நீண்ட ஆயுளைத் தரும் வல்லாரை கற்பம்

Author: தோழி / Labels: ,

நீடித்த இளமையோடும், நோயற்ற உடல் நலத்துடன் வாழ சித்தர்கள் பல கற்பவகைகளை அருளியிருக்கின்றனர். பொதுவில் இவை மருத்துவ காயகற்பம், யோக காயகற்பம் என இரு பிரிவாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. இது பற்றி ஏற்கனவே நாம் விரிவாக பார்த்திருக்கிறோம். புதியவர்கள் / தேவையுள்ளோர் அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

அந்த வரிசையின் இன்று கருவூரார் அருளிய வல்லாரைக் கற்பம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் "கருவூரார் வாதகாவியம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின்வருமாறு...

இருப்பான் வெகுநா ளியல்புடனே தானும் 
வருந்தும்வல் லாரச்ச மூலத்தைத் தான்கழுவி
விரித்து நிழலுலர்த்தி மேவிப்பின் சூரணஞ்செய்
கருத்தை யிருத்திநன்றாய்க் கற்பத்தைக் கொள்வாயே

கற்பம்வல் லாரைதனைக் கொள்ளுதற்குக் காரணங்கேள்
அற்ப நரைதிரையும் யாவுமே தான்மாறும்
எப்போதும் நன்றா யிருப்பா னிதுதவறா
தப்ப்பாமல் லோர்வருடந் தான்விரும்பிக் கொள்வாயே

கொள்ளுவா னேயாகிற் கூறும்வய தைக்கேளாய்
வள்ளலென்ற பேராம் வயதுபதி னாறதுபோல்
தெள்ளுதமிழ் வல்லவனாய்த் தேறியே சித்தனைப்போல்
வள்ளலென நூறு வயதுவரை தானிருப்பான்

வல்லாரைச் சமூலம் எடுத்து, அதனை நன்றாகக் கழுவி அதனை விரித்து நிழலில் காயவைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை சூரணமாக செய்து சேமித்துக் கொள்ளவும். தினமும் இந்த சூரணத்தில் வெருகடி* அளவு எடுத்து உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு வருடம் உண்ண வேண்டும் என்கிறார்.

இவ்வாறு ஒரு வருடம் தொடர்ந்து உண்டால் நரை திரை நீங்குவதுடன் சிறந்த உடல பலத்துடன் பதினாறு வயது குமரன் போல் நூறு வயது வரை வாழலாம் என்கிறார். இந்த காயகற்பம் உண்டவர்கள் சித்தர்களைப் போன்று தமிழில் நல்ல தேர்ச்சியும் பெறலாம் என்கிறார். இந்த கற்ப முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. 

ஆச்சர்யமான தகவல்தானே....

குறிப்பு :  சமூலம் என்பது செடியின் வேர், தண்டு, இலை, பூ, காய், விதை என அனைத்தும் அடங்கியது.  

* வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் - நிறைவுப் பகுதி.

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் வரிசையில் "பிரம காயத்ரி” மந்திரத்தினையும் அவற்றினைப் பயன்படும் வழிமுறைகளையும் இன்றைய பதிவில் காண்போம். இந்த தகவல்கள் அகத்தியரின் “அகத்தியர் 12000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை. 

பிரம காயத்ரி

அகத்தியர் அருளிய காயத்ரியை பார்ப்பதற்கு முன்னர் தற்போது புழக்கத்தில் இருக்கும் “பிரம காயத்ரி” மந்திரத்தை கீழே இணைக்கப் பட்டுள்ள காணொளியில் கேட்கலாம். இது சமஸ்க்ருத மொழியில் அமைந்தது.இனி அகத்தியர் அருளிய “பிரம காயத்ரி” மந்திரத்தைப் பார்ப்போம்.

பாரப்பா அசபையிலேபிரம காயத்திரி
பரிவாக சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
பேரப்பா ஓம் அங்உங் மகாலம்வம்நசிமசி
பிர்மதே வாயசுவாகா வென்றுஓது
சாரப்பா சுத்தவெள்ளை பிரகாசிக்கும்
சரசுவதி வார்த்தைசொல்வாள் கலைகெல்லாமே 

பிரம காயத்ரி மந்திரம் "ஓம் அங்உங் மகா லம்வம் நசிமசி
பிர்மதேவாய சுவாகா"

இந்த பிரம காயத்ரியை செபிப்பவர்களுக்கு சகல கலைகளில் தேர்ச்சியும் அட்டாங்க சித்தியும் கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.

எல்லாம் சரிதான்! இந்தக் காயத்ரி மந்திரங்களை எவ்வாறு செபிப்பது?

அதனையும் அகத்தியர் தனது நூலில் பின்வருமாறு விவரித்திருக்கிறார்.

தினந்தோறு மவுனமதால் தியானஞ்செய்ய
திறமான ரகசியமா மந்திரந்தன்னை
ஓதுவது நூத்தெட்டு உருவேதானும்
அய்யனே மண்டலம்தான் சொல்லக்கேளு
கூவிமன மசையாமல் மவுனமாக 
கூர்மையுடன் னந்திசந்தி உருசெய்யே

இந்த இரகசிய காயத்ரி மந்திரங்களை தினமும் அந்தி சந்தி வேளைகளில் நூற்றியெட்டு தடவைகள் வீதம் ஒரு மண்டலத்திற்கு செபிக்க வேண்டும் என்கிறார்.  முக்கியமாக இந்த மந்திரங்களை உதடுகள் அசையாமல் உள்ளுக்குள் செபிக்க வேண்டும் என்கிறார். அவர் மேலும் ஒரு காயத்ரி மந்திரத்தினை ஒரு மண்டலகாலம் செபித்து முடித்தபின்னரே மற்றைய காயத்ரி மந்திரத்தினை செபிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் பற்றிய தொடர் இத்துடன் தற்காலிகமாய் நிறைவுற்றது. பிரிதொரு தருணத்தில் சித்தர் பெருமக்கள் அருளிய மற்ற பிற காயத்ரி மந்திரங்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

குறிப்பு :-  ஒரு மண்டலம் - 48 நாட்கள். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள்

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் சூட்சுமமானவை என்றும் இதனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்களைப் பற்றியும் முந்தைய  பதிவில் பார்த்திருந்தோம். இன்றைய் பதிவில் அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி” மற்றும் “விஷ்ணு காயத்ரி” மந்திரங்களைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள் அகத்தியரின் “அகத்தியர் 12000” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை. 

ருத்ர காயத்ரி

அகத்தியர் அருளிய காயத்ரியை பார்ப்பதற்கு முன்னர் தற்போது புழக்கத்தில் இருக்கும் “ருத்ர காயத்ரி” மந்திரத்தை கீழே இணைக்கப் பட்டுள்ள காணொளியில் கேட்கலாம். இது சமஸ்க்ருத மொழியில் அமைந்தது.இனி அகத்தியர் அருளிய ருத்ர காயத்ரி மந்திரத்தைப் பார்ப்போம்.

புத்தியுடன் சொல்லுகிறேன் சுத்தமாக
போதமுடன் ருத்திர காயத்திரிகேளு
பக்தியுள்ள ரகசியமிது மவுனவித்தை
பாலகனே கெவுனாதி செபிக்குமார்க்கஞ்ச்
சுத்தமுடன் சொல்லுகிறேன் ஓம்சிறீங்றீங்மகா
மசிமசி நசிமசிருத்ராய சுவாகாயென்றோதிப்பாரே.

சித்தர்களால் காலங்காலமாய் மிகவும் இரகசியமாக பாதுகக்கப்பட்ட உருத்திர காயத்திரி மந்திரம் இதுதான்.

 "ஓம் சிறீங் றீங் மகா மசிமசி நசிமசி ருத்ராய சுவாகா" 

ருத்திர காயத்ரியை செபிப்பவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்க் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் அகத்தியர்.

விஷ்ணு காயத்ரி

தற்போது புழக்கத்தில் இருக்கும் “விஷ்ணு காயத்ரி” மந்திரத்தை கீழே இணைக்கப் பட்டுள்ள காணொளியில் கேட்கலாம். இது சமஸ்க்ருத மொழியில் அமைந்தது.இனி அகத்தியர் அருளிய “விஷ்ணு காயத்ரி” மந்திரத்தைப் பார்ப்போம்.

பாரப்பா விஷ்ணுவின் காயத்திரி
பிலமான மந்திரத்தைச் சொல்லக்கேளு
விண்டான ஓம் ஓங்ஸ்ரீங் மகாசம்வம்நசிமசி
விஷ்ணுதே வாயசுவாகா வென்றேயோது
மேலான சந்தானமொடு சவுபாக்கியங்கள்
மனம்போலே லெச்சுமியின் கடாட்சமாமே

விஷ்ணு காயத்ரி மந்திரம் "ஓம் ஓங்ஸ்ரீங் மகா சம்வம் நசிமசி விஷ்ணுதேவாய சுவாகா" 

இந்த விஷ்ணு காயத்ரியை செபிப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் முதல் அனைத்துவகை செல்வங்களும் கிட்டும் என்கிறார் அகத்தியர்

அடுத்த பதிவில் பிரம்ம காயத்ரி மந்திரம் பற்றியும், இம் மூன்று காயத்ரி மந்திரங்களை எவ்வாறு செபிப்பது என்பது பற்றியும் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..தமிழர் திருநாளும், சித்தர்களின் காயத்ரி மந்திரங்களும்...

Author: தோழி / Labels: ,

அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இன்றுதான் தமிழரின் புத்தாண்டு என கொண்டாடும் நண்பர்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எது எப்படியாக இருந்தாலும் உழவர் திருநாளான இந்த தைத் திருநாள், எம் தமிழ் சமூகத்தின் பெருநாள் எனபதில் நமக்குள் மாற்றுக் கருத்துகள் ஏதுமில்லை. இன்று துவங்கி இனி வரும் நாட்களில், நம் அனைவரது வாழ்விலும் அன்பும், அருளும், நலமும் வளமும் மலர எல்லாம் வல்ல குருநாதரை பணிந்து வணங்கிடுவோம்.

காயத்ரி மந்திரம் என்பது என்ன? அது வடமொழிக்கு மட்டும் உரியதா?, தமிழுக்கென காயத்ரி மந்திரங்கள் உண்டா?, அப்படி ஏதும் இருந்தால் அது என்ன? என்பது பற்றியெல்லாம் முன்னரே இங்கே பகிர்ந்திருக்கிறேன். அதன் நீட்சியாக சித்தர் பெருமக்கள் அருளிய மூன்று காயத்ரி மந்திரங்களை இனி வரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம். காயத்ரி மந்திரங்கள் தொடர்பான முந்தைய பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

காயத்ரி மந்திரங்கள் என்றால் அவை வடமொழியில் மட்டுமே உள்ளவை என்கிற பொதுக் கருத்து காலம் காலமாய் இருந்து வருகிறது. உலக மாதாவான காயத்ரியில் துவங்கி, அனேக பிற தெய்வங்களுக்கும் என தனித்துவமான காயத்ரி மந்திரங்கள் இன்று  நம்மிடையே பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் தமிழ் காயத்ரி மந்திரங்கள் ஏனோ நம் பார்வையில் அல்லது புழக்கத்தில் இல்லாமலே போய்விட்டது. அத்தகைய காயத்ரி மந்திரங்களை மீட்டெடுக்கும் ஒரு சிறு முயற்சியாகவே இந்த தொடரை பகிர்ந்து கொள்கிறேன்.

இனி வரும் நாட்களில் சூட்சுமம் நிறைந்த ருத்திர காயத்திரி, விஷ்ணு காயத்திரி, பிரம காயத்திரி என்கிற மூன்று காயத்ரி மந்திரங்களைப் பற்றியும் அதன் பிரயோகம் மற்றும் அதனால் விளையும் பலன்களை பார்க்க இருக்கிறோம். இந்த மந்திரங்கள் யாவும் அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

இம் மூன்று காயத்ரி மந்திரங்கள் எத்தனை உயர்வானவை, அதன் சிறப்புகள் என்னென்ன என்பதை அகத்தியர் பின்வரும் பாடல்களில் விளக்குகிறார்.

சுழிவான மந்திரமாஞ் சூச்சந்தன்னை
செப்புகிறேன் புலத்தியனே தெளிவாய்கேளு
காரப்பா பிரமகாயத்திரியென்று
கருணைவளர் விஷ்ணுகாயத்திரியொன்று
நேரப்பா ருத்திர காயத்திரியொன்று
நிசமான காயத்ரிமந்திரங்கள் மூன்றுஞ்
சாரப்பா ருத்திர காயத்ரியோத
சகலவித ரோகமெல்லாம் சாந்தமாமே.

ஆமப்பா விஷ்ணு காயத்ரியோத
அப்பனே சந்தான சவுபாக்கியங்கள்
தாமப்பா ஒன்றுபத்தாய் தானேயுண்டாஞ்
சதங்கையுடன் பிரம காயத்திரியோத
ஓமப்பா சகலகலைக் கியானமெல்லாம்
உண்மையுடன் அஷ்டாங்க சித்தியாகும்
நாமப்பா சொன்ன காயத்ரி மூன்றும்
நாதாந்த நயனமடா சத்தியமாமே.

இந்த மந்திரங்கள் மிகவும் சூட்சுமமானவை, இவற்றை உணர்ந்து செபிக்கிறவர்களின் உடல் நலம், மன நலம், செல்வ வளம் ஆகியவை சித்திக்கும் என்கிறார்.

ருத்திர காயத்திரி, விஷ்ணு காயத்திரி மந்திரங்களும், சிறப்புகளும் அடுத்த பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு -5

Author: தோழி / Labels: , ,

மூல நோய்கள் நீங்க தேரையர் அருளிய மற்றொரு மருத்துவ முறையினை இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் தேரையர் வைத்திய சாரம் என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

கேளப்பாக் குளப்பாசிக் கிழங்கு வாங்கி
கண்டகண்ட மாயரிந்து பலமாரைந்து
பேணப்பா பலகாயம் சபசுநெய் விட்டு
புரட்டியே வேகவைத்து பலமொன்றாக
தோணப்பா கெசமுகனைப் பூசை பண்ணி
தொந்தித்து அரைத்துத் தினமே கொள்ளு
வாணப்பா ரெத்தஞ்சீழ் வெளியுள் மூலம்
ஒழிந்துபோம் முளைமூலம் நயந்து பாரே.

- தேரையர்.

முப்பது பலம் கொட்டிக் கிழங்கை கொண்டு வந்து அதனை துண்டு துண்டுகளாக அரிந்து ஒரு சட்டியில் போட்டு, அது மூழ்கும் அளவு பசுவின் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை அடுப்பில் ஏற்றி பக்குவமாக எரிக்க வேண்டுமாம். எரிக்கும் போது கிழங்கினை கிளறி விட்டு நன்கு பிரட்டி வேக வைத்து எடுத்து சேமித்துக் கொள்ளவேண்டுமாம். பின்னர் அதனை நன்கு அரைத்து தினமும் உண்ண வேண்டும் என்கிறார். இவ்வாறு உண்பதனால் இரத்த மூலம், சீழ் மூலம், உள் மூலம், வெளி மூலம், முளை மூலம் ஆகிய நோய்கள் குணமாகும் என்கிறார். இதற்கு பத்தியம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இத்துடன் மூல நோய் குறித்த நெடுந்தொடர் நிறைவுற்றது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு - 4

Author: தோழி / Labels: , ,

மூல நோய்கள் நீங்க தேரையர் அருளிய பல வழிமுறைகளில் எளிய வைத்திய முறை ஒன்றினை இன்றைய பதிவில் பார்ப்போம்.இந்த தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

போச்சடா அவ்விருட்சி வெளியில் வாங்கி
பொடியாகச் செய்தொரு சட்டியிலே
பாச்சடா பலகாயம் பசுவின் நெய்தான்
பக்குவமாய் விட்டெரித்துப் புரட்டிக் கொண்டு
மூச்சடா அறைநாலைந் துண்டை செய்து
முனைந்தந்தி சந்தியீரண் டுண்டை கொள்ளு
மாச்சடா ரெத்தஞ்சீழ் வெளியுள் மூலம்
மகத்தான முளைமூலம் வாங்கக் கேளே.

- தேரையர்.

விச்சிப் பூவை சேகரித்து, அதனை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய விச்சிப் பூவினை ஒரு சட்டியில் போட்டு அது மூழ்கிடும் அளவு தூய்மையான பசுவின் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் சட்டியை அடுப்பில் ஏற்றி பக்குவமாக எரிக்க வேண்டும்.

பக்குவமாய் எரித்த பின்னர் கலவையை நன்கு பிரட்டி நாலைந்து உருண்டைகளாகச் செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் காலை மாலை என இரண்டு உருண்டைகள் வீதம் உண்ண வேண்டும் என்கிறார். இவ்வாறு உண்பதனால் இரத்த மூலம், சீழ் மூலம், உள் மூலம், வெளி மூலம், முளை மூலம் ஆகிய நோய்கள் குணமாகும் என்கிறார். 

இதற்கு பத்தியம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பு : விச்சிப்பூவிற்கு மலையஞ்சிவந்தி என்றொரு பெயரும் உண்டு. 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு -3

Author: தோழி / Labels: , ,

மூல நோய்கான தீர்வுகள் வரிசையில் இன்று வித்தியாசமான ஒரு தீர்வினை பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

பாரப்பா நத்தையொடுத் தானெடுத்து வந்து
பழையதோர் பாண்டத்துள் ளடைத்துக் கேளு
தீரப்பா வாய்மூடி அடுப்பி லேற்றி
தீமூட்டி ஆவிமே லெழும்பும் போது
யேரப்பா இருகால் பலகை போட்டு
யிருத்திமேற் துளையதி லாசனத்தை வைத்து
நேரப்பா வேதுபிடி நாளீரைந்து
ரெத்தசீழ் மூலமுளை மூலம் போச்சே.

தேரையர்.

நத்தையின் மேல் ஓடு ஒன்றினைக் கொண்டு வந்தது பழைய பாத்திரத்தில் போட்டு மேல் மூடி இட்டு அடுப்பில் ஏற்றி எரிக்க வேண்டுமாம். நன்கு எரிந்து, பாத்திரத்தில் இருந்து ஆவி வெளியே வரும் போது மூடியை நீக்கி விட்டு பாத்திரத்தின் மீது இரண்டு பலகையை இடைவெளி விட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த இடைவெளியின் வழியே வரும் ஆவியானது ஆசன வாயில் படும் படி உட்கார வேண்டுமாம்.

ஆசனவாயில் நத்தை ஓட்டின் ஆவியை பிடிக்கும் இதனை வேது பிடித்தல் என்றும் சொல்வர். இவ்வாறு தொடர்ந்து பத்து நாட்கள் ஆசனவாயில் ஆவி பிடித்து வந்தால் இரத்த மூலம், சீழ் மூலம், முளை மூலம் போன்றவைகள் குணமாகும் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு - 2

Author: தோழி / Labels: , ,

மூல நோய்க்கான தீர்வுகள் வரிசையில் இன்று தேரையர் அருளிய மற்றுமொரு தீர்வினையே பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

போடு முடக்கொற்றான் மூக்கரட்டை
காட்டுப்புகழ் கருணைக்கிழங்கு மெருகன் கிழங்கு
தேடு களக்கொட்டி யொடுவகை யொன்றுக்கு
சேர்த்திடுவாய் பலமொன்று மைபோ லாட்டி
யாடு சித்தாமணக் கெண்ணெய் யாழாக்கு
கைந்துவிடு மெழுகுபத மெரித்து வாங்கி
நாடு நிதம்பலமரை மண்டலமே கொண்டால்
நாடாது மூலவகை அனைத்தும் போமே.

- தேரையர்.

முடக்கொற்றான், மூக்கரட்டை, காட்டுக் கருணைக் கிழங்கு, மெருகன் கிழங்கு, களக்கொட்டி வேர் இவைகளில் வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்து ஒன்றாக சேர்த்து கல்வத்தில் இட்டு நன்கு மைபோல அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டுமாம். ஒரு மண் பாண்டத்தில் ஐந்து ஆழாக்கு சிற்றாமணக்கு எண்ணெய் ஊற்றி, அதில் முன்னர் அரைத்த கலவையை இட்டு நன்றாகக் கலக்கி அதனை அடுப்பில் ஏற்றி மெழுகு பதத்திற்கு வரும் வரையில் நன்கு காய்ச்சி சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

பின்னர் தினமும் இதிலிருந்து அரை பலம் வீதம் எடுத்து ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டுமாம் இவ்வாறு உண்பதனால் அனைத்து வகையான மூல நோய்களும் குணமாகும் என்கிறார். இதற்கு பத்தியம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பு :- ஒரு பலம் என்பது தற்போதைய அளவுகளில் 35 கிராம் ஆகும். ஒரு ஆழாக்கு என்பது தற்போதைய அளவுகளில் நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மூல நோய்க்கு தேரையர் அருளிய தீர்வு -1

Author: தோழி / Labels: , ,

மூல நோய் என்பது என்ன?, அதன் கூறுகள் யாவை?, நவீன அலோபதி மருத்துவமும், பழமையான நமது சித்த மருத்துவமும் இந்த நோயை எவ்வாறு அணுகி தெளிவுகளையும், தீர்வுகளையும் முன் வைத்திருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் கடந்த இரு வாரங்களாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இந்த நெடுந்தொடரின் மூன்றாவது பகுதியாக மூல நோய்க்கு நமது சித்தர் பெருமக்கள் அருளிய சில தீர்வுகளை இந்த வாரம் பார்க்க இருக்கிறோம்.

தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” எனும் நூலில் காணக் கிடைக்கும் தீர்வு ஒனறினை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

பாரப்பா மணக்கெண்ணெய் பலம் நாலைந்து 
பழச்சா ரீருள்ளிச்சாறு கத்தாழஞ் சாறு
மாரப்பா நல்மணத் தக்காளி சாறு
வகையொன்றுக் கீரைந்து பலமே வாங்கி
சேரப்பா பலமரை நற்சீரகந்தான்
திறமாக ஆட்டி எண்ணெயிலே கூட்டி
கோரப்பா மெழுகு பதமெரித்துக் கொண்டு
கொடுத்திடாய் பலமொன்று தினமாய் கொள்ளே.

தேரையர்.

கொள்ளடா தினகரனை வணங்கி
கூரியதோர் சீதமூலம் இரத்த மூலம்
உள்ளடா கடுப்பாசனக் கடுப்பும்
உள்காய்ச்சல் உள்மூலம் வெளிமூலம் போம்
மெள்ளடா புகையுடனே புளி கல்லுப்பு
மீறியதோர் பழையது மாட்டிறைச்சி மச்சம்
தள்ளடா தயிர்மோர் நெய் வன்னீ ரன்னம்
சாதிக்க நோயகலுந் தெரிந்து போடே.

தேரையர்.

ஆமணக்கு எண்ணெய் இருபது பலம், எலுமிச்சம் பழச்சாறு, குமரிச்சாறு, மணத்தக்காளி சாறு என ஒவ்வொன்றிலும் பத்து பலம் வீதம் எடுத்து ஒரு மண் பானையில் ஊற்றிக் கொள்ளவேண்டுமாம். நற்சீரகம் அரை பலம் எடுத்து அதனை நன்கு அரைத்து, மண் பானையில் உள்ள கலவையுடன்  சேர்த்து நன்றாகக் கலக்கி, பானையை அடுப்பில் ஏற்றி மெழுகு பதத்திற்கு வரும் வரையில் நன்கு காய்ச்சி எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

தினமும் காலை வேளையில் சூரியனை வணங்கி, இந்த கரைசலில் ஒரு பலம் வீதம் உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து உண்பதனால் சீத மூலம், இரத்த மூலம், கடுப்பு, ஆசனக் கடுப்பு, உட்காய்ச்சல், உள் மூலம், வெளி மூலம் போன்ற நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்கிறார் தேரையர். 

இந்த மருந்தை உட்கொள்ளும் போது பத்தியமாக புகை, புளி, உப்பு, பழைய சாதம், மாட்டு இறைச்சி, மீன் ஆகியவற்ரை நீக்கி, தயிர், மோர், நெய், வென்னீர் விட்டு பிசையப்பட்ட சாதம் ஆகியவைகளை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

குறிப்பு :- ஒரு பலம் என்பது தற்போதைய அளவுகளில் 35 கிராம் ஆகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..சித்த மருத்துவமும், மூலநோயின் வகைகளும் - 03.

Author: தோழி / Labels: , ,

சித்தர் பெருமக்கள் பகுத்துக் கூறிய இருபத்தியோரு வகையான மூல நோய்களில் இதுவரை பதின்நான்கு வகைகளைப் பற்றி முந்தைய இரண்டு பகுதியில் பார்த்தோம். அந்த வகையில் கடைசி ஏழு வகைகளான மேகமூலம், பவுத்திரமூலம், கிரந்தி மூலம், குத மூலம், புறமூலம், சுருக்கு மூலம், சவ்வு மூலம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

இந்த தகவல்கள் யாவும் யூகிமுனி அருளிய “வைத்திய சிந்தாமணி” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

15. மேக மூலம்

வினையாக லிங்கத்தில் வெள்ளை யூற்றும்
மெத்தவாய்க் குதந்தன்னி லுதிரஞ் சாய்க்கும் 
சனையாகச் சத்தமதாய்க் கழிச்ச லாகும்
தாக்கான சிறுநீரு மெரிச்ச லாகும்
பனையாகப் படுக்குங்கால் தலைவலிக்கும்
பாரமா யுடம்பெங்குந்தான் மதுர மாகும்
முனையாக மூத்திரந்தான் மதுர மாகும்
மூர்க்கமா மேகமென்ற மூலந் தானே.

இந்த வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு பிறப்புறுப்பில் இருந்து மேகம் ஒழுகுமாம். குதத்திலிருந்து இரத்தம் ஒழுகுமாம். அதிக சத்துடன் கழிச்சலுண்டாகுமாம். சிறுநீர் கழியும் போது எரிச்சல் உண்டாகுமாம். தலை வலிக்குமாம். உடல் எங்கும் திமிர்த்துப் போகுமாம். சிறுநீர் இனிப்புச் சுவையுடன் காணப்படுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது மேக மூலம் என்கிறார்.  

16. பவுத்திர மூலம்

மூர்க்கமாய்ப் பவுத்திரத்திற் கட்டி யாகி
மூத்திரந் தானடிக்கடிக்கு அருவ லாகும்
கார்த்தமாங் கால்கையுங் கனப்பு மாகும்
கனகனக்குங் குதங்குய்யஞ் சாவற் சூடு
பூர்க்கமாம் பூப்போல முளைகள் காணும்
பொருங்கோ வைப்பழம் போலச் சிவப்பு மாகும்
பார்க்கமாங் காரந்தான் போடத் தீரும்
பவுத்திரமா மூலத்தின் பண்பு தானே.

பவுத்திரத்தில் கட்டி உண்டாகுமாம். அடிக்கடி சிறுநீர் வெளியேறுமாம். கால் கை கனப்புண்டாகுமாம். குதம், குய்யம் ஆகிய இடங்களில் கோழியைப் போல சூடு எப்போதும் இருந்துகொண்டே இருக்குமாம். மாம்பூ போல முளைகள் காணப்படுவதுடன் அவை கோவைப்பழம் போல சிவந்து காணப்படுமாம்.  இந்த குணங்கள் காணப்பட்டால் அது பவுத்திர மூலம் என்கிறார்.  

17. கிரந்தி மூலம்

பண்புதான் லிங்கத்திற் புண்ணு மாகும்
பாரமாய்க் கால்கையுங்க டுப்பு முண்டாம்
குண்பதாக் குசத்துக்குள் விரண மாகிக்
கொடிக் கொடியாய் முளையுண்டாகிச் சீயும் ரத்தம்
தண்புதான் தண்ணீரும் பெருக வுண்டாம்
தணல்போல எரிவோடு கடுப்பு மாகும்
கெண்புதான் கெட்டியாய் மலம் வறண்டு
கீற்றாக வெடித்திறங்கு கிரந்தி மூலம்

ஆண் குறியில் புண் உண்டாகுமாம். கால் கை கடுப்புண்டாகுமாம். குதத்துக்குள் புண்ணாகவே இருக்குமாம். கொடிக்கொடியாக முளையுண்டாகி சீழும் இரத்தமும் துர்நீரும் வெளியாகுமாம். தீபோல எரிச்சல் தரும். கடுப்புடன் மலம் கெட்டியாக வறண்டு வெளியாகுமாம். மலத்துவரம் கீற்று கீற்றாக வெடித்து இருக்குமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது கிரந்தி மூலம் என்கிறார்.

18. குதமூலம்

இறங்குமே மூங்கிலிட்டிக் குருத்து போல
இழுத்துமே தள்ளிடிலோ வுள்ளே போகும்
பிறங்குமே சீயோடு ரத்தம் பாயும்
பெருகியே வயிறுமெத்தக் கனத்துக் கொள்ளும்
அறங்குமே கால்கையும தைப்பு மாகும்
அடிக்கடிக் குநாவரண்டு தண்ணீர் தேடும்
குறங்குமே மிகவலிக்குங் கோப முண்டாம்
கொடியகுத மூலத்திங்கு ணம தாமே

இந்த வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு மூங்கில் குருத்துபோல முளை வெளி நோக்கி இறங்கியிருக்குமாம். உள்ளே தள்ளிவிட்டால் உள்ளே போய்விடுமாம். சீழோடு இரத்தம் சேர்ந்து வெளியாகுமாம். வயிறு அதிகமாக கனத்துக் கொள்ளுமாம். கால் கை அதப்பு தருமாம். அடிக்கடி நாவறண்டு தண்ணீர் குடிக்க வேண்டியிருக்குமாம். பிட்டம் அதிமாக வலிக்குமாம். கோபமுண்டாகும். இந்த குணங்கள் காணப்பட்டால் அது குதமூலம் என்கிறார்.

19. புறமூலம்

குணமதா யெண்ணெய் போற் றண்ணீர் போலும்
கூற்றான கடுப்போடு சீயு முண்டாம்
திணமதாய்த் தினவெடுக்குந் திமிர்ப்புண் டாகும்
சிறுசிரங்காய் மேலெல்லாஞ் சொறியு மாகும்
பணமதாயா சனத்திற்ப குப்பு போலப்
பாங்காக விதனமாய்ப் படுக்கௌ கூடா
பிணமதாய் முகமெல்லாம் வாட்டமுண்டாம்
பேரான புறமூலப் புதுமை தானே

குதத்தில் இருந்து எண்ணெய் போலவும், தண்ணீர் போலவும் கடுப்புடன் சீழ் வடியுமாம். தினவு எடுக்குமாம், திமிர்வு உண்டாகுமாம். சிறுசிறு சிரங்காக மேலெல்லாம் சொறியுண்டாகுமாம். ஆசனத்தில் சிறு சிறு கட்டிகள் தோன்றியிருக்குமாம். முகம் வாட்டமுடன் காணப்படுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது புறமூலம் என்கிறார்.

20. சுருக்குமூலம்

புதுமையா யாசனத்தைச் சுருக்கிக் கொண்டு
பெருங்குடலில் வலியோடு பொரும லாகும்
கதுமையாய் குதந்தன்னிற் றடிப்புண் டாகும்
கழலுமே தண்ணீரும் ரத்தந் தானும்
வெதுமையாய் வெவ்வனல்போ லழன்று காணும்
வேற்றுடம்பாய்த் தான்வெளுத்து வெறிப்புண் டாகும்
பதுமைபோல் தேகமெங்கு மசவு கூடாப்
பண்பான சுருக்கென்ற மூலந் தானே

ஆசனவாய் சுருக்கிக் கொள்ளுமாம். பெருங்குடலில் வலியுடன் பொருமல் ஏற்படுமாம். குதத்தில் தடிப்பு உண்டாவதுடன் அனல் போல அழன்று காணப்படுமாம். தண்ணீரும் இரத்தமுமாய் வெளியேறுமாம்.  உடல் வெளுத்து வெறிப்புண்டாகுமாம். தேகம் முழுதும் அசைக்க முடியாது போகுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது சுருக்குமூலம் என்கிறார்.

21.சவ்வுமூலம்

சுருக்கியே முதுகுத்தண்டிலுற்ப வித்துத்
தொப்புளிலே தாமரைப்பூப் போல மலர்ந்து
அருக்கியே குற்றிலா கார மாக்கி
அடிவயிற்றி லோங்குமே மூல ரோகம்
சொருக்கியே சவ்வுபோலா சனத்திலே
சுற்றியே நின்றுதான் சீயுந் தண்ணீர்
பருக்கியே கசிவாகு மெந்நே ரந்தான்
பண்பான சவ்வாகு மூலந் தானே

முதுகுத் தண்டில் ஆரம்பித்து தொப்புள்வரை தாமரைப்பூ போல மலர்ந்து காரமாக அடிவயிற்றில் வலியினை உண்டாகுமாம்.  சவ்வுபோல ஆசனவாயினைச் சுற்றி காணப்படுமாம். அத்துடன் எந்நேரமும் சீழும் நீருமாகக் கசிந்து கொண்டிருக்குமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது சவ்வுமூலம் என்கிறார்.

நவீன அலோபதி மருத்துவம் உள் மூலம், வெளி மூலம் என இரண்டே பிரிவுகளாய் கூறும் ஒன்றினை நமது முன்னோர்கள் இருபத்தியோரு பிரிவாக பகுத்து கூறியிருப்பதை இது வரை பார்த்தோம். இத்துடன் இந்த தொடரின் இரண்டாம் பகுதி நிறைவடைகிறது.

இனி வரும் நாட்களில் இந்த மூல நோயினை குணமாக்கிட சித்தர் பெருமக்கள் அருளிய சில வைத்திய முறைகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..சித்த மருத்துவமும், மூலநோயின் வகைகளும் - 02.

Author: தோழி / Labels: , ,

சித்தர் பெருமக்கள் பகுத்துக் கூறிய இருபத்தியோரு வகையான மூலநோய்களில் இன்று ஆழி மூலம், தமரக மூலம், வாதமூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், வினைமூலம் பற்றிய தகவல்களையும், அறிகுறிகளையும் பார்ப்போம்.

இந்த தகவல்கள் யாவும் யூகிமுனி அருளிய “வைத்திய சிந்தாமணி” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

08. ஆழிமூலம்

சேதியாய் நீண்ட வள்ளிக் கிழங்கு போலத்
திமிர்ந்துமே யேகமுளை யாகக் காணும்
நீதியாய் நீரோடுஞ் சீயுமி ரத்தம்
நிரனிறை யாய்த் தோன்றி யேமலமுஞ் சிக்கும்
காதியாய் காரங்கள் ஏற்றி டாது
கடிய பலவீனமாந் தேகந் தானும்
ஆதியாம் அசத்ததனை பொறுத்துக் கொல்லும்
ஆழிமூ லத்தினிட ஆண்மை தானே.

இந்த வகை பாதிப்பில் நீண்ட வள்ளிக் கிழங்கு போன்று ஒரே முளையாகக் காணப்படுமாம். நீரும், சீழும், இரத்தமும் கலந்து வெளியேறுவதுடன் மலம் சிக்குமாம். காரமான உணவுகளை உடல் ஏற்றுக் கொள்ள மாட்டாதாம். உடல் பலவீன மடையுமாம்.  உடல் பலவீனத்தினைப் பொறுத்து மரணம் ஏற்படவும் சாத்தியமுண்டாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது ஆழிமூலம் என்கிறார்.

09. தமரக மூலம்

மூலமாம் பவனத்திலு லக்கைப் பூண்போல்
முதிர்ந்த தாமரைப்பூ போலலர்ந் திருக்கும்
நூலமாம் நொறுக்காகம லமுங் காணும்
நுணுக் கேறி யிரத்தமொடு திணவு முண்டாம்
வாலமாய் வயிறிரைந்து நீராய்ப் போகும்
வயிறூதிப் பசியில்லா மந்தங் காணும்
தாலமா மேல்மூச்சாய் அசதி யுண்டாம்
தமரக மாமூலத்தின் றன்மை தானே

இந்த வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு அபானத்தில் உலக்கைப் பூண்போலவும், முற்றிய தாமரைப்பூ போலவும் மூளையிருக்குமாம், மலத்துடன் இரத்தம் வெளியேறுமாம், தினவேற்படுமாம். வயிறு இரைந்து மலம் நீர்த்தன்மையாக வெளியேறுமாம். வயிறு ஊதி பசியில்லாமல் மந்தமாய் காணப்படுமாம். மேல் மூச்சுண்டாவதுடன் அசதியும் ஏற்படுமாம்.  இந்த குணங்கள் காணப்பட்டால் அது தமரக மூலம் என்கிறார்.

10. வாதமூலம்

தன்மை கோவைப்பழம் போற் குதம்சி வப்புத்
தனிலடப் பம்பூப்போல முளை வளர்ந்து
கண்மை கறுப்பாய்மி ருதுவா யிருக்கும்
கடுப்போடு தினவுகுற்றல் திமிர்த்த லாகும்
வண்மை மயிர்தான்முளைத்து மலஞ்சிக் கென்று
மகத்தாகக் கறுத்துமெத்த திரண்டு காணும்
வெண்மை வயிற்விட்டுமே குடலுள் வலியாகும்
மிக்க தலைவலிவாத மூல மாமே

இந்த வகை பாதிப்பு உள்ளவர்களுக்கு குதம் கோவைப் பழம் போல சிவந்து காணப்படுமாம். அடப்பம்பூ போல முளை வளர்ந்து கருப்பாய் மிருதுவாக இருக்குமாம். கடுப்பு, தினவு, குத்தல், திமிர்த்தல் ஆகியன காணப்படுமாம். அபானத்தில் ஆதிக மயிர் முளைக்குமாம். மலம் கறுத்து அதிகமாக திரண்டு இருக்குமாம். வயிற்றில் குடலுக்குள் வலியெடுப்பதுடன் அதிக தலைவலியும் உண்டாகுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது வாதமூலம் என்கிறார்.

11. பித்தமூலம்

தலைவலிதான் மிகவுண்டாம்ப ருத்திக் கொட்டை
தன்போலு நெற்போலுமு ளையுண் டாகும்
மலைவலியாய் மலஞ்சிக்கி உருண்டு ருண்டு
மாவுண்டை திரிதிரியாய் ரத்தஞ் சீயாய்
குலவலியாய் குதங்கடுத்து எரிவு மாகிக்
கூச்சமாய் தாகமொடு வியர்வை யாகும்
தலைவலியா யத்துயக்குமாய்க் கோப மாகும்
சொற்பல வீனமும்பித்த மூல மாமே

இந்த வகை மூலநோய் உள்ளவர்களுக்கு தலைவலி அதிகம் உண்டாகுமாம். பருத்திக் கொட்டை போலவும், நெல்போலவும் முளையுண்டாகுமாம். மலம் சிக்கி உருண்டு உருண்டு, மாவுருண்டைபோல திரி திரியாய் இரத்தமும் சீழும் கலந்து வெளியேறுமாம். குதம் கடுத்து எரிவுண்டாகுமாம். தாகமும் வியர்வையும் உண்டாகுமாம், தலைவலி அதிகம் இருப்பதனால் கோபமுண்டாகுமாம். உடலைப் பலவீனமமாக இருக்குமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது பித்தமூலம் என்கிறார்.

12. சிலேத்தும மூலம்

ஈனமாங் குதத்தில் முளை வெள்ளை யாகும்
எந்நேரத்தி னவதிக மெரிவு மாகும்
கானமாங் கடுப்புடனே சீயுந் தண்ணீர்
கனமான வலியாகி மலந்தா னோங்கும்
தூனமா மூத்திரந்தான் சூடுண் டாகும்
சொற்குண பேதகமாகுந் தாது நஷ்டம்
பானமாம் பாண்டுவொடு அருசி யாகும்
பரவு சேட்டுமமூலப் பாங்கு தானே

குதத்தில் வெள்ளை நிறத்தில் முளையுண்டாகுமாம். எந்த நேரமும் அதிக எரிவுண்டாகுமாம். கடுப்புடன் சீழும் தண்ணீரும் சேர்ந்து அதிக வலியுடன் மலம் வெளியேறுமாம். சிறுநீர் அதிக சூட்டுடன் வெளிவருமாம். சுக்கில நட்டமும், பாண்டு நோயும் உண்டாகும். உண்ணும் உணவின் சுவையினை உணர்ந்து கொள்ள முடியாதிருக்குமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது சிலேத்தும மூலம் என்கிறார்.

13. தொந்த மூலம்

பாங்கான குதமிறுகிக் கோழிச் சூடு
பதித்ததுபோற் றானிருக்கும் நடக்க வொட்டா
வாங்கான வயிறுமெத்தப் பொரும லாகும்
வருத்தமொடு வியர்த்துமே மிஹ நடுக்கும்
தாங்கான தவித்துமே தாக மாகும்
தரியாமல் வயிறதுவும் பேதி யாகும்
தீங்கான செடமட்டை போற்சு ருக்கும்
திடுக்குமே தொந்தம்மென்ற மூலந் தானே

குதம் இறுகிக் கோழியில் சூடு இருப்பதைப் போல் சூடாயிருக்குமாம். நடக்க இயலாது இருக்குமாம். வயிறு அதிக பொருமலுடன் காணப்படுமாம். அதிக வியர்வையும் மிக நடுக்கமும் உண்டாகுமாம். தாகம் அதிகமாக இருக்குமாம். வயிறு பேதியாவதுடன் உடல் அட்டைபோல் சுருங்கிப் போகுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது தொந்த மூலம் என்கிறார்.

14. வினைமூலம்

திடுக்கிட்டுச் சோறுசெரி யாமை யாகும்
தீபனந்தா னில்லாமற்பி ளித் தே க்காகும்
அடுக்கிட்ட அடிவயிற்றிற் குற்ற லுண்டாம்
ஆங்காரக் கோபமொடு மலமுங் கட்டும்
கடுக்கிட்ட கைகாலு மோச்ச லாகும்
கனமாக வயிறிரைந்து காந்த லுண்டாம்
வெடுக்கிட்டு நரம் பெல்லா மிசிவு மாகும்
மிகக்கடுக்கும் வினைமூல விபரந் தானே

உண்ணும் சோறு செரிக்காமல் புளித்த ஏப்பம் உண்டாகும். அடிவயிற்றில் குத்தல் உண்டாகுமாம். மலமும் கட்டுமாம், கைகால் ஓச்சலாகுமாம். வயிறு இரைந்து காந்தல் உண்டாகும். நரம்பெல்லாம் வலிப்பு தோன்றுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது வினைமூலம் என்கிறார்.

நாளைய பதிவில் அடுத்த ஏழு வகையான மேகமூலம், பவுத்திரமூலம், கிரந்தி மூலம், குத மூலம், புறமூலம், சுருக்கு மூலம், சவ்வு மூலம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..சித்த மருத்துவமும், மூலநோயின் வகைகளும் - 01.

Author: தோழி / Labels: , ,

சித்தர் பெருமக்கள் இருபத்தியோரு வகையான மூல நோய் இருப்பதாய் பகுத்துக் கூறியிருப்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். அவை முறையே...

நீர்மூலம், செண்டுமூலம், மூளைமூலம், சிற்று மூலம், வரள் மூலம், இரத்த மூலம், சீழ்மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாதமூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், வினைமூலம், மேகமூலம், பவுத்திரமூலம், கிரந்தி மூலம், குத மூலம், புறமூலம், சுருக்கு மூலம், சவ்வு மூலம் என்பன ஆகும்.

இன்றைய பதிவில் முதல் ஏழு வகை  மூல நோய்களைப் பற்றியும் அதற்கான அறிகுறிகளைப் பற்றியும் பார்ப்போம். இந்த தகவல்கள் யாவும் யூகி முனி அருளிய “வைத்திய சிந்தாமணி” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

01. நீர்மூலம்

சுருபங்கேள் தொப்புளிலே மிகவ லித்துச்
சுருண்டுமே கீழ்வயிற்றைப் பொருமிக் கொண்டு
வருபங்கேள் மலம்வறண்டு வாய்நீரூறும்
வாய்வுதான் பரிகையிலே நுரைபோற் காணும்
துருபங்கேள் பிடவைதனிற் றோய்வு மாகும்
சுருக்காக மலம்வருதல் போலி றுக்கும்
நிருபங்கேள டிக்கடிக்கு நீராய்ப் போகும்
நிலையான நீர்மூலம்நி னைவாய்ப் பாரே.

இந்த வகை மூலநோய் பாதிப்புள்ளவர்களுக்கு தொப்புளில் அதிக வலியிருக்குமாம். கீழ்வயிற்றை சுருட்டி பொருமிக் கொள்ளுமாம். மலம் வறண்டு போகுமாம். வாயில் நீர் ஊறுமாம். வாய்வு வெளியேறும் போது நுரைபோல காணப்படுவதுடன் உடுத்தியிருக்கும் ஆடைகளிலும் அவை படுமாம். அடிக்கடி மலம் வருவது போலிருக்குமாம். ஆனால் மலமாக வெளியேறாமல் நீராக போகுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது நீர்மூலம் என்கிறார்.

02. செண்டு மூலம்

நினைவாகக் கருணையிட முளையே போல
நிமிர்த்தெழுந்து நாள்மூன்று நிற்ப மாகி
கனவாகக் கன்றியேமி கவ லிக்கும்
காரந்தான் போட்டவுடன் களையாய் வீழும்
இனவாக இரத்தமொடு தண்ணீர் காணும்
இறுகியே மலந்தீயு மிரைச்ச லாகும்
தினவாக வாசனத்தைச் சுருக்கிக் கொள்ளும்
செயசெண்டு மூலத்தின் றிறமை தானே

இந்த வகை மூலநோயானது கருணைக்கிழங்கின் முளைபோல தோன்றி, அது மூன்று நாளில் கன்றிப்போய் வலிக்குமாம். காரசிகிச்சை செய்தால் விழுந்து விடுமாம். இரத்தமும் தண்ணீரும் வருமாம். மலம் இறுகிப் போகுமாம். இரைச்சலுண்டாகுமாம். ஆசனவாயை சுருக்கிக் கொள்ளுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது செண்டு மூலம் என்கிறார்.

03. முளைமூலம்

திறமாக வாசனத்திற் கடுப்பு முண்டாம்
திரட்சியாய் தடித்தெரிவு செயலுங் காணும்
அறமாக வடிவயிறு கல்லு போலாம்
ஆசனந்தான் மிகச்சுருங்கித் தினவு முண்டாம்
குறமாகக் குதிகொள்ள ரத்தப்பீ ரிறங்கும்
கூசாத இரைச்சல்மிக வெப்ப முண்டாம்
மறமாக மஞ்சள்முளை போலெ ழும்பும்
மலந்தீயு முளைமூல வண்மை தானே.

ஆசனத்தில் கடுப்புண்டாகுமாம். ஆசன வாய் தடித்து திரட்சியாகி எரிவுண்டாகுமாம். அடிவயிறு கல் போலாகுமாம். ஆசனவாய் மிகச்சுருங்கி தினவெடுக்குமாம். மலம் கழிக்க உட்கார்ந்தால் இரத்தம் பீறிடுமாம். இரைச்சல் அதிகமுண்டாகுமாம். ஏப்பம் அதிகமாகுமாம், மஞ்சள் முளைபோல கட்டி எழும்புமாம். மலம் தீய்ந்துபோகுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது முளைமூலம் என்கிறார்.

04. சிற்றுமூலம்

வண்மையா யுடம் பெரியும் மயக்க மாகும்
வயிறுதான் பளபளென்னும் வலுவாய் குற்றும்
இண்மையாய் குறுகுறென்றே இரைச்ச லாகும்
இசிவுடனே பொருமலாயி ளைப்பு மாகும்
திண்மையாய்ச் சித்துமுளை பலவுண் டாகும்
தேகமெங்கும் வெளுப்பாகுஞ் செயலுங் காணும்
வெண்மையாய் வெளுத்துமே பசியி ராது
மேனி கண்ணுஞ் சிற்றுமூல மிடுக்குந் தானே.

இந்த வகை மூல நோய் பாதிப்பில் உடல் எரிவும் மயக்கமும் உண்டாகுமாம், வயிறு பளபள என்று குத்தலெடுக்குமாம், குறுகுறென்று இரைச்சலும் உண்டாகுமாம். பொருமலுடன் இளைப்பும் உண்டாகுமாம். ஆசன வாயில் சிறிய முளைகள் பல உண்டாகுமாம். தேகம் முழுதும் வெளுத்து காணப்படுவதுடன் பசியும் இருக்காது என்கிறார். இந்த குணங்கள் காணப்பட்டால் அது சிற்றுமூலம் என்கிறார்.

05. வரள் மூலம்

மிடுக்காக மலத்தையே யிறுக்கிக் கொள்ளும்
மிகுவாக ரத்தமது துளியாய் வீழும்
அடுக்காகச் சடமுலர்த்தி யழல் கழிக்கும்
ஆண்மைதான் மிகப்பேசிச் சண்டை கொள்ளும்
உடுக்காக வுள்ளிருக்கு முளைகள் தானும்
ஒருவருக்குந் தெரியாது ஒடுக்கி வைக்கும்
திடுக்காக நாள்தனிலே பெலன் குறைக்கும்
செயலழிக்கும் வரள்மூலச் சேதி தானே

இந்த வகையில் மலம் இறுகிக் கொள்வதுடன் இரத்தம் துளித்துளியாய் விழுமாம். உடல் உலர்ந்து சூடாக இருக்குமாம். மிகவும் பேசி சண்டையிட வைக்குமாம். ஆசனவாயின் உள் இருக்கும் முளை வெளியில் தென்படாது என்றும் நாள் ஆக ஆக உடல் பலம் குறையுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது வரள் மூலம் என்கிறார்.

06. இரத்த மூலம்

சேதியாய் தொப்புள்தனில் வலித்து நொந்து
சிறுகதிர் போற்பீறிட்டு ரத்தம் வீழும்
மேதியாய் மேனிவற்றி வெளுத்துப் போகும்
மிகக் கைகாலசந்துமே சோபை யாகும்
மாதியாய் மார்பிளக்குந் தலைநோ வுண்டாம்
மயக்கந்தான் மிகுதியாய்த் தள்ளிப் போடும்
நாதியாய் கண்ணிரண்டு மஞ்சள் போலாம்
நலியு மிரத்த மூலத்தின் நண்புதானே.

தொப்புளில் வலித்து சிறு கதிர்போல இரத்தம் பீறிட்டு வெளியேறுமாம். உடல் வற்றி வெளுத்துப் போகுமாம். கைகால்கள் அசந்து போகுமாம். சோபையை உண்டாகுமாம். தாங்க முடியாத தலைவலியும் உண்டாகுமாம். மயக்கம அதிகமாகி கீழே விழுவதுடன் கண்கள் மஞ்சள் நிறமாக காணப்படுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது இரத்த மூலம் என்கிறார்.

07. சீழ்மூலம்

நண்பாகக் குதங்கடுத்து எரிப்பு தோன்றும்
நாற்றியே சீயொடு தண்ணீர் காணும்
மண்பாக மாமிசங்கள் கரைந்து கொண்டு
வடிவமெல்லாம் வெளுத்துமே மஞ்சளாகும்
மெண்பாக மேவும்வாய் நீர தாகும்
மிடுக்கான நடைகுறைப்பு மெலிவு மாகும்
திண்பாகச் சிறுநீர்தான் மஞ்ச ளிக்கும்
சீழ்முலந் தன்னுடைய சேதி யாமே.

குதம் கடுத்து எரிச்சல் உண்டாகுமாம். நாற்றத்துடன் சீழும் தண்ணீரும் வெளியேறுமாம். உடல் மெலிந்து, வெளுத்து மஞ்சளாகுமாம். வாயில் நீர் அதிகமாகுமாம், அதிக தூரம் நடக்க முடியாமல் இருப்பதுடன் சிறுநீர் மஞ்சளாக  வெளியேறுமாம். இந்த குணங்கள் காணப்பட்டால் அது சீழ்மூலம் என்கிறார்.

அறிவியலும், தொழில் நுட்பமும் வளராத ஒரு காலகட்டத்தில் நமது முன்னோர்கள் ஒரு நோயைப் பற்றி இத்தனை தீர்க்கமாகவும், தெளிவாகவும் பகுத்துக் கூறியிருப்பது ஆச்சர்யமும், பெருமையும் கொள்ளத் தக்கது. நாளைய பதிவில் அடுத்த ஏழு வகையான ஆழி மூலம், தமரக மூலம், வாதமூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், வினைமூலம் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..புத்தாண்டு வாழ்த்து

Author: தோழி /


நண்பர்கள் அனைவருக்கும் உளம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

குறிப்பு : மூல நோய் தொடர் நாளை முதல் வழமை போல தொடரும்.