தன்வந்திரி அருளிய எஃகு பற்பம் (பஸ்பம்)

Author: தோழி / Labels: ,

சித்த மருத்துவத்தில் தேவையான சரக்குகளை தனியாகவோ அல்லது சேர்த்தோ புடம் போட்டோ, வறுத்தோ, எரித்த ஊதியோ வெளுக்குபடிச் செய்து எடுத்துக் கொள்வது பற்பம் அல்லது பஸ்பம் எனப்படும். உலோகங்களை பற்பமாக்கி அவற்றை மருந்தாகக் கொடுக்கும் வழக்கம் சித்தரியலில் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்திலும் கூட ஏழு வகையான பற்பங்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. 

அந்த வகையில் தன்வந்திரி அருளிய "தன்வந்திரி வைத்திய காவியம்" என்ற நூலில் இரும்பினை பற்பமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம். இந்த பற்பம் "எஃகு பற்பம்" எனப் படுகிறது. 

பாடுகிறேன் மானிடர்க்கு எஃகுபற்பந்தான்
பொல்லாத அயமதுவும் வெட்டையாகும்
நாட்டிடவே கானகத்தில் கடலைமூலி
நலமான மூலிதன்னைக் குகைபோல்செய்து
நீட்டிடவே அயப்பொடியை பொதிந்துமூடி
நிர்ணயமாய் நந்தியைத்தான் போற்றிசெய்து
மாட்டிடவே கெசபுடமே யிட்டாயானால்
மாசற்ற பற்பமது ஆச்சு ஆச்சே.

- தன்வந்திரி.

ஆச்சப்பா அயப்பற்பம் செப்பக்கேளு
அரிசியிடை வெண்ணைதனில் கொள்வாயானால்
பேச்சப்பா யில்லையப்பா வியாதிநீங்கப்
பேரான மருந்தொன்று வேண்டாம்பாரு
நோச்சப்பா திரேகமது நரம்புதாது
நோயற்ற வலுவுண்டா மிகுந்த பற்பம்
வீச்சப்பா காந்தியது அழகுண்டாகும்
வித்தகனே நந்தி சொல்ல உரைத்தோம் நாமே.

- தன்வந்திரி.

காட்டில் காணப்படும் கடலைமூலி எனப்படும் மூலிகையினை எடுத்துவந்து நன்கு அரைத்து  குகை செய்து அதனுள் அயப்பொடியைப் வைத்து அதன் மேலே சீலைமண் செய்து நன்றாக காயவைத்து "கஜப்புடம்" இட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் தன்வந்திரி. (புடங்கள் பற்றிய எனது முந்தைய பதிவில் கஜப்புடம் பற்றிய தகவல் இருக்கிறது.) இப்படி செய்தால் அயப்பொடியானது நீறி பற்பம் ஆகியிருக்குமாம். இதுவே எஃகு பற்பம்.

இப்படி தயார் செய்யப் பட்ட எஃகு பற்பத்தை ஒரு மண்டல கால அளவிற்கு அரிசி எடை அளவில் எடுத்து வெண்ணையில் குழைத்துக் காலையும், மாலையும் தொடர்ந்து உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டுவர உடலில் உள்ள நரம்பு , தாது போன்றவை வலுவடையுமாம்,  அத்துடன் உடல் வலிமையும் அழகும் பெறுவதுடன் நோய்களும் அணுகாது என்கிறார். இந்த பற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொலலப்படவில்லை.

ஆச்சர்யமான தகவல்தானே!

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

0 comments:

Post a Comment