மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு -1

Author: தோழி / Labels: , ,

மூல நோய் என்பது என்ன?, அதன் கூறுகள் யாவை?, நவீன அலோபதி மருத்துவமும், பழமையான நமது சித்த மருத்துவமும் இந்த நோயை எவ்வாறு அணுகி தெளிவுகளையும், தீர்வுகளையும் முன் வைத்திருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் கடந்த இரு வாரங்களாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இந்த நெடுந்தொடரின் மூன்றாவது பகுதியாக மூல நோய்க்கு நமது சித்தர் பெருமக்கள் அருளிய சில தீர்வுகளை இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்.

தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” எனும் நூலில் காணக் கிடைக்கும் தீர்வு ஒனறினை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

பாரப்பா மணக்கெண்ணெய் பலம் நாலைந்து 
பழச்சா ரீருள்ளிச்சாறு கத்தாழஞ் சாறு
மாரப்பா நல்மணத் தக்காளி சாறு
வகையொன்றுக் கீரைந்து பலமே வாங்கி
சேரப்பா பலமரை நற்சீரகந்தான்
திறமாக ஆட்டி எண்ணெயிலே கூட்டி
கோரப்பா மெழுகு பதமெரித்துக் கொண்டு
கொடுத்திடாய் பலமொன்று தினமாய் கொள்ளே.

தேரையர்.

கொள்ளடா தினகரனை வணங்கி
கூரியதோர் சீதமூலம் இரத்த மூலம்
உள்ளடா கடுப்பாசனக் கடுப்பும்
உள்காய்ச்சல் உள்மூலம் வெளிமூலம் போம்
மெள்ளடா புகையுடனே புளி கல்லுப்பு
மீறியதோர் பழையது மாட்டிறைச்சி மச்சம்
தள்ளடா தயிர்மோர் நெய் வன்னீ ரன்னம்
சாதிக்க நோயகலுந் தெரிந்து போடே.

தேரையர்.

ஆமணக்கு எண்ணெய் இருபது பலம், எலுமிச்சம் பழச்சாறு, குமரிச்சாறு, மணத்தக்காளி சாறு என ஒவ்வொன்றிலும் பத்து பலம் வீதம் எடுத்து ஒரு மண் பானையில் ஊற்றிக் கொள்ளவேண்டுமாம். நற்சீரகம் அரை பலம் எடுத்து அதனை நன்கு அரைத்து, மண் பானையில் உள்ள கலவையுடன்  சேர்த்து நன்றாகக் கலக்கி, பானையை அடுப்பில் ஏற்றி மெழுகு பதத்திற்கு வரும் வரையில் நன்கு காய்ச்சி எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

தினமும் காலை வேளையில் சூரியனை வணங்கி, இந்த கரைசலில் ஒரு பலம் வீதம் உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து உண்பதனால் சீத மூலம், இரத்த மூலம், கடுப்பு, ஆசனக் கடுப்பு, உட்காய்ச்சல், உள் மூலம், வெளி மூலம் போன்ற நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்கிறார் தேரையர். 

இந்த மருந்தை உட்கொள்ளும் போது பத்தியமாக புகை, புளி, உப்பு, பழைய சாதம், மாட்டு இறைச்சி, மீன் ஆகியவற்ரை நீக்கி, தயிர், மோர், நெய், வென்னீர் விட்டு பிசையப்பட்ட சாதம் ஆகியவைகளை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

குறிப்பு :- ஒரு பலம் என்பது தற்போதைய அளவுகளில் 35 கிராம் ஆகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..




Post a Comment

3 comments:

jana said...


அருமை தோழி !

தங்களின் பணி தொடறட்டும்

சேலம் தேவா said...

(குமரிச்சாறு) ???

தோழி said...

@சேலம் தேவா

சித்தர்களின் பரிபாஷையில் கற்றாழைச் செடிக்கு குமரி என்றொரு பெயர் உண்டு. அந்த வகையில் குமரிச் சாறு என்பது கற்றாழையின் சாறையே குறிக்கும்.

Post a Comment