எளிய காயகற்பம் - நெல்லிமுள்ளி கற்பம்

Author: தோழி / Labels: , ,

பொதுவில் காயகற்பங்களைக் குறித்து மிகையான புரிதல்கள் நம்மிடையே இருக்கிறது. நாம் வாழும் நாட்களில் உடல் நலிவின்றி பொலிவோடும், வலுவோடும் வாழத் துனை புரிபவை என்கிற அளவில் மட்டுமே கற்பங்களை அணுகிட வேண்டும். இன்றைய நவீன மருத்துவம் உடல் ஆரோக்கியத்திற்காக முன் வைக்கும் சத்து மாத்திரைகளைப் போன்றவையே கற்பங்கள்.

நமது உடலில் உள்ள குறைபாடு அல்லது தேவைக்கு ஏற்ப இந்த கற்பங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி உட்கொண்டால் அதுவே நஞ்சாகவும் மாறிவிடும் ஆபத்திருக்கிறது.  இந்த தொடரின் நோக்கம் நமது முன்னோர்கள் இத்தகைய அரிய பல தகவல்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை பகிர்வது மட்டுமே. எனவே இவற்றை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவர் தரும் பரிந்துரைக்கேற்ப எடுத்துக் கொள்வது அவசியம்.

நெல்லிக்காய் என்பது சித்த மருத்துவத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது. "திரிபலா" என்னும் அருமருந்தில் நெல்லிக்காயும் ஒன்று.  கருநெல்லி, அருநெல்லி என இரு வகை நெல்லிக்காய் உண்டு. இவை வருடத்தின் எல்லா நாட்களிலும் கிடைக்காது என்பதால் இவற்றை காய வைத்து வற்றலாக பயன் படுத்துவர். இதனையே "நெல்லிமுள்ளி" என்பர். 

எளிய வகை கற்பங்களின் வரிசையில் இன்று நெல்லிமுள்ளி கற்பம் பற்றிய போகரின் தெளிவுகளை பார்ப்போம். இந்த தகவல்கள் போகர்  "போகர் 7000" என்ற நூலில் காணக் கிடைக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

வயிரமாம் நெல்லிமுள்ளி தன்னைவாங்கி
மருவநன்றாய் இடித்துச் சூரணமேஆக்கி
அயிரமாம் அபிரகச் செந்தூரந்தான் 
அதற்கெட்டுப் பங்குக்கோர் பங்குசேர்த்துச்
துயிரமாந் தேந்தனில் குழைத்தேஉண்ணு
சுகமான மண்டலந்தான் உண்டாயானால் 
கயிரமாங் காயமது கருய்ங்காலிக்கட்டைக்
கனல்போலச் சோதியாய்க் காணும்காணே

நன்கு காய்ந்த நெல்லிமுள்ளியை நன்கு இடித்து சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அச்சூரணத்திற்கு எட்டில் ஒருபங்கு அபிரகச் செந்தூரத்தை சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தேனைக் குழைத்து பாக்களவு தினமும் உண்ண வேண்டுமாம். இவ்வாறு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் உண்டு வந்தால் உடலானது கருங்காலிக் கட்டையை எரித்தால் வரும் தணல் போல் சோதியாகும் என்கிறார். மேலும் காய சித்தியும் உண்டாகும் என்கிறார்.

குறிப்பு : அபிரக செந்தூரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment

5 comments:

www.konguthirumanam.com said...

ithai sapida pathiyam ethavathu irukiratha???

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்களுக்கு நன்றி...

Unknown said...

தமிழ் மண்ணில் தான் சித்தர்கள் இருந்தனரா?
வேறு நாடு அல்லது வேறு மொழியில் இருந்தனரா?

நன்றி
மண்ணின் மன்னன

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி.

Prasanna said...

valuable information Thozi!!

Post a comment