மூலநோயும் சித்த மருத்துவமும் - ஓர் அறிமுகம்.

Author: தோழி / Labels: , ,

கடந்த ஐந்து பதிவுகளின் ஊடே மூல நோய் பற்றிய அறிமுகம், அதன் தன்மைகள், வகைகள், அதற்கான தற்போதைய சிகிச்சை முறைகள் போன்ற தகவல்களை பார்த்தோம். அவை யாவும் அலோபதி மருத்துவ முறை முன் வைக்கும் தெளிவுகள் மற்றும் தீர்வுகள். அலோபதி மருத்துவமுறை என்பது கடந்த ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் நவீனத்துவம் பெற்றது. அலோபதி மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் சித்தர்களின் மருத்துவம் காலத்தால் மிகவும் பழமையானது, ஏன் பல வகையில் சிறப்பானதும் கூட. இனி வரும் நாட்களில் இந்த நோய் குறித்த சித்தர் பெருமக்களின் தெளிவுகளையும் தீர்வுகளையும் இங்கே பார்க்க இருக்கிறோம்.

பல்வேறு சித்தர் பெருமக்களின் நூல்களின் வழியே மூல நோய் குறித்த குறிப்புகளை நாம் அறியக் கூடியதாயிருக்கிறது. இந்த தகவல்கள் யாவும் குருமுகமாய் அடுத்தடுத்த தலைமுறைக்குத் தரப்பட்டவை. அந்த வகையில் இந்த மூலநோய் பற்றிய தெளிவுகள் யாரிடம் இருந்து யாருக்கெல்லாம் கிடைத்தது என்கிற ஆச்சர்யமான வரலாற்றுத் தகவல் ஒன்றினை இங்கே பகிர விரும்புகிறேன்.

தேரையரின் சீடரான யூகி முனிவர் அருளிய “வைத்திய சிந்தாமணி” என்கிற நூலில்தான் இந்த விவரம் நமக்கு கிடைக்கிறது. அந்த பாடல் பின் வருமாறு...

தானான மூலமது இருபத் தொன்றும்
சதாசிவன்றான் பராபரியாட் கருளிச் செய்ய
பானான பராபரியாள் நந்திதே வர்க்குப்
பாஷிக்க நந்திதன்வந் திரிக்குச் சொல்ல
கோனான தன்வந்திரியசு வினிக்குஞ் சொல்லக்
குணமான அசுவினியும் அகத்தியருக்குச் சொல்ல
ஆனான அகஸ்தியரும் புலஸ்தியருக்குச் சொல்ல
அவர்தானே தேரையருக் கருள்செய் தாரே.

அருள்செய்தார் புலஸ்தியதான் தேரை யர்க்கு
ஆண்மையாந் தேரையமா முனிவன் றானும்
பொருள்செய்தார் யூகிமுனி யாமெனக்குப்
போக்கெல்லாம் வகைவகையாப் பிரித்துச் சேர்த்து
தெருள்செய்த உலகத்தோர் பிழைக்க வென்று
சிவமான சித்தர்களைத் தொழுது கேட்டு
நருள் செய்துநலியாமற் பிழைக்க வென்று
நாட்டி னாயுருவே தத்தைத் தானே

இருபத்தியோரு வகை மூல நோய் இருப்பதாகவும். இந்த விவரங்களை ஆதி சித்தரான சிவன் பார்வதிக்கும், பார்வதி நந்திக்கும், நந்தி தன்வந்திரிக்கும், தன்வந்திரி அசுவினிக்கும், அசுவினி அகத்தியருக்கும், அகத்தியர் புலத்தியருக்கும் புலத்தியர் தேரையருக்கும் கூறினார்கள். புலத்தியர் தேரையருக்கு கூறியதை, எனது குருவான தேரையர் யூகிமுனியாகிய எனக்கு வகை வகையாகப் பிரித்துக் சொன்னார். அவற்றை நான் உலகத்திலுள்ளவர்கள் பயனடைய வேண்டும் என்று கூறுகிறேன் என்கிறார். 

ஆச்சர்யமான தகவல்தானே!

எதனால் இந்த மூலநோய் வருகிறது என்கிற தகவலையும் யூகி முனிவர் தன் பாடல்களில் பின்வருமாறு விளக்குகிறார்.

தத்தையா மதிகமாங் குளிரி நாலும்
தரியாத தவழ்ச்சியாற் கிரந்தி யாலும்
புத்தையாம் பொருந்தாத உஷ்ணத் தாலும்
புணர்ச்சியாய் கோபத்தாற் சலிப்பி நாலும்
கத்தையாம் வெகுகாமம் வேண்ட லாலும்
கடினமா முப்பாலுங் காரத் தாலும்
மொத்தையாம் வெகுதனங்கள் போன தாலும்
மூலம்வந் துற்பத்தி முனையுந் தானே

அதிக குளிரினாலும், கிரந்தியினாலும், அதிக உஷ்ணத்தாலும், கோபத்தாலும், சலிப்பினாலும், அதிகம் காமம் கொள்வதாலும், அதிக காரமுள்ள உணவினாலும், செல்வம் அழிந்து போவதாலும் மூல நோய் உண்டாகிறதாம். 

நாம் முன்னரே பார்த்தபடி மொத்தம் இருபத்தியோரு வகையான மூல நோய்கள் இருக்கிறது என்கிறார் யூகி முனி. அவற்றின் பெயர்களை பின்வருமாறு விளக்கியிருக்கிறார்.

சனிப்பான மூலத்தின் பெயரே தென்னில்
சமரசமாம் நிர்மூலஞ் செண்டு மூலம்
முனிப்பான முளைமூலஞ் சிற்று மூலம்
மூர்க்கமாம் வரள்மூலம் ரத்த மூலம்
தினிப்பான சீழ்மூல மாழி மூலம்
திணியான தமரக மாமூலத் தோடு
வனிப்பான வாதமொடு பித்த மூலம்
வகையான சேட்டுமத்தின் மூல மாமே

வகையாகுந் தொந்தமா மூலத் தோடு
வளர்கின்ற வினைமூலம் மேக மூலம்
பகையாகும் பவுத்திர மாமூலத் தோடு
படர்கிரந்தி மூலமொடு குதயா மூலம்
புகையாகும் புரமுலஞ் சுருக்கு மூலம்
பொருகின்ற சவ்வாகு மூலத் தோடு
துகையாகு மூலந்தானி ருபத் தொன்றும்
சூட்சுமா யிதினுடைய சுரூபங் கேளே

நீர்மூலம், செண்டுமூலம், மூளைமூலம், சிற்று மூலம், வரள் மூலம், இரத்த மூலம், சீழ்மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாதமூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம், வினைமூலம், மேகமூலம், பவுத்திரமூலம், கிரந்தி மூலம், குத மூலம், புறமூலம், சுருக்கு மூலம், சவ்வு மூலம் ஆகிய இருபத்திஒரு வகை மூல நோய்கள் இருப்பதாக சொல்கிறார். 

இந்த இருபத்தியோரு வகை மூலநோயின் தன்மைகள், குணங்கள் பற்றி இனி வரும் நாட்களில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மூல நோய் - சிகிச்சை முறைகள்.

Author: தோழி / Labels:

மூல நோய் என்றால் என்ன, அது எதனால் உருவாகிறது, அதன் தன்மைகள், வகைகள், அறிகுறிகள், பரிசோதனைகள் ஆகியவை பற்றி தற்போதைய நவீன அலோபதி மருத்துவத்தின் தெளிவுகளை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று மூலநோய்க்கான சில சிகிச்சை முறைகளை பார்ப்போம்.

உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினை சீரமைத்துக் கொள்வதோடு, மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஆரம்ப நிலையில் உள்ள மூலநோய் பாதிப்பில் இருந்து எளிதில் குணம் பெறலாம். 

உள் மூலத்தினை பொறுத்த வரையில் பாதிப்புக்கு எத்தகையது, எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து அதற்கேற்ப சிகிச்சை முறைகளை மருத்துவர் தெரிவு செய்கிறார். அலோபதி மருத்துவத்தின் அசுர வளர்ச்சியின் காரணமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய சிகிச்சை முறைகள் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

இன்றைய பதிவில் அத்தகைய சில முறைகளின் ஒளித் துண்டுகளை இங்கே தொகுத்துத் தந்திருக்கிறேன்.

The Hemorrhoidal Artery Ligation and Recto Anal Repair Systems (HAL-RAR)Rubber band ligationSclerotherapy

மூல நோய் பாதிப்புக்குள்ளான பகுதியில் இருக்கும் இரத்த நாளங்களில் ஊசியின் மூலமாய் மருந்தை செலுத்துவதன் மூலம் அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை தடை செய்வதன் மூலமாக மூல கட்டியின் வீக்கத்தை குறைத்து குணப்படுத்தும் முறையிது.

Infrared Coagulation Therapyஅறுவை சிகிச்சை முறைஇத்துடன் இந்த தொடரின் முதல் பாகம் நிறைவடைகிறது.

இனி வரும் நாட்களில் இந்த மூல நோய் குறித்த சித்தர் பெருமக்களின் தெளிவுகளையும் தீர்வுகளையும் பார்க்க இருக்கிறோம்.

குறிப்பு: இதுவரை இந்த தொடரில் இடம் பெற்ற படங்கள், ஒளித் துண்டுகள் யாவும் தொடர்புடைய நபர்களின் அனுமதியின்றியே இங்கே பகிர்ந்திருக்கிறேன். மூலநோய் குறித்த புரிதலை எளிமையாக்கவே இந்த படங்கள் மற்றும் ஒளித் துண்டுகளை பயன்படுத்த வேண்டி வந்தது. இது தொடர்பில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்து அதனை தெரிவித்தால் இந்த படங்களையும், ஒளித் துண்டுகளையும் நீக்கிவிட தயாராக இருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மூலநோய் - பரிசோதனை முறைகள்

Author: தோழி / Labels:

கடந்த மூன்று பதிவுகளின் ஊடே அலோபதி மருத்துவம் மூலநோய் தொடர்பில் முன்வைக்கும் தெளிவுகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் மூல நோயை உறுதி செய்வதற்கான பரிசோதனை முறைகளைப் பற்றி பார்ப்போம்.

மலச்சிக்கல், மலத்தோடு ரத்தம் வருவது, ஆசன வாயில் இரத்தக் கசிவு, அதிக இரத்தப் போக்கு, ஆசன வாயில் எரிச்சல், கடுமையான வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் எவரும் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். ஏனெனில் இந்த அறிகுறிகள் மூல நோய்க்கு மட்டுமே சொந்தமானவை இல்லை. 

ஆம்!, மூலநோயை விட தீவிரமான மற்ற மூன்று நோய்களுக்கும் இந்த அறிகுறிகள் பொருந்தும் என்பதால் இயன்றவரை ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது அவசியம். மூல நோயின் அறிகுறிகளுக்கு தொடர்புடைய அந்த மூன்று நோய்கள் முறையே..

“Fistula”

“Fissure” , 

“Colorectal cancer” 

மூல நோய் என்பது உயிர் கொல்லி நோய் இல்லை, ஆனால் வலியும் வேதனையும் கடுமையானதாக இருக்கும். ஆரம்ப நிலையில் கண்டறியப் பட்டால் இதனை எளிதில் குணமாக்கிவிட முடியும். ஆனால் நம்மில் பலரும் வெளியே சொல்லத் தயங்கி, நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவரை அணுகுகிறோம் என்பது வருத்தமான உண்மை.

இனி மூலநோயை உறுதி செய்யும் பரிசோதனை முறைகளைப் பற்றி பார்ப்போம்.

வெளி மூலத்தை பார்த்தே அதன் பாதிப்புகளை தீர்மானித்து விடமுடியும். ஆனால் உள் மூலத்தை அப்படி தீர்மானிக்க இயலாது. அதற்கென பிரத்யேக பரிசோதனைகளை அலோபதி  மருத்துவம் முன் வைக்கிறது.

கையுறை அணிந்து ஆசன வாயினுள் உள்ளே விரலை நுழைத்து மூலநோய் பாதித்த பகுதி, மூலத்தின் அளவு போன்றவைகளை சோதித்து அறியும் முறையினை Digital rectum examination என்கிறார்கள். கீழே உள்ள படம் இந்த முறையினை விளக்குகிறது.


கொஞ்சம் மேம்பட்ட நிலையில் anoscopy என்கிற கருவியை ஆசன வாயினுள் செலுத்தி பாதிப்பினை அறியும் முறையை கீழே உள்ள படம் விளக்குகிறது.


மேலே சொன்ன இரண்டு முறைகளினால் நோயின் பாதிப்பை முழுமையாக உணர முடியாத நிலையில் colonoscopy என்ற கருவி பயன்படுத்தப் படுகிறது. இதனை ஒரு தேர்ந்த மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும். குதத்தின் வழியே வீடியோ கேமரா பொறுத்தப் பட்ட ஒரு குழாயை உள்ளே செலுத்தி அங்குலம் அங்குலமாக தசைச் சுவர்களின் பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனையாகும். கீழே உள்ள படம் இந்த செயலை விளக்குகிறது.இந்த பரிசோதனைகளின் மூலம் மூலத்தின் அளவு, பாதிப்பு போன்றவைகளை உறுதி செய்த பின்னர் அதற்கேற்ற சிகிச்சை முறைகள் தீர்மானிக்கப் படுகிறது. அதென்ன சிகிச்சை முறைகள்?.

விவரங்கள் நாளைய பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மூல நோய் - அறிகுறிகளும், நிலைகளும்

Author: தோழி / Labels:

பெரும்பாலும் தவறான உணவு பழக்க வழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினாலுமே மூல நோய் வருகிறது. அரிதாக சிலருக்கு பரம்பரையாக வருவதும் உண்டு. எனவே முறையான உணவு பழக்க வழக்கங்களையும், பதட்டமில்லாத வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டால் இந்த நோயினை எளிதில் தவிர்க்க முடியும்.

மலத்தோடு இரத்தம் கலந்து வருவதே இந்த நோயின் முதற்கட்ட அறிகுறியாகும். இந்த ரத்தப் போக்கு உடனடியாக நின்று விடும் என்பதால் பலரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.அடுத்த கட்டமாக ஆசன வாயில் இருந்து இரத்த கசிவும், நோய் முற்றிய நிலையில் இரத்தப் போக்கும் உண்டாகும். எனவே ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகினால் மருந்துகள் மூலம் இந்த பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணலாம்.

அலோபதி மருத்துவம் மூல நோயை “உள் மூலம்”, “வெளி மூலம்” என இரு பெரும் பிரிவுகளாய் பகுத்து கூறுகிறது. ஆசன வாயைச் சுற்றிய பகுதியில் உருவாகும் மூலம் வெளி மூலம் எனப்படும். குதத்தின் உட்புற சுவர்களில் உருவாகும் மூலம் உள் மூலம் எனப்படுகிறது. கீழே உள்ள படம் இந்த இரண்டு வகை மூலம் பற்றி விளக்குகிறது.


உள் மூலமானது பாதிப்புகளைப் பொறுத்து நான்கு நிலைகளாய் குறிப்பிடுகின்றன.

முதல் நிலையில் மலத்தோடு இரத்தப் போக்கு மட்டும் இருக்கும்.

இரண்டாம் நிலையில் இரத்தப் போக்குடன் குதத்தின் உட்புற சுவரில் புடைப்புகள் தோன்றி வளர ஆரம்பித்து இருக்கும்

மூன்றாம் நிலையில் மலம் கழிக்கும் போது இந்த புடைப்பு ஆசன வாய்க்கு வெளியே வந்து பின்னர் உள்ளிழுத்துக் கொள்ளும்.

நான்காம் நிலை மூலத்தின் முற்றிய நிலையாகும். இந்த நிலையில் மலம் கழிக்கும் போது வெளியே வரும் மூலம் உள்ளிழுக்காமல் வெளியே தொங்கிக் கொண்டேயிருக்கும்.

வெளி மூலம் என்பது ஆசன வாயின் வெளிப்புறச் சுவர்களில் உருவாகும். இது மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும்.

மேலும் விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


மூலநோயும் காரணங்களும்...

Author: தோழி / Labels:

நேற்றைய பதிவில் நாம் உட் கொள்ளும் உணவு ஜீரணமாகிய பின்னர், எஞ்சிய கழிவுகள் எவ்வாறு மலமாக வெளியேறுகிறது என்பதை பார்த்தோம்.

நமது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு வரும் கழிவில் இருக்கும் நீரானது சமயங்களில் அதிக அளவில் உறிஞ்சப் பட்டுவிடும் போது மலமானது இறுகி மலக்குடலில் தேங்க ஆரம்பித்து விடும். இத்தகைய சமயத்தில் மூச்சையடக்கி முக்கி மலத்தை வெளியேற்றும் நிலை உண்டாகிறது. இதனையே மலச் சிக்கல் என்கிறோம். 

இவ்வாறு முக்கும் போது மலக்குடல் மற்றும் ஆசன வாயில் படந்துள்ள இரத்த நாளத்தில் அதிக அளவில் இரத்தமானது பாயும் நிலை உண்டாகிறது. குதம் மற்றும் ஆசனவாய்ப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் மென்மையான திசுக்களால் ஆனவை, ஒரு சிலருக்கு பிறவியில் இவை பலவீனமாகக இருக்கும்.

இத்தகைய இரத்த நாளங்களில் பாயும் அளவுக்கு கூடுதல் இரத்தமானது பக்கவாட்டில் உள்ள நாளங்களுக்கு பரவி காலப் போக்கில் அந்த பகுதியில் தேங்க ஆரம்பித்துவிடும். தேங்கிய ரத்தமானது கெட்டு அதுவே முலநோயின் ஆரம்பம் ஆகிறது. இதனையே ஆங்கில மருத்துவத்தில் hemorrhoids/Piles என அழைக்கின்றனர்.
இந்த படம் இரத்த நாளங்களில் தேங்கும் கூடுதல் ரத்தம் எவ்வாறு மூலமாகிற்து என்பதை விளக்கும்.

எனவே மூல நோய் உருவாக மலச்சிக்கல் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.எனவே இயன்றவரை மலச்சிக்கல் ஏற்படாதவாறு நம் உணவுப் பழக்க வழக்கத்தையும், வாழ்க்கை முறையினையும் அமைத்துக் கொள்வது மிக அவசியம். 

கருவுற்ற தாய்மார்களின் கருவில் இருக்கும் குழந்தையின் எடை மற்றும் அசைவினாலும் மலக்குடலில் அழுத்தம் ஏற்பட்டு மூல நோய் உருவாக வாய்ப்புள்ளது.

ஈரல் நோய், குடலில் அல்சர் அல்லது புற்றுநோய் தோன்றினாலும் கூட மூலம் உண்டாகும்.

அதிக உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையினை கொண்டவர்களுக்கும், வெகு நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கும் கூட மூலநோய் உருவாக வாய்ப்புள்ளது.

நாளைய பதிவில் மூல நோயின் வகைகள் மற்றும் அதன் தன்மைகளைப் பற்றி பார்ப்போம்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மூலம் - அறிமுகம் 1.

Author: தோழி / Labels:

ஆண், பெண் என பாகுபாடு இல்லாமல் உலகெங்கும் 40% மக்கள் மூல நோயினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப் பட்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. தற்போதைய நவீன மருத்துவத்தில் இந்த நோயினை முற்றாக தீர்க்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட. பலரும் தங்களுடைய பாதிப்பினை வெளியில் சொல்ல தயங்குவதினால் தகுதியான மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் வேதனையோடு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர் என்பதும் வருத்தமான உண்மை.

இனி வரும் நாட்களில் இந்த நோய் கூறினை பற்றியும், அதன் வகைகள், தன்மைகள் மற்றும் தீர்வுகளை தொகுத்துக் காண இருக்கிறோம். இந்த தொடரின் முதற் கட்டமாக நவீன மருத்துவம் மூல நோயினை எவ்வாறு அணுகி தீர்வுகளை முன் வைக்கிறது என்பதை அறிமுகமாய் தந்துவிட்டு, பின்னர் சித்தர் பெருமக்களின் தெளிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மூலம் பற்றிய விவரங்களை பார்ப்பதற்கு முன்னர், நாம் உட்கொள்ளும் உணவு நமது வயிற்றில் என்னவாகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். கீழே கொடுக்கப் பட்டுள்ள ஒளித் துண்டு நமது குடலில் என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது.நாம் உட்கொள்ளும் உணவானது வயிற்றில் விழுந்து சிறுகுடலில் ஜீரணிக்கப் பட்டு தேவையான சத்துக்கள் உறியப் படுகிறது. ஜீரணிக்காத உணவுகள் பின்னர் பெருங்குடலுக்கு அனுப்பப் பட்டு அங்கு அதில் தேவையற்ற நீர் உறிஞ்ப் பட்டு பிசுபிசுப்பான நிலையில் மலம் பெருங்குடலின் ஒரு பகுதியில் தேஙக ஆரம்பிக்கும். இது நிரம்பும் போது மலமானது மலக்குடலுக்கு செல்கிறது. இந்த நிலையில்தான் நமக்கு மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு தூண்டப் படுகிறது.

பெருங்குடலில் வந்து சேர்ந்த ஜீரணமாகாத அல்லது எஞ்சிய உணவு எவ்வாறு மலமாகி வெளித்தள்ளப் படுகிறது என்பதனை கீழே உள்ள ஒளித்துண்டு எளிமையாய் விளக்குகிறது.பெருங்குடலின் கடைசிப் பகுதியில் மலக்குடல் இருக்கிறது. இவை தொடர்ச்சியான சுருக்கு தசைகளினால் ஆனவை. இவை தொடர்ச்சியாக சுருங்கி விரிந்து மலத்தை உந்தி வெளித்தள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. ஆக, இப்படித்தான் நாம் உட்கொள்ளும் உணவானது ஜீரணமாகி தேவையான சத்துக்கள் உடம்பில் சேர்க்கப் பட்ட பின்னர் தேவையற்ற எச்சங்கள் மலமாக வெளியேற்றப் படுகின்றன. 

எல்லாம் சரிதான்!, இதெல்லாம் நம் எல்லோருக்கும் இயல்பாய் நடப்பதுதானே!, இதில் மூலம் எங்கே வருகிறது என்ற கேள்விகள் இன்னேரத்திற்கு உங்களுக்கு வந்திருக்கும். 

அந்த விவரங்கள் நாளைய பதிவில்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாந்திரிகம் - மாரணம்.

Author: தோழி / Labels: ,

மாந்திரிகத்தின் அட்டகர்மங்களான வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் எனும் எட்டுப் பிரிவுகளில் இன்று கடைசி பிரிவான மாரணம் என்கிற கலையை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

மாரணம் என்பது மரண துன்பத்தை தருவது என்று அர்த்தமாகிறது. இது வரையில் நாம் பார்த்த ஏழு வகைகளை விட அதி தீவிரமானதும், உயிராபத்தை தரக் கூடியது இந்த கலை. ஆம் ஒருவருக்கு மரணத்தையே தந்துவிடும் வல்லமை கொண்டது மாரணம்.

இந்த மாரணக் கலையை பயனுள்ள வகையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை  அகத்தியர் தனது அகத்தியர் 12000 என்னும் நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா வெள்ளியினால் தகடு தட்டி
பக்குவமாய் நசிமயவ என்று மாறி
நெடிதான நோய்களுக்கு கட்டினாக்கால்
மாரப்பா நோய்கள் எல்லாம் மாரணித்து போகும்
வஞ்சகருஞ் சத்துருவும் வகையுள்ளோரும்
வேரப்பா அற்றமரம் போலே போவோர்
மெய்யான மாரணத்தை விரும்பிச் செய்யே.

அகத்தியர்.

வெள்ளியினால் தகடு ஒன்று எடுத்து அதில் சிவமந்திரமான “நமசிவய” என்ற எழுத்துக்களை மாற்றி "நசிமயவ" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த வெள்ளித் தகட்டினை இரு கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து மாரண மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.

இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நாட் பட்ட நோய்கள் அனைத்தும் நீங்குவதுடன். அவர்களின் எதிரிகள், வஞ்சகர்கள் வேர் அற்ற மரம்போல் நீங்கிவிடுவார்கள் என்கிறார்.

மாரணம் மூல மந்திரம் - ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா.

இத்துடன் இந்த தொடர் நிறைவடைகிறது. தொடரின் ஊடே பகிரப்பட்ட விவரங்களை நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஒரு தகவலாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். ஏனெனில் இந்த தகவல்களின் ஊடே புதைந்திருக்கும் காரண காரியங்கள் நாம் இதுவரை விளங்கிக் கொள்ளாதவை என்பதனால், பின் விளைவுகளை கருத்தில் கொண்டு இதை முயற்சித்துப் பார்க்கும் விஷப் பரிட்சையினை தவிர்த்திட வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


மாந்திரிகம் - வித்துவேடணம்.

Author: தோழி / Labels: ,

மாந்திரிக கலையின் அட்டகர்மங்களில் ஒன்றாகவும், ஆயகலைகள் 64ல் முக்கியமானதாகவும் அறியப்படும் வித்துவேடணக் கலையின் பயன்பாடு குறித்து சித்தர் பெருமக்களின் தெளிவு ஒன்றினைப் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

வித்துவேடணம் என்பது ஒருவருக்கொருவர் தீரா பகையை உண்டாக்கிப் அவர்களை பிரிப்பது ஆகும். இந்தக் கலையினை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம், அழிவுக்கும் பயன்படுத்தலாம். சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் பிரித்தல் என்பதனை தீயவற்றில் இருந்து நல்லவற்றை பிரித்து காப்பதாகவே நமக்கு குறிப்புகள் கிடைத்திருக்கிறது.

அகத்தியர் தனது அகத்தியர் 12000 என்னும் நூலில் வித்துவேடன கலையின் பயன்பாட்டினை பின்வருமாறு விளக்குகிறார்.

தானென்ற குறுத்தோலை நறுக்கி மைந்தா
தயவாக மயவநசி என்று மாறி
உறுதியுடன் மானிடர்க்கு கட்டினாக்கால்
வீண்என்ற பிரமை எல்லாம் தீரும்தீரும்
விதமான பில்லை வஞ்சனைகள் தீரும்
தேனென்ற தேகமது வெகுசெம்மையாகும்
சிவசிவா வித்துவேஷணத் திறந்தான் பாரே.

அகத்தியர்.

குருத்தோலையை நறுக்கி எடுத்து அதில் சிவ மந்திரமான “நமசிவய” என்ற எழுத்துக்களை மாற்றி "மயவநசி" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த குருத்தோலையை இரு கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து வித்துவேடண மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.

இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்திருக்கும் பிரமைகள், பில்லி, வஞ்சனை அனைத்தும் நீங்கிவிடுவதுடன். அவர்கள் உடலும் வலிமையாகும் என்கிறார்.

வித்துவேடணம் மூல மந்திரம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


மாந்திரிகம் - பேதனம்

Author: தோழி / Labels: ,

மாந்திரிகத்தின் பயன்பாடுகளின் வரிசையில் இன்றைய பதிவில் "பேதனம்" என்கிற கலை எவ்வாறு பயன்படுத்தப் பட்டது என்பதைப் பற்றிய தகவலை இன்றைய பதிவில் பார்ப்போம்.பேதனம் என்பது ஒருவரின் சித்தத்தினை முற்றாக குலைத்து அவரின் நினைவழித்து, அவரை முற்றாக பேதலிக்க செய்வதாகும். 

பேதனம் மிகவும் ஆபத்தான ஒரு மாந்திரிக கலையாக இது அறியப் படுகிறது. இதன் பொருட்டே இது குறித்த தகவல்கள் காலம் காலமாய் முற்றாக மறைக்கப்பட்டிருந்தன. இந்த கலையின் உண்மைத் தன்மை அல்லது இவற்றின் சாதகபாதங்கள் முற்றாக அறியப்படாத அல்லது ஆராயப்படாத ஒன்று என்பதால் இங்கே பகிரப் படும் குறிப்புகளை ஒரு தகலவாக மட்டுமே அணுகிடுமாறு வேண்டுகிறேன். அதைத் தாண்டிய சிந்தனைகளை தவிர்த்திடுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

அகத்தியர் அருளிய அகத்தியர் 12000 என்னும் நூலில் பேதன கலையின் பயன்பாடு ஒன்றினைப் பற்றிய் தகவல் ஒன்றினை இனி பார்ப்போம்.

செய்யப்பா இரும்பினால் தகடுசெய்து
தீர்க்கமுடன் நயமவசி என்றுமாறி
மேதினியில் மானிடர்க்கு கட்டினாக்கால்
பையப்பா நோய்கள் பேதனமாய் போகும்
பார்தனிலே ஒருவருக்கும் பகரவேண்டாம்
மையப்பா பூரணத்தின் கருவினாலே
மார்க்கமுடன் எட்டுவகை சித்தும்பாரே.

இரும்பினால் ஆன தகடு ஒன்றினை எடுத்து, அதில் நமசிவய என்கிற சிவமந்திரத்தின் எழுத்துக்களை மாற்றி "நயமவசி" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த இரும்புத் தகட்டினை இரு கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து பேதன மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.

இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் எல்லாம் பேதனமாகி விலகிவிடும் என்கிறார்.

பேதனம் மூல மந்திரம் - ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


மாந்திரிகம் - ஆக்ருசணம்.

Author: தோழி / Labels: ,

மாந்திரிக கலையின் தேவைகளும் தீர்வுகளும் எத்தகையதாக இருந்தது என்பதை எளிய உதாரணங்களுடன் பகிர்வதே இந்த தொடரின் நோக்கம் அந்த வகையில் கடந்த வாரத்தில் மாந்திரிக கலையின் நான்கு நிலைகள் எவ்வாறு பயன்பட்டன என்பதைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் மீதமிருக்கும் நான்கு பிரிவுகளைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

இன்றைய பதிவில் ஆக்ருசண கலை எவ்வாறு பயன்பட்டது என்பதைப் பற்றி பார்ப்போம். ஆக்ருசணம் என்பது பிறரை முற்றிலுமாய் ஆக்கிரமித்து தனக்கு அடிபணியச் செய்வதாகும். இது சக மனிதரில் துவங்கி விலங்குகள், தேவதைகள் என இந்தக் கலையில் எல்லைகள் நீள்கிறது. தற்காலத்தில் இந்தக் கலை பெரும்பாலும் நன்மைகளை விட தீய காரியங்களுக்கே அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

இந்த ஆக்ருசணக் கலையை பயன்படுத்தும் முறை ஒன்றினை அகத்தியர் தனது அகத்தியர் 12000 என்னும் நூலில் பின்வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா குடவனிலே தகடுதட்டு
பத்தியுடன் நசிமயவ என்று மாறி
நேர்மையுடன் மானிடர்க்கு கட்டினாக்கால்
ஆரப்பா அறிவார்கள் ஆக்ருஷணத்தின் போக்கு
அம்பரத்தை அறிந்தவர்கள் அறிவாரையா
தேரப்பா மனதைநன்றாய் தேர்ந்து கொண்டு
தேறினபின் அஷ்டகன்மச் செயலைப்பாரே.

குடவனிலே தகடு ஒன்றினை எடுத்து அதில் நமசிவய என்கிற சிவமந்திரத்தின் எழுத்துக்களை மாற்றி "நசிமயவ" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த குடவன் தகட்டினை இரு கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து ஆக்ருசண மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.

இதன் பயனை விளக்குவது மிகவும் கடினமான செயல் என்றும், அம்பரத்தை அறிந்தவர்களே இதன் செயலை அறியமுடியும் என்றும் சொல்கிறார்.

ஆக்ருசணம் மூல மந்திரம் - ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா.

குறிப்பு : துத்த நாகம் எனப் படும் நாகமும், செம்பும் இணைத்து உருவாக்கப் படுவதுதான் பித்தளை. இந்த பித்தளையினைதான் குடவன் என்று அழைப்பர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


மாந்திரிகம் - உச்சாடனம்.

Author: தோழி / Labels: ,

வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் என்பவை மாந்திரிகத்தின் எட்டு நிலைகள் எனவும், அவை ஒவ்வொன்றும் மக்களுக்கு எந்தந்த விதத்தில் தீர்வுகளை முன் வைத்திருக்கின்றன என்பது பற்றியும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று உச்சாடன கலையின் பயன்பாட்டினை பற்றி பார்ப்போம்.

மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் உருவாக்கப் படும் ஒலி அதிர்வுகளைக் கொண்டு தங்களின் உடலையும், சுற்றத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு உத்தியே உச்சாடன கலை. இந்த கலையை பயன்படுத்தி மக்களுக்கு எத்தகைய தீர்வுகளை அளிக்க முடியும் என்பதை அகத்தியர் தனது "அகத்தியர் 12000" என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.

போமப்பா வெள்ளீயந் தகடுசெய்து
புத்தியுடன் மசிவநய வென்று மாறி
ஆறாத நோய்களுக்கு அளித்தாயானால்
தாமப்பா நோய்கள் எல்லாம் உச்சாடிக்கும்
தன்மையுடன் கண்டதெல்லாம் உச்சாடிக்கும்
நாமப்பா கருவித்தை அதிதவித்தை
நாட்டினோம் பன்னிரண்டு நூற்றில்தானே.

வெள்ளீயத்தாலான தகடு ஒன்றினை எடுத்து அதில் நமசிவய என்ற சிவ மந்திர எழுத்துக்களை மாற்றி "மசிவநய" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த வெள்ளீயத் தகட்டை இரு கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து உச்சாடன மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.

இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் எல்லாம் உச்சாடிக்குமாம். அத்துட்ன் அவர் பார்ப்பது எல்லாம் உச்சடிக்கும் என்கிறார்.

உச்சாடனம் மூல மந்திரம் - ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..மாந்திரிகம் - தம்பனம்.

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் மாந்திரிக பயன்பாடுகளின் வரிசையில் இன்று “தம்பனம்” என்கிற கலையினை நம் முன்னோர்கள் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல் அகத்தியர் அருளிய அகத்தியர் 12000 என்ற நூலில் இருந்து  சேகரிக்கப் பட்டது.

தம்பனம் அல்லது ஸ்தம்பனம் என அழைக்கப்படும் இந்த கலைக்கு கட்டுதல் என நேரடி பொருள் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒன்றினை கட்டி அதனை முற்றிலுமாக செயலிழக்க செய்வதே தம்பனம் என அறியப் படுகிறது. ஆய கலைகள் என அறியப் படும் அறுபத்தி நான்கு கலைகளில் கூட எட்டு வகையான தம்பனங்களைப் பற்றி கூறப் பட்டுள்ளது.

இந்த தம்பனக் கலையை பயன்படுத்தி தேவையானவர்களுக்கு தீர்வு தரும் முறையினை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.

தானென்ற தாம்பிரத் தகடுதன்னில்
தயவாக நமசிவய வென்றே மைந்தா
செம்மையுடன் மானிடர்க்குக் கட்டினாக்கால்
ஊனென்ற தேகமதில் நோய்களெல்லாம்
ஓடுங்கியே தம்பித்து ஓடிப்போகும்
வானென்ற லோகத்தில் அவனைக் கண்டால்
மனதடங்கி தம்பித்து வசமாவாரே.

தாமிரத்தாலான தகடு ஒன்றினை எடுத்து அதில் சிவ மந்திரமான "நமசிவய "என்ற எழுத்துக்களை எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த தாமிரத்தகட்டை இரு கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து தம்பன மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.

செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களைப் பீடித்த நோய்கள் அனைத்தும் தம்பித்து ஓடிவிடுமாம். அத்துடன் இந்த யந்திரத்தை  அணிந்தவர்களை காண்போர் தம்பித்து வசமாவார்கள் என்றும் சொல்கிறார்.

தம்பனம் மூல மந்திரம் - ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா.

நாளைய பதிவில் உச்சாடனம் எவ்வாறு பயன்பட்டது என்பதைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


மாந்திரிகம் - மோகனம்.

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் மாந்திரிகத்தில் அட்டமா சித்துக்களாய் சொல்லப் படும் எட்டுப் படி நிலைகளில் ஒன்றான மோகனம் என்கிற கலை எவ்வாறு பயன்படுத்தப் பட்டது என்கிற விவரங்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.மோகனம் என்பது பிறரை தன் மீது மோகம் கொள்ளச் செய்வது ஆகும். மற்ற பிற மாந்திரிக முறைகளைப் போலவே இந்த முறையும் காலம் காலமாய் ரகசியமாகவே பேணப்பட்டு வந்திருக்கிறது. 

இந்த தகவல் அகத்தியர் அருளிய அகத்தியர் 12000 என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஆமப்பா நாகத்தினால் தகடு செய்து
அப்பனே சிவயநம என்று தாக்கே
நன்மையுடன் கட்டினதால் நாட்டினோர்கள்
தாமப்பா மோகனமாம் தன்மையாகும்
சதா நந்தி அகலாது சாந்தமாவாள்
காமப்பா மோகமதாய்க் கன்னியர்கள் வந்தால்
கால்பிடித்து மாதாவே என்று போற்றே

துத்த நாக தகடு ஒன்றை  எடுத்து அதில் நமசிவய என்ற சிவ நாமத்தை மாற்றி "சிவயநம" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த நாகத்தகட்டை இரு கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து மோகனத்தின் மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.

இவ்வாறு செபித்து முடிந்ததும் தீர்வும், தேவையும் உள்ளவர்களுக்கு இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் இந்த யந்திரத்தை அணிந்தவரின் மனைவியானவள் எப்போதும் அவர்களை நீங்காது துணையாக இருப்பதுடன் அமைதியும் அடக்கமும் உள்ளவளாய் இருப்பாளாம். மேலும் இந்த யந்திரத்தை அணிந்தவரை நோக்கி மோகத்துடன் அன்னிய பெண்கள் வந்தால் அவர்களை அன்னையே என்று வணங்கி ஒதுக்கிவிட வேண்டும் என்றும் சொல்கிறார்.

மோகன மூல மந்திரம் - ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா.

அடுத்த பதிவில் தம்பனம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


மாந்திரிகம் - அட்டமா சித்துக்கள்

Author: தோழி / Labels: , ,

மாந்திரிகம் என்பது பழந்தமிழத்தில் புழக்கத்தில் இருந்த கலை. பெரும்பாலும் இதொரு தற்காப்பு கலையாகவே அறியப் பட்டிருந்தது. மருத்துவத்திலும் மாந்திரிகத்தின் பயன்பாடுகள் இருந்தன. காலப் போக்கில் மனிதனின் பேராசை இந்த கலையின் திறத்தையும், குணத்தையும் நிழலான காரியங்களின் பக்கம் மாற்றி வைத்தன.

சித்தர் பெருமக்களின் பாடல்க்ளின் ஊடே இந்தக் கலையைப் பற்றி உயர்வாக குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்த கலையினை அறிந்து தெளிந்து தேர்ந்தவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்களாம். அத்தகைய சிறப்புடையவர்களை எளிதில் இனம் காண இயலாது என கூறியிருக்கின்றனர். மேலும், அவசிய அவசரங்கள் இருந்தால் மட்டுமே இந்தக் கலையினை நாடவும், கைகொள்ளவும் வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

இந்த மாந்திரிகத்திலும் எட்டு நிலைகளை வகுத்துக் கூறியிருக்கின்றனர். இவற்றை மாந்திரிக அட்டமாசித்து அல்லது அட்டகன்மம் என்கின்றனர். இந்த தகவல்களை முன்னரே பல பதிவுகளின் ஊடே பார்த்திருக்கிறோம். அவற்றை மீள் வாசிக்க விரும்புவோர் இந்த இணைப்பில் சென்று அந்த பதிவுகளை வாசித்தறியலாம்.

வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் ஆகியவையே மாந்திரிகத்தின் எட்டு நிலைகள். இவை குறித்தும் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இனி வரும் நாட்களில் இந்த அட்ட கன்மங்களைக் கொண்டு நோய்நொடிகள் பிரச்சனைகள் என்று தேடிவரும் மக்களுக்கு எவ்வாறு தீர்வுகளை கொடுக்கபட்டது  என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

முதலாவதாய் இன்றையபதிவில் வசியம் பற்றி பார்ப்போம்.

வசியம்.

வசியம் என்பது ஒரு மனிதனை அல்லது மனிதர்களை தன் வயப்படுத்தி, தனது இச்சைகளுக்கு ஏற்ப அவரை அல்லது அவர்களை ஆட்டுவிப்பதேயாகும். இந்த வசியக் கலையை பயன்படுத்தி எந்தவகையில் தீர்வுகளை அளிக்க முடியும் என்பதை அகத்தியர் தனது அகத்தியர் 12000 என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.

வசியமாய்க் காரீயத்தகடு வாங்கி
வளமாக நயமவசி என்று மாறி
உண்மையுள்ள மாந்தருக்கு கட்டினாக்கால்
பசிதாக மானதுபோல் உனைக் கண்டோர்கள்
பணிவார்கள் வசியமதாய்ப் பண்பாய் மைந்தா
நிசிதமுள்ள மிருக தாவர சங்கங்கள்
நேர்மையுடன் வசியமதாய் வணங்கும்பாரே.

காரீயத்தகடு ஒன்றை எடுத்து, அதில் "நயமவசி" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த காரீயத்தகட்டை கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து வசிய மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.

இவ்வாறு செபித்து முடிந்ததும், தீர்வும், தேவையும் உள்ளவர்கள் உடலில் இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களுக்கு மிருகங்கள் தாவரங்கள் வசியமாகுமாம். அத்துடன் அவர்களும் பண்பும் பணிவும் நிறைந்தவர்களாக நடந்து கொள்வார்கள் என்கிறார்.

வசிய மூலமந்திரம் - ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..எது துறவு?, ஏன் துறவு?

Author: தோழி / Labels: , ,

அந்தக் காலத்தில் துறவு அல்லது துறவி என்றதும் உற்றார் உறவினர்கள், சொத்து சுகங்களைத் துறந்து காடுகளில் போய் தனித்திருப்பது என்பதாகவும், இக் காலத்திலோ மடம் ஒன்றை அமைத்து அதில சிஷ்யர்கள் புடை சூழ சகல சுகபோகங்களுடன் வாழ்வதுமே துறவு என்பதான எண்ணப் போக்கு பொதுவில் நிலவுகிறது.

சித்தரியலில் துறவு என்பது மேலே சொன்ன புற பற்றுக்ள் போலல்லாது, அகப் பற்றுக்கள் அனைத்தையும் துறத்தலே துறவாக கருதப் படுகிறது. அகத்தியர், சிவவாக்கியர் போன்ற சித்தர் பெருமக்கள் குடும்ப அமைப்புகளில் இருந்தவாறே பற்றுகளைத் துறந்து வாழ்ந்தது நாம் அறிந்ததே. லாஹிரி மகாசயர் குடும்ப அமைப்பில் இருந்தவாறே பற்றுகளைத் துறந்தவர் என்று அவரது குரு மகாமுனி பாபாஜி அவர்களாலேயே பாராட்டப்பட்டார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 

உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே

எந்த மாதிரியான பற்றுக்களை எல்லாம் நாம் பற்றியிருக்கிறோம் என்பதற்கு உதாரணமாய் திருமூலரின் இந்த பாடலைக் கொள்ளலாம். நிலத்தை உழுததும், பெய்த மழையால் மகிழ்ந்த உழவன், உழவு செய்யும் பொழுது களையாகிய குவளை மலர்கள் விளைந்துள்ளதைக் காண்கிறான். அம் மலர்கள் தன் மனைவியின் கண்கள் போல் உழவனுக்கு மயக்கம் தர, களையாகிய குவளை மலர்களைக் களையாமல் விடுகிறானாம் அதனால் அவன் பயிர்கள் அழிந்து விடுகிறதாம். அதே போல் மனதில் தோன்றும் களையாகிய பற்றுக்களைத் துறக்காமல் அதன் பால் மயக்கம் கொண்டு வாழ்வைத் தொலைக்கிறோம் என அழகாக விளக்குகிறார் திருமூலர்.

பிறந்தும் இறந்தும் பல பேதைமை யாலே
மறந்து மலாவிருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளியாமே

மேலும் அறியாமையால் பிறந்தும் இறந்தும் அவற்றை மறந்தும் ஆணவ மலம் என்னும் இருளில் மனிதர்கள் மூழ்கி உள்ளதை சுட்டிக் காட்டுகிறார் திருமூலர். மேலான குருவின் வழிகாட்டுதலில் பற்றுக்களைத் துறக்கும் நேரத்தில், உயிர்களுக்குள் சுடர் விட்டு விளங்கும் பேரொளியான சிவன் நமக்குள்ளும் துலங்குவார் என்பதை துறவால் ஏற்படும் பயனாக கூறுகிறார்.

மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே

அனைத்தையும் துறந்தவன்; ஒருவரும் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளியாய் உள்ளவன்; எமனைத் துறந்தவர்களுக்கு நண்பன்; விருப்பு, வெறுப்புக்கள் அற்றவன்; எப்பொருளிலும் பற்றில்லாதவன் என இத்தனை சிறப்புகளை கொண்ட சிவனின் நிலையை நாம் அடைய வேண்டுமெனில் நாம் நம்மை சூழ்ந்துள்ள பற்றுகளை அறிந்து விலக்க வேண்டும் என்கிறார் திருமூலர்.

பற்றைத் துறப்பது சாதாரண காரியமா என்ற மலைப்பு அனைவருக்கும் ஏற்படலாம். குருவருளின் துணை இருந்தால் எல்லாம் சாத்தியமே.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


காடி - "தீ பக்குவக் காடி"

Author: தோழி / Labels: ,

சித்த மருத்துவம் மற்றும்  இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் காடி நீரை தயாரிக்கும் மற்றொரு முறையினை இன்று பார்ப்போம். இந்த முறையில் தயாரிக்கப்படும் காடிக்கு தீ பக்குவ காடி என்று பெயர்.

தவிடு நீக்கி சுத்தம் செய்த வெண்மையான அரிசி இரண்டு படி எடுத்து அத்துடன் முள்ளங்கி இலை ஒரு வீசை (ஒரு வீசை என்பது 1400 கிராம்)  சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கலவையை இருபத்தி நான்கு (24) அல்லது முப்பது (30) படி நீர் கொள்ள கூடிய ஒரு பெரிய மட்பாண்டத்தில் இட்டு, அதில் 15 படி நீர்விட்டு பாண்டத்தின் வாயை ஒரு சாணக்கியால் (சாணக்கி என்பது மண்ணால் செய்த தட்டு) மூடி. வாய்ப்பகுதியை துணியால் கட்டி அந்த மட்பாண்டத்திற்கு ஏற்ற பெரிய அடுப்பின் மேல் வைத்துக் கீழே தீ மூட்ட வேண்டும். 

இந்தத் தீயானது அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் ஒரே மாதிரி மிதமான அளவில், இரவு பகல் நிறுத்தாமல் ஏழு நாள்கள் தொடர்ந்து எரித்து வர வேண்டும். எட்டாம் நாள் தீயை அணைத்து விட்டு, ஒன்பதாம் நாள் துணியை நீக்கி பானையை திறந்து பாண்டத்திலுள்ள நீரை மாத்திரம் சற்று தடிமனான துணியில் வடிகட்டி எடுத்துக் குப்பிகளில் நிறைத்து மூடியிட்டு வைக்கவும். இதுவே தீ பக்குவ காடி நீர் ஆகும்

இந்த முறையில் அந்தப் பாண்டத்தில் ஒருமுறை இட்ட பொருள்களிலிருந்தே ஓர் ஆண்டு வரையில் காடி நீர் எடுத்துக் கொண்டிருக்கலாம். புழு பூச்சிகள் உண்டாகாமல் இருக்க ஆரம்பத்திலேயே அரிசியுடன் சிறிதளவு கற்சுண்ணம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு குப்பிகளில் சேகரிக்கப் பட்ட காடியை நான்கு முதல் ஆறு மாதங்களுக்குப் பின்னரே பயன்படுத்த வேண்டும்.

மூன்றாவது முறையான "தீ, சூரியப் பக்குவக் காடி" தயாரிக்கும் முறை சிரமமானதும், அரிதானது. மேலும் இந்த முறையினை குருமுகமாக மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதால் அந்த விவரங்களை இங்கே தவிர்க்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..காடி - "சூரிய பக்குவக் காடி"

Author: தோழி / Labels: ,


காடி பற்றிய அறிமுகம் மற்றும் அதன் மூன்று வகைகளை நேற்றைய பதிவில்  பார்த்தோம். இன்று முதல் வகையான சூரிய பக்குவ காடி பற்றி பார்ப்போம்.

ஒரு படி பச்சரிசியை ஆற்றுநீர் விட்டு 6 அல்லது 7 தடவைகள் கழுவி நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை சமையல் பாத்திரத்தில் இட்டு, அரிசிக்கு மேல் நான்கு அங்குலம் நிற்கும் படி ஆற்று நீரை ஊற்ற வேண்டும். பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி பொங்கி பக்குவமாய் சமைத்து எடுக்க வேண்டும்.

சமைத்த  சூட்டுடன் சோற்றுக் கலவையை ஒரு மண் பானையில் கொட்டி, அத்துடன் இருபது படி ஆற்று நீர் ஊற்றி மூடியிட்டு மூன்று நாள் வெய்யிலில் வைக்க வேண்டும். நான்காம் நாள் பானையில் இருக்கும் சோற்றுக் கலவையை நன்றாயப் பிசைந்து, நீரை வடி கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

இந்த நீர் கொள்ளும் அளவில் நான்கு பெரும் பானைகளை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.வடி கட்டிய சோற்று நீரை முதல் பானையில் ஊற்றி வாய்க்கு வேடு கட்டி வெய்யிலில் வைக்க வேண்டும்.  (வேடு கட்டுதல் என்பது பானை வாயை துணியினால் மூடிக் கட்டுவதே ஆகும்)

மறுநாள் அந்த நீரை இரண்டாவது பானையில் ஊற்றி வாய்க்கு வேடு கட்டி முன் போலவே வெய்யிலில் வைக்க வேண்டும். முதல் தடவை நீரை ஊற்றி வைத்திருந்த பானையை வெய்யிலில் ஈரம் வற்ற உலர்த்தி கொள்ளல் வேண்டும். மூன்றாம் நாள் மூன்றாம் பானையில் ஊற்றி முன் போலவே வாய்க்கு வேடு கட்டி வெய்யிலில் வைக்கவேண்டும்.

இரண்டாவதாக நீரை வைத்திருந்த பானையையும் வெய்யிலில் ஈரம் வற்ற உலர வைக்க வேண்டும். நான்காம் நாள் நான்காவது பானைக்கும் ஊற்றி வெய்யிலில் வைக்க வேண்டும். ஐந்தாம் நாள் முதலாவது பானைக்கு நீரை மாற்றி வெய்யிலில் வைக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு பானையாக மாற்றி மாற்றி ஊற்றி ஊற்றி வெயிலில் வைத்து வர வேண்டும். அப்போதைக்கப்போதே அந்தந்த பானைகளையும் வெய்யிலில் வைத்து கொஞ்சமும் ஈரமில்லாமல் உலர்த்தி வரவேண்டும். 

இவ்வாறு 40 நாட்கள் செய்த பின்னர் பின்னர் எஞ்சியிருக்கும் அந்த நீரை கண்ணாடிக் குப்பிகளில் அடைத்து மூடியிட்டு ஆறுமாதம் வைத்திருந்து எடுத்தல் வேண்டும். இதுவே சூரிய  பக்குவ காடி நீராகும். தேவைக்கேற்ப இதனை பயன் படுத்திடலாம்.

புழுப் பூச்சிகள் போன்றவை உருவாகாமல் இருக்க துவக்கத்தில் அரிசியில் சிறிதளவு கற்சுண்ணம் சேர்த்து விட வேண்டும். 

நாளைய பதிவில் தீ பக்குவ காடி தயாரிக்கும் முறையினை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..


"காடி", ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels: ,

எளிய வகை காயகற்பங்களைப் பற்றிய தொடரின் ஊடே காடி பற்றிய குறிப்புகள் வந்த போது, நண்பர்கள் பலரும் அது குறித்து பின்னூட்டங்களிலும், தனி மின்னஞ்சலிலும் வினவியிருந்தனர். சிலர் ஒரு படி மேலே போய் காடி க்கு பதிலாக வினிகரை பயன் படுத்தலாமா என கேட்டிருந்தனர். 

நண்பர்களின் வேண்டு கோளுக்கிணங்க காடி பற்றிய விவரங்களை இனி வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன். 

காடி என்றால் புளித்த நீர். இதனை பல வழிகளில், பல்வேறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கலாம். தேவையை பொறுத்து இந்த தயாரிப்பு முறைகள் மாறுபடும். எனினும் சித்த மருத்துவத்திலும் இரசவாதத்திலும் பெரும்பாலும் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் காடி நீரே பயன்படுத்தப்படுகிறது. 

அரிசியினைக் கொண்டு தயாரிக்கும் முறையினைப் பொறுத்து மூன்று வகையான காடி பற்றிய குறிப்புகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அவை முறையே "சூரிய பக்குவக் காடி", "தீ பக்குவக் காடி", "தீ, சூரிய பக்குவக் காடி" என்பதாகும்.

சூரிய பக்குவக் காடி 

இது வெய்யிலில் வைத்துப் பக்குவப்படுத்தி எடுக்கப்படும் முறை என்பதால் சூரிய பக்குவக் காடி எனப்படும். 

தீ பக்குவக் காடி 

இது தீயில் வைத்துப் பக்குவப்படுத்தி எடுக்கப்படும் முறை என்பதால் தீ பக்குவக் காடி எனப்படும்.

தீ, சூரிய பக்குவக் காடி 

இது தீயிலும், வெய்யிலிலும் வைத்துப் பக்குவப்படுத்தி எடுக்கப்படும் முறை. மிகவும் அரிதான ஒன்று என்பதாலும், மேலும் இதனை குருமுகமாக மட்டுமே அறிய வேண்டும் என்பதாலும் மேலதிக விவரங்களை இங்கே தவிர்த்திருக்கிறேன்.

இவ்வாறு மூன்று வகையாகத் தயாரிக்கப் பட்டாலும் அவற்றில் செயல்பாடு என்னவோ ஒன்றுதான்.

நாளைய பதிவில் சூரிய பக்குவ காடி தயாரிக்கும் முறையினை பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..