சிவனார் வேம்பு என்பதை பலரும் வேப்ப மரத்தின் வேறோர் பெயராகவே நினைத்திருக்கின்றனர். சிவனார் வேம்புக்கும் வேப்ப மரத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இது முற்றிலும் வேறு வகையான தாவர குடும்பத்தினை சேர்ந்தது. இதன் உயிரியல் பெயர் Indigofera aspalathoides என்பதாகும். சித்த மருத்துவத்தில் இதனை சிவனார் வேம்பு, இறைவன் வேம்பு என அழைப்பர். மிகவும் மகத்துவம் வாய்ந்த இந்த மூலிகையைக் கொண்டு தயாரிக்கப்படும் எளிய கற்ப வகை ஒன்றினைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் அமுத கலைஞானம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
காணப்பா யின்னுமொரு கற்பங் கேளு
கறுப்பான சிவனார்தன் வேம்பினோடு
தோணப்பா வாலுளவை சமனாய்க் கூட்டி
சுவறயிடித்துப் பூப்புடத்தில் தயிலம்வாங்கி
வீணப்பா சீரகமுஞ் சர்க்கரையுங் கூட்டி
மீறாம லேகலந்து காற்களஞ்சி கொள்ளு
ஆணப்பா யிருவேளை மண்டலந்தான் கொள்ள
அய்யமுடன் வாதபித்த மகன்று போமே.
போகாத குட்டமொடு சுரப்பு தேமல்
புகழான கடிவிஷங்கள் பதினெட்டு வண்டு
யேகாத யெலிகடி திமிர்வாத சூலை
யெழும்பாத பாம்புகடி யெல்லாம் போகும்
ஆகாத மேனியுள்ளே யழுக நாற்றம்
அடங்கிப் போய்த் திரையற்று அமுர்த தேகம்
வாகான சிரங்குகுட்டம் தீர்ந்து சென்னி
வச்சிரம்போ லிருக்குமடா தேகந்தானே.
சிவனார் வேம்புடன், வாலுளுவையை சமனாக சேர்த்து நன்கு இடித்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை பூப்புடம் இட்டு தைலம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த தைலத்திற்கு சமனாக சீரகமும், சர்க்கரையும் சேர்த்து காற் கழஞ்சி அளவு அருந்த வேண்டுமாம்.
இவ்வறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தினால் வாதமும் பித்தமும் நீங்குவதுடன், தீராத குட்டம் , சுரப்பு, தேமல், கடிவிஷங்கள் பதினெட்டும், எலிக்கடி, திமிர்வாத சூலை, தீராத பாம்புக் கடி, சிரங்கு , சென்னி அனைத்தும் நீங்குவதுடன் உடலில் இருக்கும் நாற்றம் எல்லாம் நீங்கி நரை திரை அற்று உடல் வச்சிரம் போல் ஆகும் என்கிறார் அகத்தியர்.
இத்துடன் எளியவகை காயகற்ப வகைகள் பற்றிய தொடர் தற்காலிகமாய் நிறைவுற்றது. பிரிதொரு தருணத்தில் சித்தர் பெருமக்கள் அருளிய மற்றபிற காயகற்ப வகைகளைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு: வாலுளுவை என்பது ஒரு மூலிகைச் செடி. இதனை ஜ்யோதிஷ்மதி என்றும் அழைப்பர். இதன் தாவரவியல் பெயர் Celastrus paniculatus
குறிப்பு: வாலுளுவை என்பது ஒரு மூலிகைச் செடி. இதனை ஜ்யோதிஷ்மதி என்றும் அழைப்பர். இதன் தாவரவியல் பெயர் Celastrus paniculatus
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


