வள்ளல் பெருமான் காலத்தைய தமிழகம்

Author: தோழி / Labels:

வள்ளல் பெருமானைப் பற்றி பாரபட்சமில்லாமல் புரிந்து கொள்ள நினைக்கும் போது, அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் எத்தகைய சூழல் நிலவியது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. எந்த ஒரு மனிதனும் தான் வாழும் காலத்தின் சமூக வாழ்வியல் சூழல்களின் தாக்கங்களை உள்வாங்கி பிரதிபலிக்கிறவனாகவே இருக்கிறான். இதற்கு வள்ளல் பெருமானாரும் விதிவிலக்கில்லை.

முகலாய பேரரசு உச்சத்தில் இருந்த போது கிழக்கிந்திய கம்பெனி என்கிற பெயரில் இந்தியாவில் வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு பிடிக்கத் துவங்கி, வள்ளல் பெருமானார் காலத்தில் ஆட்சி அதிகாரத்தோடு வலுவாக வேரூன்றி விட்டிருந்தனர். தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகள் முழுமையாக அவர்களது கட்டுப்பாட்டில் வந்திருந்தது. 

குறிப்பிட்ட சில சாதியினருக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பும் வசதியும் இருந்தது.  மற்றவர்கள் கல்வியறிவு இல்லாத பாமரர்களாகவே இருந்தனர். விவசாயம் என்பது பெருந்தனக்காரர்களிடம் சிக்கியிருந்தது. பண்ணையடிமைகளாகவே விவசாயிகள் இருந்தனர். இதனால் உணவுத் தட்டுப்பாடு மேலோங்கி இருந்தது. பெரும்பான்மை மக்கள் பசியிலும், பஞ்சத்திலும் சிக்கி வறுமைப் பட்டிருந்தனர்.

சைவ மதம் என்பது பிராமணர்கள் மற்றும் சைவ வேளாளர்கள் என்கிற இரண்டு சாதியினரின் கட்டுப்பாட்டில் அல்லது வழி நடத்துதலில் இருந்தது. இந்த இரண்டு பிரிவினருக்குமிடையே ஒத்த கருத்துக்கள் இல்லை. சாதீயத்தின் வேர்கள் சமூகத்தின்  நீள அகலங்களில் ஊடுருவி கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த காலம். இவர்களுக்குப் போட்டியாக கிருத்துவ பாதிரிமார்கள் தங்கள் மதத்தினை பரப்பும் முயற்சியில் அரச ஆதரவோடு களமிறங்கியிருந்தனர்.

கிருத்துவ மதம் முன்னிருத்திய ஓரிறை கொள்கை தமிழர்களுக்கு புதியதாக இருந்தது. மேலும் சாதியின் பெயரால் காலம் காலமாய் ஒடுக்கப் பட்டு இழிநிலையில் இருந்த மக்களின் முன்னே கிருத்துவ பாதிரிமார்கள் முன் வைத்த  தனிமனித நலன்கள், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள், சமூகவியல் சுதந்திரம்  போன்ற கருத்தாக்கங்கள் பரவலான வரவேற்பினை பெற்றிருந்தது. இதனால் கிருத்துவ பாதிரிமார்களின் மதமாற்றம் செய்யும் வேலை எளிதானதாக இருந்தது.

இவ்வாறு ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும் தரும் மதமாக கிருத்துவ மதம் உருவெடுக்கத் துவங்கியது சைவ சமய வாதிகளுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. இதனால் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அவதூறு சொல்வதும், மத நம்பிக்கைகளை தூற்றுவதும், வழக்காடுவதும் என கருத்து மோதல்கள் பரவலாய் நடந்தேறிக் கொண்டிருந்தது.  தங்களின் பிடி நழுவுவதை விரும்பாத சைவ மத பற்றாளர்கள் முழு முனைப்புடன் சைவ மதத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கினர்.

சைவ மத மீட்டுருவாக்கம் என்பது வடமொழி வேதங்கள்,ஸ்லோகங்கள், சடங்குகள் போன்றவைகளை களைந்து,  சைவ மதத்தை தமிழின் ஊடாக முன்னிலைப் படுத்துவதாகவே அமைந்திருந்தது. வடமொழி நூல்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப் பட்டன. புத்தகங்களை அச்சிடும் வழக்கம் தோன்றியதால் பல உரை நடை நூல்கள் தமிழில் எழுதப் பட்டன. இதில் யாழ்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் போன்றோரின் பங்களிப்பு மகத்தானது. 

இந்த கால கட்டத்தில்தான் வள்ளல் பெருமானின் பாடல்களை அவரது அணுக்கத் தொண்டர்கள் நூலாக தொகுக்க முனைந்தனர். வள்ளல் பெருமானாரின் முழு விருப்பம் இல்லாமலே ஐந்து தொகுதிகளாக திருவருட்பா எனும் பெயரில் நூலாக பதிப்பிக்கப் பட்டன. 1867ல் வெளியான இந்த நூல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன. கோவில்களிலும், சமூக கூட்டங்களிலும் வள்ளல் பெருமானின் பாடல்கள் பாடப் பெற்றன. இதற்கு சைவ மத பற்றாளர்களும் ஆதரவளித்தனர்.

ஆனால் இந்த கால கட்டத்தில் வள்ளல் பெருமானார் தனது ஆன்மிக தெளிவில் வேறோர் தளத்திற்கு வந்திருந்தார்.

அந்த விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

2 comments:

kimu said...

அருமையான பதிவு.
நன்றி தோழி.

kimu said...

"இறைவனுடைய திரு அருளால் பாடப் பெற்றதால் அவைகடகு திரு அருபா என்னும் பெயரிடப்பட்டது அதேபோல் இறைவனால் வருவிக்க உற்றவர் என்பதால் இராமலிங்கம் என்ற பெயரை "திரு அருட்பிரகாச வள்ளலார்" என்னும் பெயரிட்டு போற்றி மகிழ்ந்தனர் .ஆனால் இவை வள்ளலாருக்கு சம்மதமில்லை வள்ளலார் .என்பது இறைவனுக்கு மட்டுமே பொருத்தமானது அவை எனக்கு பொருத்தமில்லை என்று மறுத்தார் ,அன்பர்களின் வேண்டு கோளுக்கு இணங்க ஏற்றுக் கொண்டார் ." -- http://suddhasanmargham.blogspot.in/2011_09_01_archive.html

Post a comment