கள் மாறுபட்டால் அவை மாதவிலக்கு சுழற்சி மற்றும் கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கும், மேலும் அவை தொடர்பான வேறு சில நோய்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக அமைந்து விடுகிறது. 

நம்மில் பெருவாரியான பெண்களுக்கு சுமூகமான மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னரே உடல் மற்றும் உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை பெண்கள்எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இதனை ”Premenstrual syndrome” (PMS) என்கின்றனர். சமீபத்தைய ஆய்வறிக்கை ஒன்றின் படி இந்த காலகட்டத்தில் பெண்கள் 200 வகையான உடல் உபாதைகளை எதிர் கொள்கிறார்களாம்.இதையெல்லாம் உணர்ந்துதானோ என்னவோ நமது முன்னோர்கள் இந்த நாட்களில் பெண்களுக்கு  பூரண ஓய்வினை அளித்தனர்.

விரக்தி, கோபம், எரிச்சல், படபடப்பு, ஆத்திரம், அழுகை, சோம்பல் போன்றவைகளை உளவியல் பாதிப்புகளாக கூறலாம். அடி வயிற்றில் வலி, மார்பகங்கள் கனத்து வலி ஏற்படுதல், தலைவலி,வாந்தி,வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு என உடலியல் உபாதைகளின் பட்டியல் நீள்கிறது.

மாதவிலக்கின் போது பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சிரமம் குருதிப் போக்கு. நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு 50 முதல் 80 மில்லி குருதி ஒரு நாளில் வெளியேறும். துவக்கத்தில் அதிகமாய் இருக்கும் இந்த குருதிப் போக்கு அடுத்தடுத்த நாட்களில் குறைந்து விடும். ஆனால் சிலருக்கு குருதிப் போக்கு மிக அதிகமாகவும், சிலருக்கு குருதிப் போக்கே இல்லாமலும் இருக்கும். 

கருப்பையின் வாய்(cervix) சிறியதாக இருப்பவர்களுக்கு சூதகம் வெளியேறும் போது கடும் வலி ஏற்படும். மேலும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிவதாலும் வலி உண்டாகும். சிலருக்கு கருப்பையானது வழமையான நிலையில் இருந்து மாறி அமைந்திருக்கும், அத்தகையவர்களுக்கும் அதிக வலி உண்டாகும். கருமுட்டை சிதைந்து வெளியேறும் போதும் வலியேற்படும்.

இத்தகைய வலிகளை தவிர்க்க தற்போது பல்வேறு மருந்து மாத்திரைகள் உள்ளன. எனினும் இயன்றவரை அவற்றை தவிர்த்து விடுதல் நலம். இந்த நாட்களில் உணவில் இனிப்பை முற்றிலுமாக தவிர்த்துவிட்டால் வலியின் தாக்கம் குறைவாக இருக்கும்.மேலும் வென்னீர் ஒத்தடம் கொடுப்பதும் பலனைத் தரும். இது தொடர்பில் சித்தர்கள் அருளிய தீர்வுகளை தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன்.

இயல்பான சுழற்சியில் மாதவிலக்கு ஆகாதவர்கள், தாங்க இயலாத வலி மற்றும் உடல் உபாதைகளை எதிர் கொள்வோர், முப்பது வயதைத் தாண்டியவர்கள் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ளவது அவசியம்.ஏனெனில் இத்தகைய உபாதைகள் வேறு சில நோய்களின் அறிகுறியாக இருக்கும் வாய்ப்புள்ளது. துவக்க நிலையில் மருத்துவரை அணுகுவது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும். மாதவிலக்கு தொடர்பில் பெண்கள் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் நோய்களைப் பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கு, ஏன்?, எதனால்?, எப்படி?

Author: தோழி / Labels: ,

மனித உடலின் வளர்ச்சி மற்றும் சீரான செயல்பாட்டினை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில் சுரப்பிகளின் பங்கு முக்கியமானது. இவற்றால் சுரக்கப் படும் நீர்மங்களே (Hormones) உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் “ஹைப்போதாலமஸ்” (hypothalamus) என்னும் சுரப்பிதான் மனிதனின் இனப் பெருக்க செயல்களை கண்காணித்து செயல்படுத்துகிறது.

ஹைப்போதாலமஸ் சுரப்பியினால் சுரக்கப்படும் இயக்கு நீர்மமான Gonadotropin releasing hormone (gnrh) சுரந்தவுடன், இதன் கட்டுப் பாட்டில் இருக்கும் Anterior pituitary gland எனும் சுரப்பி விழித்துக் கொள்ளும். இந்த சுரப்பி தன் பங்கிற்கு இரண்டு இயக்கு நீர்மங்களை சுரக்கிறன்றது. அவை முறையே Follicle Stimulating Hormone(FSH), Luteinizing Hormone(LH) என்பனவாகும். இந்த இரண்டு இயக்கு நீர்மங்களே கருமுட்டையை உற்பத்தி செய்யும் சூலகங்களை தூண்டுகிறது. 

இதே சமயத்தில் கருவறையின் உட்புறத் தோல் கோழைப் படிவமாக தடிக்கத் துவங்கும், இந்த செயல் பதினைந்து நாட்கள் வரை நீடிக்கும். அரை செண்ட்டி மீட்டர் அளவு தடிமனான இந்த கோழைப் படலத்திற்கு அடியில் இருக்கும் நுண்ணிய குருதி நாளங்களில் குருதி பாய்ந்து நிரம்பும். ஒரு வேளை கரு தரித்து விட்டால் அந்த கருமுட்டையை பாதுகாக்கவும், வளரச் செய்யவுமே இந்த ஏற்பாட்டினை கருவறை செய்கிறது.

குறிப்பிட்ட நாட்களுக்குள் கருத்தரிப்பு நிகழாவிட்டால் இந்த கருவறையின் உட்புறத்தில் உருவாகி இருந்த பஞ்சு மெத்தை போன்ற அமைப்பு துண்டு துண்டாக பிய்ந்து பிறப்பு உறுப்பின் வழியே வெளிப்பட ஆரம்பிக்கும். அப்போது இந்த கோழைப் படலத்தின் கீழே உள்ள நுண்ணிய குருதிநாளங்கள் உடைந்து அதில் நிரம்பியிருந்த குருதியும் வெளியேறும். இவ்வாறு வெளியேறும் கழிவை “சூதகம்” என்கிறோம்.

இது இயல்பான ஒரு உடல் இயங்கியல் நிகழ்வு. ஆனால் எல்லாப் பெண்களுக்கும் இத்தகைய மாதவிலக்கு சுழற்சி இயல்பாக நடப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மேலும் இந்த மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னதாகவும், மாதவிலக்கின் போதும் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்தத் தகவல்களை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கு என்பது...

Author: தோழி / Labels: ,

நமது உடலின் கழிவுகள் எப்படி வியர்வையாக, சிறுநீராய், மலமாய் வெளியேறுகிறதோ அப்படியான ஒன்றுதான் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு. அதைத் தாண்டிய முக்கியத்துவம் எதுவும் இந்த நிகழ்வுக்கு இல்லை. பெண்ணாய் பிறந்த எல்லோருக்கும் இது இயல்பான ஒன்றுதான். ஆனால் இதைப் பற்றிய தெளிவுகளை உருவாக்குவதற்குப் பதிலாக தவறான எண்ணப் போக்குகளே காலம் காலமாய் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

மாதவிலக்காகும் பெண்களுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியாக நிறைய ஓய்வு தேவைப் படுகிறது. இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் அந்த நாட்களில் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தனர். நல்ல ஓய்வும், உடல் சுத்தமும் தேவை என்பதன் பொருட்டே மாதவிலக்கு என்கிற பெயர் வழங்கியது.

பெண்களின் உடல் இயங்கியலில் ஏற்படும் இந்த இயல்பான நிகழ்வினைக் குறித்த எனது புரிதல்களையும், அதற்கு நம் சித்தர் பெருமக்கள் அருளிய சில தெளிவுகளையும் பொதுவில் வைப்பதே இந்த குறுந் தொடரின் நோக்கம்.

பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டையும், அதனை பாதுகாக்க வேண்டி உருவான மற்ற நீர்மங்களும் சிதைந்து பிறப்பு உறுப்பின் வழியே குருதிப்போக்கு ஏற்படுவதையே மாத விலக்கு என்கிறோம். இத்தகைய போக்கு குறிப்பிட்ட நபரின் உடல் அமைப்பினைப் பொறுத்து மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். ஒரு நாளில் குறைந்தது ஐம்பது மில்லி லிட்டர் முதல் 80 மில்லி லிட்டர் ரத்தம் இவ்வாறு வெளியேறும். இவை நம் உடலின் கெட்ட ரத்தம் என்றொரு தவறான நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.

பருவம் எய்திய பெண்களுக்கு இந்த மாதவிலக்கு 21 நாள் முதல் 45 நாட்களுக்குள் நிகழும். இது அவ்வந்த நபரின் வயது, உடல் அமைப்பு, அவர் வாழும் சூழல் மற்றும் அவர்களுடைய உளவியல் போன்ற கூறுகளைப் பொறுத்து முன் பின் நிகழலாம். மேற்சொன்ன காரணங்களினால் மிகக் குறைவான விழுக்காடு பெண்களுக்கு மட்டுமே சரியான சமயத்தில் அதாவது 21 நாட்களில் மாதவிலக்கு உண்டாகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

மாதவிலக்கு சுழற்சி என்பது என்ன?, அது எதனால் நடை பெறுகிறது? எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்கும் அசைபடம் ஒன்றினை இணைத்திருக்கிறேன்.சுருக்கமாக சொல்வதென்றால் பெண்ணின் சூலகத்தில் உருவான கருமுட்டையானது வளர்ச்சி அடைந்து முதிர்ந்த நிலையில் கருப் பையில் வந்து சேர்கிறது. இவ்வாறு வந்த கருமுட்டையை பாதுகாக்க வேண்டி கருப்பையானது சில நீர்மங்களை உருவாக்கி கருமுட்டையை பாதுகாக்கிறது. மேலும் கருவறையின் சுவர்கள் தடித்து கருமுட்டையின் வளர்ச்சிக்குத் தேவையான குருதியை நிரப்பி வைக்கிறது.

இந்த காலகட்டத்தில் கருத் தரிப்பு நிகழாவிட்டால், அந்த கருமுட்டையானது சிதைந்து அழிந்து கருப்பை உருவாக்கிய நீர்மங்களோடு சேர்ந்து குருதியாக பிறப்பு உறுப்பின் வழியே வெளியேறுகிறது. இந்த நிகழ்வு சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனையே மாதவிலக்கு சுழற்சி என்கிறோம்.

மேலும் விவரங்களோடு அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..சூலை நோய் தீர்க்கும் வல்லாதி தைலம்

Author: தோழி / Labels: ,

வல்லாதி என்பது சேங்கொட்டையைக் குறிக்கும். இதன் தாவரவியல் பெயர் “Semecarpus anacardium” என்பதாகும். இது இயல்பில் நச்சுத் தன்மை கொண்டது. இதனை முதன்மையான மூலப் பொருளாகக் கொண்டு பல மருந்துகளை சித்த மருத்துவம் முன் வைக்கிறது. இதன் பொருட்டே பல்வேறு சித்தர்களும் வல்லாதியின் பெயரில் நூல்களே அருளியிருக்கின்றனர்.

அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்ற நூலில் சேங்கொட்டையினை தைலமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம். 

தானான வல்லாதி தைலமொன்று
தயவாகச் சேங்கொட்டை அழிஞ்சிக்கொட்டை
மானான பூவத்திக் கொட்டையொடு
மைந்தனே யெட்டியுட கொட்டைதானும்
வானான வேம்பின் புண்ணாக்குக்கூட
வகையான சிவனது வேம்புமேதான்
கானான இவையெல்லாஞ் சரியெடையாய்த்
கனிவான கன்னியிட சாற்றில்போடே

புலிப்பாணி சித்தர்.

போடேநீ யொருநாள்தான் னூறவைத்துப்
பொங்கமுடனிரு நாள்தா னெடுத்துலர்த்தி
ஆடேநீ குழித்தைலமாக வாங்கி
அப்பனே காசெடைதான் கொண்டாயானால்
நாடேநீ பனைவெல்லந் தன்னிற்கொள்ளு
நாயகனே சூலைபதினெட்டுந் தீரும்
வாகேநீ போகாமல் மண்டலங்கால்கொள்ள
மைந்தா பத்தியந் தானொன்றாகாதே

புலிப்பாணி சித்தர்.

சேங்கொட்டை, அழிஞ்சில் கொட்டை, பூவந்திக் கொட்டை, எட்டிக் கொட்டை, வேப்பம் புண்ணாக்கு, சிவனார் வேம்பு ஆகியவைகளை சம அளவில் எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு அது மூழ்கும் வரை கற்றாழை சாறு விட்டு ஒரு நாள் முழுதும் ஊறவைத்து, மறுநாள் எடுத்து நன்கு உலரவைத்து பின்னர் அதில் இருந்து குழித்தைலம் இறக்கி எடுத்துச் சேமித்துக் கொள்ள வேண்டுமாம். (குழித்தைலம் பற்றிய மேலதிக விவரங்களை இந்த இணைப்பில் காணலாம்.) இதுவே வல்லாதி தைலம்.

தினமும் இந்த தைலத்தில் இருந்து ஒரு பண எடை அளவு எடுத்து காலை அல்லது மாலை என ஏதேனும் ஒரு வேளை உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் உண்டு வந்தால் பதினெட்டு வகையான சூலை நோய்கள் நீங்கும் என்கிறார்.

இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..வாழ்த்துக்களும்..! வணக்கங்களும்..!!

Author: தோழி / Labels:

இந்த சித்தர்கள் இராச்சியம் வலைத்தளம் அழகாகவும் சிறப்பாகவும் மிளிர பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருபவரும், தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளத்தை ஸ்தாபித்து அதன் மூலம் ஆயிரக் கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரும், என் இனிய நண்பருமான திரு. எம். சரவண குமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்.

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை ஸ்தாபித்தவர். அந்தத்தளம் தனது ஆயிரம் பதிவுகளைக் கடந்து சாதனையும் படைத்தது.

பங்கு வணிகத்தில் ஈடு பட்டுவரும் ஆயிரக் கணக்கானவர்களுக்கு உதவி வரும் திரு. எம். சரவண குமார் அவர்கள் சீரும், சிறப்புடனும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல குருவருளை வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.


முருகனின் பெயர்கொண்டு
முனைப்போடு உழைப்பவரே,
பங்குச் சந்தையிலும்
தமிழைப் பவனிவர வைத்தவரே!

எம் வயதிற்கொப்ப
உம் அனுபவங்களையும்
அனுபவங்களின் அறிவையும்
பதிவுகளில் பகிர்ந்தவரே!

இணையம் தந்த இமயமே!
துணையாய் இருந்து
உயர வழிகாட்டிடும்
உற்ற தோழரே!

முதல் சந்திப்பிலேயே
பெரியோர் முதல் சிறியோர் வரை
சரிசமனாய் மதிக்கும் - உந்தன்
உயரிய பண்பு கண்டு
வியந்து தான் போனேன்..!

கைபிடித்து நடக்கும் குழந்தையாய்
கவரில் போகும் கடிதமாய்
இலட்சியம் நோக்கி
நடைபோட - பலருக்கு
பாதை போட்டுத்தந்து
வாழ வழிகாட்டி
வளர உரம் ஊட்டி
அழுத்திச் சொல்லித்தந்த
"ஆசானே"

இவ்வினிய நன்னாளாம்
உங்கள் ஜனன நாளில்
குருவருளை நான் வேண்டுகிறேன்!
சிந்தை, எண்ணம்,
சொல், செயல்,
குடும்பம்,
வாழ்க்கை,
தொழில்
என அனைத்திலுமே
மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும்
நிம்மதியுடனும்
தொடர்ந்து
வெற்றி நடை போட
குருவருள் என்றும் உமக்கு
குறைவின்றிக் கிடைக்கட்டும்!
வாழ்த்தி வணங்குகிறேன்!தேகநலம் தரும் வெள்ளி பற்பம்.

Author: தோழி / Labels: , ,

சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்தோ, ஊதியோ வெளுக்குபடிச் செய்து எடுத்துக் கொள்வது பற்பம் அல்லது பஸ்பம் எனப்படும். உலோகங்களை பற்பமாக்கி அவற்றை மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் சித்தரியலில் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்திலும் கூட ஏழு வகையான பற்பங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. 

அந்த வகையில் அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்ற நூலில் வெள்ளியைப் பற்பமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம். இந்த பற்பம் "ரசிதம்" எனப் படுகிறது. 

செய்யவே இன்னம் ஒரு பற்பம் கேளு
செயமாக வூதசட்டி வெளி தன்னை
துய்யதாய் குகையில் இட்டு உருகும்போது
துரையான வெளியிடை மகிழம்பூச்சார்
அய்யனே இரண்டு இடை விட்டு இறக்கி
அப்பனே வெய்யது மடிந்து போகும்
பொய்யல்ல அப்பொடியை முன்சாற்றாலே
புகழாக அரைத்து பில்லை உலர்த்திக் கேளே.

உலர்த்தியதோர் வில்லைக்கு கவசம் கேளே
உண்மையுடன் முட்கா வேளை வேரைத் தானும்
பிலக்கவதை முன்னீரால் அரைத்துக் கட்டி
பிரியமுடன் குகையில் இட்டுச் சில்லும் மூடி
உலர்த்தி நன்றாய் மண்சீலை வலுவாய்ச் செய்து
உள்ளபடி நூறெருவில் புடத்தைப் போடு
பெலத்ததோர் ரசிதம் என்ற வெள்ளி பற்பம்
பெருமையுள்ள வெண்ணையிலே கொடுத்துப் பாரே.

கொடுத்து மிகப் பார்க்கையிலே தீரும் நோய்கேள்
குணம் இல்லாக் காசமொடு இரத்த காசம்
அடுத்து நின்ற மேகம் சயம் மந்தகாசம்
அப்பனே திப்பிலியலகலும் சொன்னோம்
தெடுத்து மிகப் புளி புகையைத் தவிர்க்க வேணும்
சுயமாக வேளைக்குப் பணவிடையி பாதி
கடுத்து நின்ற பவுத்திரமும் மூலைச் சூலை
காணாமல் ஓடுமடா கண்டு பாரே.

வெள்ளியின் எடைக்கு சரி சமனாக மகிழம் பூச்சாறு விட்டு உருக்க வேண்டுமாம். பின்னர் உருக்கிய வெள்ளியை பொடியாய் ராவி மகிழம்பூச் சாறுவிட்டு அரைத்து வில்லைகளாக்கி உலர்த்தி சேமித்துக் கொள்ள வேண்டுமாம். முட்கா வேளை வேரினை எடுத்து மகிழம்பூ சாறுவிட்டு அரைத்து முன்னர் உலர்த்தி சேமித்த வில்லைக்கு கவசமாய் இட்டு மேலே சீலைமண் செய்து நன்றாக காயவைத்து,  நூறு வறட்டிகளைக் கொண்டு புடம் இட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். (புடங்கள் பற்றிய எனது முந்தைய பதிவில் நூறு வறட்டிப் புடம் பற்றிய தகவல் இருக்கிறது.) இப்படி செய்தால் அந்த வில்லைகள் நீறி பற்பம் ஆகியிருக்குமாம். இதுவே "ரசிதம்" என்று அழைக்கப்படும் வெள்ளி பற்பம்.

இப்படி தயார் செய்யப் பட்ட வெள்ளி பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு அரைப்பண எடை அளவில் எடுத்து வெண்ணையில் குழைத்துக் காலையும், மாலையும் தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர காசம், இரத்த காசம், மேகம், சயம், மந்த காசம் ஆகியவை குணமாகும்.

இந்த வெள்ளி பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு அரைப்பண எடை அளவில் எடுத்து சம அளவு திப்பிலியுடன் கலந்து தினமும் ஒரு வேளையாக தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர பவுத்திரம், மூலச் சூடு ஆகியவை நீங்கும் என்கிறார்.

பத்தியமாக மருந்துண்ணும் நாட்களில் புளி, புகை போன்றவைகளும் தவிர்க்க வேண்டுமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..குழந்தைப் பேறு!... அகத்தியரின் தீர்வு!!

Author: தோழி / Labels: , ,

தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு.

ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் ”மலடி”, இது காலம் காலமாய் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறை, தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான ஒன்று. 

தற்போதைய நவீன அலோபதி மருத்துவம் பல தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை செலவு பிடிப்பனவாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு பல தீர்வுகளை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர். அவற்றை தொடர்ச்சியாக பதிவுகளின் ஊடே பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று அகத்தியர் அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியம் 600" என்னும் நூலில் இந்த முறை அருளப் பட்டிருக்கிறது. 

கேளுநீ கெர்ப்பந்தான் வாழ்வதற்கு
கெடியான நன்னாங்கள்ளி வேரு
ஆளவேயரைத்துப் புன்னைக்காய் போலே
ஆவின்வெண்ணெய் பாக்களவு கலந்து
நீளநீகுளித்த முதல் மூன்றுநாளும்
நினைவாகத் தானருந்த கெர்ப்பமுண்டாம்
கோளறவே பத்தியந்தான் புளிபுகையும்
கொள்ளாம லாவின்பால் சோறுமுண்ணே.

அகத்தியர்.

கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நன்னாங்கள்ளி வேரினை அரைத்து புன்னைக் காயளவு எடுத்து அத்துடன் பசுவின் வெண்ணெய் பாக்களவு கலந்து உட்கொண்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்குமாம்.

பத்தியமாக மருந்துண்ணும் மூன்று நாட்களும் புளியும், புகையும் நீக்குவதுடன் சாதத்தில் பசுப்பால் விட்டு சாப்பிடவேண்டும் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!,

தேவையிருப்பவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள்  தேவையுள்ளோருக்கு இந்த தகவலை அறியத் தரலாம்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..