வள்ளல் பெருமானின் பிறப்பும், இளமைக் காலமும்

Author: தோழி / Labels:

சிதம்பரத்திற்கு வடமேற்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் சிற்றூரில் கணக்கராய் இருந்தவர் இராமையா பிள்ளை. இராமையா பிள்ளையின் முதல் ஐந்து மனைவிகளுக்கு குழந்தையின்மை மற்றும் இறந்து போனதால், சென்னையை அடுத்த பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்னகாவணத்தைச் சேர்ந்த சின்னம்மையை ஆறாவதாய் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

இராமையா பிள்ளை, சின்னமையின் ஐந்தாவது பிள்ளையாக 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதியில் இராமலிங்கம் பிறந்தார். இவருடன் உடன் பிறந்த மற்ற நால்வரின் பெயர்கள் பின்வருமாறு.... சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகியோர்.

இராமலிங்கம் பிள்ளை பிறந்த எட்டாவது மாதத்தில் அவர் தந்தை உயிரிழந்தார். இதனால் சின்னம்மையார் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பொன்னேரிக்கு வந்துவிட்டார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறியதாக வாழ்க்கைக் குறிப்புகள் கூறுகின்றன.

தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை இராமலிங்கம் பிள்ளை சென்னையில்தான் கழித்திருக்கிறார். அதாவது 1858 வரையில் சென்னை வாசம்தான். அப்போது சென்னை இராஜதானி ஆங்கிலேயர் ஆட்சியில், கிருஸ்துவ மிஷனரிகளின் செல்வாக்கு ஓங்கிய நிலையில் இருந்தது. புதிய கலாச்சார ஆக்கிரமிப்பு ஒன்று தமிழர்களை சூழ்ந்திருந்த காலம் என்றும் சொல்லலாம்.

இதன் அடிப்படையில், இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வாழ்க்கையை 33 ஆண்டு கால சென்னை வாழ்க்கை, சென்னையை விட்டு நீங்கிய பின்னர் வரும் அடுத்த 16 ஆண்டு கால வாழ்க்கை என இரண்டு கால கட்டங்களில் அவரை அணுகுவது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

வள்ளல் பெருமானின் மூத்த சகோதரர் சபாபதி பிள்ளை சமய சொற்பொழிவுகளை செய்பவராய் இருந்ததினால் இயல்பாகவே வீட்டில் பக்திநெறி தழைத்தோங்கி இருந்தது. தாயார், சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் மனைவியரின் கவனிப்பில் வள்ளல் பெருமானின் இளமைக் காலம் கழிந்திருக்கிறது. வாலிப பருவமெய்திய பின்னர் தனது சகோதரியின் மகளையே திருமணம் செய்து கொண்டார்.

அவரது பாடல்களின் ஊடே பார்க்கும் போது அவர் மெலிந்த தோற்றமும், நடுத்தர உயரமும் கொண்டவராக இருந்திருக்கிறார். இளகிய மனம் கொண்டவராகவும் தன்னை கூறிக் கொள்கிறார். இதனை பின்வரும் பாடல்களின் மூலம் அறியலாம்.

வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்

கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்
உள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்

- திருப்புகற் பதிகம் (திருவருட்பா)

வள்ளல் பெருமானின் ஆன்மீக வாழ்வு எத்தகையதாய் இருந்தது என்பது பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தொடர்கிறேன்...

Remanthi said...

அற்புதமானது உங்களின் இந்த படைப்பின் தொடர்...

வே.நடனசபாபதி said...

தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம்(http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_8.html) வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

tamilvirumbi said...

தோழி,

தாங்கள் திருஅருள் பிரகாச வள்ளலார் குறித்த பதிவு மிகவும் போற்றத்தகுந்தது.தாங்கள் , திருவருட்பா ,முழுவதும் தங்களின் பதிவுகளில் இடம்பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.மிக்க நன்றி.எனது தந்தையார் ,தென் ஆப்ரிக்கா வாழ் தமிழர்களுக்காக வள்ளலாரின் குறிப்புக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.அந்த குறிப்புகள் அனைத்தும் கீழ்க்கண்ட வலைமனையில் இடம் பெற்றுள்ளது .

http://hinduspiritualarticles.blogspot.com

Post a comment