மேக நோய் தீர்க்கும் புங்கம் பூச்சூரணம்

Author: தோழி / Labels: , ,

சித்த மருத்துவத்தில் மருந்துகள் அக மருந்து, புற மருந்துகள் என இரு பெரும் பிரிவுகளில் அமைந்திருக்கின்றன என்பதையும், அதன் வகைகளைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் விரிவாகவே பார்த்திருக்கிறோம். புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் மருந்துகள் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம். அந்த வகையில் அக மருந்துகளில் ஒன்றான சூரணம் பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம். 

சூரணம் என்பது ஒருவகையான மருந்து தயாரிக்கும் முறை. தேவையான மூலிகை சரக்குகளை சுத்தம் செய்து அவற்றை வெயிலில் நன்கு உலர்த்தி அல்லது நெருப்பில் வறுத்து பின்னர் இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கின்றனர். இப்படி சூரணமாக்கிய மருந்தினை நோயாளியின் உடல்நிலை, நோயின் தன்மையை பொறுத்து தண்ணீரிலோ, தேனிலோ, அல்லது வேறேதுவும் வகையிலோ உண்ணக் கொடுப்பர். 

அத்தகைய சூரணம் ஒன்றினை இன்றைய பதிவில் பார்ப்போம். போகர் தனது "போகர் 7000" என்னும் நூலில் இந்த முறையினை விளக்கி இருக்கிறார். 

பாரப்பா மேகம் இருபதுவும்தீரப்
பாடுகிறேன் புங்கம்பூ என்றமூலி
நேரப்பா ஒருபடிப்பூ வாரிவந்து
நேயமாம் ஆய்ந்தெடுத்துப் பண்டத்திலிட்டு
சேரப்பா அடுப்பேற்றி எர்த்துக்கிண்டு
சிறப்பாக ஆவினெய்ப் படிதானொன்று
ஊரப்பா வறுக்குமப்பே கொஞ்சம்கொஞ்சம்
உண்ணஉண்ண பார்த்துமே புரட்டிவாங்கே.

போகர்.

வாங்கியே  ஒருநேரம் வெருகடித்தூள்
மண்டலந்தான் கொண்டிடவே நோயெல்லாம்
ஏங்கியே மேகவகையெல்லாம் ஆரும்
இலவுபட்ட தீப்போல எரிந்துபோகும்
பாங்கியே பத்தியந்தான் பகரக்கேளு
பசிவான புளிப்புகையுந் தள்ளவேண்டும்
ஈக்கியதோர் வாயுவென்ற பதார்த்தம்தள்ளி
இச்சா பத்தியமாக உண்டுதேறே.

போகர்.

ஒருபடி புங்கம் பூவினை எடுத்து, பாகம் பாகமாய்ப் பிரித்து ஒரு பாண்டத்தில் இட்டு வறுத்திட வேண்டுமாம். வறுக்கும் போது ஒரு படி பசு நெய்யினை கொஞ்சம் கொஞ்சமாக வார்த்து பதமாக வறுத்து, இடித்து நன்கு சலித்து எடுத்துச் சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

தினமும் இந்த சூரணத்தில் இருந்து *வெருகடி அளவு எடுத்து காலை அல்லது மாலை என ஏதேனும் ஒரு வேளை உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் இருபது வகையான மேக நோய்கள் நீங்கும் என்கிறார்.

பத்தியமாக மருந்துண்ணும் நாட்களில் புளி, புகை போன்றவற்றை தவிர்ப்பதுடன், உணவில் வாயுப் பதார்த்தங்களையும் நீக்க வேண்டும் என்கிறார்.

ஒரு மண்டலம் - 48 நாட்கள்.

*வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

1 comments:

Thozhirkalam Channel said...

பல அருமையான தகவல்களின் தொகுப்பு தங்களின் வலைதளம்...

வாழ்த்துகள் சகோ...

திரைவிமர்சனம் எழுதலாம் வாங்க - தொழிற்களத்தில் வாசியுங்கள்

Post a Comment