குருபெயர்ச்சி பொதுப்பலன்கள்...

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் சோதிட இயல் என்பது வாக்கிய கணித பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், அதனூடே விளக்கப் பட்ட குரு பகவானின் அம்சங்களை பற்றியும் இதுவரையில் பார்த்தோம்.

இந்த இடத்தில் குரு பகவானின் உருவம் எத்தகையது என்பதைச் சொல்லும் ஒரு பாடலை பகிர விரும்புகிறேன். இந்த பாடல் பழந்தமிழ் நூலான “சாதக சிந்தாமணி” என்னும் நூலில் காணக் கிடைக்கிறது.

கண்ணு முடலும் பொன்னிறத்திற்
றடித்த தேகன் கபமுள்ளோன்
எண்ணும் புத்திய னொண்குருவாம்
எழிலார் வடிவன் கபவாதன்
இரவி முதலா லயஞ்சலந்தீ
விகாரங் கோச மணையெச்சில்
பெரிது புதுமை தீனைவு
நடுவு பலத்த கிழிந்ததுகில்
கருது செம்பு மணிபொன்வெண்
கலமே வெள்ளி முத்திரும்பாம்
தெரிசுன் சுங்கன் சேய்மதிமால்
பொன்திரேக் காணஞ் சசியாதி.

இயல்பில் சாந்த குணம் கொண்டவரான குருபகவான், பொன்னிறமான கண்களையும், பெருத்த தேகத்தை உடையவராக உருவகப் படுத்தப்பட்டிருக்கிறார். கபம் தொடர்பான நோய்களுக்கு அதிபதி குருபகவான்.

தற்போதைய அமைப்பின் படி குருபகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார் இத்தகைய பெயர்ச்சி பற்றி புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

பாரப்பா பரமகுரு நாலேழ்பத்து
பகருகின்ற கோணமுடன் தனமும் லாபம்
சீரப்பா சென்மனுக்கு யோகம் செப்பு.
செந்திருமால் தேவியுமே பதியில் வாழ்வாள்
கூறப்பா குடினாதன் கண்ணுற்றாலும்
குவளயத்தில் வேகுபேரை ஆதரிப்பான்
ஆரப்பா ஆறெட்டு பன்னிரண்டு
அறைகின்றேன் தின்பலனை அன்பால்கேளே.

- புலிப்பாணி சித்தர்.

கேளப்பா யெட்டுக்கு வேசிகள்ளன்
கெடுதியுள்ள மனைவிபகை நோயால்கண்டம்
ஆளப்பா அரசர்பகை பொருளுஞ்சேதம்
அப்பனே அவமானம் கொள்வண்டம்பன்
தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு
தார்வேந்தர் பகையுமுண்டு ரோகமுண்டு
கூறப்பா ஈராறில் எங்கோனாட்சி
குற்றமில்லை சென்மனுக்கு யோகங்கூறே.

- புலிப்பாணி சித்தர்.

வலிமை யான இடங்களான 4, 7, 10 ஆகிய நிலைகளில் குருபகவான் நிற்பாரானால் குறிப்பிட்ட அந்த ஜாதகர் பெரும் யோகம் பெற்றவராக இருப்பதுடன், சாதகரின் வீட்டில் தனலக்‌ஷ்மி வாசம் செய்வாளாம்.  

முக்கியத்துவம் வாய்ந்த 6, 8, 12 போன்ற இடங்களில் குருபகவான் நிற்பாராக இருந்தால் ஜாதகருக்கு உண்டாகும் பலன்களாவது, ஜாதகருக்கு எட்டாம் இடத்தில் குரு நிற்பாராயின் ஜாதகர் பெண்பித்தராகவும், திருடனாகவும் இருப்பதுடன் நோய்களால் கண்டம் போன்றவைகள் உண்டாகுமாம். இதுபோன்று ஆறாம்  இடத்தில் குரு பகவான் நிற்பாராக இருந்தால் மனைவி/கணவருடன் சுமூகமான உறவு இல்லாதிருப்பதுடன் அரசாங்கத்துடன் பகையும் உண்டாகுமாம். இது போல் குரு பகவான் 12-ம் இடத்தில் நிற்பாராராக இருந்தால் அது குருபகவானின் உச்சஸ்தானம் என்று சொல்லப் படுகிறது இதனால் ஒரு கெடுதலும் நேராது என்றும் மிக யோகமான வாழ்வும் உண்டாகும் என்கிறார்.

இனி வரும் பதிவுகளில் இந்த குருபெயர்ச்சியினால் ஒவ்வொரு இராசிக்கும் என்ன பலன்கள் உண்டாகும் எனபதைப் பற்றி பார்ப்போம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...குருபெயர்ச்சி என்றால் என்ன?

Author: தோழி / Labels:

சித்தர்களின் சோதிட இயல் பெரும்பாலும் வாக்கிய பஞ்சாங்க கணித அடிப்படையில் அமைந்தது. ஒவ்வொருவரும் தங்களின் பெயர்களில் சோதிட நூல்களை அருளியிருப்பதால் நாம் பொதுவில் சித்தர்களின் சோதிட இயல் என்றே குறிப்பிடுவோம். நாம் இதுவரை குரு பகவானைப் பற்றியும் அவரது அம்சங்களை பற்றியும் பார்த்தோம்.

கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது 12 ராசிகளின் அமைப்பை காட்டும் கட்டம். இதில் ஒவ்வொரு ராசியின் பெயரும் அதன் அதிபதியின் பெயரும் குறிப்பிடப் பட்டிருப்பதை காணலாம். இதில் ஒன்பதாவது ராசியான தனுசு மற்றும் பன்னிரண்டாவது ராசியான மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பகவான் அதிபதியாகிறார். சூரியனையும், சந்திரனையும் தவிர்த்து மற்ற கோள்கள் ஒவ்வொன்றும் இரண்டு ராசிக்கு அதிபதியாக இருப்பதையும் நீங்கள் அவதானிக்கலாம்.
குரு பகவான் ஒரு ராசியில் ஒருவருட காலம் வாசம் செய்கிறார் என்று நேற்று பார்த்தோம். அவர் எந்த இராசியில் வாசம் புரிகிறாரோ அங்கிருந்து மற்ற ராசிகளை அவர் பார்க்கும் பார்வையினைப் பொறுத்தே பலன்கள் எழுதப் படுகிறது. இவை ஒரு கணித சூத்திரத்தின் கச்சிதத்தோடு சித்தர் பெருமக்களால் அருளப் பட்டிருக்கிறது. குரு பகவான் இடப இராசியில் இருந்து அடுத்த ராசியான மிதுன ராசிக்கு பிரவேசிப்பதையே குரு பெயர்ச்சி என பரபரத்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பெயர்வதால் அடுத்த ஒருவருட காலம் மிதுன ராசிக்கும் அங்கிருந்து அவர் பார்ப்பதனால் மற்ற ராசிகளுக்கும் உண்டாகப் போகும் பலன்களைச் சொல்வதே குரு பெயர்ச்சி பலன்கள் என்கிறோம்.

வாக்கிய பஞ்சாங்க கணிதத்தின் படி  குருபகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு வைகாசி 14ம் திகதி அன்று 38 நாழிகை 51 வினாடி அதாவது 28.05.2013 இரவு 09 மணி 24 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார். மிதுன ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள்.

எல்லாம் சரிதான், குரு பெயர்ச்சி பலன்களை பார்ப்பதற்கு முன்னர் குரு பகவான் அருளும் நன்மை, தீமைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?...

விவரங்கள் அடுத்த பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..குரு யார்?

Author: தோழி / Labels:


தந்தை : ஆங்கிரஸ முனிவர்.

உரிய பால் : ஆண் கிரகம்.

உரிய நிறம் : மஞ்சள் நிறம் (பொன்னிறம்).

உரிய இனம் : பிராமண இனம்.

உரிய வடிவம் : உயரம்.

உரிய அவயம் : இருதயம்.

உரிய உலோகம் : பொன்.

உரிய மொழி : தெலுங்கு, கன்னடம், மலையாளம்.

உரிய ரத்தினம் : புஷ்பராகம்.

உரிய ஆடை : பொன்னிற ஆடை.

உரிய மலர் : முல்லை.

உரிய தூபம் : ஆம்பல்.

உரிய வாகனம் : யானை.

உரிய சமித்து : அரசு.

உரிய சுவை : தித்திப்பு.

உரிய தான்யம் : கொத்துக்கடலை.

உரிய பஞ்ச பூதம் : தேயு.

உரிய நாடி : வாத நாடி.

உரிய திக்கு : வடகிழக்கு( ஈசான்யம் ).

உரிய அதி தேவதை : பிரம்மா, தட்சிணாமூர்த்தி.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.

உரிய குணம் : சாந்தம்.

உரிய ஆசன வடிவம் : செவ்வகம்.

உரிய தேசம் : சிந்து.

நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.

பகைப் பெற்ற கோள்கள் : புதன், சுக்கிரன்.

சமனான நிலை கொண்ட கோள்கள் : சனி, ராகு, கேது.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒருவருடம்.

உரிய தெசா புத்திக் காலம் : பதினாறு ஆண்டுகள்.

வியாழனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : சிம்மம், கன்னி, ரிஷபம், மிதுனம், துலாம், கும்பம்.

பகை வீடு : . மேஷம், விருச்சிகம்.

ஆட்சி பெற்ற இடம் : தனுசு, மீனம்.

நீசம் பெற்ற இடம் : மகரம்.

உச்சம் பெற்ற இடம் : கடகம்.

மூலதிரி கோணம் : தனுசு.

உரிய உப கிரகம் : எமகண்டன்.

உரிய காரகத்துவம் : புத்திர காரகன்.

இது எனது மற்றொரு வலைமனையின் பதிவு.. அவசியம் கருதி இங்கே மீள் பதிவாக்கி இருக்கிறேன்.

தகவல்கள் நாளையும் தொடரும்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... குரு

Author: தோழி / Labels:

எந்த ஒரு தினசரியாகட்டும், வாராந்திரி ஆகட்டும், மாதாந்திரி ஆகட்டும் புரட்டுகிற பக்கமெல்லாம் குரு பெயர்ச்சி பற்றிய விளம்பரங்களும், பலன்களும் என பரபரப்பாக காட்சி அளிக்கின்றன. ஒருவரோ ஒரு ராசிக்கு பயமுறுத்தும் பலன்களைச் சொல்கிறார், மற்றவரோ அதே ராசிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டப் போவதாக பலன் எழுதுகிறார். இவற்றில் எது உண்மை, எது பொய் என்ற குழப்பம் இந்த பலன்களின் நம்பகத் தன்மை மீது ஒருவித சந்தேகத்தினையும் உருவாக்கி விடுகிறது. வர்த்தக ரீதியாக இதை அணுகிடுவோர் ஒரு போதும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதேஇல்லை.

சோதிட இயல் பற்றி சித்தர் பெருமக்கள் பரந்து பட்ட அளவில் தகவல்களை அருளியிருக்கின்றனர். இவை புத்தகங்களாகவும் அச்சேறி இருக்கின்றன. நம்முடைய பதிவிலும் கூட சோதிடவியல் பற்றிய தகவல்களை முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். 

இனி வரும் நாட்களில் குரு பகவான் குறித்தும், அவரின் இயல்புகள், நகர்வுகள், அதனால் உண்டாகும் பலன்கள், அதற்கான பரிகாரங்கள் பற்றி சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களைப் பார்க்க இருக்கிறோம். குருவின் மகத்துவம் பற்றி பல்வேறு பழந்தமிழ் நூல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. புலிப்பாணி சித்தர் குருவின் மகத்துவத்தினை பின்வருமாறு கூறுகிறார்.

ஓமென்ற வியாழனுக்கு ஆட்சிகேளு
உண்மையுடன் தனுமீன மிரண்டேயாகும்
காமென்ற கற்கடகம் உச்சமாகும்
கனமில்லா மகரமது நீச வீடாம்
போமென்ற விருச்சிகமும் பகையதாகும்
புகழ்பெற்ற மற்றேழு ராசிநட்பாம்
நாமென்ற போகருட கடாக்ஷத்தாலே
நயமாக புலிப்பாணி நவின்றிட்டேனே.

குருவானவர் சோதிட இயலில் ஐந்தாவது கோளாக குறிக்கப் படுவதுடன். பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார். அவையாவன...

வியாழன், அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டனப்பான், குரு, சிகண்டிசன், சீவன், சுருகுறா, தாரபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகற்பதி, வீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன் என்பனவாகும்.

குருவின் குண இயல்புகள் மற்றும் அவரின் அம்சங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... தடங்கலுக்கு வருந்துகிறேன்.

Author: தோழி / Labels:

பணி நிமித்தமாய் வெளியூரில் முகாமிட்டிருப்பதால் பதிவினை மேம்படுத்திட இயலவில்லை. ஊர் திரும்பியதும் வழமை போல பதிவுகள் தொடரும். புரிந்துணர்வுக்கு நன்றி.


தீவினை அழிக்கும் புவனை யந்திரம்...

Author: தோழி / Labels: , ,

சித்தர்கள் வணங்கிய தெய்வத்தின் பெயர் வாலை என்பதாகும். ஆதி சக்தியின் பத்து வயது பெண் வடிவமே இந்த வாலை. வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு யந்திரத்தின் மூலம் ஒருவர் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.

அத்தகைய யந்திரம் பற்றி அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.

தெரிசிக்க இன்னமொரு கருவைக்கேளு
சிவசிவா புவனைபதி னாறுவீட்டில்
தெரிசிக்க வேணுமென்னா லந்தவீட்டில்
செம்மையுடன் ஓம்கிலி சிறிறீங்கென்று
தெரிசிக்கப் பதினாறு வீட்டிலேதான்
சிந்தையுடன் கால்தலையாய் மாரிக்கொண்டு
தெரிசிக்க மானதமாய்ப் பூசைசெய்து
திருவேற நூற்றெட்டு உருவேசெய்யே.

- அகத்தியர்.

உருவேத்திப் புவனையுட சக்கரத்தை
உண்மையுடன் மானிடர்க்குக் காட்டினாக்கால்
கருவொத்து நின்றுபல வியாதியெல்லாம்
கண்காணா தோடுமடா கருத்தாய்ப்பாரு
வருவித்த வஞ்சனைகள்ள பில்லிஏவல்
மகத்தான பிசாசுகளு மதிகெட்டோடும்
திருவுத்த குருவருளால் புவனைதானும்
தீர்க்கமுட வினைத்தபடி செய்வாள்பாரே.

- அகத்தியர்.

இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.


இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.

இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை நாளில், கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்திட வேண்டும்.

"ஓம் கிலி சிறி றீங்"

இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் அனைத்தும் நீங்குவதுடன். அவர்களின் எதிரிகள், வஞ்சகர்கள் நீங்கிவிடுவார்களாம். பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடுமாம். அத்துடன் புவனை அம்மனின் அருளும் கிட்டும் என்கிறார் அகத்தியர். 

நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..எதிரிகளை வெல்லும் “சத்ரு ஜெய” ஹோமம்!

Author: தோழி / Labels: ,

தமிழர்கள் வாழ்வில் தீ வளர்த்து செய்யும் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர். வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல பெயர்களால் வழங்கப் படும் இந்தத் தீச்சடங்கு குறித்த அறிமுகங்களையும் அவற்றின் வகைகளையும் ஏற்கனவே பல பதிவுகளின் ஊடே பகிர்ந்திருப்பதால், நேரடியாக சத்ருஜெய ஹோமம் பற்றி பார்ப்போம். 

புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் ஹோமச் சடங்குகள் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசித்து விட வேண்டுகிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து இந்த தகவல்கள் சேகரிக்கப் பட்டது.

கேளப்பா சத்ருஜெயஓம சூட்சுமந்தான்
கெடியான நாற்கோண குண்டம்செய்து
தயங்காதே நாயுருவி சமித்துவாங்கி
திறமாக அக்கினியேதான் வளர்த்து
மயங்காமல் புவனையுட மந்திரந்தன்னால்
மகத்தான கொடியறுகா லோமம்பண்ணு.

- அகத்தியர்.

செய்யப்பா நூத்தெட்டு ஆகுதியேசெய்ய
சிறுமையோடு சதிநோக்கும்சத்ருகள் சிதறிப்போகும்
போமடா சதிகளெலாம் முனைக்கண்டபோதே
பொல்லாங்கு செயல்களெல்லாம் நில்லாதையா
சொல்லடா சொல்லுதற்கு நாவேயில்லை
சத்ருஜெய ஓமத்தின் பெருமைதானே.

- அகத்தியர்.

இந்த ஹோமத்திற்கு நாற்கோண ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம். பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த ஹோம குண்டத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.


ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் நாயுருவி குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறியவாறே தீயை வளர்க்க வேண்டும்.

நன்கு வளர்ந்த தீயில் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே கொடியறுகினைப் போட வேண்டுமாம். இப்படி 108 தடவை மந்திரம் சொல்லி கொடியறுகினைப் போடவேண்டும் என்கிறார்.

இப்படி செய்வதன் மூலம் இந்த ஹோமத்தை செய்தவரின் எதிரிகள் இல்லாது நீங்குவதுடன், சதிச் செயல்கள், பொல்லாங்குகளினால் எவ்வித துன்பமும் விளையாது என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தை எவரும் செய்து பலனடையலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...மின்னூல் - காலங்கிநாதர் அருளிய "பூஜாவிதி 85”

Author: தோழி / Labels: ,

நண்பர்களே,

மிகவும் பழமையான சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்திடும் தொடர் முயற்சியில், பதினாறாவது படைப்பாக காலங்கிநாதர் அருளிய "பூஜாவிதி 85” என்ற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.

காலங்கி நாதர் திருமூலரின் சீடர்களில் முக்கியமானவராக கருதப் படுகிறார். சொல்வதை விட கேட்பதே சிறந்தது என்ற கோட்பாட்டைக் கொண்டவர். அதனால் பல்வேறு சித்தர் பெருமக்களை தேடிச் சென்று பலதகவல்களை அறிந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் காஞ்சியம்பதியில் சமாதியடைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது.

இத்தனை பெருமை கொண்ட சித்த புருஷரின் இந்த நூலானது அவரது பரந்து பட்ட அனுபவத்தின் தொகுப்பாக விளங்குகிறது. கணபதி பூஜை முதல் நவக்கிரக பூஜை, மூலிகை வித்தை, யந்திர பூஜைகள், மருந்துகள், கற்பவகைகள், மைகள், வாதவித்தைகள், குளிகைகள் போன்ற பல அரிய தகவல்களையும் அதன் முறைகளையும் தெளிவாக விளக்கி கூறியிருக்கிறார்.

"ஆமப்பா பூசைவிதி மார்க்கந் தன்னை
அன்பு வைத்து கைமுறைகள் அதிகம் சொன்னேன்
ஓமப்பா கைமுறைகள் அதிகம் சொன்னேன்
உண்மையுள்ள பூசையது நுணுக்கமெத்த"

தமிழ் அறிந்த அனைவரும் இத்தகைய பெருமை வாய்ந்த நூலின் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் மின் நூலாக தொகுத்திருக்கிறேன். இத்தகைய முயற்சிகளின் வெற்றி என்பது இத்தகைய நூல்கள் எத்தனை பேரைச் சென்று அடைகிறது என்பதில்தான் இருக்கிறது. எனவே தயவு செய்து இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல...

மேலான எனது குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


என்றும் நட்புடன்,

தோழி..
www.siththarkal.com

தொடர்புக்கு:-
siththarkal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...பூமணி குளிகை!

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் மருத்துவத்தில் குளிகை என்ற பெயருக்கு தனியிடம் உண்டு. தற்போது அலோபதி மருத்துவம் முன் வைக்கும் மாத்திரைக்கு இணையாக குளிகையைச் சொல்லலாம். ஆம்!, ஒரு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தினை வில்லையாகவோ அல்லது உருண்டையாகவோ உருட்டி காய வைத்து பயன்படுத்துவதுண்டு. இதனையே நாம் குளிகை என்கிறோம்.

இவ்வாறு தயார் செய்யப்படும் குளிகை வகைகளில் ஒன்றான "பூமணி குளிகை" தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

கேளடா பூமணிதான் சொல்லக்கேளு
கிருபையாம் கடுகுரோகணியு யிலுப்பைப்பூவும்
நானடா வாளமது ரெட்டிசேர்த்து
நலமான குமரிச்சா றதனாலாட்டி
வேளடா நாற்சாம மரைத்துக்கொண்டு
விதமான தூதளங்காய்ப் போலுருட்டித்
தாளடா நிழலிலுர்த்திச் செப்பில்வைத்துத்
தளமான விஞ்சிரசந் தேனுங்கூட்டே.

அகத்தியர்.

கூட்டிய மாத்திரைதா னொன்றுதேய்த்துக்
குழப்பியே காலமே கொடுத்தாற்கேளு
நாட்டியதோர் சன்னிசுர மெல்லாந்தீரும்
நலமான விடசுரமும் நாடாதோடும்
தீட்டியதோ ருள்ளியென்ற தைலத்தூட்ட
திறமான தோடமெல்லாந் தீருந்தீரும்
வாட்டியே யெண்ணையிலே கொடுத்தாயானால்
வாங்கிவிடும் வாயுவெல்லா மாண்டுபோமே.

அகத்தியர்.

கடுகுரோகணி, இலுப்பைப் பூ ஆகியவற்றை ஒன்றுக்கு இரண்டு ( 1 : 2 ) என்ற எடை வீதம் எடுத்து, அவற்றை கல்வத்தில் இட்டு சோற்றுக் கற்றாழைச் சாறு விட்டு  *நான்கு சாமம் அரைத்து அதனை தூதுளங்காய் அளவில் குளிகைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி, செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். இதுவே “பூமணி குளிகை”. 

சேமித்த குளிகையில் ஒன்றினை எடுத்து காலை வேளையில் இஞ்சிச்சாறும் தேனும் சேர்த்த கலவையில் கரைத்து உண்டால் சன்னி சுரமும், விஷ சுரமும் குணமாகுமாம்.  

பூமணி குளிகையில் ஒன்றினை எடுத்து காலை வேளையில் உள்ளித்தைலத்தில் கரைத்து உண்டால் தோஷ நோய்கள் அனைத்தும் நீங்குமாம். 

இந்த குளிகையில் ஒன்றினை எடுத்து காலை வேளையில் நல்லெண்ணையில் கரைத்து உண்டால் வாய்வு நோய்கள், பாண்டு நோய்கள் ஆகியவை குணமாகும் என்கிறார் அகத்தியர்.

இந்த குளிகைக்கு பத்தியங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

*ஒரு சாமம் என்பது மூன்று மணி நேரம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...