இராமலிங்க அடிகள் (1825 - 1858) - தொடர்ச்சி

Author: தோழி / Labels:

புகழ்பெற்ற சைவசமயக்குரவர்களான  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் வழியில் தனது ஆன்மிக தேடலை இராமலிங்க அடிகள் முன்னிறுத்தியிருக்கிறார்.அவரது பெரும்பாலான பாடல்கள் இந்த நால்வரின் கருத்தோட்டத்தினை ஒட்டியதாக இருப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. வள்ளல் பெருமானாரின் எதிர்ப்பாளர்கள், அதிலும் குறிப்பாக ஆறுமுக நாவலரின் ஆதரவாளர்கள் இதனை ஒரு திட்டமிட்ட யுக்தி என்றே குற்றஞ்சாட்டுகின்றனர். அது பற்றிய விவரங்களை தொடரின் நெடுகே விரிவாய் பகிர்ந்து கொள்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனை பலவாகிலும் போற்றித் துதித்து, அவர்தம் புகழை போற்றிக் கொண்டாடி, அதன் வாயிலாய் இறைவனின் மேலான அருளை தனக்குத் தரவேண்டி இறைஞ்சுவதாகவும், பொய்யான இந்த உலக வாழ்வில் இருந்து தன்னை கடைத்தேற்ற கோரும் விண்ணப்பங்களாகவே அந்த பாடல்கள் தென்படுகின்றன. 

இது தவிர திருமூலர்,சேக்கிழார், தாயுமானவர் போன்ற பிற சைவப் பெரியவர்களின் நூல்களிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர் எழுதிய பாடல்கள் யாவும் இத்தகைய ஆன்மிக நிலைப்பாட்டினை வலியுறுத்துவதாகவே இருந்திருக்கின்றன. 

உதாரணத்திற்கு சில பாடல்களை இன்றைய பதிவில் பட்டியலிட விரும்புகிறேன்.

ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள்
நீர்என தாண்டவர் ஆகில்
பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்
புன்கணும் தவிர்த் தருளுதல் வேண்டும்
தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச்
சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
மெய்ய ரேமிகு துய்யரே தருமவிடைய
ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே.

- தனித்திருவிருத்தம் (திருவருட்பா)

உமையம்மை ஒரு புறம் உளம் மகிழ்ந்து நிற்க சச்சிதானந்தத் திருக்கூத்தாடும் திருமேனியையுடைய நடராஜனே, மிக்க தூய்மையானவரே, அறமே உருவமான எருதை வாகனமாகக் கொண்டவரே. என் இரண்டு கண்களிலும் விரும்பி எழுந்தருள்பவரே. தலைவரே, நான் உனக்கு அடியவனாக இருந்தால், அடிகளாகிய நீவிரே என்னை ஆண்டருள் வாயானால், நிலையற்ற என் மனக் கவலையும் அச்சமும் துன்பமும் நீக்கி அருள்புரிய வேண்டும்.

ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே
அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
பொழியா மறையின் முதலே நுதல்ஏய்
விழியாய் விழியாய் வினைதூள் படவே.

- தனித்திருவிருத்தம் (திருவருட்பா)

உன் சிறப்பினை எடுத்து விளக்கும் வேதங்களின் முதற் பொருளே, பொருந்திய கண்ணை உடையவனே,  நீங்காத உலக மயக்கத்திலிருந்து வருந்தும் என்னை வீணாக அழிந்துவிடாமல் உன்  திருவருளை எனக்கு நல்குக. என்னைச் சூழ்ந்து இருக்கின்ற வினைக் கூட்டங்கள் எல்லாம் தூள்தூளாக சிதறிட அருள்புரிய வேண்டும்..

பொன்அ ளிக்கும்நற் யுத்தியுந் தந்துநின்
தன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே
மன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே
என்னை நான்பல கால்இங்கி யம்பலே.

- தனித்திருவிருத்தம் (திருவருட்பா)

எம் வள்ளலே! பொன்னுலக வாழ்க்கைப் பேற்றினைப் பெறும் நல்ல ஞானமும் தந்து, உன் திருவடிகள் என்னும் தாமரைகளை என்றும் சிந்த்தித்திருக்கும் தியானமே என் உள்ளத்தில் நிலைத்திருக்க அருள வேண்டுகின்றேன். இந்த உலக வாழ்வில் நான் வேண்டுவது இதுவே என்று பல தடவைகள் உனக்குக் கூற வேண்டுமா? 

இந்த காலகட்டத்தில் அவருடைய ஆன்மிக தேடல்கள் யாவும் இறைவனிடம் தனக்கான தீர்வுகளையும், தெளிவுகளையும் வேண்டும் பக்தராகவே இருந்திருக்கிறார் என்பது இந்தப் பாடல்களின் ஊடாக தெளிவாகிறது. பக்தி மார்க்கத்தை தீவிரமாய் பின் பற்றிய பெருமானார் பின்னாளில் ஞான மார்க்கத்திற்கு மாறியது தொடர்பில் பல்வேறு கருத்தாக்கங்கள் உண்டு.

அதனை பார்ப்பதற்கு முன்னர் வேறொரு தகவலையும் இங்கே பதிந்தாக வேண்டுமென நினைக்கிறேன். ஆம், தீவிர சைவராக இனம் காணப்படும் இராமலிங்க அடிகளார் வைணவ தெய்வங்களையும் போற்றிப் பாடியிருக்கிறார்.

அந்த விவரங்கள் அடுத்த பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

4 comments:

jana said...

நன்றிகள் பலப் பல !

Sivamjothi said...

63 நாயன் மார்களும் சித்தர்களே! அவர்களும் மரணமில பெருவாழ்வு பெற்று ஒளி உடலுடன்
உள்ளனர்.

chamundihari said...

Vallalar vasitha ellam
31/14 Veerasamy Pillai Street
Sevenwalls chennai 600001

Even the house where Vallalar was brought up has undergone many alterations, and houses many families (ondi-kudithanams), but it retains most of its features including the room on the first floor where Vallalar lived, meditated and worshipped. He kept a mirror in the room and legend has it that he had a darshan of Lord Muruga of Tiruttani in the mirror.

You please kindly come visit "Vallalar vasitha ellam " ..
receive the blessings of the Arutperunjothi

D.M.Sripathi ( 8925767286 )

tamilvirumbi said...

தோழி ,

தங்களின் ,பதிவு, வள்ளலார் சம்யகுரவர்களுடன் ஒத்த கருத்துக்களை கொண்ட ஆன்மீக வழியில் சென்றவர்
என்று உரைப்பது ஒரு புறம் உண்மையாக இருந்தாலும் ,அவரது ஆன்மீக வழி அனைவரும் எளிதாக பின்பற்றகூடியது..மிக்க நன்றி.

Post a comment