சித்தர் பெருமக்கள் இருபத்தியோரு வகையான மூல நோய் இருப்பதாய் பகுத்துக் கூறியிருப்பதை
நேற்றைய பதிவில் பார்த்தோம். அவை முறையே...
நீர்மூலம், செண்டுமூலம், மூளைமூலம், சிற்று மூலம், வரள் மூலம், இரத்த மூலம், சீழ்மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாதமூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், வினைமூலம், மேகமூலம், பவுத்திரமூலம், கிரந்தி மூலம், குத மூலம், புறமூலம், சுருக்கு மூலம், சவ்வு மூலம் என்பன ஆகும்.
இன்றைய பதிவில் முதல் ஏழு வகை மூல நோய்களைப் பற்றியும் அதற்கான அறிகுறிகளைப் பற்றியும் பார்ப்போம். இந்த தகவல்கள் யாவும் யூகி முனி அருளிய “வைத்திய சிந்தாமணி” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
01. நீர்மூலம்
சுருபங்கேள் தொப்புளிலே மிகவ லித்துச்
சுருண்டுமே கீழ்வயிற்றைப் பொருமிக் கொண்டு
வருபங்கேள் மலம்வறண்டு வாய்நீரூறும்
வாய்வுதான் பரிகையிலே நுரைபோற் காணும்
துருபங்கேள் பிடவைதனிற் றோய்வு மாகும்
சுருக்காக மலம்வருதல் போலி றுக்கும்
நிருபங்கேள டிக்கடிக்கு நீராய்ப் போகும்
நிலையான நீர்மூலம்நி னைவாய்ப் பாரே.
இந்த வகை மூலநோய் பாதிப்புள்ளவர்களுக்கு தொப்புளில் அதிக வலியிருக்குமாம். கீழ்வயிற்றை சுருட்டி பொருமிக் கொள்ளுமாம். மலம் வறண்டு போகுமாம். வாயில் நீர் ஊறுமாம். வாய்வு வெளியேறும் போது நுரைபோல காணப்படுவதுடன் உடுத்தியிருக்கும் ஆடைகளிலும் அவை படுமாம். அடிக்கடி மலம் வருவது போலிருக்குமாம். ஆனால் மலமாக வெளியேறாமல் நீராக போகுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது நீர்மூலம் என்கிறார்.
02. செண்டு மூலம்
நினைவாகக் கருணையிட முளையே போல
நிமிர்த்தெழுந்து நாள்மூன்று நிற்ப மாகி
கனவாகக் கன்றியேமி கவ லிக்கும்
காரந்தான் போட்டவுடன் களையாய் வீழும்
இனவாக இரத்தமொடு தண்ணீர் காணும்
இறுகியே மலந்தீயு மிரைச்ச லாகும்
தினவாக வாசனத்தைச் சுருக்கிக் கொள்ளும்
செயசெண்டு மூலத்தின் றிறமை தானே
இந்த வகை மூலநோயானது கருணைக்கிழங்கின் முளைபோல தோன்றி, அது மூன்று நாளில் கன்றிப்போய் வலிக்குமாம். காரசிகிச்சை செய்தால் விழுந்து விடுமாம். இரத்தமும் தண்ணீரும் வருமாம். மலம் இறுகிப் போகுமாம். இரைச்சலுண்டாகுமாம். ஆசனவாயை சுருக்கிக் கொள்ளுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது செண்டு மூலம் என்கிறார்.
03. முளைமூலம்
திறமாக வாசனத்திற் கடுப்பு முண்டாம்
திரட்சியாய் தடித்தெரிவு செயலுங் காணும்
அறமாக வடிவயிறு கல்லு போலாம்
ஆசனந்தான் மிகச்சுருங்கித் தினவு முண்டாம்
குறமாகக் குதிகொள்ள ரத்தப்பீ ரிறங்கும்
கூசாத இரைச்சல்மிக வெப்ப முண்டாம்
மறமாக மஞ்சள்முளை போலெ ழும்பும்
மலந்தீயு முளைமூல வண்மை தானே.
ஆசனத்தில் கடுப்புண்டாகுமாம். ஆசன வாய் தடித்து திரட்சியாகி எரிவுண்டாகுமாம். அடிவயிறு கல் போலாகுமாம். ஆசனவாய் மிகச்சுருங்கி தினவெடுக்குமாம். மலம் கழிக்க உட்கார்ந்தால் இரத்தம் பீறிடுமாம். இரைச்சல் அதிகமுண்டாகுமாம். ஏப்பம் அதிகமாகுமாம், மஞ்சள் முளைபோல கட்டி எழும்புமாம். மலம் தீய்ந்துபோகுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது முளைமூலம் என்கிறார்.
04. சிற்றுமூலம்
வண்மையா யுடம் பெரியும் மயக்க மாகும்
வயிறுதான் பளபளென்னும் வலுவாய் குற்றும்
இண்மையாய் குறுகுறென்றே இரைச்ச லாகும்
இசிவுடனே பொருமலாயி ளைப்பு மாகும்
திண்மையாய்ச் சித்துமுளை பலவுண் டாகும்
தேகமெங்கும் வெளுப்பாகுஞ் செயலுங் காணும்
வெண்மையாய் வெளுத்துமே பசியி ராது
மேனி கண்ணுஞ் சிற்றுமூல மிடுக்குந் தானே.
இந்த வகை மூல நோய் பாதிப்பில் உடல் எரிவும் மயக்கமும் உண்டாகுமாம், வயிறு பளபள என்று குத்தலெடுக்குமாம், குறுகுறென்று இரைச்சலும் உண்டாகுமாம். பொருமலுடன் இளைப்பும் உண்டாகுமாம். ஆசன வாயில் சிறிய முளைகள் பல உண்டாகுமாம். தேகம் முழுதும் வெளுத்து காணப்படுவதுடன் பசியும் இருக்காது என்கிறார். இந்த குணங்கள் காணப்பட்டால் அது சிற்றுமூலம் என்கிறார்.
05. வரள் மூலம்
மிடுக்காக மலத்தையே யிறுக்கிக் கொள்ளும்
மிகுவாக ரத்தமது துளியாய் வீழும்
அடுக்காகச் சடமுலர்த்தி யழல் கழிக்கும்
ஆண்மைதான் மிகப்பேசிச் சண்டை கொள்ளும்
உடுக்காக வுள்ளிருக்கு முளைகள் தானும்
ஒருவருக்குந் தெரியாது ஒடுக்கி வைக்கும்
திடுக்காக நாள்தனிலே பெலன் குறைக்கும்
செயலழிக்கும் வரள்மூலச் சேதி தானே
இந்த வகையில் மலம் இறுகிக் கொள்வதுடன் இரத்தம் துளித்துளியாய் விழுமாம். உடல் உலர்ந்து சூடாக இருக்குமாம். மிகவும் பேசி சண்டையிட வைக்குமாம். ஆசனவாயின் உள் இருக்கும் முளை வெளியில் தென்படாது என்றும் நாள் ஆக ஆக உடல் பலம் குறையுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது வரள் மூலம் என்கிறார்.
06. இரத்த மூலம்
சேதியாய் தொப்புள்தனில் வலித்து நொந்து
சிறுகதிர் போற்பீறிட்டு ரத்தம் வீழும்
மேதியாய் மேனிவற்றி வெளுத்துப் போகும்
மிகக் கைகாலசந்துமே சோபை யாகும்
மாதியாய் மார்பிளக்குந் தலைநோ வுண்டாம்
மயக்கந்தான் மிகுதியாய்த் தள்ளிப் போடும்
நாதியாய் கண்ணிரண்டு மஞ்சள் போலாம்
நலியு மிரத்த மூலத்தின் நண்புதானே.
தொப்புளில் வலித்து சிறு கதிர்போல இரத்தம் பீறிட்டு வெளியேறுமாம். உடல் வற்றி வெளுத்துப் போகுமாம். கைகால்கள் அசந்து போகுமாம். சோபையை உண்டாகுமாம். தாங்க முடியாத தலைவலியும் உண்டாகுமாம். மயக்கம அதிகமாகி கீழே விழுவதுடன் கண்கள் மஞ்சள் நிறமாக காணப்படுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது இரத்த மூலம் என்கிறார்.
07. சீழ்மூலம்
நண்பாகக் குதங்கடுத்து எரிப்பு தோன்றும்
நாற்றியே சீயொடு தண்ணீர் காணும்
மண்பாக மாமிசங்கள் கரைந்து கொண்டு
வடிவமெல்லாம் வெளுத்துமே மஞ்சளாகும்
மெண்பாக மேவும்வாய் நீர தாகும்
மிடுக்கான நடைகுறைப்பு மெலிவு மாகும்
திண்பாகச் சிறுநீர்தான் மஞ்ச ளிக்கும்
சீழ்முலந் தன்னுடைய சேதி யாமே.
குதம் கடுத்து எரிச்சல் உண்டாகுமாம். நாற்றத்துடன் சீழும் தண்ணீரும் வெளியேறுமாம். உடல் மெலிந்து, வெளுத்து மஞ்சளாகுமாம். வாயில் நீர் அதிகமாகுமாம், அதிக தூரம் நடக்க முடியாமல் இருப்பதுடன் சிறுநீர் மஞ்சளாக வெளியேறுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது சீழ்மூலம் என்கிறார்.
அறிவியலும், தொழில் நுட்பமும் வளராத ஒரு காலகட்டத்தில் நமது முன்னோர்கள் ஒரு நோயைப் பற்றி இத்தனை தீர்க்கமாகவும், தெளிவாகவும் பகுத்துக் கூறியிருப்பது ஆச்சர்யமும், பெருமையும் கொள்ளத் தக்கது. நாளைய பதிவில் அடுத்த ஏழு வகையான ஆழி மூலம், தமரக மூலம், வாதமூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், வினைமூலம் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை
ஆங்கிலத்தில் வாசிக்க..