அறிவிப்பும், வேண்டுகோளும்...

Author: தோழி / Labels:


சிறு விபத்தொன்றில் இடது கை எலும்பு பிசகி கட்டுப் போட்டிருப்பதனால் பதிவுகளைத் தட்டச்சு செய்து வலையேற்ற இயலவில்லை. விரைவில் வழமை போல பதிவுகளை வலையேற்ற முயற்சிக்கிறேன். தாமதத்திற்கு பொருத்தருள வேண்டுகிறேன்.

தொடரும் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.

தோழி.


செம்பை தங்கமாக்கும் செந்தூரம்

Author: தோழி / Labels: , ,

சித்த மருந்துகளில் முக்கியமான அக மருந்தான செந்தூரம் பற்றிய தகவல்களை கடந்த இரண்டு பதிவுகளில் பார்த்தோம். அந்த வகையில் துருசு செந்தூரத்தினை கொண்டு செம்பினை தங்கமாக்கும் முறை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

செம்பினை தங்கமாக்குதல் என்ற உடன் அது நமக்குள் பல்வேறு சிந்தனைகளையும், ஆர்வத்தையும் தூண்டியிருக்கும்.ஆனால் சித்தர் பெருமக்கள் இந்த செயல்பாடுகளை முழுக்க முழுக்க மருந்து தயாரிப்பின் ஒரு அங்கமாகவே சொல்லிச் சென்றிருக்கின்றனர். தயாரித்த மருந்தின் தரத்தினை பரிசோதிக்கவோ அல்லது மருந்து தயாரிப்புக்குத் தேவைக்காக கீழ் நிலை உலோகத்தை தரமுயர்த்திடவே இந்த செம்பை பொன்னாக்கும் முறை கூறப்பட்டிருக்கிறது.

இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த முறை தேரையர் அருளியது. தேரையரின் "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்ட தகவல் இது. 

புகழான கொக்கு மந்தாரைப் பூச்சாற்றால்
நாட்டடா செம்புவிராக னெடையும் பத்து
நலமாக ஏழுவிசைக் காய்ச்சித் தோய்த்து
ஆட்டடா குகைக்குள்ளே வைத்துருகும் போதிலே
அப்பனே கழஞ்சியெடைச் செந்தூரம் போடு
தேட்டடா வுருகுவெள்ளி கண்விட் டாடும்
தெளிவாக செய்திடில் ஐந்ததுவாகும் மாத்தே.

- தேரையர்.

ஒரு விராகன் எடை அளவு செம்பினை எடுத்து அதனை கொக்கு மந்தாரைப் பூச்சாற்றில் நன்கு தோய்த்து எடுத்து உருக்கிக் கொள்ள கூறுகிறார். அதே செம்பினை மீண்டும் மீண்டும் ஏழுதடவை கொக்கு மந்தாரை பூச்சாற்றில் தோய்த்து எடுத்து உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

இப்படி மீண்டும் மீண்டும் உருக்கி எடுத்த செம்பினை  குகையில் வைத்து மீண்டும் உருக்க வேண்டுமாம். அப்படி குகையில் வைத்து உருக்கும் போது முன்னர் செய்து வைத்துள்ள துருசு செந்தூரத்தில் ஒரு கழஞ்சி எடை எடுத்து செம்புடன் சேர்த்து உருக்க வேண்டுமாம். அவ்வாறு சேர்த்து உருகும் போது வெள்ளி கண்விட்டாடுமாம் அப்போது அதை இறக்கிவிட கூடாது என்றும் அந்த நேரதில் மிகக் கவனத்துடன் உருக்கி எடுத்தால் செம்பானது ஐந்து மாற்று தங்கமாக கிடைக்கும் என்கிறார். 

ஆச்சர்யமான தகவல்தானே.... ஆம் தகவல் மட்டுமே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... 


துருசு செந்தூரம் தயாரிக்கும் முறை

Author: தோழி / Labels: , ,

சித்த மருத்துவத்தில் முக்கியமான அக மருந்தான செந்தூரம் பற்றிய அடிப்படை தகவல்கள் மற்றும் அதன் பயன்பாடுகள், அவை தயாரிக்கப் படும் நான்கு முறைகள் பற்றிய விவரங்களை நேற்றைய பதிவில் பார்த்தோம்.

அந்த நான்கு வகை செந்தூர தயாரிப்பு முறைகள் முறையே...

1 - மிருத்தயுஞ்சம்.

மூலச் சரக்குகளை நன்கு எரித்து சிவக்க செய்து எடுக்கப்படுவது மிருத்தயுஞ்சம் எனப்படும்.

 2 - அயச்செந்தூரம்.

மூலச் சரக்குகளை நன்கு புடம்போட்டு சிவக்க செய்து எடுக்கப்படுவது அயச்செந்தூரம் எனப்படும்.

3 - சண்டமாருத செந்தூரம்.

மூலச் சரக்குகளை நன்கு அரைத்துச் சிவக்க செய்து எடுக்கப்படுவது சண்டமாருத செந்தூரம் எனப்படும்.

4 - அயவீர செந்தூரம்.

மூலச் சரக்குகளை நன்கு வறுத்துச் சிவக்க செய்து எடுக்கப்படுவது அயவீர செந்தூரம் எனப்படும்.

இந்த நான்கு வகைகளை பயன்படுத்தி பல்வேறு தேவைகளுக்கு என பிரத்யேகமான செந்தூரங்கள் தயாரிக்கப் படுகின்றன. இவற்றுள் முக்கியமான ஒரு செந்தூரம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். துருசு செந்தூரம் சித்த மருத்துவத்திலும், இரசவாததிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனை தயாரிக்கும் முறையினை தேரையர் தனது நூலான "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் பின் வருமாறு அருளியிருக்கிறார்.

செய்யப்பா துருசு களஞ்சுஎடைதான் ரெண்டில்
திறமாக உத்தாமணிப் பாலூட்டி ஆட்டி
வைய்யப்பா மூழ்கியபின் வளமே கண்டு
பதறாதே கதிரொளியில் ஊறப்போட்டு
மெய்யப்பா அவ்விலைச் சாற்றாலாட்டி வில்லை
மேலுலர்த்தி யிலையாட்டிக் குகையே பண்ணி
வைய்யப்பா குகையுள்ளே மருந்தை விட்டே
மண்சீலை செய்துலர்த்திப் புடத்தைப் போடே
போட்டடா குக்குடத்திற் செந்தூரிக்கும்

- தேரையர்.

இரண்டு கழஞ்சு துருசு எடுத்து உத்தாமணிப் பாலில் சிறிது நேரம் ஊறவிட்டு, அதைக் கல்வத்திலிட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை உத்தாமணிப் பால் ஊற்றி  சூரியஒளி படும்படி வைக்க வேண்டுமாம்.

நன்கு ஊறிய இந்த கலவையை எடுத்து கல்வத்திலிட்டு அது ஊறுவதற்கு பயன்படுத்திய அதே பாலை விட்டு மெழுகுப் பதமாக வரும் வரை அரைத்து வில்லைகளாகச் செய்து காயவைத்து எடுக்க வேண்டும் என்கிறார். உத்தாமணி இலையினால் குகை செய்து அதனுள் காயவைத்து எடுத்த வில்லைகளை வைத்து அதன் மேலே சீலைமண் செய்து மீண்டும் நன்றாக காயவைக்க வேண்டுமாம்.

நன்கு காய்ந்த பின் அதற்கு குக்குப் புடம் போட் வேண்டுமாம். பின்னர் புடம் ஆறியபின் அதை எடுத்தால் துருசு செந்தூரமாகி இருக்குமாம். இதுவே துருசு செந்தூரம் செய்யும் இலகுவான வழிமுறை என்கிறார் தேரையர்.

எல்லாம் சரிதான்.. இந்த துருசு செந்தூரத்தைக் வைத்து என்ன செய்வது?

மருத்துத் தயாரிப்பு முதல் இரவாதம் வரை பல செய்முறைகளுக்கு இந்த துருசு செந்தூரம் பயன்படுகிறது. அந்த வகையில் துருசு செந்தூரத்தைக் கொண்டு செம்பைத் தங்கமாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


செந்தூரம் - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels: , , , ,

சித்த மருத்துவத்தில் மருந்துகள் அக மருந்து, புற மருந்துகள் என இரு பெரும் பிரிவுகளில் அமைந்திருக்கின்றன என்பதையும், அதன் வகைகளைப் பற்றியும் முந்தைய பதிவுகளில் விரிவாகவே பார்த்தோம். அந்த வகையில் அக மருந்துகளில் ஒன்றான செந்தூரம் பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

குங்குமத்தையும், வெண்ணையையும் கலந்தால் உண்டாகும் கலவையே செந்தூரம் என நம்மில் பலரும் தெரிந்து வைத்திருப்போம். இத்தகைய செந்தூரங்கள் பொதுவில் ஆஞ்சநேயருக்கு சாற்றப்படுகிறது. ஆனால் நாம் பார்க்க இருக்கும் செந்தூரத்திற்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை.

செந்தூரங்கள் மிகவும் கவனத்துடன் தயாரிக்கப் படுபவை. மிகுந்த வீரியம் உள்ளவை. மிகச் சிறியளவில் உட்கொண்டாலும் உடலுக்கு அளப்பரிய பலனை கொடுக்க வல்லவை. நாட்பட்ட நோய்கள், தீராத நோய்கள் எல்லாவற்றையும் தீர்க்கும் ஆற்றல் இந்த செந்தூரங்களுக்கு உண்டு. துருசுச் செந்தூரத்திற்கு இறந்தவனை எழுப்பும் ஆற்றல் இருப்பதாக அகத்தியர் குறிப்பிடுகிறார். அத்தனை மகத்துவம் கொண்டவை செந்தூரங்கள்.

அகத்தியர் என்றில்லாது கோரக்கர், யாகோபு உட்பட பல சித்தர்கள் செந்தூர வகைகளுக்கென தனி நூல்களே பாடியுள்ளனர். அவற்றில் நமக்கு கிடைத்திருக்கும் நூல்களில் முக்கியமானவை....

அகத்தியர் செந்தூரம் 300
கோரக்கர் செந்தூரம் 91
யாகோபு லோக செந்தூரம் 300 

இத்தகைய சிறப்புவாய்ந்த செந்தூரத்தை மூலச் சரக்காக கொண்டு செய்யப்படும் அனைத்து முறைகளும் "செந்தூரச் சரக்கு முறை" என்று அழைக்கப்படும். இரசவாதத்தில் செந்தூரத்தைக் கொண்டு தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றுவதை "செந்தூர தங்க வேதை" என்று அழைப்பர்.

எல்லாம் சரிதான் செந்தூரம் என்றால் என்ன? அதனை எவ்வாறு தயாரிப்பது? 

உலோகம், பாஷாணம் முதலியவைகளை இலைச்சாறு, திராவகம், செயநீர் ஆகியவைகளினால் அரைத்துக் கொண்டு செய்வது. புடம் போட்டோ, எரித்தோ, வறுத்தோ, அரைத்தோ, வெயிலில் காய வைத்தோ சிவப்பாகும் பதத்தில் எடுத்துப் பொடித்து வைத்துக் கொள்வதே செந்தூரம் எனப்படும்.

இந்த செந்தூரங்கள் முக்கியமாக நான்கு வகைப்படும். அவை முறையே மிருத்தயுஞ்சம்,அயச்செந்தூரம்,சண்டமாருத செந்தூரம்,அயவீர செந்தூரம் ஆகும்.

மேலும் விவரங்களுடன் நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... 


சேவல் சண்டையில் ஜெயிக்கும் ஜாலம்

Author: தோழி / Labels: ,

பழந்தமிழர் விளையாட்டுக்களில் ஒன்றுதான் சேவல் சண்டை. இதனை "சாவக்கட்டு" என்றும் அழைப்பர். இரு சேவல்களை ஒன்றுடன் ஒன்று சண்டையிடச் செய்வதே சேவல் சண்டை எனப்படும். சில சேவல் சண்டைகளில் சண்டையிடும் சேவலின் வலதுகாலில் ஏறத்தாழ மூன்று அங்குல நீளமுள்ள கத்தி கட்டிவிடப்படுவதும் உண்டு.

இந்த சேவல் சண்டைகள் பொதுவாக இரண்டுவகைப்படும். ஒன்று கத்தி கட்டப்பட்ட சேவல் சண்டை. மற்றையது கத்தி கட்டப்படாத சேவல் சண்டை இதனை "வெப்போர்" என்றும் அழைப்பர். சண்டையின் போது சோர்வடைந்து விழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்த சேவலாக அறிவிக்கப்படும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த சேவல் சண்டை தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பது மேலதிக தகவல்.

எல்லாம் சரிதான், மேலே சொன்ன விவரங்களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி இந்நேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கக் கூடும்.

போகரும் கூட சேவல் சண்டையைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதுவும் சண்டையிடும் சேவல் வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தியைப் பற்றி சொல்லியிருக்கிறார். 

போகர் ஜாலவித்தை என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு.....

கொள்ளவே நத்தையென்ற சூரிதன்னை
கொண்டுவந்து ஒருமாதம் நீரில்போட்டு
விள்ளவே மாதமது சென்றெடுத்து
வெண்ணெய்போல் அறைத்துநல்ல சாவலுக்கு
உள்ளுக்குக் கொடுத்துசண்டை விட்டுப்பாரு
ஒருக்காலும் எதிரியிதை வெல்லலாகா
தல்லவே கத்திகட்டி விட்டபோதும்
அறுபடா தோல்வியென்ப தருமைதானே.

- போகர்.

நத்தை சூரி மூலிகையை எடுத்துவந்து ஒருமாதம் நீரில் போட்டு வைக்க வேண்டுமாம். ஒருமாதம் நீரில் ஊறிய நத்தை சூரியை எடுத்து வெண்ணெய் போன்று அரைத்துக் கொள்ள வேண்டுமாம்.

அதனை சேவலுக்கு உண்ணக் கொடுத்துவிட்டு, சண்டையிட விட்டு விட வேண்டுமாம். அப்போது எதிர் சேவலால் இந்த சேவலை வெல்ல முடியாது என்கிறார். அவர் மேலும், கத்தி கட்டி விடப்பட்ட சேவலுடன் சண்டையிட்டாலும் இந்த சேவல் வெட்டுப்படாது என்றும் சொல்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே.!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மாயமாய் மறைந்திட..

Author: தோழி / Labels: ,

நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென பேசிக்கொண்டிருக்கும் போதே மாயமாய் மறைந்து விட்டால் எப்படி இருக்கும்.... இப்படி ஒரு சம்பவத்தை நம்மால் கற்பனை செய்ய முடியாது. ஆயினும் நமது புராணக் கதைகளில் சட்டென மறைதல் போன்ற பல குறிப்புகளை காண முடிகிறது.

சித்தரியலிலும் நினைத்த மாத்திரத்தில் நமது உருவத்தை மறைத்துக் கொள்ள சில உபாயங்களை சித்தர்கள் பயன் படுத்திவந்தனர். இது பற்றிய தகவல்களை முன்னரும் பகிர்ந்திருக்கிறேன். அந்த வகையில் இன்றைய பதிவில் கருவூரார் அருளிய உருவத்தை மறைத்துக் கொள்ள உதவிடும் மை ஒன்றைப் பற்றி பார்ப்போம்.

இந்த மை பற்றிய விவரங்கள் கருவூரார் அருளிய "கருவூரார் பலதிரட்டு" என்னும் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு..

ஆமப்பா வெண்ணெயிலே தேனைத்தேய்த்து
ஆதளையின் பால்கூட்டி அடவாய்த்தேய்த்து
ஓமப்பா திலகமிடத் தன்னைக்காணார்
ஓங்கிநின்ற உருமாற்றம் ஒருவர்காணார்
போமப்பா வெண்டிசையுங் கால்வேகங்கொண்டு
பூமிதனில் மறைந்ததெல்லாம் பொலிவாய்க் காண்பார்
வேமப்பா அண்டரண்டம் வழலைபட்டால்
வேதாந்தப் பஞ்சகர்த்தா ளெனச்சொன்னாரே.

- கருவூரார்.

வெண்ணெயுடன் தேன், ஆதளை மூலிகையின் பால், இவைகளை சம அளவில் ஒன்று சேர்த்து நன்கு கடையவேண்டுமாம். அப்போது அவை மை போலாகி இருக்கும் அவற்றை எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.

உருவத்தை மறைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சேமிப்பில் இருந்து மையை எடுத்து திலகமாக இட்டுக் கொள்ள உருவம் மறைந்துவிடுமாம். அப்போது யாராலும் உருவத்தைக் காணமுடியாது என்கிறார்.  

அத்துடன் எட்டுத் திசைகளிலும் காற்றின் வேகத்துடன் சென்றுவரும் சக்தியும் கிடைக்குமாம். மேலும் பூமியில் கண்ணுக்குத் தென்படாது மறைந்துள்ள அனைத்துப் பொருட்களையும் தெளிவாகப் பார்க்க முடியும் என்கிறார். இதன் சாத்திய அசாத்தியங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை. 

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


நாகபாம்பின் வாய் கட்டும் மந்திரம்...!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் அருளிய எத்தனையோ ஆச்சர்யமான தகவல்களில், நாக பாம்பானது தீண்டாது இருக்க அதன் வாய் கட்டும் மந்திரம் ஒன்றை பற்றி இன்று பார்ப்போம். நம்புவதற்கு அரிதான இந்த தகவலை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் நாக பாம்பு தீண்டாதிருக்க ஒரு மந்திரத்தை பின் வருமாறு கூறுகிறார்.

ஊணிப்பா ரரவமது வாய்தான்கட்ட
உண்மையுள்ள மந்திரமது ஒன்றுகேளு
பேணிப்பார் நங்கிலிசீ ஓமென்றாக்கால்
பெரிதான நாகமது வாய்தான்கட்டும்
பூணிப்பார் தன்னகமே சாட்சியாகப்
புத்தியுட னாயிரத்தெட் டுறுவேசெய்தால்
ஆணிமாத் தந்தமதி னொளிபோல்மைந்தா
ஆதிதொடுத் தந்தமதின் சித்தியாமே.

- அகத்தியர்.

ஒருவரை நாக பாம்பு தீண்ட வந்தால் "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை  உச்சரிக்க பாம்பால் தீண்ட முடியாது அதன் வாய் கட்டிப் போய்விடும் என்கிறார். இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டியது அவசியம். "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகுமாம். இந்தவகை மந்திரங்களைக் "கட்டு மந்திரம்" என்று அழைப்பர். 

இம் மாதிரியான ஆச்சர்யமான தகவல்கள் எல்லாம் ஏட்டளவில் உறைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அல்லது ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் பரீட்சித்து இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்தால் பலரும் பயன் படுத்திடக் கூடியவையாக இருக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க... 


மழையில் நனையாதிருக்கும் உபாயம்

Author: தோழி / Labels:

இயல்பில் சித்தர்கள் வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகியே வாழ்ந்திருந்தனர். தங்களுடைய அக மற்றும் புறத் தேடல்களுக்கு மனித சஞ்சாரமற்ற தனிமையான இடங்களே அவசியமாக இருந்தன. இதன் பொருட்டே காடுகள், மலைகள் என இயற்கையின் மடியில் வாழ்ந்திருந்தனர்.

இம்மாதிரியான இடங்களில் புயல், மழை, இடி, மின்னல் போன்ற இயற்கையின் கூறுகளிடம் இருந்து காத்துக் கொள்வதற்கென சில உபாயங்களை சித்தர்கள் பயன் படுத்திவந்தனர். அவற்றில் இன்று மழையில் இருந்து காத்துக் கொள்வதற்கென போகர் அருளிய உத்தியினை பார்ப்போம். இது ஒரு தகவல் பகிர்வே, இதன் உண்மைத் தன்மை ஆய்வுக்கு உரியது.

இந்த தகவல் போகர் அருளிய "போகர் ஜெனன சாகரம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

நேரென்ற நாகரச ந்தன்னை யெடுத்து
நெறியாக விடுத்தாவின் பாலிற்போடு
காரென்ற கட்டியதா யிருகிப்போகும்
கருவான யிருபத்தேழு மணியுஞ்செய்வாய்
சீரென்ற ருத்ராட்சங் கூடச்சேர்த்து
செபமாலை முடித்துநீ சிரசிற்போடே
போட்டுநீ மழைதனிலே போனாயானாற்
புகழான மழைத்துளிதான் மேல்விழாது

- போகர்.

நாகரசத்தை எடுத்து பசுப்பாலில் போட்டால் அது கட்டியாக இறுகிவிடுமாம். இறுகியதும் அதனை எடுத்து இருபத்தி ஏழு மணிகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம். அந்த மணிகளுடன் இருபத்தி ஏழு உருத்திராட்ச மணிகளும் சேர்த்து ஒரு ஜெப மாலையைப் போன்று ஒருமாலை தயார் செய்துகொள்ள வேண்டுமாம். 

பின்னர் மழை நேரங்களில் அந்த மாலையைத் தலையில் அணிந்துகொண்டு சென்றால் மழைத்துளி உடம்பில் விழாது என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே.!

இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கு உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவலாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...!

Author: தோழி / Labels: ,

காலம் காலமாய் மாந்திரிகம் என்பது அமானுஷ்யம் நிறைந்த ஒரு கலையாகவே இருந்து வருகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில் நம்மில் பலரின் நிம்மதியையும், பொருளையும் அழிக்கும் ஒரு கலையாக இருக்கிறதென்றால் மிகையில்லை...

மாந்திரிகம் என்பது அடிப்படையில் ஒரு மனிதன் தன் சக மனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அல்லது அழிப்பதாகவோதான் கருதப் படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். இது பற்றிய தகவல்களை முன்னரே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.

அந்த வரிசையில் இன்று பில்லி, சூனியம், ஏவல் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப் பட்டதாய் கருதப் படுகிறவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் முறை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள் கோரக்கர் அருளிய "சந்திரரேகை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஓதிடுவேன் பேய்பில்லிச்சூனி யங்கள்
ஓடுவதற்கு மந்திரங்கள் உண்மை யாக
நீதியுடன் ஓம்உம்லம்சிம் நம்வம்கிலீம்
ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே
தீதின்றி முக்கோணம் பெரிதாய்க் கீறித்
திட்டமுடன் அஉஇ உள்ளே நாட்டிப்
பேதிக்கா வோங்காரம் சுற்றித் தாக்கிப்
பிரபலமாய் செபிக்கச் சூனியங்கள் போமே.

- கோரக்கர்.

இந்த பாடலில் உள்ள குறிப்புகளின் படி வரைந்த யந்திரத்தின் படத்தினை கீழே கொடுத்திருக்கிறேன்.

இந்த யந்திரத்தினை மூன்றங்குல (3"x3") சதுரமான செப்பு அல்லது வெள்ளியால் ஆன தகட்டில் கீறிக் கொள்ளவேண்டும். யந்திரங்களை கீறுவதற்கென தனித்துவமான முறைகள் இருக்கின்றன. அந்த தகவல்களை முந்தைய பதிவுகளில் பார்க்கலாம். அதன் படியே இந்த யந்திரங்கள் கீறப்பட வேண்டும்.

இப்போது  வெளிச்சம் நிரம்பிய, தூய்மையான அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து, யந்திரத்தை வலதுகையில் ஏந்தியவாறு “ஓம் உம் லம் சிம் நம் வம் கிலீம் ரீங்சிரீங் ஹிரீங் ஹரிங்கே” என்ற மந்திரத்தை அந்தி, சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் மூன்று நாட்கள் தொடர்ந்து செபித்து வர பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது அவர்களை விட்டு நீங்கிவிடும் என்கிறார்.

தேவையுள்ளவர்கள் எளிதான செலவு பிடிக்காத இந்த முறையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...