எளிய காயகற்பம் - "அமுர்தசஞ்சீவி கற்பம்"

Author: தோழி / Labels: , ,

எளிய வகை காயகற்பங்களின் வரிசையில் இன்று சட்டை முனி சித்தர் அருளிய கற்பவகை ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல்கள்  "சட்டைமுனி கற்பவிதி" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

இந்த காயகற்பத்திற்கு சீந்தில் கற்பம் என்றொரு பெயரும் உண்டு. சீந்தில் என்பது கொடி வகையைச் சேர்ந்த மூலிகை. இதற்கு அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி என வேறு பெயர்களும் உண்டு. இவற்றில் சீந்தில், பொற்சீந்தில், பேய்ச்சீந்தில் என மூன்று வகைகள் உள்ளது. இந்த காய கற்பத்திற்கு பொற்சீந்தில் சிறப்பானது.

சொல்லுகிறேன் பொற்சீந்தி யானால் நன்று
துலங்காது கிடைக்காவிட்டால் நல்லசீந்தி
அல்லலுற்நேறார் மேற்றோலை யுரித்துப் போடு
யுடித்தண்டாய்க் கொண்டுவந்து கிழித்துப்போட்டு
நல்லுறவே யுலர்ந்தபின்பு இடித்துத்தூளாய்
நலமாக நாலிலொன்று சர்க்கரையுங் கூட்டி
ஒல்லுறவே தினந்தோறுங் கழஞ்சிகொள்ளு
ஓராத மண்டலமு முண்டுதேறே.

சேரப்பா சுரதோச மெல்லாமாம் போகுஞ்
செமறிய மேகமென்ற தெல்லாம் போகும்
வாறப்பா கபாலத்தில் வெடம்டை போகும்
வற்றி நின்ற தாதுவெல்லா மருவியூரும்
வேறப்பா அஸ்திசுரம் வெட்டை போகும் 
மெய்நிறைந்த நாடியெல்லா மமுர்தமாகும்
பேரப்பா சீந்திச்சார் வேறே யில்லைப்
பேரே அமுர்தசஞ் சீவிகற் பமாமே.

பொற்சீந்தில் கொடி கிடைத்தால் மிகவும் சிறப்பானது. எனினும் அது அது கிடைக்காத பட்சத்தில் நல்ல சீந்தில் கொடியின் அடித் தண்டினைத் தேர்வு செய்து அதன் மேல்தோலை உரித்து நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு காயவைத்து சூரணமாக செய்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். 

பின்னர் தினமும் அந்த சூரணத்தில் கழஞ்சி அளவு எடுத்து, அதற்கு நான்கில் ஒரு பங்கு சர்க்கரை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு உண்ண வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ச்சியாக ஒரு மண்டலம் உண்டால் சுரதோஷங்கள் , மேகம், கபால வெட்டை, அத்திசுரம், வெட்டை ஆகியவை நீங்குவதுடன், தாது விருத்தியும், நாடியமிர்தமும் உண்டாவதுடன் காயசித்தியும் கைகூடும் என்கிறார்.

இந்த கற்பத்திற்கு பத்தியங்கள் எதுவும் சொலலப்படவில்லை.

குறிப்பு: மூலிகைவளம் திரு.குப்புசாமி அவர்கள் பல்வேறு மூலிகைகளைப் பற்றிய அரிய தகவல்களை தனது வலைப்பதிவில் விரிவான விளக்கங்களுடன் சேகரித்து வைத்திருக்கிறார். இந்த இணைப்பில் அவரது பதிவுகளை வாசிக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..Post a Comment

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி... இணைப்பிலும் படிக்கிறேன்...

jana said...

nanri thozhi ennaipum miga arumaiyana thagvalgal

Dr.kr said...

ஐயா வணக்கம் ,
எனக்கு சங்கம் பழம் குறித்த தகவல்கள் (தாங்கள் அறிந்திருப்பின் ) தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன் ,cbedrmkr@gmail.com நன்றி

Dr.kr said...

வணக்கம் ஐயா ,
தங்களிடம் சங்கம் பழம் குறித்து கேட்டிருந்தேன் .மூலிகை வளத்தில் பார்க்க சொல்லியிருந்தீர்கள் .காண இயலவில்லை .உதவ வேண்டுகிறேன் .நன்றி Dr.Kr

Post a comment