வள்ளல் பெருமான் கடைபிடித்த நியதிகள்

Author: தோழி / Labels:

இராமலிங்க அடிகளார் சென்னையில் வாழ்ந்திருந்த காலத்தே அவர் கொண்டிருந்த ஆன்மிக தேடலையும் அதன் கூறுகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று அவர் தனக்கென வகுத்துக் கொண்டிருந்த சில வாழ்வியல் நியதிகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பக்தி மார்க்கத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு அக ஒழுக்கம் எத்தனை முக்கியமோ, அத்தனைக்கத்தனை புற வாழ்வியல் ஒழுக்கங்களும் முக்கியமானது என்பதை வள்ளல் பெருமானார் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருக்கிறார். உணவு, உடை துவங்கி உறங்குதல் வரை தெளிவான நியதிகள் வள்ளல் பெருமானாரால் அருளப் பட்டிருக்கிறது.

அந்த வகையில் தான் ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உண்வு எடுத்துக் கொள்வதாக குறிப்பிடுகிறார்.

இரவும் பகலும் தூங்கியஎன்
தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
திசைந்த பலனாய் விளைந்ததுநான்
இரண்டு பொழுதும் உண்டஎலாம்
பரவும் அமுத உணவாயிற்
றந்தோ பலர்பால் பகல்இரவும்
படித்த சமயச் சாத்திரமும்
பலரால் செய்த தோத்திரமும்
விரவிக் களித்து நாத்தடிக்க
விளம்பி விரித்த பாட்டெல்லாம்
வேதா கமத்தின் முடிமீது
விளங்கும் திருப்பாட் டாயினவே
கரவொன் றறியாப் பெருங்கருணைக்
கடவுள் இதுநின் தயவிதனைக்
கருதும் தொறும்என் கருத்தலர்ந்து
சுகமே மயமாக் கண்டதுவே. 

- இறை யின்பக் குழைவு (திருவருட்பா)

இதைப் போலவே வள்ளல் பெருமானின் உடை குறித்த அக்கறையும் அவர்தம் பாடல் வரிகளின் ஊடே நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. வள்ளல் பெருமான் இடுப்பில் வெள்ளை ஆடையொன்றை முழங்கால் மறையுமளவுக்கு உடுத்தியிருக்கிறார். மேலாடை என்பது உடல் முழுவதும் போர்த்தி தலையை மூடி முக்காடிட்டிருப்பார். இதற்கான காரணத்தை பின் வருமாறு விளக்குகிறார்.

நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது
நண்பினர் உடுத்திய போது
பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம்
பயந்தனர் வெய்யலிற் கவிகை
வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம்
வெருவினேன் கைத்துகில் வீசி
அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி
அரைக்குமேல் வீக்கினன் எந்தாய். 

- பிள்ளைப் பெரு விண்ணப்பம் (திருவருட்பா)

என்னுடைய நண்பர்கள் பொற் சரிகை இட்ட ஆடையைக் கொண்டுவந்து எனக்கு அணிவித்த போது நான் மிகவும் பயந்தேன், அதனை அறிந்தவர்கள் எல்லோரும் பயந்தார்கள். அதிக வெய்யிலில் எனக்கு துன்பமேற்படும் என்று எண்ணியவர்கள் குடையினைப் (கவிகை) பிடித்தனர் அப்போதெல்லாம் நான் மிகவும் உள்ளம் வருந்தினேன். புழுதி படிந்த தெருவில் எனது மேலாடை காற்றிற் பறக்கப் நடப்பதற்கு பயந்து அதை இடையில் இறுக்கமாக கட்டிக் கொண்டேன்.... என்றவர் மேலும் பின் வருமாறு கூறுகிறார்.

கையுற வீசி நடப்பதை நாணிக்
கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்
மெய்எலாம் ஐயகோ மறைத்தேன்.
வையமேல் பிறர்தங் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.

- பிள்ளைப் பெரு விண்ணப்பம் (திருவருட்பா)

கைகளைப் பக்கத்தே வீசிக் கொண்டு நடப்பதற்கு வெட்கப்பட்டு, அவற்றை மடக்கி மார்பிற் கட்டிக் கொண்டே நடக்கிறேன், என் உடல் வெளியே தெரிவதற்கு அஞ்சி வெண்மையான ஆடையால் போர்த்து மறைத்தே இருப்பேன்,  உலகில் மற்றவர்களில் ஆடை அணியும் முறைகளையும், நடை மற்றும் அவர்கள் தன்மைகளையும் நான் சிறிதும் கவனிப்பதில்லை. கவனித்தால் என்மனதில் பயம் உண்டாகிறது என்கிறார்.

தன்னுடைய உணவு, உடை குறித்து இத்தனை கவனமாயிருந்தது வியப்பாக இருக்கிறதுதானே!

இதைத் தவிர ஒவ்வொருவரும் தினசரி வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய நித்திய கர்ம விதிகளையும் வள்ளல் பெருமான் வகுத்துக் கொடுத்திருக்கிறார். அதனை விரிவாக இந்த தொடரின் நெடுகில் தனியொரு பதிவாக பகிர்ந்து கொள்கிறேன். அவை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

வள்ளல் பெருமானார் உணவு, உடை மற்றும் நித்திய கர்மங்கள் என ஒவ்வொன்றிலும் தனித்துவமான வாழ்க்கை முறையை பின்பற்ற  அவரது சிந்தனைப் போக்குதான் காரணம். இந்த கால கட்டத்தில் அவர் அருட்பெருஞ்சோதி என்கிற ஒளி வழிபாட்டு முறைக்கு வரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். ஆனால் அந்த இலக்குக்கான பயிற்சிக் களமாக சென்னையில் வாழ்ந்திருந்த காலகட்டத்தை குறிப்பிடலாம்.

இது பற்றிய விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

2 comments:

Remanthi said...

மிகவும் வியப்பாக உள்ளது. அருமை அருமை... அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன்.

Sivamjothi said...

There are spelling mistakes in(many other) songs.. make sure you get guidance from vallalar to interpret in correct way.

Post a comment