வள்ளல் பெருமான் கண்டெடுத்த ஆன்மிகம்

Author: தோழி / Labels:

வள்ளல் பெருமானின் ஆன்மிகம் என்பது அவர் தன் அனுபவங்களின் ஊடேயான பாரபட்சமில்லாத தேடல்களின் முடிவில் தெளிந்த ஓர் நிலை. இதனை அவரது பாடல்களின் ஊடே பயணிக்கும் எவரும் அறிந்து கொள்ள முடியும். கடவுளின் மீது கவனம் வைத்து அவரைத் தன் மனத்தே இருத்தி அவரின் அருளை இறைஞ்சியிருப்பதே  தன் பக்தியின் பூரண நிலை என கருதியிருந்தவர்,  சென்னையை விட்டு கிளம்பிய பின்னர் தான் சந்தித்த மனிதர்கள், எதிர் கொண்ட பிரச்சினைகள், அதனால் கிடைத்த வாழ்வியல் அனுபவங்கள் போன்றவை அவரது சிந்தனையைக் கிளறி அவரை வேறோர் தளத்திற்கு நகர்த்தின என்றால் மிகையில்லை.

1865 வரையிலான கால கட்டத்தில் அவர் மற்றெவரையும் போன்றொதொரு பக்தி மார்க்கத்தையே பின்பற்றியிருந்தார். இது அவரின் பாடல்களின் ஊடே நாம் அறிய முடிகிறது. இதன் பின்னரான கால கட்டத்தில் அவரது பாடல்கள் யாவும் தன்னைத் தாண்டிய ஒரு சமூக நோக்கோடும், அக்கறையோடும் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இந்த காலகட்டத்தில்தான் அவர் “ஜீவ காருண்ய ஒழுக்கம்” நூலை எழுதியிருக்கிறார்.

கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்த அவரது சமகால சமூக வாழ்வியல் அவலங்கள் யாவும் வள்ளல் பெருமானிடம் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி இருந்தது. சக மனிதர்கள் அனுபவித்த துன்பத்திற்கான காரணங்களையும் அவற்றிலிருந்து அவர்கள் மீள்வதற்கான தீர்வுகளை வேண்டுவதாக அவரது ஆன்மிகம் வளர்ந்திருந்தது.  சக உயிர்களின் மீது அன்பும், கருணையும் கொண்டு அவர்களுக்கு உதவுவதே எல்லா துயரங்களுக்கும்  தீர்வாக இருக்கும் என நினைத்தார். இதனையே ஆன்ம நேய ஒருமைப்பாடு என்கிறார். ஜீவகாருண்ய ஒழுக்கம் இதனையே முன்னிறுத்துகிறது.

நிபந்தனையில்லாத அன்பே கடவுள், அந்த கடவுள் என்பவர் ஒரு ஆளோ அல்லது உருவமோ இல்லை, அதொரு விரிந்து பரந்த பூரண அன்பு நிலை என்பதாக வள்ளல் பெருமானின் ஆன்மிகம் அடுத்த தளத்துக்கு முன்னேறியிருந்தது. எங்கும் விரிந்து நிறைந்த கடவுள் நமக்குள்ளும் அன்பாகவும், கருணையாகவும் நிறைந்திருக்கிறார். அந்த அன்பை வளர்த்தெடுப்பதன் மூலம் பேரன்பு நிலையான கடவுளை அடைய முடியுமென நம்பினார். இத்தகைய பேரன்பும், பெருங்கருணையுமே மனித சமூகத்தை அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளில் இருந்து கடைத்தேற்றும் என உறுதியாய் நம்பினார்.  

தன்னுடைய இந்த தெளிவுகள் பாரபட்சமில்லாமல் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டுமெனில், காலம் காலமாய் மக்களை சூழ்ந்திருக்கும் மாயை விலக வேண்டுமென நினைத்தார். இதற்கு சடங்குகள், அவை கொண்டிருந்த மூட நம்பிக்கைகள் இடையூறாய் இருப்பதை உணர்ந்தார். அத்தோடு சாதியின் பெயரால், சமயத்தின் பெயரால், பொருளாதார கூறுகளினால் உருவாக்கப் பட்ட ஏற்றத் தாழ்வுகள் களைந்தெறியப் பட வேண்டுமென நினைத்தார். இறைவனின் பெருங்கருணையின் முன்னால் அனைவரும் சமம் என்கிற நிலை உருவாக வேண்டும். இதனை தன் சமயமும், அதன் ஸ்தாபனங்களான மடங்களும் முன்னின்று செயல்படுத்த வேண்டுமென பெருமானார் விரும்பினார். ஆனால் அது நடந்ததா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.

சக உயிர்களின் மீது செலுத்தப் படும் தூய அன்பும், பெருங் கருணையுமே மெய்யான இறைவனை அடையும் வழி என்கிற வள்ளல் பெருமானின் மெய்யறிவானது நம் சித்தர் பெருமக்கள் முன் வைக்கும் ஆன்மிகத்தை ஒட்டியதாய் அமைந்திருப்பதை இங்கே சுட்டிக் காட்டிட விரும்புகிறேன். தமிழ் சமூகத்தில் இத்தகைய மெய்யறிவாளர்கள் அரிதாகவே தோன்றியிருக்கின்றனர்.

இந்த பதிவின் தகவல்கள் யாவும் அவருடைய பாடல்களில் இருந்து எடுக்கப் பட்ட கருத்துக்களே!. பதிவின் நீளம் மற்றும் வாசிப்பின் சுவாரசியம் கருதி பாடல்களை இங்கே தவிர்த்திருக்கிறேன்.

வள்ளல் பெருமானின் இத்தகைய கருத்துக்கள் அவரது பாடல்களின் ஊடே வெளியான போது, அவை கடுமையான எதிர்ப்புக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகின.  ஏற்கனவே கிருத்துவ பாதிரிமார்களின் செயல்பாடுகளினால் கலக்கமடைந்திருந்த சைவசமயத் தலைவர்கள் வள்ளல் பெருமான் முன்வைத்த ஆன்மீகத்தை எரிச்சலோடு நிராகரித்தனர். மேலும் அவரை கடுமையாக அவதூறு செய்து அச்சுறுத்தினர். இதனால் வள்ளல் பெருமானார் பல சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

இந்த சிரமங்களில் முக்கியமானது அருட்பா, மருட்பா விவகாரம். இது வள்ளல் பெருமானுக்கும், யாழ்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலருக்கும் நீதிமன்றம் வரை சென்ற  கருத்து மோதல். இந்த மோதல் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. அவை இரண்டையும் இந்த தொடரில் ஆவணப் படுத்துவது அவசியமென கருதுகிறேன்.

அதற்கு முன்னர் ஆறுமுக நாவலர் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அந்த விவரங்கள் நாளைய பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

3 comments:

Saravanakumar said...

Thanks .. keep writing.

Lingeswaran said...

ஆழ்ந்த தியானத்தின் பொழுது ராமலிங்க சுவாமிகள் தன்முன் தோன்றி தனை ஆட்கொண்டதாகவும், இன்னும் பத்தாண்டு காலம் உன்னோடு இருக்க போகிறேன் எனவும் சுவாமிகள் அருள்பாலித்ததாகவும், வேதாத்திரி மகரிஷி தன்னுடைய வாழ்க்கை விளக்கம் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

மகரிஷிகளின் கவிகளை நீங்கள் ஊன்றி கவனித்தால் இதை நீங்கள் நன்றாக உணர முடியும். மகரிஷிகள் இரண்டாயிரம் கவிகள் எழுதியிருக்கிறார்.

ராமலிங்க சுவாமிகளின் மரணம் குறித்தும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. அதை பற்றி நீங்கள் ஏதேனும் குறிப்பு கொடுக்க முடியுமா?

வேதாத்திரி மகரிஷியின் தத்துவத்தை பற்றியும் நீங்கள் ஏன் சில பதிவுகள் எழுத கூடாது என்னருமை சினேகிதி?

Unknown said...

திரு லிங்கேஸ்வரன் அவர்களே , வள்ளல் பெருமான் மரணம் அடையவில்லை , அவர் பரமர் அருளை பெற்று ஜோதியாகி இறைவனோடு இரண்டறக் கலந்தார் என்பதே அடியேன் அறிந்தது. வள்ளல் பெருமானை பற்றி தமிழகத்தில் உள்ள சித்தர் காகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் போன்றோர் இன்றளவும் சன்மார்க்க நெறியினை உபதேசம் செய்து வருகின்றனர்.அவர் வள்ளல் பெருமானின் அருட்திறனை நன்கு அறிந்தவர்.

Post a comment