ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சுயசரிதையில் வள்ளலார் பற்றிய தகவல்கள்.....

Author: தோழி / Labels: , ,

கொள்கையின் அடிப்படையில் வள்ளல் பெருமானுக்கு எதிர்நிலையின் நின்றவர்களில் முதன்மையானவரான ஆறுமுக நாவலரின் சுயசரிதையானது  “ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சரித்திரம்”  என்னும் பெயரில் எழுதப் பட்டிருக்கிறது. இதனை அவரது சகோதரரின் மகனான யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாசபிள்ளை என்பவர் எழுதியிருக்கிறார். இதன்  முதற்பதிப்பு நள வருடம் 1916 மார்கழி மாதம் சென்னை ஆறுமுகநாவலர் வித்தியாநுபாலன அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

இந்த நூலில் இராமலிங்கருக்கும், ஆறுமுக நாவலருக்குமான பிரச்சினையை தனியொரு அத்தியாயமாகவே அச்சிட்டிருக்கின்றனர். இந்த விவரங்கள் ஆறுமுக நாவலர் தரப்பினை சொல்வதாக இருக்கிறது. இராமலிங்க அடிகளின் தரப்பு மட்டுமே வெளியில் தெரிந்த நிலையில் இந்த பகுதியை இங்கே பதிவது அவசியமென கருதி அதனை அப்படியே தருகிறேன்.ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் என்பதால் வாசிக்க சற்றே சிரமமாயிருக்கும். கூடுதல் கவனம் வைத்து படித்தால் எளிதில் விளங்கும்.

10 -ஆம் அதிகாரம் - அருட்பா வழக்கு...

இந்தியாவிலே சிதம்பரத்துக்குச் சமீபத்தில் கருங்குழி என்றோர் இடமுண்டு. அங்கே இராமலிங்கபிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவர் ஏதோ ஒரு வைராக்கியத்தினாலே சுவாமியாகிச் சென்னபட்டணத்திற் போயிருந்தனர். அங்கே அவர் தாம் சிவானுபூதி பெற்றவரென்று உலகத்தார் நம்பித் தம்மை வழிபடும் பொருட்டிச் சில பாடல்களைப் பாடி அவைகளுக்குத் திருவருட்பாவென்றும், தமக்குத் திருவருட்பிரகாச வள்ளலாரென்றும் தாமே பெயரிட்டுக்கொண்டும், தம்முடைய மாணாக்கர் ஒருவராலே தமக்குத் திருவருட்பா வரலாறென ஒரு புராணஞ் செய்வித்து இறுதியிற் சேர்த்துக் கொண்டும், அச்சிற் பதிப்பித்து விக்கிரயஞ் செய்வித்தனர். அது கண்ட அறிவிலிகள் சிலர், அவ்விராமலிங்கபிள்ளை முன்னிருந்த சமயாசாரியர்களோடு சமத்துவமுடையவரென்றும், அவர் பாடல் தேவார திருவாசகங்களோடு சமத்துவமுடையதென்றும், பாராட்டிக் கொண்டும், புசித்துக்கொண்டும், அனுட்டானம் பூசை சிவ தரிசனம் முதலியன செய்யுங் காலங்களில் ஓதிக் கொண்டும் வந்தார்கள்; சிலபோது சென்னபட்டணத்திலுள்ள சில ஆலயங்களில் உற்சவத்திலே தேவாரம் முதலிய அருட்பாக்களை நிறுத்திவிட்டு இராமலிங்கபிள்ளை பாடலையே ஓதுவித்தார்கள்.

இராமலிங்கபிள்ளைக்கும் நாவல்ருக்கும் முன்னே வேறு யாதொரு விரோதமும் இல்லை. இவர் வித்துவான்களைக் கண்டு அழுக்காறு கொள்பவருமல்லர். இவர் காலத்திலிருந்த சிறந்த வித்துவாங்களாகிய மகாலிங்கையர் விசாகப்பெருமாளையர் மீனாட்சிசுந்தரப்பிள்ளை முதலானவர்கள் எல்லாரும் இவரோடு மிக்க நண்புடையவர்கள். இவரும் அவர்களை மிகவும் பாராட்டிக்கொள்பவர். இவர் இத்தன்மையாகிய குணமுடையராயிருந்தும், இராமலிங்கபிள்ளையும் அவர் மாணாக்கரும் செய்தனவற்றை மாத்திரம் சகித்திலர். உலகத்தில் எத்தனையோ மூடர்கள் எத்தனையோ பிழைகள் நிறைந்த நூல்களை இயற்றினார்கள். அவைகளை எல்லாம் இவர் பொருட்படுத்திக் கண்டிக்கவில்லை இராமலிங்கப்பிள்ளை இவருக்கு ஒரு அபராதமும் செய்யாதவராயிருந்தும், அவரையும் அவருடைய பாடல்களையும் கண்டித்துப் போலியருட்பா மறுப்பென ஒரு நூல் எழுதி, அதமை மாவண்டூர்த்தியாகேசமுதலியாரைக் கொண்டு வெளிப்படுத்தினர்.

இந்தப் போலியருட்பா மறுப்பென்னும் பத்திரிகையில், சமயாசாரியர்களுடைய பெருமைகளையும் அவர்களுடைய பாக்களின் பெருமைகளையும் அவர்கள் பெற்ற அருளின்றிறங்களையும் ஸ்பஷ்டமாகக் காட்டியிருக்கின்றார். அத்தன்மையையுடைய ஆசாரியர்களோடு இவ்விராமலிங்க பிள்ளையைச் சமத்துவப்படுத்துவது தகாதென்பதே இவர் கருத்து. இராமலிங்கபிள்ளை அவர்களோடு சமத்துவப்படுத்தப்படின், அவர்களும் இவ்விராமலிங்கபிள்ளைபோன்ற ஒழுக்கமுடையவர்களாயே இருந்திருப்பார்களென்றும், அவர்கள் அருள் பெற்றது போலத்தானே பொய்யாயிருக்குமென்றும் பரசமயிகளும் நம்மவருட் பலரும் எண்ணுதற்கிடனாகுமன்றே! இதுபற்றியே கருங்குழி இராமலிங்கபிள்ளையையும் அவருடைய நூலையும் இவர் கண்டித்தார்.

இப்படியிருக்கும்போது, ஒருமுறை இவரும் இராமலிங்கபிள்ளையும் சிதம்பரத்துக்கு ஒரே காலத்தில் வர நேர்ந்தது. அப்போது, சைவாகம விஷயமாகவும் சிவதீஷை விஷயமாகவும் இவரோடு வெறுப்புக் கொண்டிருந்த தீஷிதர் சிலர், அவ்விராமலிங்கபிள்ளையைக் கொண்டு இவர இகழுவிக்கலாமென்று கருதி, சிதம்பராலயத்தில் பேரம்பலத்திலே அவ்விராமலிங்க பிள்ளையையும் அழைத்து ஒருகூட்டம் சுக்கில வருஷம், ஆனி மாசம் உத்தரத்தன்று கூட்டினார்கள். அதில் இராமலிங்கபிள்ளை உட்பட எல்லாரும் இவரை வாயில் வந்தபடி தூஷித்து, இவரை அடிக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு போய்விட்டார்கள். இக்கூட்டத்தின் வரலாறு "போம்பலப்பிரசங்கம்" என்னும் பெயர் கொடுத்து சி.சொ.சண்முகப்பிள்ளை, சி.அ.வேலாயுதபிள்ளை, சி.இரா. ஆறுமுகப்பிள்ளை என்னும் மூவரும் வெளிப்படுத்திய பத்திரிகையிற் காணப்படும். இராமலிங்கபிள்ளை பேசிய தூஷணைகள் அப்பத்திரிகையில் இருக்கின்றன.

இந்தக் கூட்டவிஷயமாகச் சில 'கிறிமினல்' வழக்குக்கள் மஞ்சக்குப்பக் கோட்டிலே தொடுக்கப்பட்டன. இராமலிங்கபிள்ளை தம்மேற்றெடுக்கப்பட்ட வழக்கில் தாம் இவரை எவ்வாற்றானும் அவமதித்துப் பேசவில்லையென்று அழித்துவிட்டார். அவர் சொன்னது முழுதும் பொய்யென்று அறிந்த இவர், பலரெதிரே தாம் பேசியதைப் பேசவில்லையென்று இராமலிங்கபிள்ளை சொல்லி மறுத்ததே போதுமென்றெண்ணி, அவர்மேற் கொண்டுவந்த வழக்கை விடுவித்தார். இராமலிங்கபிள்ளை பேரம்பலத்திலேயிருந்து இவரை அவதூறாகப் பேசியது சுக்கில வருஷம், ஆனி மாசம் உத்தர தரிசனத்தன்றாம்; அவர் தாம் அப்படிப் பேசவில்லையென்று மஞ்சக்குப்பக்கோட்டிலே அழித்துச்சொன்னது அடுத்த மார்கழித் திருவாதிரைத் தரிசனத்தன்றாம். இதிலும் ஏதோ ஒரு தெய்வச்செயல் இருக்கிறதுபோலத் தோன்றுகின்றது.

தோஷித்தார்கள் இவர்மேற்றொடுத்த ஒருவழக்கில், தாம் சிக்ஷிக்கப்படுவாரென்றே இவர் எண்ணியிருந்தார். விசாரணை நடக்குந்தினத்தில் காலையிற் பூசை முடித்துக் கொண்டு உடையவரைத் தமது மாணாக்கர் சதாசிவப்பிள்லையிடங்கொடுத்து "நான் இன்று சிக்ஷிக்கப்படின் என்னுயிரை விட்டுவிடுவேன், நீ இவ்வுடையவரைக் கங்கையிலே விட்டுவிடு" என்று சொல்லிவிட்டுக் கோட்டுக்குப் போயினர். விசாரணையில் மற்றைக் கட்சியார் கேட்ட முட்டுப்பாடான ஒரு கேள்விக்கு மறுமொழியும் கண்ணீரும் இவருடைய நாவினுங் கண்களினும் நின்று ஒருங்கே வந்தன. கோட்டில் இவர் நின்ற நிலையும் பேசிய திறமையும் நீதிபதிக்குப் பேராச்சரியத்தை விளைத்தன. இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.

இவ்வழக்குக்களில் யாழ்ப்பாணம் செளந்தரநாயகம் பிள்ளையென்னும் வைக்கீல் சிரத்தையோடு காட்டிய திறமைகள் பல உண்டு.

ஆறுமுக நாவலரின் தரப்பு வாதங்கள் வேறெந்த வகையிலும் இவ்விதமாய் ஆவணப் படுத்தப் பட்டிருப்பதாய் தெரியவில்லை. அந்த வகையில் இந்த குறிப்புகள் நாணயத்தின் இன்னொரு பக்கமாய் கருதலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

1 comments:

Unknown said...

Interesting. still i dont see any thing wrong in vallalaar's life and his sithantham. Its closely correlates with many other siddhas words and enlightened masters preachings (like budhha and zarathustra). the only unfortunate thing is that he was born in tamilnadu. Had he born in any other place, his sithantham would have been a great religion. thank u .Arutperunjothi thanipperunkarunai.

Post a comment