உடலுக்கு வலிமை தரும் சந்தனாதி தைலம்.

Author: தோழி / Labels: ,

எள் + நெய் என்பதே எண்ணெய்யாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர்.  தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் அல்லது தைலம் எனப்படும்.

இவ்வாறு தயார் செய்யப்படும் தைல வகைகளில் ஒன்றான "சந்தனாதி தைலம்" தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பாரப்பா இன்னுமொரு சந்தனாதி
பகருகிறேன் அமுக்குறாவேர் பொடியும்நாழி
சேரப்பா சித்தாமுட்டி பொடியும்நாழி
சிறப்பான கொம்பரக்கு பொடியும்நாழி
நேரப்பா இம்மூன்றும் பதக்குநீரில்
தீயிட்டு நாலொன்றாய்க் குறுக்கிவாங்கி
அரப்பா நல்லெண்ணெய் நாழிவிட்டு
அப்பனே பசுமோர் நாழியூற்றே

மோர்விட்டு நன்னாரியரத்தை முதல்
முகிழ்மதுரஞ் குப்பைகடுகு ரோகிணி
வாரிட்ட கச்சோலந் தேவதாரம்
மஞ்சளொடு மரமஞ்சள்கஸ்தூரி மஞ்சள்
மாரிட்ட பெருங்குரும்பை யமுக்குறாவேர்
மஞ்சிட்டி கெந்தியொடு நாகப்பூவும்
நேரிட்ட வகையொன்று விராகனொன்று
நிறுத்திநீ யாட்டியதைக் கலக்கிக் காய்ச்சே

காச்சப்பா மூன்றுநாள் கொதிக்கச்செய்து
களரவே நாலாநாள் வடித்துமைந்தா
தேச்சப்பா வுடம்பெல்லாம் நசியம்பன்னு
தீராத சுரம்தணியும் முடம்பும்தேறும்.

- அகத்தியர்.

அமுக்குறாவேர்ப் பொடி, சித்தாமுட்டி பொடி, கொம்பரக்கு பொடி இவைகளை வகைக்கு ஒரு நாழி அளவில் எடுத்து ஒரு பாண்டத்தில் இட்டு அத்துடன் ஒரு பதக்கு அளவு நீர் வார்த்து நான்கில் ஒருபங்காகக் காய்ச்சிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அத்துடன் நல்லெண்ணெய் ஒரு நாழி அளவும் பசு மோர் ஒரு நாழி அளவும் சேர்த்துகொள்ள வேண்டுமாம். மேலும் நன்னாரி, அரத்தை, அதிமதுரம், குப்பைமேனி, கடுகுரோகிணி, கச்சோலம், தேவதாரு, மஞ்சள், மரமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், பெருங்குரும்பை, அமுக்குறாவேர், மஞ்சிட்டி, கெந்தி, நாகப்பூ ஆகியவற்றை வகைக்கு விராகன் எடைவீதம் எடுத்து சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டுமாம்.

அந்தக் கலவையினை மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொத்திக்கவைத்து நான்காம் நாள் வடிகட்டி உடல் முழுவதும் சொட்டுச் சொட்டாக விட்டு நன்கு பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும். இப்படி முழுகிவந்தால் தீராத சுரங்கள் நீங்குவதுடன் உடலும் வலிமையடையும் என்கிறார்.

தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி..

arul said...

thanks for sharing

Unknown said...

supper

Post a Comment