எது துறவு?, ஏன் துறவு?

Author: தோழி / Labels: , ,

அந்தக் காலத்தில் துறவு அல்லது துறவி என்றதும் உற்றார் உறவினர்கள், சொத்து சுகங்களைத் துறந்து காடுகளில் போய் தனித்திருப்பது என்பதாகவும், இக் காலத்திலோ மடம் ஒன்றை அமைத்து அதில சிஷ்யர்கள் புடை சூழ சகல சுகபோகங்களுடன் வாழ்வதுமே துறவு என்பதான எண்ணப் போக்கு பொதுவில் நிலவுகிறது.

சித்தரியலில் துறவு என்பது மேலே சொன்ன புற பற்றுக்ள் போலல்லாது, அகப் பற்றுக்கள் அனைத்தையும் துறத்தலே துறவாக கருதப் படுகிறது. அகத்தியர், சிவவாக்கியர் போன்ற சித்தர் பெருமக்கள் குடும்ப அமைப்புகளில் இருந்தவாறே பற்றுகளைத் துறந்து வாழ்ந்தது நாம் அறிந்ததே. லாஹிரி மகாசயர் குடும்ப அமைப்பில் இருந்தவாறே பற்றுகளைத் துறந்தவர் என்று அவரது குரு மகாமுனி பாபாஜி அவர்களாலேயே பாராட்டப்பட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 

உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே

எந்த மாதிரியான பற்றுக்களை எல்லாம் நாம் பற்றியிருக்கிறோம் என்பதற்கு உதாரணமாய் திருமூலரின் இந்த பாடலைக் கொள்ளலாம். நிலத்தை உழுததும், பெய்த மழையால் மகிழ்ந்த உழவன், உழவு செய்யும் பொழுது களையாகிய குவளை மலர்கள் விளைந்துள்ளதைக் காண்கிறான். அம் மலர்கள் தன் மனைவியின் கண்கள் போல் உழவனுக்கு மயக்கம் தர, களையாகிய குவளை மலர்களைக் களையாமல் விடுகிறானாம் அதனால் அவன் பயிர்கள் அழிந்து விடுகிறதாம். அதே போல் மனதில் தோன்றும் களையாகிய பற்றுக்களைத் துறக்காமல் அதன் பால் மயக்கம் கொண்டு வாழ்வைத் தொலைக்கிறோம் என அழகாக விளக்குகிறார் திருமூலர்.

பிறந்தும் இறந்தும் பல பேதைமை யாலே
மறந்து மலாவிருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளியாமே

மேலும் அறியாமையால் பிறந்தும் இறந்தும் அவற்றை மறந்தும் ஆணவ மலம் என்னும் இருளில் மனிதர்கள் மூழ்கி உள்ளதை சுட்டிக் காட்டுகிறார் திருமூலர். மேலான குருவின் வழிகாட்டுதலில் பற்றுக்களைத் துறக்கும் நேரத்தில், உயிர்களுக்குள் சுடர் விட்டு விளங்கும் பேரொளியான சிவன் நமக்குள்ளும் துலங்குவார் என்பதை துறவால் ஏற்படும் பயனாக கூறுகிறார்.

மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே

அனைத்தையும் துறந்தவன்; ஒருவரும் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளியாய் உள்ளவன்; எமனைத் துறந்தவர்களுக்கு நண்பன்; விருப்பு, வெறுப்புக்கள் அற்றவன்; எப்பொருளிலும் பற்றில்லாதவன் என இத்தனை சிறப்புகளை கொண்ட சிவனின் நிலையை நாம் அடைய வேண்டுமெனில் நாம் நம்மை சூழ்ந்துள்ள பற்றுகளை அறிந்து விலக்க வேண்டும் என்கிறார் திருமூலர்.

பற்றைத் துறப்பது சாதாரண காரியமா என்ற மலைப்பு அனைவருக்கும் ஏற்படலாம். குருவருளின் துணை இருந்தால் எல்லாம் சாத்தியமே.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

4 comments:

kimu said...

நல்ல பதிவு .
நல்ல விளக்கம் .
நன்றி தோழி.

Unknown said...

கிருஷ்ணன் முனுசாமி, கஜேந்திர பிள்ளை, நடராஜன் செல்லப்பன் உங்கள் பாராட்டுக்கு தோழியின் சார்பாக நன்றி சொல்லும் அதே வேலையில், அக்கருத்துக்களை சிறிதளவாவது வாழ்வில் கடைபிடிக்க முயற்சிப்பது விசேஷம். தோழியின் இவ்வளவு கடின உழைப்பும் இந்த ஒரு காரணத்திற்க்காக தானே ஒழிய , LIKE, SHARE, COMMENT இதற்காக இல்லை. அனைவரும் வாழ்க.

Anonymous said...

அன்புள்ள தோழிக்கு, என் பெயர் இரா.கணேசன். தங்கள் சித்தர்கள் இராச்சியம் ப்ளாக் மிகப் பிரமாதம். எனக்கும் இது போல ஒரு ப்ளாக் அமைத்து பல உபயோகமான இடுகைகள் இடுவது மற்றும் ஒரு கருத்துப்பகிர்தல் என பல சிந்தனைகள் உள்ளது. தாங்கள் உதவ முடியுமா? முன்பே ஒருமுறை ஹெல்ப் மோடில் முயற்சித்துப் பார்த்தேன். ஆனால் பூரண திருப்தியில்லாததுடன் சில சந்தேகங்களுக்கு தக்க விடையும் பெற முடியவில்லை. தவிர தங்கள் போஸ்ட் எ கமெண்ட் பகுதியிலேயே தமிழில் பதிய முடியவில்லையே? இதை கூகிள் மொழிபெயர்ச்சி மூலம் தமிழில் அடித்தேன்.

Unknown said...

Ituve unmai

Post a comment