யார் இந்த ஆறுமுக நாவலர்?

Author: தோழி / Labels: ,

சைவ சமய குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றக் கூடிய தகுதியுடையவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் என்பது பலரும் அறியாத செய்தி.  சைவ சமய மீட்டுருவாக்கத்திலும், தமிழின் வளர்ச்சிக்கும் தன் வாழ் நாளெல்லாம் தளராது உழைத்த பெருமகனார் என்றால் மிகையில்லை. இத்தனை சிறப்புகள் வாய்ந்த மனிதரைப் பற்றிய விவரங்களை ஒரு பதிவில் சுருக்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதால், நம்முடைய  தொடருக்குத் தேவையானதை மட்டுமே இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

இலங்கையில் யாழ்பாணத்தில், நல்லூரில்  கந்தப்பிள்ளை, சிவகாமி  தம்பதிகளின் கடைசி மகனாய் 1822ல் ஆறுமுகம் பிறந்தார். தனது ஐந்தாம் அகவையில் குருகுல வாசமாயிருந்து கல்வி கற்கத் துவங்கினார். நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயர், இருபாலை சேனாதி ராய முதலியார், நல்லூர் சரவண முத்துப் புலவர் ஆகியோரிடம் தமிழ் இலக்கணத்தையும், இலக்கியங்களையும், சைவ சமய சித்தாந்தஙக்ளையும் கற்றுத் தேர்ந்தார். தனது பதினைந்தாம் வயதிற்குள் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நல்ல புலமை பெற்றவரானார்.

இது தவிர யாழ்பாணத்தில் அப்போது பிரபலமாயிருந்த மெதடிஸ்த ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து முறையாக ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்தார். தன்னுடைய இருபதாவது வயதில்,  ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றத் துவங்கினார். இக் கால கட்டத்தில்  கிருத்துவர்களின் வேத நூலான புனித பைபிளை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சியில் நாவலரின் பங்களிப்பும் இருந்ததாய் குறிப்புகள் உண்டு.இன்றும் கூட கிருத்துவ பெருமக்கள் பயன்படுத்தும் பையிளின் வாசகங்கள் அல்லது வார்த்தைகள் பலவும் ஆறுமுக நாவலரால் உருவாக்கப் பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நூலில் மொழிபெயர்ப்பு மற்றும் அச்சிடும் வேலைக்கு உதவியாக முதன் முதலில் தமிழகம் வந்தார்.

தனது இருபத்தியைந்தாம் வயதில் கோவில்களில் பக்திச் சொற்பொழிவுகளை நிகழ்த்தத் துவங்கினார். இதில் பெருவிருப்பம் கொண்ட நாவலர், தன் வாழ் நாளை சமயத் தொண்டாற்ற முடிவு செய்து தனது ஆசிரியப் பணியினைத் துறந்தார். சைவ சமயம் என்பது வைதீக பிராமணர்களின் ஆக்கிரமிப்பினால் தன் பொலிவினை இழந்து வைதீக சடங்குகளிலும், சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்தில் சிக்கி சிதைவடைவதை எண்ணி மனம் வருந்தி, சைவ சமயத்தை இத்தகைய சக்திகளிடம் இருந்து  மீட்டெடுத்து  அதன் மகோன்னத நிலைக்கு கொண்டு வர உறுதி பூண்டு களமிறங்கினார். 

முதற்கட்டமாக சைவ சமய குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்து புத்தகமாக அச்சிட்டார். இதற்கென தமிழகத்தில் இருந்து  அச்சியந்திரம் ஒன்றினை தருவித்து தனது இல்லத்தில் நிறுவி புத்தகங்களை அச்சிட்டு வழங்கினார். ஆத்திசூடி, நன்னூல் விருத்தியுரை,கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, ஞானக்கும்மி, சைவ சமய சாரம், வச்சிரதண்டம், கொலை மறுத்தல்,திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை,யேசுமதபரிகாரம் போன்ற எண்ணற்ற பல நூல்களை அச்சிலேற்றி பதிப்பித்தார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். தமிழில் முதன்முதலில் வசனங்களையும், வாக்கியங்களையும் பிழையின்றி கட்டமைத்து உரைநடையை உருவாக்கிய பெருமை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரையே சேரும். 

ஆறுமுக நாவலர் சிறந்த சொற்பொழிவாளர். அவருடைய சொற்பொழிவுகள் கேட்போரை பக்தியில் ஆழ்த்தி சைவசமயம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தின. சைவ சமய சித்தாந்தங்களை போதிக்கும் பாட சாலை ஒன்றையும் இலங்கையில் நிறுவினார். தன்னுடைய எல்லைகளை விரிவாக்க வேண்டி தமிழகம் வந்த நாவலர் சென்னையிலும் அச்சியந்திரம் ஒன்றை நிறுவி நூல்களை அச்சிட்டு வழங்கினார். தமிழகமெங்கும் அவரது சமய பிரச்சாரங்கள் சிறப்பாக நடந்தேறின. 1849 ம் ஆண்டு திருவாடுதுறை ஆதீன கர்த்தர், ஆறுமுகம் அவர்களுக்கு நாவலர் பட்டத்தை அருளி சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மடங்களும், சமஸ்தானஙகளும் அவருடைய தொண்டை அங்கீகரித்து அவருக்கு மரியாதை செய்தனர்.

1864ம் ஆண்டில் சிதம்பரத்தில் சைவ சமய சித்தாந்தங்களை பயிற்றுவிக்கும் பள்ளி ஒன்றினைத் துவங்கினார். இந்த கால கட்டத்தில்தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலருக்கும் வள்ளல் பெருமானுக்கும் இடையே கருத்தியல் சார்ந்த உரசல்கள் ஆரம்பமாயின.  இந்த மோதலையே “அருட்பா மருட்பா” மோதல் என வரலாறு ஆவணப் படுத்துகிறது.

அந்த விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

4 comments:

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

நன்றி தோழி அறிமுகத்திற்கு.. அருமை

Unknown said...

Ya knew abt him already! always nice to hear abt navalar!
i was quite surprised when i read there was a conflict between him and so called vallal perumaan who u rate very holy of!

sivanadimaisami said...

@SACHIN tendulkar
naavalar is a saint of saivam but vallalaar create a samayam his motive is against to saiva siththaantham.so navalar is great

thiru said...

வள்ளலர் சாதிகள் இல்லை என்றார் திருவருட்பாவில்,ஆனால் நாவலர் சாதியை தூக்கி நிறுத்தும் வகையில் திருவருட்பாவிற்கு மறுப்பா எழுதியவர

Post a comment