நன்றி நண்பர்களே!

Author: தோழி / Labels:

கடந்து போகுமிந்த ஓராண்டில் எனது பதிவுலக செயல்பாடு தொடர்பில்  சில விளக்கங்களை சொல்லிவிடுவது சரியாக இருக்கும் என்பதால் வருடத்தின் கடைசி நாளில் இந்த பதிவினை எழுத நேர்ந்திருக்கிறது.

முந்தைய வருடம் வரை கல்லூரி மாணவி. வீடு, கல்லூரி, படிப்பு, புத்தகங்கள், மடிக் கணினி, இணையம், பதிவுகள், நண்பர்கள்,  என  சிறிய வட்டத்தில் வாழ்க்கை மிக நிம்மதியாய் போய்க் கொண்டிருந்தது. அவை யாவும், இந்த வருடத்தில்  தலை கீழாய் மாறிப் போனது. குருவருளினால் படிப்பு முடிந்த கையோடு  அரசு வேலை கிடைத்து மருத்துவராக வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டியவளாகி விட்டேன். 

புதிய சூழல், நியதிகள், இலக்குகள், வேலை நிமித்தமாய் வெளியூர் பயணங்கள் என வாழ்வியல் நெருக்கடிகளுக்கு இடையே பதிவுகளை ஒழுங்கு செய்து, தட்டச்சு செய்து பகிர்வதில் ஏகப் பட்ட குளறுபடிகள். கிடைத்த சொற்ப நேரத்தில் குறைவான பதிவுகளையே இந்த ஆண்டு பகிர முடிந்தது.

மருத்துவ முகாம்கள் என்று வெளியூர் பயணங்கள் தந்த உடல் சோர்வு, மனச்சோர்வு என்றிருந்த சூழலில், சாலை விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பினாலும் பல்வேறு எலும்பு முறிவுகளினால் மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனை வாசம். இந்த காலகட்டத்தில் இணையம் பக்கம் வர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை, நடமாட முடிகிறது. இன்னமும் விடுப்பில்தான் இருக்கிறேன். இடது கை முழுமையான செயல்பாட்டிற்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

இந்த வருடம் தந்த அனுபவங்களும், படிப்பினைகளும் எதிர்வரும் ஆண்டினை புதிய உத்வேகத்தோடு எதிர்கொள்ளும் பக்குவத்தை தந்திருக்கின்றன என்றால் மிகையில்லை எனவே இந்த வருடம் போலில்லாது வருமாண்டில் இயன்ற வரையில் கூடுதல் பதிவுகளை எழுதிட திட்டமிட்டிருக்கிறேன். புத்தாண்டில் சித்தர்கள் இராச்சியம் தவிர "இதுதமிழ்" இணைய தளத்திலும் எனது ஆக்கங்கள்  சிலவற்றை பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை நடந்தவை, இப்போது நடந்து கொண்டிருப்பவை , இனி நடக்க இருப்பவை யாவும் நன்மைக்கே.... எல்லாம் குருவின் திருவருள்.

தொடரும் உங்களின் மேலான புரிந்துணர்விற்கும், அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பூட்டிய கதவைத் திறக்கும் ஜாலம்

Author: தோழி / Labels: ,

பூட்டிய கதவைத் திறக்கும் இந்த ஜாலம் போகர் அருளிய "போகர் 700" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. ஜால வித்தைகளின் உண்மைத் தன்மை மற்றும் அவை அருளப் பட்டதன் நோக்கம் தொடர்பில் பலருக்கும் பல்வேறு வகையான விமர்சனங்கள் உண்டு. நமது நோக்கம் தகவல் பகிர்வு மட்டுமே என்பதால், இந்த பதிவினை அந்த அளவில் மட்டும் அணுகிட வேண்டுகிறேன்

இனி போகரின் வரிகளில் தாழிட்ட கதவைத் திறக்கும் ஜாலத்தை பார்ப்போம்.

மறந்திடாது ஆதிவாரம் தன்னை ஓர்
   மைந்தனே கல்லெலியின் வளைதான் ஒக்கே
வளைநோக்கி ஆதிநாளிரவு தன்னில்
   மைந்தனே அவ்விடத்தில் சென்றே நீதான்
வளைதேடி தீபத்தை ஏற்றி வைத்து மறைந்து
   வாயிலே கவ்விக் கொண்டோடும் போது
வளைமூடி அடைத்திருந்த கற்கள் எல்லாம்
   மைந்தனே மேலோடிப் போமே

போமென்ற கல்லெலிதான் வெளியில் வந்து
   புகழ் பெரிய வேரதனைக் கக்கி வைக்கும்
ஆமென்ற இரை தேடி மேயப் போகும்
   அச்சமயம் தீபத்தை வெளியில் விட்டு
தாமென்ற வகைஎடுத்து சாம்பிராணியின்
   தனித் தூபம் காட்டி வேரதனைக் கொண்டு
காமென்ற தாள் பூட்டும் கதவின் முன்னே
   காட்டினால் தான் திறக்கும் புதுமைதானே

எலிகளில் மூஞ்சூறு, சுண்டெலி, பெருச்சாளி, வெள்ளெலி, கல்லெலி, சரெவெலி, வயல் எலி, வீட்டெலி என பல வகைகள் உண்டு. போகரின் இந்த ஜாலத்தில் குறிப்பிடப் படும் எலியின் பெயர் கல்லெலி என்பதாகும். இவை பெரும்பாலும் வயல் வரப்புகளில் வளை அமைத்து வாழக் கூடியவை. மற்ற எலிகளைப் போல் இல்லாமல் இவை  தங்கள் வளைகளின் வாசலை சிறு கற்களைக் கொண்டு மூடி இருக்குமாம். அதனலால் இந்த எலிகள் கல் எலி என அறியப் படுகிறது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை இரவில், கல்லெலியின் வளையைத் தேடிக் கண்டுபிடித்து அதன் அருகே ஒரு  தீபத்தை ஏற்றி மறைத்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டுமாம்.வளைக்குள் இருந்து இரை தேடி வெளியே கிளம்பும் கல்லெலியானது தன் வாயில் ஒரு மூலிகை வேரினை கவ்விக் கொண்டு கிளம்புமாம். வளையின் வாயிலை எலி நெருங்கியதும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கற்கள் எல்லாம் உருண்டோடி வளையின் வாசல் திறந்து கொள்ளும் என்கிறார்.

 வெளியில் வந்த கல்லெலி தன் வாயில் இருக்கும் மூலிகை வேரைக் கக்கி விட்டு இரைதேடிப் போய்விடுமாம். இந்த சமயத்தில் தீப ஒளியின் துணையோடு அந்த வேரைக் கண்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இந்த வேருக்கு சாம்பிராணித் தூபம் போட்டு  பூட்டியிருக்கும் கதவின் முன்னே காட்டிட  பூட்டியகதவு தானாக திறந்து கொள்ளும் என்கிறார்.

ஆச்சர்யமான ஜாலம்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வசிய திருநீறு...

Author: தோழி / Labels: ,

கோவிலில் இறைவனை தரிசித்த பிறகும், பெரியவர்கள், ஆன்றோர்களை சந்தித்து விடை பெறும்போதும் அவர்கள் விபூதி வழங்கி ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கால ஓட்டத்தில் பெரியவர்களிடம் விபூதி வாங்கிடும் பழக்கம் அருகி விட்டாலும், கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இந்த விபூதியானது அதனை அணிந்து கொள்கிறவர்களை  தீவினைகளில் இருந்து காப்பாற்றும் கவசமாய் இருப்பதுடன், செல்வத்தையும் தருகிறது. இது பொது விதியாக இருந்தாலும், சிலர் தங்கள் தேவைகளை, லட்சியங்களை நிறைவேற்றிடும் பொருட்டு வசிய விபூதியை உருவாக்கி பயன் படுத்தி இருக்கின்றனர்.

இத்தகைய வசிய திருநீற்றைத் தயாரிக்கும் பல்வேறு முறைகளை சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணமுடிகிறது. அப்படியான ஒரு வசிய திருநீற்றினை தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். அகத்தியரின்  "அகத்தியர் பரிபூரணம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல் இது. இதன் உண்மைத் தன்மை ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டும் அணுகிட வேண்டுகிறேன்..

கிருபையுள்ள புலத்தியனேவ சிய மொன்று
     கெணிதமுடன் சொல்லுகிறே னன்றாய் கேளு
துருவமுள்ள வுருத்திரபூமி யிலே சென்று
      சுகமாக வெந்தஅஸ்திநீயெ டுத்து மைந்தா
அருவமுள்ள அஸ்தியுடன் விஷ்ணு மூலி
     ஆதிசத்தி தன்னுடைய வேருங் கூட்டிக்
கருவையினிச் சொல்லுகிறேன்க லசப் பாலாற்
     கருணையுடன் றானரைத்தே யுண்டை செய்யே.

செய்யடா உருண்டைதனையு லர வைத்துச்
     செம்மையுட னெருவடுக்கிப் புடத்தைப்போடு
மெய்யடா சொல்லுகிறே நீறிப் போகும்
     வேகாந்த மானதொரு நீற்றை வாங்கி
வையடா சவ்வாதுடனேபு னுகு சேர்த்து
     மார்க்கமுடன் அங்கெனவே லட்ச மோதி
மையமென்ற நெற்றியிலேவி பூதி பூசி
     மார்க்கமுடன் அரசரிடஞ் சென்று பாரே.

சென்றுமிக நின்றுடனேயி ராச மோகம்
     சிவசிவா செகமோகம்ஸ்ரீவ சிய மாகும்
அண்டர் பிரானருள் பெருகிவ சிய முண்டாம்
     அப்பனே ஓம்கிலியு றீயு மென்று
பண்டுபோலி லட்சமுரு வேற்றிப் பின்னர்
     பாலகனே லலாடமிசைப் பூசிச் சென்றால்
தொண்டரென்றே சத்துருக்கள்வ ணங்கு வார்கள்
     துஷ்டனென்ற மிருகமெல்லாம்வ சிய மாமே.

ஆதி குருவான சிவன் விரும்பி வசிக்கும் பூமியான இடுகாட்டிற்குச் சென்று எரியும் சுடலையில் இருந்து  நன்கு வெந்த அஸ்தியை சேகரித்து எடுத்து வந்து, அதன் எடைக்கு சம அளவில்  விஷ்ணு கிரந்தியின் வேரினைச் சேர்த்து கல்வத்தில் இட்டு அதனோடு  தாய்ப்பால் சேர்த்து நன்கு அரைத்து உருண்டையாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த உருண்டைகளை சூரிய ஒளியில் நன்கு உலரவிட்டு எடுத்து நான்கு வரட்டிகளைக் கொண்டு புடமிட வேண்டுமாம். இதனால் அந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும் என்கிறார். இந்த திருநீற்றுடன் சவ்வாதும், புனுகும் சேர்த்து ஒரு சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். 

இந்த திருநீற்றில் இருந்து  சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "அங்" என்று லட்சம் உரு செபித்து பின்னர் அதனை நெற்றியில் பூசிக்கொண்டு அரசரிடம் சென்றால் அரசர்கள் வசியமாவார்களாம். இது இராஜவசியம் என்றும் அத்துடன் செக மோகமும் பெண்வசியமும் உண்டாகும் என்கிறார். 

மேலும் இந்த திருநீற்றில் இருந்து  சிறிதளவு எடுத்து கைகளில் வைத்துக் கொண்டு "ஓம்கிலிறீ" என்று லட்சம் உரு ஓதி நெற்றியில் விபூதியைப் பூசிக் கொள்ள வேண்டுமாம் அப்போது எதிரிகளும் வணங்கும் நிலை உண்டாவதுடன் தீங்கு செய்யும் விலங்குகளும் வசியமாகும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...அறிவை பெருக்கும் நாறுகரந்தை கற்பம்

Author: தோழி / Labels: ,

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதைப் போல,  உடல் நலம் இல்லாத காலத்தில்தான் நமக்கு உடல் நலனின் அருமை புரிகிறது.  உடல் நலமாய் இருக்கும் போது அதனை போற்றிப் பாதுகாத்து மெருகேற்றி வைப்பதன் மூலம் உடல் நோவு வரும் காலத்தில் அதில் இருந்து அதிக சிரமமோ வலியோ இன்றி மீள்வது சாத்தியமாகும்.

வரும் முன் காக்கும் விதமாய் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான பயிற்சிகளையும் மருந்துகளையும் நம் முன்னோர்கள் அருளியிருக்கின்றனர். அந்த வகையில் நம் உடல் நலனை மேம்படுத்தும் கற்பங்களை பற்றி நெடுகே பகிர்ந்து வந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று அறிவுத் திறனையும், உடல் நலத்தையும் ஒருங்கே மேம்படுத்தும் ஒரு காயகற்பம்  பற்றி பார்ப்போம்.

இன்று நாம் பார்க்க இருப்பது நாறுகரந்தை கற்பம். இந்த தகவல் "கருவூரார் பலதிரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.  கரந்தை செடி "Sphaeranthus indicus" குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் பல வகை கரந்தைச் செடிகள் இருக்கின்றன. இதில் நாறுகரந்தை என்பது எதைக் குறிக்கிறது என்பதை அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் பகிரலாம்.

இனி கருவூரார் அருளிய முறையினை பார்ப்போம்.

நெறியோடே வாழ்வதற்குக் கற்பங்கேளு
நிசநாறு கரந்தையுட கற்பந்தன்னைப்
பெருபூர்வ பட்சபிர தமையிலப்பா
கரந்தைசமூ லம்வாங்கி நிழலுலர்த்தி
வாட்டமில்லாச் சூரணமாய்ச் செய்துகொண்டு
வகையாக வெருகடிதான் நெய்யிற்கொள்ளே
தாட்டிகமா யொருமாதந் தின்பாயாகில்
சத்தியமாய் புத்தியுண்டாம் ஞானமுண்டாம்
கோட்டியில்லாக் கற்பமிது பத்தியங்கேள்
குருவையரிசிச்சாதம் நெய்யும் பாலாம் 

ஆமென்றும் மற்றொன்று மாகாதப்பா 
ஆனகற்ப மிரண்டுமா தந்தான்கொண்டால்
பூமிதனில் நடக்குமொரு வதிசயங்கள்
புகழ்பெறவே தெரியுமப்பா கெதியுந்தங்கும்
வாமமுட னரைவருடங் கொண்டாயாகில்
வகையாக மகாசித்தி யடையலாகும்
காமவலைக் குட்படவு மாகாதப்பா
கருத்தான கற்பமிந்தக் கற்பம்காணே

கேளப்பா நாழிகையோ சனைதூரம்
கெடியாகப் போய்வரலாம் கெவுனமார்க்கம்
கேளப்பா ஆகாசகெவுனம் பாய்வான்
கெவுனசித்தி யட்டசித்தி வச்சிடகாயன்
கிலேசமில்லை ஒருவருடங் கொண்டாயானால்
கிலேசமில்லை வயதுபதி னாறுதோன்றும்
கேளப்பா வருடமா யிரமிருப்பான்
கிருபையுள்ள கற்பமிது கொண்டுபாரே

வளர்பிறையில் வரும் முதல் திதியான பிரதமை திதி அன்று நாறுகரந்தை சமூலத்தினை எடுத்து நிழலில் நன்கு உலர்த்தி இடித்துச் சூரணமாக செய்து சிமிழில் சேமித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தச் சூரணத்தில் இருந்து தினமும் *வெருகடி அளவு எடுத்து நெய்யில் குழைத்து உண்ண வேண்டுமாம்.

இவ்வாறு தொடர்ந்து இரண்டுமாதங்கள் உண்டு வந்தால் புத்தியும் ஞானமும் உண்டாவதுடன் உலகில் நடப்பவைகள் அனைத்தும் தெரிய வருமாம். இந்தக் கற்பத்தினை தொடர்ந்து ஆறு மாதங்கள் உண்டால் கெவுன சித்தி, அட்ட சித்தி, வஜ்சிரகாய சித்தி போன்ற மகாசித்திகள் கிடைக்குமாம். இவ்வாறு தொடர்ந்து ஒருவருடம் உண்டால் பதினாறு வயது தோற்றத்துடன் ஆயிரம் வருடங்கள் வரை வாழலாம் என்கிறார் கருவூரார்.

பத்தியமாக மருந்துண்ணும் நாட்களில் குருவை அரிசிச் சாதமும், நெய்யும் பாலும் மட்டும் உணவில் சேர்ப்பதுடன் மற்றைய அனைத்துப் பதார்த்தங்களையும் நீக்க வேண்டும் என்கிறார்.

குறிப்பு :  சமூலம் என்பது செடியின் வேர், தண்டு, இலை, பூ, காய், விதை என அனைத்தும் அடங்கியது.  

சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காய்ந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது. 

* வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை நடக்கும் போது தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கும் மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று.

அனைவருக்கும் இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...ஈரேழு பதினாலு உலகங்களையும் பார்த்திட....!

Author: தோழி / Labels:

"ஈரேழு பதினாலுலோகம்" என்றொரு சொற்றொடரை நம்மில் பலரும் கேள்விப் பட்டிருப்போம். இந்து வேத மரபில் மொத்தம் பதின்நான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப் படுகிறது. அவை நாம் வாழும் இந்த பூமி என்கிற பூலோகத்தின் மேலும் கீழுமாய் அமைந்திருக்கின்றன. பூமியின் மேலே ஆறு உலகங்களும், பூமியின் கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்.

இந்த பதின்நான்கு உலகங்களையும் நம் கண்களால் பார்ப்பது எப்படி என்கிற தகவலைத்தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பூரணகாவியம்" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

அகத்தியர் அருளிய முறையினை பார்ப்பதற்கு  முன்னர் இந்த ஈரேழு பதின்நான்கு உலகம் பற்றி சுருக்கமாய் பார்த்துவிடுவோம்.

நாம் வாழும் இந்த பூமியின் மேலே உள்ள ஆறு உலகங்கள் பின்வருமாறு....

சத்யலோகம்
தபோலோகம்
ஜனோலோகம்
மஹர்லோகம்
சுவர்லோகம்
புவர்லோகம்

இந்த ஆறு உலகங்களின் கீழேதான் ஏழாவதாக நாம் வாழும் இந்த "பூலோகம்" அமைந்திருக்கிறது.  இனி பூமிக்குக் கீழே உள்ள ஏழு உலகங்கள் பின்வருமாறு...

அதலலோகம்
விதலலோகம்
சுதலலோகம்
தலாதலலோகம்
மகாதலலோகம்
ரஸாதலலோகம்
பாதாளலோகம்

இந்த பதின்நான்கு உலகங்களைப் பற்றியும், அதன் தலைவர்கள், அங்கு வாழ்கிறவர்கள், அந்த உலகத்தின் தன்மை என தனித்துவமான வரையறைகள் கூறப் பட்டிருக்கின்றன.  இதன் படி பூமியின் மேல் உள்ள ஆறு உலகங்கள் நன்மை தரும் உயர் நிலை உலகங்களாகவும்,  பூமியின் கீழ் உள்ள ஏழு உலகங்கள் தீய சக்திகளின் குறியீடாகவும் அமைந்திருக்கிறது.

அதாவது மேல் நிலையில் உள்ள சத்யலோகம் படைப்புக் கடவுளான பிரம்மாவின் உலகமாகவும், கீழ் நிலையில் உள்ள பாதாள உலகம் வாசுகி என்கிற பாம்பின் உலகமாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

மிகவும் விரிவாக விளக்கிட வேண்டிய ஒன்றினைப் பற்றி இயன்ற வரை சுருக்கமாய் பகிர்ந்திருக்கிறேன். ஏனெனில் நம் பதிவின் நோக்கம் இவைகளை அலசுவது இல்லை. இந்த உலகங்களை வெறும் கண்களினால் பார்க்கும் அகத்தியரின் வழிமுறை ஒன்றினை பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.

பதின்நான்கு உலகங்களைப் பற்றிய தகவல்களை  தேரையர் உள்ளிட்ட பல்வேறு சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே பகிர்ந்திருக்கின்றனர். அகத்தியர் தனது "அகத்தியர் பூரணகாவியம்" என்னும் நூலில்  சத்தியலோகம் முதல் கீழ் உலகமான பாதாள உலகம் வரை நம் கண்களினால் பார்க்கும் சக்தியைத் தரும் ஒரு மையினைப் பற்றி பின்வருமாறு விளக்கியிருக்கிறார்.

ஆமப்பா யின்னமொரு வசியஞ்சொல்வேன்
     அண்டரண்ட பதங்களெல்லா மங்கேகாணும்
நாமப்பா சொல்லுகிறோம் புலத்தியாகேள்
      நல்லகரு ஆமையிலே முன்றானாமை
ஓமப்பா குருவருளால் கண்டுதேறி
      உறுதியுடன் மனதறிவால் கருவைவாங்கி
தாமப்பா சிவந்தபட்டு தன்னால்சுத்தி
      சங்கையுடன் நெய்துவைத்த தீபமேற்றே.
ஏற்றிநன்றாய் கருகிநின்ற கருவைப்பார்த்து
      யின்பமுடன் தானெடுத்து கல்வத்திட்டு
பார்த்திபனே காரெள்ளுத் தயிலத்தாலே
      பதிவாகத் தானாட்டி வழித்துக்கொண்டு
போற்றியந்த மைக்கினிகர் சவ்வாதுசேர்த்து
      பத்தியுடன் தானிருந்து திலர்தம்போட்டால்
நால்திசையும் வெகுதூரங் கண்ணோட்டம்பார்
      நன்மையுடன் மேல்கீழும் தன்றாய்ப்பாரே.
பார்க்கயிலே அண்டவரை நன்றாய்க்காணும்
      பத்தியுடன் பூமியில் பாதாளந்தோணும்
ஏற்கவே பாதாளந் தன்னைக்காணில்
      இருநிதியு மொருநிதியா யேகந்தோணுங்
காக்கவே பெருநிதியை யகலத்தள்ளி
      கயிலாச பூரணமாய் நிதியைத்தேடு
மார்க்கமுடன் கயிலாச நிதியைத்தேட
      வந்துதடா அஷ்டாங்க வளமைதானே.   

கருஆமையில் முன்றானாமை என்றொரு வகை இருக்கிறதாம். அதை குருவருளால் கண்டு அதன் கருவை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்தக் கருவை சிவப்பு பட்டுத் துணியால் சுற்றி திரியாக செய்து கொள்ள வேண்டுமாம். அந்தத் திரியை விளக்கில் வைத்து நெய்விட்டு தீபமேற்ற வேண்டுமாம். தீபமேற்றினால் திரி எரிந்து அந்தக் கருவானது கருகி இருக்குமாம்.

அப்போது அதை எடுத்து கல்வத்தில் போட்டு காரெள்ளுத் தைலம் சேர்த்து கடைந்து எடுத்தால் மையாகுமாம். அந்த மைக்கு சம எடை சவ்வாது சேர்த்து  திலகமாக இட்டு நான்கு திசையையும் சுற்றிப் பார்த்தால் வெகு தூரம் வரை தெளிவாய் தெரியுமாம்.

அப்படியே மேலும் கீழும் நன்றாகப் பார்த்தால் மேலே பார்க்கும் போது அண்டம் வரையும், கீழே பார்க்கும் போது பாதாளம் வரையும் தெளிவாகத் தென்படுமாம். அப்போது அங்கே பாதாளத்தில் சங்கநிதி, பதுமநிதி என்னும் இரண்டு நிதிகளும் ஒன்றாகி பெருநிதியாகத் தோன்றுமாம். அப்போது அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு பூரணத்தில் மனதை நிலை நிறுத்தி கைலாய நிதியைத் தேட, அட்டாங்க வளமைகள் அனைத்தும் வந்து சேரும் என்கிறார் அகத்தியர்.

ஆச்சர்யமான தகவல்தானே!, வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


புரிந்துணர்வுக்கு நன்றி.

Author: தோழி / Labels:

நண்பர்களே,

விபத்தினால் ஏற்பட்ட எலும்பு முறிவுகளை சரி செய்யும் வகையில் மேற்கொண்ட  இரு அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தொடர்ந்த சிகிச்சைகளின் காரணமாய் கணினி பக்கம் வர இயலவில்லை. இப்போது உடல் நிலமை பரவாயில்லை என்பதால் பதிவுகளை தொடர விரும்புகிறேன். எதிர்வரும் திங்கட் கிழமை முதல் குருவருளின் துனையோடு பதிவுகளை மேம்படுத்திட முயற்சிக்கிறேன்.
 
புரிந்துணர்விற்கு நன்றி.

தோழி.

*மின்னஞ்சலில் நலம் விசாரித்திருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். :)
 


அஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்.

Author: தோழி / Labels: , ,

சித்தர் பெருமக்கள் வணங்கிய ஒரு பெண் தெய்வத்தைப் பற்றியும், அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கான மந்திரம் மற்றும் தந்திரத்தை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மரபில் வாலை என்கிற பெண் தெய்வ வழிபாடு பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். வாலை தெய்வம் எத்தனை சக்தி வாய்ந்தது, அதன் மகத்துவம் பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி". இந்த தெய்வத்தைப் பற்றிய தகவல்கள் என பார்த்தால்  அரிதாய் ஒன்றிரண்டு குறிப்புகளே எனக்குக் கிடைத்திருக்கிறது.  ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும். 

சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில்  நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர் 12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....

ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.

காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.

பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.

ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.

கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.

மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது  அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... நலம் பல தரும் "சண்முகயந்திரம்"

Author: தோழி / Labels: , ,

எதிர்பாராத நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பதிவுகளை குருவருளினால் எழுதத் துவங்கி இருக்கிறேன். அந்த வகையில் இந்தப் பதிவினை தமிழ் கடவுளாம் முருகனை பணிந்து அவரைப் பற்றிய ஒரு தகவலுடன் துவங்குகின்றேன்.

எங்கும் நிறைந்திருக்கும் இறையருளை  யந்திர வடிவில் வழிபடும் வழக்கம் நம்மிடையே காலம் காலமாய் இருந்து வருகிறது. இலங்கையில் கதிர்காமம் கோவிலில் மூலவர் யந்திரமாகவே இருக்கிறார். இது பற்றிய தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

உலோகத் தகட்டில் கோடுகளாகவும், முக்கோணங்களாகவும் கீறப்படும் இந்த யந்திரங்கள் சூட்சுமமான பல அர்த்தங்களை  தன்னகத்தே கொண்டவை.இந்த யந்திரங்களை உயிர்ப்பிக்க மந்திரங்கள் அவசியம் ஆகிறது. மந்திரங்களினால் உயிர்ப்பிக்கப் படும் யந்திரங்கள் சக்தி கேந்திரமாய் விளங்குகின்றன.யந்திரம் மற்றும் அதை உயிர்ப்பிக்கும் மந்திரம் ஆகியவற்றை அறிந்து உணர்ந்து தெளிவதையே தந்திரம் என்கிறோம்.

இத்தகைய யந்திர வழிபாட்டினைப் பற்றிய தகவல்கள் சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் இருந்து சிலவற்றை ஏற்கனவே இங்கே பகிர்ந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக இன்றைய பதிவில் அகத்தியர் அருளிய "சண்முக யந்திரம் " பற்றிய தகவலை பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தகவல் "அகத்தியர் 12 000 " என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

பாரப்பா சண்முகனார் பூசைகேளு
பத்தியுடன் முக்கோணம் பதிவாய்ச் செய்து
நேரப்பா அறுகோணந் தன்னிலேதான்
நிசமான ஓம்மென்றே நன்றாய்ப்போடு
காரப்பா அதனிடையின் வெளியிலேதான்
கருணையுடன் சரவணபவா வென்றேதான்
சேரப்பா அட்சரத்தை நாட்டிக்கொண்டு
சிவசிவா அதனைச் சுற்றி ஓம்போடே.

போடப்பா சுற்றியே ஓங்காரம்போட
நன்மையுள்ள சக்கரமுஞ் சித்தியாச்சு
வீடப்பா பிலப்பதற்கு சக்கரத்தைச்சுத்தி
விருத்தமென்ற வளையமடா மூன்றுபோடு
கோடப்பா கீற நன்றாயக் கோட்டைபோட்டு
குறிப்பாக நால்வாச லிட்டுக்கேளே.

கேளப்பா வாசலிற் தேவதையைக்கேளு
கீழ்வாசலில் பிரமனுட பீஷம்போடு
தாளப்பா தென்வாசல் மாலின்பீஷம்
தயவான மேல்வாசல் ருத்திரபீஷம்
வாளப்பா வடவாசல் மயேசன்பீஷம்
மைந்தனே வாசலிலே தேவதைகள்நாட்டி
ஆளப்பா சதாசிவன்போல் நீயிருந்துகொண்டு
அன்பாகச் சக்கரத்தைப் பூசைசெய்யே.

செய்யப்பா பூசைவிதி தன்னைநன்றாய்
செப்பமுடன் செய்வதற்குத் திருவைநோக்கி
கையப்பா கால்முகங்கள் சுத்திசெய்து
கருரணைபெற விபூதியுத் தளமாய்ப்பூசி
வையப்பா சக்கரத்தைப் பீடமீதில்
மார்க்கமுடன் தானிருத்தி வைத்துமேதான்
மெய்யப்பா தூபமொடு தீபஞ்செய்து
வேதாந்தப் புருவமதில் சிம்மென்றுநில்லே.

நில்லப்பா மனதறிவால் வணக்கமாக
நினைவாகப் சண்முகர்க்குப் பூசைசெய
சங்கையுடன் ஓம்கிலி சிம்மென்றோதே
ஒமெனவே சண்முகர்க்குப் பூசைசெய்து
சோல்லப்பா மூலமென்ற அக்கினியினாலே
சிவசிவா புருவநடுக் கமலம்நோக்கி
நல்லப்ப நல்மனதாய் நோக்கமானால்
நாதாந்த சண்முகனார் தெரிசனையாம்பாரு.

பாரப்பா யோகபூசை அறிவானந்தம்
பதிவான தீபமென்ற மனக்கண்பார்வை
நேரப்பா வாசியென்ற அமுதபானம்
நிலையான பிர்மமாமாயே மாய்கைமாழும்
கருவான சூட்சமடா நாதவித்து
காத்து மனக்கண்ணாலே தன்னைக்காணே
அட்டாங்க யோகமுடன் மௌனயோகம்
அட்டசித்து னித்தனையு மறியலாச்சே.

இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான சில முன்னெடுப்புகளும், முறைகளும் உண்டு. அதன்படியே அவற்றினை கீறிட வேண்டும்.

இந்த யந்திரத்தினை ஆறங்குல (6"x6") சதுரமான தங்கத்தால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கீறிய தகட்டினை, பீடம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை தொடங்க வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, உடல் தூய்மை செய்து,  திருநீறு அணிந்து சுகாசனத்தில்  கிழக்கு முகமாய் அமர்ந்து மனதை ஒரு முகமாக்கி, குருவை பணிந்து "ஓம்கிலி சிம்" எனும் மந்திரத்தை 108 தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டுமாம்.

தொடர்ந்து இம்மாதிரி பூசை செய்து வந்தால் யோக பூசை, அறிவானந்தம், தீபம் என்ற மனக்கண் பார்வை, வாசி என்ற அமிர்த பானம், பிரம்ம மய நிலை, மாயை நீங்குதல், நாதவித்து சூட்சுமங்கள், மனக்கண்ணால் தன்னை அறிதல். அட்டாங்க யோகம், மௌன யோகம், அட்டமா சித்துக்கள் ஆகியவை சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

ஆர்வமும், நம்பிக்கையும் உள்ளவர்கள் குருவினை பணிந்து வணங்கி முயற்சிக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...இனி தொடரும்....

Author: தோழி / Labels:

அன்புடையீர்,

ஒரு எதிர்பாராத விபத்தினால், முதுகு தண்டுவடத்தில் அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சைக்கு ஆளாகி,  அதைத் தொடர்ந்து ஐந்து வார கால மருத்துவமனை வாசத்திற்குப் பின்னர் தற்போதுதான் வீடு திரும்பியிருக்கிறேன். இன்னமும் நடக்க ஆரம்பிக்க வில்லை. முழுமையாக குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகலாம். 

இதன் பொருட்டே பதிவுகளை மேம்படுத்த இயலாமல் போய்விட்டது. அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடைப் பட்ட நாட்களில் நலம் விசாரித்து நண்பர்கள் அனுப்பிய அஞ்சல்களினால் எனது மின்னஞ்சல் பெட்டி நிரம்பி வழிகிறது. அத்தனை பேரின் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி.

குருவருளினாலும், உங்கள் அனைவரின் அன்பினாலும் விரைவில் பழைய நிலைக்கு மீள்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவுகளை எதிர்வரும் செவ்வாய் கிழமையில் இருந்து வழமை போல மேம்படுத்திட முயற்சிக்கிறேன்.

தொடரும் அன்பிற்கும், ஆதரவிற்கும், புரிந்துணர்வுக்கும் நன்றி

தோழி
(தர்ஷினி)நந்தி தேவரை தரிசிக்கும் முறை!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப் படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும்  பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப் படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்திய பூரண சூத்திரம்" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப் பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு
பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக
ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்
இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து
மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி
மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு
தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்
சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.

- அகத்தியர்.

நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா
நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது
சொல்லந்த மானகுரு நாதன்றானும்
சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு
நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா
நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு
சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா
தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.

- அகத்தியர்.

சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து,  திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப் படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம். 

இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட  சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்

ஆச்சர்யமான தகவல்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...ஆசை விடவிட ஆனந்த மாகுமே!

Author: தோழி / Labels: , ,

நாம் பிறந்த நொடியில் இருந்து கடைசி மூச்சு வரை எப்படி காற்றின் தேவை அவசியம் ஆகிறதோ, அப்படியே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு தேவை அவசியமாகவும், அத்யாவசியமாகவும் ஆகிப் போகிறது. அந்த வகையில் தேவைதான் மனித வாழ்வின் ஆதாரம்.  தேவைகளே நம் வாழ்வின் அத்தனை தேடல்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இந்த தேடல்கள் எப்போதும் ஒரு தொடர் கதையைப் போலத்தான், முடிவடைவதே இல்லை. ஒரு தேவை பூர்த்தியானால், அடுத்தடுத்த தேவையை இலக்காக்கிக் கொண்டு நகர்கிறது. இந்த பயணத்தையே நாம் ஆசை என்கிறோம்.  

இந்த தேவைகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இது அவரவர் வளரும் சூழலைப் பொறுத்தவை.சிலருக்கு பணத்தின் மீது ஆசை, சிலருக்கு பகட்டான வாழ்க்கையின் மீது ஆசை, வேறு சிலருக்கோ வீடு வாசல் நிலம் இவைகளின் மீது ஆசை, இந்த ஆசைகள் எல்லாம் நமக்கு தேவையான, தகுதியான ஆசையாகவே இருக்கின்றவரையில் அதிகம் பிரச்சினை வராது. இது அளவு மீறி  தீவிரமாக வெளிப்படும்போது கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பித்து விடும்.அளவுக்கு மீறிய ஆசைகளே நம் அத்தனை துயரத்திற்கும் காரணம் என்கிறார் கௌதம புத்தர். பேராசை பெரு நஷ்டம் என்கிறது நம் முதுமொழி.

தேவை ஆசையாக மாறி, அந்த ஆசைகளே நம்முடைய முழுமுதற் தேவையாகிப் போகிற நிலையில் தான் நமது மனநிம்மதி போய்விடுகிறது. அதற்காக ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும் என்கிற கேள்வி வரும். யாரும், எதற்கும் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைக்கு அடிமையாகிவிடக்கூடாது. ஆசை என்பது அடுப்பில் எரிகின்ற தீயைப்போல அடக்கமாக இருக்கவேண்டும். நெருப்பு அடுப்பிற்குள் அடங்கி எரியும் போது சமையல் ஆகும். ஆனால் அந்த நெருப்பே எல்லையை மீறி கூரை வரையில் எரிந்தால் வீடே சாம்பலாகி விடும் இல்லையா.

இதைத்தான் குதம்பைச் சித்தர் பின்வருமாறு சொல்கிறார்.

பொருளாசை உள்ளஇப் பூமியில் உள்ளோர்க்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி

பேராசை கொண்ட மனிதர்கள் வாழும்போதே அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அளவுக்கு மீறிய பொருளாசை கொண்டவர்களுக்கு நரகம் இங்கேயே கிடைத்து விடுகிறது  என்கிறார் குதம்பைச் சித்தர்.தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் அடிக்கடி அவமானத்திற்கு ஆளாவதையும், பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பதையும் பார்க்கலாம். எனவே ஆசையை அறுப்பதே ஆனந்ததிற்கு சிறந்த வழி என்கிறார் திருமூலர்.

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்.... எனவே தகுதிக்கு மீறிய ஆசைகளை தவிர்ப்பதன் மூலம் வாழும் நாட்களை நிம்மதி நிறைந்ததாக்கி  வாழ்வோம். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...தும்பிக்கையான் பாதம் பணிவோம்!

Author: தோழி / Labels: , ,

"காணபதம்" அல்லது கணாபத்யம் என்றழைக்கப் படும் மரபின் தனிப் பெருங்  கடவுளான விநாயகரின் அவதார தினம் இன்று. ஒவ்வொரு வருடம் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி விநாயகரின் அவதார தினமாக கொண்டாடப் படுகிறது. ஆறு வெவ்வேறு வழிபாட்டு மரபுகள் ஒன்றிணைந்து இந்து மதமாய் உருவெடுத்த போது விநாயகர் இந்து மதத்தின் முழு முதற் கடவுளாக அங்கீகரிக்கப் பட்டார். 

ஓம்காரத்தின் சூட்சும வடிவம்தான் விநாயகர் என்று சொல்வோரும் உண்டு. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த விநாயகரை சித்தர் பெருமக்களும் போற்றித் துதித்தனர். அநேகமாய் சித்தர் பெருமக்கள் அனைவருமே தாங்கள் அருளிய நூல்களின் முதல் பாடலில் விநாயகரை துதித்துப் போற்றியே துவங்கியிருப்பது சிறப்பு. இது தொடர்பான தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் இந்த இணைப்பில் அவற்றை காணலாம்.

விநாயகரின் அவதார தினமான இன்று  அகத்தியர் அருளிய "கணபதி யந்திர" வழிபாட்டு முறை ஒன்றினைப் பற்றிய தகவலை பகிர்வது பொருத்தமாய் இருக்கும். இந்தத்  தகவல் அகத்தியர் அருளிய “அகத்தியர் பரிபூரணம்” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

பாரப்பா சிவயோகம் பூரணமேயாகும்
பத்திகொண்டு பூரணமே கெதியென்றெண்ணி
நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
சகல உபசாரமதாய்ப் பூசைபண்ணி
போத்திநன்றாய்ப் பூரணத்தில் மனதைநாட்டி
புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேள்
பார்த்திபனே ஓம் நமோகுரு கிலியும்
ஸ்ரீகுரு கணபதி சுவாகாவென்று
புத்தியுடன் பதினாறு உறுவே செய்தால்
நேத்திரத்தின் பேரொளிபோல் மூலநாயன்
நிச்சயமாய் உனதுவசம் வசியமாமே.

ஆமப்பா கணபதியை வசியம்பண்ணி
அதன்பிறகு அஷ்டாங்க யோகம்பார்த்தால்
தாமப்பா தன்வசமா யஷ்டகர்மம்
சச்சிதா னந்த பூரணத்தினாலே
ஓமப்பா அறுபத்து நாலுசித்தும்
உண்மையுடன் தானவனாய்த் தானேசெய்வாய் .
வாமப்பா பூரணத்தின் மகிமையாலே
வரிசையுட னட்டாங்க வரிசைகேளே.

இந்த பாடல்களில் உள்ள தகவல்களைக் கொண்டு வரையப் பட்ட யந்திரத்தை கீழே உள்ள படத்தில் காணலாம்.
இந்த யந்திரத்தினை மூன்று அங்குலம் சதுரமான வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிடலாம். இதற்கு  செப்பாலான ஆணியினை பயன் படுத்திட வேண்டுமாம். உடல் சுத்தியுடன் கிழக்கு முகமாய் அமர்ந்து குருவினை வணங்கி, இந்த யந்திரத்தை தகட்டில் கீறிட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

இவ்வாறு கீறிய தகட்டினை தாம்பாளம் ஒன்றில் பட்டுத் துணி விரித்து, அதில் வைத்து செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பூசைகளை செய்ய வேண்டுமாம். விளக்கேற்றி வைத்து, கிழக்கு முகமாய் அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 16  தடவைகள் செபித்து மலர் தூவி பூசைகளை செய்திட வேண்டும் என்கிறார்.

"ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீ குரு கணபதி சுவாகா" 

இம்மாதிரி பூசை செய்து வந்தால்  கணபதியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும், அதன் பின் அஷ்டாங்க யோகம் செய்தால் அவை சித்தியாகும் என்கிறார். மேலும் இதனால் அறுபத்தி நான்கு சித்தும் கைகூடிவரும் என்கிறார் அகத்தியர். இது போன்று விநாயக வணக்கதின் முக்கியதுவத்தும் சித்தர் இலக்கியங்களில் நிறையவே விரவிக் கிடக்கிறது. 

இந்த நல்ல நாளில் விநாயகப் பெருமானின் பாதம் பணிந்து அவரது பேரருள் நம் எல்லோருடைய வாழ்விலும் நிலைத்திருக்க வேண்டி வணங்கிடுவோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...கருவூரார் ஜாலம்!

Author: தோழி / Labels: , ,

சித்தர் பெருமக்கள் தங்கள் பாடல்களின் ஊடே கூறியுள்ள பல விஷயங்கள் நம்புவதற்கு இயலாததாகவும், நம்மை ஆச்சர்யத்தின் விளிம்பில் தள்ளுவனவாகவும் இருக்கின்றன. இது போன்ற நம்ப இயலாத செயல்களை பொதுவில் ஜாலவித்தைகள் என்கின்றனர். இந்த ஜால வித்தைகளின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உரியது. அத்தகைய ஒரு ஜால வித்தையை இன்றைய பதிவில் பார்ப்போம்.

போரின் போது ஆயுதங்களினால் காயம் படாமல் தப்பிக்கும்  உபாயமாக இதை கருவூரார் அருளியிருக்கிறார். இந்த தகவல் கருவூரார் அருளிய "கருவூரார் பலதிரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

தாரணி வேரொடு தாளிப்பானைவேர்
கோரமில் லாமற் கூட்டிச்சமனாய்
பூநீரா லரைத்துக் குளிகைசெய்
குளிகை தலைகொள் குத்தேறாது
பழிபடும்போரிற் படாது வெட்டு
ஒளிவிட்டெரிந்த உயர்பாணம் மேறாது
அழிவுறாதிந்த அதிசயக் குளிகையே

- கருவூரார்.

தாரணி என்ற மூலிகையின் வேர்,  தாளிப்பானை என்ற மூலிகையின் வேர் இரண்டையும்  சம அளவு எடுத்து அத்துடன்  பூநீர் விட்டு அரைத்து குளிகையாகச் செய்து கொள்ள வேண்டுமாம். இந்தக் குளிகையினை அணிந்து கொண்டு போரிற்குச் சென்றால் குத்துகள் வெட்டுகள் அடிகள் ஆகியவற்றின் பாதிப்புக்களில் இருந்து காத்துக் கொள்ள உதவிடும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...கருவூரார் அருளிய மிருகவசியம்

Author: தோழி / Labels:

வன விலங்குகளிடம் இருந்து தமக்கு  தீங்கு ஏதும் நிகழாமல் காத்துக் கொள்ள வேண்டி உருவாக்கப் பட்ட  ஓரு உபாயமே மிருக வசியம். இயற்கையோடு இணைந்து வனாந்திரங்களில் வாழும் போது, சக உயிரினங்களோடு இணக்கமாய் இருந்திட இந்த கலை பயன்பட்டிருக்கிறது. இதைத் தாண்டி இந்த மிருக வசியங்களுக்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இப்போதும் கூட மலைவாழ் மக்கள்  இது போன்ற சில உபாயங்களை பழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.

சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே மிருகவசியம் பற்றி ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அநேகமாய் பெரும்பாலான சித்தர்கள் இது தொடர்பில் ஏதேனும் ஒரு தகவலை தங்கள் பாடல்களில் கூறியிருக்கின்றனர். அத்தகைய சில மிருக வசிய உபாயங்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம்.

இன்று நாம் பார்க்க இருப்பது கருவூரார் அருளிய மிருக வசியம். இந்த தகவல் "கருவூரார் வாதகாவியம்" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல் பின்வருமாறு...

பாரப்பா வெண்குன்றி மூலம் வாங்க 
பாங்கான அமாவாசை நாள் தன்னில்
நேரப்பா மந்திரந்தான் வம்வம் வசிவசி
நிறைமிருக வசீகரி ஓமென்று போற்றி
பேரப்பா பிடுங்கியதை வாயில் இட்டு
பேசவே மிருக வசீகரங் காணும்.

- கருவூரார்.

நிறைந்த அமாவாசை நாளில் வெண்குன்றி மூலிகைச் செடியினை கண்டறிந்து,  "வம்வம் வசிவசி மிருக வசீகரி ஓம்" என்ற மந்திரத்தினைச் செபித்து அந்த செடியின் மூலத்தை எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். (மூலம் என்பது பச்சையாக பிடுங்கப் பட்ட வேர் ஆகும்.)

பின்னர் வன விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில், இந்த வேரினை வாயில் அதக்கி வைத்துக் கொண்டு மிருகங்களுடன் பேச அவை வசியமாகுமாம் என்கிறார் கருவூரார். இப்படி செய்வதன் மூலம் எந்த வகையான வன விலங்குகளிடம் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாமாம். 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..கிருஷ்ண ஜெயந்தியும், இரண்டு தகவல்களும்!

Author: தோழி / Labels: ,

வசுதேவர் - தேவகி தம்பதியரின் எட்டாவது மகன், தன்னுடைய தாய்மாமன் கம்சனை வீழ்த்தியவர், துவாரகையின் அரசர், மகாபாரத கதையின் சூத்திரதாரி, எல்லாவற்றிற்கும் மேலாக காக்கும் கடவுளான மஹா விஷ்ணுவின் அவதாரம் என பலவாகிலும் கொண்டாடப் படும்  பகவான் கிருஷ்ணருடைய பிறந்த தினம் இன்று. தமிழகத்தை விடவும் வட இந்தியாவில் கிருஷ்ணரின் ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் கூட கிருஷ்ணரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் காணக் கிடைக்கிறது. இவரை "துவரை கோமான்" என்றும், கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் தமிழ் சங்கத்தில் கலந்து கொண்டவரென்றும் அந்தக் குறிப்புகள் கூறுகின்றன. இத்தனை சிறப்பு வாய்ந்தவரைப் பற்றி நமது சித்தர் பெருமக்கள் ஏதேனும் கூறியிருக்கின்றார்களா என தேடிய போது கிடைத்த இரண்டு தகவல்களை இன்றைய தினத்தில் பகிர்ந்து கொள்வது பொறுத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

பகவான் கிருஷ்ணரின் ஆசிரமம் ஒன்று இருந்ததாகவும், தான் அதனை தரிசித்ததாகவும் போகர் தனது "போகர் 7000" என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பாடல்கள் பின்வருமாறு...

பழுதுபடாத் திருமேனிக் காவலாரே
பாருலகில் பள்ளி கொண்ட நாயனாரை,
முழுதுமே ஆழியது கோட்டை சுத்தி
மோனமுடன் குளிகை கொண்டு நிற்கும்போது
எழிலான ஆசிரமம் அங்கே கண்டேன்
வண்மையுள்ள கிருஷ்ணன் ஆசீர்மம்தானே.

தானான துவாரகையாம் அப்பா
தாக்கான கிருஷ்ணரவர் ஆசிரமம்தான்,
தேனான திருசங்கு கோட்டைக்குள்ளே
தெரிசித்தேன் முத்தின ஆசிரமம் பின்னால்
வானான பிரிங்கி ரிஷியார் பக்கம்
வகுப்பான ஆணிமுத்துக் கோட்டை ஓரம்
மானான மகதேவன் ஆசிரமம்தான்
வையகத்தில் பார்த்தவர்கள் இல்லைதானே.

குளிகையின் உதவியுடன் தான் பல இடங்களுக்குச்  சென்றதாகவும், அப்படிச் செல்லும் வழியில் ஆழிக் கோட்டை ஒன்றைக் கண்டதாகவும், அதனைக் கண்டு அங்கே நின்ற போது மிக அழகான ஆசிரமம் ஒன்றைப் பார்த்ததாக குறிப்பிடுகிறார். அந்த ஆசிரமம்  மகாதேவனாகிய கிருஷ்ணரின் ஆசிரமம் என்கிறார்.  துவாரகை என்னும் இடத்திலுள்ள திரிசங்கு கோட்டையில் அந்த ஆசிரமம் இருந்ததாய் குறிப்பிடுகிறார். 

அகத்தியர் அருளிய  "அகத்தியர்12000" என்னும் நூலில் மஹா விஷ்ணுவை தரிசிக்கவும், மஹாலட்சுமி கடாட்சம் கிட்டிடவும் ஒரு வழிமுறையினை அகத்தியர் அருளியிருக்கிறார். அந்த பாடல் பின்வருமாறு.....

பதிவான மாலுடைய தியானங்கேளு
பண்பாக இடதுகையில் விபூதிவைத்து
நேரடா வளர்பிறைபோல் வகுத்துமைந்தா
நிசமான அதின்நடுவே ஸ்ரீம்போட்டு
காரடா ஓங்காரக் கவசஞ்சாத்தி
கருணைபெற மங்மங்சிறிங் சிம்மென்றேதான்
மாரடா நடுவெழுத்தைப் பிடித்துக்கொண்டு 
மனதாக நூற்றெட்டு உருவேசெய்யே.
உருவேற்றி நீரணிந்து கொண்டாயானால்
உத்தமனே மாயவனார் உருவேதோணும்
திருப்பூத்த லட்சுமியும் வாசமாவாள்
செகமெல்லாமுனது பதம்பணி யுமைந்தா

இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு, அதில் வளர்பிறைபோல் வரைந்து அதன் நடுவில் " ஸ்ரீம்"  என்று எழுதி அதனைச் சுற்றி ஓங்காரம் இட்டுபின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து "மங் மங் சிறிங் சிம்" என்று நூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் மாயவனாம் திருமாலின் தரிசனம் கிடைக்குமாம் அத்துடன் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த மாதிரி படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..தடங்கலுக்கு வருந்துகிறேன்.

Author: தோழி / Labels:

பணிநிமித்தமாய் வெளியூரில் தங்க நேரிட்டதால் கடந்த இரு வாரங்களாக பதிவுகளை மேம்படுத்திட இயலவில்லை. 

தடங்கலுக்கு வருந்துகிறேன். 

அடுத்த சில நாட்களில் பதிவுகள் வழமைபோல் பதிவுகளை மேம்படுத்திட முயற்சிக்கிறேன். புரிந்துணர்விற்கு நன்றி.கண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம்

Author: தோழி / Labels:

"பொன் ஆம் காண் நீ" அதாவது நம் உடலை பொன்னைப் போல ஆக்கும் தன்மையுடைய மூலிகை என்பதால் இதனை பொன்னாம்காணி என்று அழைத்தனர். காலப் போக்கில் மருவி பொன்னாங்கண்ணி ஆயிற்று. சாதாரணமாக வயல் வரப்புகளின் ஓரம், வேலிகளின் ஓரம் வளர்ந்து கிடக்கும். இது ஒரு படரும் செடியாகும். இதன் இலை, தண்டு, வேர் என எல்லா பாகங்களும் சித்த மருத்துவத்தில் அரு மருந்தாக பயன்படுகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த பொன்னாங்கண்ணி மூலிகையைக் கொண்டு தயாரிக்கப் படும் ஒரு தைலம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இந்த தகவல் யாகோபு சித்தர் அருளிய "யாகோபு வைத்திய சிந்தாமணி 700" எனும் நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

தோணாம லிராவணன் சிறையெடுத்த
தோகைபொன்னாங் கன்னிதனைப் பிடுங்கிவந்து
நாணாதே கல்லுரலி லிட்டுநைய
நலம்பெறவே திலகமுன் னெடையும்ரெட்டி
வாணாமல் வாங்கியடி பாணிரெட்டி
வகையாக யெரித்துமுடா ஊற்றிக்காய்ச்சிக்
காணாத தைலங்கள் முழுகக்கேளு
கண்களுக்கு அருந்ததியுங் காணுந்தானே.

மயிர்களைந்து தைலமது முழுகும்போது
மறுபாசிப் பயருஞ்சீ யக்காய்சேர்த்து
ஒயிலாகத் தானரைத்து முழுகிப்பாரு
உருதிபெருஞ் சிரசினுக்குக் குளிர்ச்சியாகும்
பயிலான வெள்ளெழுத்தும் மாறிப்போகும்
தைலமிந்த விதமுழுக உலகத்தோர்க்குத்
தாட்டிகவான் யாகோபு சாற்றினாரே.

பொன்னாங்கண்ணியை கல்லுரலில் இட்டு அதன் எடைக்கு இரண்டு பங்கு எள்ளையும் சேர்த்து நன்றாக இடித்து கொள்ள வேண்டும். பின்னர் இதற்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து மண் பாண்டத்தில் வைத்துக் காய்ச்சி தைலம் எடுத்து சேகரித்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை தலைக்கு வைத்து குளித்து வந்தால் கண்களுக்கு ஒளி உண்டாகும் என்கிறார். இவ்வாறு தைலம் சேர்த்து குளிக்கும் பொழுது பாசிப் பயறும், சீயக்காயும் சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்து முழுகினால் வெள்ளெழுத்தும் மாறிப் போகும் என்கிறார் யாகோபு சித்தர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


அகத்தியர் அருளிய சூரணங்கள்.

Author: தோழி / Labels: ,

தேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடுப்பிலேற்றி வறுத்து, அதனை இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கிறோம்.சித்த மருத்துவத்தில் இத்தகைய பல சூரணங்கள் கூறப் பட்டிருக்கின்றன. இவற்றில் திரிகடுகம் எனப்படும் "சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங்களை மாமருந்துகள் என்றால் மிகை இல்லை.

இந்த மூன்று பொருள்களையும்  கொண்டு திரிகடுக சூரணம், திரிகடுக லேகியம், திரிகடுக குளிகை, திரிகடுக நெய், திரிகடுக குடிநீர் என பலவகையான மருந்துகளை தயாரிக்கும் முறைகளையும் அவற்றின் சிறப்பையும், மருத்துவ குணங்களையும் முன்னரே பல பதிவுகளின் ஊடே விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்திருக்கிறோம். அவற்றை மீள் வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசித்தறியலாம். 

அந்த வரிசையில் இன்று "சுக்கு", "மிளகு", "திப்பிலி" சூரணங்களின் மருத்துவ குணங்களை தனித்தனியாக பார்க்கலாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்"  என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாடல்கள் பின்வருமாறு... 

சுக்குச் சூரணம்

பாரேநீ யின்னமொரு சூட்சங் கேளு
பாங்கான சுக்குதனைச்சூர ணமே பண்ணி
காரேநீ கரும்புச்சர்க்க ரையவ் வீதங்
கலந்துமே யிருவேளை யேழு நாளுஞ்
சேரேநீ தின்றுவர வாய்வு தீருந்
திறமான தீபன முண்டா மப்பா
ஊரெல்லா மருந்திருக்கக் காட்டிற் போய்நீ
உலுத்தரைப் போலலையாதே உண்மை கேளே.

சுக்கைச் சூரணம் செய்து, அந்த எடைக்கு சமமாக கரும்புச் சர்க்கரையை கலந்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். இம்மருந்தை ஏழுநாள் காலை மாலை உண்டு வர வாய்வு தீருவதுடன், பசியும் உண்டாகுமாம். 

திப்பிலி சூரணம்

உண்மையென்ற திப்பிலையைசூர ணமே செய்து
உகமையுடன் றேனிலேகு ழைத்துத் தின்ன
வண்மையுடன் புகைந்திருமுஞ் சேத்தும நோய்தான்
மாறியே பசியுண்டாம ருவிப் பாரு

திப்பிலியை சூரணம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட புகைந்து இருமும் இருமலும், சிலேத்தும நோய்களும் குணமடைந்து பசி உண்டாகுமாம். 

மிளகு சூரணம்

நன்மையுடன் மிளதகுதனைசூர ணமே செய்து
நலமான பசுநெய்யிற் சீனி கூட்டி
தன்மையுடன் மூன்றுநாள் அந்தி சந்தி
தானருந்த சளியிருமத வறிப் போமே.

மிளகினை சூரணம் செய்து அதனுடன் பசுநெய்யும், சீனியும் சேர்த்து மூன்றுநாள் காலை மாலை சாப்பிட சளி இருமல் ஆகியவை நீங்குமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கு - குருதிப் போக்கினை கட்டுப் படுத்திடும் தீர்வுகள்.

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் இரண்டு சங்கடங்களில் முதலாவது வலி என்றால் மற்றது அளவுக்கு மீறிய குருதிப் போக்கு. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவருக்கு மாதவிலக்கின் போது தினசரி 60 முதல் 80 மில்லி லிட்டர் அளவிற்கு குருதிப் போக்கு இருக்கும். இது மூன்றில் இருந்து ஐந்து நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் இத்தகைய போக்கு பெரும்பாலான பெண்களுக்கு இருப்பதில்லை. அதிக அளவில் குருதிப் போக்கும், ஐந்து நாட்கள் தாண்டியும் தொடரும் குருதிப் போக்கும் காணப் படுகிறது. இதனை சித்த மருத்துவத்தில் பெரும்பாடு என்றழைக்கின்றனர்.

இதற்கான தீர்வுகள் சிலவற்றையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொருவரின் உடல் வாகு, குருதிப் போக்கின் தீவிரம், வலி, மற்றும் உள்ள வேறு பாதிப்புகளைப் பொறுத்து இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி வந்து, தண்ணீர் விட்டுச் சுத்தமாகக் கழுவி எடுத்து, முழுச் செடியையும் உரலில் போட்டு இடித்து சாறு பிழிந்து கொள்ள வேண்டும். இந்த சாற்றை வடிகட்டி அதில் 4 மேசைக் கரண்டி அளவிற்கு சாறினை எடுத்து அதன்னுடன் ஆறு துளி சுத்தமான நல்லெண்ணையை விட்டு கலக்கி, சூதகம் வெளியான அன்றும், அதற்கு அடுத்த நாளும் காலையில் குடித்து விட வேண்டும்., இப்படி இரண்டு வேளை மருந்திலேயே வயிற்று வலியும் நின்று விடும். அதிக அளவில் வெளியேறிய இரத்தமும் கட்டுப்பட்டு விடும்.

தென்னை மரத்தின் பூவைக் கொண்டு வந்து சுத்தம் செய்து உரலில் போட்டு, அரிசி கழுநீர் தெளிவில் கொஞ்சம் விட்டு நன்கு இடித்து சாறு பிழிந்து எடுக்க வேண்டும். இந்த சாற்றை வடிகட்டி 4 மேசைக் கரண்டி அளவு எடுத்து, அதில் மூன்று மிளகு அளவிற்கு அரைவைச் சந்தனம் சேர்த்துக் கலக்கி சூதகம் வெளியான அன்று காலையில் குடித்து விடவேண்டும்.மறுநாளும் காலையில் இதே மருந்தினை குடித்து விடவேண்டும். இரண்டு நாள் மருந்திலேயே வயிற்று வலி நின்று விடும். இரத்தப் போக்குக் கட்டுப்பட்டு நின்று விடும்.

நாவல் மர பட்டை, அத்தி மரப் பட்டை, உதிய மரப் பட்டை, அரச மரப் பட்டை, வேல மரப் பட்டை இவைகளை சேகரித்து சுத்தம் செய்து , வகைக்கு 20 கிராம் பட்டை எடுத்து இடித்து தூளாக்கிக் கொள்ள வேண்டும். சுமார் 100 கிராம் அளவுள்ள இந்த பொடியுடன் அதற்கு ஈடாக வறுத்த பச்சரிசி மாவையும் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் எத்தகைய குருதிப் போக்கும் குணமாகுமாம்.

பருத்தியிலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி 1 அவுன்ஸ் எடுத்து, அத்துடன் அரைத் தேக்கரண்டியளவு பசு வெண்ணெய்யும் சேர்த்துக் கலக்கி காலையில் மட்டும் மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும்.

தும்பை இலையை சுத்தம் செய்து, அதில் எலுமிச்சங்காயளவு எடுத்து அதனைத் தட்டிச் சாறு பிழிந்து, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு விட்டு, மேலும் மூன்று அவுன்ஸ் அளவு நல்லெண்ணெய்யை சேர்த்து கலந்து, இந்த கலவையை காலையில் மட்டும் மூன்று நாள் சாப்பிட, பெரும்பாடு குணமாகும்.

படிகாரத்தை நன்கு கனிந்திருக்கும் நெருப்பில் போட்டால் அது கரைந்து, மறுபடி நெற்பொரி போல வெண்ணிறமாகப் பொரிந்து நிற்கும். அதை சேகரித்து அதில் வெண்ணிறமான பாகத்தை மட்டும் உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் இதில் 2 1/2 கிராமும், பூங்காவியில் 2 1/2 கிராமும் சேர்த்து அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு வெண்ணை கலந்து காலையில் மட்டும் தினசரி தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால், பெரும்பாடு குணமாகும்.

இத்துடன் மாதவிலக்கு பற்றிய  நெடுந்தொடரை நிறைவு செய்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கும் சித்தர்கள் அருளிய தீர்வுகளும் - சூதக வலி, சூதக சன்னி, சூதக கட்டி

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கின் போது வெளியேறும் குருதி கலந்த கழிவினையே "சூதகம்" என்கிறோம். இந்த சூதகம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டு சூதகம் கட்டிக் கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளான சூதக வலி, சூதக ஜன்னி, சூதக கட்டி போன்றவைகளுக்கு நம் முன்னோர்கள் அருளிய தீர்வுகளை இன்றைய பதிவில் பார்ப்போம். 

முன்னரே குறிப்பிட்ட படி தேவையும், அவசியமும் உள்ளவர்கள் இந்த தகவல்களை ஒரு வழிகாட்டுதலாக மட்டும் எடுத்துக் கொண்டு தகுந்த வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறேன்.

பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி தொடர்புடைய பாடல்களை தவிர்த்திருக்கிறேன்.

சூதக வயிற்றுவலி..

பெரும்பாலும் மாதாந்திர சூதகம் வெளிப்படும் முன்னதாக வயிற்றுவலி இருக்கும். இத்தகைய வயிற்றுவலி சூதகம் வெளிவந்தவுடன் நின்றுவிடும். சிலருக்கு சூதகம் வெளிப்படத் தொடங்கியபின் வயிற்றுவலி இருக்கும். இதற்கு பின்வரும் மருந்துகளைச் சாப்பிட்டால் குணமாகும் என்கின்றனர்.

மாவிலங்கப் பட்டையைக் அரைத்து அந்த பொடியுடன் 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். இவ்வாறு உண்டு வந்தால் சூதக வயிற்றுவலி குணமாகுமாம். 

மற்றொரு முறையில் வேலிப்பருத்தி என்னும் உந்தாமணி செடியின் கொழுந்து இலையாக ஐந்து இலையுடன், 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். சூதக வயிற்றுவலி குணமாகும். 

வேப்பம் பட்டை 10கிராம், சீரகம் 2 1/2 கிராம் இரண்டினையும் ஒரு சட்டியில் தட்டிப்போட்டு, ஒரு ஆழாக்கு தண்ணீர் விட்டு அதனை அரை ஆழாக்காக காய்ச்சி எடுத்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க சூதக வயிற்றுவலி குணமாகும் என்கின்றனர். 

சூதகச் சன்னி

அளவு மீறிய நரம்பு தளர்ச்சி , மாதவிலக்கின் போது வெளியேற வேண்டிய கழிவு குருதியில் விஷக்கிருமிகள் உண்டாகி விடுவதன் காரணத்தினாலும், அதிக அளவில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு விடுவதினாலும், இருதயம், மூளை இவைகளில் ஏதாவது பாதிப்பு இருந்தாலும், பெரும்பாடு, சூதகக்கட்டு, நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, பிரமேகம் இது போன்ற வியாதிகளின் காரணத்தினாலும், அடிக்கடி கருத்தரித்தல் காரணமாகவும், நரம்புகளின் குணம் மாறி அது சன்னியாக மாறிவிடும்.

இத்தகைய சூதகச்சன்னி ஏற்பட்டால் வலிப்பு உண்டாகும். அடிக்கடி வாய் விட்டுச் சிரிப்பார்கள். அல்லது அழுவார்கள். நர நரவென்று பற்களைக் கடிப்பார்கள். கை, கால்களை முறுக்கி ஒடிப்பது போல முறுக்குவார்கள். சில சமயம் தலையிலுள்ள கூந்தலைப் பற்றிப் பலமாக இழுத்துக் கொள்வார்கள். சில சமயம் நாக்கையும், கையையும் கடித்துக் கொள்ளுவார்கள்.சிலருக்கு இந்த வலிப்பு விட்டு விட்டு வரும். இந்த விதமான வலிப்பு இருக்கும் சமயம், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போலவும், நெஞ்சில் ஏதோ பளுவைத் தூக்கி வைத்தது போலவும் இருக்கும்.

இடது பக்க அடிவயிற்றில் இரைச்சலும், வலியும் இருக்கும். இந்தச் சன்னியின் கோளாறு, தானே ஆடி அடங்கிவிடும். புயல் அடித்து ஓய்ந்தது போல் உடல் தளர்ந்து போய்விடும். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழியும். சிறுநீர் அதிக அளவில் தெளிவாக இறங்கும். சன்னி தெளிந்து விடும். சிலர் இந்த நிலையைக் கண்டு பெண்ணுக்கு ஏதோ பேய், பிசாசு பிடித்திருக்கிறதெனக் கருதி அவளை மந்திரவாதியிடம் கொண்டு போய் அவளைப் பல வகையிலும் தொந்தரவு கொடுப்பார்களாம்.

இதற்கான மருந்தைத் தயாரித்துக் கொடுத்து வந்தால், இந்த நோய்க் குணமாகிவிடும் என்கின்றனர்.

சன்னியின் போது மயக்கமடைந்து விட்டால், துணியை சிறியதாகச் சுருட்டி நெருப்புப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை லேசாக முகரக் கொடுக்க வேண்டும். புகையை அதிகமாக்கி சுவாசத்துடன் அதிக அளவில் உள்ளே போகும்படி கொடுக்கக் கூடாது.சிறிது புகையைக் காண்பித்து விட்டு, ஓரிரண்டு சுவாசம் போய்வர விட்டு மறுபடி லேசாக காண்பிக்க வேண்டும்.

ஒரேடியாக அதிகப் புகையை உள்ளே செல்லும்படிச் செய்தால், புகை உள்ளே பந்தனமாகி அபாயத்தை உண்டு பண்ணும். எனவே, கவனமாக புகை கொடுக்க வேண்டும். ஒரு சில நிமிஷத்தில் மயக்கம் லேசாகத் தெளியும். முகத்தில் சில்லென்று தண்ணீரை அடித்து துடைத்து வீட்டால் மயக்கம் தெளிந்துவிடும்.

சூதகக் கட்டி

28 தினங்களுக்கு ஒரு முறை வெளியாக வேண்டிய சூதகமானது அதிக வாயுவின் காரணமாக கருப்பையிலேயே தங்கி, சிறிதளவு கூட வெளியேறாமல் நின்று விடும்.

இந்தச் சூதகமானது ஒன்றாகக் கட்டித் திரண்டு, உருண்டு பருமனாகி விடுமாம்.இதனை சித்த மருத்துவத்தில்உதிரக்கட்டி, சோணிதக்கட்டி, கற்பசூலை, இரத்தக்கட்டி, கர்ப்பசூலை, சூதகக்கட்டி, கற்சூலை, சூல்மகோதரம் என்று பல பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சூதமானது கர்ப்பப் பையிலிருந்து வெளியேறாமல் கட்டிவிட்டால், பிறகு வெளியேறாது. கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படக்கூடிய எல்லா குணங்களும் தோன்றும்.

அதாவது, பசிமந்தம் ஏற்படும். தேகம் வெளுக்கும். ஸ்தனத்தில் கருவளையம் தோன்றி, ஸ்தனமானது பெருத்து விம்மும். சேர்க்கையில் வெறுப்பு உண்டாகும். மார்பு துடிக்கும். ஆயாசம், வாந்தி உண்டாகும். சிலருக்கு ஸ்தனங்களில் பால் சுரக்கும். வயிறு கர்ப்பஸ்திரீ போல பெருத்துக் கொண்டே வரும்.

கருப்பையில் உள்ள சூதகக் கட்டி குழந்தைபோல அசையும், உருளும், பிரளும். இந்தக் குறிகளைக் கண்டு சில பெண்கள், தாம் கர்ப்பம் தரித்துவிட்டதாகவே எண்ணுவார்கள். சில பெண்களுக்கு பிரசவவலி போல ஏற்பட்டு இந்தக் கட்டி வெளியேறிவிடும். சிலருக்கு இது சூதகக் கட்டி என்று அறிந்து, தக்க மருந்து கொடுத்தால் வெளியேறும். 

இதைப் பற்றிய மேலும் சில விபரங்களை "மெய்க்கர்ப்பம், பொய்க்கர்ப்பம்" என்ற பதிவில் காணலாம்..

சூதக கட்டி குணமாக...

சீரகம், சக்திசாரம், நவாச்சாரம் வகைக்கு 30 கிராம். கருஞ்சீரகம், வால்மிளகு, பெருங்காயம், வாய்விளங்கம் கோஷ்டம் வகைக்கு 10 கிராம்.கடுகு, ரோகினி, வெடியுப்பு, மிளகு, இந்துப்பு, கறியுப்பு, கடுக்காய், வளையலுப்பு, கல்லுப்பு வகைக்கு 5 கிராம். இவைகளை எல்லாம் சுத்தம் பார்த்து நன்றாகக் காய வைத்து, கல் உரலில் போட்டு இடித்துத் தூளாக்கி சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொண்டு, ஒரு பெரிய முற்றின தேங்காயை எடுத்து அதன் ஒரு கண்ணைத் திறந்து, அதனுள் இந்தத் தூள்களை எல்லாம் செலுத்தி, துளைக்கு மரக்கட்டையைச் சீவி அடைத்துவிட்டு, 21/2 அடி ஆழம் பூமியைத் தோண்டி, அதில் இந்தத் தேங்காயை வைத்து, மண்ணைத் தள்ளி மூடி, புதைத்த இடத்தில் அடையாளம் வைக்க வேண்டும்.

இதைத் தயாரித்து சூரிய உதயத்தில் புதைக்க வேண்டும். ஏழாம் நாள் காலை சூரிய உதயத்தில் இதைத் தோண்டி எடுக்க வேண்டும்.

எடுத்த தேங்காயைப் பக்குவமாக தேங்காய் ஓட்டை மட்டும் உடைத்து எடுத்துவிட்டு, அதனுள் உள்ள மருந்துத் தூளுடன் தேங்காயையும் நைத்து அம்மியில் வைத்து தேன் விட்டு மைபோல அரைத்து, மெழுகுபதம் வந்தவுடன் எடுத்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு நாளைக்கு காலை, மாலை இரு வேளையும் கழற்சிக்காயளவு எடுத்துச் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.

இந்த விதமாக ஏழுநாள் சாப்பிட்டால் சூதகக்கட்டி உடைந்து வெளியேறிவிடும். பிறகு மாதா மாதம் சூதகம் ஒழுங்காக வெளியாகும். பத்தியமாக மருந்து உண்ணும் நாட்களில் ஆண் - பெண் சேர்க்கை கூடாது என்கின்றனர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்!

Author: தோழி / Labels: , , ,

இதுவரை மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்சி, அவற்றின் இயங்கியல், ஏற்படும் பிரச்சினைகள் என விரிவாகவே பார்த்து விட்டோம். இந்த தகவல்கள் யாவும் நவீன அறிவியல் நமக்கு கண்டறிந்து சொன்ன உண்மைகள். இனி நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம். மாதவிலக்கு பிரச்சினைகள் தொடர்பில் நிறைய தகவல்கள் சித்தர்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது.

இந்த தகவல்களை முழுமையாக தொகுப்பது என்பது சவாலான ஒன்று.மேலும் நிறைய நேரம் பிடிக்கும் காரியம் என்பதால், என்னால் இயன்ற அளவில் திரட்டிய தகவல்களையே இனி வரும் பதிவுகளின் ஊடே பார்க்க இருக்கிறோம். இந்தத் தகவல்கள் பலவற்றை இன்றும் நாம் கைவைத்தியம் என்கிற பெயரிலும், பாட்டி வைத்தியம் என்கிற பெயரில் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் இந்த இடத்தில் நினைவு படுத்திட விரும்புகிறேன்.

மற்றொரு முக்கிய குறிப்பு ஒன்றினையும் இந்த இடத்தில் பதிவது அவசியம் என கருதுகிறேன். சித்தர் பெருமக்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே "சித்தர்கள் இராச்சியம்" வலைப்பதிவின் முதன்மையான நோக்கம். எனவே இங்கே பகிரப் படும் தகவல்களை ஒரு வழிகாட்டுதலாய் மட்டும் அணுகிட வேண்டுகிறேன். தேவையும், அவசியமும் உள்ளவர்கள் தேர்ந்த வல்லுனர்கள்/மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை மேற்கொள்வதே சிறப்பு.

சித்தர் பெருமக்கள் மாதவிலக்கு தொடர்பில் அருளிய தீர்வுகளை மூன்று வகையாய் அணுகிடலாமென நினைக்கிறேன். அவை முறையே...

மாதவிலக்கு வராமல் இருப்பது, தள்ளிப் போவது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.

மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, உடல் தளர்வு போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு.

பெரும்பாடு எனப்படும் அதிகமான, தொடர் குருதிப் போக்கினை கட்டுப் படுத்துவதற்கான தீர்வு.

இன்றைய பதிவில் மாதவிலக்கு வராமல் இருப்பது அல்லது தள்ளிப் போகும் பிரச்சினைகளுக்கான இரண்டு தீர்வுகளை மட்டும் பார்ப்போம்.“அகத்தியர் வைத்தியம் 600” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல்கள் இவை.

மீறாமற் றூரமில்லாப் பெண்களுக்கு
வேலியிலைப் பசுவின்பாலில்மிகவருந்த நேரும்
கூறான தூதுவளை சாறுவாங்கி
கொடைகொடையாகக் கிடக்குங் குளத்துப்பாசி
ஏறாமற் புனைக்கா யளவுகூட்டி
யிதமாகச் சர்க்கரையும் மேகமொன்றாய்
பேறுபட மூன்றுநா ளருந்தும்போது
புறப்படுமே செங்குருதி சிவப்பதாமே 

வேலிப் பருத்தி இலையை அரைத்து பசுப்பாலில் கலக்கி, அதிகளவில் அருந்த மாதவிலக்கு ஏற்படும் என்கிறார். மேலும் குளத்துப்பாசியை புனைக்காய் அளவு எடுத்து அத்துடன் தூதுவளை சாற்றையும் அளவான சர்க்கரையும் சேர்த்து மூன்று நாட்கள் அருந்த மாதவிலக்கு உண்டாகுமாம்.

கிரமாதீத சூதகம்

ஒழுங்கான மாதவிலக்கு சுழற்சி என்பது 28 தினங்களுக்கு ஒருமுறை ஏற்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி நடப்பதில்லை. ஒரு சிலருக்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னதாகவே மாதவிலக்கு கண்டு மறைந்து போவதையும், அல்லது சேர்ந்தாற் போல 2-3 மாதங்களுக்கு சூதகமே வெளிப்படாமலும் இருக்கும். இதனை சித்த மருத்துவத்தில் 'ஒழுங்கீன சூதகம்' 'கிரமாதீத சூதகரோமம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு வெங்காயம், கரியபோளம், மிளகு இவைகளில் வகைக்கு 21/2 கிராம் எடுத்து, அவற்றைத் தனித்தனியே இடித்துத் தூளாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அம்மியில் சிறிதளவு தேன் விட்டு அதில் இந்த தூளை இட்டு, மை போல் அரைத்து, அதை 16 சிறு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு தினசரி காலை, பகல், மாலை ஆக மூன்று வேளை உணவிற்குப் பின்னர் இரண்டு மாத்திரை வீதம் வாயில் போட்டு, அரை ஆழாக்கு அளவு பசுவின்பால் குடித்து வர வேண்டும்.

இந்த விதமாக மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால், மாதவிலக்கு ஒழுங்கு முறையுடன் மாதா மாதம் தவறாது வெளியேறுமாம்.

குறிப்பு : "மாதவிலக்கு பிரச்சினைகளும், தீர்வுவும்" என்கிற பழைய பதிவினை இங்கே வாசிக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும், எளிய மூச்சு பயிற்சியும்!

Author: தோழி / Labels: ,

வாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பவை நம் உடல் மற்றும் மனம் ஆகியவைகளை பிரச்சினையின்றி இயங்க உதவுகின்றன என்பதால் கடந்த இரு பதிவுகளில் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள நேரிட்டது.

இன்றைய பதிவில் இந்த ஒழுங்கின் மூன்றாவது ஒரு அங்கம் குறித்த தகவலை சேர்த்திட விரும்புகிறேன். இது பற்றி ஏனோ நம்மில் யாரும் பெரிதாய் கவனிப்பதில்லை. உயிர் சக்தி என்றும் பிராண சக்தி என்றும் குறிப்பிடப் படும் ஒன்றையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். 

நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் இருந்து பிராணவாயு பிரித்தெடுக்கப் பட்டு அவை நம் குருதியின் ஊடே கலந்து உடல் இயங்கியலில் பங்கேற்கும் அறிவியல் உண்மை நாம் அனைவரும் அறிந்ததே. இதில் நாம் எத்தனை காற்றை உள்ளிழுக்கிறோம், அதில் இருந்து எத்தனை அளவு பிராணவாயு நம் உடலில் சேர்கிறது என்பதைப் பொறுத்தே நம் உடல் நலன் மற்றும் மன நலன் அமைகிறது. 

இந்த அறிவியல் உண்மையை வேறெவரையும் விட நமது முன்னோர்கள் அறிந்து, இது தொடர்பில் பல நுட்பங்களையும், நுணுக்கங்களையும் கண்டறிந்து நமக்கு அளித்திருக்கின்றனர். நாம்தான் அதை உணந்து பயன்படுத்திட தவறியவர்களாக இருக்கிறோம்.

இந்த கலையின் விவரங்களை முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் மூச்சுக் கலையின் நுட்பங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று வாசித்தறியலாம்.

ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக்கலை: தேவையும், தெளிவும் 

ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக் கலை பயிற்சியை நமது முன்னோர்கள் வாசியோகம் என அழைத்தனர். இவை இரண்டும் வெவ்வேறானவை என்கிற கருத்தும் உண்டு. அந்த விவாதத்திற்குள் நுழைவது நமது நோக்கமில்லை. இந்த கலையை குருமுகமாய் கற்றுக் கொள்வதே சிறப்பு என்றாலும் கூட அன்றாடம் செய்திடக் கூடிய ஒரு எளிய பயிற்சி முறை ஒன்றினை தகவலாய் மட்டும் இங்கு பகிரலாமென நினைக்கிறேன்.

நமது உடலின் பெரும்பான்மை முக்கியமான உள்ளுறுப்புகள் நமது இடுப்பு, மார்பு மற்றும் தலைப் பகுதியில்தான் அமைந்திருக்கின்றன. இவற்றைத் தூண்டி செயல்படுத்துவதே இந்த எளிய பயிற்சியின் நோக்கம். இது மூன்று பகுதியாக செய்ய வேண்டியது. 

தளர்வாய் சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு கவனத்தை சுவாசத்தில் நிறுத்தி, அது இயல்பாய் போவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காற்றை நன்கு உள்ளிழுத்து, வாயினை மெல்ல திறந்து அதன் வழியே வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியே விடும் போது அடித் தொண்டையில் இருந்து மெதுவாகவும், நிதானமாகவும் "அ...அ...அ....அ" என்ற ஒலியை எழுப்பிட வேண்டும். 

இவ்வாறு செய்யும் போது நமது வயிற்றுப் பகுதியில் ஒரு விதமான அதிர்வை உணரமுடியும். இதே போல குறைந்தது ஐந்து முதல் ஆறு தடவைகள் செய்திட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஏற்படும் அதிர்வினால் நமது வயிற்றுப் பகுதியில் உள்ள கல்லீரல், மண்ணீரல், குடல் பகுதி, சிறுநீரகம், கருவறை, சூலகம் போன்ற உறுப்புகள் தூண்டப் படும். வயிற்றுப் பகுதியில் பிரச்சினை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து செய்து வந்தால் நீண்ட கால நோக்கில் நல்ல பலன் கிட்டும்.

மார்பகப் பகுதியில் உள்ள இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளையும் மேலே சொன்னதைப் போன்ற பயிற்சியின் மூலம் தூண்ட இயலும். இந்த பயிற்சியின் போது மேலே சொன்ன அதே முறையில் "அ" க்கு பதிலாக "உ....உ...உ...உ..உ" என உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது தோன்றும் அதிர்வினை நமது மார்பகப் பகுதியில் உணர்ந்திட முடியும். 

மூளை மற்றும் அது சார்ந்த உறுப்புகளான சுரப்பிகளைத் தூண்டுவது இந்த பயிற்சியின் மூன்றாவது கட்டம். இந்த பயிற்சியின் போது இரண்டு விரல்களினால் காது மடலை மெதுவாய் மூடிக் கொண்டு, சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடும் போது வாயை மூடி, மூக்கின் வழியேதான் விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது "ம்...ம்...ம்...ம்...ம்" என்கிற ஓலியினை எழுப்பிட வேண்டும். இப்போது அதிர்வுகளை நமது மூளை பகுதியில் உணர முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் மூளையை, அதன் சுரப்பிகளை புத்துணர்ச்சியுடன் செயல்படுத்திட முடியும்.

மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் இந்த எளிய பயிற்சியினை தொடர்ந்து செய்வதன் மூலம் நீண்டகால தீர்வுகளை பெற முடியும். தகுதியுடைய வல்லுனர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் பயில்வதும் பழகுவதும் சிறப்பு.

இவை தவிர, முத்திரைகள் எனப்படும் விரல்களை ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொள்வதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தினை பேண முடியும். இந்த முத்திரைகளை யாரும் பழகலாம். அவை பற்றி விரிவாகவே முன்னர் தொடராய் பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளோர் இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம்.

வாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பது முழுமையான உடல் நலத்திற்கானது. அவற்றை தன்முனைப்புடன் கூடிய தொடர் முயற்சியாக பழகி வந்தால் மட்டுமே பலன் தரக்கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். 

இனி வரும் பதிவுகளில் மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கு. உடற் பயிற்சியும், தீர்வும்!

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு மருந்துகள்தானே உடனடித் தீர்வாக இருக்கும், உணவும், உடற் பயிற்சியும் எப்படி தீர்வாக அமையமுடியும் என்கிற கேள்வி இன்னேரம் உங்களுக்குள் எழுந்திருக்கும்.

மருந்துகள் உடனடித் தீர்வுகளுக்கு உதவினாலும் கூட, அவை தற்காலிகமானவையே. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உடற்பயிற்சியினால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர, நீண்டகாலத் தீர்வுகள் கிடைக்கும் என்பதால் அவற்றை முதலில் பகிர நினைத்தேன். தொடரின் நெடுகே சித்தர்கள் அருளிய மருந்துகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

மாதவிலக்கு சுழற்சியில் மூன்று முக்கிய உறுப்புகளின் செயல்திறனும், அவற்றின் ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது. அவை முறையே, பிறப்பு உறுப்புகளின் செயல்பாட்டினை நெறிப் படுத்தும் பிட்யூட்டரி சுரப்பி, கரு முட்டையை உருவாக்கி முதிரச் செய்யும் சூலகம், கருமுட்டையை உள் வாங்கி கருத்தரிப்பை செயல்படுத்தும் கருவறை.

இவற்றின் இயல்பான செயல்பாடுகளில் ஏற்றத் தாழ்வுகள் நிகழும் போதே மாதவிலக்கு சுழற்சியில் பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே இந்த மூன்று உறுப்புகளின் செயல்பாட்டினைத்  தூண்டி அவற்றை நெறிப் படுத்தும் உடற் பயிற்சிகளை மட்டும் இங்கே கவனத்தில் கொள்வோம்.

இந்த இடத்தில் குண்டலினி யோகம் பற்றி ஒரு சில வரிகள் அவசியமாகிறது.நமது உடலானது 7 சக்கரங்களினாலும், 72,000 நாடிகளினாலும் பின்னப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு சக்கரமும் குறிப்பிட்ட சில உடல் உறுப்புக்களின் செயல்பாட்டினை கட்டுப் படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த தகவல்களை எல்லாம் முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். தேவை உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பில் சென்று தகவல்களை அறியலாம்.

குண்டலினி யோகமும், உடல் நலமும்..

இதன் படி பிட்யூட்டரி சுரப்பியானது ஆக்ஞா சக்கரத்தினாலும், பிறப்புறுப்புகளான சூலகம் மற்றும் கருவறை சுவாதிட்டான சக்கரத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இந்த சக்கரங்களை மலரச் செய்வதன் மூலம் இந்த உறுப்புகளின் செயல்பாட்டினை சீராக்கிட முடியும். இது மட்டுமில்லை உடலின் அத்தனை உறுப்புகளின் செயல்பாட்டினையும் ஒரு ஒழுங்கில் கொண்டு வரும் மகத்துவம் குண்டலினி யோகத்திற்கு உண்டு. 

அடிவயிற்று தசைகள், சூலகம், கருவறை, சிறு நீரகம் போன்ற உறுப்புகளை தூண்டி நெறிப்படுத்தும் ஆசனங்களை தொடர்ந்து செய்து வரலாம். குறிப்பாக வஜ்ராசனம், புஜங்காசனம் போன்றவை நல்ல பலன் தரும். இந்த ஆசனங்களை பற்றி அகத்தியர் அருளிய தகவல்களை இந்த இணைப்பில் காணலாம். 

புஜங்காசம், வஜ்ராசனம் செய்யும் முறை..

குண்டலினி யோகம், ஆசனங்கள் என்பவை முறையான வழி காட்டுதலோடும், விடாத முயற்சி மற்றும் பயிற்சி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். எனவே வாய்ப்புள்ளவர்கள் குருவின் வழிகாட்டுதலோடு இவற்றை முயற்சிக்கலாம். 

இவை தவிர பிராணயாமம், முத்திரை பயிற்சிகளின் மூலமும் இந்த உறுப்புகளின் செயல்பாட்டினை மேம்படுத்தி நலமுடன் வாழலாம். எளிய பிராணயாம பயிற்சி மற்றும் முத்திரை விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கு. உணவும், தீர்வும்!

Author: தோழி / Labels: ,

நமது உடல் இயக்கம் என்பது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வரை, அதைப் பற்றி நாம் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் இந்த இயக்க சுழற்சியில் ஏதேனும் இயல்பு மீறுதல் அல்லது மாற்றம் அடையும் போது, நமக்குள் இனம் புரியாத பதற்றமும், பயமும் தொற்றிக் கொள்கிறது. இந்த பதற்றமே பாதி நோயாகி விடுவதை நம்மில் பலரும் உணர்வதே இல்லை.

மாதவிலக்கு சுழற்சியில் ஒழுங்கின்மை, உடல்வலி, மேலதிக குருதிப் போக்கு நிகழும் போது அதற்கான காரணம் தெரியாததினால், ஏற்படும் பயமும், பதட்டமுமே பலருக்கு கூடுதல் உடல், உள்ள நலிவை ஏற்படுத்துகிறது. இதன் பொருட்டே மாதவிலக்கின் அனைத்து கூறுகளையும் பற்றி எழுதிட நேர்ந்தது.

இப்போது மாதவிலக்கு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்த தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இனி அவற்றை தீர்க்கும் வழிவகைகளை பற்றி பார்ப்போம். இந்த தொடரில் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். இந்தத் தகவல்களைக் கொண்டு முறையான வல்லுனர்கள், மருத்துவர்களின் உதவியோடு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றிட வேண்டுகிறேன்.

உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சினைக்கும் இரண்டு வகையான தீர்வுகள் இருக்கின்ற்ன.  முதலாவது வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள், மற்றது மருந்துகள் சார்ந்த தீர்வுகள் 

அதென்ன வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள்?

நமது எண்ணம், செயல், சிந்தனைகளே, நமது வெளிப் புற அடையாளங்களையும், உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது உடல் இயங்கியலின் செயற்பாட்டை தீர்மானித்து ஒழுங்கு செய்வதும் நம்மில் இருந்தே துவங்குகிறது. இதனையே நமது முன்னோர்களும் காலம் காலமாய் வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

எளிமையாய் சொல்வதென்றால் “இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்வு” என்பதே நம்முடைய அத்தனை பிரச்சினைகளுக்கும் நீண்ட கால, நிரந்தர தீர்வாய் அமையும். ஆனால் நிதர்சனத்தில் நாம் அனைவருமே இயல்புக்கு மீறிய வாழ்வியல் சூழலில் வாழ்ந்திடும் கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை உணர்ந்து இயன்றவரை இயற்கையோடு இணைந்து வாழும் முயற்சியினை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

நமது உடல் என்பது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து மூலங்களினால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்த ஐந்து மூலங்களின் அளவும், விகிதமும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் மாறுபடுகிறது. இதனை உணர்ந்து நமது உடலின் தன்மைக்கேற்ற உணவு மற்றும் வாழ்வியல் சூழலை அமைத்துக் கொள்வதே ஆரோக்கிய வாழ்விற்கான நீண்ட கால தீர்வாக அமையும்.

நமது முன்னோர்கள் உட்கொண்ட உணவு மற்றும் உடல் பயிற்சிகளினால்தான் அவர்கள் நோயற்ற நெடு வாழ்வு வாழ்ந்திருக்கின்றனர். இதைப் பற்றிய தகவல்களை முன்னரே இங்கு தொடராக பகிர்ந்திருக்கிறேன். அந்தத் தகவல்களை மீண்டும் இங்கே பகிர்வது அவசியம் என்பதால் இணைப்புகளை கீழே தந்திருக்கிறேன்.

தமிழர்கள் உணவும், உடல் நலமும்

மேலதிக விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கும், வெள்ளை படுதலும்

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கு தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கு சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்ந்து கொள்வதுதான் இந்தத் தொடரின் முதன்மையான நோக்கம் என்றாலும் கூட, இது ஒரு நோய், பெண்களுக்கான சாபம், தீராத துன்பம், தீட்டு என காலம் காலமாய் பலவாகிலும் கட்டமைக்கப் பட்ட கருத்தாக்கங்களை களைந்து, மாதவிலக்கு என்பது சாதாரணமான உடல் இயங்கியல் நிகழ்வு என்பதனை அனைவரும் உணர்ந்திட வேண்டியே இத்தனை நீளமான அடிப்படை விளக்கங்களை எழுதிட நேர்ந்தது.

சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்வதற்கு முன்னர், இரண்டு நண்பர்கள் மின்னஞ்சலில் எழுப்பியிருந்த கேள்விகளுக்கான பதிலாய் இன்றைய பதிவு அமைகிறது. அந்த கேள்வி இதுதான்....வெள்ளை படுதல் எனப்படும் வெள்ளை ஒழுக்கும், மாதவிலக்கும் ஒன்றா?, வெவ்வேறென்றால் வெள்ளைப் படுதல் என்பது என்ன?.

எப்படி நமது கண்கள், காதுகள், வாய், ஆசனவாய் போன்ற உறுப்புகள் உடலின் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கின்றனவோ, அதைப் போலவே நமது பிறப்பு உறுப்பும் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கிறது.

நமது வாயில் உமிழ்நீர் சுரந்து வாயின் உட்புற அமைப்பினை பராமரிப்பது போல, நமது பிறப்பு உறுப்பும் இயல்பாகவே ஒரு நீர்மத்தை சுரந்து பிறப்புறுப்புகளை பராமரிக்கிறது. இந்த நீர்மம் நிறமற்றதாகவும், மணமற்றதாகவும் இருக்கும். நாளொன்றிற்கு நான்கு மில்லி லிட்டர் வரை சுரக்கும். இது எல்லா வயதினருக்கும் இயல்பாக நிகழக் கூடிய ஒன்றுதான். எனவே மாதவிலக்கும், வெள்ளைப் படுதலும் அடிப்படையில் வெவ்வேறானவை. 

எனினும், உடல் நல பாதிப்புகள், உடல் இயங்கியலில் ஏற்படும் மாற்றங்கள், நோய்த் தொற்று பாதிப்பு போன்றவைகளால் இந்த நீர்மம் இயல்பைவிட அதிகமா வெளியேறும். இந்த நீர்மம் வழவழப்பாகவும், வெள்ளை, மஞ்சள், பச்சை நிறத்திலும், குருதி கலந்த நிலையிலும் வெளியேறும். தீவிரமான நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு மிகுந்த துர் நாற்றத்துடனும் நுரைத்த நீர்மமாகவும், தக்கை தக்கையாவும், இறுகிய நீர்மமாகவும் வெளியேறும். இதனையே வெள்ளை படுதல் என்கிறோம்.

மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னர், மாதவிலக்கு முடிந்த பின்னர், கருத்தரித்த சமயங்களில், குழந்தை பேற்றிற்கு பின்னர், கருத்தடை சாதனங்கள், மருந்துகளை உட்கொள்ளும் போது, நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் போது, முறையற்ற பாலியல் பழக்கங்கள் என பல்வேறு காரணங்களினால் இத்தகைய வெள்ளை ஒழுக்கு ஏற்படுகிறது.

மொத்தத்தில் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்த் தொற்று, மற்றும் உடலின் அமில, காரத் தன்மையில் ஏற்றத்தாழ்வு ஆகியவையே அதிகமான வெள்ளை போக்கினை உருவாக்குகின்றன. மேலும் ஒருவரின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் இது மாறுபடுகிறது. 

முறையான உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, அழுத்தங்கள் இல்லாத வாழ்வியல் சூழல் போன்றவையே இதற்கு நீண்டகால தீர்வாக அமையும். எனினும் ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஆரம்ப நிலையில் மருத்துவம் செய்வதன் மூலம் எளிதில் குணப்படுத்தி விடக் கூடிய ஒன்றுதான் வெள்ளை படுதல்.

இனி வரும் பதிவுகளில் மாதவிலக்கு பிரச்சினைகளை எதிர்கொள்வது மற்றும் சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகள் குறித்து பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாத விலக்கும், நோய்களும்!

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கின் போது ஏற்படும் வலி மற்றும் குருதிப் போக்கு போன்றவை இயல்பான உடல் இயங்கியல் நிகழ்வுதான் என்றாலும் கூட, சமயங்களில் தாங்க இயலாத வலியும், கட்டுப் பாடில்லாத குருதிப் போக்கும் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் இவை மாதவிலக்கு தொடர்பான வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

இவற்றில் முதன்மையானது கிருமித் தொற்றினால் ஏற்படும் அழற்சி (Inflammation). கருவறையின் வாயிலில், கருவறையின் உட்புறத்தில் இத்தகைய அழற்சிகள் ஏற்படலாம். இதனால் இந்த உறுப்புகள் வீங்கி, புண்ணாகும் போது ஆரம்பத்தில் வலியையும், பின்னர் வலியுடன் கூடிய குருதிப் போக்கினையும் உருவாக்கும். மேலும் முறையற்ற உடல் உறவினாலும் பாலியல் தொடர்பான கிருமித் தொற்றுகளினாலும் நோய் உண்டாகும்.இவ்வாறு உருவாகும் நோய்களை  ”Pelvic inflammatory disease” என்கின்றனர்.

இவை தவிர கருவறையின் உட்புறச் சுவற்றில் “Fibroids” எனப்படும் தசைநார் கட்டிகள் வளரும் வாய்ப்பு உள்ளது. இதனாலும் அதிக அளவில் குருதிப் போக்கு உண்டாகும். இவற்றின் தன்மை மற்றும் அளவினைப் பொறுத்து அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றிவிடலாம்.

பெண்களின் சூலகத்தில் முதிர்வடையாத கரு முட்டைகள் நிறைந்திருக்கும். இவற்றை வளர்ச்சியடையச் செய்யும் இயக்க நீர்மமான Follicle-stimulating hormone தேவையை விட குறைவாக சுரக்குமானால் இந்த கருமுட்டைகள் வளராமல் சூலகத்தில் தேங்கிவிடும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாது போகும். இத்தகைய பெண்களுக்கு உடல் எடையும் அதிகரிக்கும். வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களில் கணிசமானவர்கள் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாய் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

மாதவிலக்கு சுழற்சியில் கருமுட்டையை ஏந்தி பாதுகாத்திட கருவறையின் உட்புறத்தில் பஞ்சு போன்ற கோழைப் படலம் உருவாகி பின் அழியும் என பார்த்தோம். சிலருக்கு கருவறையின் வெளிப்புறத்திலும் இத்தகைய கோழைப் படலம் உருவாகி அழியும். இதனை புற கருவறை வளர்ச்சி “Endometriosis” என்கிறோம். இத்தகையவர்களுக்கும் கடுமையான வலியுடன், குருதிப் போக்கும் அதிகமாய் இருக்கும். முறையான மருத்துவ ஆலோசனையின் பேரில் இதற்கான தீர்வுகளை காணலாம்.

தற்போதைய அவசரயுகத்தில் தங்களுடைய தேவைக்காக மாதவிலக்கினை தள்ளிப் போடும் மருந்துகளை சிலர் எடுத்துக் கொள்கின்ற்னர். அவர்களுக்கும் மாதவிலக்கின் போது மேற்சொன்ன பிரச்சினைகள் வரும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதினாலும் கடுமையான உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது.

இவை தவிர சூலகத்தில் உருவாகும் நீர்ம கட்டிகள், முழுமையாக வளர்ச்சியடையாத கருவறை, உடல் சுத்தம், வாழ்வியல் சூழல், உளவியல் கூறுகள் போன்றவைகளும் மாதவிலக்கு சுழற்சி தொடர்பான உபாதைகளுக்கு காரணமாகின்றன. இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பெரும்பான்மையான பெண்களிடத்தில் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை.இயல்பான உடல் இயங்கியல் நிகழ்வான மாதவிலக்கில் ஏற்படும் குறைபாடுகளை உரிய சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். அதற்கு தற்போதைய நவீன மருத்துவம் பல்வேறு தீர்வுகளை முன் வைக்கின்றன. எனினும் நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே இந்த தொடரின் நோக்கம் என்பதனால் இனி வரும் நாட்களில் சித்தர் பெருமக்கள் இது தொடர்பில் அருளிய சில தீர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாத விலக்கும், உடல் உபாதைகளும்.

Author: தோழி / Labels: ,

மாதவிலக்கு என்பது பெண்கள் பருவம் எய்திய நாள் துவங்கி நாற்பத்தி ஐந்து முதல் ஐம்பது வயது வரையில் தொடரும் ஒரு உடல் இயங்கியல் நிகழ்வு. மூளையில் உள்ள Anterior pituitary gland எனும் சுரப்பியினால் சுரக்கப் படும் இரண்டு இயக்கு நீர்மங்களான Follicle Stimulating Hormone(FSH), Luteinizing Hormone(LH) ஆகியவையே மாதவிலக்கு சுழற்சியினை முறைப்படுத்துகின்றன. 

இவற்றில் Follicle Stimulating Hormone(FSH) எனும் இயக்கநீர் சூலகத்தில் கருமுட்டையை உருவாக்கி வளர்க்கும் வேலையைத் தூண்டுகிறது. Luteinizing Hormone(LH) எனும் இயக்க நீர் முதிர்ந்த கருமுட்டையை சூலகத்தில் இருந்து வெளித் தள்ளி கருவறைக்கு செல்லும் பாதைக்கு நகர்த்தும் வேலையினை தூண்டுகிறது.

இந்த நீர்மங்களின் சுரப்பு விகிதம் ஒன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் இருக்கும் வரை மாதவிலக்கு சுழற்சி சுமூகமாய் நடந்து கொண்டிருக்கும். மாறாக இவற்றின் விகிதங்கள் மாறுபட்டால் அவை மாதவிலக்கு சுழற்சி மற்றும் கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கும், மேலும் அவை தொடர்பான வேறு சில நோய்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக அமைந்து விடுகிறது. 

நம்மில் பெருவாரியான பெண்களுக்கு சுமூகமான மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னரே உடல் மற்றும் உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை பெண்கள்எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இதனை ”Premenstrual syndrome” (PMS) என்கின்றனர். சமீபத்தைய ஆய்வறிக்கை ஒன்றின் படி இந்த காலகட்டத்தில் பெண்கள் 200 வகையான உடல் உபாதைகளை எதிர் கொள்கிறார்களாம்.இதையெல்லாம் உணர்ந்துதானோ என்னவோ நமது முன்னோர்கள் இந்த நாட்களில் பெண்களுக்கு  பூரண ஓய்வினை அளித்தனர்.

விரக்தி, கோபம், எரிச்சல், படபடப்பு, ஆத்திரம், அழுகை, சோம்பல் போன்றவைகளை உளவியல் பாதிப்புகளாக கூறலாம். அடி வயிற்றில் வலி, மார்பகங்கள் கனத்து வலி ஏற்படுதல், தலைவலி,வாந்தி,வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு என உடலியல் உபாதைகளின் பட்டியல் நீள்கிறது.

மாதவிலக்கின் போது பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சிரமம் குருதிப் போக்கு. நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு 50 முதல் 80 மில்லி குருதி ஒரு நாளில் வெளியேறும். துவக்கத்தில் அதிகமாய் இருக்கும் இந்த குருதிப் போக்கு அடுத்தடுத்த நாட்களில் குறைந்து விடும். ஆனால் சிலருக்கு குருதிப் போக்கு மிக அதிகமாகவும், சிலருக்கு குருதிப் போக்கே இல்லாமலும் இருக்கும். 

கருப்பையின் வாய்(cervix) சிறியதாக இருப்பவர்களுக்கு சூதகம் வெளியேறும் போது கடும் வலி ஏற்படும். மேலும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிவதாலும் வலி உண்டாகும். சிலருக்கு கருப்பையானது வழமையான நிலையில் இருந்து மாறி அமைந்திருக்கும், அத்தகையவர்களுக்கும் அதிக வலி உண்டாகும். கருமுட்டை சிதைந்து வெளியேறும் போதும் வலியேற்படும்.

இத்தகைய வலிகளை தவிர்க்க தற்போது பல்வேறு மருந்து மாத்திரைகள் உள்ளன. எனினும் இயன்றவரை அவற்றை தவிர்த்து விடுதல் நலம். இந்த நாட்களில் உணவில் இனிப்பை முற்றிலுமாக தவிர்த்துவிட்டால் வலியின் தாக்கம் குறைவாக இருக்கும்.மேலும் வென்னீர் ஒத்தடம் கொடுப்பதும் பலனைத் தரும். இது தொடர்பில் சித்தர்கள் அருளிய தீர்வுகளை தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன்.

இயல்பான சுழற்சியில் மாதவிலக்கு ஆகாதவர்கள், தாங்க இயலாத வலி மற்றும் உடல் உபாதைகளை எதிர் கொள்வோர், முப்பது வயதைத் தாண்டியவர்கள் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ளவது அவசியம்.ஏனெனில் இத்தகைய உபாதைகள் வேறு சில நோய்களின் அறிகுறியாக இருக்கும் வாய்ப்புள்ளது. துவக்க நிலையில் மருத்துவரை அணுகுவது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும். மாதவிலக்கு தொடர்பில் பெண்கள் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் நோய்களைப் பற்றி அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாதவிலக்கு, ஏன்?, எதனால்?, எப்படி?

Author: தோழி / Labels: ,

மனித உடலின் வளர்ச்சி மற்றும் சீரான செயல்பாட்டினை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில் சுரப்பிகளின் பங்கு முக்கியமானது. இவற்றால் சுரக்கப் படும் நீர்மங்களே (Hormones) உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் “ஹைப்போதாலமஸ்” (hypothalamus) என்னும் சுரப்பிதான் மனிதனின் இனப் பெருக்க செயல்களை கண்காணித்து செயல்படுத்துகிறது.

ஹைப்போதாலமஸ் சுரப்பியினால் சுரக்கப்படும் இயக்கு நீர்மமான Gonadotropin releasing hormone (gnrh) சுரந்தவுடன், இதன் கட்டுப் பாட்டில் இருக்கும் Anterior pituitary gland எனும் சுரப்பி விழித்துக் கொள்ளும். இந்த சுரப்பி தன் பங்கிற்கு இரண்டு இயக்கு நீர்மங்களை சுரக்கிறன்றது. அவை முறையே Follicle Stimulating Hormone(FSH), Luteinizing Hormone(LH) என்பனவாகும். இந்த இரண்டு இயக்கு நீர்மங்களே கருமுட்டையை உற்பத்தி செய்யும் சூலகங்களை தூண்டுகிறது. 

இதே சமயத்தில் கருவறையின் உட்புறத் தோல் கோழைப் படிவமாக தடிக்கத் துவங்கும், இந்த செயல் பதினைந்து நாட்கள் வரை நீடிக்கும். அரை செண்ட்டி மீட்டர் அளவு தடிமனான இந்த கோழைப் படலத்திற்கு அடியில் இருக்கும் நுண்ணிய குருதி நாளங்களில் குருதி பாய்ந்து நிரம்பும். ஒரு வேளை கரு தரித்து விட்டால் அந்த கருமுட்டையை பாதுகாக்கவும், வளரச் செய்யவுமே இந்த ஏற்பாட்டினை கருவறை செய்கிறது.

குறிப்பிட்ட நாட்களுக்குள் கருத்தரிப்பு நிகழாவிட்டால் இந்த கருவறையின் உட்புறத்தில் உருவாகி இருந்த பஞ்சு மெத்தை போன்ற அமைப்பு துண்டு துண்டாக பிய்ந்து பிறப்பு உறுப்பின் வழியே வெளிப்பட ஆரம்பிக்கும். அப்போது இந்த கோழைப் படலத்தின் கீழே உள்ள நுண்ணிய குருதிநாளங்கள் உடைந்து அதில் நிரம்பியிருந்த குருதியும் வெளியேறும். இவ்வாறு வெளியேறும் கழிவை “சூதகம்” என்கிறோம்.

இது இயல்பான ஒரு உடல் இயங்கியல் நிகழ்வு. ஆனால் எல்லாப் பெண்களுக்கும் இத்தகைய மாதவிலக்கு சுழற்சி இயல்பாக நடப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மேலும் இந்த மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னதாகவும், மாதவிலக்கின் போதும் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை அனுபவிக்க வேண்டி வருகிறது. அந்தத் தகவல்களை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..