வள்ளல் பெருமானின் ஆன்மிகம் என்பது...

Author: தோழி / Labels: ,

அருட்பா, மருட்பா என ஒரு பக்கம் கடுமையான வாத விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் மறுபக்கத்தில் வள்ளல் பெருமானார் தனது ஆன்மிக தேடலின்  தெளிவு நிலைக்கு வந்திருந்தார். தன் தெளிவுகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து அதனை உலகத்தாருக்கு உணர்த்தும் வகையில் பாடல்களாய் எழுதிடவும் துவங்கினார். 

தூய்மையான அறிவுதான் தெய்வம். அது பேரன்பும், பெருங் கருனையும் கொண்டது. அது ஓர் உருவமில்லை. தூய சுடரைப் போல தெளிந்த பரிசுத்த நிலை. அந்த நிலையின் முன்னர் அனைவரும் சமம். இத்தகைய அன்பும், கருணையுமான இறை நிலையை நமக்குள் வளர்த்துக் கொள்வதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதாக அவரின் தெளிவுகள் இருந்தன.

தான் தெளிந்த ஆன்மிக நிலையை அடையத் தடையாக இருக்கும், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், அவற்றைத் தாங்கிப் பிடித்த மூடநம்பிக்கைகளை முற்றாக நிராகரிக்கக் கூறினார். சாதியின் பெயரால் ஏற்றத் தாழ்வு சொல்லி மக்களை பிரித்து அவர்களை பாகுபடுத்துவதையும் கடுமையாக எதிர்த்தார். மேலும் இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகவும், அதிகாரமாகவும் செயல்படும் மதத்தையும் நிராகரித்தார்.

வள்ளல் பெருமானின் இத்தகைய நிராகரிப்புகளே  பழமை வாதிகளுக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் கிளப்பின. அவரது இத்தகைய நிலைப்பாட்டினை பின் வரும் சில பாக்களின் மூலம் அறியலாம்.

"சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி." 

(அருட்காட்சி - ஆறாம் திருமுறை)

"சாதியும் மதமும் சமயமும் பொய்என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”

(அருட்பெருஞ்சோதி அகவல் - ஆறாம் திருமுறை)

"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்"

(சுத்த சன்மார்க்க வேண்டுகோள் - ஆறாம் திருமுறை)

இது போன்ற கருத்துக்கள் யாவும் அவர் பின்னாளில் அருளிய ஆறாம் திருமுறை தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. 

தன்னுடைய இந்த கருத்துக்களை அவர் ஊர் ஊராய்ப் போய் சொற்பொழிவுகளின் மூலம் பரப்பிக் கொண்டிருந்தார். தனியொரு மனிதனால் இதை சாதித்து விட முடியாது என்பதை புரிந்து கொண்ட போது, தன்னுடைய இந்த நிலைப்பாட்டினை அமைப்பு ரீதியாக செயல்படுகிறவர்கள் மக்களுக்குக் கொண்டு சேர்த்திட விண்ணப்பம் செய்தார். ஆனால் பெருமானாரின் குரலை இத்தகைய அமைப்புகள் அலட்சியம் செய்ததோடு மட்டுமல்லாது அவரை பலவாறாக அவதூறும் செய்தன. வள்ளல் பெருமானோடு இணக்கமாய் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களும் ஒரு கட்டத்தில் அவரை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தனர்.

இத்தகைய சூழலில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வள்ளல் பெருமானார் மற்றவர்களை நம்பாது தானே களத்தில் இறங்கிச் செயல்பட தீர்மானித்து  1865 ல் ”சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பினை துவங்கினார். பின்னாளில் இது சமரச சன்மார்க்க சங்கம் என்பதாக பெயர் மாற்றம் கண்டது. அமைப்பு ரீதியாக வள்ளல் பெருமானார் செயல் பட ஆரம்பித்த பின்னரே 1867ல் அவரது நூல்கள் அருட்பா எனும் பெயரில் ஐந்து தொகுதிகளாக அச்சிடப் பட்டன.

இதன் பிறகே வள்ளல் பெருமானின் சமூக பங்களிப்புகள் வேகம் பெறத் துவங்கின 1865ல் துவங்கி அவரது மறைவு வரையிலான கால கட்டமே அவர் வாழ்வின் முக்கியமான பகுதியாக பார்க்கப் படுகிறது. இந்த கால கட்டத்தில் அவர் உருவாக்கிய அமைப்புகள், அதன் செயல்பாடுகள், அவற்றின் வெற்றி தோல்விகள் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சுயசரிதையில் வள்ளலார் பற்றிய தகவல்கள்.....

Author: தோழி / Labels: , ,

கொள்கையின் அடிப்படையில் வள்ளல் பெருமானுக்கு எதிர்நிலையின் நின்றவர்களில் முதன்மையானவரான ஆறுமுக நாவலரின் சுயசரிதையானது  “ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சரித்திரம்”  என்னும் பெயரில் எழுதப் பட்டிருக்கிறது. இதனை அவரது சகோதரரின் மகனான யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாசபிள்ளை என்பவர் எழுதியிருக்கிறார். இதன்  முதற்பதிப்பு நள வருடம் 1916 மார்கழி மாதம் சென்னை ஆறுமுகநாவலர் வித்தியாநுபாலன அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

இந்த நூலில் இராமலிங்கருக்கும், ஆறுமுக நாவலருக்குமான பிரச்சினையை தனியொரு அத்தியாயமாகவே அச்சிட்டிருக்கின்றனர். இந்த விவரங்கள் ஆறுமுக நாவலர் தரப்பினை சொல்வதாக இருக்கிறது. இராமலிங்க அடிகளின் தரப்பு மட்டுமே வெளியில் தெரிந்த நிலையில் இந்த பகுதியை இங்கே பதிவது அவசியமென கருதி அதனை அப்படியே தருகிறேன்.ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் என்பதால் வாசிக்க சற்றே சிரமமாயிருக்கும். கூடுதல் கவனம் வைத்து படித்தால் எளிதில் விளங்கும்.

10 -ஆம் அதிகாரம் - அருட்பா வழக்கு...

இந்தியாவிலே சிதம்பரத்துக்குச் சமீபத்தில் கருங்குழி என்றோர் இடமுண்டு. அங்கே இராமலிங்கபிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவர் ஏதோ ஒரு வைராக்கியத்தினாலே சுவாமியாகிச் சென்னபட்டணத்திற் போயிருந்தனர். அங்கே அவர் தாம் சிவானுபூதி பெற்றவரென்று உலகத்தார் நம்பித் தம்மை வழிபடும் பொருட்டிச் சில பாடல்களைப் பாடி அவைகளுக்குத் திருவருட்பாவென்றும், தமக்குத் திருவருட்பிரகாச வள்ளலாரென்றும் தாமே பெயரிட்டுக்கொண்டும், தம்முடைய மாணாக்கர் ஒருவராலே தமக்குத் திருவருட்பா வரலாறென ஒரு புராணஞ் செய்வித்து இறுதியிற் சேர்த்துக் கொண்டும், அச்சிற் பதிப்பித்து விக்கிரயஞ் செய்வித்தனர். அது கண்ட அறிவிலிகள் சிலர், அவ்விராமலிங்கபிள்ளை முன்னிருந்த சமயாசாரியர்களோடு சமத்துவமுடையவரென்றும், அவர் பாடல் தேவார திருவாசகங்களோடு சமத்துவமுடையதென்றும், பாராட்டிக் கொண்டும், புசித்துக்கொண்டும், அனுட்டானம் பூசை சிவ தரிசனம் முதலியன செய்யுங் காலங்களில் ஓதிக் கொண்டும் வந்தார்கள்; சிலபோது சென்னபட்டணத்திலுள்ள சில ஆலயங்களில் உற்சவத்திலே தேவாரம் முதலிய அருட்பாக்களை நிறுத்திவிட்டு இராமலிங்கபிள்ளை பாடலையே ஓதுவித்தார்கள்.

இராமலிங்கபிள்ளைக்கும் நாவல்ருக்கும் முன்னே வேறு யாதொரு விரோதமும் இல்லை. இவர் வித்துவான்களைக் கண்டு அழுக்காறு கொள்பவருமல்லர். இவர் காலத்திலிருந்த சிறந்த வித்துவாங்களாகிய மகாலிங்கையர் விசாகப்பெருமாளையர் மீனாட்சிசுந்தரப்பிள்ளை முதலானவர்கள் எல்லாரும் இவரோடு மிக்க நண்புடையவர்கள். இவரும் அவர்களை மிகவும் பாராட்டிக்கொள்பவர். இவர் இத்தன்மையாகிய குணமுடையராயிருந்தும், இராமலிங்கபிள்ளையும் அவர் மாணாக்கரும் செய்தனவற்றை மாத்திரம் சகித்திலர். உலகத்தில் எத்தனையோ மூடர்கள் எத்தனையோ பிழைகள் நிறைந்த நூல்களை இயற்றினார்கள். அவைகளை எல்லாம் இவர் பொருட்படுத்திக் கண்டிக்கவில்லை இராமலிங்கப்பிள்ளை இவருக்கு ஒரு அபராதமும் செய்யாதவராயிருந்தும், அவரையும் அவருடைய பாடல்களையும் கண்டித்துப் போலியருட்பா மறுப்பென ஒரு நூல் எழுதி, அதமை மாவண்டூர்த்தியாகேசமுதலியாரைக் கொண்டு வெளிப்படுத்தினர்.

இந்தப் போலியருட்பா மறுப்பென்னும் பத்திரிகையில், சமயாசாரியர்களுடைய பெருமைகளையும் அவர்களுடைய பாக்களின் பெருமைகளையும் அவர்கள் பெற்ற அருளின்றிறங்களையும் ஸ்பஷ்டமாகக் காட்டியிருக்கின்றார். அத்தன்மையையுடைய ஆசாரியர்களோடு இவ்விராமலிங்க பிள்ளையைச் சமத்துவப்படுத்துவது தகாதென்பதே இவர் கருத்து. இராமலிங்கபிள்ளை அவர்களோடு சமத்துவப்படுத்தப்படின், அவர்களும் இவ்விராமலிங்கபிள்ளைபோன்ற ஒழுக்கமுடையவர்களாயே இருந்திருப்பார்களென்றும், அவர்கள் அருள் பெற்றது போலத்தானே பொய்யாயிருக்குமென்றும் பரசமயிகளும் நம்மவருட் பலரும் எண்ணுதற்கிடனாகுமன்றே! இதுபற்றியே கருங்குழி இராமலிங்கபிள்ளையையும் அவருடைய நூலையும் இவர் கண்டித்தார்.

இப்படியிருக்கும்போது, ஒருமுறை இவரும் இராமலிங்கபிள்ளையும் சிதம்பரத்துக்கு ஒரே காலத்தில் வர நேர்ந்தது. அப்போது, சைவாகம விஷயமாகவும் சிவதீஷை விஷயமாகவும் இவரோடு வெறுப்புக் கொண்டிருந்த தீஷிதர் சிலர், அவ்விராமலிங்கபிள்ளையைக் கொண்டு இவர இகழுவிக்கலாமென்று கருதி, சிதம்பராலயத்தில் பேரம்பலத்திலே அவ்விராமலிங்க பிள்ளையையும் அழைத்து ஒருகூட்டம் சுக்கில வருஷம், ஆனி மாசம் உத்தரத்தன்று கூட்டினார்கள். அதில் இராமலிங்கபிள்ளை உட்பட எல்லாரும் இவரை வாயில் வந்தபடி தூஷித்து, இவரை அடிக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு போய்விட்டார்கள். இக்கூட்டத்தின் வரலாறு "போம்பலப்பிரசங்கம்" என்னும் பெயர் கொடுத்து சி.சொ.சண்முகப்பிள்ளை, சி.அ.வேலாயுதபிள்ளை, சி.இரா. ஆறுமுகப்பிள்ளை என்னும் மூவரும் வெளிப்படுத்திய பத்திரிகையிற் காணப்படும். இராமலிங்கபிள்ளை பேசிய தூஷணைகள் அப்பத்திரிகையில் இருக்கின்றன.

இந்தக் கூட்டவிஷயமாகச் சில 'கிறிமினல்' வழக்குக்கள் மஞ்சக்குப்பக் கோட்டிலே தொடுக்கப்பட்டன. இராமலிங்கபிள்ளை தம்மேற்றெடுக்கப்பட்ட வழக்கில் தாம் இவரை எவ்வாற்றானும் அவமதித்துப் பேசவில்லையென்று அழித்துவிட்டார். அவர் சொன்னது முழுதும் பொய்யென்று அறிந்த இவர், பலரெதிரே தாம் பேசியதைப் பேசவில்லையென்று இராமலிங்கபிள்ளை சொல்லி மறுத்ததே போதுமென்றெண்ணி, அவர்மேற் கொண்டுவந்த வழக்கை விடுவித்தார். இராமலிங்கபிள்ளை பேரம்பலத்திலேயிருந்து இவரை அவதூறாகப் பேசியது சுக்கில வருஷம், ஆனி மாசம் உத்தர தரிசனத்தன்றாம்; அவர் தாம் அப்படிப் பேசவில்லையென்று மஞ்சக்குப்பக்கோட்டிலே அழித்துச்சொன்னது அடுத்த மார்கழித் திருவாதிரைத் தரிசனத்தன்றாம். இதிலும் ஏதோ ஒரு தெய்வச்செயல் இருக்கிறதுபோலத் தோன்றுகின்றது.

தோஷித்தார்கள் இவர்மேற்றொடுத்த ஒருவழக்கில், தாம் சிக்ஷிக்கப்படுவாரென்றே இவர் எண்ணியிருந்தார். விசாரணை நடக்குந்தினத்தில் காலையிற் பூசை முடித்துக் கொண்டு உடையவரைத் தமது மாணாக்கர் சதாசிவப்பிள்லையிடங்கொடுத்து "நான் இன்று சிக்ஷிக்கப்படின் என்னுயிரை விட்டுவிடுவேன், நீ இவ்வுடையவரைக் கங்கையிலே விட்டுவிடு" என்று சொல்லிவிட்டுக் கோட்டுக்குப் போயினர். விசாரணையில் மற்றைக் கட்சியார் கேட்ட முட்டுப்பாடான ஒரு கேள்விக்கு மறுமொழியும் கண்ணீரும் இவருடைய நாவினுங் கண்களினும் நின்று ஒருங்கே வந்தன. கோட்டில் இவர் நின்ற நிலையும் பேசிய திறமையும் நீதிபதிக்குப் பேராச்சரியத்தை விளைத்தன. இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது.

இவ்வழக்குக்களில் யாழ்ப்பாணம் செளந்தரநாயகம் பிள்ளையென்னும் வைக்கீல் சிரத்தையோடு காட்டிய திறமைகள் பல உண்டு.

ஆறுமுக நாவலரின் தரப்பு வாதங்கள் வேறெந்த வகையிலும் இவ்விதமாய் ஆவணப் படுத்தப் பட்டிருப்பதாய் தெரியவில்லை. அந்த வகையில் இந்த குறிப்புகள் நாணயத்தின் இன்னொரு பக்கமாய் கருதலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..அருட்பா மருட்பா விவகாரம் தொடர்ச்சி....

Author: தோழி / Labels: , ,

அருட்பா மருட்பா விவகாரம் என்பது ஆறுமுக நாவலருக்கும், வள்ளல் பெருமானுக்கும் இடையேயான பிரச்சினை என்பதைத் தாண்டி. அப்போதிருந்த சைவ சமய அன்பர்களுக்கும் வள்ளல் பெருமானாருக்குமானது என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் துவங்கிய இந்த பிரச்சினை, வள்ளல் பெருமானின் மறைவுக்குப் பின்னரும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை நீடித்திருக்கிறது.

இந்த கால கட்டத்தில் வள்ளல் பெருமானின் வளர்ச்சி இவர்கள் அனைவரையும் உறுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை. சாமான்ய மக்களிடம் வள்ளல் பெருமான் முன் வைத்த கொள்கைகளுக்குக் கிடைத்த வரவேற்பும், அங்கீகாரமும் சைவ சமய பெருமக்களிடையே கடுங்கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்கியிருந்தன.

இந்த வகையில் வள்ளல் பெருமானை எதிர்த்த சில முக்கியமான பிரமுகர்களையும் அவர்கள் மூலம் வெளியிடப் பட்ட பிரசுரங்கள் பற்றியும் இந்த பதிவின் ஊடே ஆவணப் படுத்திட விரும்புகிறேன். இந்த எதிர்ப்பாளர்களில் வள்ளல் பெருமானின் சகோதரர் திரு.சபாபதி பிள்ளை அவர்களும் தீவிரமாய் இருந்திருக்கிறார் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும்.. வள்ளல் பெருமானையும், அவரது கொள்கைகளையும் நிராகரித்து “இராமலிங்கர் படிற்றொழுக்கம்” என்னும் நூலை இவர் வெளியிட்டிருக்கிறார்.

சாதி சமயம் கடந்த ஒரு சமரச சமூகத்தை வளர்த்தெடுக்க ஆன்மிக மடங்களினால் மட்டுமே முடியும் என வள்ளல் பெருமான் நம்பினார். ஏனெனில் அந்த கால கட்டத்தில் இந்த மடங்கள் மீது மக்கள் அளவற்ற மரியாதை வைத்திருந்தனர். இந்த ஆதின கர்த்தர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் வேதவாக்காக கருதப் பட்ட காலம். ஆனால் இந்த ஆதின கர்த்தர்களோ வள்ளல் பெருமானுக்கு எதிராக இருந்தனர். அவர்களில் முக்கியமான சிலரை இங்கே பட்டியலிடுவது அவசியம் என கருதுகிறேன்.

திருவாவடுதுறை குரு மகாசந்நிதானம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகள், தருமபுர ஆதீனம் சண்முகத் தம்பிரான் சுவாமிகள், வேதாரண்ய ஆதீனம்  உதயமூர்த்தி தேசிக சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் போன்ற சைவ சமய மடாதிபதிகள் வள்ளல் பெருமானுக்கும் அவரது கொள்கைகளுக்கும் எதிரானவர்களாய் இருந்தனர். வேறு சில மடாதிபதிகளும் இத்தகைய நிலைப்பட்டுடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

இவர்களைத் தவிர சமய மற்றும் தமிழ் அறிஞர்களான திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் சபாபதி நாவலர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடரான திரு. ஸ்ரீ நா. கதிரைவேற்ப் பிள்ளை, மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாவித்வான் மதுரை இராமசுவாமிப் பிள்ளை, மகாவித்வான் கொ.  சாமிநாத தேசிகர், மாமண்டூர் திரு. தியாகேச முதலியார், திரு பாலசுந்தர நாயக்கர் போன்ற பெருமக்களும், திருநெல்வேலி சித்தாந்த சைவ நெறிக் கழகமும் போன்ற அமைப்பினரும் வள்ளல் பெருமானாருக்கு எதிராக போர்க் கோலம் கொண்டிருந்தனர்.

இத்தகைய பெருமக்கள் தங்களுடைய கருத்தை, கண்டணஙக்ளை  பல்வேறு அச்சுப் பிரசுரங்களாக வெளியிட்டிருக்கின்றனர். ஒரு தனி மனிதனையும் அவரது கொள்க்கைகளையும் சாடி இத்தனை  பிரசுரங்கள் வெளி வர வேண்டிய அவசியமென்ன என்பதை சற்றே யோசித்தால், வள்ளல் பெருமானின் கொள்கைகள் உருவாக்கிய தாக்கம் எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. இந்த பிரசுரங்களில் ஆவணப் படுத்தப் பட்ட சில நூல்களின் பெயர்களை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

போலி யருட்பா மறுப்பு
போலி யருட்பாக் கண்டன மகாவித்வ ஜனசபை
மருட்பா விவாத மத்தியக்ஷப் பத்திரிகை
இராமலிங்கர் பாடல் ஆபாசதர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு
போலியருட்பாக் கண்டனப் பிரசங்கம்
மருட்பா மறுப்பு அரங்கேற்றம்
போலி யருட்பா வழுத்திரட்டு
கருங்குழிப் பிள்ளை பாடல் ஆராய்ச்சி
இராமலிங்க பிள்ளை அங்கதப் பாட்டு
இராமலிங்கர் படிற்றொழுக்கம்
குதர்க்காரணிய நாச மகா பரசு கண்டனம்
சிவநிந்தை, குருநிந்தை
திருவருட்பா நிந்தையினார்க்குச் செவியறிவுறுத்தல்
பசுகரண விபரீதாத்த நிக்கரகமும் போலியருட்பாக் கண்டனப் பரிகார மறுப்பும்
மனமே சிந்தனை செய்; தெளிந்து செயலாற்று
முக்குணவயத்தின் முறை மறந்தறைதல்
போலிவாதிகளுக்குப் புத்தி புகட்டல்
குதர்க்கிகளின் பொய்கோள் விலக்கு

ஒரு தனி மனிதனை எதிர்த்து இத்தனை நூல்கள் வெளியாகின என்பது ஆச்சர்யமான தகவல்தானே!.  அடுத்த பதிவில் இராமலிங்க அடிகளார்  பற்றி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சுய சரிதையில் என்ன எழுதியிருக்கிறார்கள் எனபதைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..அருட்பா, மருட்பா விவகாரம்.

Author: தோழி / Labels: , ,

சைவ சமயத்தில் பக்தி இலக்கியங்கள் என்றால் அவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவையே. இவை யாவும் பக்தியில் உயர்ந்து சிறந்து தெய்வீக நிலைக்கு உயர்ந்த பெருமக்களினால் அருளப் பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இதன் பின்னர் இயற்றப் பட்ட பாடல்கள் யாவும் பிரபந்த திரட்டுகள் எனவும், அதற்கும் பிந்தைய காலத்து பாடல்கள் பாடல் திரட்டு என்றே குறிப்பிடப் பட்டு அடுத்தடுத்த நிலைகளில் வைக்கப் பட்டன. 

கோவிகளில், பஜனைகளில், உற்சவங்களில் இந்த பாடல்களே மிகுந்த சிரத்தையோடும், பக்தியோடும் பாடப்பட்டு வந்தன. இத்தகைய சூழலில் 1867ல் வள்ளல் பெருமானின் பாடல்கள் நூலாக தொகுக்கப் பட்டு அருட்பா எனும் பெயரில் பதிப்பிக்கப் பட்டது. இந்த பாடல்கள் யாவும் வள்ளல் பெருமானின் ஆழ்ந்த அனுபவ பிழிவுகள் என்பதால் அவற்றின் சொற்சிறப்பும், பொருள் சிறப்பும் கேட்போர் உள்ளங்களை பக்திப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தியதால் அவை பரவலான வரவேற்பினை பெற்றன.

வள்ளல் பெருமானின் அணுக்கத் தொண்டர்களின் முயற்சியினால் துவக்கத்தில் சொற்பொழிவுகளில் மட்டுமே பாடப்பட்ட அருட்பா பாடல்கள் பின்னர் கோவில்களிலும், உற்சவங்களிலும், பன்னிரு திருமுறைகளோடு பாடப்படும் அளவிற்கு உயர்ந்தது. பக்தி இலக்கியங்களுக்கு இணையாக வைத்து அருட்பா என பாடப் பெற்றது  ஒரு சாராருக்கு உறுத்தலாகவே இருந்தது. இத்தகையவர்கள் பெரும்பாலும் தீவிர சாதீய பற்றுள்ள பழமை வாதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

பெருமானாரின் பாடல்களுக்கு வரவேற்பும் அங்கீகாரமும் அதிகரித்துக் கொண்டிருந்த சூழலில், வள்ளல் பெருமானோ தன்னுடைய ஆன்மிக தேடலில் வேறோர் தளத்திற்கு உயர்ந்திருந்தார் தன்னுடைய தெளிவுகளை அவர் வெளியே சொல்ல ஆரம்பித்த போது அவை சைவ மதத்தின் மரபியல் சிந்தனைகளின் அடிப்படையையே  உடைத்தெறிவதாய் இருந்தது. சாதி சமய வேறுபாடுகளை களைந்து, அனைவரும்  ஆண்டவன் முன்னே சமம் என்ற அவரது போதனைகள் சைவ சமய அடிப்படை வாதிகளை ஆத்திரமுறச் செய்தது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சென்னையில் “சுக்கிரவார சங்கம்” என்றோர் அமைப்பை நிறுவி நடத்தி வந்தார்.  இந்த கூட்டங்களில் நாவலரின் சொற்பொழிவுகள் பிரசித்தமானது. அத்தகைய ஒரு  கூட்டத்தில்தான் முதன் முதலாக வள்ளல் பெருமானுக்கு எதிரான கருத்துக்களை ஆறுமுக நாவலர் பதிவு செய்தார்.

சைவ சமயத்தின் அடிப்படைகளுக்கு  எதிரான கருத்துக்களை கூறி வரும் வள்ளல் பெருமானாரின் பாடல்கள், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் போன்ற தெய்வீக புருஷர்களின் பாடல்களுக்கு இணையாக வைத்து பாடக் கூடாது என்பதாகத்தான் அவரின் முதல் எதிர்ப்புத் தோன்றியது.

அடுத்த கட்டமாய் இந்த பாடல்கள் ஏன் தகுதியற்றவை எனபதை நிறுவும் வகையில் அருட்பாக்கள் யாவும் மருட்பாக்களே என்பதை காரண காரியங்களோடு விளக்கி நூலாகவும் வெளியிட்டார். இந்த கால கட்டத்தில் இது போன்ற அநேக பிரசுரங்கள் அச்சிடப் பட்டு விநியோகிக்கப் பட்டன. மேலும் வள்ளல் பெருமானாரை தனிப்பட்ட முறையிலும் தாக்கி சொல்லம்புகள் வீசப்பட்டன.

இரு தரப்பிலும் கடுமையான வாத விவாதங்கள் நடந்தேறின. இரு தரப்பிலும் பல்வேறு சமய அறிஞர்கள் தங்கள் கண்டனங்களையும், விளக்கங்களையும் முன் வைத்தனர். வள்ளல் பெருமானுக்கு ஆதரவாக கலந்து கொண்டவர்களில்  ஒரு இஸ்லாமிய தமிழறிஞரைப் பற்றி இங்கே பதிவு செய்வது அவசியமென நினைக்கிறேன். சதாவதானம் செய்குத்தம்பி பாவலர் என்னும் இஸ்லாமிய தமிழறிஞர் வள்ளல் பெருமானாரின் சமரச சன்மார்க்க கொள்கையில் ஈர்ப்புண்டாகி வள்ளல் பெருமானுக்கு ஆதரவாக சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

காலம் காலமாய் ஊறிப் போயிருக்கும் மரபுகளை மீறும் போது கடுமையான எதிர்ப்புகள் வருவது இயல்பே என்பதை உணர்ந்திருந்த வள்ளல் பெருமான், இத்தகைய எதிர்ப்புகளை பொருட்படுத்தாது தன் வழியில் தீவிரமாயிருந்தார். வள்ளல் பெருமானின் இத்தகைய தவிர்க்கும் போக்கினால் வெகுண்ட ஆறுமுக நாவலர், வள்ளல் பெருமான் தன்னை அவதூறு செய்ததாக நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குகளை நிரூபிக்கத் தவறியதால் நீதி மன்றத்தால் அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டன.

சைவ சமயம் சிதைந்து அழிந்து விடக்கூடாது என்கிற ஆதங்கத்தில்தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் வள்ளல் பெருமானை எதிர்த்தார். ஆனால் அதுவே அந்த மகா மனிதரின் வாழ்வில் ஒரு கரும்புள்ளியாகி விட்டது. 

இந்த அருட்பா, மருட்பா போர் இத்துடன் முடிவடைந்ததா?, நாவலரைத் தவிர வேறு யாரெல்லாம்  வள்ளல் பெருமானை எதிர்த்தார்கள்?, எத்தகைய நூல்கள், பிரசுரங்கள் வெளியாயின?.... போன்ற தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..யார் இந்த ஆறுமுக நாவலர்?

Author: தோழி / Labels: ,

சைவ சமய குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றக் கூடிய தகுதியுடையவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் என்பது பலரும் அறியாத செய்தி.  சைவ சமய மீட்டுருவாக்கத்திலும், தமிழின் வளர்ச்சிக்கும் தன் வாழ் நாளெல்லாம் தளராது உழைத்த பெருமகனார் என்றால் மிகையில்லை. இத்தனை சிறப்புகள் வாய்ந்த மனிதரைப் பற்றிய விவரங்களை ஒரு பதிவில் சுருக்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பதால், நம்முடைய  தொடருக்குத் தேவையானதை மட்டுமே இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

இலங்கையில் யாழ்பாணத்தில், நல்லூரில்  கந்தப்பிள்ளை, சிவகாமி  தம்பதிகளின் கடைசி மகனாய் 1822ல் ஆறுமுகம் பிறந்தார். தனது ஐந்தாம் அகவையில் குருகுல வாசமாயிருந்து கல்வி கற்கத் துவங்கினார். நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயர், இருபாலை சேனாதி ராய முதலியார், நல்லூர் சரவண முத்துப் புலவர் ஆகியோரிடம் தமிழ் இலக்கணத்தையும், இலக்கியங்களையும், சைவ சமய சித்தாந்தஙக்ளையும் கற்றுத் தேர்ந்தார். தனது பதினைந்தாம் வயதிற்குள் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நல்ல புலமை பெற்றவரானார்.

இது தவிர யாழ்பாணத்தில் அப்போது பிரபலமாயிருந்த மெதடிஸ்த ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து முறையாக ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்தார். தன்னுடைய இருபதாவது வயதில்,  ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றத் துவங்கினார். இக் கால கட்டத்தில்  கிருத்துவர்களின் வேத நூலான புனித பைபிளை தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சியில் நாவலரின் பங்களிப்பும் இருந்ததாய் குறிப்புகள் உண்டு.இன்றும் கூட கிருத்துவ பெருமக்கள் பயன்படுத்தும் பையிளின் வாசகங்கள் அல்லது வார்த்தைகள் பலவும் ஆறுமுக நாவலரால் உருவாக்கப் பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த நூலில் மொழிபெயர்ப்பு மற்றும் அச்சிடும் வேலைக்கு உதவியாக முதன் முதலில் தமிழகம் வந்தார்.

தனது இருபத்தியைந்தாம் வயதில் கோவில்களில் பக்திச் சொற்பொழிவுகளை நிகழ்த்தத் துவங்கினார். இதில் பெருவிருப்பம் கொண்ட நாவலர், தன் வாழ் நாளை சமயத் தொண்டாற்ற முடிவு செய்து தனது ஆசிரியப் பணியினைத் துறந்தார். சைவ சமயம் என்பது வைதீக பிராமணர்களின் ஆக்கிரமிப்பினால் தன் பொலிவினை இழந்து வைதீக சடங்குகளிலும், சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்தில் சிக்கி சிதைவடைவதை எண்ணி மனம் வருந்தி, சைவ சமயத்தை இத்தகைய சக்திகளிடம் இருந்து  மீட்டெடுத்து  அதன் மகோன்னத நிலைக்கு கொண்டு வர உறுதி பூண்டு களமிறங்கினார். 

முதற்கட்டமாக சைவ சமய குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்து புத்தகமாக அச்சிட்டார். இதற்கென தமிழகத்தில் இருந்து  அச்சியந்திரம் ஒன்றினை தருவித்து தனது இல்லத்தில் நிறுவி புத்தகங்களை அச்சிட்டு வழங்கினார். ஆத்திசூடி, நன்னூல் விருத்தியுரை,கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, ஞானக்கும்மி, சைவ சமய சாரம், வச்சிரதண்டம், கொலை மறுத்தல்,திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை,யேசுமதபரிகாரம் போன்ற எண்ணற்ற பல நூல்களை அச்சிலேற்றி பதிப்பித்தார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். தமிழில் முதன்முதலில் வசனங்களையும், வாக்கியங்களையும் பிழையின்றி கட்டமைத்து உரைநடையை உருவாக்கிய பெருமை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரையே சேரும். 

ஆறுமுக நாவலர் சிறந்த சொற்பொழிவாளர். அவருடைய சொற்பொழிவுகள் கேட்போரை பக்தியில் ஆழ்த்தி சைவசமயம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தின. சைவ சமய சித்தாந்தங்களை போதிக்கும் பாட சாலை ஒன்றையும் இலங்கையில் நிறுவினார். தன்னுடைய எல்லைகளை விரிவாக்க வேண்டி தமிழகம் வந்த நாவலர் சென்னையிலும் அச்சியந்திரம் ஒன்றை நிறுவி நூல்களை அச்சிட்டு வழங்கினார். தமிழகமெங்கும் அவரது சமய பிரச்சாரங்கள் சிறப்பாக நடந்தேறின. 1849 ம் ஆண்டு திருவாடுதுறை ஆதீன கர்த்தர், ஆறுமுகம் அவர்களுக்கு நாவலர் பட்டத்தை அருளி சிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மடங்களும், சமஸ்தானஙகளும் அவருடைய தொண்டை அங்கீகரித்து அவருக்கு மரியாதை செய்தனர்.

1864ம் ஆண்டில் சிதம்பரத்தில் சைவ சமய சித்தாந்தங்களை பயிற்றுவிக்கும் பள்ளி ஒன்றினைத் துவங்கினார். இந்த கால கட்டத்தில்தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலருக்கும் வள்ளல் பெருமானுக்கும் இடையே கருத்தியல் சார்ந்த உரசல்கள் ஆரம்பமாயின.  இந்த மோதலையே “அருட்பா மருட்பா” மோதல் என வரலாறு ஆவணப் படுத்துகிறது.

அந்த விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..வள்ளல் பெருமான் கண்டெடுத்த ஆன்மிகம்

Author: தோழி / Labels:

வள்ளல் பெருமானின் ஆன்மிகம் என்பது அவர் தன் அனுபவங்களின் ஊடேயான பாரபட்சமில்லாத தேடல்களின் முடிவில் தெளிந்த ஓர் நிலை. இதனை அவரது பாடல்களின் ஊடே பயணிக்கும் எவரும் அறிந்து கொள்ள முடியும். கடவுளின் மீது கவனம் வைத்து அவரைத் தன் மனத்தே இருத்தி அவரின் அருளை இறைஞ்சியிருப்பதே  தன் பக்தியின் பூரண நிலை என கருதியிருந்தவர்,  சென்னையை விட்டு கிளம்பிய பின்னர் தான் சந்தித்த மனிதர்கள், எதிர் கொண்ட பிரச்சினைகள், அதனால் கிடைத்த வாழ்வியல் அனுபவங்கள் போன்றவை அவரது சிந்தனையைக் கிளறி அவரை வேறோர் தளத்திற்கு நகர்த்தின என்றால் மிகையில்லை.

1865 வரையிலான கால கட்டத்தில் அவர் மற்றெவரையும் போன்றொதொரு பக்தி மார்க்கத்தையே பின்பற்றியிருந்தார். இது அவரின் பாடல்களின் ஊடே நாம் அறிய முடிகிறது. இதன் பின்னரான கால கட்டத்தில் அவரது பாடல்கள் யாவும் தன்னைத் தாண்டிய ஒரு சமூக நோக்கோடும், அக்கறையோடும் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இந்த காலகட்டத்தில்தான் அவர் “ஜீவ காருண்ய ஒழுக்கம்” நூலை எழுதியிருக்கிறார்.

கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்த அவரது சமகால சமூக வாழ்வியல் அவலங்கள் யாவும் வள்ளல் பெருமானிடம் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி இருந்தது. சக மனிதர்கள் அனுபவித்த துன்பத்திற்கான காரணங்களையும் அவற்றிலிருந்து அவர்கள் மீள்வதற்கான தீர்வுகளை வேண்டுவதாக அவரது ஆன்மிகம் வளர்ந்திருந்தது.  சக உயிர்களின் மீது அன்பும், கருணையும் கொண்டு அவர்களுக்கு உதவுவதே எல்லா துயரங்களுக்கும்  தீர்வாக இருக்கும் என நினைத்தார். இதனையே ஆன்ம நேய ஒருமைப்பாடு என்கிறார். ஜீவகாருண்ய ஒழுக்கம் இதனையே முன்னிறுத்துகிறது.

நிபந்தனையில்லாத அன்பே கடவுள், அந்த கடவுள் என்பவர் ஒரு ஆளோ அல்லது உருவமோ இல்லை, அதொரு விரிந்து பரந்த பூரண அன்பு நிலை என்பதாக வள்ளல் பெருமானின் ஆன்மிகம் அடுத்த தளத்துக்கு முன்னேறியிருந்தது. எங்கும் விரிந்து நிறைந்த கடவுள் நமக்குள்ளும் அன்பாகவும், கருணையாகவும் நிறைந்திருக்கிறார். அந்த அன்பை வளர்த்தெடுப்பதன் மூலம் பேரன்பு நிலையான கடவுளை அடைய முடியுமென நம்பினார். இத்தகைய பேரன்பும், பெருங்கருணையுமே மனித சமூகத்தை அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளில் இருந்து கடைத்தேற்றும் என உறுதியாய் நம்பினார்.  

தன்னுடைய இந்த தெளிவுகள் பாரபட்சமில்லாமல் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டுமெனில், காலம் காலமாய் மக்களை சூழ்ந்திருக்கும் மாயை விலக வேண்டுமென நினைத்தார். இதற்கு சடங்குகள், அவை கொண்டிருந்த மூட நம்பிக்கைகள் இடையூறாய் இருப்பதை உணர்ந்தார். அத்தோடு சாதியின் பெயரால், சமயத்தின் பெயரால், பொருளாதார கூறுகளினால் உருவாக்கப் பட்ட ஏற்றத் தாழ்வுகள் களைந்தெறியப் பட வேண்டுமென நினைத்தார். இறைவனின் பெருங்கருணையின் முன்னால் அனைவரும் சமம் என்கிற நிலை உருவாக வேண்டும். இதனை தன் சமயமும், அதன் ஸ்தாபனங்களான மடங்களும் முன்னின்று செயல்படுத்த வேண்டுமென பெருமானார் விரும்பினார். ஆனால் அது நடந்ததா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.

சக உயிர்களின் மீது செலுத்தப் படும் தூய அன்பும், பெருங் கருணையுமே மெய்யான இறைவனை அடையும் வழி என்கிற வள்ளல் பெருமானின் மெய்யறிவானது நம் சித்தர் பெருமக்கள் முன் வைக்கும் ஆன்மிகத்தை ஒட்டியதாய் அமைந்திருப்பதை இங்கே சுட்டிக் காட்டிட விரும்புகிறேன். தமிழ் சமூகத்தில் இத்தகைய மெய்யறிவாளர்கள் அரிதாகவே தோன்றியிருக்கின்றனர்.

இந்த பதிவின் தகவல்கள் யாவும் அவருடைய பாடல்களில் இருந்து எடுக்கப் பட்ட கருத்துக்களே!. பதிவின் நீளம் மற்றும் வாசிப்பின் சுவாரசியம் கருதி பாடல்களை இங்கே தவிர்த்திருக்கிறேன்.

வள்ளல் பெருமானின் இத்தகைய கருத்துக்கள் அவரது பாடல்களின் ஊடே வெளியான போது, அவை கடுமையான எதிர்ப்புக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகின.  ஏற்கனவே கிருத்துவ பாதிரிமார்களின் செயல்பாடுகளினால் கலக்கமடைந்திருந்த சைவசமயத் தலைவர்கள் வள்ளல் பெருமான் முன்வைத்த ஆன்மீகத்தை எரிச்சலோடு நிராகரித்தனர். மேலும் அவரை கடுமையாக அவதூறு செய்து அச்சுறுத்தினர். இதனால் வள்ளல் பெருமானார் பல சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

இந்த சிரமங்களில் முக்கியமானது அருட்பா, மருட்பா விவகாரம். இது வள்ளல் பெருமானுக்கும், யாழ்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலருக்கும் நீதிமன்றம் வரை சென்ற  கருத்து மோதல். இந்த மோதல் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. அவை இரண்டையும் இந்த தொடரில் ஆவணப் படுத்துவது அவசியமென கருதுகிறேன்.

அதற்கு முன்னர் ஆறுமுக நாவலர் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அந்த விவரங்கள் நாளைய பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..வள்ளல் பெருமான் காலத்தைய தமிழகம்

Author: தோழி / Labels:

வள்ளல் பெருமானைப் பற்றி பாரபட்சமில்லாமல் புரிந்து கொள்ள நினைக்கும் போது, அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் எத்தகைய சூழல் நிலவியது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. எந்த ஒரு மனிதனும் தான் வாழும் காலத்தின் சமூக வாழ்வியல் சூழல்களின் தாக்கங்களை உள்வாங்கி பிரதிபலிக்கிறவனாகவே இருக்கிறான். இதற்கு வள்ளல் பெருமானாரும் விதிவிலக்கில்லை.

முகலாய பேரரசு உச்சத்தில் இருந்த போது கிழக்கிந்திய கம்பெனி என்கிற பெயரில் இந்தியாவில் வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் நாடு பிடிக்கத் துவங்கி, வள்ளல் பெருமானார் காலத்தில் ஆட்சி அதிகாரத்தோடு வலுவாக வேரூன்றி விட்டிருந்தனர். தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகள் முழுமையாக அவர்களது கட்டுப்பாட்டில் வந்திருந்தது. 

குறிப்பிட்ட சில சாதியினருக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பும் வசதியும் இருந்தது.  மற்றவர்கள் கல்வியறிவு இல்லாத பாமரர்களாகவே இருந்தனர். விவசாயம் என்பது பெருந்தனக்காரர்களிடம் சிக்கியிருந்தது. பண்ணையடிமைகளாகவே விவசாயிகள் இருந்தனர். இதனால் உணவுத் தட்டுப்பாடு மேலோங்கி இருந்தது. பெரும்பான்மை மக்கள் பசியிலும், பஞ்சத்திலும் சிக்கி வறுமைப் பட்டிருந்தனர்.

சைவ மதம் என்பது பிராமணர்கள் மற்றும் சைவ வேளாளர்கள் என்கிற இரண்டு சாதியினரின் கட்டுப்பாட்டில் அல்லது வழி நடத்துதலில் இருந்தது. இந்த இரண்டு பிரிவினருக்குமிடையே ஒத்த கருத்துக்கள் இல்லை. சாதீயத்தின் வேர்கள் சமூகத்தின்  நீள அகலங்களில் ஊடுருவி கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த காலம். இவர்களுக்குப் போட்டியாக கிருத்துவ பாதிரிமார்கள் தங்கள் மதத்தினை பரப்பும் முயற்சியில் அரச ஆதரவோடு களமிறங்கியிருந்தனர்.

கிருத்துவ மதம் முன்னிருத்திய ஓரிறை கொள்கை தமிழர்களுக்கு புதியதாக இருந்தது. மேலும் சாதியின் பெயரால் காலம் காலமாய் ஒடுக்கப் பட்டு இழிநிலையில் இருந்த மக்களின் முன்னே கிருத்துவ பாதிரிமார்கள் முன் வைத்த  தனிமனித நலன்கள், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள், சமூகவியல் சுதந்திரம்  போன்ற கருத்தாக்கங்கள் பரவலான வரவேற்பினை பெற்றிருந்தது. இதனால் கிருத்துவ பாதிரிமார்களின் மதமாற்றம் செய்யும் வேலை எளிதானதாக இருந்தது.

இவ்வாறு ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஆறுதலும், தேறுதலும் தரும் மதமாக கிருத்துவ மதம் உருவெடுக்கத் துவங்கியது சைவ சமய வாதிகளுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. இதனால் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அவதூறு சொல்வதும், மத நம்பிக்கைகளை தூற்றுவதும், வழக்காடுவதும் என கருத்து மோதல்கள் பரவலாய் நடந்தேறிக் கொண்டிருந்தது.  தங்களின் பிடி நழுவுவதை விரும்பாத சைவ மத பற்றாளர்கள் முழு முனைப்புடன் சைவ மதத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கினர்.

சைவ மத மீட்டுருவாக்கம் என்பது வடமொழி வேதங்கள்,ஸ்லோகங்கள், சடங்குகள் போன்றவைகளை களைந்து,  சைவ மதத்தை தமிழின் ஊடாக முன்னிலைப் படுத்துவதாகவே அமைந்திருந்தது. வடமொழி நூல்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப் பட்டன. புத்தகங்களை அச்சிடும் வழக்கம் தோன்றியதால் பல உரை நடை நூல்கள் தமிழில் எழுதப் பட்டன. இதில் யாழ்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் போன்றோரின் பங்களிப்பு மகத்தானது. 

இந்த கால கட்டத்தில்தான் வள்ளல் பெருமானின் பாடல்களை அவரது அணுக்கத் தொண்டர்கள் நூலாக தொகுக்க முனைந்தனர். வள்ளல் பெருமானாரின் முழு விருப்பம் இல்லாமலே ஐந்து தொகுதிகளாக திருவருட்பா எனும் பெயரில் நூலாக பதிப்பிக்கப் பட்டன. 1867ல் வெளியான இந்த நூல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன. கோவில்களிலும், சமூக கூட்டங்களிலும் வள்ளல் பெருமானின் பாடல்கள் பாடப் பெற்றன. இதற்கு சைவ மத பற்றாளர்களும் ஆதரவளித்தனர்.

ஆனால் இந்த கால கட்டத்தில் வள்ளல் பெருமானார் தனது ஆன்மிக தெளிவில் வேறோர் தளத்திற்கு வந்திருந்தார்.

அந்த விவரங்கள் அடுத்த பதிவில்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...கருங்குழியில் வள்ளல் பெருமான் (1858 - 1867)

Author: தோழி / Labels:

சென்னையின் நகரச் சூழலில் தன் இளமைக் காலத்தை கழித்த வள்ளல் பெருமான், 1858ல்  சென்னையை விட்டு கிளம்பி சிதம்பரம் வருகிறார். இதன் பிறகு அவர் சென்னைக்கு திரும்பியதாக தெரியவில்லை. ஏன் சென்னையை விட்டு கிளம்பினார் என்பதற்கும் தெளிவான காரணங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களை தரிசிக்க புனித யாத்திரையாக அவர் சென்னையை விட்டு கிளம்பியதாக ஒரு தகவல் நமக்குக் கிடைக்கிறது.

சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தே வள்ளல் பெருமானின் தேடல்கள் யாவும் தன்னையொட்டியதாகவே அமைந்திருந்தது. தனக்கான தீர்வுகளை மட்டுமே அவரது ஆரம்ப கால பாடல்களில் அவதானிக்க முடிகிறது. இப்படி தன்னை சார்ந்த உள் வட்டத்தில் கிடைத்த அனுபவங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியே அவர் சென்னையை விட்டு கிளம்பியிருக்கலாம் என கருத  இடமிருக்கிறது. 

சிதம்பரம் வந்த பெருமானார், பின்னர் வடலூர் அருகே உள்ள கருங்குழி என்கிற கிராமத்தை தெரிந்தெடுத்து அங்கே தங்குகிறார்.   கருங்குழியில் கிராம மணியக்காரர் திருவேங்கட ரெட்டியார் என்பவர் வீட்டில்தான் ஒன்பது ஆண்டுகளும் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அடுத்த ஒன்பது ஆண்டுகள் அவரது வாழ்க்கை கடலூர், சிதம்பரம், வடலூர் என கருங்குழியைச் சுற்றியே அமைந்திருந்தது. இந்த காலகட்டத்தில் சுற்றுப் புறத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். 

இந்த பயணத்தின் ஊடேதான் அவர் அப்போது நிலவிய நகரம் தாண்டிய சமூக வாழ்வியல் சூழலை புரிந்து கொள்ளவும், சக மனிதர்கள் மீதும் சக உயிரினங்கள் மீதும் அன்பு கொள்வதே ஆண்டவனைச் சென்றடையும் பாதை என்பதாக தெளிந்தார் என நம்பவும் இடமிருக்கிறது. அவருடைய  இத்தகைய தெளிவுகள் அவருடைய ஆன்மிகத்தை அடுத்த  கட்டத்திற்கு நகர்த்தியது என்றால் மிகையில்லை. தன்னுடைய இந்த நிலை மாற்றத்தைப் பற்றி வள்ளல் பெருமானார் ஒரு பாடலில் ஒப்புதல் வாக்குமூலமே தருகிறார்.

என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய்
இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை
வள்ளல்நீ நினக்கிது விடயம் 

- பிள்ளைப் பெரு விண்ணப்பம் (திருவருட்பா).

வருமுயிர் இரக்கம் பற்றியே உலக
வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்
விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான்
ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத்
தொருவனே நின்பதத் தாணை. 

- பிள்ளைப் பெரு விண்ணப்பம் (திருவருட்பா).

என்னையும் பிற உயிர்கள் மீதான இரக்க குணத்தினையும் ஒன்றாக இணைத்து இந்த உலகத்தில் வாழ வைத்த கருணை வள்லல் நீ!, உனக்கு இதனை நான் சொல்லத் தேவையில்லை என்றும், இந்த மண்ணில் பிறக்கும் உயிர்கள அனைத்தின் மீதும் இரக்கம் கொள்வது என்ற உலக வழக்கைப் பற்றியே என் மனம் சென்ற போதெல்லாம் மிக அச்சத்துடன் அது பற்றி உன் திருவடிக்கே விண்ணப்பம் செய்தேன் என்கிறார்.

மேலும் அருவ வடிவமான தன்னுடைய உயிர் என்பதும், மற்றைய உயிர்கள் மீதான இரக்கம் என்பதும் வெவ்வேறானவை அல்ல, அவை இரண்டும் ஒன்றுதான் என புரிந்து கொண்டதாகவும்,  இரக்க சிந்தனை தன்னை விட்டு நீங்கினால் தன் உயிரும் உடலை விட்டு நீங்கிவிடும் இது இறைவனின்  பாதங்கள் மீது ஆணை என்கிறார். 

வள்ளலாரின் இத்தகைய இரக்க சிந்தனையே பின்னாளில் அவர் முன்னிறுத்திய ஜீவகாருண்யம் என்கிற மகா தத்துவத்தின் ஆரம்பப் புள்ளி எனலாம். இவ்வாறு தான் பெற்ற தெளிவுகளை தன்னோடு மட்டுமே வைத்திருக்க அவர் விரும்பியிருக்கிறார் என்பதும் பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும். 

ஆம்,  தன்னுடைய ஆன்மிகத் தெளிவுகளை தன்னோடு வைத்திருக்க விரும்பியதாகவும் ஆனால் அது அவர் விரும்பியாவாறு நடந்ததா என்பதை பின் வரும் பாடல்களில் அறியலாம்.

அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
செவ்வண்ணம் பழுத்ததனித் திருஉருக்கண் டெவர்க்கும்
தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. 

- தற்போத இழப்பு (திருவருட்பா)

நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
வேண்டும்என இருந்தென்னை வெளியில்இழுத் திட்டு
வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. 

- தற்போத இழப்பு (திருவருட்பா)

இறையருள் தனக்கு கிடைத்ததகாவும், அந்த அருள் இன்பத்தை எண்ணிக் கொண்டு எவருக்கும் இது தெரியாமல் தனிமையில் இருக்க வேண்டும் என்றே தான் விரும்பியதாகவும், ஆனால் அப்படி இருக்க முடியாமல் உலக மக்கள் தன்னை அறிந்து கொள்ளும் வகையில் வெளியில் கொண்டுவந்து  நிறுத்தியது இறைவன் அருளா அல்லது மாயையின் செயலா என்று தெரியாமல் மனம் அலைபாய்வதாகவும் பின்னர் இது விதியின் செயல் என்று எண்ணி வருந்துவதாகவும் குறிப்பிடுகிறார். 

பதிவின் நீளம் கருதி மேலதிக விவரங்கள் அடுத்த பதிவில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..வள்ளல் பெருமான் கடைபிடித்த நியதிகள்

Author: தோழி / Labels:

இராமலிங்க அடிகளார் சென்னையில் வாழ்ந்திருந்த காலத்தே அவர் கொண்டிருந்த ஆன்மிக தேடலையும் அதன் கூறுகளையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று அவர் தனக்கென வகுத்துக் கொண்டிருந்த சில வாழ்வியல் நியதிகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பக்தி மார்க்கத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு அக ஒழுக்கம் எத்தனை முக்கியமோ, அத்தனைக்கத்தனை புற வாழ்வியல் ஒழுக்கங்களும் முக்கியமானது என்பதை வள்ளல் பெருமானார் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருக்கிறார். உணவு, உடை துவங்கி உறங்குதல் வரை தெளிவான நியதிகள் வள்ளல் பெருமானாரால் அருளப் பட்டிருக்கிறது.

அந்த வகையில் தான் ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உண்வு எடுத்துக் கொள்வதாக குறிப்பிடுகிறார்.

இரவும் பகலும் தூங்கியஎன்
தூக்கம் அனைத்தும் இயல்யோகத்
திசைந்த பலனாய் விளைந்ததுநான்
இரண்டு பொழுதும் உண்டஎலாம்
பரவும் அமுத உணவாயிற்
றந்தோ பலர்பால் பகல்இரவும்
படித்த சமயச் சாத்திரமும்
பலரால் செய்த தோத்திரமும்
விரவிக் களித்து நாத்தடிக்க
விளம்பி விரித்த பாட்டெல்லாம்
வேதா கமத்தின் முடிமீது
விளங்கும் திருப்பாட் டாயினவே
கரவொன் றறியாப் பெருங்கருணைக்
கடவுள் இதுநின் தயவிதனைக்
கருதும் தொறும்என் கருத்தலர்ந்து
சுகமே மயமாக் கண்டதுவே. 

- இறை யின்பக் குழைவு (திருவருட்பா)

இதைப் போலவே வள்ளல் பெருமானின் உடை குறித்த அக்கறையும் அவர்தம் பாடல் வரிகளின் ஊடே நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. வள்ளல் பெருமான் இடுப்பில் வெள்ளை ஆடையொன்றை முழங்கால் மறையுமளவுக்கு உடுத்தியிருக்கிறார். மேலாடை என்பது உடல் முழுவதும் போர்த்தி தலையை மூடி முக்காடிட்டிருப்பார். இதற்கான காரணத்தை பின் வருமாறு விளக்குகிறார்.

நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது
நண்பினர் உடுத்திய போது
பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம்
பயந்தனர் வெய்யலிற் கவிகை
வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம்
வெருவினேன் கைத்துகில் வீசி
அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி
அரைக்குமேல் வீக்கினன் எந்தாய். 

- பிள்ளைப் பெரு விண்ணப்பம் (திருவருட்பா)

என்னுடைய நண்பர்கள் பொற் சரிகை இட்ட ஆடையைக் கொண்டுவந்து எனக்கு அணிவித்த போது நான் மிகவும் பயந்தேன், அதனை அறிந்தவர்கள் எல்லோரும் பயந்தார்கள். அதிக வெய்யிலில் எனக்கு துன்பமேற்படும் என்று எண்ணியவர்கள் குடையினைப் (கவிகை) பிடித்தனர் அப்போதெல்லாம் நான் மிகவும் உள்ளம் வருந்தினேன். புழுதி படிந்த தெருவில் எனது மேலாடை காற்றிற் பறக்கப் நடப்பதற்கு பயந்து அதை இடையில் இறுக்கமாக கட்டிக் கொண்டேன்.... என்றவர் மேலும் பின் வருமாறு கூறுகிறார்.

கையுற வீசி நடப்பதை நாணிக்
கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்
மெய்எலாம் ஐயகோ மறைத்தேன்.
வையமேல் பிறர்தங் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப்
பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.

- பிள்ளைப் பெரு விண்ணப்பம் (திருவருட்பா)

கைகளைப் பக்கத்தே வீசிக் கொண்டு நடப்பதற்கு வெட்கப்பட்டு, அவற்றை மடக்கி மார்பிற் கட்டிக் கொண்டே நடக்கிறேன், என் உடல் வெளியே தெரிவதற்கு அஞ்சி வெண்மையான ஆடையால் போர்த்து மறைத்தே இருப்பேன்,  உலகில் மற்றவர்களில் ஆடை அணியும் முறைகளையும், நடை மற்றும் அவர்கள் தன்மைகளையும் நான் சிறிதும் கவனிப்பதில்லை. கவனித்தால் என்மனதில் பயம் உண்டாகிறது என்கிறார்.

தன்னுடைய உணவு, உடை குறித்து இத்தனை கவனமாயிருந்தது வியப்பாக இருக்கிறதுதானே!

இதைத் தவிர ஒவ்வொருவரும் தினசரி வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய நித்திய கர்ம விதிகளையும் வள்ளல் பெருமான் வகுத்துக் கொடுத்திருக்கிறார். அதனை விரிவாக இந்த தொடரின் நெடுகில் தனியொரு பதிவாக பகிர்ந்து கொள்கிறேன். அவை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

வள்ளல் பெருமானார் உணவு, உடை மற்றும் நித்திய கர்மங்கள் என ஒவ்வொன்றிலும் தனித்துவமான வாழ்க்கை முறையை பின்பற்ற  அவரது சிந்தனைப் போக்குதான் காரணம். இந்த கால கட்டத்தில் அவர் அருட்பெருஞ்சோதி என்கிற ஒளி வழிபாட்டு முறைக்கு வரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன். ஆனால் அந்த இலக்குக்கான பயிற்சிக் களமாக சென்னையில் வாழ்ந்திருந்த காலகட்டத்தை குறிப்பிடலாம்.

இது பற்றிய விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..வள்ளல் பெருமானும் வைணவமும்.

Author: தோழி / Labels:

வள்ளல் பெருமானின் ஆன்மிக பயணம் என்பது பக்தி மார்க்கமாய் துவங்கி ஞான மார்க்கத்தை தேடியதாக இருந்திருக்கிறது. துவக்கத்தில் இறைவனை ஆராதித்து மகிழ்ந்தவர், ஒவ்வொரு கட்டமாய் தன்னுடைய நிலைப்பாடுகளை தயக்கமின்றி சுயபரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். 

தன்னிலை அறிவதும், அதை உணர்வதுமே ஞானத்தின் முதல் படி. இதைத்தான் வள்ளல் பெருமானின் துவக்க கால பாடல்களின் ஊடே நாம் காண முடிகிறது. தன்னை அறிந்த ஒருவரால் மட்டுமே தன்னுடைய நிறை குறைகளை உணரவும், ஆராயவும் முடியும். இதெல்லாம் பாரபட்சமில்லாத தேடல்களில் மட்டுமே சாத்தியம். இதை நாம் வள்ளல் பெருமானின் பாடல்களில் தொடர்ந்து காணமுடிகிறது.

பிறப்பால் சைவ சமயத்தைச் சேர்ந்தவராகவும், தீவிரமான சிவ பக்தராகவும் இருந்த வள்ளல் பெருமானார் வைணவ மத தெய்வங்களான திருமாலையும், இராமரையும் மதித்துத் துதித்துப் பாடியிருக்கிறார் என்பது பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும்.

திருமாலைப் போற்றிப் பணியும் பாடல் பின்வருமாறு

திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச் 
செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத் 
தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித் 
தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே 
இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத் 
தென்அரசே என்அமுதே என்தா யேநின் 
மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ 
மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே. 

எம் பெருமாட்டியாகிய திருமகள் விரும்பி கொள்ளும் செழுமையான கனியே, பதமான சுவையுள்ள இனிய பாகு போன்றவனே, தேனே, கற்பகத்தரு இருக்கும் சோலையை ஆளும் இந்திரனைக் காப்பதற்காக கையில் வில்லேந்திய முதல்வனே, தருமம் பெற்ற மகனே, இம்மையிலும் மறுமையிலும் என் மனதில் அமர்ந்திருக்கும் ராம நாமம் என்கிற அரசனே, எனக்கு அமுதானவனே, எனக்கு தாயானவனே, பொற்தாமரை மலர்களைப்போன்ற உன் பாதங்களை வணங்கும் சிறியவனாகிய நான் மனம் வருந்துவது தெரிந்தும் அருள் செய்யவில்லையே என்று வருந்துகிறார்.

இன்னமொரு பாடல்...

காராய வண்ண மணிவண்ண
எண்ண கனசங்கு சக்ர தரநீள்
சீராய தூய மலர்வாய
நேய ஸ்ரீராம ராம வெனவே
தாராய வாழ்வு தருநெஞ்சு
சூழ்க தாமோத ராய நமவோம்
நாராய ணாய நமவாம
னாய நமகேச வாய நமவே. 

-  இராமநாம சங்கீர்த்தனம் (திருவருட்பா).

பெருமையுடைய சங்கு சக்கரங்களை யுடையவனும், கார்மேகத்தினதும், கருநீல மணியினுடைய நிறத்தினையும் கொண்டவனாகிய கண்ணனே, சீதூய்மையான மலர் போன்ற வாயையுடையவனே. அன்பனே, உன்னை ஸ்ரீராம ராம என்று துதிப்பது சீரான சிறந்த  வாழ்வை அளிக்கும் அதனால் 'ஓம் தாமோதராய நம' 'நாராயணாய நம்' 'வாமனாய நம' 'கேசவாய நம' என்று நெஞ்சே நீ செபிக்க வேண்டும் என்கிறார்.

முருகப் பெருமானில் துவங்கிய அவரதுஆன்மிக தேடல் சிவனை பணிந்து, விநாயகரை போற்றி, திருமாலை வணங்கியதாக தொடர்ந்திருக்கிறது. சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பெரிய இடைவெளியும், வேற்றுமைகளும் இருந்த ஒரு காலகட்டத்தில் தீவிர சைவரான வள்ளல் பெருமானார் வைணவ தெய்வங்களை போற்றியது பாரபட்சமில்லாத எல்லோருக்கும் நிறைவான பொதுவான இறைவனைத் தேடியதையே நமக்கு உணர்த்துகிறது.

சென்னையில் வாழ்ந்திருந்த காலத்தில் (1825 - 1858) பெருமானார் தனக்கென சில நியதிகளை உருவாக்கி கடைபிடித்திருப்பதும் அவரது பாடல்களின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த நியதிகளே அவர் தேடிய ஆன்மிகத் தெளிவுக்கான அடுத்த கட்டத்திற்கு அவரை நகர்த்தியது என்றால் மிகையில்லை.

அநத வகையில் பெருமானார் கைகொண்ட அவரது உடை மற்றும் உணவு பழக்கங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..இராமலிங்க அடிகள் (1825 - 1858) - தொடர்ச்சி

Author: தோழி / Labels:

புகழ்பெற்ற சைவசமயக்குரவர்களான  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் வழியில் தனது ஆன்மிக தேடலை இராமலிங்க அடிகள் முன்னிறுத்தியிருக்கிறார்.அவரது பெரும்பாலான பாடல்கள் இந்த நால்வரின் கருத்தோட்டத்தினை ஒட்டியதாக இருப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. வள்ளல் பெருமானாரின் எதிர்ப்பாளர்கள், அதிலும் குறிப்பாக ஆறுமுக நாவலரின் ஆதரவாளர்கள் இதனை ஒரு திட்டமிட்ட யுக்தி என்றே குற்றஞ்சாட்டுகின்றனர். அது பற்றிய விவரங்களை தொடரின் நெடுகே விரிவாய் பகிர்ந்து கொள்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனை பலவாகிலும் போற்றித் துதித்து, அவர்தம் புகழை போற்றிக் கொண்டாடி, அதன் வாயிலாய் இறைவனின் மேலான அருளை தனக்குத் தரவேண்டி இறைஞ்சுவதாகவும், பொய்யான இந்த உலக வாழ்வில் இருந்து தன்னை கடைத்தேற்ற கோரும் விண்ணப்பங்களாகவே அந்த பாடல்கள் தென்படுகின்றன. 

இது தவிர திருமூலர்,சேக்கிழார், தாயுமானவர் போன்ற பிற சைவப் பெரியவர்களின் நூல்களிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர் எழுதிய பாடல்கள் யாவும் இத்தகைய ஆன்மிக நிலைப்பாட்டினை வலியுறுத்துவதாகவே இருந்திருக்கின்றன. 

உதாரணத்திற்கு சில பாடல்களை இன்றைய பதிவில் பட்டியலிட விரும்புகிறேன்.

ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள்
நீர்என தாண்டவர் ஆகில்
பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்
புன்கணும் தவிர்த் தருளுதல் வேண்டும்
தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச்
சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
மெய்ய ரேமிகு துய்யரே தருமவிடைய
ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே.

- தனித்திருவிருத்தம் (திருவருட்பா)

உமையம்மை ஒரு புறம் உளம் மகிழ்ந்து நிற்க சச்சிதானந்தத் திருக்கூத்தாடும் திருமேனியையுடைய நடராஜனே, மிக்க தூய்மையானவரே, அறமே உருவமான எருதை வாகனமாகக் கொண்டவரே. என் இரண்டு கண்களிலும் விரும்பி எழுந்தருள்பவரே. தலைவரே, நான் உனக்கு அடியவனாக இருந்தால், அடிகளாகிய நீவிரே என்னை ஆண்டருள் வாயானால், நிலையற்ற என் மனக் கவலையும் அச்சமும் துன்பமும் நீக்கி அருள்புரிய வேண்டும்.

ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே
அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
பொழியா மறையின் முதலே நுதல்ஏய்
விழியாய் விழியாய் வினைதூள் படவே.

- தனித்திருவிருத்தம் (திருவருட்பா)

உன் சிறப்பினை எடுத்து விளக்கும் வேதங்களின் முதற் பொருளே, பொருந்திய கண்ணை உடையவனே,  நீங்காத உலக மயக்கத்திலிருந்து வருந்தும் என்னை வீணாக அழிந்துவிடாமல் உன்  திருவருளை எனக்கு நல்குக. என்னைச் சூழ்ந்து இருக்கின்ற வினைக் கூட்டங்கள் எல்லாம் தூள்தூளாக சிதறிட அருள்புரிய வேண்டும்..

பொன்அ ளிக்கும்நற் யுத்தியுந் தந்துநின்
தன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே
மன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே
என்னை நான்பல கால்இங்கி யம்பலே.

- தனித்திருவிருத்தம் (திருவருட்பா)

எம் வள்ளலே! பொன்னுலக வாழ்க்கைப் பேற்றினைப் பெறும் நல்ல ஞானமும் தந்து, உன் திருவடிகள் என்னும் தாமரைகளை என்றும் சிந்த்தித்திருக்கும் தியானமே என் உள்ளத்தில் நிலைத்திருக்க அருள வேண்டுகின்றேன். இந்த உலக வாழ்வில் நான் வேண்டுவது இதுவே என்று பல தடவைகள் உனக்குக் கூற வேண்டுமா? 

இந்த காலகட்டத்தில் அவருடைய ஆன்மிக தேடல்கள் யாவும் இறைவனிடம் தனக்கான தீர்வுகளையும், தெளிவுகளையும் வேண்டும் பக்தராகவே இருந்திருக்கிறார் என்பது இந்தப் பாடல்களின் ஊடாக தெளிவாகிறது. பக்தி மார்க்கத்தை தீவிரமாய் பின் பற்றிய பெருமானார் பின்னாளில் ஞான மார்க்கத்திற்கு மாறியது தொடர்பில் பல்வேறு கருத்தாக்கங்கள் உண்டு.

அதனை பார்ப்பதற்கு முன்னர் வேறொரு தகவலையும் இங்கே பதிந்தாக வேண்டுமென நினைக்கிறேன். ஆம், தீவிர சைவராக இனம் காணப்படும் இராமலிங்க அடிகளார் வைணவ தெய்வங்களையும் போற்றிப் பாடியிருக்கிறார்.

அந்த விவரங்கள் அடுத்த பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..இராமலிங்க அடிகள் (1825 - 1858)

Author: தோழி / Labels:

இராமலிங்க அடிகளாரின் இளமைப் பருவம் பற்றி கூறப்படும் பல்வேறு சம்பவங்கள், அவரையொரு அசாத்தியமான சக்திகள் நிறைந்த மிகை மனிதராகவே காட்சிப் படுத்துகின்றன. பின்னாளில் ஆன்மிகத்தில் அவர் தொட்ட உயரங்களை மனதில் கொண்டு அவருடைய அணுக்கத் தொண்டர்கள் இத்தகைய தொன்ம சித்திரங்கள் நிறைந்த இளமைக் காலத்தை கட்டமைத்திருக்க கூடும் என்கிற எண்ணமே எனக்கு மேலோங்குகிறது.

உதாரணத்திற்கு சில சம்பவங்களை பட்டியலிட விரும்புகிறேன்.

ஐந்து திங்கள் பருவத்தில் சிதம்பர ரகசியத்தை வெட்ட வெளியாக காட்டப் பெற்றது.

ஒன்பதாம் வயதில் முருகப் பெருமானால் ஆட்கொள்ளப் பட்டது

பிள்ளைப் பருவத்தே திண்ணையில் இருந்து விழாமல் காக்கப் பெற்றது.

வடிவுடையம்மை அண்ணியார் வடிவில் தோன்றி உணவளித்தது.

இத்தகைய சம்பவங்களின் சாத்திய அசாத்தியங்கள் மற்றும் அதன் நம்பகத் தன்மைகளை தீர்மானிக்கும் பொறுப்பினை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

நமக்குக் கிடைத்திருக்கும் குறிப்புகளின் படி வள்ளல் பெருமானார் தனது பன்னிரெண்டாவது வயதில் ஞானவாழ்வை மேற்கொண்டதாகத் தெரிகிறது. தன் ஆன்மிக வாழ்வின் துவக்க நாட்களில் திருத்தணிகை முருகனே இவரது விருப்ப தெய்வமாய் இருந்திருக்கிறார்.பின்னர் கந்தகோட்டம் முருகனையும் ஆராதித்திருக்கிறார். 

இந்த கால கட்டத்தில் அவருடைய வழிபடு தெய்வமாக முருகனும், வழிபடு குருவாக திருஞான சம்பந்தரும், வழிபடு நூலாக திருவாசகமும் இருந்திருக்கின்றது. தன்னுடைய சற்குரு பற்றி பின்வருமாறு கூறியிருக்கிறார்.

உயிர்அனு பவம்உற்றிடில் அதனிடத்தே
ஓங்கருள் அனுபவம்உறும்அச்
செயிரில்நல் அனுப வத்திலே சுத்த
சிவஅனு பவம்உறும் என்றாய்
பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப்
பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான
பந்தன்என் றோங்குசற் குருவே. 

- ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை (திருவருட்பா)

துவக்கத்தில் முருக பக்தராய் இருந்தவர், பின்னாளில் சென்னையை அடுத்த ஒற்றியூரில்(தற்போது திருவெற்றியூர்) உறைந்திருக்கும் சிவனிடம் மனதை பறிகொடுத்து சிவபக்தராகியிருக்கிறார். சிதம்பரம் நடராஜரும் வள்ளல் பெருமானின் இஷ்ட தெய்வம். சிதம்பர ரகசியம் பற்றி தானறிந்து கொண்டதை பெருமானார் பின்வரும் பாடலில் இவ்வாறாக கூறியிருக்கிறார்.

தாய்முதலோ ரொடு சிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே
காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.

 -  அருள்விளக்க மாலை (திருவருட்பா)

பதிவின் நீளம் கருதி அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..வள்ளல் பெருமானின் ஆன்மிக பயணம்

Author: தோழி / Labels:

வள்ளல் பெருமானின் ஆன்மிக அனுபவங்களை, அதில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகளை நமக்குச் சொல்லும் ஆவணமாய் இருப்பது அவருடைய பாடல்களே. சற்றேறக் குறைய ஆறாயிரம் பாடல்கள் ஆறு தொகுதிகளாய் “திருவருட்பா” எனும் தலைப்பில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. இதனை அவருக்கு நெருக்கமாய் இருந்த சீடர்களே தொகுத்து பதிப்பித்தனர்.இது தவிர அவரது தனிப்பாடல்கள் ஒரு திரட்டாக தொகுக்கப் பட்டிருக்கின்றன.

துவக்கத்தில் இந்த பாடல்களை நூலாக தொகுப்பதில் வள்ளல் பெருமானுக்கு ஆர்வம் இல்லையென்பதும், மிகுந்த சிரமத்திற்கிடையேதான் அவரது சீடர்கள் போராடி அவரிடம் அனுமதி பெற்று அவரது பாடல்களை ஆறு தொகுதிகளாய் தொகுத்தனர் என்பதும் பலரும் அறியாத சுவாரசியமான தகவல். 

வள்ளல் பெருமான் எழுதிய உரைநடை நூல்கள் “மனுமுறை கண்ட வாசகம்”, “ஜீவகாருண்ய ஒழுக்கம்”.

தமிழகத்தில் 1836 ல் அச்சு இயந்திரங்களின் மூலம் நூல்களை பதிப்பிக்க ஆங்கில அரசு அனுமதித்தது. அதன் பிறகுதான் தமிழில் நூல்களை அச்சிட்டு பதிப்பிக்கும் முயற்சிகள் ஆரம்பமாயின. தமிழில் உரைநடை நூல்களை பதிப்பித்த முன்னோடிகளில் வள்ளல் பெருமானும் ஒருவர் என்பது பலருக்கு புதிய செய்தியாக இருக்கும். 

“ஒழிவிலொடுக்கம்” (1851), “மனு முறை கண்ட வாசகம்”(1854), “தொண்ட மண்டல சதகம்”(1855), “சின்மய தீபிகை”(1857) ஆகிய நூல்களை  வள்ளளார் பதிப்பித்திருக்கிறார். இந்த நூல்கள் இந்து மதம் தொடர்பான அவர் காலத்தைய எண்ணப் போக்கினையும், அப்போது நிலவிய சமூக வாழ்வியல் சூழலையும், சமூக கூறுகளையும் நமக்கு அறியத் தருவனவாய் இருக்கின்றன.

இந்த பாடல் தொகுப்புகள், உரை நூல்களைத் தவிர வள்ளல் பெருமான் தன் நண்பர்களுக்கு எழுதிய பல கடிதங்கள் நமக்கு ஆவணமாய் கிடைத்திருக்கின்றன. இந்த தகவல்களின் அடிப்ப்டையில் அவரது ஆன்மிக வாழ்வினை நாம் நான்கு கால கட்டங்களாக அணுகுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

சென்னையில் வாழ்ந்த இளமைக் காலம் (1825 - 1858)
கருங்குழியில் வாழ்ந்திருந்த காலம் (1858 - 1867)
வடலூரில் வசித்திருந்த காலம்  (1867 - 1870)
மேட்டுக்குப்பத்திலிருந்த கடைசி நாட்கள் (1870 -1874)

அடுத்த பதிவில் சென்னையில் வாழ்ந்திருந்த காலத்தில் வள்ளல் பெருமானின் ஆன்மிக அனுபவங்களைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


வள்ளல் பெருமானின் பிறப்பும், இளமைக் காலமும்

Author: தோழி / Labels:

சிதம்பரத்திற்கு வடமேற்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் சிற்றூரில் கணக்கராய் இருந்தவர் இராமையா பிள்ளை. இராமையா பிள்ளையின் முதல் ஐந்து மனைவிகளுக்கு குழந்தையின்மை மற்றும் இறந்து போனதால், சென்னையை அடுத்த பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்னகாவணத்தைச் சேர்ந்த சின்னம்மையை ஆறாவதாய் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

இராமையா பிள்ளை, சின்னமையின் ஐந்தாவது பிள்ளையாக 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதியில் இராமலிங்கம் பிறந்தார். இவருடன் உடன் பிறந்த மற்ற நால்வரின் பெயர்கள் பின்வருமாறு.... சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகியோர்.

இராமலிங்கம் பிள்ளை பிறந்த எட்டாவது மாதத்தில் அவர் தந்தை உயிரிழந்தார். இதனால் சின்னம்மையார் தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பொன்னேரிக்கு வந்துவிட்டார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் உள்ள வீராசாமி பிள்ளை தெருவில் குடியேறியதாக வாழ்க்கைக் குறிப்புகள் கூறுகின்றன.

தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை இராமலிங்கம் பிள்ளை சென்னையில்தான் கழித்திருக்கிறார். அதாவது 1858 வரையில் சென்னை வாசம்தான். அப்போது சென்னை இராஜதானி ஆங்கிலேயர் ஆட்சியில், கிருஸ்துவ மிஷனரிகளின் செல்வாக்கு ஓங்கிய நிலையில் இருந்தது. புதிய கலாச்சார ஆக்கிரமிப்பு ஒன்று தமிழர்களை சூழ்ந்திருந்த காலம் என்றும் சொல்லலாம்.

இதன் அடிப்படையில், இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வாழ்க்கையை 33 ஆண்டு கால சென்னை வாழ்க்கை, சென்னையை விட்டு நீங்கிய பின்னர் வரும் அடுத்த 16 ஆண்டு கால வாழ்க்கை என இரண்டு கால கட்டங்களில் அவரை அணுகுவது சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

வள்ளல் பெருமானின் மூத்த சகோதரர் சபாபதி பிள்ளை சமய சொற்பொழிவுகளை செய்பவராய் இருந்ததினால் இயல்பாகவே வீட்டில் பக்திநெறி தழைத்தோங்கி இருந்தது. தாயார், சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் மனைவியரின் கவனிப்பில் வள்ளல் பெருமானின் இளமைக் காலம் கழிந்திருக்கிறது. வாலிப பருவமெய்திய பின்னர் தனது சகோதரியின் மகளையே திருமணம் செய்து கொண்டார்.

அவரது பாடல்களின் ஊடே பார்க்கும் போது அவர் மெலிந்த தோற்றமும், நடுத்தர உயரமும் கொண்டவராக இருந்திருக்கிறார். இளகிய மனம் கொண்டவராகவும் தன்னை கூறிக் கொள்கிறார். இதனை பின்வரும் பாடல்களின் மூலம் அறியலாம்.

வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்

கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்
உள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்

- திருப்புகற் பதிகம் (திருவருட்பா)

வள்ளல் பெருமானின் ஆன்மீக வாழ்வு எத்தகையதாய் இருந்தது என்பது பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..வள்ளல் பெருமான் - நெடுந்தொடர்

Author: தோழி / Labels:

திரு அருட் பிரகாச வள்ளலார் என அறியப் படும் மருதூர் இராமலிங்கம் பிள்ளை அவர்களைப் பற்றிய எனது தேடல், சேகரிப்புகள், புரிதல்கள், தெளிவுகள் ஆகியவைகளை பதிவாக்கும் முயற்சிதான் இந்த தொடர். வெகு நாட்களாகவே எழுத நினைத்திருந்தது இப்போதுதான் சாத்தியமாயிற்று. 

இந்த தொடரின் நெடுகே நான் முன் வைக்கும் தகவல்கள் மற்றும் அது தொடர்பான கருத்துக்கள் யாவும் எனது தனிப்பட்ட புரிதல்களே, எனவே இது தொடர்பில் யாருக்கும் வருத்தமேற்பட்டால் அதற்காக எனது வருத்தங்களை தொடரின் ஆரம்பத்திலேயே பதிவு செய்திட விரும்புகிறேன்.

சித்தர்களைப் பற்றிய தகவல்களை தேடிச் சேகரித்துக் கொண்டிருந்த வேளையில்தான் எனக்கு வள்ளல் பெருமானைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. மற்ற பிற சித்தர் பெருமக்களைப் போலவே வள்ளல் பெருமானும் தான் சார்ந்த சமூகம் மற்றும் சமயத்தின் நிறை குறைகளை தயக்கமின்றி பேசவும், அதனை ஒப்புக் கொள்ளவும் கூடியவராக இருந்ததே என்னை அவர் பால் ஈர்த்தது.

ஆணும் பெண்ணும் சமம் என்பதில் துவங்கி  சாதிய நடைமுறைகளையும் அதன் சடங்குகளையும் எதிர்த்தது, வேதம், ஆகமம், இதிகாசம், புராணங்கள் என தன்னுடைய சமயம் முன் வைத்த பல கூறுகளை ஆராய்ந்து அதில் காணப்படும் சூதுகளை நிராகரித்தது என பல வகையில் தான் வாழ்ந்த காலத்தின் கலகக் குரலாகவே வள்ளல் பெருமானை நாம் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது.

இதனால் பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறார். மதவாதிகளின் எதிர்ப்பு, வழக்குகள், விவாதங்கள், அச்சுறுத்தல்கள், கேலிப் பேச்சுகள் என அவதூறுகளின் ஊடே தான் திடமாய் நம்பிய கருத்துக்களை முன் வைத்த நேர்மையான ஆளுமையே இன்றளவும் அவர் பேசப் படுவதற்குக் காரணம் என நினைக்கிறேன். 

ஐம்பத்தி ஒரு ஆண்டுகளே வாழ்ந்த இப் பெருமகனாரைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் அவரின் நூல்களின் ஊடேதான் நாம் அவரை அணுகக் கூடியதாகவும், அறியக் கூடியதாகவும் இருக்கிறது. அந்தப் பயணத்தின் ஊடே எனக்குப் புரிந்த அல்லது தெளிந்தவைகளை மட்டும் இனி வரும் நாட்களில் தொடராய் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..வீக்கங்களுக்கு மேல்பூச்சு

Author: தோழி / Labels: ,

வீங்குதல், புடைத்தல், வளர்தல் ஆகியவையே பொதுவில் வீக்கம் எனும் சொல்லினால் அறியப் படுகிறது. நமது உடலின் எந்த பகுதியிலும் இந்த வீக்கம் உருவாகலாம். இதற்கு எண்ணிலடங்கா காரண காரியங்களை பட்டியலிட முடியும். அத்தகைய சில வீக்கங்களுக்கான ஒரு மருந்தினையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இந்த மருந்தானது நரம்பு முறிந்து வீக்கங் கொண்டாலோ, அல்லது அடிப்பட்டு வீக்கங் கொண்டாலோ, அல்லது வேறு சில காரணங்களினால் வீக்கம் கண்டால் அதை குணமாக்கிட உதவும் என்கிறார் தேரையர். ஆம், இந்த மருந்து முறையானது தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு.....

முறிந்துபோம் தூவாலையிட வீக்கம் போகும்
முறையான நீர்முள்ளி சங்கங் குப்பி
யறிந்துபோம் கருநொச்சி புண்ணாக்கு மூலம்
அப்பனே அமுக்குராச் சாறுங் கூட்டி 
பறிந்துபோம் குக்குடத்தி னவரைச் சாறும்
பண்பான வகையொன்று படிகாலாக
நெறிந்துபோம் அடுப்பிலேற்றி வற்றக் காய்ச்சி
நேராய்ப் பூசிடவே வாங்கிப் போமே.

நீர் முள்ளி, சங்கங்குப்பி, கருநொச்சி, புண்ணாக்கு மூலம், அமுக்குறா சாறு, கோழியவரைச் சாறு ஆகியவைகளில் வகைக்கு கால் படியளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் ஏற்றி வற்ற காய்ச்சி எடுத்து சேகரித்துக் கொள்ள வேண்டும்.

வீக்கம் கண்ட இடத்தில் இதனை பூசி வர வீக்கங்கள் மறைந்து விடும் என்கிறார் தேரையர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..