சித்தர் பெருமக்கள் பகுத்துக் கூறிய இருபத்தியோரு வகையான மூலநோய்களில் இன்று ஆழி மூலம், தமரக மூலம், வாதமூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், வினைமூலம் பற்றிய தகவல்களையும், அறிகுறிகளையும் பார்ப்போம்.
இந்த தகவல்கள் யாவும் யூகிமுனி அருளிய “வைத்திய சிந்தாமணி” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
08. ஆழிமூலம்
சேதியாய் நீண்ட வள்ளிக் கிழங்கு போலத்
திமிர்ந்துமே யேகமுளை யாகக் காணும்
நீதியாய் நீரோடுஞ் சீயுமி ரத்தம்
நிரனிறை யாய்த் தோன்றி யேமலமுஞ் சிக்கும்
காதியாய் காரங்கள் ஏற்றி டாது
கடிய பலவீனமாந் தேகந் தானும்
ஆதியாம் அசத்ததனை பொறுத்துக் கொல்லும்
ஆழிமூ லத்தினிட ஆண்மை தானே.
இந்த வகை பாதிப்பில் நீண்ட வள்ளிக் கிழங்கு போன்று ஒரே முளையாகக் காணப்படுமாம். நீரும், சீழும், இரத்தமும் கலந்து வெளியேறுவதுடன் மலம் சிக்குமாம். காரமான உணவுகளை உடல் ஏற்றுக் கொள்ள மாட்டாதாம். உடல் பலவீன மடையுமாம். உடல் பலவீனத்தினைப் பொறுத்து மரணம் ஏற்படவும் சாத்தியமுண்டாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது ஆழிமூலம் என்கிறார்.
09. தமரக மூலம்
மூலமாம் பவனத்திலு லக்கைப் பூண்போல்
முதிர்ந்த தாமரைப்பூ போலலர்ந் திருக்கும்
நூலமாம் நொறுக்காகம லமுங் காணும்
நுணுக் கேறி யிரத்தமொடு திணவு முண்டாம்
வாலமாய் வயிறிரைந்து நீராய்ப் போகும்
வயிறூதிப் பசியில்லா மந்தங் காணும்
தாலமா மேல்மூச்சாய் அசதி யுண்டாம்
தமரக மாமூலத்தின் றன்மை தானே
இந்த வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு அபானத்தில் உலக்கைப் பூண்போலவும், முற்றிய தாமரைப்பூ போலவும் மூளையிருக்குமாம், மலத்துடன் இரத்தம் வெளியேறுமாம், தினவேற்படுமாம். வயிறு இரைந்து மலம் நீர்த்தன்மையாக வெளியேறுமாம். வயிறு ஊதி பசியில்லாமல் மந்தமாய் காணப்படுமாம். மேல் மூச்சுண்டாவதுடன் அசதியும் ஏற்படுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது தமரக மூலம் என்கிறார்.
10. வாதமூலம்
தன்மை கோவைப்பழம் போற் குதம்சி வப்புத்
தனிலடப் பம்பூப்போல முளை வளர்ந்து
கண்மை கறுப்பாய்மி ருதுவா யிருக்கும்
கடுப்போடு தினவுகுற்றல் திமிர்த்த லாகும்
வண்மை மயிர்தான்முளைத்து மலஞ்சிக் கென்று
மகத்தாகக் கறுத்துமெத்த திரண்டு காணும்
வெண்மை வயிற்விட்டுமே குடலுள் வலியாகும்
மிக்க தலைவலிவாத மூல மாமே
இந்த வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு குதம் கோவைப் பழம் போல சிவந்து காணப்படுமாம். அடப்பம்பூ போல முளை வளர்ந்து கருப்பாய் மிருதுவாக இருக்குமாம். கடுப்பு, தினவு, குத்தல், திமிர்த்தல் ஆகியன காணப்படுமாம். அபானத்தில் ஆதிக மயிர் முளைக்குமாம். மலம் கறுத்து அதிகமாக திரண்டு இருக்குமாம். வயிற்றில் குடலுக்குள் வலியெடுப்பதுடன் அதிக தலைவலியும் உண்டாகுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது வாதமூலம் என்கிறார்.
11. பித்தமூலம்
தலைவலிதான் மிகவுண்டாம்ப ருத்திக் கொட்டை
தன்போலு நெற்போலுமு ளையுண் டாகும்
மலைவலியாய் மலஞ்சிக்கி உருண்டு ருண்டு
மாவுண்டை திரிதிரியாய் ரத்தஞ் சீயாய்
குலவலியாய் குதங்கடுத்து எரிவு மாகிக்
கூச்சமாய் தாகமொடு வியர்வை யாகும்
தலைவலியா யத்துயக்குமாய்க் கோப மாகும்
சொற்பல வீனமும்பித்த மூல மாமே
இந்த வகை மூலநோய் உள்ளவர்களுக்கு தலைவலி அதிகம் உண்டாகுமாம். பருத்திக் கொட்டை போலவும், நெல்போலவும் முளையுண்டாகுமாம். மலம் சிக்கி உருண்டு உருண்டு, மாவுருண்டைபோல திரி திரியாய் இரத்தமும் சீழும் கலந்து வெளியேறுமாம். குதம் கடுத்து எரிவுண்டாகுமாம். தாகமும் வியர்வையும் உண்டாகுமாம், தலைவலி அதிகம் இருப்பதனால் கோபமுண்டாகுமாம். உடலைப் பலவீனமமாக இருக்குமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது பித்தமூலம் என்கிறார்.
12. சிலேத்தும மூலம்
ஈனமாங் குதத்தில் முளை வெள்ளை யாகும்
எந்நேரத்தி னவதிக மெரிவு மாகும்
கானமாங் கடுப்புடனே சீயுந் தண்ணீர்
கனமான வலியாகி மலந்தா னோங்கும்
தூனமா மூத்திரந்தான் சூடுண் டாகும்
சொற்குண பேதகமாகுந் தாது நஷ்டம்
பானமாம் பாண்டுவொடு அருசி யாகும்
பரவு சேட்டுமமூலப் பாங்கு தானே
குதத்தில் வெள்ளை நிறத்தில் முளையுண்டாகுமாம். எந்த நேரமும் அதிக எரிவுண்டாகுமாம். கடுப்புடன் சீழும் தண்ணீரும் சேர்ந்து அதிக வலியுடன் மலம் வெளியேறுமாம். சிறுநீர் அதிக சூட்டுடன் வெளிவருமாம். சுக்கில நட்டமும், பாண்டு நோயும் உண்டாகும். உண்ணும் உணவின் சுவையினை உணர்ந்து கொள்ள முடியாதிருக்குமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது சிலேத்தும மூலம் என்கிறார்.
13. தொந்த மூலம்
பாங்கான குதமிறுகிக் கோழிச் சூடு
பதித்ததுபோற் றானிருக்கும் நடக்க வொட்டா
வாங்கான வயிறுமெத்தப் பொரும லாகும்
வருத்தமொடு வியர்த்துமே மிஹ நடுக்கும்
தாங்கான தவித்துமே தாக மாகும்
தரியாமல் வயிறதுவும் பேதி யாகும்
தீங்கான செடமட்டை போற்சு ருக்கும்
திடுக்குமே தொந்தம்மென்ற மூலந் தானே
குதம் இறுகிக் கோழியில் சூடு இருப்பதைப் போல் சூடாயிருக்குமாம். நடக்க இயலாது இருக்குமாம். வயிறு அதிக பொருமலுடன் காணப்படுமாம். அதிக வியர்வையும் மிக நடுக்கமும் உண்டாகுமாம். தாகம் அதிகமாக இருக்குமாம். வயிறு பேதியாவதுடன் உடல் அட்டைபோல் சுருங்கிப் போகுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது தொந்த மூலம் என்கிறார்.
14. வினைமூலம்
திடுக்கிட்டுச் சோறுசெரி யாமை யாகும்
தீபனந்தா னில்லாமற்பி ளித் தே க்காகும்
அடுக்கிட்ட அடிவயிற்றிற் குற்ற லுண்டாம்
ஆங்காரக் கோபமொடு மலமுங் கட்டும்
கடுக்கிட்ட கைகாலு மோச்ச லாகும்
கனமாக வயிறிரைந்து காந்த லுண்டாம்
வெடுக்கிட்டு நரம் பெல்லா மிசிவு மாகும்
மிகக்கடுக்கும் வினைமூல விபரந் தானே
உண்ணும் சோறு செரிக்காமல் புளித்த ஏப்பம் உண்டாகும். அடிவயிற்றில் குத்தல் உண்டாகுமாம். மலமும் கட்டுமாம், கைகால் ஓச்சலாகுமாம். வயிறு இரைந்து காந்தல் உண்டாகும். நரம்பெல்லாம் வலிப்பு தோன்றுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது வினைமூலம் என்கிறார்.
நாளைய பதிவில் அடுத்த ஏழு வகையான மேகமூலம், பவுத்திரமூலம், கிரந்தி மூலம், குத மூலம், புறமூலம், சுருக்கு மூலம், சவ்வு மூலம் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



1 comments:
நல்ல பதிவு
நன்றி தோழி
Post a Comment