பூமணி குளிகை!

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் மருத்துவத்தில் குளிகை என்ற பெயருக்கு தனியிடம் உண்டு. தற்போது அலோபதி மருத்துவம் முன் வைக்கும் மாத்திரைக்கு இணையாக குளிகையைச் சொல்லலாம். ஆம்!, ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தினை வில்லையாகவோ அல்லது உருண்டையாகவோ உருட்டி காய வைத்து பயன்படுத்துவதுண்டு. இதனையே நாம் குளிகை என்கிறோம்.

இவ்வாறு தயார் செய்யப்படும் குளிகை வகைகளில் ஒன்றான "பூமணி குளிகை" தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

கேளடா பூமணிதான் சொல்லக்கேளு
கிருபையாம் கடுகுரோகணியு யிலுப்பைப்பூவும்
நானடா வாளமது ரெட்டிசேர்த்து
நலமான குமரிச்சா றதனாலாட்டி
வேளடா நாற்சாம மரைத்துக்கொண்டு
விதமான தூதளங்காய்ப் போலுருட்டித்
தாளடா நிழலிலுர்த்திச் செப்பில்வைத்துத்
தளமான விஞ்சிரசந் தேனுங்கூட்டே.

அகத்தியர்.

கூட்டிய மாத்திரைதா னொன்றுதேய்த்துக்
குழப்பியே காலமே கொடுத்தாற்கேளு
நாட்டியதோர் சன்னிசுர மெல்லாந்தீரும்
நலமான விடசுரமும் நாடாதோடும்
தீட்டியதோ ருள்ளியென்ற தைலத்தூட்ட
திறமான தோடமெல்லாந் தீருந்தீரும்
வாட்டியே யெண்ணையிலே கொடுத்தாயானால்
வாங்கிவிடும் வாயுவெல்லா மாண்டுபோமே.

அகத்தியர்.

கடுகுரோகணி, இலுப்பைப் பூ ஆகியவற்றை ஒன்றுக்கு இரண்டு ( 1 : 2 ) என்ற எடை வீதம் எடுத்து, அவற்றை கல்வத்தில் இட்டு சோற்றுக் கற்றாழைச் சாறு விட்டு  *நான்கு சாமம் அரைத்து அதனை தூதுளங்காய் அளவில் குளிகைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி, செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். இதுவே “பூமணி குளிகை”. 

சேமித்த குளிகையில் ஒன்றினை எடுத்து காலை வேளையில் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்த கலவையில் கரைத்து உண்டால் சன்னி சுரமும், விஷ சுரமும் குணமாகுமாம்.  

பூமணி குளிகையில் ஒன்றினை எடுத்து காலை வேளையில் உள்ளித்தைலத்தில் கரைத்து உண்டால் தோஷ நோய்கள் அனைத்தும் நீங்குமாம். 

இந்த குளிகையில் ஒன்றினை எடுத்து காலை வேளையில் நல்லெண்ணையில் கரைத்து உண்டால் வாய்வு நோய்கள், பாண்டு நோய்கள் ஆகியவை குணமாகும் என்கிறார் அகத்தியர்.

இந்த குளிகைக்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

*ஒரு சாமம் என்பது மூன்று மணி நேரம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

3 comments:

Raakee said...

Anbu Thozi,enaku oru udavi seiyavendum,athavathu intha yatchini moolam nam ennangalai silar thirudugirargal athanai thadukkum murai ethenum irupin athai thayavu seithu theriyapaduthavum.
RaaKee

Raakee said...

Anbu Thozi,enaku oru udavi seiyavendum,athavathu intha yatchini moolam nam ennangalai silar thirudugirargal athanai thadukkum murai ethenum irupin athai thayavu seithu theriyapaduthavum.
RaaKee

sankar.r said...

thozhi, you have not included the seed vaalam in the explained text...
so the ingridients are three that is kadugurogani,illupai poo and vaalam (croton seed)


Post a comment