மேக நோய் தீர்க்கும் புங்கம் பூச்சூரணம்

Author: தோழி / Labels: , ,

சித்த மருத்துவத்தில் மருந்துகள் அக மருந்து, புற மருந்துகள் என இரு பெரும் பிரிவுகளில் அமைந்திருக்கின்றன என்பதையும், அதன் வகைகளைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் விரிவாகவே பார்த்திருக்கிறோம். புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் மருந்துகள் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம். அந்த வகையில் அக மருந்துகளில் ஒன்றான சூரணம் பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம். 

சூரணம் என்பது ஒருவகையான மருந்து தயாரிக்கும் முறை. தேவையான மூலிகை சரக்குகளை சுத்தம் செய்து அவற்றை வெயிலில் நன்கு உலர்த்தி அல்லது நெருப்பில் வறுத்து பின்னர் இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கின்றனர். இப்படி சூரணமாக்கிய மருந்தினை நோயாளியின் உடல்நிலை, நோயின் தன்மையை பொறுத்து தண்ணீரிலோ, தேனிலோ, அல்லது வேறேதுவும் வகையிலோ உண்ணக் கொடுப்பர். 

அத்தகைய சூரணம் ஒன்றினை இன்றைய பதிவில் பார்ப்போம். போகர் தனது "போகர் 7000" என்னும் நூலில் இந்த முறையினை விளக்கி இருக்கிறார். 

பாரப்பா மேகம் இருபதுவும்தீரப்
பாடுகிறேன் புங்கம்பூ என்றமூலி
நேரப்பா ஒருபடிப்பூ வாரிவந்து
நேயமாம் ஆய்ந்தெடுத்துப் பண்டத்திலிட்டு
சேரப்பா அடுப்பேற்றி எர்த்துக்கிண்டு
சிறப்பாக ஆவினெய்ப் படிதானொன்று
ஊரப்பா வறுக்குமப்பே கொஞ்சம்கொஞ்சம்
உண்ணஉண்ண பார்த்துமே புரட்டிவாங்கே.

போகர்.

வாங்கியே  ஒருநேரம் வெருகடித்தூள்
மண்டலந்தான் கொண்டிடவே நோயெல்லாம்
ஏங்கியே மேகவகையெல்லாம் ஆரும்
இலவுபட்ட தீப்போல எரிந்துபோகும்
பாங்கியே பத்தியந்தான் பகரக்கேளு
பசிவான புளிப்புகையுந் தள்ளவேண்டும்
ஈக்கியதோர் வாயுவென்ற பதார்த்தம்தள்ளி
இச்சா பத்தியமாக உண்டுதேறே.

போகர்.

ஒருபடி புங்கம் பூவினை எடுத்து, பாகம் பாகமாய்ப் பிரித்து ஒரு பாண்டத்தில் இட்டு வறுத்திட வேண்டுமாம். வறுக்கும் போது ஒரு படி பசு நெய்யினை கொஞ்சம் கொஞ்சமாக வார்த்து பதமாக வறுத்து, இடித்து நன்கு சலித்து எடுத்துச் சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

தினமும் இந்த சூரணத்தில் இருந்து *வெருகடி அளவு எடுத்து காலை அல்லது மாலை என ஏதேனும் ஒரு வேளை உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் இருபது வகையான மேக நோய்கள் நீங்கும் என்கிறார்.

பத்தியமாக மருந்துண்ணும் நாட்களில் புளி, புகை போன்றவற்றை தவிர்ப்பதுடன், உணவில் வாயுப் பதார்த்தங்களையும் நீக்க வேண்டும் என்கிறார்.

ஒரு மண்டலம் - 48 நாட்கள்.

*வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..உடலுக்கு வலிமை தரும் சந்தனாதி தைலம்.

Author: தோழி / Labels: ,

எள் + நெய் என்பதே எண்ணெய்யாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர்.  தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் அல்லது தைலம் எனப்படும்.

இவ்வாறு தயார் செய்யப்படும் தைல வகைகளில் ஒன்றான "சந்தனாதி தைலம்" தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பாரப்பா இன்னுமொரு சந்தனாதி
பகருகிறேன் அமுக்குறாவேர் பொடியும்நாழி
சேரப்பா சித்தாமுட்டி பொடியும்நாழி
சிறப்பான கொம்பரக்கு பொடியும்நாழி
நேரப்பா இம்மூன்றும் பதக்குநீரில்
தீயிட்டு நாலொன்றாய்க் குறுக்கிவாங்கி
அரப்பா நல்லெண்ணெய் நாழிவிட்டு
அப்பனே பசுமோர் நாழியூற்றே

மோர்விட்டு நன்னாரியரத்தை முதல்
முகிழ்மதுரஞ் குப்பைகடுகு ரோகிணி
வாரிட்ட கச்சோலந் தேவதாரம்
மஞ்சளொடு மரமஞ்சள்கஸ்தூரி மஞ்சள்
மாரிட்ட பெருங்குரும்பை யமுக்குறாவேர்
மஞ்சிட்டி கெந்தியொடு நாகப்பூவும்
நேரிட்ட வகையொன்று விராகனொன்று
நிறுத்திநீ யாட்டியதைக் கலக்கிக் காய்ச்சே

காச்சப்பா மூன்றுநாள் கொதிக்கச்செய்து
களரவே நாலாநாள் வடித்துமைந்தா
தேச்சப்பா வுடம்பெல்லாம் நசியம்பன்னு
தீராத சுரம்தணியும் முடம்பும்தேறும்.

- அகத்தியர்.

அமுக்குறாவேர்ப் பொடி, சித்தாமுட்டி பொடி, கொம்பரக்கு பொடி இவைகளை வகைக்கு ஒரு நாழி அளவில் எடுத்து ஒரு பாண்டத்தில் இட்டு அத்துடன் ஒரு பதக்கு அளவு நீர் வார்த்து நான்கில் ஒருபங்காகக் காய்ச்சிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அத்துடன் நல்லெண்ணெய் ஒரு நாழி அளவும் பசு மோர் ஒரு நாழி அளவும் சேர்த்துகொள்ள வேண்டுமாம். மேலும் நன்னாரி, அரத்தை, அதிமதுரம், குப்பைமேனி, கடுகுரோகிணி, கச்சோலம், தேவதாரு, மஞ்சள், மரமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், பெருங்குரும்பை, அமுக்குறாவேர், மஞ்சிட்டி, கெந்தி, நாகப்பூ ஆகியவற்றை வகைக்கு விராகன் எடைவீதம் எடுத்து சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டுமாம்.

அந்தக் கலவையினை மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொத்திக்கவைத்து நான்காம் நாள் வடிகட்டி உடல் முழுவதும் சொட்டுச் சொட்டாக விட்டு நன்கு பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும். இப்படி முழுகிவந்தால் தீராத சுரங்கள் நீங்குவதுடன் உடலும் வலிமையடையும் என்கிறார்.

தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...படர்தாமரைக்கு ஓர் எளிய தீர்வு!

Author: தோழி / Labels: ,

தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.

இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.

தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது. 

இந்த படர்தாமரை பிரச்சினைக்கு அகத்தியர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியகாவியம்" என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப் பட்டது.

சாகுமாம் படு தாமரைக்குக்கேளு
சாதக மாம்வேரின் பட்டை  
காவதிக மதுக்காரை வேரும்வித்தும்
கழஞ்சிரண்டு பழச்சாற்றில் கரையஆட்டே
ஆட்டியே பாக்களவாய் மூன்றுகட்டி
யப்பனே யுள்ளுக்கும் மேலும்பூசு
வாட்டியே யுதிர்ந்துவிடும் பாரே.

- அகத்தியர்.

மாமரத்தின் வேரின் பட்டையும், மதுக்காரை வேரும் அதன் விதையும் ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றில் இரண்டு கழஞ்சு அளவில் எடுத்து பழச்சாறு விட்டு நன்கு அரைத்து பாக்களவு உருண்டைகளாக மூன்று உருண்டைகள் உருட்டி உண்ணவேண்டுமாம். மிகுதியை படர்தாமரை பாதிப்பு உண்டான இடங்களில் பூசிவர குணமாகும் என்கிறார்.

மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.

குறிப்பு : ஒரு கழஞ்சி என்பது சற்றேற 5 கிராம் ஆகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...மின்னூல் தொகுப்புகள்

Author: தோழி / Labels:

அன்புடையீர், தற்சமயம் குடும்ப நிகழ்வொன்றின் பொருட்டு பயணத்தில் இருப்பதால் வழமையான பதிவுகள் அடுத்த வாரம் தொட்டு வெளியாகும்.

சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவின் ஊடே இதுவரை தொகுக்கப் பட்ட சித்தர் பெருமக்களின் மின்னூல்களைக் கேட்டு, தொடர்ந்து பல நண்பர்களும் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருப்பதால் அவர்களுக்கு உதவிடவும், தேவயுள்ள மற்ற புதியவர்களுக்காகவும் அனைத்து மின் நூல்களையும் தரவிறக்கி பயன்படுத்திடும்  வகையில் இன்றைய பதிவு அமைகிறது.

போகர்300

ஈழத்து சித்தர்களின் பாடல் தொகுப்பு

அகத்தியர் அருளிய அறுபத்தி நாலு சித்துக்கள்

சிவவாக்கியம்

பத்திரகிரியார் பாடல்கள்

பாம்பாட்டிச் சித்தர்பாடல்கள்

குதம்பைச் சித்தர்பாடல்கள்

அகப்பேய்ச் சித்தர்பாடல்கள்

அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம்

கருவூரார் அருளிய கெவுன சூஸ்திரம்

அகத்தியரின் ஆரூடம்

வாலை ஞான பூஜாவிதி

ரவிமேகலை

அகத்தியர் பூரண சூத்திரம் - 216

இந்திர சால ஞானம் 48 

காலங்கிநாதர் பூஜாவிதி 85

சனி கவசம்

இந்த நூல்களை தமிழறிந்த மற்ற நண்பர்களிடையே பகிர்வதன் மூலம் நம் தாய்மொழிக்கும், அதன் பெருமையை நமக்கு உணர்த்திய நம் முன்னோர்களுக்கும் நம்மால் ஆன வகையில் செய்யும் சிறப்பாக அமையும்.

நன்றி நண்பர்களே!

தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...நீர், நெருப்பு, ஒரு தாயத்து!

Author: தோழி / Labels: ,

உலகம் முழுதும் பல்வேறு சமுகம் மற்றும் சமயத்தார் காலம் காலமாய் தாயத்துகளை பயன் படுத்தி வருகின்றனர். சித்தர்களும் தங்களுக்கே உரிய தனித்துவமான முறையில் பல தாயத்துக்களை பழக்கத்தில் வைத்திருந்தனர்.

இவை பெரும்பாலும் தங்களின் சீடர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப் பட்டவை. கொடிய வன விலங்குகள் அணுகாமல் இருக்கவும், உயிர் கொல்லும் விஷ ஜந்துக்களிடமிருந்து  காப்பாற்றவும், மேலும் வைத்திய காரணங்களை முன்னிருத்திய மருத்துவ தாயத்துகளையும் உருவாக்கி பயன் படுத்தி வந்தனர். இவற்றை தயாரிக்கும் முறைகள் ரகசியமானவை. இதன் விவரங்களை தங்களின் பாடல்களில் சொல்லியிருக்கின்றனர். 

அந்த வகையில் கருவூரார் அருளிய "கருவூரார் வாதகாவியம்" என்ற நூலில் தாயத்து தயாரிக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம். 

அதிசயமாம் பச்சையேந்தி யிடக்கை
அதினுடகாலும் அன்பாகச் சேர்த்து
நிதிவெள்ளியான நிறைதாயத்தி ழடைத்துக்
கெதிபெற வாயிற்கிடத்திநீ கேளே
கீழே நிரிற்கிடந்து மிதக்கினும்
கீழேவிரித்துக் கிடக்கினும் பயமில்லை
நாளே தணலில்நடந்தால் சுடாது
ஆளேகைக்கொள் அம்புவி தனிலே.

- கருவூரார்.

பச்சோந்தி ஒன்றின் இடது கையினையும், இடது காலினையும் ஒன்றாக எடுத்து சாபநிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அவற்றை வெள்ளியால் ஆன தாயத்து ஒன்றில் அடைத்து, அணிந்து கொள்ள வேண்டுமாம். இவ்வாறு அணிந்தவர் நீரில் கிடந்து மிதந்தாலும், நெருப்பின் மீது நடந்தாலும் எவ்வித துன்பமும் உண்டாகாது என்கிறார் கருவூரார்.  

இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது. எனவே இந்த பதிவை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.  

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..குறி சொல்வது எப்படி?

Author: தோழி / Labels: ,

பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று. 

இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை.

குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை குறிப்பிடலாம்.

இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய “பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாரடா ஆடையொட்ட சமூமைப்பா
பண்பான நின்றிடந் தீஞ்சமூலி
சேரடா கருச்சீலை யிந்த மூன்றும்
செம்மையாய் கருக்கியல்லோ மைபோலாட்டி
சீரடா சுடலையென்ற தயிலஞ் சேர்த்துச்
ஈஷ வீரடா அனுமாரை தியானஞ் செய்து
விதமாகத் திலகமிட்டுக் குறிதான் சொலே.

- புலிப்பாணி சித்தர்.

சொல்லடா அஞ்சனாதேவி புத்ரா
சொகுசான வாயுமைந்தா புருஷரூபா
வல்லவா அனுமந்தா ராம தூதா
வந்துகுறி சொல்லென்று வணங்கி கொள்ளு
இல்லப்பா நினைத்ததெல்லாஞ் சொல்வான் பாரு
என்னசொல்வே னவனுடைய குறிதான் மைந்தா
நல்லப்பா போகருட கடாட்சத்தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினேனே.

- புலிப்பாணி சித்தர்.

ஆடையொட்டி சமூலம், தீஞ்சமூலி, கருப்புத் துணி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து எரித்து கருக்கி, அதனை கல்வத்தில் இட்டு சுடலைத் தைலம்வார்த்து நன்கு மைபோல அரைத்து அதனை ஒரு மைபதமானதும் அதில் சுடலைத் தைலம் சேர்த்து நன்கு அரைத்து சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.  

பின்னர் குறிசொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து "அஞ்சனா தேவி புத்திரா வாயு மைந்தா புருஷரூபா வல்லவா அனுமந்தா இராம தூதா வந்து குறி சொல்லு" என்ற மந்திரத்தினை செபித்து மையினைத் திலகமாக இட்டு குறி சொல்ல வேண்டுமாம். அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...குரு பகவானும், பரிகாரங்களும்.

Author: தோழி / Labels: ,

வணிக மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில் பரிகாரம் என்ற வார்த்தைக்கு பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு என்பதாகவே கற்பிக்கப் பட்டு விட்டது. இதன் அடிப்படையில்தான் ஒரு பிரச்சினைக்கு அவரவர் செல்வ நிலைகளுக்கு ஏற்ப பல விதமான பரிகாரங்கள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

என்னுடைய வாசிப்பனுவத்தின் படி, பரிகாரம் என்பது ஒரு போதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகவோ, மாற்றாகவோ இருக்க முடியாது. ஏனெனில் பரிகாரம் என்பது ஒரு வகையான ஆறுதல் மட்டுமே. 

இருட்டில் நடக்கிறவனுக்கு கை விளக்குப் போலவும், கரடு முரடான பாதையில் நடக்கிறவனுக்கு காலணி போலவும்தான் இந்த பரிகாரங்கள் பயன்படும். மற்றபடி விதிக்கப் பட்ட பாதையில் அவரவர் பயணித்தே ஆக வேண்டும். எனவே பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என நினைத்து பெரும் பொருட் செலவில் பரிகாரங்களை செய்வதற்கு முன்னர் இதை மனதில் கொள்ள வேண்டுகிறேன். 

குரு பகவானின் பெயர்ச்சியினால் நமக்கு உண்டாகும் நன்மைகளை மேம் படுத்திக் கொள்ளவும், தீமைகளின் பாதிப்பினை குறைத்துக் கொள்ளவுமே இந்த பரிகாரங்கள் கூறப் படுகின்றன.சித்தர் மரபிலும் சரி, அதைத் தாண்டிய பிற ஞான மரபிலும் சரி, இறைவனை மனதில் இருத்தி துதித்திருப்பது மட்டுமே எல்லா இடர்களுக்கும் பரிகாரமாய் சொல்லப் படுகிறது. புறவழிபாடுகளையோ, சடங்குகளையோ சித்தரியலும் சரி, ஞான மரபும் சரி நிராகரிக்கின்றன. 

அந்த வகையில் சில தியான மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச
குரும் காஞ்சன ஸநிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||"

இவை தவிர குரு பகவானின் கவசம் ஒன்று எனது பாட்டனாரின் குறிப்புகளில் இருந்து தேடி எடுத்தேன். மிகவும் அரிதான இந்த கவசத்தை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் குரு கோரை நேரத்தில் இந்த கவசத்தை பாராயணம் செய்தால் குருபகவானின் பேரருளுக்கு பாத்திரமாகலாம் என்ற குறிப்பு எழுதப் பட்டிருக்கிறது.

இந்நேரத்துக்கு குரு கோரை நேரம் என்பது என்னவென்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும். ஹோரை பற்றிய விவரங்களை முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். எனவே தயை கூர்ந்து இந்த இணைப்பில் சென்று ஹோரை பற்றிய அறிமுகத்தினை வாசித்துவிட்டு இந்த பதிவினை தொடர்ந்தால் புரிதலுக்கு ஏதுவாயிருக்கும். 

அந்த பாடல் இதுதான்....

குரு கவசம்..

சீரியன் மனத்துள் வேண்டும்
சித்தி தந்து அளித்துச் செய்யும்
பாரியல் கருமம் கூட்டிப்
பரவுமெய்ஞ் ஞான வாழ்வு
மேரியல் செல்வப் பேறும்
யாவையும் ஒருங்கு நல்கும்
தேரியல் அறிஞன தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி

அரும் பிருகற்பதிப் பேர்
ஆண்டகை சென்னி காக்க
வருந்திரு நெற்றி காக்க
வானவர் குரவன் கன்னம்
விரும்பினன் காக்க நாட்டம்
வேண்டுவ தருவோன் காக்க
பருங்குமிழ் பொருவு நாசி
பண்ணவன் அரசன் காக்க

பாட்டு அமர்செவ்வாய் வேத
பாரகன் காக்க துண்டம்
கூட்டு முற்றிவன் காக்க
குலவரைப் புயம் இரண்டும்
வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன்
விரும்பினன் காக்க செங்கை
வாட்டும் வச்சிரங் கைக்கொள்ளும்
வானவன் வழாது காக்க

பருவரை பொருவு மார்பம்
பயிலுங்கீட் பதி புரக்க
விருதனம் வாக்கு வல்லோன்
என்றும் வந்து எய்திக் காக்க
வருசுகம் நல்கும் நாதன்
வயங்கு எழில் வயிறு காக்க
பொருவரு நீதி வல்லோன்
பொற்புஉறு நாபி காக்க 

எங்கும் சென்று அளிக்கும்ஈசன்
எழிற்கடி புரக்க ஊருத்
தங்கு புண்ணியன் புரக்க
சங்கமெய்ஞ் ஞானம் ஈயும்
புங்கவன் புரக்க பாதம்
புகல் உலகெல்லாமாகும்
அங்கணன் புரக்க மேனி
அமர் குருப் புரத்து காக்க

காலையும் உச்சிப் போதும்
கதிரவன் குடபான் மேவு
மாலையும் வானோர் போற்ற
வருகுரு கவசம் என்னும்
நூலை அன்போடு உரைக்கும்
நுண்ணியன் வேட்டாங்கு எய்திச் 
சோலைஅம் தரு விண்ணாட்ட 
சுரரையும் வெற்றி கொள்ளும் 

மறைமிகு கலைநூல் வல்லோன் 
வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன்
நாட்டினுக்கு அதி பனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் 
நீடு போகத்தை  நல்கும் 
இறையவன் குரு வியாழன் 
இருமலர்ப் பாதம் போற்றி போற்றி.!

குரு கவசம் முற்றும்.

இந்த அரிய பாடலை எழுதியவர் யாரென தெரிந்தவர்கள் கூறினால் நன்றியுடையவளாக இருப்பேன். 

இத்துடன் குரு பெயர்ச்சி பற்றிய தொடர் நிறைவடைந்தது.

தேவையுள்ளவர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். தேவையுள்ளவர்களுக்கு இந்த இணைப்பினை பகிர்ந்திடுமாறு வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...குரு பெயர்ச்சி பலன்கள் - மகரம், கும்பம், மீனம்

Author: தோழி / Labels:

குரு பகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு கடந்த வைகாசி 14ம் திகதி அன்று 38 நாழிகை 51 வினாடி அதாவது 28.05.2013 இரவு 09 மணி 24 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார். மிதுன ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள்.

அடுத்த ஓராண்டு காலத்திற்கு மகரம், கும்பம், மீனம் ஆகிய மூன்று ராசிகளுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.

மகரம் 

நட்சத்திரங்கள் - உத்திராடம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1ஆம், 2ஆம் பாதம் வரை..

மகர ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்களாம். இத்தகைய மகர ராசிக்கு ஐந்தாம் வீடான இடப ராசியில் இருந்த குரு பகவான் தற்போது ஆறாம் வீடான மிதுன ராசிக்கு பெயர்ந்திருக்கிறார். எனவே இதுவரை இருந்த அனுகூல நிலை இனி இருக்காது.

தேவகுரு ஆறில் வந்தால்
தேவைகள் பூர்த்தியாகும்
ஆவல்கள் தீர வேண்டின்
அனுசரிப்பும் தேவையாகும்
கோபத்தை விலக்கினால் தான்
குடும்பத்தில் அமைதி கூடும்
தினமும் குருவைக் கண்டு
தரிசித்தால் நன்மை சேரும்

எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் நிதானம் கடை பிடிக்காவிடில் அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டிவரும். குடும்ப வழிச் சொத்துக்கள், உறவுகள் மூலமாக நெருக்கடிகள் உண்டாகலாம். குருவருளை வேண்டி வணங்கி இடர்களை களையலாம். 

கும்பம் 

நட்சத்திரங்கள் - அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம் , சதயம், பூரட்டாதி 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை..

கும்ப ராசிக்காரர்கள் எத்தகைய சூழலிலும் நிதானமாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களாய் இருப்பார்களாம். இத்தகைய கும்பராசிக்கு குரு பகவான் நான்காம் வீடான இடபத்தில் இருந்து ஐந்தாவது ராசியான மிதுனம் க்கு பெயர்ந்திருக்கிறார். இதனை சாதக சிந்தாமணி பின் வருமாறு கூறுகிறது.

பஞ்சம ஸ்தானம் தன்னில் 
பாங்காக வியாழன் வந்தால்
மிஞ்சிய துன்ப மெல்லாம்
விலகிடும்; மேன்மை உண்டாம்
நெஞ்சிலே எண்ணிய தெல்லாம்
நிறைவுறும்; குழந்தை பேறும்
வஞ்சியர் மைந்தர்க் கெல்லாம்
மணப்பேறும் வாய்க்கும் தானே.

இந்த குரு பெயர்ச்சியினால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசிகளில் கும்ப ராசியும் ஒன்று. கடந்த ஆண்டுகளில் நிலவி வந்த இறுக்கம், தயக்கம் போன்றவைகளின் தீவிரம் குறையும். இல்லறத்தில் கணவன் மனைவி உறவில் இருந்து வரும் பேதம் குறையும். பண வரவு உண்டாகும். எனவே இந்த கால கட்டத்தில் கும்ப ராசிக்காரர்களின் எண்ணம், சொல், செயல் என எல்லா அம்சங்களிலும் ஏற்றம் உண்டாகுமாம். 

மீனம் 

நட்சத்திரங்கள் - பூரட்டாதி 4ஆம் பாதம் , உத்திரட்டாதி, ரேவதி.

மீன ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடமான இடப ராசியில் இருந்தவர் பெயர்ந்து நான்காம் இடமான மிதுன ராசிக்கு வந்திருக்கிறார். இதனால் கடுமையான விளைவுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கும். எனினும் மிதுன ராசி நாதனான புதன், குரு பகவானின் நட்புக் கிரகமாகிப் போனதனால் இந்த பாதிப்புகள் பாதியாக குறையுமாம். 

மன்னவன் நான்கில் நிற்க
மலைபோல துயர்தான் சேரும்
கண்ணெதிரில் கவலை வாட்டும்
கடல் பயண வாய்ப்பும் கிட்டும்
முன்னாளில் இருந்த நோய்கள்
மீண்டுமே வந்து சேரும்
பொன்னான குருவைப் போற்ற
புகழ்பெற்ற வாழ்வு ண்டாமே.

உடல் நலத்தில் மேலதிக அக்கறை காட்டிட வேண்டி வரும். அத்துடன் அலைச்சலும் அகால போஜனமும் உண்டாகுமாம். பொதுவில் இன்பம் துன்பம் என இரண்டும் கலந்த கால கட்டமாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.

இத்துடன் குரு பெயர்ச்சி பலன்கள் முற்றிற்று.

இது வரை நாம் பார்த்த பலன்களை வாசித்த பின்னர் உங்கள் மனதில் நற் பலன்களை மேலும் அதிகப் படுத்தி நலமடையவோ அல்லது தீய பாதிப்புகளைக் குறைத்துக் தம்மை பாதுகாத்துக் கொள்ளவோ ஏதும் பரிகாரங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி இன்னேரத்திற்கு வந்திருக்கும். 

அது பற்றி நாளைய பதிவில் பார்ப்போமே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


குரு பெயர்ச்சி பலன்கள் - துலாம், விருச்சிகம், தனுசு

Author: தோழி / Labels:

குரு பகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு கடந்த வைகாசி 14ம் திகதி அன்று 38 நாழிகை 51 வினாடி அதாவது 28.05.2013 இரவு 09 மணி 24 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார். மிதுன ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள்.

இதன் எதிரொலியாக அடுத்த ஓராண்டு காலத்திற்கு துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய மூன்று ராசிகளுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.

துலாம் 

நட்சத்திரங்கள் - சித்திரை 3ஆம், 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை..

துலாம் ராசிக்காரர்கள் அனைவரும் கவரும் தோற்றமுடையவர்களாக இருப்பார்களாம். இத்தகைய துலாம் ராசிக்கு எட்டாவது வீடான இடப ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து ஒன்பதாவது வீடான மிதுன ராசிக்கு வந்திருகிறார். இதுவரை இருந்து வந்த அஷ்டம குரு விலகியிருப்பது ஆறுதல் தரும் அம்சம். 

நவமதில் வியாழன் வந்தால் 
நாளும்நற் செல்வம் சேரும்
அவமரி யாதை நீங்கும்
அகிலமே வணங்கிப் போற்றும்
உவமையே இல்லா வண்ணம்
உயர்வுகள் கிட்டும்; அந்தச்
சிவனவன் அருளும் உண்டு
திருமணம் கூடும் பாரே.

இதுவரை இருந்த அவல நிலை இனி மாறும். இல்லறம் நல்லறமாகும். சிறுசிறு பிரச்சனைகளை தந்தாலும் பொதுவில் நல்ல நற்பலன்களையே குரு பகவான் தருவார். தகுதிக்கு மீறிய செயல்களில் இறங்காதிருத்தல் உத்தமம்.

விருச்சிகம் 

நட்சத்திரங்கள் - விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

விருச்சிக ராசிக்காரர்கள் விடா முயற்சியுடையவர்களாக இருப்பார்களாம். இத்தகைய விருச்சிக ராசிக்கு ஏழாம் இடமான இடப ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து எட்டாம் இடமான மிதுன ராசிக்கு அஷ்டம குருவாக வந்திருக்கிறார். இது இதுவரை இருந்த துயர நிலையை அதிகரிப்பதாகவே இருக்கும். எனவே இனி வரும் நாட்களில் தேவைக்கும் அதிகமான நிதானமும், ஒழுங்குடன் கூடிய செயல் பாடுகளுமே கடுமையான துயரத்தில் இருந்து காப்பாற்றும். 

எட்டினில் குருவும் வந்தால்
இடமாற்றம் வந்து சேரும்
பெட்டியில் தொகை வைத்தாலும்
பிறருக்கே பயனாய் மாறும்
திட்டங்கள் மாறிப் போகும்
திருப்பங்கள் பலவும் சேரும்
வெற்றியைக் காண வேண்டின்
விடாமல் குருவை வணங்குவீரே.

உற்றார், உறவினர், நண்பர்கள் என சமூகத்தினரின் அவதூறுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகும் வாய்ப்புகள் உண்டு. கடுமையான மன அழுத்தங்கள் உண்டாகும் என்பதால் இந்த கால கட்டத்தில் நல்லோர் அருகாமையும், அறிவுரையும் கேட்டு நடப்பது நல்லது.

தனுசு

நட்சத்திரங்கள் - முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் வரை..

தனுசு ராசிக்காரர்கள் இயல்பில் நல்ல எண்ணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்களாம். இத்தகைய ராசிக்கு ஆறாவது கட்டமான இடப ராசியில் இருந்து பெயர்ந்து ஏழாவது கட்டமான மிதுன இராசிக்கு வந்திருக்கிறார். இந்த இடம் தனு ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான ஒரு இடமாகும்.

பொன்னன் என்னும் குருபகவான்
பொலிவாய் ஏழாம் இடம் வந்தால்
இன்னல் எல்லாம் தீர்ந்துவிடும்
ஏக்கம் எல்லாம் போய்மறையும்
உன்ன தங்கள் கிட்டிடுமே
உற்சாகம் தான் பொங்கிடுமே
என்ன என்ன நினைத்தாலும்
எல்லாம் வசமாய் ஆகிடுமே.

இது வரை இருந்த துயரமெல்லாம் பனி போல விலகும் காலமிது. இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், தொழில், கல்வி சிறக்கும். பொதுவில் இந்த குரு பெயர்ச்சியால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசிகளில் இதுவும் ஒன்று. இந்த வாய்ப்பினை நழுவ விடாது பலன் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துணை நிற்கட்டும்.

நாளைய பதிவில் கடைசி மூன்று ராசிகளான மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் பலன்களைப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..குரு பெயர்ச்சி பலன்கள் - கடகம், சிம்மம், கன்னி

Author: தோழி / Labels:

குரு பகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு கடந்த வைகாசி 14ம் திகதி அன்று 38 நாழிகை 51 வினாடி அதாவது 28.05.2013 இரவு 09 மணி 24 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார். மிதுன ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள்.

அடுத்த ஓராண்டு காலத்திற்கு கடகம், சிம்மம், கன்னி ஆகிய மூன்று ராசிகளுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.

கடகம்

நட்சத்திரங்கள் - புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கடக ராசிக்காரர்கள் உயரிய சிந்தனைப் போக்கினை உடையவர்களாக இருப்பார்களாம். இத்தகைய கடக ராசிக்கு 11ம் இடமான இடப ராசியில் இருந்து 12ம் இடமான மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்கிறார். இதனை சாதக சிந்தாமணி பின் வருமாறு கூறுகிறது.

இடமது பன்னி ரெண்டில்
இயல்பாகக் குருவும் வந்தால்
கடமையில் கவனம் தேவை
காசுகள் விரயமாகும்
உடமையாய் சொத்து சேரும்
உடல் நலம் அச்சுறுத்தும்
கலங்காது கனிவாய் வாழக்
குருவருள் கை கொடுக்கும்

இதுவரை இருந்த பதினொராவது கட்டமானது அனுகூலமான பலன்களை தந்திருக்கும். இனி அவற்றில் சிறிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்கும் என்றால் மிகையில்லை.எதிரிகளை இனங்கண்டு ஒதுக்கி விட்டு, நல்லவர்களின் அருகாமையை கொள்வது இடர்களை குறைக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.

சிம்மம் 

நட்சத்திரங்கள் -  மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் வரை..

சிம்ம ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாகவும், விடா முயற்சியுடையவர்களாகவும் இருப்பார்களாம். இத்தகைய சிம்ம ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்தில் இருந்த குரு பகவான் பதினோராம் இடமாகிய மிதுன ராசிக்கு பெயர்ந்திருக்கிறார்.

பதினோராம் இடத்தில் பொன்னன்
பவனிதான் செல்லும் போதில்
அதிகாரப் பதவி கிட்டும்
அரசனின் உதவி கிட்டும்
சதிகார பகைவர் கொட்டம் 
தரைமட்டம் ஆகும்; கொண்ட
மதிபோல் ஆண் பெண்ணுக்கு
மாங்கல்ய யோகம் தானே

இந்த குரு பெயர்ச்சியினால் நற் பலன்களைப் பெறும் ராசிகளில் சிம்ம ராசியும் ஒன்று. இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், பண வரவு உண்டாகும்.  இடமாற்றமும் தொழில் மாற்றமும் முன்னேற்றங்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம்.

கன்னி 

நட்சத்திரங்கள் - உத்திரம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , அஸ்தம், சித்திரை 1ஆம், 2ஆம் பாதம் வரை..

கன்னி ராசிக்கு ஒன்பதாம் வீடான இடப ராசியில் இருந்த குரு பகவான் தற்போது பத்தாம் வீடான மிதுன ராசிக்கு பெயர்ந்திருக்கிறார். இதனை சாதக சிந்தாமணி பின் வருமாறு கூறுகிறது.

பத்திலே குருவும் வந்தால்
பதவியில் மாற்றம் சேரும்
முத்தான வாழ்வில் வந்த
முன்னேற்றம் குறை யலாகும்
கொத்தோடு துன்பம் ஓட
குருவருள் உமக்கு தேவை
உற்சாகத் தோடு வாழ
உயர்குணம் வழி வகுக்கும்

இதுவரை இருந்து வந்த அனுகூல நிலைகள் இல்லாது போகும். பொருள் விரயம் இந்த கால கட்டத்தில் உண்டாகும். எண்ணம், செயல், சொற்களின் கவனம் தேவைப் படும் கால கட்டமாகும். இடமாற்றத்தையும் அதிக செலவுகளோடு அலைச்சல்களையும் கொடுக்கும் கால கட்டமிது. பொதுவில் இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.

அடுத்த மூன்று ராசிகளான துலாம், விருச்சிகம், தனுசு ஆகியவற்றின் பலன்களை நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..குரு பெயர்ச்சி பலன்கள் - மேஷம், ரிஷபம், மிதுனம் ...

Author: தோழி / Labels:

குரு பகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு கடந்த வைகாசி 14ம் திகதி அன்று 38 நாழிகை 51 வினாடி அதாவது 28.05.2013 இரவு 09 மணி 24 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார். மிதுன ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள்.

இதன் எதிரொலியாக அடுத்த ஓராண்டு காலத்திற்கு ஒவ்வொரு இராசிக்கும் எத்தகைய பலன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி இனிவரும் பதிவுகளில் பார்ப்போம். இன்று முதல் மூன்று ராசிகளான மேஷம், ரிஷபம், மற்றும் மிதுன ராசிகளுக்கான பலன்களைப் பார்ப்போம்.

மேஷம்.

நட்சத்திரங்கள் - அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் வரை.

மேஷ ராசிக்காரர்கள் அடிப்படையில் சுயநலம் குறைந்தவர்களாக இருப்பார்களாம். இத்தகைய மேஷ ராசிக்கு தற்போது இரண்டாவது கட்டமான இடப ராசியில் இருந்து பெயர்ந்து மூன்றாவது கட்டமான மிதுன இராசிக்கு வருந்திருக்கிறார். இந்த நிலையை சாதக சிந்தாமணி பின்வருமாறு கூறுகிறது.

மன்னவன் மூன்றில் நிற்க
மாபெரும் மாற்றம் தோன்றும்
எண்ணிய காரியங்கள்
எல்லாமே வெற்றியாகும்
தன்னலம் மாறிப் போகும்
தைரியம் வந்து சேரும்
மண்ணிலே பதவி வாய்க்கும்
மேன்மைசேர் வாழ்வு தானே.

கடந்த ஆண்டுகளில் நிலவி வந்த இறுக்கம், தயக்கம் போன்றவைகளின் தீவிரம் குறையும். பொதுவில் இந்த பெயர்ச்சியினால் குரு பகவானின் பாதிப்புகள் குறைந்த அளவில் இருக்கும். அதே நேரத்தில் மிதமான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். பெரிய பாதிப்புகள் இல்லை என்பதே சுப பலன் என்பதை நினைவில் வைக்கவும்.

ரிஷபம்.

நட்சத்திரங்கள் - கிருத்திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , ரோகிணி, மிருகசிரீஷம் 1ஆம், 2ஆம் பாதம் வரை.

ரிஷப ராசிக்காரர்கள் அடிப்படையில் மிகுந்த முன் யோசனை உடையவர்களாக இருப்பார்களாம். இது வரை ராசிக்கு ஜென்ம குருவாக இருந்த குரு பகவான் இரண்டாம் வீடான மிதுன ராசிக்கு பெயர்ந்திருக்கிறார்.  

இதனை சாதக சிந்தாமணி பின் வருமாறு கூறுகிறது.

வாக்கினில் வியாழன் வந்தால்
வாழ்க்கையில் மேன்மை யுண்டாம்
தாக்கிய துன்ப மெல்லாம்
தகர்ந்துதூள் தூளாய்ப் போகும்
ஆக்கங்கள் பலவும் உண்டாம்
அரசரைப் போல ஆக்கும்
நோக்கங்கள் யாவும் வெல்லும்
நோயில்லா வாழ் வுண்டாமே.

குரு பெயர்ச்சியினால் பெரிய அளவில் நன்மை பெறப் போவது இந்த ராசிக்கு உட்பட்டவர்கள்தான். கடந்த ஆண்டு நிலவி வந்த இறுக்கம், தயக்கம் போன்றவைகளின் தீவிரம் குறையும். உடல்நலம், மன நலம், செல்வ வளம் என எல்லா அம்சங்களிலும் ஏற்றம் உண்டாகுமாம். காரியத் தடைகள் விலகும், கல்வி சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம். குருவருளும், திருவருளும் கைகூடி நிற்கும் காலமாக இருக்குமாம். 

மிதுனம்.

நட்சத்திரங்கள் - மிருகசிரீஷம் 3ஆம், 4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை.

மிதுன ராசிக்காரர்கள் பிறர் போற்றும் வகையில் முன் மாதிரியானவர்களாக இருப்பார்களாம். இத்தகைய மிதுன ராசிக்கு பன்னிரெண்டாவது வீடான இடப ராசியில் இருந்த குரு பகவான் பெயர்ந்து ஜென்ம குருவாக வந்திருக்கிறார். 

ஜென்மத்தில் குரு வந்தால்
செலவுகள் மெத்த உண்டாம்
பொன் பொருள்கள் வாங்குவதும்
காணிநிலம் வாங்கும் போதும்
கருத்துடன் கவனமாய் கொண்டால்
மனம் இனிக்கும் வாழ்வமையும்
வந்திணைந்த குருவை
வழிபட்டால் வளர்ச்சி தரும்.

இந்த குரு பெயர்ச்சியால் இதுவரை இருந்த அனுகூல நிலை இனி இருக்காது. எனவே இந்த கால கட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் நிதானம் காட்டுவது நல்லது. குடும்ப வழிச் சொத்துக்கள், உறவுகள் மூலமாக நெருக்கடிகள் உண்டாகலாம். குருவருளை வேண்டி வணங்கி இடர்களை களையலாம். 

அடுத்த மூன்று ராசிகளான கடகம், சிம்மம், கன்னி ஆகியவற்றின் பலன்களை நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...