இராமலிங்க அடிகள் (1825 - 1858)

Author: தோழி / Labels:

இராமலிங்க அடிகளாரின் இளமைப் பருவம் பற்றி கூறப்படும் பல்வேறு சம்பவங்கள், அவரையொரு அசாத்தியமான சக்திகள் நிறைந்த மிகை மனிதராகவே காட்சிப் படுத்துகின்றன. பின்னாளில் ஆன்மிகத்தில் அவர் தொட்ட உயரங்களை மனதில் கொண்டு அவருடைய அணுக்கத் தொண்டர்கள் இத்தகைய தொன்ம சித்திரங்கள் நிறைந்த இளமைக் காலத்தை கட்டமைத்திருக்க கூடும் என்கிற எண்ணமே எனக்கு மேலோங்குகிறது.

உதாரணத்திற்கு சில சம்பவங்களை பட்டியலிட விரும்புகிறேன்.

ஐந்து திங்கள் பருவத்தில் சிதம்பர ரகசியத்தை வெட்ட வெளியாக காட்டப் பெற்றது.

ஒன்பதாம் வயதில் முருகப் பெருமானால் ஆட்கொள்ளப் பட்டது

பிள்ளைப் பருவத்தே திண்ணையில் இருந்து விழாமல் காக்கப் பெற்றது.

வடிவுடையம்மை அண்ணியார் வடிவில் தோன்றி உணவளித்தது.

இத்தகைய சம்பவங்களின் சாத்திய அசாத்தியங்கள் மற்றும் அதன் நம்பகத் தன்மைகளை தீர்மானிக்கும் பொறுப்பினை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

நமக்குக் கிடைத்திருக்கும் குறிப்புகளின் படி வள்ளல் பெருமானார் தனது பன்னிரெண்டாவது வயதில் ஞானவாழ்வை மேற்கொண்டதாகத் தெரிகிறது. தன் ஆன்மிக வாழ்வின் துவக்க நாட்களில் திருத்தணிகை முருகனே இவரது விருப்ப தெய்வமாய் இருந்திருக்கிறார்.பின்னர் கந்தகோட்டம் முருகனையும் ஆராதித்திருக்கிறார். 

இந்த கால கட்டத்தில் அவருடைய வழிபடு தெய்வமாக முருகனும், வழிபடு குருவாக திருஞான சம்பந்தரும், வழிபடு நூலாக திருவாசகமும் இருந்திருக்கின்றது. தன்னுடைய சற்குரு பற்றி பின்வருமாறு கூறியிருக்கிறார்.

உயிர்அனு பவம்உற்றிடில் அதனிடத்தே
ஓங்கருள் அனுபவம்உறும்அச்
செயிரில்நல் அனுப வத்திலே சுத்த
சிவஅனு பவம்உறும் என்றாய்
பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப்
பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான
பந்தன்என் றோங்குசற் குருவே. 

- ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை (திருவருட்பா)

துவக்கத்தில் முருக பக்தராய் இருந்தவர், பின்னாளில் சென்னையை அடுத்த ஒற்றியூரில்(தற்போது திருவெற்றியூர்) உறைந்திருக்கும் சிவனிடம் மனதை பறிகொடுத்து சிவபக்தராகியிருக்கிறார். சிதம்பரம் நடராஜரும் வள்ளல் பெருமானின் இஷ்ட தெய்வம். சிதம்பர ரகசியம் பற்றி தானறிந்து கொண்டதை பெருமானார் பின்வரும் பாடலில் இவ்வாறாக கூறியிருக்கிறார்.

தாய்முதலோ ரொடு சிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

 -  அருள்விளக்க மாலை (திருவருட்பா)

பதிவின் நீளம் கருதி அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...

tamilvirumbi said...

தோழி ,

தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி . எத்தனை முறை ,வள்ளலார் பற்றி படித்தாலும் தெரிந்துகொள்ள மிக ஆர்வம் .மேலும் ,ராமகிருஷ்ண பரமஹம்சர் ,வடலூர் வள்ளலார் ,இருவரும்
சமகாலத்தவர்கள் . ஆனால் ,ராமகிருஷ்ண பரமஹம்சரை ,அறிந்த அளவிற்கு ,வள்ளலாரை தமிழ் மக்களில் ,சில பகுதிகளில் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். இதற்கு ,தமிழர்கள் ,
வள்ளலாரை பற்றியோ ,அவரது கொள்கைகளை பற்றியோ ,அறியாமை காரணமாக தெரிந்திருக்கவில்லை என்பது தான் எனது கருத்து. தாங்கள் ,வள்ளலாரை பற்றி ,நிறைய செய்திகளை வெளிகொனர்வீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்களுடன்

Bogarseedan said...

nice continue...

sundar003 said...

It's really very interesting...

sundar003 said...

It's really very interesting...

Post a comment