வள்ளல் பெருமானின் ஆன்மிகம் என்பது...

Author: தோழி / Labels: ,

அருட்பா, மருட்பா என ஒரு பக்கம் கடுமையான வாத விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் மறுபக்கத்தில் வள்ளல் பெருமானார் தனது ஆன்மிக தேடலின்  தெளிவு நிலைக்கு வந்திருந்தார். தன் தெளிவுகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து அதனை உலகத்தாருக்கு உணர்த்தும் வகையில் பாடல்களாய் எழுதிடவும் துவங்கினார். 

தூய்மையான அறிவுதான் தெய்வம். அது பேரன்பும், பெருங் கருனையும் கொண்டது. அது ஓர் உருவமில்லை. தூய சுடரைப் போல தெளிந்த பரிசுத்த நிலை. அந்த நிலையின் முன்னர் அனைவரும் சமம். இத்தகைய அன்பும், கருணையுமான இறை நிலையை நமக்குள் வளர்த்துக் கொள்வதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதாக அவரின் தெளிவுகள் இருந்தன.

தான் தெளிந்த ஆன்மிக நிலையை அடையத் தடையாக இருக்கும், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், அவற்றைத் தாங்கிப் பிடித்த மூடநம்பிக்கைகளை முற்றாக நிராகரிக்கக் கூறினார். சாதியின் பெயரால் ஏற்றத் தாழ்வு சொல்லி மக்களை பிரித்து அவர்களை பாகுபடுத்துவதையும் கடுமையாக எதிர்த்தார். மேலும் இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகவும், அதிகாரமாகவும் செயல்படும் மதத்தையும் நிராகரித்தார்.

வள்ளல் பெருமானின் இத்தகைய நிராகரிப்புகளே  பழமை வாதிகளுக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் கிளப்பின. அவரது இத்தகைய நிலைப்பாட்டினை பின் வரும் சில பாக்களின் மூலம் அறியலாம்.

"சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி." 

(அருட்காட்சி - ஆறாம் திருமுறை)

"சாதியும் மதமும் சமயமும் பொய்என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”

(அருட்பெருஞ்சோதி அகவல் - ஆறாம் திருமுறை)

"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்"

(சுத்த சன்மார்க்க வேண்டுகோள் - ஆறாம் திருமுறை)

இது போன்ற கருத்துக்கள் யாவும் அவர் பின்னாளில் அருளிய ஆறாம் திருமுறை தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. 

தன்னுடைய இந்த கருத்துக்களை அவர் ஊர் ஊராய்ப் போய் சொற்பொழிவுகளின் மூலம் பரப்பிக் கொண்டிருந்தார். தனியொரு மனிதனால் இதை சாதித்து விட முடியாது என்பதை புரிந்து கொண்ட போது, தன்னுடைய இந்த நிலைப்பாட்டினை அமைப்பு ரீதியாக செயல்படுகிறவர்கள் மக்களுக்குக் கொண்டு சேர்த்திட விண்ணப்பம் செய்தார். ஆனால் பெருமானாரின் குரலை இத்தகைய அமைப்புகள் அலட்சியம் செய்ததோடு மட்டுமல்லாது அவரை பலவாறாக அவதூறும் செய்தன. வள்ளல் பெருமானோடு இணக்கமாய் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களும் ஒரு கட்டத்தில் அவரை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தனர்.

இத்தகைய சூழலில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வள்ளல் பெருமானார் மற்றவர்களை நம்பாது தானே களத்தில் இறங்கிச் செயல்பட தீர்மானித்து  1865 ல் ”சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பினை துவங்கினார். பின்னாளில் இது சமரச சன்மார்க்க சங்கம் என்பதாக பெயர் மாற்றம் கண்டது. அமைப்பு ரீதியாக வள்ளல் பெருமானார் செயல் பட ஆரம்பித்த பின்னரே 1867ல் அவரது நூல்கள் அருட்பா எனும் பெயரில் ஐந்து தொகுதிகளாக அச்சிடப் பட்டன.

இதன் பிறகே வள்ளல் பெருமானின் சமூக பங்களிப்புகள் வேகம் பெறத் துவங்கின 1865ல் துவங்கி அவரது மறைவு வரையிலான கால கட்டமே அவர் வாழ்வின் முக்கியமான பகுதியாக பார்க்கப் படுகிறது. இந்த கால கட்டத்தில் அவர் உருவாக்கிய அமைப்புகள், அதன் செயல்பாடுகள், அவற்றின் வெற்றி தோல்விகள் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

2 comments:

Bogarseedan said...

interesting

Remanthi said...

super...

Post a comment