கருங்குழியில் வள்ளல் பெருமான் (1858 - 1867)

Author: தோழி / Labels:

சென்னையின் நகரச் சூழலில் தன் இளமைக் காலத்தை கழித்த வள்ளல் பெருமான், 1858ல்  சென்னையை விட்டு கிளம்பி சிதம்பரம் வருகிறார். இதன் பிறகு அவர் சென்னைக்கு திரும்பியதாக தெரியவில்லை. ஏன் சென்னையை விட்டு கிளம்பினார் என்பதற்கும் தெளிவான காரணங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களை தரிசிக்க புனித யாத்திரையாக அவர் சென்னையை விட்டு கிளம்பியதாக ஒரு தகவல் நமக்குக் கிடைக்கிறது.

சென்னையில் வாழ்ந்த காலகட்டத்தே வள்ளல் பெருமானின் தேடல்கள் யாவும் தன்னையொட்டியதாகவே அமைந்திருந்தது. தனக்கான தீர்வுகளை மட்டுமே அவரது ஆரம்ப கால பாடல்களில் அவதானிக்க முடிகிறது. இப்படி தன்னை சார்ந்த உள் வட்டத்தில் கிடைத்த அனுபவங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டியே அவர் சென்னையை விட்டு கிளம்பியிருக்கலாம் என கருத  இடமிருக்கிறது. 

சிதம்பரம் வந்த பெருமானார், பின்னர் வடலூர் அருகே உள்ள கருங்குழி என்கிற கிராமத்தை தெரிந்தெடுத்து அங்கே தங்குகிறார்.   கருங்குழியில் கிராம மணியக்காரர் திருவேங்கட ரெட்டியார் என்பவர் வீட்டில்தான் ஒன்பது ஆண்டுகளும் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அடுத்த ஒன்பது ஆண்டுகள் அவரது வாழ்க்கை கடலூர், சிதம்பரம், வடலூர் என கருங்குழியைச் சுற்றியே அமைந்திருந்தது. இந்த காலகட்டத்தில் சுற்றுப் புறத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார். 

இந்த பயணத்தின் ஊடேதான் அவர் அப்போது நிலவிய நகரம் தாண்டிய சமூக வாழ்வியல் சூழலை புரிந்து கொள்ளவும், சக மனிதர்கள் மீதும் சக உயிரினங்கள் மீதும் அன்பு கொள்வதே ஆண்டவனைச் சென்றடையும் பாதை என்பதாக தெளிந்தார் என நம்பவும் இடமிருக்கிறது. அவருடைய  இத்தகைய தெளிவுகள் அவருடைய ஆன்மிகத்தை அடுத்த  கட்டத்திற்கு நகர்த்தியது என்றால் மிகையில்லை. தன்னுடைய இந்த நிலை மாற்றத்தைப் பற்றி வள்ளல் பெருமானார் ஒரு பாடலில் ஒப்புதல் வாக்குமூலமே தருகிறார்.

என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய்
இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை
வள்ளல்நீ நினக்கிது விடயம் 

- பிள்ளைப் பெரு விண்ணப்பம் (திருவருட்பா).

வருமுயிர் இரக்கம் பற்றியே உலக
வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்
விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான்
ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத்
தொருவனே நின்பதத் தாணை. 

- பிள்ளைப் பெரு விண்ணப்பம் (திருவருட்பா).

என்னையும் பிற உயிர்கள் மீதான இரக்க குணத்தினையும் ஒன்றாக இணைத்து இந்த உலகத்தில் வாழ வைத்த கருணை வள்லல் நீ!, உனக்கு இதனை நான் சொல்லத் தேவையில்லை என்றும், இந்த மண்ணில் பிறக்கும் உயிர்கள அனைத்தின் மீதும் இரக்கம் கொள்வது என்ற உலக வழக்கைப் பற்றியே என் மனம் சென்ற போதெல்லாம் மிக அச்சத்துடன் அது பற்றி உன் திருவடிக்கே விண்ணப்பம் செய்தேன் என்கிறார்.

மேலும் அருவ வடிவமான தன்னுடைய உயிர் என்பதும், மற்றைய உயிர்கள் மீதான இரக்கம் என்பதும் வெவ்வேறானவை அல்ல, அவை இரண்டும் ஒன்றுதான் என புரிந்து கொண்டதாகவும்,  இரக்க சிந்தனை தன்னை விட்டு நீங்கினால் தன் உயிரும் உடலை விட்டு நீங்கிவிடும் இது இறைவனின்  பாதங்கள் மீது ஆணை என்கிறார். 

வள்ளலாரின் இத்தகைய இரக்க சிந்தனையே பின்னாளில் அவர் முன்னிறுத்திய ஜீவகாருண்யம் என்கிற மகா தத்துவத்தின் ஆரம்பப் புள்ளி எனலாம். இவ்வாறு தான் பெற்ற தெளிவுகளை தன்னோடு மட்டுமே வைத்திருக்க அவர் விரும்பியிருக்கிறார் என்பதும் பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும். 

ஆம்,  தன்னுடைய ஆன்மிகத் தெளிவுகளை தன்னோடு வைத்திருக்க விரும்பியதாகவும் ஆனால் அது அவர் விரும்பியாவாறு நடந்ததா என்பதை பின் வரும் பாடல்களில் அறியலாம்.

அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
செவ்வண்ணம் பழுத்ததனித் திருஉருக்கண் டெவர்க்கும்
தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. 

- தற்போத இழப்பு (திருவருட்பா)

நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
வேண்டும்என இருந்தென்னை வெளியில்இழுத் திட்டு
வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே. 

- தற்போத இழப்பு (திருவருட்பா)

இறையருள் தனக்கு கிடைத்ததகாவும், அந்த அருள் இன்பத்தை எண்ணிக் கொண்டு எவருக்கும் இது தெரியாமல் தனிமையில் இருக்க வேண்டும் என்றே தான் விரும்பியதாகவும், ஆனால் அப்படி இருக்க முடியாமல் உலக மக்கள் தன்னை அறிந்து கொள்ளும் வகையில் வெளியில் கொண்டுவந்து  நிறுத்தியது இறைவன் அருளா அல்லது மாயையின் செயலா என்று தெரியாமல் மனம் அலைபாய்வதாகவும் பின்னர் இது விதியின் செயல் என்று எண்ணி வருந்துவதாகவும் குறிப்பிடுகிறார். 

பதிவின் நீளம் கருதி மேலதிக விவரங்கள் அடுத்த பதிவில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

1 comments:

kimu said...

அருமையான பதிவு.
நன்றி தோழி.

Post a comment