அருட்பா, மருட்பா விவகாரம்.

Author: தோழி / Labels: , ,

சைவ சமயத்தில் பக்தி இலக்கியங்கள் என்றால் அவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவையே. இவை யாவும் பக்தியில் உயர்ந்து சிறந்து தெய்வீக நிலைக்கு உயர்ந்த பெருமக்களினால் அருளப் பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இதன் பின்னர் இயற்றப் பட்ட பாடல்கள் யாவும் பிரபந்த திரட்டுகள் எனவும், அதற்கும் பிந்தைய காலத்து பாடல்கள் பாடல் திரட்டு என்றே குறிப்பிடப் பட்டு அடுத்தடுத்த நிலைகளில் வைக்கப் பட்டன. 

கோவிகளில், பஜனைகளில், உற்சவங்களில் இந்த பாடல்களே மிகுந்த சிரத்தையோடும், பக்தியோடும் பாடப்பட்டு வந்தன. இத்தகைய சூழலில் 1867ல் வள்ளல் பெருமானின் பாடல்கள் நூலாக தொகுக்கப் பட்டு அருட்பா எனும் பெயரில் பதிப்பிக்கப் பட்டது. இந்த பாடல்கள் யாவும் வள்ளல் பெருமானின் ஆழ்ந்த அனுபவ பிழிவுகள் என்பதால் அவற்றின் சொற்சிறப்பும், பொருள் சிறப்பும் கேட்போர் உள்ளங்களை பக்திப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தியதால் அவை பரவலான வரவேற்பினை பெற்றன.

வள்ளல் பெருமானின் அணுக்கத் தொண்டர்களின் முயற்சியினால் துவக்கத்தில் சொற்பொழிவுகளில் மட்டுமே பாடப்பட்ட அருட்பா பாடல்கள் பின்னர் கோவில்களிலும், உற்சவங்களிலும், பன்னிரு திருமுறைகளோடு பாடப்படும் அளவிற்கு உயர்ந்தது. பக்தி இலக்கியங்களுக்கு இணையாக வைத்து அருட்பா என பாடப் பெற்றது  ஒரு சாராருக்கு உறுத்தலாகவே இருந்தது. இத்தகையவர்கள் பெரும்பாலும் தீவிர சாதீய பற்றுள்ள பழமை வாதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பெருமானாரின் பாடல்களுக்கு வரவேற்பும் அங்கீகாரமும் அதிகரித்துக் கொண்டிருந்த சூழலில், வள்ளல் பெருமானோ தன்னுடைய ஆன்மிக தேடலில் வேறோர் தளத்திற்கு உயர்ந்திருந்தார் தன்னுடைய தெளிவுகளை அவர் வெளியே சொல்ல ஆரம்பித்த போது அவை சைவ மதத்தின் மரபியல் சிந்தனைகளின் அடிப்படையையே  உடைத்தெறிவதாய் இருந்தது. சாதி சமய வேறுபாடுகளை களைந்து, அனைவரும்  ஆண்டவன் முன்னே சமம் என்ற அவரது போதனைகள் சைவ சமய அடிப்படை வாதிகளை ஆத்திரமுறச் செய்தது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சென்னையில் “சுக்கிரவார சங்கம்” என்றோர் அமைப்பை நிறுவி நடத்தி வந்தார்.  இந்த கூட்டங்களில் நாவலரின் சொற்பொழிவுகள் பிரசித்தமானது. அத்தகைய ஒரு  கூட்டத்தில்தான் முதன் முதலாக வள்ளல் பெருமானுக்கு எதிரான கருத்துக்களை ஆறுமுக நாவலர் பதிவு செய்தார்.

சைவ சமயத்தின் அடிப்படைகளுக்கு  எதிரான கருத்துக்களை கூறி வரும் வள்ளல் பெருமானாரின் பாடல்கள், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் போன்ற தெய்வீக புருஷர்களின் பாடல்களுக்கு இணையாக வைத்து பாடக் கூடாது என்பதாகத்தான் அவரின் முதல் எதிர்ப்புத் தோன்றியது.

அடுத்த கட்டமாய் இந்த பாடல்கள் ஏன் தகுதியற்றவை எனபதை நிறுவும் வகையில் அருட்பாக்கள் யாவும் மருட்பாக்களே என்பதை காரண காரியங்களோடு விளக்கி நூலாகவும் வெளியிட்டார். இந்த கால கட்டத்தில் இது போன்ற அநேக பிரசுரங்கள் அச்சிடப் பட்டு விநியோகிக்கப் பட்டன. மேலும் வள்ளல் பெருமானாரை தனிப்பட்ட முறையிலும் தாக்கி சொல்லம்புகள் வீசப்பட்டன.

இரு தரப்பிலும் கடுமையான வாத விவாதங்கள் நடந்தேறின. இரு தரப்பிலும் பல்வேறு சமய அறிஞர்கள் தங்கள் கண்டனங்களையும், விளக்கங்களையும் முன் வைத்தனர். வள்ளல் பெருமானுக்கு ஆதரவாக கலந்து கொண்டவர்களில்  ஒரு இஸ்லாமிய தமிழறிஞரைப் பற்றி இங்கே பதிவு செய்வது அவசியமென நினைக்கிறேன். சதாவதானம் செய்குத்தம்பி பாவலர் என்னும் இஸ்லாமிய தமிழறிஞர் வள்ளல் பெருமானாரின் சமரச சன்மார்க்க கொள்கையில் ஈர்ப்புண்டாகி வள்ளல் பெருமானுக்கு ஆதரவாக சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

காலம் காலமாய் ஊறிப் போயிருக்கும் மரபுகளை மீறும் போது கடுமையான எதிர்ப்புகள் வருவது இயல்பே என்பதை உணர்ந்திருந்த வள்ளல் பெருமான், இத்தகைய எதிர்ப்புகளை பொருட்படுத்தாது தன் வழியில் தீவிரமாயிருந்தார். வள்ளல் பெருமானின் இத்தகைய தவிர்க்கும் போக்கினால் வெகுண்ட ஆறுமுக நாவலர், வள்ளல் பெருமான் தன்னை அவதூறு செய்ததாக நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குகளை நிரூபிக்கத் தவறியதால் நீதி மன்றத்தால் அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டன.

சைவ சமயம் சிதைந்து அழிந்து விடக்கூடாது என்கிற ஆதங்கத்தில்தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் வள்ளல் பெருமானை எதிர்த்தார். ஆனால் அதுவே அந்த மகா மனிதரின் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாகி விட்டது. 

இந்த அருட்பா, மருட்பா போர் இத்துடன் முடிவடைந்ததா?, நாவலரைத் தவிர வேறு யாரெல்லாம்  வள்ளல் பெருமானை எதிர்த்தார்கள்?, எத்தகைய நூல்கள், பிரசுரங்கள் வெளியாயின?.... போன்ற தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

8 comments:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

அர்த்தமுள்ள பதிவு..

Ramesh said...

http://velicham007.blogspot.in/2013/03/blog-post.html

Ramesh said...

http://velicham007.blogspot.in/2013/03/blog-post.html

Nadarajah Kannappu said...

வள்ளல் பெருமானை நினை-
அவரே துணை-

சைவம்- தமிழ்-
மானிடம் எனும் சோதி கண்டது
அவராலென்று போற்று.

மாற்றுக் கருத்தாளர்கள்
வெறும் மதவாத மனிதரென்று கூறு.
சமமாய் மனிதரைக் காணாத சமயம் செல்லாது.!
சைவம் சிவம் சிவமயம்
சிவனோ அன்பு மயம்.

வாழ்க வள்ளலார்.
சிவா அன்பின் நடராசா கண்ணப்பு.

Remanthi said...

அருமை...

SACHIN tendulkar said...

ஆறுமுக நாவலர் ஒரு மதவாதியல்ல! அவர் யாழ்ப்பாணத்தில் சைவம் தழைத்தோங்க பெரும் காரணமாய் இருந்தவர் சைவ மக்களால் 5 ஆம் குரவராய் போற்றப்படுபவர் Mr nadarajah kannappu

SACHIN tendulkar said...

ஆறுமுகநாவலர் மதவாதி அல்ல யாழ்ப்பாணத்தில் சைவ சமயம் தழைத்தோங்க அரும் பாடுபட்டவர்! சைவ சமய மக்களால் 5 ஆம் குரவர் என்று போற்றப்படுபவர்! Mr nadarajah kannappu!

ashok kumar said...

anugrahasmalathi@gmail.com
anaithu makkalum therinjuka vendiya anubavika kudiya vishayamae


Post a Comment