தேரையர் அருளிய விஷக்கடி வைத்தியம்.

Author: தோழி / Labels: , ,

இயற்கையோடு இணைந்த பெருவாழ்வு என்கிற தத்துவத்தின் வழி நின்ற நம் முன்னோர்களின்  வாழ்விடங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளை ஒட்டியோ அல்லது வனப் பகுதிகளை ஒட்டியோ அமைந்திருந்தன. இத்தகைய சூழலில், அவர்களுக்கு சவாலாய் இருந்த காரணிகளில் முதன்மை யானது பாம்புகள், பூச்சிகளினால் உண்டாகும் விஷக் கடியினைக் குறிப்பிடலாம்.

இந்த விஷக்கடிக்கான மருத்துவம் என்பது சித்த மருத்துவத்தில் பெரியதொரு பகுதியாக காணப்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற இந்த விஷக்கடி மருத்துவ முறைகளுள் ஒன்றினைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

இந்த குறிப்பு தேரையர் அருளிய “தேரையர் வைத்திய காவியம்” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

செப்பும் தோஷ சகல விஷங்கட்கு
வெப்பும் எட்டிப் பழச்சாறு வாங்கியே
துப்பும் வேப்பெண்ணெய் சரிசமன் கூட்டியே
கப்பு மெழுகுபோல் காச்சி வடித்திடே.

- தேரையர்.

வடித்துமே செப்பில் வாகாக மூடியே
துடித்த விஷங்கள் தீண்டின பேருக்கு
வெடித்த தூதளங் காயள வாகவே
நடித்து போதுண்ண நல்விஷந் தீருமே.

- தேரையர்.

எட்டிப் பழச்சாறுடன் அதற்கு சம அளவு வேப்பெண்ணெய் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் ஏற்றி மெழுகு பதமாக காய்ச்சி வடிகட்டி எடுத்து செம்பினால் ஆன சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார். பின்னர் எந்தவகையான விஷக் கடியானாலும், சிமிழில் சேமித்து வைத்த மருந்தில் இருந்து தூதுளங்காய் அளவு எடுத்து, பாதிக்கப் பட்டவருக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு உண்ணக் கொடுத்தால் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம்  நீங்கி விடும் என்கிறார்.

இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. 

நானறிந்த வரையில் இந்த மருத்துவ குறிப்பின் நம்பகத் தன்மை ஆய்வின் மூலம் உறுதி செய்யப் படவில்லை. எனவே சித்த மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

1 comments:

S.Puvi said...


தகவலுக்கு நன்றி.
ஒருவருக்கு பாம்போ அல்லது விசக்கடி ஏற்பட்டதும், அந்த விசம் எப்படி உடலில் பரவி மரணத்தை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி விளக்கிக்கூற முடியுமா?

Post a Comment