சித்த மருத்துவமும், மூலநோயின் வகைகளும் - 03.

Author: தோழி / Labels: , ,

சித்தர் பெருமக்கள் பகுத்துக் கூறிய இருபத்தியோரு வகையான மூல நோய்களில் இதுவரை பதின்நான்கு வகைகளைப் பற்றி முந்தைய இரண்டு பகுதியில் பார்த்தோம். அந்த வகையில் கடைசி ஏழு வகைகளான மேகமூலம், பவுத்திரமூலம், கிரந்தி மூலம், குத மூலம், புறமூலம், சுருக்கு மூலம், சவ்வு மூலம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

இந்த தகவல்கள் யாவும் யூகிமுனி அருளிய “வைத்திய சிந்தாமணி” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

15. மேக மூலம்

வினையாக லிங்கத்தில் வெள்ளை யூற்றும்
மெத்தவாய்க் குதந்தன்னி லுதிரஞ் சாய்க்கும் 
சனையாகச் சத்தமதாய்க் கழிச்ச லாகும்
தாக்கான சிறுநீரு மெரிச்ச லாகும்
பனையாகப் படுக்குங்கால் தலைவலிக்கும்
பாரமா யுடம்பெங்குந்தான் மதுர மாகும்
முனையாக மூத்திரந்தான் மதுர மாகும்
மூர்க்கமா மேகமென்ற மூலந் தானே.

இந்த வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு பிறப்புறுப்பில் இருந்து மேகம் ஒழுகுமாம். குதத்திலிருந்து இரத்தம் ஒழுகுமாம். அதிக சத்துடன் கழிச்சலுண்டாகுமாம். சிறுநீர் கழியும் போது எரிச்சல் உண்டாகுமாம். தலை வலிக்குமாம். உடல் எங்கும் திமிர்த்துப் போகுமாம். சிறுநீர் இனிப்புச் சுவையுடன் காணப்படுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது மேக மூலம் என்கிறார்.  

16. பவுத்திர மூலம்

மூர்க்கமாய்ப் பவுத்திரத்திற் கட்டி யாகி
மூத்திரந் தானடிக்கடிக்கு அருவ லாகும்
கார்த்தமாங் கால்கையுங் கனப்பு மாகும்
கனகனக்குங் குதங்குய்யஞ் சாவற் சூடு
பூர்க்கமாம் பூப்போல முளைகள் காணும்
பொருங்கோ வைப்பழம் போலச் சிவப்பு மாகும்
பார்க்கமாங் காரந்தான் போடத் தீரும்
பவுத்திரமா மூலத்தின் பண்பு தானே.

பவுத்திரத்தில் கட்டி உண்டாகுமாம். அடிக்கடி சிறுநீர் வெளியேறுமாம். கால் கை கனப்புண்டாகுமாம். குதம், குய்யம் ஆகிய இடங்களில் கோழியைப் போல சூடு எப்போதும் இருந்துகொண்டே இருக்குமாம். மாம்பூ போல முளைகள் காணப்படுவதுடன் அவை கோவைப்பழம் போல சிவந்து காணப்படுமாம்.  இந்த குணங்கள் காணப்பட்டால் அது பவுத்திர மூலம் என்கிறார்.  

17. கிரந்தி மூலம்

பண்புதான் லிங்கத்திற் புண்ணு மாகும்
பாரமாய்க் கால்கையுங்க டுப்பு முண்டாம்
குண்பதாக் குசத்துக்குள் விரண மாகிக்
கொடிக் கொடியாய் முளையுண்டாகிச் சீயும் ரத்தம்
தண்புதான் தண்ணீரும் பெருக வுண்டாம்
தணல்போல எரிவோடு கடுப்பு மாகும்
கெண்புதான் கெட்டியாய் மலம் வறண்டு
கீற்றாக வெடித்திறங்கு கிரந்தி மூலம்

ஆண் குறியில் புண் உண்டாகுமாம். கால் கை கடுப்புண்டாகுமாம். குதத்துக்குள் புண்ணாகவே இருக்குமாம். கொடிக்கொடியாக முளையுண்டாகி சீழும் இரத்தமும் துர்நீரும் வெளியாகுமாம். தீபோல எரிச்சல் தரும். கடுப்புடன் மலம் கெட்டியாக வறண்டு வெளியாகுமாம். மலத்துவரம் கீற்று கீற்றாக வெடித்து இருக்குமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது கிரந்தி மூலம் என்கிறார்.

18. குதமூலம்

இறங்குமே மூங்கிலிட்டிக் குருத்து போல
இழுத்துமே தள்ளிடிலோ வுள்ளே போகும்
பிறங்குமே சீயோடு ரத்தம் பாயும்
பெருகியே வயிறுமெத்தக் கனத்துக் கொள்ளும்
அறங்குமே கால்கையும தைப்பு மாகும்
அடிக்கடிக் குநாவரண்டு தண்ணீர் தேடும்
குறங்குமே மிகவலிக்குங் கோப முண்டாம்
கொடியகுத மூலத்திங்கு ணம தாமே

இந்த வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு மூங்கில் குருத்துபோல முளை வெளி நோக்கி இறங்கியிருக்குமாம். உள்ளே தள்ளிவிட்டால் உள்ளே போய்விடுமாம். சீழோடு இரத்தம் சேர்ந்து வெளியாகுமாம். வயிறு அதிகமாக கனத்துக் கொள்ளுமாம். கால் கை அதப்பு தருமாம். அடிக்கடி நாவறண்டு தண்ணீர் குடிக்க வேண்டியிருக்குமாம். பிட்டம் அதிமாக வலிக்குமாம். கோபமுண்டாகும். இந்த குணங்கள் காணப்பட்டால் அது குதமூலம் என்கிறார்.

19. புறமூலம்

குணமதா யெண்ணெய் போற் றண்ணீர் போலும்
கூற்றான கடுப்போடு சீயு முண்டாம்
திணமதாய்த் தினவெடுக்குந் திமிர்ப்புண் டாகும்
சிறுசிரங்காய் மேலெல்லாஞ் சொறியு மாகும்
பணமதாயா சனத்திற்ப குப்பு போலப்
பாங்காக விதனமாய்ப் படுக்கௌ கூடா
பிணமதாய் முகமெல்லாம் வாட்டமுண்டாம்
பேரான புறமூலப் புதுமை தானே

குதத்தில் இருந்து எண்ணெய் போலவும், தண்ணீர் போலவும் கடுப்புடன் சீழ் வடியுமாம். தினவு எடுக்குமாம், திமிர்வு உண்டாகுமாம். சிறுசிறு சிரங்காக மேலெல்லாம் சொறியுண்டாகுமாம். ஆசனத்தில் சிறு சிறு கட்டிகள் தோன்றியிருக்குமாம். முகம் வாட்டமுடன் காணப்படுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது புறமூலம் என்கிறார்.

20. சுருக்குமூலம்

புதுமையா யாசனத்தைச் சுருக்கிக் கொண்டு
பெருங்குடலில் வலியோடு பொரும லாகும்
கதுமையாய் குதந்தன்னிற் றடிப்புண் டாகும்
கழலுமே தண்ணீரும் ரத்தந் தானும்
வெதுமையாய் வெவ்வனல்போ லழன்று காணும்
வேற்றுடம்பாய்த் தான்வெளுத்து வெறிப்புண் டாகும்
பதுமைபோல் தேகமெங்கு மசவு கூடாப்
பண்பான சுருக்கென்ற மூலந் தானே

ஆசனவாய் சுருக்கிக் கொள்ளுமாம். பெருங்குடலில் வலியுடன் பொருமல் ஏற்படுமாம். குதத்தில் தடிப்பு உண்டாவதுடன் அனல் போல அழன்று காணப்படுமாம். தண்ணீரும் இரத்தமுமாய் வெளியேறுமாம்.  உடல் வெளுத்து வெறிப்புண்டாகுமாம். தேகம் முழுதும் அசைக்க முடியாது போகுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது சுருக்குமூலம் என்கிறார்.

21.சவ்வுமூலம்

சுருக்கியே முதுகுத்தண்டிலுற்ப வித்துத்
தொப்புளிலே தாமரைப்பூப் போல மலர்ந்து
அருக்கியே குற்றிலா கார மாக்கி
அடிவயிற்றி லோங்குமே மூல ரோகம்
சொருக்கியே சவ்வுபோலா சனத்திலே
சுற்றியே நின்றுதான் சீயுந் தண்ணீர்
பருக்கியே கசிவாகு மெந்நே ரந்தான்
பண்பான சவ்வாகு மூலந் தானே

முதுகுத் தண்டில் ஆரம்பித்து தொப்புள்வரை தாமரைப்பூ போல மலர்ந்து காரமாக அடிவயிற்றில் வலியினை உண்டாகுமாம்.  சவ்வுபோல ஆசனவாயினைச் சுற்றி காணப்படுமாம். அத்துடன் எந்நேரமும் சீழும் நீருமாகக் கசிந்து கொண்டிருக்குமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது சவ்வுமூலம் என்கிறார்.

நவீன அலோபதி மருத்துவம் உள் மூலம், வெளி மூலம் என இரண்டே பிரிவுகளாய் கூறும் ஒன்றினை நமது முன்னோர்கள் இருபத்தியோரு பிரிவாக பகுத்து கூறியிருப்பதை இது வரை பார்த்தோம். இத்துடன் இந்த தொடரின் இரண்டாம் பகுதி நிறைவடைகிறது.

இனி வரும் நாட்களில் இந்த மூல நோயினை குணமாக்கிட சித்தர் பெருமக்கள் அருளிய சில வைத்திய முறைகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

3 comments:

jana said...

arumaiyana pathivu / nanri

kimu said...

நல்ல பதிவு.
நன்றி தோழி.

S.Puvi said...

பதிவுகளுக்கு நன்றி

Post a Comment