மூலநோயும் சித்த மருத்துவமும் - ஓர் அறிமுகம்.

Author: தோழி / Labels: , ,

கடந்த ஐந்து பதிவுகளின் ஊடே மூல நோய் பற்றிய அறிமுகம், அதன் தன்மைகள், வகைகள், அதற்கான தற்போதைய சிகிச்சை முறைகள் போன்ற தகவல்களை பார்த்தோம். அவை யாவும் அலோபதி மருத்துவ முறை முன் வைக்கும் தெளிவுகள் மற்றும் தீர்வுகள். அலோபதி மருத்துவமுறை என்பது கடந்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் நவீனத்துவம் பெற்றது. அலோபதி மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் சித்தர்களின் மருத்துவம் காலத்தால் மிகவும் பழமையானது, ஏன் பல வகையில் சிறப்பானதும் கூட. இனி வரும் நாட்களில் இந்த நோய் குறித்த சித்தர் பெருமக்களின் தெளிவுகளையும் தீர்வுகளையும் இங்கே பார்க்க இருக்கிறோம்.

பல்வேறு சித்தர் பெருமக்களின் நூல்களின் வழியே மூல நோய் குறித்த குறிப்புகளை நாம் அறியக் கூடியதாயிருக்கிறது. இந்த தகவல்கள் யாவும் குருமுகமாய் அடுத்தடுத்த தலைமுறைக்குத் தரப்பட்டவை. அந்த வகையில் இந்த மூலநோய் பற்றிய தெளிவுகள் யாரிடம் இருந்து யாருக்கெல்லாம் கிடைத்தது என்கிற ஆச்சர்யமான வரலாற்றுத் தகவல் ஒன்றினை இங்கே பகிர விரும்புகிறேன்.

தேரையரின் சீடரான யூகி முனிவர் அருளிய “வைத்திய சிந்தாமணி” என்கிற நூலில்தான் இந்த விவரம் நமக்கு கிடைக்கிறது. அந்த பாடல் பின் வருமாறு...

தானான மூலமது இருபத் தொன்றும்
சதாசிவன்றான் பராபரியாட் கருளிச் செய்ய
பானான பராபரியாள் நந்திதே வர்க்குப்
பாஷிக்க நந்திதன்வந் திரிக்குச் சொல்ல
கோனான தன்வந்திரியசு வினிக்குஞ் சொல்லக்
குணமான அசுவினியும் அகத்தியருக்குச் சொல்ல
ஆனான அகஸ்தியரும் புலஸ்தியருக்குச் சொல்ல
அவர்தானே தேரையருக் கருள்செய் தாரே.

அருள்செய்தார் புலஸ்தியதான் தேரை யர்க்கு
ஆண்மையாந் தேரையமா முனிவன் றானும்
பொருள்செய்தார் யூகிமுனி யாமெனக்குப்
போக்கெல்லாம் வகைவகையாப் பிரித்துச் சேர்த்து
தெருள்செய்த உலகத்தோர் பிழைக்க வென்று
சிவமான சித்தர்களைத் தொழுது கேட்டு
நருள் செய்துநலியாமற் பிழைக்க வென்று
நாட்டி னாயுருவே தத்தைத் தானே

இருபத்தியோரு வகை மூல நோய் இருப்பதாகவும். இந்த விவரங்களை ஆதி சித்தரான சிவன் பார்வதிக்கும், பார்வதி நந்திக்கும், நந்தி தன்வந்திரிக்கும், தன்வந்திரி அசுவினிக்கும், அசுவினி அகத்தியருக்கும், அகத்தியர் புலத்தியருக்கும் புலத்தியர் தேரையருக்கும் கூறினார்கள். புலத்தியர் தேரையருக்கு கூறியதை, எனது குருவான தேரையர் யூகிமுனியாகிய எனக்கு வகை வகையாகப் பிரித்துக் சொன்னார். அவற்றை நான் உலகத்திலுள்ளவர்கள் பயனடைய வேண்டும் என்று கூறுகிறேன் என்கிறார். 

ஆச்சர்யமான தகவல்தானே!

எதனால் இந்த மூலநோய் வருகிறது என்கிற தகவலையும் யூகி முனிவர் தன் பாடல்களில் பின்வருமாறு விளக்குகிறார்.

தத்தையா மதிகமாங் குளிரி நாலும்
தரியாத தவழ்ச்சியாற் கிரந்தி யாலும்
புத்தையாம் பொருந்தாத உஷ்ணத் தாலும்
புணர்ச்சியாய் கோபத்தாற் சலிப்பி நாலும்
கத்தையாம் வெகுகாமம் வேண்ட லாலும்
கடினமா முப்பாலுங் காரத் தாலும்
மொத்தையாம் வெகுதனங்கள் போன தாலும்
மூலம்வந் துற்பத்தி முனையுந் தானே

அதிக குளிரினாலும், கிரந்தியினாலும், அதிக உஷ்ணத்தாலும், கோபத்தாலும், சலிப்பினாலும், அதிகம் காமம் கொள்வதாலும், அதிக காரமுள்ள உணவினாலும், செல்வம் அழிந்து போவதாலும் மூல நோய் உண்டாகிறதாம். 

நாம் முன்னரே பார்த்தபடி மொத்தம் இருபத்தியோரு வகையான மூல நோய்கள் இருக்கிறது என்கிறார் யூகி முனி. அவற்றின் பெயர்களை பின்வருமாறு விளக்கியிருக்கிறார்.

சனிப்பான மூலத்தின் பெயரே தென்னில்
சமரசமாம் நிர்மூலஞ் செண்டு மூலம்
முனிப்பான முளைமூலஞ் சிற்று மூலம்
மூர்க்கமாம் வரள்மூலம் ரத்த மூலம்
தினிப்பான சீழ்மூல மாழி மூலம்
திணியான தமரக மாமூலத் தோடு
வனிப்பான வாதமொடு பித்த மூலம்
வகையான சேட்டுமத்தின் மூல மாமே

வகையாகுந் தொந்தமா மூலத் தோடு
வளர்கின்ற வினைமூலம் மேக மூலம்
பகையாகும் பவுத்திர மாமூலத் தோடு
படர்கிரந்தி மூலமொடு குதயா மூலம்
புகையாகும் புரமுலஞ் சுருக்கு மூலம்
பொருகின்ற சவ்வாகு மூலத் தோடு
துகையாகு மூலந்தானி ருபத் தொன்றும்
சூட்சுமா யிதினுடைய சுரூபங் கேளே

நீர்மூலம், செண்டுமூலம், மூளைமூலம், சிற்று மூலம், வரள் மூலம், இரத்த மூலம், சீழ்மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாதமூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், வினைமூலம், மேகமூலம், பவுத்திரமூலம், கிரந்தி மூலம், குத மூலம், புறமூலம், சுருக்கு மூலம், சவ்வு மூலம் ஆகிய இருபத்திஒரு வகை மூல நோய்கள் இருப்பதாக சொல்கிறார். 

இந்த இருபத்தியோரு வகை மூலநோயின் தன்மைகள், குணங்கள் பற்றி இனி வரும் நாட்களில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

srini srirangam said...

WISH U &YOUR FAMILY A VERY VERY HAPPY NEW YEAR

srini srirangam said...

WISH U &YOUR FAMILY A VERY VERY HAPPY NEW YEAR

G. K A R T H I K E Y A N said...

superb work

G. K A R T H I K E Y A N said...

good work keep it up my Friend

Saravanan said...

நீண்ட ஆயுளுடன் எல்லா வளமும் பெற்று தங்கள் சேவை தொடர்ந்திட வாழ்த்துகிறேன் தோழி...

saran said...

அங்கிள புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a comment