நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்கிற ஐந்து அம்சங்களையே பஞ்ச பூதம் என்கிறோம். இந்த பஞ்சபூதங்களின் கலவையே இந்த பூமியும் அதில் வசிக்கும்அனைத்து உயிர்களும். இந்த பஞ்சபூத கலவையானது ஒவ்வொரு பொருளிலும், உயிரிலும் தனித்துவமான விகிதத்தில் கலந்திருக்கிறது. இதனையே சித்தர் பெருமக்கள் “அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்” என கூறியிருக்கின்றனர்.
மனித உடலில் விரவி பரந்திருக்கும் இந்த பஞ்ச பூத அம்சங்களின் சமநிலையில் மாற்றங்கள் அல்லது குறைபாடுகள் உருவாகும் போதுதான் ஒருவருக்கு மூப்பு, பிணி போன்றவை உண்டாகிறது. சித்தர்களின் மருத்துவம் என்பது இந்த பஞ்சபூத அம்சங்களை கையாளுவதில் துவங்கி அவற்றின் சமநிலை பேணுவதையே அடிப்படை நோக்கமாக கொண்டிருக்கிறது.
பஞ்சபூத அம்சங்களையும் அதன் கூறுகளையும் அறிந்திருந்த சித்தர் பெருமக்கள் மனித உடல் மட்டுமில்லாது எந்த ஒரு பொருளின் தன்மையையும் தேவைக்கு ஏற்ப மாற்றிவிடும் வல்லமை பெற்றிருந்தனர். இன்றைய நவீன அறிவியல் முன் வைக்கும் மூலக்கூறு அறிவியலின் ஆதி வடிவமே நமது சித்த மருத்துவமும், இரசவாதமும் என்றால் மிகையில்லை.
நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்கிற இந்த ஐந்து அம்சங்களை முன்னிலைப் படுத்தும் மூலகங்களை அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் பகுத்துக் கூறியிருக்கிறார். அந்த தகவல் பின் வருமாறு...
அடங்கிநின்ற பூதவகைச் சரக்குக்கேளு
போடவே காரவகை பதிமூன்றுந்தான்
பாங்கான பிருதிவியென றறிந்துகொள்ளு
கூடவே சாரவகை பன்னிரெண்டுந்தான்
குறியாக அப்புவெனக் கூர்ந்துபாரு
வாடவே வைப்புவகை முப்பத்திரெண்டு
வரிசையுடன் தேயுவென மகிழ்ந்துகாணே.
காணவே விளைவுவகை முப்பத்திரெண்டுங்
கருவான வாயுவெனக் கனிந்துபாரு
பூணவே உபரசம்நூத் திரண்டுபத்தும்
புத்தியுட னாகாச மென்றுபாரு
தோணவே வகையறிந்து பஞ்சபூதம்
சுத்தமுள்ள சரக்குவகை யறிந்துகொண்டு
பேணவே சத்துருமித் துருவைக்கண்டு
பிரியமுடன் சரக்குகளைக் கட்டிப்பாரே.
நிலம் அல்லது மண்ணை முன்னிலைப் படுத்தும் காரவகைகள் பதின்மூன்று இருக்கின்றதாம்.
நீரை முன்னிலைப் படுத்தும் சார வகைகள் பன்னிரண்டு இருக்கிறதாம்.
நெருப்பினை முன்னிலைப் படுத்தும் வைப்பு வகைகள் முப்பத்தி இரண்டு இருக்கிறதாம்.
காற்றை முன்னிலைப் படுத்தும் விளைவு வகைகள் முப்பத்தி இரண்டு இருக்கிறதாம்.
ஆகாயத்தை முன்னிலைப் படுத்து உபரச வகைகள் நூறு இருக்கிறதாம்.
இதுதான் அடிப்படை மூலகங்கள், மருந்து தயாரிப்பு அல்லது இரசவாதத்தில் தேர்ச்சி பெற நினைப்பவர்கள் முதலில் இந்த வகைகளைப் பற்றி அறிந்து தெளிவது அவசியம். அதன் அடுத்த கட்டமாய் இவை ஒவ்வொன்றையும் மற்றவைகளுடன் சேர்க்கும் போது உண்டாகும் விளைவுகளை அறிவதாக இருக்கும்.
அது என்ன விளைவுகள்?
அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


