அகமருந்துகள் 21 - 32

Author: தோழி / Labels: ,


சித்த மருத்துவத்தில் வரையறுக்கப் பட்டுள்ள 32 அகமருந்துகள் பற்றிய விளக்கங்களை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று கடைசி 12 அகமருந்துகளைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

21. மெழுகு - இது இரண்டு வகைப்படும்.

அரைப்பு மெழுகு - பாதரசம் சேர்ந்த சரக்குகள், உப்புகள் முதலியவைகளைத் தனியாகவோ கடைச் சரக்குகள் சேர்த்தோ அரைத்து மெழுகு பதத்தில் எடுத்துக் கொள்வது.

சுருக்கு மெழுகு - ரசச் சரக்குகள், பாஷாணங்கள் முதலிய வகைகளை மூலிகைகளின் சாறு, நெய் முதலியவைகளினால் சுருக்குக் கொடுத்து அவை இளகி மெழுகு பதமாக வரும் பொழுது எடுத்து கல்வத்தில் இட்டுப் பதமாக அரைத்து எடுத்துக் கொள்வது.

22. குழம்பு - சாறுகள், சர்க்கரை, சரக்குப் பொடிகள் முதலியவைகளைக் காய்ச்சி கொழகொழப்பான பக்குவத்தில் எடுத்துக் கொள்வது.

23. பதங்கம் - ரசம் அல்லது ரசக்கலப்புள்ள மருந்துகளை உப்பும் செங்கல் தூளும் இட்ட மண் சட்டியில் போட்டு மேலேமடு சட்டியை வைத்துச் சீலைமண் செய்து எரிக்க வேண்டும். தேவையான நேரம் வரை எரித்த பின் பிரித்து மேல்சட்டியில் படந்திருப்பதை எடுத்து வைத்துக் கொள்வது. 

24. செந்தூரம் - உலோகம், பாஷாணம் முதலியவைகளை இலைச்சாறு, திராவகம், செயநீர் ஆகியவைகளினால் அரைத்துக் கொண்டு செய்வது. புடம் போட்டோ, எரித்தோ, வறுத்தோ, அரைத்தோ, வெயிலில் காய வைத்தோ சிவப்பாகும் பதத்தில் எடுத்துப் பொடித்து வைத்துக் கொள்வது.

25. பற்பம் - உலோகம், பாஷாணம் முதலியவைகளை இலைச்சாறு, புகைநீர், செயநீர் ஆகியவைகளினால் அரைத்துப் புடம் போட்டோ, வறுத்தோ, எரித்த ஊதியோ வெளுக்குபடிச் செய்து எடுத்துக் கொள்வது.

தங்க பற்பத்தின் நிறம் மட்டும் மஞ்சளாக இருக்கும்.

26. கட்டு - பாஷாணங்களைப் புகைநீர், செயநீர், சாறு, தேன், நெய் முதலிய ஏதாவது ஒன்றினால் சுருக்குக் கொடுத்து (கெட்டியாக) கட்டிக் கொள்வது. இதை மாத்திரைக்கல் என்றும் அழைப்பர்.

27. உருக்கு - பாஷாணங்கள், உலோகங்கள், மற்ற சரக்குகளைச் சேர்த்து மூசையிலிட்டு மேலே மூடி மண்சீலை செய்து அடுப்புக்கரித் தீயில் வைத்து ஊதி இளகச் செய்து (உருக்கி) ஆறவைத்து எடுப்பது.

28. களங்கு - பாதரசம் முதலிய சரக்குகளை சாறு, நீர் முதலியவைகளில் சுருக்குக் கொடுத்து புடம் இட்டுக் கட்டியாக்கிக் கொண்டு, பிறகு அடுப்புக்கரித் தீயில் வைத்து ஊதி மணியாக்கி உருக்கித் தங்கம் நாகமும் சேர்த்து ஆறவைத்து எடுப்பது.

29. சுண்ணம் - தேவையானவைகளை அரைத்து, மூசையிலிட்டு சீலை செய்து உலர்த்தி, கரி நெருப்பிலிட்டு ஊதி எடுத்து ஆறவைத்துப் பூத்த பின் எடுத்துக் கொள்வது.

30. கற்பம் -  இலை, வேர், கடைச்சரக்கு, உலோக உபரச சத்துக்கள் முதலியவைகளை கூறப்பட்ட நாள் அளவு, பத்திய முறைப்படிஉண்டுவர வேண்டிய மருந்து.

31. சத்து - காந்தம், இரும்புத்தூள் மற்ற உபரசம் முதலியவைகளோடு சில பாஷாணங்களையும் சேர்த்து செய நீரால் அரைத்து உலர்த்திக் கொண்டு,  சீலை செய்து மூசையிலிட்டு மூன்று முறை ஊதி எடுக்கக் கிடைப்பது.

32. குருகுளிகை - வாலை ரசத்துடன் சில சரக்குகள் சேர்த்துக் கட்டி மணிமணியாகச் செய்து கொள்வது.

அடுத்த பதிவில் புற மருந்துகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகமருந்துகள் 15 - 20

Author: தோழி / Labels: ,


தமிழல் மருத்துவம் எனப்படும் சித்த மருத்துவத்தில் 32 வகை அகமருந்துகள் உள்ளன என்பதை பார்த்தோம். கடந்த இரண்டு தினங்களில் முதல் 14 வகை மருந்துகளைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் 15 முதல் 20 வரையிலான மருந்துவகைகள் பற்றி பார்ப்போம்.

15. எண்ணெய் அல்லது தைலம் - எள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர். இக்காலத்தில் எல்லா வகையான நெய்களையும் எண்ணெய் என்றே குறிப்பிடுகின்றனர்.

தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் ஆகும். இவை தயார் செய்யும் முறையைக் கொண்டு பன்னிரெண்டு வகையாக வகைப்படுத்தப்படும்.. அவை..

கொதிநெய் - ஆமணக்குமுத்து முதலியவற்றை வறுத்து, இடித்து நீரில் கலக்கி அடுப்பில் ஏற்றிக் கொதிக்க வைப்பதால் உண்டாவது.

உருக்கு - வெண்ணெய், கோழிமுட்டைக்கரு முதலியவைகளை உருக்குவதால் உண்டாவது.

புடநெய் அல்லது குழிப்புட நெய் - அடியில் துளையிட்ட பானையில் சேங்கொட்டை, சிவனார்வேம்பு முதலியவற்றை பக்குவப்படி செயது நிரப்பி, மேலே மூடி மண்சீலை செய்து ஒரு குழி தோண்டி அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து மேலே சரக்குள்ள பானையை வைத்து புடம் போடுவதால் அடியில் இருக்கும் சட்டியில் இறங்கி இருப்பது.

சூரிய புட நெய் - எள்ளுடன் சேர்த்து அரைத்த கல்க மரந்தை (சூரிய) வெய்யிலில் வைத்து அந்த வெப்பத்தின் மூலம் உண்டாக்குவது.

தீ நீர் நெய் - சந்தனக்கட்டை முதலியவைகளைத் தூளாக்கிப் பட்டி கட்டித் தண்ணீரில் இட்டு இறக்குகின்ற தீ நீரினால் உண்டாவது.

மண் நெய் - சேறில்லாத நிலத்தில் இருந்து தானாகவே கொப்பளித்து உண்டாவது.

மர நெய் - மரத்தில் வெட்டப்படும் இடத்தில் உண்டாவது.

சிலை நெய் - உயர்ந்த மலைகளிலிருந்து வழிந்து வருவது.

நீர் நெய் - புழுகுச் சட்டம் முதலியவைகளை இடித்து, நன்றாக நசுக்கி தண்ணீரில் ஊற வைப்பதனால் உண்டாவது.

ஆவிநெய் - மட்டிப்பால், சாம்பிராணி முதலிய சரக்குகளை நெருப்பில் காயந்த மண் சட்டியில் போட்டு அதன் மேல் தண்ணீர் நிறைந்த தட்டு ஒன்றை வைக்க அந்தப் புகையால் தட்டின் அடிப்பாகத்தில் உண்டாவது.

சுடர் நெய் - கெந்தகம் முதலிய சரக்குகளை அரைத்துப் புதுத்துணியில் தடவி இரும்புக் கதிரி சுற்றிக் கட்டி அதை ஒரு முனையில் கொளுத்தி பெறப்படுவது.

பொறிநெய் - எள், கடலை முதலிய விதைகளிலிருந்து செக்கு போன்ற பொறி (இயந்திர) கருவிகளால் எடுக்கப்படுவது.

இந்தப் பன்னிரண்டு வகை நெய்களும் பயன்படுத்தும் முறையைக் கொண்டு ஐந்து வகையாகப் பிரிக்கப்படும்.

முடி நெய் - தலைக்கு இடுகின்ற நெய்.

குடி நெய் - உள்ளுக்குக் குடிக்கும் நெய்.

பிடி நெய் - தோல் மீது தடவிப் பிடிக்கும் நெய்.

தொளை நெய் - உடலில் உள்ள ஒன்பது துவாரங்களில் இடுகின்ற நெய்.

சிலை நெய் - புரைகளின் வழியாக ரத்தம், சீழ் முதலியவைகளை ஒழுகச் செய்யும் கெட்ட ரணங்களுக்கு இடுகின்ற நெய்.

16. மாத்திரை - மாத்திரை என்றால் அளவு என்று பொருள். எந்த அளவில் மருந்து கொடுக்க வேண்டுமோ அதற்குரிய அளவுக்குரியது மாத்திரை எனப்படும் உருண்டையாக இருப்பதால் உண்டை என்பர்.

சில சரக்குகளைச் சேர்த்து சாறுகள் அல்லது குடிநீர்களால் அரைத்து அளவாக உருட்டி உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வது.

17. கடுகு - மருந்துச் சரக்குகளை நெய் முதலியவைகளுடன் சேர்த்துக் காய்ச்சவும். அச்சரக்குகள் திரண்டு வரும்போது (கடுகு பதத்தில்) அதை உண்டு விடுவது. வடியும் நெய்யை மேல் பூச்சாகப் பூசுவது.

18. பக்குவம் - பாடம் செய்வது, பாவனம் செய்வது எனவும் அழைப்பர். கடுக்காய்போன்ற சில சரக்குகளை அரிசி கழுவிய நீரில் ஊறப்போட்டு மென்மையான பிறகு மோர், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பக்குவம் செய்து கொள்வது.

19. தேனூறல் - இஞ்சி, நெல்லிக்காய், கடுக்காய் முதலியவற்றை நீரில் ஊறவைத்து எடுத்து நன்றாக உலர்த்திக் கொண்டு சர்க்கரைப் பாகு அல்லது தேனில் ஊற வைத்துத் தயாரிப்பது.

20. தீநீர் - சரக்குகளைச் சேர்த்து வாலையிலிட்டு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து எரித்து இறக்குவது தீநீர் ஆகும்.

நாளைய பதிவில் மீதமிருக்கும் 12 வகை அகமருந்துகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அக மருந்துகள் 9 -14

Author: தோழி / Labels: ,


நமது உடலானது 96 தத்துவங்களினால் ஆனது என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இவற்றின் தன்மைகளை அறிந்தே மருந்துகளை தெரிந்தெடுக்க வேண்டுமாம். எனவே தேர்ந்த மருத்துவர்களினால் மட்டுமே சரியான மருந்தினை நோயாளிக்குத் தரமுடியும். எனவே சித்த மருந்துகளைப் பொறுத்தவரையில் நாமே கைவைத்தியமாய் எதனையும் மேற்கொள்ளக் கூடாது. இன்றைய பதிவில் அடுத்த ஏழு மருந்து வகைகளைப் பற்றி பார்ப்போம்.

9. வடகம் - தேவையான மருந்துச் சரக்குகளின் பொடியுடன் சர்க்கரை அல்லது வெல்லம் கலந்து பிட்டு செய்து கொள்ளவும். அந்த பிட்டை உரலில் இடித்து வேண்டிய அளவு சிறிதாக உருட்டி உலர்ததி எடுப்பது.

10. கிருதம் அல்லது வெண்ணெய் - தேவையான சரக்குகளை பொடி செய்து கொள்ளவேண்டும். பொடியின் எடைக்கு இரண்டு மடங்குபசுவின் நெய் சேர்தது அடுப்பில் வைத்து கிண்டவேண்டும். நெய் நன்றாக உருகிக் கலந்தவுடன் தண்ணீர் உள்ள மண் சட்டியில் ஊற்றவும். அதை தயிர் கடைவது போல் மத்தால் கடைந்தால் திரண்டு வருவதே வெண்ணெய் ஆகும்.

11. மணப்பாகு - தேவையான சரக்குகளை எடுத்து சாறு அல்லது குடிநீர் செய்து கொள்ளவும். அளவுக்கு ஏற்றபடி சர்க்கரை அல்லது கற்கண்டை பாத்திரத்தலிட்டுக் காய்ச்சவும். மணம் வரும் பக்குவத்தில் இறக்கிக் கொண்டு சரக்குப் பொடியை அல்லது சாற்றை கலந்து எடுத்துக் கொள்வது. 

12. நெய் - சாறு, கற்கம், குடிநீர் முதலியவைகளில் ஏதாவது ஒன்றோ அல்லது சிலவகைகளில் சேர்த்தோ பசுவின் நெய்யுடன் சேர்த்து, அடுப்பில் ஏற்றிக் காய்ச்சி பக்குவத்தில் இறக்கிக் கொள்வது.

13. இரசாயனம் - சரக்குகளைப் பொடியாக்கி சர்க்கரையும் நெய்யும் அளவுப்படி சேர்த்து இளகலாகப் பிசைந்து எடுத்துக் கொள்வது.

14. இளகம் அல்லது இலேகியம் - இது இருவகையில் தயாரிக்கப்படுகிறது.

(1) தேவையான குடிநீர் வகை, சாறு முதலியவைகளில் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்து அடுப்பில் ஏற்றவும் சாறு சுருங்கி மணம் வரும் நேரத்தில் சரக்குப் பொடியைத் தூவி, தேன் விடவும்.பின்னர் நெய் விட்டுக் கிளறிப் பக்குவத்தில் எடுத்துக் கொள்ளவும்.

(2) சர்க்கரையைப் பாத்திரத்தில் இட்டு, வேண்டிய அளவு பசும்பால் அல்லது நீர் விட்டு அடுப்பேற்றி மணம் வரும் பக்குவத்தில் தேனை விட்டுப் பொங்கி வரும் போது சரக்குப் பொடியைத் தூவி, பிறகு தேனையும் நெய்யையும் விட்டுக் கிளறி எடுத்துக் கொள்வது.

சமஸ்கிருத மொழியில் அவலேஹம் என்பது மருவி 'லேகியம்' என்ற பெயரே இளகத்திற்கு வழக்கில் சொல்லப் படுகிறது.

நாளைய பதிவில் மருந்து வகைகளான எண்ணெய் மற்றும் மாத்திரை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அக மருந்துகள்

Author: தோழி / Labels:


சித்த மருத்துவத்தில் அக மருந்துகள் 32 இருப்பதாக நேற்றைய பதிவில் பார்த்தோம். அவை முறையே 1. சாறு, 2. கரசம், 3. குடிநீர், 4. கற்கம், 5. உட்களி, 6.அடை, 7. சூரணம், 8. பிட்டு, 9. வடகம், 10. கிருதம் அல்லது வெண்ணெய், 11.மணப்பாகு, 12. நெய், 13. இரசாயணம், 14. இளகம் இலேகியம், 15. எண்ணெய் அல்லது தைலம், 16. மாத்திரை, 17. கடுகு, 18. பக்குவம், 19. தேனூறல், 20. தீநீர், 21. மெழுகு, 22. குழம்பு, 23. பதங்கம், 24. செந்தூரம், 25. பற்பம், 26. கட்டு, 27.உருக்கு, 28. களங்கு, 29. சுண்ணம், 30. கற்பம், 31. சத்து, 32. குருகுளிகை. என்பனவாகும்.

இவற்றில் முதல் எட்டு வகை மருந்துகளைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

1. சாறு - இலை, வேர், பட்டை, பூ, காய், முதலிய ஏதாவது ஒன்றை அல்லது எல்லாவற்றையுமாவது பிழிந்து சாறு எடுப்பது. சிலவற்றை இடித்துப் பிழிவதும்,  சிலவற்றை அரைத்துப் பிழிவதும், சிலவற்றை அவித்துப் பிழிவதும் உண்டு.

2. கரசம் - காயந்து (சுக்கு போன்ற) வேர், காய் வகைகளை இடித்துப் பொடியாக்கி தண்ணீர்விட்டுக் கலக்கிப் பிழிந்த நீரையாவது, அல்லது அவற்றின் சாற்றையாவது கொதிக்க வைத்து எடுத்துக் கொள்வது.

3. குடிநீர் - மருந்து நீர், உண்ணீர், குடிநீர், புனல், கியாழம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு.உலர்ந்த சருகுளயாவது, ஈரமாயுள்ள இலைகளையாவது இடித்து அதற்காகச் சொல்லப்பட்ட அளவுப்படி தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்வது. காய்ச்சத் தொடங்கும் போது இருந்த அளவில் நான்கில் ஒரு பங்கு, ஆறில் ஒரு பங்கு, எட்டில் ஒரு பங்கு,   இருபத்தி நான்கில் ஒரு பங்கு என்று மருந்திற்க்குத் தக்கப்படி காய்ச்ச வேண்டும்.

4. கற்கம் - ஈரமான அல்லது உலர்ந்த சரக்குகளை, மருந்துச் சரக்குகள் சேர்தது கல்லோடு கல்லாக ஒட்ட அரைத்துகெட்டியாக எடுத்துக் கொள்வது, கல்கம் என்றும் சொல்வர்.

5. உட்களி - உண்பதற்குரிய களி கிண்டுவது போல் மருந்துக்கான இலைகள், சரக்குகள் முதலியன சேர்த்து கிண்டி உண்பது. உள்ளுக்கு சாப்பிடுவதால் உட்களி என்பர்.

6. அடை - உண்பதற்குரிய அடை என்ற பண்டம் செய்வது போல் மருந்துச் சரக்குகள் சேர்த்து செய்வது.

7.சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது.   மெல்லிய பொடி இது. இந்தப் பொடி அதிக நாட்கள் கெடாமல் இருப்பதற்கும், வேறு மருந்துகளில் சேர்ப்பதற்கும் தூய்மைப்படுத்துவார்கள். மருந்திற்கு தேவையான பொடிகளைக் கலந்து கொண்ட பின்னர் பசும்பால் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். பசும்பாலும் தண்ணீரும் சேர்ந்த கலவையுள்ள பாத்திரத்தில் பிட்டுப்போல் வேக வைக்கவும். அல்லது இட்லிக் கொப்பரையில் இட்லித் தட்டின் மேல் நல்ல துணியைப் போட்டுப் பொடியைப் பரப்பி வேக வைக்கவும். அடியில் உள்ள பால் சுண்டும் வரை எரித்த பின்பு பொடிப் பிட்டை எடுத்து மறுபடியும் பொடியாககிச் சலித்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத முறையில் இப்படித் தூய்மை செய்யப்பட்ட பொருள் 'க்வாத சூரணம்' எனப்படுகிறது.

8. பிட்டு - முன்பு பொடியை தூய்மை செய்தது போல் செய்து சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து உண்ணக் கொடுப்பது.

நாளைய பதிவில் அடுத்த ஏழு மருந்து வகைகளை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மருந்து - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels:


நமது உடல் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் என்கிற ஐந்து கூறுகளின் கலவையே ஆகும். நமது முன்னோர்கள் இந்த விகிதங்களை கொண்டு ஒருவரின் உடலை வாதம் உடம்பு, பித்த உடம்பு, சிலேத்தும உடம்பு என மூன்றாய் பிரித்துக் கூறியிருக்கின்றனர். மேலும் நாம் உண்ணும் உணவே நமது உடலுக்கு வலுவையும், நோயையும் தருகிறது. இந்த இரு தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததுதான் பழந்தமிழரின் மருத்துவம். இதனை வள்ளுவர் பின் வரும் இரண்டே வரிகளில் விளக்குவது சிறப்பு.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.

திருக்குறள் துவங்கி தொல்காப்பியம், புறநானூறு, கலித்தொகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி, திரிகடுகம் போன்ற நூல்கள் தமிழரின் மருத்துவம் பற்றிய தகவல்களை நமக்குத் தருகின்றன. இவை தவிர அநேகமாய் எல்லா சித்தர் பெருமக்களும் மருத்துவம் பற்றிய தனித்துவமான நூல்களை அருளியிருக்கின்றனர். சித்தர்களைப் பொறுத்தவரையில் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற கோட்பாட்டினை உடையவர்கள். 

இதனை இன்னமும் எளிமையாய் சொல்வதாயின் நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத கூறுகளில் இரண்டு கூறுகள் இணைந்து ஒரு சுவையினை உருவாக்குகின்றன. இப்படி நமது உணவின் ஆறு சுவைகளும் ஏதேனும் இரு கூறுகளை பிரதிபலிக்கின்றன. நம் உடலின் தன்மைக்கேற்ப இந்த சுவை உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் உடல் நலத்துடன் வாழலாம்.

மேலே சொன்ன முறையில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது குறைபாடுகள் தோன்றும் போது அது நோயாகிறது. இந்த நோய்க்கான மருத்துவம் என்பது கூட பஞ்சபூதங்களின் சமநிலையை உடலில் மீட்டெடுப்பதாகவே இருக்கிறது. நோய் என்பது என்ன?, நோயாளியின் தன்மை அல்லது பாதிப்பு எத்தகையது?, அதை தீர்க்கும் வகை என்ன என்பதை அறிந்தே அதற்கான மருந்தை தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர். இதையே வள்ளுவரும்...

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்கிறார். சித்த மருத்துவத்தில் மருந்துகள் இரண்டு பெரும் பிரிவினில் அடங்குகின்றன. அவை முறையே, "அக மருந்து", "புற மருந்து" எனப்படுகிறது. உள்ளுக்கு சாப்பிடக் கூடியவை அக மருந்துகள் என்றும், உடலின் மேலே உபயோகிக்கக் கூடியவைகள் புற மருந்து என வகை படுத்தப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிரிவும் முப்பத்திரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு....

அக மருந்துகள்..

1.சாறு, 2.கரசம், 3.குடிநீர், 4.கற்கம், 5.உட்களி, 6.அடை, 7.சூரணம், 8.பிட்டு, 9.வடகம், 10.கிருதம் அல்லது வெண்ணெய், 11.மணப்பாகு, 12.நெய், 13.இரசாயணம், 14.இளகம் இலேகியம், 15.எண்ணெய் அல்லது தைலம், 16.மாத்திரை, 17.கடுகு, 18.பக்குவம், 19.தேனூறல், 20.தீநீர், 21.மெழுகு, 22.குழம்பு, 23.பதங்கம், 24. செந்தூரம், 25. பற்பம், 26. கட்டு, 27. உருக்கு, 28. களங்கு, 29.சுண்ணம், 30.கற்பம், 31.சத்து, 32.குருகுளிகை.

புற மருந்துகள்...

1.கட்டு, 2.பற்று, 3.ஒற்றடம், 4.பூச்சு, 5.வேது, 6.பொட்டணம், 7.தொக்கணம், 8.புகை, 9.மை, 10.பொடிதிமிர்தல், 11.கலிக்கம், 12.நசியம், 13.ஊதல், 14.நாசிகாபரணம், 15. களிம்பு, 16. சீலை, 17. நீர், 18. வர்த்தி, 19. சுட்டிகை, 20.சலாகை, 21.பசை, 22.களி, 23.பொடி, 24.முறிச்சல், 25.கீறல், 26.காரம், 27.அட்டை விடல், 28. அறுவை, 29.கொம்பு வைத்துக் கட்டல், 30.உறிஞ்சல், 31.குருதி வாங்கல், 32. பீச்சு.

இவை பற்றிய விளக்கங்களை இனிவரும் நாட்களில் பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அட்டைவிடல் - பிற்சேர்க்கை

Author: தோழி / Labels: ,


அட்டைவிடல் தொடருக்காக திரட்டிய தகவல்கள் சிலவற்றை பதிவின் நீளம் மற்றும் தொடர்ச்சி கருதி தவிர்க்க வேண்டியதாயிற்று. அந்த தகவல்களை இன்றைய பதிவில் தொகுத்திருக்கிறேன்.

தகுதியில்லாத அல்லது தவறான அட்டைகளை கடிக்க விடுவதால் உண்டாகும் விளைவுகளை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

விட்டவுருத் தானும் விழவுருவே யானக்கால்
வெட்டுருவாய் வீங்குமது வேதனையாந் – திட்டஞ்
சுரமாங் கலக்கமாஞ் சூழ்தினவுங் காணும்
உரமாகும் புண்ணு முதிர்ந்து.

தவறான அட்டைகளை சிகிச்சைக்கு பயன்படுத்தினால் நோயாளிக்குக் காய்ச்சல் மயக்கம் வேதனை உண்டாகும். மேலும் அட்டைவிட்ட இடத்தில் எரிச்சல் நமைச்சலுண்டாகிக் கடிவாயும் வீங்கும்.

விட்டவுருத் தன்னில் விஷஉதிரந் தான் சிக்கிப்
பட்ட வுருவைப் பலகாலும் – விட்டுவிடு
மத்தா லுருவடைய மான விஷமாகும்
முத்தார் தனத் தாய் மொழி.

நிரம்பக் குடித்துருவும் நித்திரை போய் மீள
வரம்பில் கடிகடிக்கி லதனைத் – திரும்பப்
புளியிட்டு வாங்கும் பிடித்திருந்தால் மீளக்
கருவுற்றுத் தான் கடிக்கும் காண்.

அட்டைதனை விட்டு அதன்மீதி லே சீலை
யிட்டுறையு மல்லாக்கால் ஈயிருந்து – முட்டக்
குடியாது பூசீக் குலைந்துவிடு மென்றே
துடியாரு மெல்லிடையாய் சொல்.

வீக்கம் விதனமிகு வேதனை தாங்கடினம்
தாக்குவிஷம் வேற்றுநிறந் தானணுகில் - போக்கி
விடுமட்டை தானென் றவனியிலுள் ளோர்க்குத்
திடமாக வேயிதனைச் செப்பு.

தேவைக்கு அதிகமாய் அட்டைகளை விட்டால் அதிக ரத்தம் உறிஞ்சிவிடும்.அதனால் நோயாளி நீரில்லாப் பயிர் போல வாட்டமடைந்து உயிர் துறப்பதற்கு வழியுண்டு.

வேண்டிய அளவு இரத்தம் வெளிப்படாவிட்டால் மீண்டும் அட்டையை விடலாம். ஆனால் நோயாளி மயக்க மடைந்தால் நிறுத்தவேண்டும். பிறகு மறுநாள் அட்டையை விடலாம். மேலும் சுடுநீர் கொண்டு ஒற்றடமிட கடிவாயினின்றும் இரத்தம் வெளிவரும்.

ஒரு முறை பயன்படுத்திய அட்டையை குறைந்தது ஏழு நாட்களுக்குள் திரும்ப சிகிச்சைக்கு பயன்படுத்தக் கூடாது. அதற்கு தேவையான ஓய்வு கொடுக்க வேண்டும், மாறாக அடுத்தடுத்து உபயோகித்தால் அது நச்சுத் தன்மையுடையதாகி விடுமாம். 

அதைப் போலவே அட்டையைப் பாதுகாக்கும் நீரானது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கொரு முறை மாற்றப்பட வேண்டும். அல்லாவிடில் அவ்வட்டை சோம்பலடைந்து நாளடைவிற் பயன்படாற் போய்விடும் என்கிறார்.

அட்டையைக் கடிக்க விட்டிருக்கும்போது அதன் மீது ஈரத்துணியை போடவேண்டுமாம். இன்றேல் ஈ மொய்க்கும். அதனால் அட்டையானது செம்மையாய்க் குடிக்காது.

அட்டைகள் தவறுதலாக மூக்கு, எருவாய், கருவாய் க்குள் சென்றுவிட்டால் அவ்வழிகளில் காடி நீரைப் பாய்ச்சினாலும், உப்புப் பொடியைத் தூவினாலும் அட்டை வெளி வந்து விடுமாம்.

அட்டைகளினால் தீரக்கூடிய சில முக்கிய நோய்களும் அந்நோய்களில் விடுவதற்குரிய இடங்களும் 

1. சுரத்துடன் கூடிய மார்பு அல்லரு வயிற்று நோயில், நோய் காணுமிடத்தின் மேல் விடலாம்.

2. குருதி மூலத்தால் வருந்துகிற ஒருவனுக்குக் குருதி தடைபடுவதினால் ஏற்படும் தலைவலியை நீக்குதற்கு அட்டையை எருவாயைச் சுற்றி விடலாம்.

3. கருப்பையில் ஏற்படும் கோளாறுகளுக்கும், சூதக வலியைத் தீர்ப்பதற்கும் தொடையின் உட்புறத்தில் அட்டையை விடலாம்.

4. அடிபட்ட வீக்கங்கள், கட்டிகள், கிரந்தி, வீக்கங்கள் ஆகிய நோய்களுக்கு அட்டைகளை பாதிக்கப் பட்ட இடத்தில் விடலாம்.

5. குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமல் இருந்தால் அட்டையை முதுகு நடுவின் மேல்புறத்தில் விடலாம்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அட்டைவிடல் - நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels: ,


அட்டைவிடல் சிகிச்சையில் அட்டையானது பாதிக்கப் பட்ட இடத்தில் இருக்கும் கெட்ட இரத்தத்தை உறிஞ்சுவதன் மூலமும், அப்போது அட்டையின் வாயில் இருந்து சுரக்கும் திரவம் இரத்தத்தோடு கலப்பதன் மூலமும் சிகிச்சை நடைபெறுகிறது.

பாதிக்கப் பட்ட இடத்தில் உள்ள வீக்கம் வற்றுதல் அல்லது வலி குறைதல் போன்றவையே இந்த சிகிச்சை பூர்த்தியானதற்கான அடையாளமாய் கருதப் படுகிறது. இதனை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

துட்டரத்தம் போனாக்கால் சோக முன்கூடிய
திட்டமுடன் வேதனையும் தீருமே - வட்டதன
மானே உருவினுக்கு மற்றொன்றும் வாராது
தானே தனக்குநிகர் தான்.

பொரித்தவெள் ளரைத்துப் பூசும்
போகுமவ் விரணங் கேளாய்
கருத்துடன் மந்த வாதம
கலந்தபித் தத்தால் வந்த
வருத்தமாம் வலிபெருக்கில்
வாதமாஞ் சோபந் தீர்த்து
திருத்தமா யட்டை யுண்ணுந்
திறந்திருந் திண்ணந் தானே.

இனி சிகிச்சை முடிந்த பின்னர் உடலில் கடித்திருக்கும் அட்டையை எடுக்கும் விதம் பற்றி பார்ப்போம். 

குடித்துவீ ழட்டைதனைக் கொள்தவிட்டி லிட்டுப்
பிடித்ததின்வாய் எள்ளதனைப் பெய்து – பிடித்து
விட்டுரத்தம் போனால் துலைநீரில் நீந்தவிட்டுக்
கட்டுவது மண்குடுவைக் காண்.

பாதிக்கப் பட்ட உறுப்பின் வீக்கம் அல்லது அங்கு இருக்கும் வலி குறையும் வரை ஒன்றில் இருந்து இரண்டு நாளைக்கு அட்டைவிடல் சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும். இயற்கையாக ஒன்று முதல் இரண்டு நாளைக்குள் நல்ல அட்டை வேண்டிய அளவு இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடும். அதன் பின் தானாகவே விழுந்துவிடும்.

ஒரு வேளை நிரம்பக் குடித்த பின்னும் கவ்விப் பிடித்துக் கொண்டிருக்குமாயின் கடிவாயில் காடி நீரைப் பெய்தல் வேண்டும். அல்லது பொடி செய்த கறியுப்பைத் தூவ அட்டை கீழே விழுந்து விடும் என்கிறார்.

இரத்தம் குடித்து கீழே விழுந்த அட்டையைத் தவிட்டிலிட்டு புரட்ட வேண்டும். பிறகு பொடி செய்த எள்ளை அதன் வாயில் தேய்க்கவேண்டுமாம். அதன் பின் சுத்த நீரில் விட்டு குருதி வெளி வரும்படி செய்ய வேண்டுமாம். பின்னர் அதைப் புற்று மண் கரைத்த தெளி நீரில் விட்ட பிறகு, அந்த அட்டைகளைச் செவ்வல்லி, கொட்டி, பசு மஞ்சள் இவைகளின் கிழங்கை அரைத்துக் கலந்த நீரில் விட்டு பாதுகாக்க வேண்டும். முக்கியமாக பயன்படுத்திய அட்டைகளையும் பயன்படுத்தாத அட்டைகளையும் தனித் தனியே வைக்க வேண்டும் என்கிறார்.

அட்டையை நீக்கிய பின்னர் கடிவாயில் இருந்து இரத்தம் பெருகினால் அல்லது புண் ஏற்பட்டால் அதைத் தடுக்கும் விதம் பற்றியும் அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

பொன்னிற முதிர்ந்த எள்ளைப்
பொருகுபோ லரைத்த இன்னுஞ்
சென்னிற வெண்ணெய் தன்னைச்
சிகரத்தே நொக்கக் கொண்டு
மின்னனை யாய்நீ கேளாய்
விரைந்துட நுதிரம் பாய்ந்தால்
புன்னைப்பூ நிறம தாகப்
போற்றேள் ளரைத்துப் பூசே.

சாதிரந் தன்னை கற்றுந்
தவத்தினிற் பொருளைக் கேட்டுங்
காத்திரந் துய்யனாகில் கைவந்த
தோர் கையைக் கண்டு
பார்த்திடு மிவையே யென்று
பரிவுட நிவனைப் பற்றித்
தீர்த்து நோய் தவிர்க்க வேண்டிச்
செகந்தனில் விடுவித் தாரே.

கடி வாயில் இருந்து இரத்தம் வெளியேறினால் படிகாரம் பொடி அல்லது வெங்காரப் பொடியைத் தூவ நின்று விடும். மேலும் அட்டை கடித்த இடத்தில் புண் ஏற்பட்டால் காரெள், கற்றாழை இவ்விரண்டையும் காடி நீரில் அரைத்து மேலுக்கு பூசலாம். அல்லது கற்றாழை மடலைச் சுட்டு இரண்டாகப் பிளந்து மஞ்சட் பொடியைத் தூவி புண்ணில் வைத்துக் கட்டலாம் என்கிறார்.

இத்துடன் அட்டைவிடல் சிகிச்சை தொடர் நிறைவடைந்தது.

தொடரின் நீளம் கருதி கத்தரிக்கப் பட்ட சில தகவல்களை நாளைய பதிவில் பிற்சேர்க்கையாய் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


எப்படி அட்டை விடுவது!

Author: தோழி / Labels: ,


அட்டை விடல் சிகிச்சை முறையில் இதுவரை முன் தயாரிப்புகள் மற்றும் அதற்கான பக்குவங்களை பார்த்தோம். இன்றைய பதிவில் சிகிச்சையின் முக்கிய கட்டமான அட்டையை பாதிக்கப் பட்ட உறுப்பில் எவ்வாறு விடுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

பாதிக்கப் பட்ட உறுப்பின் பாதிப்பு மற்றும் அதன் வீக்கத்தை பொறுத்து அட்டைவிடலை தீர்மானிக்க வேண்டும். இந்த பாகத்தில் எப்படி அட்டையினை கடிக்க விட வேண்டும் என்பதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

அமிர்த பாகம் விஷபாகம்
அறிந்தே யட்டை தனைவிடுக
அமிர்தபாகத் தான வட்டை
தனை யிப்பால்நீ தான்விடுக
குமுத மலர்வாய் மடமானே
கொடிய விஷப்பா கத்தேற்றித்
திமிர மாசு பெண்ணுருவைத்
திறந்தே விடுக செப்பினரே.

முன்னே சொன்னோம் முழுவதும்
மொய்குழல் மாதேநீ கேளாய்
அன்னம பாலில் நீர்பெய்து
அயின்றாற் போல விஷமகலும்
இன்னஞ் சொல்லி லெண்விரலில்
உதிர மெல்லாம் வாங்கிவிடும்
பொன்னை யணியும் மேனியளே
மேலும் புகலக் கேளாயே.

நீர் நிறைந்த ஒரு சிறு குடுவையில் அட்டையை விட்டு அந்த குடுவையின் வாயை அட்டை விட வேண்டிய இடத்தில் கவிழ்த்து நீர் வெளியேறாத வண்ணம் பிடித்தல் வேண்டும். அப்போது அட்டை நோயுள்ள இடத்தைப் பிடித்துக் கொள்ளும். 

ஒரு வேளை மேற்சொன்ன முறையில் அட்டை கவ்விப் பிடிக்காவிட்டால் அந்த அட்டையை ஒரு சுத்தமான வெண் துணியில் எடுத்து விட்டு, பாதிக்கப் பட்ட உறுப்பினை மறுபடியும் துடைத்துப் பாலைத் தடவி அதன் மேல் அட்டையை விட அது பற்றும் என்கிறார்.

ஒருவேளை இந்த இரண்டு முறையிலும் அட்டை பிடிக்கா விட்டால் பாதிக்கப் பட்ட இடத்தில் சிறு கூரிய கத்தியால் மேலாகக் கீறிவிட குருதி சற்றே கசியும். அவ்வாறு கசிகின்ற குருதியை அவ்விடத்திலேயே தடவிவிட்டு அதன்மீது அட்டையை விட விரைவில் பற்றிக் கொள்ளுமாம்.

அட்டை விட்டாயிற்று, இனி இந்த சிகிச்சை நிறைவேறியதை அறிவது எப்படி?, சிகிச்சை முடிந்த பின்னர் அட்டையை எடுப்பது எப்படி?

விவரங்கள் நாளை.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அட்டைவிடலும், நாட்களும்!

Author: தோழி / Labels: ,


அட்டைவிடல் மருத்துவமானது, மற்றெந்த மருத்துவ முறைகளைப் போலவே தனித்துவமான அலகுகளை கொண்டிருக்கிறது. அட்டைகளை தெரிந்தெடுப்பதில் துவங்கி நோயாளியை தயார் செய்வது வரை ஒவ்வொன்றும் பிரத்யேக கவனிப்புடன் செய்திட வேண்டுமென பார்த்தோம். அந்த வகையில் அட்டை விடுவதற்கான தினங்களைப் பற்றிய தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

உடலின் பல்வேறு பாகங்களில் நோயின் தன்மைக்கேற்ப அட்டை விடல் சிகிச்சை பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. எந்த பாகத்தில் என்று அட்டைவிடலாம் என்பதைப் பற்றிய தகவல்களை தேடினால், எந்த தினத்தில் எந்த பாகத்தில் அட்டை விடக்கூடாது என்கிற தகவலையே அகத்தியர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவரங்கள் "அகத்திய்ர் நயனவிதி 500" என்கிற நூலில் பின்வருமாறு கூறப் பட்டிருக்கிறது.

சீர்திரு பிரதமை சேர்ந்திடும் பெருவிரல்
நேர்பெறு முள்ளங் காலது துதியை
திரிதியை முழங்கால் சேர்ந்திடு மென்க
சதுர்த்தி பெருந்துடை தாவிய பஞ்சமி
குய்யத் திடத்தே குடியிருந் திடுமாம்
ஐயமே சஷ்டி அமர்ந்திடும் நாபி
சப்தமி முலையில் தானிருந் திடுமால்
ஒத்திடு மஷ்டமி ஓதினோங் கரத்தில்
மெச்சிடும் நவமி மேவிய கழுத்தில்
அதரந் தசமி ஆகுமவ் விடத்தே
ஏகா தசியில் இருந்திடும் நாவில்
துவாதசி தன்னில் துயின்றிடும் நெற்றி
திரயோ தசியில் சேர்ந்திடும் புருவம்
சதுர்த்தசி பிடர் தானிருந் திடுமால்
உதித்திடும் பூரணம் உச்சியி லுறையும்
செப்பிய அமிர்தம் நிலைநின் றதனால்
சஸ்திரம் பண்ணிகல் தானெழும் நோய்கள்
கொப்புளித் திடினுங் குத்துப் படினுங்
தப்பிலா அரவந் தாங்கடித் திடினும்
அட்டை கடிக்கினும் அடிதடிச் சிலந்தியும்
வயிற்றிற் பிணியென மரணம தாமே
காசினி தனிலே கைவிட தாரி
திதிகளை யறிந்துசெய்திடப் பலிக்கும்
மலைதிகழ் முனிவர் மகிழ்ந்துரைத் தனரே.

இதன் படி கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில், குறிப்பிட்ட இடங்களில் அட்டை விடலை தவிர்க்க வேண்டுமென கூறுகிறார்.

திதி.                  இடம்.

பிரதமை - பெருவிரல்
துதியை -  உள்ளங்கால்
திரிதியை - முழங்கால்
சதுர்த்தி - தொடை
பஞ்சமி - குய்யம்
சஷ்டி - நாபி
சப்தமி - மார்பு
அஷ்டமி - கை
நவமி - கழுத்து
தசமி - கீழுதடு
ஏகாதசி - நாக்கு
துவாதசி - நெற்றி
திரயோதசி - புருவம்
சதுர்த்தசி - பிடரி
அமாவாசை அல்லது பௌர்ணமி - உச்சி

இது தவிர நமது கழுத்தில் விம்மிக் காணும் காரிரத்தக் குழாயிலும், நாடி உணரப்படும் வீக்கங்களிலும் அட்டையை விடக்கூடாது என்றும்,  நாடி உணரப்படும் பகுதியில் உள்ள வீக்கங்களில், அந்த வீக்கத்திலிருந்து நான்கு அல்லது ஐந்து அங்குலம் தள்ளி அட்டையை விடலாம் என்கிறார். 

எல்லாம் சரிதான், இனி அட்டையை எப்படி விடுவது?

விவரங்கள் நாளைய பதிவில்.....


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அட்டைவிடல் - நோயாளியை தயார் செய்வது எப்படி?

Author: தோழி / Labels: ,


அட்டை விடல் வைத்திய முறையில், கடந்த வாரம் அட்டைகளின் வகைகள், அவைகளை எவ்வாறு கண்டறிவது, தரமறிவது மற்றும் பாதுகாப்பது பற்றிய விவரங்களை பார்த்தோம். இன்றைய பதிவில் இந்த சிகிச்சையின் துவக்க நிலையான நோயாளியை தயார் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

நவீன மருத்துவதுறையில் நோயாளியை தயார் செய்வது என்பது தனியொரு பெரும் பாடப் பிரிவாகவே இருக்கிறது. அகத்தியரும் கூட தனது அட்டைவிடல் மருத்துவத்தில் நோயாளியை தயார் செய்யும் முறையினையும், அதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறார்.

அட்டைவிடக் கொம்புவைக்க ஆனசிலை யாற்குத்த
ஒட்டிச்சுடவாங்க ஒள்ளுதிரம் - பட்டினிதான் 
ஆகாதே யென்று மவனிதனி லுள்ளோர்க்குப்
பாகார் மொழியாய் பகர்.

சத்தியில் மாந்த ருக்குந்
தையல்பிள் ளையர்த மக்கும்
ஒத்துநின் றூட்டி வித்து
உறக்கமுந் தவிரப் பண்ணி
மத்தியா னத்து மேலோய்
மண்கொண்டு சுத்தி பண்ணிப்
பற்றிய நோய்கள் தன்னைப்
பார்த்துநீ அட்டை கட்டே

அட்டை விடல் சிகிச்சைக்கு முதலில் நோயாளிக்கு முறைப்படி வாந்திக்கும் பேதிக்கும் கொடுத்து அவருக்கு வியர்வை உண்டாக்கக் கூடிய ஏனைய பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அட்டையை விடும் நாளில் ஏற்ற அளவில் உணவையளித்து அவரை தூங்காவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். இவை பொது தயாரிப்புகள்.

இனி உடலில் அட்டை விட வேண்டிய இடத்திற்கான தயாரிப்புகளை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.அட்டை விட வேண்டிய இடத்தை உவர்மண் கொண்டு சுத்தம் செய்து, அவ்விடத்தில் காவி மண்ணை ஈரமாகப் பூசி, எந்த இடத்தில் நோய் அதிகமாக இருக்கிறது என்று அறிந்து அந்த இடத்தில் அட்டை விடுவதே சிறந்த பயனைத்தரும் என்கிறார்.

பிற்பகலில் அட்டை விடுதல் நன்று. எனினும் குழந்தைகட்குக் காலையில் விடுதல் நலம். மாலைக் காலத்தில் விடுவது நல்லதல்ல ஏன் எனில் இரவில் அட்டை கடித்த கடிவாயினின்றும் இரத்தம் அதிகளவில் வெளியேறக் கூடும் அப்போது அதை கவனத்தில் கொள்ளாது தூங்க நேரிட்டால் அதிக இரத்த இழப்பால் நோயாளி உயிர் இழக்க நேரிடுமாம்.

இந்த எல்லா நாளும் அட்டைவிடல் சிகிச்சையை எந்த நாளில் செய்வது?

விவரங்கள் நாளைய பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அட்டைகளை இனம் காணுதல்!, பாதுகாத்தல்!

Author: தோழி / Labels: ,


நேற்றைய பதிவில் அட்டைகளின் வகைகளைப் பற்றி பார்த்தோம். அவற்றில் நல்ல அட்டைகள் என வகைப் படுத்தப் பட்ட அட்டைகளே இந்த அட்டைவிடல் சிகிச்சைக்கு பயனாகும். இன்றைய பதிவில் சிகிச்சைக்கு தகுதியான நல்ல அட்டைகளை எப்படி இனம் காணுவது, அவற்றை எப்படி பாதுகாப்பது போன்ற தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

அட்டைவிடல் சிகிச்சைக்கு தகுதியான அட்டைகளின் வரையறையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

அஞ்சுவிரல் நீளத்தில் அட்டை விடலாகும்
மிஞ்சவே அட்டை விட வேண்டாம் – மிஞ்சி
கடிவாய் தினவின் கடுத்து வலி வீங்குந்
துடியாரு நல்லிடையாய்ச் சொல்.

இந்த மருத்துவத்திற்க்குப் பயன்படுத்தப்படும் அட்ட்டைகள் ஐந்து விரற்கடை நீளம் உள்ளனவாக இருக்க வேண்டும் என்கிறார். இந்த வரையறைக்கு உட்படாத அட்டைகளை கடிக்க விட்டால் அவை ஆபத்தை உண்டாக்குமாம்.

அட்டைகளில் ஆண் பெண் அறியும் விதம்...

அட்டையில் பெண்ணும் ஆணும்
அறிந்திட வேணு மாகில்
கொட்டியும் பதுமந் தானுங்
கூடவே நீரில் போட்டால்
அட்டையை விட்ட வாறே
ஆண்பது மத்திற் சேருங்
கொட்டியிற் பேசு சேருங்
குறியதனை யறிந்து கொள்ளே.

தாமரையும், கொட்டியும் கலந்துள்ள நீரில் இவ்வட்டைகளை விட்டால் ஆண் அட்டைகள் தாமரையில் போய் ஒட்டிக் கொள்ளுமாம். பெண் அட்டைகள் கொட்டியைச் சேருமாம். இந்த செயல்களைக் கொண்டு அட்டைகளின் பால் வகையை அறியலாம். 
                                                                                   
இப்படி இனம் கண்டு சேகரித்த அட்டைகளை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றியும் அகத்தியர் விளக்கியிருக்கிறார்.

அட்டை தோற்றும் வகையதனை
அறியக் கேளாய் அரக்காம்பால்
கொட்டிக் கிழங்கு பசுமஞ்சள்
கோல கழுநீர் வார்த்தரைத்து
மட்டி தாகக் கரைத்ததிலே
வாய்த்த உருவைத் தேற விட்டுக்
கட்டிக் கொண்டுபோய்விடுவீர்
காலன் தவிர்க்குங் கண்டீரே.

அட்டைகளைச் செவ்வல்லி, கொட்டி, பசு மஞ்சள் இவைகளின் கிழங்கை அரைத்துக் கலந்த நீரில் விட்டு பாதுக்காக்க வேண்டும் என்கிறார்.

இதுவரை அட்டைகளைப் பற்றிய தகவல்களை பார்த்தோம். இனி வரும் நாட்களில் இந்த சிகிச்சை முறை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


எத்தனை வகை அட்டைகள் இருக்கின்றன?

Author: தோழி / Labels: ,


தற்கால அறிவியல் ஆய்வேடுகளுக்கு சற்றும் குறையாத தரத்தில், அகத்தியர் தனது நூலில் அட்டைகளின் வகைப்பாட்டியலை விவரித்திருக்கிறார். இந்த தகவல்களை நாம் எந்த அளவு மேம்படுத்தி செயலாக்கத்தில் வைத்திருக்கிறோமா என்பது கேள்விக்கும், விவாதத்திற்கும் உரியது.

அகத்தியரின் நயனவிதி 500ல் அட்டைகள் மூன்று பெரும் பிரிவுகளாய் பிரித்துக் கூறப் பட்டிருக்கிறது அவை முறையே

1 - தீய அட்டைகள்
2 - சாதாரண அட்டைகள்
3 - நல்ல அட்டைகள்


என்பதாகும். இனி இவற்றை கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்.

1 - தீய அட்டைகள்

ஆகா வட்டை யது கேளாய்
அலவன் தவளை நீர்ப்பாம்பு
மேகா சலத்தில் பிறந்தனவும்
வேண்டா சருகிற பிறந்தனவும்
போகாச் சுனையில் பிறந்தனவும்
பொல்லா வட்டையிவையென்றே
பாகார் மொழிகொள் பைந்தொடியே
பாரா யட்டை வகுப்பினையே.

இவை தவளை, நீர்ப்பாம்பு, பதனழிந்த இலைகள், புற்கள் நிறைந்துள்ள குளங்கள், குழிகள் ஆகிய இடங்களில் இருக்கும். அத்துடன் இவை இவை கருத்த நிறத்துடனும் கருஞ்செம்மை நிறத்துடனும் வான வில்லைப் போல பல நிறத்தையும் உடையனவாகவும் காணப்படுமாம்.

2 - சாதாரண அட்டைகள்

இவை பொன்னிறத்தில் சற்றுக் கருமைநிறம் சேர்ந்த நிறத்துடனிருக்கும்.

3 - நல்ல அட்டைகள்

நன்னட்டை தனக்குள்ள அழகான லட்சணத்தைத்
திட்ட முடன் நடுவேசெப்பக்கேள் – குடடிக்குப்
பாலமுத மென்னுமொழி பாவைநல் லாயுருக்கள்
நாலுவகை யுண்டென்றே நாட்டு.

வெள்ளைநிற மொன்று மிகுநீலந் தானொன்று
கள்ளமிலாப் பொன்மை கருப்பொன்று – எள்ளியதாம்
வாசமிகும் பூங்குழலீர் மற்று மிவைகளெலாந்
தேசகுண மாமென்று செப்பு.

அழுகா சலத்தில் பிறந்தவுரு
அறவே மேனி சரசரக்கும்
மெழுகா நிலை சீர்ச்சுனையிலுறு
உருவை யொழிய அடைகாக்குங்
கழியா நீரில் பிறந்தவுருக்
கழுநீ ரான நிறமதுபோல்
ஒழியா வயிறு சிவந்திருக்கும்
உண்மை யிதுவென் றுணர் வாயே.

நீர் ஊற்றுக்களிலும் அருவிகளிலும் மணலின் கீழ் மறைவாகவுமிருக்கும். இதன் வயிற்றுப் பக்கம் பெரும்பகுதிசெங்கழுநீர்ப் பூவின் நிறத்தை ஒத்திருக்கும்.

நல்ல அட்டை நான்கு வகைகளாய் பிரித்துக் கூறுகிறார் அவை..

1. முதற் பிரிவில் சேர்ந்தவை வெண்மையும் சற்றுப் பொன் நிறமும் பெற்றிருக்கும்.
2. இரண்டாம் பிரிவிற் சேர்ந்தவை செங்கழுநீர்ப்பூ நிறத்தைப் பெற்றிருக்கும்.
3. முன்றாம் பிரிவிற் சேர்ந்தவை பவளத்தின் நிறத்தையும் அரிசி நிறத்தையு பெற்றிருக்கும்.
4. நான்காமவை பச்சை நிறமும் எலுமிச்சைபழ நிறமும் பெற்றிருக்கும்.

நாளைய பதிவில் அட்டைகளில் ஆண்,பெண் வேறுபாடுகளை கண்டறிவது மற்றும் சிகிச்சைக்கு தகுதியான அட்டையை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அட்டை விடல் சித்தமருத்துவமே!!

Author: தோழி / Labels: ,


அட்டை விடல் என்பது தற்போது பல்வேறு மருத்துவ முறைகளின் ஒரு அங்கமாக இருக்கிறது. எனவே இது எந்த மருத்துவ முறையை சேர்ந்தது என்பது விவாதத்திற்கு உரியது. எனினும் தற்போதுள்ள மருத்துவ முறைகளில் காலத்தால் மிகவும் பழைமையானதான சித்த மருத்துவத்தில் இது பற்றிய தெளிவான விளக்கங்களும் வரையறைகளும் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில் நாம் இதனை தமிழரின் மருத்துவ முறையாகவே கருதிடலாம்.

அட்டை விடல் பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் நயனவிதி 500" என்ற நூலில் விரிவாகவும் தெளிவாகவும் கூறியிருக்கிறார். இனி வரும் நாட்களில் அந்த தகவல்களை இங்கே பார்க்க இருக்கிறோம். இந்த அட்டை விடல் வைத்தியத்தின் நோக்கத்தை அகத்தியர் பின் வருமாறு கூறிப்பிடுகிறார்.

அட்டையின் விதிதனை
யறிய யாவருந் திட்டம்
தாகவே செப்ப வுன்னினேன்
மட்டமர் குழலி னாள்
வரன ளித்திடும் இட்ட
விநாயகன் இணையடி போற்றியே.

முன்னமே கேளட்டையின் குணந்தான்
மொய்குழல் மாதே நீ கேளாய்
அந்நா ளன்னம் பால்பருகும்
அது போல் வாங்கும் விஷநீரை
நன்னாள் பார்த்து நோயறிந்து
நயனந் தன்னில் விடுவாயால்
சொன்னோஞ் சொன்னோம் நாற்றிசையுந்
துலங்கச் சொன்னோஞ் சொன்னோமே

அன்னப் பறவையானது பாலில் கலந்திருக்கும் தண்ணீரை பிரித்து எடுத்து விடுவதைப் போல அட்டையானது நமது உடலில் உள்ள நஞ்சு நீரை பருகி குருதியை தூய்மை செய்கிறது என்கிறார். எனவே நோயின் தன்மை அறிந்து அதற்குண்டான நாளில் அட்டை விடல் செய்தால் நோய் தீரும் என்கிறார் அகத்தியர்.

அட்டை விடலின் நோக்கத்தை தெளிவாகச் சொன்ன அகத்தியர், அட்டையின் வடிவத்தையும் வரையறுத்திருக்கிறார்.

ஆதியோ தியவே தத்தில்
அட்டைக்கு மேனி யுந்தான்
ஏதெனில் பல்லு மூன்று
மியன்றஅஞ் சடுக்குத் தோலும்
ஓதிய முகமும் பச்சை
உதிரமுஞ் சிவப்பாய் பின்னை
தீதிலாப் பக்க மிரண்டும்
பருத்திடும் நரம்பு சேரும்.

அரவின் வாய்த் தேரை போன்றும்
அணிமழுத் தலையே போன்றும்
பருதியின் பைங்கண் போன்றும்
பல மணி சிதறி நாற்போல்
விரவியே பல் நெ கிழ்ந்து
மெத்ததெனக் கடிக்கும் அட்டை
கருதியே காலன் தன்னைக்
கட்டிடுங் காயந் தானே.

அட்டையின் உடலானது ஐந்து அடுக்கு தோலினால் ஆனது. மூன்று பற்களை உடையதாக இருக்குமென கூறுகிறார். மேலும் அதன் இரு பக்க ஓரங்கள் தடித்திருப்பதுடன் அதன் இரத்தம் சிவப்பு நிறத்தில் இருக்குமாம். இப்படி பட்ட அட்டையானது உடலை கடிக்க விட்டால் உடலை நோயின்றி காத்து எமனை நெருங்க விடாது செய்யலாம் என்கிறார் அகத்தியர்.

நாளைய பதிவில் அட்டையின் வகைகளைப் பற்றிய அகத்தியரின் தெளிவுகளை பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அட்டை விடல் (Leech Therapy) ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels:


பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆச்சர்யமும், அருவெறுப்பும் தரக் கூடிய சில மருத்துவ முறைகள் உள்ளன. அப்படியான ஒரு மருத்துவ முறை பற்றியதே இந்த தொடர். தமிழில் "அட்டை விடல்" என அறியப் படும் இந்த மருத்துவ முறையினை ஆயுர்வேதத்தில் "ரக்த மோக்‌ஷ்ன்" என்றும் ஐரோப்பிய கண்டத்தில் "Hirudotherapy" என்றும் அறியப் படுகிறது.

அட்டைகள் என்பவை புழு இனத்தை சேர்ந்தவை. மழைக் காலங்களில் நமது வீட்டோரங்களிலும், நீர் நிலைகளின் அருகாமையிலும் இவற்றை காணமுடியும். தற்போதைய அறிவியல் வகைப்பாட்டின் படி 500 க்கும் மேற்பட்ட அட்டைகள் கண்டறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பிட்ட சிலவகை மட்டுமே இந்த வகை மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது.

அதென்ன அட்டைவிடல் என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கும்.

மருத்துவ சிகிச்சை என்பது இரண்டு பெரும் பிரிவுகளாய் அறியப் படுகிறது. ஒன்று அக வைத்தியம், மற்றது புற வைத்தியம். அக வைத்தியம் என்பது மருந்தினை உள்ளுக்குள் உண்ணக் கொடுப்பதன் மூலம் சிகிச்சை அளிப்பது, மற்றது புற வைத்தியம். இது உடலின் மேற்பரப்பில் சிகிச்சை செய்வது. இது உலகில் உள்ள எல்லா வகை மருத்துவ முறைகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் சித்த மருத்துவத்தில் பல்வேறு புற சிகிச்சை முறைகள் கூறப் பட்டிருக்கிறது. அவற்றில் அட்டை விடல் என்பது ஒரு வகை சிகிச்சை முறை.

இந்த இடத்தில் ஒரு தகவலாக சித்த மருத்துவத்தின் புற சிகிச்சை முறைகளையும் பட்டியலிட விரும்புகிறேன். அவை கட்டிகை, வர்த்தித்தல், நீர், சீலை, களிப்பு, தொக்கணம், பொட்டணம், வேதுகாட்டல், பூச்சு, ஒற்றடம், பற்றிடல், கட்டுதல், பீச்சு, புகை, மையிடல், பொடியிடுதல், நசியம், கலிக்கும், ஊதல், நாசிகாபரணம், முறிச்சல், கீறல், காரம், அறுவை, பட்டை கட்டல், உறிஞ்சல், அசுத்த ரத்தத்தை வாங்குதல், அட்டைவிடல் பசை, களி, சலாகை, சிட்டிகை என்பனவாகும்.

இவற்றில் அட்டை விடல் என்பது ரத்தத்தை உறிஞ்சக் கூடிய அட்டைகளை உடலின் மேற்புறம் விட்டு கடிக்க விடுவதன் மூலம் அளிக்கப் படும் சிகிச்சை முறையாகும். நோயின் தன்மை மற்றும் தீவிரத்தை பொறுத்து இந்த அட்டை விடல் உடலின் குறிப்பிட்ட பகுதியில் விட்டு அந்த இடத்தில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சிடச் செய்யும் முறையே அட்டை விடல் ஆகும்.

இந்த முறையில் இரத்தக் கட்டு, வீக்கம், அடிபட்டதால் ஏற்படும் காயங்கள், தலைவலி,வாந்தி, மூட்டுவலி, தோல் வியாதிகள், பெண்களுக்கான மாதவிலக்கு பிரச்சினைகள் போன்றவைகளை குணமாக்குகின்றனர்.

எல்லாம் சரிதான், இதில் சித்தர்கள் எங்கே வருகிறார்கள் என்ற கேள்வி நியாயமானதே...

விவரங்கள் நாளைய பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வச்சிரகாய ஜாலம்

Author: தோழி / Labels: , , ,

சித்தர்கள் அருளிய ஜாலங்கள் பற்றிய தொடர் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இன்றைய பதிவில் தட்சிணாமூர்த்தி அருளிய வச்சிர காய ஜாலம் பற்றி பார்ப்போம். வச்சிர காயம் என்றது இந்திரனின் கையில் இருக்கும் வச்சிராயுதம் போன்ற உறுதி படைத்த தேகம் பெருவதற்கான ஜாலம். இதை ஒரு காய கற்ப முறை என்றும் சொல்லலாம்.

இந்த தகவல் தட்சிணாமூர்த்தி அருளிய "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

பலமான கற்பமிது மண்டலந்தானையா
பொச்சாலி யரிசி பச்சைப்பயறு மொன்றாய் சேர்த்து
வாமென்று பொங்கி தேக்கிலையில் கொட்டி
வாவின்பசும் பால்படிதா னுண்பீராகில்
போமென்றும் புளியாரை முப்பூவினுப்பும்
பேராக வதைக்கடைந்து உண்ணலா மைந்தா
நாமென்று மலைமிளகு காரமதுவாகும்
நண்பான பச்சைப் பயறு குழம்பதுவுமாமே

அமென்று இம்முறையில் மண்டலம் கொள்வீர்
யன்பான பித்தநீர் கும்பஸ்தனம் போல
வேமேதான் சலமேல்லாம் விழுந்தங்கே போகும்
விடுபட்டால் பித்தநீர் விந்து கல்லாகும்
நாமேதான் இந்தப்படி ஞாயமதாய் சொன்னோம்
நரைதிரையும் மற்றுப்போ மண்டலத்துக் குள்ளே
ஏமேதா மெழுகு வச்சிரக் காயமாகு
மியம்பினதோர் வச்சிரகாய சாலமாச்சே

நிலையான காயமதில் நோய்வருகாதையா
நிராமயத்தை தினந்தோறும் நின்றுகளிகூர்வாய்
அலையாதே யொருமனதாய் மண்டலங் கொள்வீரால்
ஆயுசுக்கு தினந்தோறும் பயமில்லை வயதுபதினாறாம்
குலையாதே நாய்போல வாழ்வைச் சேதமாக்கா
கூடுவா றோடே கூடாதே குறிப்பாக நில்லு
துலையாதே பெண்மாய்கை விட்டபோதையா
சொன்னதெல்லாம் மாடுமடா துதி பெறுவாய் நீயே

பொச்சாலி அரிசியையும், பச்சைபயறும் ஒன்றாக சேர்த்துப் பொங்கி அந்த சோற்றை, தேக்கு மரத்தின் இலையில் கொட்டி அதனுடன் ஒரு படி பசும் பாலை சேர்த்து உண்ண வேண்டுமாம். அப்படி உண்ணும் போது புளியாகீரை, முப்பூவின் உப்பு, காரத்திற்க்கு மலைமிளகு ஆகியவை சேர்த்து கடைந்து உண்ணலாமாம், பச்சைப் பயற்றை குழம்பிற்கு பயன்படுத்தி கொள்ள வேண்டுமாம். இவை தவிர உணவில் வேறு எதனையும் சேர்க்கக் கூடாது என்கிறார் தட்சிணா மூர்த்தி..

மனதை தளரவிடாமல் ஒரு மனதாய் இந்த முறையில் ஒரு மண்டலம் தொடர்ந்து உண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற நீரெல்லாம் வெளியேறி, பித்தநீர், விந்து எல்லாம் கல்லாகுமாம், அத்துடன் இந்த ஒரு மண்டலத்திற்குள் நரைதிரை யாவும் நீங்கி, உடல் மெழுகு போல் பளிச்சென வச்சிரமாகும் என்கிறார்.

இப்படி ஒரு மண்டலம் தொடர்ந்து உண்பவரின் உடல் அழியாது நிலைத்துவிடும் என்றும், அப்படி நிலைத்த உடலில் நோய் அணுகாது என்றும் கூறுகிறார்.மேலும் ஆயுளுக்கு பயமில்லாமல் இருப்பதுடன் என்றும் பதினாறு வயது போல் இருக்கலாம் என்கிறார்.

இந்த முறையில் பத்தியமாக பெண்சேர்கை தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார். இந்த வித்தையை "வச்சிரகாய சாலம்" என்றே தட்சிணாமூர்த்தி கூறியிருக்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கனமான பொருட்களை இலகுவாய் தூக்கும் ஜாலம்.

Author: தோழி / Labels: ,

தட்சிணா மூர்த்தி அருளிய ஜால வரிசையில் இன்று கனமான பொருட்களை இலகுவாய் தூக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

ஆடவே யின்னமொரு கருவதனைக்கேளு
அப்பனே குன்றுடைய தாங்கி மூலம்
நாடியே கெழிஞ்சியது போலேயப்பா
நன்மையுள்ளோர் கண்டறிவார் யென்றே
கூடியே அதைச் சுருட்டி மேலே
குணமான ஆள்பாரம் கல்லைவைக்க
ஆடியே பாத்திருக்க அந்தக் கல்தான்
அப்புறத்தில் போய் வீழும் பாரே

பாரடா கிராணமது தீண்டும் போது
அங்கிலி வம்நசி நசிமசி யென்றே
செயமாக ஆயிரத்தி யெட்டுரு
செபித்து மிக வேரை வாங்கி
திரமாக சிரசுதனில் வைத்து நீயும்
கலங்காமல் பாரமதை ஏற்றிப்பாரு
கருத்துடனே தான்தூக்க கனக்காதே
மார்க்கமாம் மூலிகை சாலம் தானே

கனக்காது உலக்கைமுதல் கட்டிலைய்யா
கனிவான பல்லக்கு கொம்பினோடு
அனக்காது இதுகள்எல்லாம் நோக்கும் போதில்
அவ்வேரை வாயிலிட்டு தூக்கிப் பாரு
இனைக்காது ஆனையைத்தான் வாலைப்பற்றி
இழுத்தாக்கால் பின்னகர்ந்து வரும் நீபாரு
நினைக்காது கல்லைத்தான் உதைத்தாயானால்
நகருமே பெரும்பாரம் பின்னோக்கித் தானே

மலைதாங்கி அல்லது குன்று தாங்கி என்றொரு மூலிகை இருக்கிறது. அதாவது ஒரு ஆள் பாரம் உள்ள கல்லை இந்த மூலிகையின் மீது வைத்தால் அந்த கல்லை இந்த மூலிகை புரட்டிப் போட்டு விடுமாம். நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து இந்த மூலிகையை வாங்க முடியும்.

இந்த மூலிகையை கண்டறிந்து, கிரகண நேரத்தில் "அங்கிலி வம் நசி நசி மசி" என்ற மந்திரத்தை 1008 உரு செபித்து அந்த மூலிகையின் வேரை பத்திரப் படுத்திக் கொள்ள வேண்டுமாம். இந்த வேரை தலையில் வைத்துக் கொண்டு எந்த பாரத்தை தலையில் ஏற்றினாலும் கனமாக தெரியாது என்கிறார் தட்சிணா மூர்த்தி.

உலக்கை, கட்டில், பல்லக்கு போன்ற கைகளால் தூக்க வேண்டியிருந்தால் இந்த வேரை வாயில் அதக்கிக் கொண்டு தூக்கினால் கனமாக தெரியாதாம். மேலும் இந்த வேரை வாயில் அதக்கிக் கொண்டு யானையின் வாலை பிடித்து இழுத்தாலும் யானை பின்னோக்கி நகருமாம். அது போல பெரிய கல்லை காலால் உதைத்தாலும் அது நகர்ந்துவிடும் என்றும் சொல்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே.... ஆர்வமுள்ளவர்கள், வாய்ப்புள்ளவர்கள் பரிட்சித்துப் பார்க்கலாமே....

இந்த வித்தையை "மூலிகை சாலம்" என்கிறார் தட்சிணாமூர்த்தி.

குறிப்பு:

நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த பிச்சு என்பது விலங்கினங்களின் உறுப்புகளில் ஒன்று. ஈரல் உள்ள எந்த ஒரு விலங்கினத்திலும் இது காணப் படும். அதாவது ஈரலுக்கு அருகில் கரும்பச்சை நிறத்தில் ஈரலோடு ஒட்டிக் கொண்டிருக்கும். இது ஒரு அங்குலம் முதல் இரண்டு அங்குல நீளம் வரை காணப் படும். இதனை பித்து என்றும் கூறுவர். இது கலங்காமல் கவனமாக எடுத்து பயன் படுத்த வேண்டும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புயல் மழையில் இருந்து காத்துக் கொள்ளும் ஜாலம்.

Author: தோழி / Labels: ,தட்சிணாமூர்த்தி அருளிய ஜாலங்கள் வரிசையில் இன்று புயல், மழை, இடி, மின்னல் போன்ற இயற்கையின் கூறுகளிடம் இருந்து காத்துக் கொள்ள உதவும் ஜாலத்தை பார்ப்போம். கடவுளின் நிலையில் நாம் அறிந்திருக்கும் ஒருவர் இம் மாதிரியான ஜால வித்தைகளை எல்லாம் அருளியிருப்பாரா என்பது ஆய்வுக்குறியது.

வாருங்கள், புயல், மழையில் இருந்து காத்துக் கொள்ளும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் தட்சிணாமூர்த்தி அருளிய "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது..

செய்யவே யின்னமொரு செகசாலவித்தை
செப்புகிறோம் இடிமழைகள் மின்னலதுசிதறி
கையவே காற்றுமுதல் விலகியதுபோகக்
கருவான குன்றியாரைத் தைலம் வாங்கி
உய்யவே செய்யானின் பித்துமரத்தஞ் சேர்த்து
உடும்புனிட பித்தும் ரத்தமு ரவாகச் சேர்த்து
ஐயவே மத்தித்தால் மெழுகது போலாகும்
அருளான தாம்பிரத்தாற் குளிசமது செய்யே.

செய்யப்பா குளிசமதில் மெழுகதனை யடைத்து
செயம்பெற வேசிறியும்ஐயும் அங்குசயா
வெய்யவே வென்றுவுரு நூற்றெட்டு செபித்து
விளங்கவே விளையினில் குளிசமதை யிட்டு
மையவே மழைக்காற்று யிடிமின்னலிற் போனால்
மழைசித்து மிடிகாற்று மின்னல் சிதறுங்காண்
பொய்யப்பா சொல்லவில்லை பூதலத்தில்நீயும்
புண்ணியவான் மனிதனல்ல தேவனீதான் பாரே.

இந்த வித்தையை "செகசால வித்தை" என்றே தட்சிணாமூர்த்தி கூறியிருக்கிறார்.

குன்றியாரை என்னும் மூலிகையிலிருந்து தைலம் எடுத்து, அதனுடன் செய்யானின் பிச்சும் , இரத்தமும் சேர்த்துகொள்ள வேண்டுமாம். பின்னர் இதன்டன் உடும்பின் பிச்சும் இரத்தமும் சேர்த்து கல்வத்தில் இட்டு நன்கு கடைந்தால் இந்த கலவையானது மெழுகுபோல் ஆகி விடுமாம்.

தாமிரத் தகட்டில் தாயத்து செய்து, அதனுள் கல்வத்தில் கடைந்தெடுத்த மெழுகை சேகரிக்க வேண்டுமென்கிறார். பின்னர் அந்த தாயத்தை வலது கையில் ஏந்தியபடி "சிறியும் ஐயும் அங்குசயா" என்ற மந்திரத்தை 108 தடவைகள் செபித்து. பின்னர் தாயத்தை இறுக மூடிக் கொள்ள வேண்டுமாம். அந்த தாயத்தை அணிந்து கொண்டு சென்றால் மழை, காற்று, இடி, மின்னல் ஆகிய எந்த இயற்கை மாற்றங்களும் பாதிக்காது என்கிறார்.

இங்கு செய்யான் என்று குறிப்பிடப்படுவது ஒரு வகை பாம்பு இனம் இது பத்து சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் இதன் அறிவியல் பெயர் Leptotyphlops carlae. இவற்றிற்கு கண்பார்வை கிடையாது என்பது மேலதிக தகவல்.

குறிப்பு: தட்சிணாமூர்த்தி பற்றிய மேலதிக தகவலறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் கேட்டிருந்த வேண்டுகோளுக்கு இணங்கி நண்பர் விஜயகுமார் ஒரு தகவலைப் பகிர்ந்திருக்கிறார். தட்சிணாமூர்த்தி பற்றிய திருவாடுதுறை ஆதீனம் வெளிட்டுள்ள நூல் உள்ளது என்றும்,. ஆனால் அது பெரும்பாலும் எல்லா ஊரிலும் உள்ள தட்சிணாமூர்த்தி சிலை அமைப்பு பற்றி இருக்கும். பிற தகவல்களும், தியான சுலோகங்கள் முதலியன இருப்பதாக கூறியுள்ளார். பொதுவில் இது சிற்ப கலைஞர்களுக்கு உதவக் கூடிய நூல் என்றும் கூறியிருக்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தட்சிணாமூர்த்தி அருளிய ஜாலம்!

Author: தோழி / Labels: ,


தினமொரு சித்தரின் ஜால வித்தையை பகிர வேண்டும் என்பதே இந்த தொடரின் திட்டம். அதனடிப்படையில் கடந்த நாலு நாளில் போகர், தன்வந்திரி, அகத்தியர், புலிப்பாணி சித்தர் ஆகியோர் அருளிய ஜால வித்தைகளின் ஊடே ஒன்றை தெரிவு செய்து பகிர்ந்தேன். இந்த தேடலின் போது கிடைத்த ஒரு ஆச்சர்யமான தகவலின் தொகுப்பே இன்றைய பதிவு.

சிவன் கோவிலின் தெற்குப் பார்த்த சுவரில் கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியை நாமனைவரும் அறிவோம். ஞானத்தின் வடிவாகவும், குருவாகவும் கருதப்படும் இவரை சிவனின் அம்சமாக கருதி மந்திரம் சொல்லி, சடங்குகள் செய்து சிரத்தையுடன் வழிபட்டு வருகிறோம். சிவனின் அம்சம் என கடவுள் நிலைக்கு இவரை உயர்த்தி விட்டதாலோ என்னவோ, இந்த பெருமகனார் அருளிச் செய்த நூல்கள் யாருடைய கவனத்தையும் ஈர்க்காது போய் விட்டதோ என்னவோ...

தட்சிணாமூர்த்தி பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் நம்மிடம் இல்லை. இருப்பவை எல்லாம் புராணகதைகளாகவே இருக்கின்றன. எனினும் அவர் அருளியதாக சொல்லப் படும் நூல்களின் பட்டியல் நீளமானது. அவற்றில் பின் வரும் நூல்கள் என்னுடைய சேமிப்பில் இருக்கின்றன.

தட்சணாமூர்த்தி ஞான சூத்திரம்
தட்சணாமூர்த்தி ஞானச்சுருக்கம்
தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு
தட்சணாமூர்த்தி ஞானபஞ்சாட்சரம்
தட்சணாமூர்த்தி ஞான பூஜாவிதி
தட்சணாமூர்த்தி பெருங்காவியம்
தட்சணாமூர்த்தி ஞானக்குறி
தட்சணாமூர்த்தி சால சூத்திரம்
தட்சணாமூர்த்தி ஞான சைதன்யம்
தட்சணாமூர்த்தி ஞான கற்ப சூத்திரம்
தட்சணாமூர்த்தி தீட்சை ஞானம்
தட்சணாமூர்த்தி காரண ஞானம் 

தட்சிணாமூர்த்தி பற்றி யாரும் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அப்படி ஏதுமிருப்பின் அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

இனி, இன்றைய பதிவில் தட்சிணாமூர்த்தி அருளிய "தட்சிணாமூர்த்தி சால சூத்திர திரட்டு" என்ற நூலில் விவரிக்கப் பட்டிருக்கும் ஜால வித்தையொன்றை பார்ப்போம்.இந்த வித்தையானது வீரர்கள் போரின் போது ஆயுதங்களினால் காயம் படாமல் தப்பிக்கும் வித்தையை கூறுகிறது.

அதெப்படி காயம் படாமல் தப்பிப்பது, வாருங்கள் அந்த ஜாலவித்தையை அவருடைய மொழியில் பார்ப்போம்.

வெளியாகச் சொல்லுகிறேன் கருவித்தையிதுதான்
விளங்குவில்லு அம்புதடி குண்டு ஆயுதங்கள்
கடியான கத்தியொடுவளை தடிசக்கரம்
கருவான சில்லாகோல் நேரிசம் சமுதாளி
பளியான பாணமொடு அஸ்திரங்களக்கினி
படைசிதறும் போர்வீரர் மந்திரம்பில்லியேவல்
மளியான குத்துவெட்டு அடிகளிது முதலாய்
மகத்தான சாவமெல்லாந் தடைசெய்யக்கேளே

செய்யக்கேள் குன்றியாரைத் தைலம் வாங்கி
சிறியா நங்கைச் சாறுவிட்டு புலிப்பித்துஞ் சேர்த்து
நையக்கேள் மத்தித்து திலர்தமதாக
நலமான புருவமதில் மையதனைப் பூசி
உய்யக்கேள் ஓம்கிறியும் கிறாங்கிலியுஞ் சவ்வும்
உருநூற்றெட்டு தரஞ்செபித்து படையேகி
அய்யக்கேளு யுத்தத்தின் ரணகளத் தினடுவே
ஆமென்று நின்றுவுரு செபிப்பீரையா

ஐயாகேள ம்புவில்லு சிதறியது போகும்
அடிகுத்து அக்கினிகளது சிதறிப்போகும்
நையாகேள் கத்திவெட்டுசில்லாக்குத்து கோல்குத்து
நலமான பாண்டுமுதல் சிதறியது போகும்
மெய்யாகேள் புட்பமாறி பொழிந்ததுபோல
வெடிபாணஞ் சிதறியது விலகும்பாரு
பொய்யப்பா சொல்லவில்லை புலத்தியனேஐயா
புதுமையிது பூதலத்தில்புண்ணியர் செய்வாரே.

பெரும் படைகள், போர் வீரர்கள் போன்ற குழுவினரிடம் இருந்தும், வில், அம்பு, தடி குண்டு, கத்தி, வாள், சக்கரம், சிலாக்கோல், நேரிசம், சமுதாளி, பாணங்கள், அஸ்திரங்கள், அக்கினி போன்ற ஆயுதங்களிடம் இருந்தும், மந்திரங்கள், பில்லி சூனியங்கள் போன்றவற்றாலும், குத்துகள் வெட்டுகள் அடிகள் ஆகியவற்றின் பாதிப்புக்களில் இருந்து காத்துக் கொள்ள இந்த ஜால வித்தை உதவிடும் என்கிறார்.

குன்றியாரை என்னும் மூலிகையிலிருந்து தைலம் எடுத்து, அதனுடன் சிறியாநங்கைச் சாறு சேர்த்து பின்னர் அத்துடன் புலிப் பிச்சு கூட்டி கல்வத்தில் இட்டு நன்கு கடைந்து எடுக்க மையாகுமாம். அந்த மையை நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டு "ஓம் கிறியும் கிறாங் கிலியும் சவ்வும்" என்று நூற்றி எட்டுத்தடவைகள் செபித்துகொள்ள வேண்டுமாம்.

பின்னர் யுத்த களத்திற்கு சென்று போர் புரியும் படைகளுடன் கலந்து நின்று போரிடலாமாம்.அப்போது மையை திலகமாக இட்டு இருப்பவரை நோக்கி வரும் அம்புகள், அக்கினி ஆகியவை சிதறிப்போகுமாம். கத்தி வெட்டு சிலாக்குத்து போன்றவையும் பாதிக்காது. பூமாரி பொழிவதை போல் வெடிபாணங்கள் பாதிக்காது சிதறி விடும் என்கிறார்.

இந்த ஜாலவித்தையின் சாத்திய அசாத்தியங்கள் பற்றிய விவாதம் ஒரு புறமிருந்தாலும் கூட கடவுளின் அம்சம் என கருதப் படும் உயர் நிலையை அடைந்த தட்சிணாமூர்த்தி என்கிற யோக புருஷர், தமிழர் என்கிற விவரங்கள் நம்மில் பலருக்கு புதியது. மேலும் அந்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த ஆயுதங்கள் பற்றிய விவரங்கள் இந்த பாடல்களின் ஊடே நமக்கு தெரிய வருகிறது. இந்த ஆயுதங்கள் பற்றியும் அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் அவரது பாடல்களின் ஊடே தகவல்கள் இருக்கிறது.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...