வள்ளல் பெருமானும் வைணவமும்.

Author: தோழி / Labels:

வள்ளல் பெருமானின் ஆன்மிக பயணம் என்பது பக்தி மார்க்கமாய் துவங்கி ஞான மார்க்கத்தை தேடியதாக இருந்திருக்கிறது. துவக்கத்தில் இறைவனை ஆராதித்து மகிழ்ந்தவர், ஒவ்வொரு கட்டமாய் தன்னுடைய நிலைப்பாடுகளை தயக்கமின்றி சுயபரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். 

தன்னிலை அறிவதும், அதை உணர்வதுமே ஞானத்தின் முதல் படி. இதைத்தான் வள்ளல் பெருமானின் துவக்க கால பாடல்களின் ஊடே நாம் காண முடிகிறது. தன்னை அறிந்த ஒருவரால் மட்டுமே தன்னுடைய நிறை குறைகளை உணரவும், ஆராயவும் முடியும். இதெல்லாம் பாரபட்சமில்லாத தேடல்களில் மட்டுமே சாத்தியம். இதை நாம் வள்ளல் பெருமானின் பாடல்களில் தொடர்ந்து காணமுடிகிறது.

பிறப்பால் சைவ சமயத்தைச் சேர்ந்தவராகவும், தீவிரமான சிவ பக்தராகவும் இருந்த வள்ளல் பெருமானார் வைணவ மத தெய்வங்களான திருமாலையும், இராமரையும் மதித்துத் துதித்துப் பாடியிருக்கிறார் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும்.

திருமாலைப் போற்றிப் பணியும் பாடல் பின்வருமாறு

திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச் 
செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத் 
தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித் 
தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே 
இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத் 
தென்அரசே என்அமுதே என்தா யேநின் 
மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ 
மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே. 

எம் பெருமாட்டியாகிய திருமகள் விரும்பி கொள்ளும் செழுமையான கனியே, பதமான சுவையுள்ள இனிய பாகு போன்றவனே, தேனே, கற்பகத்தரு இருக்கும் சோலையை ஆளும் இந்திரனைக் காப்பதற்காக கையில் வில்லேந்திய முதல்வனே, தருமம் பெற்ற மகனே, இம்மையிலும் மறுமையிலும் என் மனதில் அமர்ந்திருக்கும் ராம நாமம் என்கிற அரசனே, எனக்கு அமுதானவனே, எனக்கு தாயானவனே, பொற்தாமரை மலர்களைப்போன்ற உன் பாதங்களை வணங்கும் சிறியவனாகிய நான் மனம் வருந்துவது தெரிந்தும் அருள் செய்யவில்லையே என்று வருந்துகிறார்.

இன்னமொரு பாடல்...

காராய வண்ண மணிவண்ண
எண்ண கனசங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய
நேய ஸ்ரீராம ராம வெனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு
சூழ்க தாமோத ராய நமவோம்
நாராய ணாய நமவாம
னாய நமகேச வாய நமவே. 

-  இராமநாம சங்கீர்த்தனம் (திருவருட்பா).

பெருமையுடைய சங்கு சக்கரங்களை யுடையவனும், கார்மேகத்தினதும், கருநீல மணியினுடைய நிறத்தினையும் கொண்டவனாகிய கண்ணனே, சீதூய்மையான மலர் போன்ற வாயையுடையவனே. அன்பனே, உன்னை ஸ்ரீராம ராம என்று துதிப்பது சீரான சிறந்த  வாழ்வை அளிக்கும் அதனால் 'ஓம் தாமோதராய நம' 'நாராயணாய நம்' 'வாமனாய நம' 'கேசவாய நம' என்று நெஞ்சே நீ செபிக்க வேண்டும் என்கிறார்.

முருகப் பெருமானில் துவங்கிய அவரதுஆன்மிக தேடல் சிவனை பணிந்து, விநாயகரை போற்றி, திருமாலை வணங்கியதாக தொடர்ந்திருக்கிறது. சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பெரிய இடைவெளியும், வேற்றுமைகளும் இருந்த ஒரு காலகட்டத்தில் தீவிர சைவரான வள்ளல் பெருமானார் வைணவ தெய்வங்களை போற்றியது பாரபட்சமில்லாத எல்லோருக்கும் நிறைவான பொதுவான இறைவனைத் தேடியதையே நமக்கு உணர்த்துகிறது.

சென்னையில் வாழ்ந்திருந்த காலத்தில் (1825 - 1858) பெருமானார் தனக்கென சில நியதிகளை உருவாக்கி கடைபிடித்திருப்பதும் அவரது பாடல்களின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த நியதிகளே அவர் தேடிய ஆன்மிகத் தெளிவுக்கான அடுத்த கட்டத்திற்கு அவரை நகர்த்தியது என்றால் மிகையில்லை.

அநத வகையில் பெருமானார் கைகொண்ட அவரது உடை மற்றும் உணவு பழக்கங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சில அறியாத செய்திகள்... நன்றி...

Unknown said...

அருமை

கண்ணதாசதாசன் said...

அடுத்தடுத்த பகுதிகளை மிகுந்த ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.
நன்றிகள்!

tamilvirumbi said...

தோழி ,

வள்ளலார் ,சைவமும் வைணவமும் ,இரு கண்களை போன்றவை என்று கருதியதால் ,அவர் ,திருமாலையும் , ராமரையும் புகழ்ந்து பாடியுள்ளார் . மேலும் ,அவர் ,ஒரு முறை ,தாளாத வயிற்று வலியால் , மதுரையில் உள்ள கள்ளழகர் மேல் ,நிறைய பாடல்கள் பாடியுள்ளார் .நமது ,அறியாமையால் இழந்து விட்டோம் .இதெல்லாம் ,
செவி வழி செய்தியாக சேகரித்தவை .தங்களிடம் இருந்தால் ,பதிவிடுங்கள் .மிக்க நன்றி.

Post a comment