யானைக்கால் நோய், ஓர் தீர்வு!

Author: தோழி / Labels: ,

யானைக்கால் நோய் (Elephantiasis) என்பது, ஃபைலேரியா (Filaria) எனும் நுண்ணிய ஒட்டுண்ணிப் புழுக்கள் நமது நிணநீர் மண்டலத்தை தாக்குவதால் ஏற்படும் ஒரு நோய். மனிதர்களுக்கு இந்த நோய் நுளம்புகளின் (கொசு) வழியே பரவுகிறது.

இந்த நோய் பாதிக்கப் பட்டவர்களின் தோலும் அதன் கீழே உள்ள திசுப் பகுதிகள் வீககமடைந்து விகாரமான தோற்றத்தைத் தரும். தற்போது இந்த நோய் பெருமளவில் கட்டுப் படுத்தப் பட்டாலும் முற்காலத்தில் பரவலாய் பலரும் இதனால் பாதிக்கப் பட்டிருந்தனர்.

யானைக்கால் நோய்கான தீர்வுகளை நமது முன்னோர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர். அத்தகைய ஒரு தீர்வினை இன்றைய பதிவில் பார்ப்போம். புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி வைத்தியம்” என்ற நூலில் இந்த நோய்க்கான தீர்வினை பின்வருமாறு அருளியிருக்கிறார்.

வானித்தேன் கருங்குருவை மாப்படி கால்தான்
வகையாகத் திருகுகள்ளிப் பாலரைக்கால்
நசனித்த பசுப்பால் தானரைக் காலாகும்
நறுந்தேனும் படியரைக்கால் நவிலக்கேளு
தசனித்த மதனிலே கலந்து கொண்டு
தயவாக அடுப்பேற்றி லேகியமாய்க் கிண்டி
அசனித்து ஆறவிட்டுக் கல்லிலாட்டி
அப்பனே கலசத்தில் பதனம் பண்ணே.

பண்ணப்பா கழற்சிக்கா யளவாகக்கொள்
பக்குவமா யைந்துதின மிருநேரந்தான்
நண்ணப்பா இம்முறையாய் மூன்று மாதம்
நன்மையுடன் கொள்வதற்குப் பத்தியங்கேள்
உண்ணப்பா நெய்பால் பசும்பயறாகும்
உத்தமனே வறுத்தவுப்பு மிகவுமாகும்
கண்ணப்பா மறுபத்தியமிருந்து விளக்கெண்ணெயால் மூழ்கு
கருணையுள்ள போகருட கடாட்சந்தானே.

கருங்குருவை அரிசி மாவு கால் படி, திருகுக் கள்ளிப் பால் அரைக்கால் படி, பசுவின் பால் அரைக்கால் படி, நல்ல தேன் அரைக்கால்படி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் ஏற்றி, நன்கு கிண்டி லேகிய பதத்தில் வந்தவுடன் இறக்கி ஆற விட வேண்டும். நன்கு ஆறிய பின்னர் அதனைக் கல்வத்திலிட்டு நன்றாக அரைத்து எடுத்து சேமித்துக் கொள்ள் வேண்டுமாம்.

யானைக் கால் நோயினால் பாதிக்கப் பட்டவருக்கு தினமும் இரண்டு வேளை இந்த லேகியத்திலிருந்து கழற்சிக்காய் அளவு சாப்பிடக் கொடுக்க வேண்டுமாம். இவ்வாறு மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்கிறார்.

இந்த காலகட்டத்தில் நெய், பசும்பால், பச்சைப்பயறு, வறுத்த உப்பு ஆகியவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் மறுபத்தியம் இருந்து விளக்கெண்ணெயால் தலை முழுக யானைக் கால் நோய் குணமாகுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..தேரையர் அருளிய வல்லாதி லேகியம்

Author: தோழி / Labels: ,

அவலேஹம் என்கிற சமஸ்க்ருதச் சொல்லே மருவி 'லேகியம்' என்றானது. தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பர். பொதுவில் லேகியம் என்பவை கெட்டியான குழம்பு போல இல்லாமல் சற்றே இறுகிய நீர்ம நிலையில் இருக்கும்.

வல்லாதி லேகியம் தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். வல்லாதி என்பது சேங்கொட்டையைக் குறிக்கும். இதன் தாவரவியல் பெயர் “Semecarpus anacardium” என்பதாகும். இது இயல்பில் நச்சுத் தன்மை கொண்டது. இதனை முதன்மையான மூலப் பொருளாகக் கொண்டு பல மருந்துகளை சித்த மருத்துவம் முன் வைக்கிறது. இதன் பொருட்டே பல்வேறு சித்தர்களும் வல்லாதியின் பெயரில் நூல்களே அருளியிருக்கின்றனர்.

இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது தேரையர் அருளிய முறை. இந்த தகவல் “தேரையர் வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

சொல்லுகிறேன் வல்லாதி லேகியத்தைக் கேளு
சொற்பெரிய கிரந்திமுதல் சூலை கட்டும்
வெல்லுகிறேன் சேங்கொட்டைப் பலமைந்தப்பா
வெந்த சுண்ண நீரதிலே வேகப்போட்டு
அல்லுகிறேன் முனைப்போக்கிக் கழுவிப் போட்டு
அப்பனே சாணிப்பால் வேகப் போடு
மல்லுகிறேன் கழுவியதை யெடுத்துக் கொண்டு
மறைப் பசுவின் பாலதிலே வேகவைய்யே.

வையப்பா கழுவியதைக் காயப் போட்டு
வளமான கல்வத்தில் பொடித்துக் கொண்டு
செய்யப்பா எள்ளைந்து பலம் பத்தாக
திறமான பெருவாயன் நீரில் போட்டு
அய்யப்பா இருநேரஞ் சென்ற பின்பு
அப்பனே கழுவியதைக் காயப் போட்டு
வையப்பா இளவறுப்பாய் வறுத்து வாண்கி
பக்குவமாய் பொடி செய்து கூட்டிச் சேரே.

சேரடா பனைவெல்லம் பலமோ மூவைந்து
தீர்க்கமாய்ப் பொடித்ததிலே பிசரி வாங்கி
தீரடா தினசரி முள்ளிக் காய்போல்
தின்றுவர இருநேர மீரைந்து நாள்
காரடா பத்தியமா யடுத்துக் காரு
கடுகு புளியுபுகையுங் காணாப் போகா
ஆரடா பசுவின் நெய்யில் சாதங்கொள்ளு
ஆமடா கிரந்தி முதலகன்று போமே.

போமடா பெருவயிறு பித்தஞ் சோகை
பொருமலுடன் வயிறுகெண்டை யுதிரப் பாண்டு
ஆமடா காமாலை பரங்கி சூலை
யானைசொறி குன்மமடா இளைப்பு மூலம்
காமடா சூலையொடு மேகஞ் சன்னி
கடுப்புடனே வாதநீர் யோனிச் சூலை
சமடா பவுத்திரமும் சத்தி வாந்தி
தணிவிக்க லிருமலுடன் கூடுமாச்சே.

ஐந்து பலம் சேங்கொட்டையை எடுத்து சுண்ணாம்பு நீரில் இட்டு வேகவைத்து, பின்னர் அதன் முனைகளை நீக்கிக் கழுவிக் கொள்ள வேண்டுமாம். இதன் பின்னர் அவற்றை சாணிப் பாலில் இட்டு மீண்டுமொரு முறை வேகவைத்து கழுவி எடுத்துக் கொள்ளவேண்டுமாம். மீண்டும் அதனை பசுவின் பாலில் போட்டு மூன்றாவது முறையாக வேகவைத்து எடுத்துக் கழுவி எடுத்துக் கொள்ளவேண்டுமாம்.

மூன்று முறை வேக வைத்த சேங்கொட்டையை நன்கு உலரவைத்து, கல்வத்திலிட்டு அரைத்துப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவேண்டுமாம். எள்ளு இருபத்தைந்து பலம் எடுத்து கழுதையின் சிறுநீரில் ஒருநாள் ஊறவைத்து எடுத்து கழுவி காயப் போட்டு, காய்ந்ததும் இளம் வறுவலாக வறுத்துத் தூளாக்கிக் கொண்டு முதலில் தூளாக்கிய சேங்கொட்டை தூளுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவேண்டுமாம். இந்தக் கலவையுடன் பனை வெல்லம் பதினைந்து பலம் எடுத்து தூளாக்கி கலந்து நன்கு பிசைந்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

சேமித்ததில் இருந்து தினம் நெல்லிக்காய் அளவு எடுத்து காலை  மாலை என இருவேளை வீதம் பத்து நாட்கள் சாப்பிடவேண்டுமாம்.  இவ்வாறு பத்து நாட்கள் உண்டால் பெருவயிறு, பித்தம், சோகை, வயிறுபொருமல், கெண்டை, இரத்தம் ஒழுகும் பாண்டு, காமாலை, பரங்கி சூலை, குன்மம், இளைப்பு, மூலம், மேகம், சன்னி, கடுப்பு, யோனி சூலை, பவுத்திரம், குமட்டல் வாந்தி, தொடர் இருமல் போன்ற நோய்களெல்லாம் குணமாகுமாம்.

பத்தியமாக மருந்துண்ணும் நாட்களில் கடுகு, புளி, புகை போன்றவற்றை தவிர்ப்பதுடன் சாதத்தில் பசுவின் நெய்விட்டு சாப்பிடவேண்டும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..இரும்பை செம்பாக்கும் ரசவாதம்

Author: தோழி / Labels: , , ,

இந்த ஆக்கம்தான் வலைப் பதிவின் எண்ணூறாவது பதிவாய் வந்திருக்க வேண்டியது. கடைசி நேரத்தில் கவனித்தமையால் எண்ணூறாவது பதிவு எனது தனிப்பட்ட எண்ணப் பகிர்வாய் அமைந்தது விட்டது. 

இனி இரும்பை செம்பாக்கும் வித்தையை பார்ப்போம்.

சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே “செம்பு” உயர்வான ஒன்றாக கூறப் பட்டிருக்கிறது. எத்தனை உயர்வென்றால் ஆதி சித்தனாகிய சிவனின் அம்சமாகவே செம்பு உருவகிக்கப் பட்டிருக்கிறது. தங்கத்தையும் வெள்ளியையும் விட செம்பை உயர்வாகச் சொல்கிறார் போகர்.உயர் உலோகங்கள் என கருதப்படும் தங்கமும், வெள்ளியும் உடல் என்றால் அவற்றின் உயிரைப் போன்றது செம்பு என்கிறார் போகர்.

இத்தகைய செம்பின் சிறப்பு, தன்மை, வகைகள் பற்றி முன்னரே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். அந்த தகவலை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். 

இரச வாதத்தில் செம்பை பொன்னாகவும், பொன்னை செம்பாகவும் மாற்றும் பல்வேறு முறைகள் நமக்கு கிடைக்கிறது. எனினும் இன்றைய பதிவில் இரும்பைச் செம்பாக்கும் ஒரு முறையினை நாம் பார்க்க இருக்கிறோம். ஆம் பார்க்கத்தான் போகிறோம். முதல் தடவையாக ஒரு செயல் முறையினை வீடியோவாக பகிரும் முயற்சி இது. 

இரும்பினை செம்பாக்கும் இந்த தகவல் கோரக்கர் அருளிய "கோரக்கர் மலைவாகடம்" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. சதுரகிரி மலை தொடர்பான தொடரில் இந்த தகவலை பற்றி ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.

தேவையான பொருட்கள்: மெல்லிய இரும்பு கம்பி/ இரும்பு ஊசி, கல் தாமரையின் வேர். 

இரும்பு ஊசி எளிதில் கிடைத்தாலும், கல்தாமரை வேருக்காக பல இடங்களில் தேடி அலைய வேண்டியதாயிற்று. ஒரு வழியாக நீர்கொழும்பு பகுதியில “குடபாடு” என்னும் பகுதியில் கிடைத்தது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. ஒரு பௌர்ணமி நாளில் சூரிய உதயத்திலிருந்து மூன்று நாழிகைக்குள் கல்தாமரை / கற்றாமரை மூலிகைச் செடிக்குக் சாபநிவர்த்தி செய்து அதன் வேரினை சேகரித்துக் கொண்டு வந்தேன்.

இனி செயல் முறையினை பார்ப்போம். இரும்பு ஊசியின் மேற்பரப்பை தேய்த்து சுத்தம் செய்து, நன்கு பழுக்க சூடேற்றிய பின்னர் அதனை அப்படியே ஆற விடல் வேண்டும். ஆறிய பின்னர் அந்த ஊசியினை கல்தாமரை வேரில் கவனமாய் சொருகி வைக்க வேண்டும். மூன்று சாம நேரத்திற்கு பின் அந்த ஊசியை எடுத்தால் அது செம்பாக மாறியிருக்கும்.

இந்த செயல் முறையினை கீழே உள்ள ஒளித்துண்டில்(வீடியோ) காணலாம்.மூலிகையில் நகம் படக் கூடாது என்பதற்காக இந்த செயல்முறைகளின் போது நான் கையுறைகளை ( surgical gloves ) பயன்படுத்தியிருக்கிறேன். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..நான்காவது ஆண்டில், எண்ணூறாவது பதிவு!

Author: தோழி /

சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவு, இன்று தனது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மகிழ்வான இந்த செய்தியை நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பது இந்த வலைப் பதிவின் எண்ணூறாவது பதிவு.

இணைய அறிமுகம் கிடைத்த போது, ஒரு வலைத் தள குழுமத்தில் சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்தேன். என்னிடமிருந்த தகவல்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆர்வம் அளித்தாலும் இணைய நுட்பங்கள் பற்றிய அறிவு எதுவுமில்லாமல் அந்த சிறிய வட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நண்பர் திரு. விவேகானந்தன் அவர்கள் இந்த வலை பதிவினை உருவாக்கி என்னை இங்கே எழுதிட தூண்டி வழிகாட்டினார். 

இந்த மூன்று வருட காலத்தில், ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோர் பின் தொடரும் ஒரே தமிழ்த் வலைத்தளம். ஐம்பது லட்சத்துக்கும் அதிகமாய் பார்வையிடப் பட்ட தளம், நாளாந்தம் இரண்டாயிரம் பேருக்கும் மேல் வாசிக்கும் தளம் என பலவகையில் இத் தளம் கண்ட வளர்ச்சியானது நான் கனவிலும் எதிர்பாராதது. இத்தனையும் எல்லாம் வல்ல குருவருளினாலும், அவர் ஒருங்கிணைத்துத் தந்த தன்னலம் கருதிடா நண்பர்களினாலும், தொடர்ந்து வாசித்து ஊக்கமளிக்கும் உங்களினாலும்தான் சாத்தியமாயிற்று.

கடந்த ஓராண்டில் இந்த வலைத்தளத்தில் சில புதிய முன்னெடுப்புகளை செய்ய முடிந்ததில் என் நண்பர்களின் பங்களிப்பு மகத்தானது. தமிழ் தெரியாதவர்களுக்கும் சித்தர்களைப் பற்றிய தகவல்களை ஆங்கிலத்தில் கொண்டு சேர்க்க முடிவெடுத்த போது, அதை முன்னின்று செயல்படுத்தியவர்கள் சகோதரி தமிழ்தமிழானவள், தோழி தாரா, திரு. தினேஷ்ராம் என்கிற குட்டி தின், செல்வி. சந்தியா ஆகியோர்தான். இவர்களின் தன்னலமற்ற அக்கறையும், உழைப்புமே ஆங்கில பதிவின் வெற்றிக்குக் முழுக் காரணம். இந்த நேரத்தில் இத் தகவலை உங்களோடு பகிர்வதில் எனக்கு மெத்த பெருமிதமும் மகிழ்ச்சியும். நன்றி நண்பர்களே!

சித்தர்கள் இராச்சியம் வலைப்பதிவினை வலைத்தளமாக உயர்த்தி, அதன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்ற நுட்ப விவகாரங்களை தம்முடையதாக கருதிச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தோழி தாராவிற்கும், பிரபல வலைப்பதிவர் நண்பர் திரு. நாமக்கல் சிபி அவர்களின் ASN Infotech Solutions நிறுவனத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது சோதனை முயற்சிகளுக்குத் தேவையான மூலிகைகளை மட்டகளப்பில் இருந்து மிகுந்த சிரமத்திற்கு இடையே சேகரித்துத் தரும் திரு. புவீந்திரன் சோமசுந்தரம் அவர்களையும் இந்த இடத்தில் நன்றியோடு நினைவு கூற கடமைப் பட்டிருக்கிறேன். மேலும் என்னிடம் இல்லாத சில அரிய புத்தகங்களை தமிழகத்தில் இருந்து சேகரித்து அனுப்பிய பெரியவர் திரு. ஷிவா அவர்களுக்கும், திரு. தமிழமுதன் அவர்களுக்கும் இந்த தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னலம் கருதிடாத இந்த நண்பர்கள் எவரையும் நான் நேரடியாக பார்த்ததோ, பேசியதோ இல்லை. எங்கெங்கோ தொலை தூரத்தில் இருக்கும் இந்த நட்புகளை என்னோடு இணைத்து இந்த செயலில் பயணிக்கச் செய்தது எல்லாம் வல்ல குருவருள்தான் என்றால் மிகையில்லை.

எதிர்வரும் ஆண்டில் மேலும் சில முயற்சிகளை முன்னெடுத்து செய்திட திட்டமிருக்கிறது. பதிவின் தகவல்களைத் திரட்டி புத்தகமாய் வெளியிடுவது பற்றி நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த திட்டம் முழுமையடையும் போது அது பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

இதைத் தவிர சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களை, செயல் முறையாக எவ்வாறு செய்வது என்பது பற்றிய வீடியோக்களை இடையிடையே பகிரத் திட்டமிட்டிருக்கிறேன். இந்த வரிசையில் அடுத்த பதிவில் இரும்பை செம்பாக்கும் ஒரு முறையினை வீடியோ பதிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த பதிவின் முதலும் கடைசியுமான நோக்கம் ஒன்றே ஒன்றுதான். நம் முன்னோர்கள் நமக்குத் தந்து போன கணக்கிலடங்கா அரிய தகவல்களை சேகரித்து பகிர்வதும், பாதுகாப்பதும்தான். இந்த தகவல்களின் பேரில் விவாதிப்பதும், அதனை மேம்படுத்துவது போன்றவை இதை பாவிக்கும் உங்களிடம்தான் இருக்கிறது. எனவே தொடரும் இந்த முயற்சியில் உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

மீண்டுமொரு முறையாக, உங்களின் தொடரும் அன்பிற்கும், அக்கறைக்கும், ஆலோசனைக்கும் நன்றி நண்பர்களே!

அன்புடன்

தோழி
(Dr.தர்ஷினி)போகர் அருளிய விஷக்கடி வைத்தியம்.

Author: தோழி / Labels: , ,

ஆதியில் நம் முன்னோர்கள் தம்முடைய உணவு மற்றும் வாழ்விடத் தேவைகளை முன் வைத்து இயற்கையோடு இணைந்த பெருவாழ்வினை மேற் கொண்டிருந்தனர். இத்தகைய வாழ்விடங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரைகளை ஒட்டியோ அல்லது வனப் பகுதிகளை ஒட்டியோ அமைந்திருந்தன.

இத்தகைய வாழ்வாதார சூழலில், அவர்களுக்கு சவாலாய் இருந்த காரணிகளில் முதன்மையானது பாம்புகள், பூச்சிகள், வண்டுகளினால் உண்டாகும் விஷக் கடியினைக் குறிப்பிடலாம். சித்தர்களின் மருத்துவத்திலும் கூட இந்த விஷக்கடிக்கான மருத்துவம் பெரியதொரு பகுதியாக காணப்படுகிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற இந்த விஷக்கடி மருத்துவ முறைகளுள் ஒன்றினைத்தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

இந்த தகவல் போகர் அருளிய "போகர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

உண்டான விஷத்தையடா உண்மைகேளு
ஒருவருக்கும் ஆகாத பெட்டிதன்னை
கண்டவுடன் துளைசெய்து விளங்காய்போலே
கண்மணியே பழம்புளியை யுள்ளேவைத்து
மண்டலந்தான் சென்றெடுத்து எட்டியென்ற
மரத்தாலேசிமிள் ச்எய்து வைத்துக் கொள்ளு
சண்டாள விஷங்களப்பா யெதுவானாகும்
சாற்றிவிடு வெற்றிலையில் மிளகுபோலே.

மிளகுபோல் வெற்றிலையில் மடித்துக்கொள்ளு
மூன்றுநாள் கொடுத்துவிடு ஆறுவேளை
அவுடதத்திற்கும் பச்சரிசி கஞ்சியாகும்
அப்பனே முருங்கையிலை போட்டுக்காச்சு
உளவறிந்த உப்புதனைச் சேர்க்கவேண்டாம்
உத்தமனே பத்தியமதை பயமாய்க்காரு
களவான வீடதுபோல் விஷங்களெல்லாங்
கண்மறையப் போகுமடா உண்மைதானே.

எட்டி மரத்தில், விளாங்காய் அளவுள்ள துளை ஒன்றினைப் துளைத்துக் கொள்ள வேண்டுமாம்.  பின்னர் பழப் புளியை கொட்டையை நீக்கிச் சுத்தம் செய்து, எட்டி மரத்தில் உருவாக்கிய துளைக்கு உள்ளே வைத்து, அந்த துளையினை எட்டி மர துண்டினால் ஆன தக்கையைக் கொண்டு நன்கு மூடிவிட வேண்டுமாம்.  பின்னர் நாற்பது நாள் சென்ற பிறகு எட்டி மரத்தில் இருந்து புளியை எடுத்து, எட்டி மரத்தினால் செய்யப்பட்ட சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

எந்தவகையான விஷக் கடியானாலும், சேமித்து வைத்த புளியில் இருந்து மிளகு அளவு எடுத்து, வெற்றிலையில் மடித்து பாதிக்கப் பட்டவரிடம் என்ன மருந்து என்று சொல்லாமல் உண்னக் கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு காலை மாலை என மூன்று நாட்களுக்கு, ஆறுவேளை உண்ணக் கொடுத்து வந்தால் களவு போன வீட்டைப் போல் உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் காணாமல் சென்றுவிடும் என்கிறார்.

இதற்குப் பத்தியமாக மருந்துண்ணும் மூன்று நாளும் உப்பு சேர்க்காது பச்சரிசியும், முருங்கையிலையும் போட்டு கஞ்சி காய்ச்சிக் கொடுக்க வேண்டும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..நந்தீசர் அருளிய பொற் சீந்தில் கற்பம்

Author: தோழி / Labels: ,

சீந்தில் என்பது கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதற்கு அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி என வேறு பெயர்களும் உண்டு. இவற்றில் சீந்தில், பொற்சீந்தில், பேய்ச்சீந்தில் என மூன்று வகைகள் உள்ளது. இந்த காய கற்பத்திற்கு பொற்சீந்தில் சிறப்பானது.

சட்டைமுனி சித்தர் அருளிய பொற்சீந்தில் கற்பம் ஒன்றினைப் பற்றி முன்னரே ஒரு பதிவில் பார்த்திருக்கிறோம். இன்றைய பதிவில் நந்தீசர் அருளிய முறையினை பார்ப்போம்.

இந்த குறிப்பு நந்தீசர் அருளிய "நந்தீசர் சர்வகலைஞானம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

தானென்ற பொற்சீந்தி யானால்நன்று
சாதகமாய் சிவப்புநன்று கிடையாவிட்டால்
பானென்ற சீந்திமேற் றோலுபோக்கி
பருந்துண்டாய்க் கொண்டுவந்துக் கிழித்துப்போட்டு
கோனென்ற நிழலுலர்த்திச் சூரணித்து
கூரான சர்க்கரைதான் சரியாய்ச் சேர்த்து
வேனென்ற வெருகடிதூள் அந்திசந்தி
வெருளாதே மண்டல முண்டுபாரே.

பாரப்பா மேகமென்றே தெல்லாம் போகும்
பருவான வாதபித்தம் பக்கவமுமாகும்
சேரப்பா கபாலத்தில் வெட்டைபோகும்
செகமறிய அஸ்திசுரம் மேகம்போகும்
சாரப்பா தாதுமுத்தும் தழைக்குந்திரேகம்
சதுரான ஆறுதலம் வன்னிமீறும்
போமப்பா சீந்திக்குச் சாவுமில்லை
பேரின்ப சாஸ்திரத்தைப் பேணிப்பாரே.

பொற்சீந்தில் கொடி கிடைத்தால் மிகவும் சிறப்பானது. அது அது கிடைக்காத பட்சத்தில், நல்ல சீந்தில் கொடியின் தடித்த தண்டினைத் தேர்வு செய்து அதன் மேற் தோலை உரித்து நீக்கி, சிறு சிறு சிறு துண்டுகளாக கிழித்துப் போட்டு, நிழலில் காயவைத்து சூரணமாக செய்து, பின்னர் அதனுடன் சம அளவில் சர்க்கரை சேர்த்துக் கலந்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

பின்னர் தினமும் அந்த சூரணத்தில் வெருகடி அளவு எடுத்து, தினமும் காலை மாலை என இரு வேளைகள் வீதம்  ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ச்சியாக ஒரு மண்டலம் உண்டு வந்தால் மேகம், வாதபித்தம், கபால வெட்டை, அத்திசுரம், ஆகியவை நீங்குவதுடன், தாது விருத்தியும், உடல் பலமும் உண்டாவதுடன் காயசித்தியும் கைகூடும் என்கிறார்.

இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொலலப்படவில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..இரும்புக் கம்பியை நொறுக்கும் ஜாலம்!

Author: தோழி / Labels: ,

சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே கூறியுள்ள பல விஷயங்கள் நம்புவதற்கு இயலாததாகவும், நம்மை ஆச்சர்யத்தின் விளிம்பில் தள்ளுவனவாகவும் இருக்கின்றன. இது போன்ற நம்ப இயலாத செயல்களை பொதுவில் ஜாலவித்தைகள் என்கின்றனர். இந்த ஜால வித்தைகளின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்குறியது. அத்தகைய ஒரு ஜால வித்தையை இன்றைய பதிவில் பார்ப்போம்.

இரும்பை நொறுக்க முடியும் என்கிறார் போகர். ஆம்!, இரும்பை நொறுக்கும் இந்த ஜாலவித்தை போகர் அருளிய “போகர் ஜாலவித்தை”எனும் நூலில் காணக் கிடைக்கிறது.

அந்த பாடல் பின்வருமாறு....

இரும்புகம்பி தனையெடுத்து - அதை
யீணாதவாழை மரநடுவே
பொருந்தவே மூன்றுநாள் வைத்தெடுத்தாலதைப்
பொடியா பொடிக்கலாம் காணே.

ஒரு சிறிய இரும்புகம்பியை எடுத்து அதனை, குலை போடாத ஒரு வாழை மரத்தின் நடுவில் சொருகி வைத்து, மூன்று நாள் கழிந்த பின்னர் அந்த கம்பியை எடுத்து ஒடித்தால் பொடிப் பொடியாக உடைந்துவிடும் என்கிறார் போகர்.

ஆச்சர்யமான தகவல்தானே!

உலோகவியலில் நமது முன்னோர்கள் எத்தனை தீர்க்கமான, தேர்ந்த, எளிய தொழில் நுட்பங்களை கைக் கொண்டிருந்தனர் என்பதற்கு இந்த ஜாலம் ஒரு சிறிய சான்றுதான். இதைப் போன்ற பல்வேறு உலோகவியல் தொழில் நுட்பங்கள் நமது சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே விரவிக் கிடக்கின்றன.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..போகர் அருளிய மிருக வசியம்!

Author: தோழி / Labels: ,

சமீப நாட்களில் வன விலங்குகள், மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் வந்து விடுவதாகவும், அதனால் மக்களுக்கு துயர் உண்டாவதாகவும் பல செய்திகளை பத்திரிக்கைகளீல் பார்க்க முடிகிறது. நாம் அவற்றின் வாழ்விடங்களான வனப் பகுதிகளை ஆக்கிரமித்து குடியேறியதுதான் இத்தகைய நிலைக்கு காரணம்.

முற்காலத்திலும் கூட மனிதன் தன் தேவைகளுக்காக அடர் வனங்களின் ஊடே வாழ்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் மிருகங்களோடு இணக்கமாயிருக்கும் உத்திகளை கைக் கொண்டிருந்தனர். இத்தகைய உத்திகளை நம் முன்னோர்கள் மிருக வசியம் என்றழைத்தனர். இன்றும் கூட மலைவாழ் மக்கள் இத்தகைய சில உத்திகளை தமது அன்றாட பழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.

மனித நடமாட்டமில்லாத மலைகளிலும், காடுகளிலும் உறைந்திருந்த நம் சித்தர் பெருமக்களும் இத்தகைய பல மிருக வசியங்களை அருளியிருக்கின்றனர். அவற்றில் சில வசிய முறைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று போகர் அருளிய மிருக வசியம் ஒன்றினை பார்ப்போம். இந்த தகவல் “போகர் 7000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
                                                                                 
தானென்ற மூலிநரி விரட்டிக்கப்பா
தப்பாமா லாதித்த வாரந்தன்னில்
வண்மையுடன் ஓம்சடா சடாவென்று
ஆனென்ற வாயிரத்தெட் டுருசெபித்து
வவ்வேரை மறுவாரம் பிடுங்கிக்கொள்ளே
குறியான வேரையுநீ பிடுங்கிக்கொண்டு
நள்ளுவாய் நிழலுலர்த்திக் கொண்டு
நலமான செப்புகுளிசத்திலடைத்துக்கொள்ளே
அணிவாய் முன்னுருவே தியானஞ்செய்து
ஆச்சரிய மந்திரத்தான் மிருகஞ்சேராது.

நரிவிரட்டி என்றொரு மூலிகை உண்டு. இதற்கு “நரிமிரட்டி”, “கிலுகிலுப்பை”, “பேய்மிரட்டி” என வேறு பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை தேடி கண்டு பிடித்து, ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில் அந்த செடியின் முன்னர் அமர்ந்து  "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை 1008 தடவைகள் செபித்துவிடவேண்டுமாம். பின்னர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியினை பறித்து அதன் வேரை பிடுங்கி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டுமாம்.

செம்பினால் ஆன தாயத்து ஒன்றினை செய்து, அதில் காயவைத்த நரிமிரட்டி வேரினை அடைத்து, "ஓம் சடா சடா" என்ற மந்திரத்தினை முன்னூறு தடவைகள் செபித்துக் பின்னர் அணிந்து கொள்ள வேண்டுமாம். இவ்வாறு அணிந்தவரை மிருகங்கள் நெருங்காது என்கிறார் போகர்

ஆச்சர்யமான தகவல்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..போகர் அருளிய விடத்தலைக் கற்பம்

Author: தோழி / Labels: , ,

எளிய வகை காய கற்பங்களின் வரிசையில் இன்று “விடத்தலை கற்பம்” பற்றி பார்ப்போம். கற்ப வகைகளைப் பற்றி முன்னரே பல பதிவுகளில் விரிவாக விளக்கியிருப்பதால் இன்று நேரடியாக கற்பத்தைப் பற்றி பார்ப்போம். புதியவர்கள் மற்றும் தேவையுள்ளோர் கற்பங்களைப் பற்றிய பழைய பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம். 

விடத்தலை என்பது மர வகையினைச் சேர்ந்த ஒரு மூலிகை. நவகோள்களில் ஒன்றான சனியின் அம்சமாய் இந்த மரத்தினை குறிப்பிடுவர். இந்த மரத்தின் தாவரவியல் பெயர் “mimosa cinerea” என்பதாகும். இந்த மரம் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே அறியலாம்.

விடத்தலை கற்பம் என்பது மரணத்தை வெல்லும் அல்லது உடலை அழியாது காக்கும் தன்மையுடையது என யாகோபு முதல் பல சித்தர்கள் கூறியிருக்கின்றனர். யாகோபு அருளிய விடத்தலை கற்பம் பற்றி ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இன்றைய பதிவில் இடம் பெறும் விடத்தலை கற்பத்தின் செய்முறை போகர் அருளியது. இந்த தகவல் போகர் அருளிய "போகர் 7000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

மாறவே விடத்தேரின் வேர்ப்பட்டைவாங்கி 
மருவநன்றா யிடித்தரித்துச் சூரணமாக்கி 
தாறவே பலம்நாலு நிறுத்தக்கொண்டு 
தளுக்கான சூதமது பலந்தானாலு 
கூறவே குலாமல்லிச் சான்றினாலே 
குலாவியரைத்  தெண்சாமம் சூரணித்து 
தேறவே நாற்பது நாள் தேனிர்கொள்ளு
சில்விஷமாம் பதினெட்டுக் குட்டம்போகும்
விண்டிடவே வெள்ளெழுத்து மாறிப்போகும்
மாசற்ற வயிரம்போல் தேகமாமே

மருத்துவ குணங்கள் நிரம்பிய இந்த விடத்தலை மரத்தின் வேர் மற்றும் பட்டையை எடுத்து நன்கு இடித்துச் சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து நான்கு பலம் அளவு எடுத்து, அதனுடன் இரசம் நான்கு பலம் சேர்த்து, மேலும் குலாமல்லிச் சாறு விட்டு, எட்டுச் சாமம் வரை தொடர்ந்து அரைக்க வேண்டுமாம். பின்னர் இந்த கலவையை நிழலில் உலர்த்தி சூரணமாகச் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்.

தினமும் இந்த சூரணத்தில் இருந்து வெருகடி* அளவு எடுத்து தேனில் கலந்து உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ச்சியாக நாற்பது நாட்கள் உண்டு வந்தால் உடலானது மாசற்ற வைரம்போல் வலிமை பெறுவதுடன், பதினெட்டு குட்டங்களும் நீங்கி, வெள்ளெழுத்தும் மாறிப்போகும் என்கிறார்.

*வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது. 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..பேதி குளிகை

Author: தோழி / Labels: , ,

நமது உடலின் ஆரோக்கியம் என்பது உடல் மற்றும் மனத் தூய்மையினால்தான் அமைகிறது. உடலின் தூய்மை என்பது உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவதையே குறிக்கும். கழிவுகள் உடலில் தேங்கினால் அது நோயாக உருவெடுக்கிறது. 

மனித உடலின் கழிவுகள் மலமாகவும், நீராகவும் வெளியேறுகின்றன. வியர்வை, கண்ணீர், சிறுநீராக வெளித் தள்ளப் படுகிறது. நாம் உண்ணும் உணவானது குடலில் செரித்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப் பட்ட பின்னர் எஞ்சிய சக்கை மலமாக வெளியேறுகிறது.இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாய் இயங்கும் குடலுக்கு அவ்வப்போது ஓய்வு தருவதன் மூலமாகவும், குடலை சுத்தம் செய்வதன் மூலமாகவும் அதனை புத்துணர்ச்சியோடு இயங்கச் செய்யமுடியும் என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். 

அதன் பொருட்டே வயிற்றுக்கு ஓய்வு தரும் விதமாக உண்ணா நோன்பினையும், குடலை சுத்தம் செய்யும் விதமாக பேதி மருந்தினை உட்கொள்ளவும் செய்தனர்.குறிப்பிட்ட இடைவெளிகளில் இதனை செய்வதன் மூலம் குடலின் இயக்கமானது தூண்டப்பட்டு சீராகவும் சிறப்பாகவும் செயல்படும். அதனால் நோய் நொடியற்ற வாழ்வு உண்டாகும்.

நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமான மனிதன், ஒரு வாரத்திற்கு குறைந்தது பத்து முதல் பதினைந்து முறையாவது மலம் கழிக்க வேண்டும். அதாவது ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும். அதே போல வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்ள வேண்டும்.

அதென்ன பேதி மருந்து?

நமது குடலில் சேர்ந்துள்ள மலத்தை இளக்கி, மலக்குடலைத் தூண்டி, ஒரு தடவையிலோ அல்லது பல தடவைகளிலோ வயிற்றில் இருக்கும் மலம் முழுவதையும் புரட்டி வெளித்தள்ளுவதே பேதி மருந்தின் செயல்பாடு. சித்தர் பெருமக்கள் பலரும் பல் வேறு பேதி மருந்துகளைப் பற்றி தங்களின் நூல்களில் கூறியிருக்கின்றனர். அந்த வகையின் இன்று புலிப்பாணி சித்தர் அருளிய “பேதி குளிகை” பற்றி பார்ப்போம்.

இந்த தகவல் “புலிப்பாணி வைத்தியம்” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு..

போமேநீ நேர்வாளஞ் சுத்திசெய்து
பொங்கமுட நாமணக்கு காசுக்கட்டி
ஆமேநீ யோரெடையாய் நிறுத்துக்கொண்டு
ஆவின்பால் விட்டரைத்துத் துரைப்போலே
தாமேநீ குளிகையொன்று வெந்நீரிற்கொள்
தயவாகப் பேதியது ஆகும்பாரு
வாமேநீ பேதியது அதிகமானால்
வளமாக வசம்புதட்டிக் கியாழங் கொள்ளே.

சுத்தம்செய்த நேர்வாளம், சிற்றாமணக்கு, காசுக்கட்டி ஆகியவைகளை சம எடை அளவில் எடுத்து, அதனுடன் பசுவின் பால்விட்டு நன்கு அரைத்து, துவரை அளவில் குளிகைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். இதுவே “பேதி குளிகை”

தேவை ஏற்படும் போது இந்தக் குளிகையில் ஒன்றினை எடுத்து வெந்நீருடன் கொடுத்தால் நன்றாகப் பேதியாகுமாம். ஒரு வேளை பேதி ஆகும் அளவு மீறிப் போனால் வசம்பை இடித்து கியாழம்* வைத்துக் கொடுத்தால் பேதி நின்றுவிடுமாம். இதன் மூலம் வயிறு சுத்தமாகி, அதன் செயல்பாடு மேம்படும் என்கிறார்.

*கியாழம் : - இதற்கு குடிநீர், மருந்து நீர், உண்ணீர், புனல், என்ற வேறு பெயர்களும் உண்டு. தேவையான சரக்கை உலர்ந்த சருகு அல்லது பஞ்சு போல இடித்து அதற்கென சொல்லப்பட்ட அளவுப்படி தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்வதுதான் கியாழம் எனப்படும். காய்ச்சத் துவங்கும் போது இருந்த அளவில் நான்கில் ஒரு பங்கு, ஆறில் ஒரு பங்கு, எட்டில் ஒரு பங்கு,   இருபத்தி நான்கில் ஒரு பங்கு என்று மருந்திற்குத் தக்கபடி காய்ச்ச வேண்டும். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..விரும்பிய குழந்தையை பெற்றெடுக்க உதவும் மருந்து!

Author: தோழி / Labels: , ,

மகப்பேறு மருத்துவம் தொடர்பில் சித்தர் பெருமக்கள் அருளியிருக்கும் தகவல்களை எல்லாம் தொகுத்தால், ஒரு பெரிய புத்தகமே எழுதிடலாம். ஆந்த அளவுக்கு விரிவான பல அரிய தகவல்களை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். இந்த தகவல்களை எல்லாம் யாரேனும் தொகுத்து நூலாக பதிப்பித்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

இன்றைய பதிவில் நாம் விரும்பிய குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு வழியினை பார்ப்போம். இந்த தகவல் புலிப்பாணி சித்தர் அருளிய “புலிப்பாணி வைத்தியம்” எனும் நூலில் அருளியிருகிறார்.

தயவு செய்து யாரும் இதனை முயற்சித்துப் பார்க்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். தேர்ந்த சித்த மருத்துவர் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலோடு மருந்துகளை எடுத்துக் கொள்வதே சிறப்பு. எனவே இந்த பதிவை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

திறமான மாதவிடாமூன்றாம் நாளில்தான்
தவறாமல் தலைமுழுகிக் கொண்டநாள்
தீரேநீ மற்றாநாள் நசியமொன்று
தீர்க்கமாய் வேலியிலை வேரைத் தட்டிக்
கூரேநீ வலது நாசியிற் பிழிந்தால்
கொற்றவனே ஆண்பிள்ளை பிறக்கும்பாரு
சீரேநீ யிடதுநாசியிற் பிழிந்தால்
சிறப்பான பெண்ணென்றுஞ் செப்பினோமோ.

கொடிவேலி இலை மற்றும் வேரை நன்கு தட்டி சாறு பிழிந்தெடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த சாற்றை மாத விலக்கு ஆன மூன்றாவது நாள் தலை மூழுகிய பின்னர் வரும் நான்காம் நாளில் பெண்ணின் வலது மூக்கில் பிழிந்த கொடிவேலி சாறை விட ஆண் பிள்ளை பிறக்குமாம். இதே போல் இடது மூக்கில் சாறை விட பெண் பிள்ளை பிறக்கும் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!

மூக்கில் மருந்திடுவதை சித்த மருத்துவத்தில் நசியம் எனச் சொல்வர். என்ன அளவில் மருந்திட வேண்டும், அதற்கான பத்தியங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் இந்த பாடலில் குறிப்பிடப் படவில்லை.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..தாய்மை அடைய உதவும் எண்ணை!

Author: தோழி / Labels: , ,

குழந்தைப் பேறு தள்ளிப் போய் தாய்மைக்காக ஏங்கிடும் பெண்களுக்கு என பல்வேறு தீர்வுகள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது. அத்தகைய தீர்வுகள் சிலவற்றை முன்னரே சில பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று தாய்மை எய்திட உதவிடும் எண்ணை ஒன்றினைப் பற்றி இன்று பார்ப்போம்.

இந்த தகவல் புலிப்பாணி சித்தர் அருளிய “புலிப்பாணி வைத்தியம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

தானே தானின்ன மொன்று சொல்லக் கேளு
தயவான வீழியலைச் சாறு நாழி
மானேதான் தைவேளைச் சாறு நாழி
மைந்தனே பிரமியிலைச் சாறு நாழி
கோனேதான் கொட்டையிலைச் சாறு நாழி
கொடிதான நிலவாகைச் சாறு நாழி
தேனேதா னாவின்பால் படிதா னாழி
தெளிவாகச் சரக்குவகை சொல்லக் கேளு.

கேளேநீ மஞ்சளுடன் கடுகுகூடக்
கெணிதமுட னிந்துப்பு வெண்கரந்தான்
நாளேநீ கடுக்காயும் வெள்ளைப் பூண்டு
நலமான ஆண்வசம்பு சுக்குங்கூடப்
பாளேநீ வகைவகைக்கு விராகன் மூன்று
பண்பாகப் பொடிசெய்து இதனிற் போட்டுக்
கேளேநீ விளக்கெண்ணெய் நாழிவிட்டுக்
கொடிதாக மெழுகுபதந் தன்னில் வாங்கே.

பாங்குடனே மாதவிடா மூன்றாம் நாள்தான்
பண்பாகத் தலைமுழுகிக் கரண்டி எண்ணெய்
தாங்கியே கொடுத்துவிடு நாள்மூன்றப்பா
தயவாக மறுபத்திய மொருநாள் காரு
தூங்கியே திரியாதே ஐந்தா நாளில்
துருசாகச் சிரசுக்கு நீரை வாரே 
வாரேநீ வறுத்தவுப்பு பொரிச் சாறப்பா
வளமாக மற்றாநாளெல்லாஞ் சேரு

வீழி இலைச் சாறு ஒரு நாழி, தைவேளைச் சாறு ஒரு நாழி, கொட்டைக் கரந்தைச் சாறு ஒரு நாழி, பிரமியிலைச் சாறு ஒரு நாழி, நிலாவாகைச் சாறு ஒரு நாழி, பசும்பால் ஒரு நாழி ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். 

மஞ்சள், கடுகு, இந்துப்பு, வெண்காரம், கடுக்காய், வெள்ளைப் பூண்டு, ஆண்வசம்பு, சுக்கு ஆகியவற்றில் வகைக்கு மூன்று விராகன் வீதம் எடுத்து  நன்றாகப் பொடியாக்கிக் கொள்ள வேண்டுமாம். 

பின்னர் இந்தப் பொடியினையும், முன்னர் சேகரித்த சாறு வகைகளுடன் சேர்த்து அதனுடன் மேலும் ஒரு படி விளக்கெண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் மெழுகு பதம் வரும் வரை காய்ச்சி இறக்கிக்கொள்ள வேண்டுமாம்.

கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள், தலை மூழுகிய பின்னர் இந்த எண்ணெயிலிருந்து ஒரு கரண்டி எண்ணெயை அருந்தக் கொடுக்க வேண்டுமாம். பின்னர் இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் ஒவ்வொரு கரண்டிவீதம் அருந்தி, இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்கும் என்கிறார்.

மருந்துண்ணும் மூன்று நாளும் பத்தியமாக இருந்து, நான்காவது நாள் மருந்து சாப்பிடாமல் பத்தியமாக இருக்க வேண்டுமாம்.  மேலும் நான்காம் நாள் பகலில் தூங்காமலும், வெய்யிலில் அலையாமலும் இருக்க வேண்டுமாம். ஐந்தாவது நாள் முழுகி அனைத்தும் வழக்கமான உணவுகளை உண்னத் தொடங்கலாமாம். 

நான்கு நாட்களும் பத்தியமாக உப்பு அதிகமுள்ள,வறுத்த, பொரித்த பண்டங்களை நீக்க வேண்டும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

குறிப்பு :- ஒரு விராகன் என்பது தற்போதைய அளவுகளில் நான்கு கிராம் ஆகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..தேரையர் அருளிய தாதுபுஷ்டி லேகியம்

Author: தோழி / Labels: ,

தாது என்றால் நமது உடலில் உள்ள நரம்பு ஆகும். ஆணின் சுக்கிலத்தையும்(விந்து) தாது எனச் சொல்வதுண்டு. தாது புஷ்டி லேகியம் என்பதை நரம்புகளை வலிவாக்கி உடல் உறுப்புகளை பொலிவாகவும் மிளிரச் செய்யும் மருந்து என பொருள் கொள்ளலாம். நவீன அலோபதி மருத்துவத்தில் உள்ள வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளைப் போல ஒன்றுதான் இந்த தாது புஷ்டி லேகியம். இதனை ஆண்,பெண் இருபாலாரும் பயன்படுத்தலாம்.

தாம்பத்திய உறவு சிறக்க, குழந்தைப் பேறு கிடைக்க இந்த தாது புஷ்டி லேகியம் வாராது வந்த மாமருந்து என்பது மாதிரியான விளம்பரங்களை இன்றைக்கும் நாளிதழ்களில் நாம் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது.உடலை உறுதி செய்து உவப்புடன் வாழ்ந்திட நமது முன்னோர்கள் உருவாக்கிய இந்த மருந்தினைக் குறித்த இது மாதிரியான பல தவறான கருத்தாக்கஙக்ள் நம்மிடையே இருப்பது வருத்தமான உண்மை.

எனவே இந்த தாது புஷ்டி லேகியத்தை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு மருந்து என்கிற வகையில் அணுகுவதே சரியானதாக இருக்கும். தாது புஷ்டி லேகியம் பற்றி பல் வேறு சித்தர் பெருமக்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அதன் தயாரிப்பு முறைகளும் அவர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை, வேறுபட்டவை. அவரவரின் உடலின் தன்மை மற்றும் குறைபாடுகளைப் பொறுத்து இந்த லேகியத்தின் தயாரிப்பு முறைகள் மாறுபடும்.

இன்றைய பதிவில் தேரையர் அருளிய ஒரு முறையினை பார்க்க இருக்கிறோம். இந்தத் தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

காத்திடுவாய் கருவேலின்பசை தானுங்கொள்
கைமுறையாய்ச் சொல்கிறேன் பலமிரண்டு
பாத்திடுவாய் சுக்கொடு சர்க்கரை பேரீச்சம்பழம்
பாகுவெந்தயம் கொப்பரைத் தீக்காட்டி
சேத்திடுவாய் வகையொன்று பலமே யொன்று
திறமாக வடிசெய் கோதுமைப் பொரிமா
யேத்திடுவாய் பலமெட்டு பனைவெல்லம்தான்
யெட்டுப் பலம் பாகுபிடித் தூளைப்போடே.

போட்டடா லேகியம் போலக் கிண்டி
புகழான ஆவின்நெய் பலம்நால் விட்டு
ஆட்டடா எலுமிச்சங்காய் போலந்தி
அப்பனே மண்டலமோ ரரைதான் கொள்ளு
ஓட்டடா கிரந்தி வெள்ளை யிடுப்பு நோய்தான்
உத்தமனே தாதுபுஷ்டி மிகவுண்டாகும்
மாட்டடா நெய்யன்னம் வெல்லத்தோ டுண்ணு
மாதர் மயக்கம் புளிமண்டலமே தள்ளு.

கருவேலம் பிசின் இரண்டு பலம், சுக்கு, சர்க்கரை, பேரீச்சம் பழம், வெந்தயம், கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றில் வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்து, அவற்றை ஒன்று சேர்த்து கல்வத்தில் இட்டு நன்கு இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து எடுத்துக் கொள்ளவேண்டுமாம் (இதுவே சூரணம் எனப்படும்). பிறகு ஒரு மண் பானையில் எட்டு பலம் பனைவெல்லத்தையும் இட்டு அடுப்பில் வைத்து எரிக்க பனைவெல்லம் உருகி பாகு பத்தில் வருமாம். அப்போது முன்னர் சலித்து எடுத்து வைத்த சூரணத்தை சிறிது சிறிதாக பானையில் போட்டு கிண்ட வேண்டுமாம்.

அது சற்று இறுகிய நிலையில் வந்ததும் அதனுடன் பசுவின் நெய் நான்கு பலம் விட்டுக் கிண்டி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து, சேமித்துக் கொள்ளவேண்டுமாம். இதுவே தேரையர் அருளிய தாது புஷ்டி லேகியம்.இந்த தாதுபுஷ்டி லேகியத்தில் எலுமிச்சம் காய் அளவுக்கு  எடுத்து காலை மாலை என்று இரு வேளையாக, தொடர்ந்து இருபத்தி நான்கு நாட்கள் சாப்பிட்டு வரவேண்டுமாம்.

இதனால் தாதுபுஷ்டி உண்டாகுமாம். அது தவிர கிரந்தி, வெள்ளை, இடுப்பு நோய் போன்றவைகளும் குணமாகும். பத்தியமாக சாதத்தில் நெய், வெல்லம் சேர்த்து சாப்பிடவும். புளியையும், பெண் சேர்க்கையும் மருந்துண்ணும் நாட்களில் இருந்து நாற்பத்தெட்டு நாட்கள் நீக்கிவிடவேண்டும் என்கிறார்.

 குறிப்பு :- ஒரு பலம் என்பது தற்போதைய அளவுகளில் 35 கிராம் ஆகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..